என் மலர்tooltip icon

    விளையாட்டு

    184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா, 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.
    தரம்சாலா:

    இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி  5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 75 ரன்கள் குவித்தார். கேப்டன் சனகா 47 ரன்களும்,  குணதிலக 38 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா, 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், சஞ்சு சாம்சன் (39), ஸ்ரேயாஸ் அய்யர் (74- நாட் அவுட்), ஜடேஜா (45- நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தனர். 

    இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை தரம்சாலாவில் நடைபெறுகிறது.
    பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட இலங்கை அணி கேப்டன் தசுன் சனகா 19 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார்.
    தரம்சாலா:

    இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்கள் பதும் நிசங்கா, தனுசா குணதிலக இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  குணதிலக 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அசலங்கா (2), கமில் மிஷாகா (1), சண்டிமல் (9) என சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். எனினும், மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய நிசங்கா 75 ரன்கள் குவித்தார். 

    கடைசி நேரத்தில் பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட கேப்டன் தசுன் சனகா 19 பந்துகளில் 47 ரன்கள் (நாட் அவுட்) விளாச,  இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. 

    இதையடுத்து 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. 
    மெக்சிகோவின் அகபல்கோ கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றும் முனைப்புடன் நடால் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறார்.

    மெக்சிகோவின் அகபல்கோவில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனிஷ் மெத்வதேவை எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் நடாலிடம் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மெத்வதேவ் இன்று மிகவும் ஆக்ரோஷமாக ஆடினார். எனினும், நடாலை வீழ்த்த முடியவில்லை.

    போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் கேமரான் நோரியை ரபேல் நடால் எதிர்கொள்கிறார்.  

    பிரிட்டனைச் சேர்ந்த நோரி, கடந்த வாரம் டெல்ரே பீச் கோப்பையை கைப்பற்றிய உற்சாகத்துடன் மெக்சிகோ ஓபன் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறார். இப்போட்டியில் அவர் நடாலுக்கு கடும் சவாலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    நோரியுடன் இதுவரை நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளிலும் நடால் வெற்றி பெற்றுள்ளார். அதாவது கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பார்சிலோனா ஓபன் மற்றும் ரோலண்ட் காரஸ் ஆகிய போட்டிகளில் நடாலிடம் தோல்வியடைந்த நோரி, அந்த போட்டிகளுக்கு பிறகு தன்னை மெருகேற்றி வெற்றி வாகை சூடி வருகிறார். 

    அகபல்கோ கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறார் நடால். இதற்கு முன்பு களிமண் தரை ஆடுகளத்தில் 2005 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றார். கடின ஆடுகளத்திற்கு போட்டி மாற்றப்பட்டபின்னர் 2020ல் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சென்னையில் 2 நாட்கள் நடக்கவுள்ள மாநில மகளிர் ஆக்கி போட்டியில் 17 அணிகள் பங்கேற்கின்றனர்.
    சென்னை:

    முன்னாள் மாநில ஆக்கி வீராங்கனைகள் 15 பேர் இணைந்து “வி ஆர் பார் ஆக்கி கிளப்” என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இவர்கள் சர்வதேச மற்றும் தேசிய மாஸ்டர்ஸ் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    2019-ல் ஆஸ்திரேலியா, இத்தாலியில் நடந்த சர்வதேச போட்டிகளில் வெள்ளி, வெண்கலப்பதக்கமும், 2019-ல் உத்தரகாண்டில் நடந்த தேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் தங்கமும், 2020-ல் குஜராத்தில் நடந்த தேசிய போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘வி ஆர் பார் ஆக்கி’ கிளப் சார்பில் மாநில அளவிலான மகளிர் ஆக்கி போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் போரூர் ராமச்சந்திராவில் உள்ள ஆக்கி மையத்தில் நடக்கிறது.

    இதில் எத்திராஜ், எம்.ஓ.பி கல்லூரிகள் உட்பட 17 அணிகள் பங்கேற்கின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தகவலை ‘வி ஆர் பார் ஆக்கி’ கிளப் தலைவர் ரேகா தெரிவித்தார்.

    இந்த அமைப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9 பேர் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆக்கி போட்டியை நடத்தி இருந்தது. இதில் 9 அணிகள் பங்கேற்று இருந்தன. 

    புரோ கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் டெல்லி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. டெல்லி அணியின் இந்த வெற்றிக்கு விஜய் மாலிக், நவீன்குமார் ஆகியோர் காரணமாக இருந்தனர்.
    பெங்களூர்:

    புரோ கபடி லீக் போட்டியில் தபாங் டெல்லி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த இறுதி போட்டியில் அந்த அணி 37-36 என்ற புள்ளி கணக்கில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.

    இந்த இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என்பதை கணிக்க முடியாத அளவுக்கு ஆட்டம் சென்றது.

    இறுதியில் டெல்லி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. டெல்லி அணியின் இந்த வெற்றிக்கு விஜய் மாலிக், நவீன்குமார் ஆகியோர் காரணமாக இருந்தனர்.

    விஜய் மாலிக் மொத்தம் 16 புள்ளிகள் எடுத்தார். இதில் ரைடு சென்று 8 புள்ளிகளும், போனஸ் மூலம் 5 புள்ளிகளும், டேக்கிள் மூலம் ஒரு புள்ளியும் பெற்றார். நவீன் 13 புள்ளிகள் (11 ரைடு) 2 போனஸ் புள்ளிகள் பெற்றார்.

    பாட்னா தரப்பில் சச்சின் 10 புள்ளிகளும், குமான்சிங் 9 புள்ளிகளும் பெற்றனர்.

    சாம்பியன் பட்டம் பெற்ற தபாங் டெல்லி அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த பாட்னா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இறுதி போட்டியில் சிறந்த ரைடர் விருதை நவீனும், ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியதற்கான விருதை விஜய் மாலிக்கும், சிறந்த டிபென்டராக டெல்லியை சேர்ந்த மஞ்ஜித் சில்லாரும் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

    தொடர் நாயகன் விருதை நவீன்குமார் பெற்றார். 17 ஆட்டங்களில் அவர் மொத்தம் 207 ரைடு புள்ளிகள் எடுத்தார். அவருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    இந்த போட்டித் தொடரில் சிறந்த ரைடராக பெங்களூர் புல்ஸ் அணியை சேர்ந்த பவன் ஷெராவத் தேர்வு செய்யப்பட்டார் அவர் மொத்தம் 304 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார்.

    அர்ஜூன் தேஸ்வால் (ராஜஸ்தான்) 267 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், மணீந்தர் சிங் (பெங்கால் வாரியர்ஸ்) 262 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    சிறந்த டிபென்டராக பாட்னா அணியை சேர்ந்த முகமது ரேசா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மொத்தம் 89 புள்ளிகள் எடுத்தார். தமிழ் தலைவாஸ் அணியை சேர்ந்த சாஹர் 82 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். சிறந்த இளம் வீரராக புனேயை சேர்ந்த மொகித் கோயத் தேர்வு பெற்றார்.

    சிறந்த ரைடர், டிபென்டர், சிறந்த இளம் வீரர் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி உள்ளார்.
    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 62 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இலங்கை தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

    இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்து இருந்தது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் மட்டும் விளையாடிய ருதுராஜ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன.
    புதுடெல்லி:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 26-ந்தேதி மும்பையில் தொடங்கி மே 29-ந்தேதி நிறைவடைகிறது. வெவ்வேறு நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கும் போது கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அதை தவிர்க்கும் விதமாக இந்த முறை மராட்டிய மாநிலத்திலேயே அனைத்து லீக் ஆட்டங்களையும் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை (பயோ பபுள்) பின்பற்றி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    வழக்கமாக 8 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் இணைந்திருப்பதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதற்கு அடுத்து அதிக முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 5 முறை சாம்பியனான மும்பை அணிக்கு போட்டித்தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டு ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. 4 முறை சாம்பியனான சென்னை அணி 2-வது இடத்தை பெற்று ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது.

    ஏ பிரிவு

    மும்பை இந்தியன்ஸ்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    டெல்லி கேப்பிட்டல்ஸ்

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    பி பிரிவு

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐதராபாத் சன்ரைசர்ஸ்

    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

    பஞ்சாப் கிங்ஸ்

    குஜராத் டைட்டன்ஸ்

    ஒவ்வொரு அணியும் முன்பு போலவே 14 லீக் ஆட்டங்களில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். இதன்படி நடப்பு சாம்பியனான சென்னை அணி எதிர்பிரிவில் உள்ள மும்பை இந்தியன்சை 2 முறை எதிர்கொள்ள இருக்கிறது. இதே போல் பெங்களூரு அணியை எடுத்துக் கொண்டால் மற்றொரு பிரிவில் உள்ள ராஜஸ்தான் ராயல்சுடன் 2 முறை மல்லுகட்டும்.

    மொத்தமுள்ள 70 லீக் ஆட்டங்களில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 20 ஆட்டங்களும், மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் 15 ஆட்டங்களும், மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் 20 ஆட்டங்களும், புனேயில் உள்ள எம்.சி.ஏ. சர்வதேச ஸ்டேடியத்தில் 15 ஆட்டங்களும் நடைபெறும். ‘பிளே-ஆப்’ சுற்று மற்றும் இறுதிப்போட்டிக்கான இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஆடும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. குசல் மென்டிஸ், திரிமன்னே, டிக்வெல்லா அணிக்கு திரும்பியுள்ளனர்.
    20 ஓவர் தொடர் முடிந்ததும் இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் மார்ச் 4-ந்தேதி மொகாலியிலும், 2-வது டெஸ்ட் மார்ச் 12-ந்தேதி பெங்களூருவிலும் தொடங்குகிறது. 

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஆடும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. குசல் மென்டிஸ், திரிமன்னே, டிக்வெல்லா அணிக்கு திரும்பியுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வாண்டர்சே முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை டெஸ்ட் அணி வருமாறு:-

    திமுத் கருணாரத்னே (கேப்டன்), நிசாங்கா, திரிமன்னே, தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ், மேத்யூஸ், சன்டிமால், அசலங்கா, டிக்வெல்லா, சமிகா கருணாரத்னே, லாஹிரு குமாரா, லக்மல், சமீரா, விஷ்வா பெர்னாண்டோ, ஜெப்ரி வாண்டர்சே, ஜெயவிக்ரமா, எம்புல்டெனியா. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் நேற்றே இந்தியா வந்து சேர்ந்தனர்.
    பெண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நிஹாத் ஜரீன் 4-1 என்ற கணக்கில் துருக்கியின் நாஸ் காகியாக்லுவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
    புதுடெல்லி:

    73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நிஹாத் ஜரீன் 4-1 என்ற கணக்கில் துருக்கியின் நாஸ் காகியாக்லுவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 

    மற்றொரு அரைஇறுதியில் இந்திய வீராங்கனை நித்து (48 கிலோ பிரிவு), உக்ரைனின் ஹன்னா ஒகோட்டாவை வெளியேற்றினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய வீராங்கனை இருவருக்கும் குறைந்தது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
    கொரோனா பாதிப்பால் ஹசரங்கா ஒதுங்கிய நிலையில் இலங்கைக்கு மேலும் ஒரு பின்னடைவாக தசைப்பிடிப்பால் அவதிப்படும் குசல் மென்டிஸ், தீக்‌ஷனா 20 ஓவர் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
    தரம்சாலா:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தரம்சாலாவில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

    தொடக்க ஆட்டத்தில் இஷான் கிஷனும் (89 ரன்), ஸ்ரேயாஸ் அய்யரும் (57 ரன்) அதிரடி காட்டியதுடன் இந்தியா 199 ரன்களை எட்ட உதவினர். தங்கள் பணியை சிறப்பாக செய்த பவுலர்கள் இலங்கையை 137 ரன்னில் கட்டுப்படுத்தினர். ஆனால் இந்தியாவின் பீல்டிங் தான் மெச்சும்படி இல்லை. ‘நாங்கள் சில எளிதான கேட்ச்சுகளை தவற விட்டோம். எங்களது பீல்டிங் பயிற்சியாளர் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது நாங்கள் மிகச்சிறந்த பீல்டிங் அணியாக இருக்க விரும்புகிறோம்’ என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்டார். இதிலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்வது மட்டுமின்றி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள அந்த வீறுநடையை தொடருவதிலும் இந்திய அணி தீவிர முனைப்புடன் உள்ளது.

    இலங்கை அணியை பொறுத்தவரை சரிவில் இருந்து மீள்வதற்கு முடிந்தவரை கடுமையாக முயற்சிப்பார்கள். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் ஹசரங்கா ஒதுங்கிய நிலையில் இலங்கைக்கு மேலும் ஒரு பின்னடைவாக தசைப்பிடிப்பால் அவதிப்படும் குசல் மென்டிஸ், தீக்‌ஷனா 20 ஓவர் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக தனஞ்ஜெயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா சேர்க்கப்பட்டுள்ளனர்.

    குளிர்ச்சியான பகுதியான தரம்சாலாவில் வேகப்பந்து வீச்சு ஓரளவு எடுபடலாம். ஆட்டத்தின் போது மழை குறுக்கிடவும் அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ளது. 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது நினைவு கூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

    இலங்கை: பதும் நிசாங்கா, குணதிலகா, ஜனித் லியானாகே, சாரித் அசலங்கா, தினேஷ் சன்டிமால் அல்லது டிக்வெல்லா, தசுன் ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, ஜெப்ரி வாண்டர்சே, ஜெயவிக்ரமா, லாஹிரு குமாரா.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்தின் வாக்னர் 4 விக்கெட் கைப்பற்றினார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

    இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது .

    தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர் , சரேல் எர்வீ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் டீன் எல்கர் 41 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வீ சதமடித்து, 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. வெண்டர் டுசன் 13 ரன்னும், பவுமா 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. வெண்டர் டுசன் 35 ரன்னிலும், பவுமா  29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஜேன்சேன், மகாராஜ் ஜோடி 62 ரன்கள் சேர்த்தது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேன்சன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்

    நியூசிலாந்து தரப்பில் வாக்னர் 4 விக்கெட், மேட் ஹென்றி 3 விக்கெட், ஜேமிசன் 2 விக்கெட், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
    ஸ்பெயின் அணியை எளிதாக எடை போடவில்லை என்று, இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத்சிங் தெரிவித்துள்ளார்.
    புவனேஸ்வர்:

    எஃப்.ஐ.எச். புரோ லீக் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி ஸ்பெயின் அணியுடன் மோதுகிறது. 

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் இந்த போட்டி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா - ஸ்பெயினை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது. இதற்கு பிறகு இன்று இரு அணிகளும் களம் காண்கின்றன. 

    இந்திய ஹாக்கி அணியில் பஞ்சாபைச் சேர்ந்த 25 வயதான சுக்ஜீத் சிங் முதன்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் டிராக் ஃபிளிக் நிபுணர் ஹர்மன்ப்ரீத் சிங் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

    ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் அணி சவாலாக திகழ்ந்ததாகவும், அந்த அணியை எளிதாக எடை போடவில்லை என்றும், இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத்சிங் தெரிவித்துள்ளார்.

    இரு அணிகளுக்கு இடையேயான மற்றொரு போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.


    ×