என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சஹா தேர்வு செய்யப்படவில்லை.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா, இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார்.  சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான  டெஸ்ட் தொடரில் இவர் தேர்வு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் அவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்ஹார் குறுஞ்செய்தியின் மூலம் கேலி செய்தி மிரட்டியதாக சஹா குற்றசாட்டை முன்வைத்தார்.

    இதுகுறித்து பிசிசிஐ விருத்திமான் சாஹாவிடம் முழுமையான விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குறித்து பேசிய சாஹா " எனக்கு தெரிந்த அனைத்தையும் நான் கமிட்டியின் முன் கூறிவிட்டேன். அந்த நிருபர் குறித்த விவரத்தையும் தெரிவித்து விட்டேன். ஆனால் இந்த  விசாரணை முடியும் வரை இது குறித்து எதுவும் பேசவேண்டாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது " என தெரிவித்தார்.

    பின்னர் போரியா மஜும்தார் என்ற அந்த பத்திரிகையாளர் தானாக முன்வந்து சாஹா உடன் நடந்த உரையாடல் குறித்து விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் இந்த புகார் குறித்து விசாரித்த பிசிசிஐ  போரியா மஜும்தார்க்கு 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அவரால் பத்திரிகையாளர் சந்திப்பு, வீரர்களிடம் நேர்காணல் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியில் புதுமுக வீரர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்று 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 2ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் கொண்ட அணியில் கேப்டன் வில்லியம்சன் மீண்டும் திரும்பியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் அஜிஸ் பட்டேல், ஆல்ரவுண்டர்கள் ரக்சின் ரவீந்திரா, பிரேஸ்வெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். புதுமுக வீரர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஐ.பி.எல். தொடர் முடிந்த பிறகு நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேன் வில்லியம்சன், ட்ரென்ட் போல்ட், டாம் ப்ளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, கொலின் டி கிராண்ட்ஹோம், ஜேக்கப் டஃபி, கேமரூன் பிளெட்சர், மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரா, ஹமிஷ் ரதர்ஃபோர்ட், டிம் சவுத்தி, பிளேர் டிக்னர், நீல் வாக்னர், வில் யங்

    49-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஆட்டத்தில் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமென்றால் எஞ்சிய 5 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

    கடந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் கொடுத்தார். சென்னை அணி பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, அம்பதிராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்துவீச்சில் முகேஷ் சவுத்ரி சிறப்பாக உள்ளார். மேலும் ஜடேஜா, சான்ட்னர் தீக்‌ஷனா ஆகியோர் உள்ளனர்.

    சென்னை அணியின் பீல்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும்படி இருக்கிறது. எளிதான கேட்சுகளை தவற விட்டனர். இதனால் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    பெங்களூரு அணி 10 ஆட்டத்தில் 5 வெற்றி, 5 தோல்வி பெற்றுள்ளது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு கடந்த 3 போட்டிகளில் தோற்றது. இதனால் தோல்வி பாதையில் இருந்து மீண்டுவர முயற்சிக்கும்.

    அந்த அணியில் விராட் கோலி, மேக்ஸ்வெல், பட்டிதார் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்து வீச்சில் ஹசில்வுட், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோர் உள்ளனர். கேப்டன் டுபெலிஸ்சிஸ் மீண்டும் பார்முக்கு திரும்புவது அவசியம்.

    இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் சென்னை 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தோல்வியை நான் ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் பெற்றது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ரபடா 4 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் விளையாடிய பஞ்சாப் 16 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து வென்றது. ஷிகர் தவான் 62 ரன்னும், பானுகா ராஜபக்சே 40 ரன்னும், லிவிங்ஸ்டன் 10 பந்தில் 30 ரன்னும் எடுத்தனர்.

    குஜராத் அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று இருந்தது. அதற்கு பஞ்சாப் முட்டுக்கட்டை போட்டது. இந்த ஐ.பி.எல். தொடரில் புதுமுக அணியான குஜராத் சிறப்பாக விளையாடுகிறது. அந்த அணி சேசிங் செய்வதில் நல்ல நிலையில் உள்ளது.

    ஆனால் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்தும் குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் 170 ரன் எடுத்திருந்தால் சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். முதலில் பேட்டிங் செய்ததற்கான எனது முடிவை நான் ஆதரிக்கிறேன்.

    ஏனென்றால் கடினமான சூழ்நிலைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு சீரான பாதைக்கு திரும்புவதில் முயற்சிக்க வேண்டும். நாங்கள் நன்றாக சேசிங் செய்து வருகிறோம்.

    ஆனால் எங்களது பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை உறுதிசெய்ய விரும்பினோம். ஆனால் சரியான ஆட்டம் வரும்போது முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்.

    முதலில் பேட்டிங் செய்யும்போது நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். தோல்வியை நான் ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன். எந்த இடத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்பது பற்றி ஆலோசித்து அதில் கவனம் செலுத்துவோம். தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். பெரும்பாலும் நாங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் இருந்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் கூறும்போது, ‘நாங்கள் சில வெற்றிகளை மீண்டும் தொடர விரும்புகிறோம். ஜானி பேர்ஸ்டோவிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை பெற முயற்சிக்கிறோம். இதனால் அவரை தொடக்க வீரராக அனுப்பினோம்.

    நான் 4-வது வீரராக களம் இறங்குகிறேன் என்று சொன்னேன். ஷிகர் தவான் நிலைத்து நின்று விளையாடி நார் விலிங்ஸ்டன் ஆடிய விதம் நன்றாக இருந்தது. வெற்றிபெற முடியும் என்று உறுதியானதும் ரன்ரேட்டை அதிகரிக்க விரும்பினோம். இதனால் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடினார்’ என்றார்.

    மகளிர் பிரிவில் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தை வீழ்த்தி குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.
    பெங்களூரு:

    பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றன.  

    நேற்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு கபடி போட்டி ஆட்டத்தில் கோட்டா பல்கலைக்கழகம் அணி  சவுத்ரி பன்சி லால் பல்கலைக்கழக அணியை எதிர்கொண்டது. 

    இதில்  15 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோட்டா பல்கலைக்கழகம் அணி தங்கம் வென்றது.

    போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோட்டா பல்கலைக்கழக கேப்டன் ஆசிஷ்,  முதல் பாதியில் நாங்கள் அனைவரும் சற்று பதட்டமாக இருந்தோம் என்றும், இரண்டாம் பாதியில் பயிற்சியாளர் அறிவுரையின்படி செயல்பட்டதால் தங்கம் வெல்ல முடிந்தது என்றார்.

    மகளிர் பிரிவில் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தை வீழ்த்தி, குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.  

    இந்த போட்டிகளை கண்டு ரசித்த  மத்திய விளையாட்டுத்துறை மந்திரி  அனுராக் தாக்கூர்,  பல்கலைக்கழக இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணியை சேர்ந்த  2 வீரர்களை புரோ கபடி லீகில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 15 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் படுகோனே – டிராவிட் உயர் சிறப்பு விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூருவில்  உள்ள படுகோனே – டிராவிட் உயர்சிறப்பு விளையாட்டு மையத்தில், பேட்மின்டன், கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், நீச்சல், ஸ்குவாஷ், கூடைப்பந்து, துப்பாக்கிசுடும் பயிற்சி போன்றவை வழங்கப்படுகிறது.  

    வெற்றி வாய்ப்புள்ள விளையாட்டு வீரர்களின் திறமையை மதிப்பீடு செய்து, அவர்களுக்கேற்ற பயிற்சிக்குத் தேவையான பைலேட் அறை மற்றும் கிரையோதெரபி பிரிவு உள்ளிட்ட அதிநவீன சாதனங்கள் இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த உயர்சிறப்பு விளையாட்டு மையத்தை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த விளையாட்டு வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

    அப்போது பேசிய அவர், விளையாடுவதற்காக, யாரும் வார இறுதி நாட்களுக்காகவோ, விடுமுறை தினத்திற்காகவோ காத்திருக்கத் தேவையில்லை என்றார். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விளையாடத் தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

    சர்வதேச அளவில் போட்டியிடுவதற்குத் தேவையான கூடுதல் திறனை வளர்த்துக் கொள்ள ஏதுவாக, இந்த மையத்தில் உள்ள அதிநவீன வசதிகளை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த ஆய்வின்போது, கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், படுகோனே-டிராவிட் உயர்சிறப்பு விளையாட்டு மையத்தின் மேலாண்மை இயக்குனர் விவேக் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    முதலில் விளையாடிய குஜராத் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 65 ரன்கள் குவித்தார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் களமிறங்கியது. 

    தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 9 ரன், விருத்திமான் சஹா 21 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 65 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அந்த அணி வீரர் ஷிகர் தவான் 62 ரன்களும், லிவிங்ஸ்டோன் 30 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.  பானுகா ராஜபக்சே 40 ரன்கள் எடுத்தார்.  

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை சேர்ந்த ரபாடா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 9 ரன், விருத்திமான் சஹா 21 ரன்னில் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் அதிரடியாக ஆடி ஆல்ரவுண்டராக செயல்பட்டு வருபவர் பொல்லார்டு.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக  செயல்பட்டு வந்தவர் கெய்ரன் பொல்லார்டு. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டி கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி 9 ஆட்டங்களில் 8ல் வென்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து, குஜராத் அணி முதலில் களமிறங்குகிறது.

    பஞ்சாப் அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 4ல் வென்று 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.
    15-வது ஐபிஎல் தொடரில் இதுவரை 47 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன்  கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலால் ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார் .

    அதன்படி, முதல் பிளே ஆப் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் கொல்கத்தாவிலும், இரண்டாவது பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடைபெறும் என தெரிவித்துள்ளார் .

    முதல் தகுதிச்சுற்று  மே 24 அன்றும், எலிமினேட்டர் சுற்று போட்டி மே 25-ம் தேதிகளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    2-வது தகுதிச்சுற்று  மே 27 அன்றும், இறுதிப்போட்டி மே 29 அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

    பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டிக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்யும் போது வாஷிங்டன் சுந்தர் கைவிரலில் காயம் ஏற்பட்டது.
    புனே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கை பெருவிரலுக்கும், அதற்கு அடுத்த விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 லீக் ஆட்டங்களை தவற விட்டு அணிக்கு திரும்பினார். இந்த நிலையில் புனேயில் நேற்று முன்தினம் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்யும் போது அதே கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த ஆட்டத்தில் பந்து வீசவில்லை.

    வாஷிங்டன் சுந்தர் காயம் குறித்து ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கருத்து தெரிவிக்கையில், ‘வாஷிங்டன் சுந்தர் காயத்துக்கு தையல் போட வேண்டியது இருப்பதால் அவர் டெல்லிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் (வருகிற 5-ந் தேதி) விளையாடுவது சந்தேகம் தான். எங்களது முக்கிய பவுலர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக பந்து வீச முடியாமல் போனது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது’ என்றார்.

    ×