search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணிக்கு ரூ.3 கோடி பரிசு
    X
    சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணிக்கு ரூ.3 கோடி பரிசு

    புரோ கபடி லீக் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணிக்கு ரூ.3 கோடி பரிசு

    புரோ கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் டெல்லி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. டெல்லி அணியின் இந்த வெற்றிக்கு விஜய் மாலிக், நவீன்குமார் ஆகியோர் காரணமாக இருந்தனர்.
    பெங்களூர்:

    புரோ கபடி லீக் போட்டியில் தபாங் டெல்லி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த இறுதி போட்டியில் அந்த அணி 37-36 என்ற புள்ளி கணக்கில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.

    இந்த இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என்பதை கணிக்க முடியாத அளவுக்கு ஆட்டம் சென்றது.

    இறுதியில் டெல்லி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. டெல்லி அணியின் இந்த வெற்றிக்கு விஜய் மாலிக், நவீன்குமார் ஆகியோர் காரணமாக இருந்தனர்.

    விஜய் மாலிக் மொத்தம் 16 புள்ளிகள் எடுத்தார். இதில் ரைடு சென்று 8 புள்ளிகளும், போனஸ் மூலம் 5 புள்ளிகளும், டேக்கிள் மூலம் ஒரு புள்ளியும் பெற்றார். நவீன் 13 புள்ளிகள் (11 ரைடு) 2 போனஸ் புள்ளிகள் பெற்றார்.

    பாட்னா தரப்பில் சச்சின் 10 புள்ளிகளும், குமான்சிங் 9 புள்ளிகளும் பெற்றனர்.

    சாம்பியன் பட்டம் பெற்ற தபாங் டெல்லி அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த பாட்னா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இறுதி போட்டியில் சிறந்த ரைடர் விருதை நவீனும், ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியதற்கான விருதை விஜய் மாலிக்கும், சிறந்த டிபென்டராக டெல்லியை சேர்ந்த மஞ்ஜித் சில்லாரும் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

    தொடர் நாயகன் விருதை நவீன்குமார் பெற்றார். 17 ஆட்டங்களில் அவர் மொத்தம் 207 ரைடு புள்ளிகள் எடுத்தார். அவருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    இந்த போட்டித் தொடரில் சிறந்த ரைடராக பெங்களூர் புல்ஸ் அணியை சேர்ந்த பவன் ஷெராவத் தேர்வு செய்யப்பட்டார் அவர் மொத்தம் 304 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார்.

    அர்ஜூன் தேஸ்வால் (ராஜஸ்தான்) 267 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், மணீந்தர் சிங் (பெங்கால் வாரியர்ஸ்) 262 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    சிறந்த டிபென்டராக பாட்னா அணியை சேர்ந்த முகமது ரேசா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மொத்தம் 89 புள்ளிகள் எடுத்தார். தமிழ் தலைவாஸ் அணியை சேர்ந்த சாஹர் 82 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். சிறந்த இளம் வீரராக புனேயை சேர்ந்த மொகித் கோயத் தேர்வு பெற்றார்.

    சிறந்த ரைடர், டிபென்டர், சிறந்த இளம் வீரர் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    Next Story
    ×