என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும்.
    • 12 ராசியினருக்கும் உண்டாகப்போகும் மாற்றங்களைக் காணலாம்.

    கோட்சாரத்தில் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்த சனி பகவான் 30.6.2024 முதல் 15.11.2024 வரை வக்ரகதியில் சஞ்சாரம் செய்யப் போகிறார். இதனால் 12 ராசியினருக்கும் உண்டாகப்போகும் மாற்றங்களைக் காணலாம்.

    மேஷம்

    ராசிக்கு 11-ம் இடத்தில் நின்று லாபத்தையும், பாதகத்தையும் சம விகிதத்தில் வழங்கிக் கொண்டு இருந்த சனி பகவான் 9, 12ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். ஆன்மீக பயணம் செல்வதில், வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் ஆர்வம் கூடும். வீண் விரயம், வைத்தியச் செலவுகள் குறையும். அறுவை சிகிச்சை வரை சென்ற கை, கால், மூட்டு வலி பிரச்சனைகள் தாமாக சீராகும். தந்தை, தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய காலம். காரணமற்ற இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட அலைச்சல், அலுப்புகள் குறையும். ராசிக்கு சனி பார்வை இருந்ததால் உடல் நலனில் நிலவிய பாதிப்புகள், மனசஞ்சலம் அகலும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையத் துவங்கும். பூர்வீகச் சொத்து மற்றும் பாகப் பிரிவினை தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் பேச்சு வார்த்தையில் சீராகலாம். வழக்கம் போல் தொழிலில் நல்ல முன்னேற்றப் போக்கு தென்படும். லாபம் சற்று ஏற்ற, இறக்கமாக இருக்கும். மறு விவாக முயற்சியில் நேரமும், காலமும் விரயமாகும். சுப பலனை அதிகரிக்க சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விநாயகரை வழிபட வினைகள் விலகும்.

    ரிஷபம்

    ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார். பூரட்டாதி குருவின் நட்சத்திரம். குரு பகவான் ரிஷப ராசிக்கு 8, 11-ம் அதிபதி. அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதி. அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் வக்ர மடைகிறார்

    விபத்து கண்டம், சர்ஜரி, அவமானம் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். முக்கிய பஞ்சாயத்துகள் வழக்குகள் இழுபறியாகும். மூத்த சகோதரம், சித்தப்பாவை பகைக்காமல் இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்கள் அதிக முதலீட்டில் பெரிய தொழில் நடத்துபவர்கள் சுய ஜாதக பரிசீலனை செய்து கொள்வது நல்லது. தனிமை உணர்வு நீங்கும். வெளிநாட்டுப் பயண முயற்சி சித்திக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். திருமண முயற்சியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசு உத்தியோக முயற்சி இழுபறியாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் நிலவிய தடைகள் அகலும். வீடு, வாகன, தொழில் கடனால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும். முன்னோர்கள் வழிபாடு மிக அவசியம்.

    மிதுனம்

    ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார். குரு மிதுன ராசிக்கு 7, 10-ம் அதிபதி. நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம். புதிய தொழில் முயற்ச்சியில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம். திருமண முயற்சிகள் இழுபறியாகும். எந்த செயலிலும் உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுக்க வேண்டிய நேரம். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. புதிய முயற்சிகளில் கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம். தொழில் போட்டிகள் உருவாகலாம். அலைச்சல் மிகுதியாகும். வேலைப் பளு அதிகமாகும். தம்பதிகளுக்குள் நிவவிய பனிப்போர் விலகும். மேலும் சுப பலனை அதிகரிக்க சனிக் கிழமை முன்னோர்களை வழிபடவும்.


    கடகம்

    ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுகிறார். கடக ராசிக்கு குருபகவான் 6,9ம் அதிபதி என்பதால் உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வேலை இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு அவரவர் திறமைக்கும் தகுதிக்கும் தகுந்த வேலை கிடைக்கும்.

    தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும்.வியாபாரத்திலும் வருமானத்திலும் ஏற்பட்ட தடைகள் அகலும். வாழ்க்கையை செம்மையாக நடத்த தேவையான ஜீவனங்கள் வரத் துவங்கும் . கடன்களை அடைக்கும் மார்க்கம் தென்படும். இடமாற்றத்தால் ஏற்பட்ட சங்கடங்கள் மாறும். கல்வித்தடை, உற்றார் உறவினர் பகை, டென்ஷன், ஆரோக்கியக் குறைபாடு இருந்த இடம் தெரியாது.

    அரசு வேலை முயற்சி கைகூடும். வீடு, வாகன, தொழில் கடனால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் நிலவிய தடைகள் அகலும். வீடு கட்டும் பணி துரிதமாகும். பிரிந்த தம்பதிகள் கூடி வாழ்வார்கள்.தீர்த்த யாத்திரை, ஆன்மீக யாத்திரை, முன்னோர்கள் வழிபாட்டின் மூலம் இன்னல்களில் இருந்து விடுபட முடியும்.

    சிம்மம்

    ராசிக்கு ஏழாமிடமான சம சப்தம ஸ்தானத்தில் நின்று கண்டகச் சனியின் பலனை வழங்கிக் கொண்டு இருந்த சனி பகவான் ராசிக்கு 5,8ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுகிறார். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் தொடர்பான விசயங்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். காதல் விசயங்கள், எதிர்பாலின நட்பால் அசிங்கம், அவமானம் ஏற்படலாம். பிள்ளைகளை சொந்த பொறுப்பில் பாதுகாப்பது நல்லது உற்றார், உறவினர்களுடன், குடும்ப உறவுகளுடன் கனிவுடன் பேச வேண்டும். தவறான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்க்க வேண்டும். சிலர் தொழில், உத்தி யோகத்திற்காக வெளியூர், வெளிநாடு, செல்லலாம். பூர்வீக சொத்து தொடர்பான பணிகளை ஒத்தி வைக்கவும்.தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயர்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழலாம். வழக்குகள் இழுபறியாகும். நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தகப்பனாருடன் ஏற்பட்ட வருத்தம் மறையும். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கத் துவங்குவார்கள். சனிக்கிழமை சிவ வழிபாடு செய்யவும்.

    கன்னி

    ராசிக்கு ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரமடைகிறார். ராசிக்கு 4, 7-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார். மிக மோசமான பிரச்சனைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடிய நல்ல நேரம் ஆரம்பமாகிவிட்டது. பள்ளி, கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். தாயுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். சொத்து வாங்குவது, விற்பது போன்றவற்றை ஒத்தி வைக்கவும். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். நீண்ட நாட்களாக அவதிப்படுத்திய நோய்க்கு நிவாரண காலம். திருமண முயற்சிகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கும். வேலை பார்த்த இடத்தில் சக ஊழியர்கள், உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து உதவுவது நல்லது.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    துலாம்

    ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சனி பகவான் ராசிக்கு 3, 6-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார். எனவே பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். அரசியல் நாட்டம் மிகும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். காதல் விவகாரங்களால் அவமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சற்று குறைவுபடும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகள் இழுபறியாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகத்திற்கு சென்று வருவதை ஒத்தி வைப்பீர்கள். சிலர் தொழில், வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். தினமும் பட்சிகளுக்கு தானியமிட முன்னேற்றம் அதிகரிக்கும்.

    விருச்சிகம்

    ராசிக்கு 4-ம்மிடத்தில் நின்று அர்தாஷ்டமச் சனியின் பலன்களை வழங்கிய சனி பகவான் 2,5ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுகிறார்.

    ராசி மற்றும் 6-ம் இடத்தை சனி பார்த்ததால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். தடை தாமதமான உங்களின் முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் வங்கிப் பணி, ஆடிட்டிங், ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். காதல் விவகாரங்களால் அவமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சற்று குறைவுபடும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகள் இழுபறியாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகத்திற்கு சென்று வருவதை ஒத்தி வைப்பார்கள். மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. குல தெய்வ வழிபாடு முன்னேற்றம் தரும்.

    தனுசு

    ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் வக்ரம் அடைகிறார். ராசி அதிபதி மற்றும் 4-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைகிறார். இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும். இது நாள் வரை உங்களை ஆட்டிப்படைத்த இனம் புரியாத மன சஞ்சலம் விலகும்.

    கிட்டச் சென்றாலும் எட்டிச் சென்ற உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள். தொழிலில் நிலைத்து நிற்க முடியுமா? என்ற மன பயத்துடன் இருந்தவர்களுக்கு திருப்பு முனையான நேரம். பொருளாதாரம், ஆரோக்கி யத்தைப் பொறுத்தவரை திருப்தியான காலம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். மலைபோல் வந்த பிரச்சனைகள் பனி போல் விலகும். வீடு கட்ட, வாகனம் வாங்க எடுத்த முயற்சியில் சிறு கால தாமதம் உண்டாகும். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும். வாழ்க்கைத் துணையின் மூலம் தக்க உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து எதிர்பாராத தன வரவு கிடைக்கும். புத்தாடை, தங்கம், வெள்ளி நகைகள் வாங்கும் யோகம் கிடைக்கும். ஆயுள், ஆரோக்கியம் பற்றிய பயம் விலகும். சனிக்கிழமை பைரவரை வழிபடவும்.

    மகரம்

    மகர ராசிக்கு தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் 3,12ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் செல்கிறார். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வீடு கட்டுதல், வாங்குதல், சொத்துக்களை விற்றல் தொடர்பான பணிகள் தடையில்லாமல் நடந்து முடியும். ஞாபகசக்தி கூடும். காது, மூக்கு, தொண்டை சார்ந்த பிரச்சினைகள் சீராகும். கை மறதியாக வைத்த பொருள், காணாமல் போன ஆவணங்கள், திருட்டுப் போன நகைகள், பொருட்கள் திரும்ப கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். பொருளாதார நிலையில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏற்றத் தாழ்வை சமாளிக்க கடன் பெறும் சூழல் உருவாகும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். பெண்களுக்கு தாய் வழி சீதனம் கிடைக்கும்.சுய ஜாதக கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும். காதல் விவகாரங்களை ஒத்திப்போடுவது நல்லது. ஏழை தொழிலாளிகளுக்கு உதவவும்.

    கும்பம்

    ஜென்ம ராசியில் நின்ற சனி பகவான் 2,11ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைகிறார். ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். கண், பல் தொடர்பான பிரச்சனைக்கு வைத்தியம் செய்ய நேரும். சகோதரர்களால் வீண் விரயம் உண்டு. கடன் பெற்று சொந்த வீடு வாங்குவீர்கள்.வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். மறுமண முயற்சி சித்திக்கும். தொழிலால், தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். அதிக முதலீடு கொண்ட புதிய செயல்களைத் தவிர்க்கவும். இயன்றவரை வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது. குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். நண்பர்களுக்காக பணம் கடன் வாங்கி கொடுத்து அந்த கடனை நீங்களே ஏற்றுக் கொள்ள நேரலாம். வழக்கு வெற்றிகள் சாதகமாகும் அல்லது தீர்ப்பு தள்ளிப்போகும். உடல் நிலை மேம்படும். அரசிடமிருந்து வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். கண் சிகிச்சை செய்பவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி வழங்க வேண்டும்.

    மீனம்

    ராசிக்கு பனிரெண்டில் விரய ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் வக்ரம் பெறுகிறார். ராசி மற்றும் 10ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைகிறார். திருமண வயதில் இருப்பவர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். புத்திரப் பிராப்தம் கிடைக்கும். சிலர் தொழில், வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். அலுவலகத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள்.

    உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் தேடி வரும். இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். வைத்தியச் செலவு, நோயிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். முன்னோர்கள் வழிபாடு மிக அவசியம்.

    செல்: 98652 20406

    • நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
    • வன்னிமரம் சனி பகவானுக்கு உகந்த மரமாகும்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திறந்த வெளியில் சோலைகளின் நடுவில் வன்னி மரத்தடியில் காட்சி தருகிறார் விநாயகர். அவரைச் சுற்றிலும் வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது மரங்கள் காணப்படுகின்றன.

    ஒன்பது விருட்சங்களுடன் கூடிய இந்த விநாயகரை தரிசிப்பதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.

    வன்னிமரம் சனி பகவானுக்கு உகந்த மரமாகும். சனி தோஷம் ஏற்படாமல் இருக்க இவர் இந்த மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதாகவும் கூறுகிறார்கள்.

    சனி திசை, சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வன்னி இலையால் அர்ச்சனை செய்தால் நிவர்த்தியாகும்.

    மதுரை தெப்பக்குளம், வண்டியூர், அனுப்பானடி - ஆகிய 3 சந்திகள் கூடும் இடத்தில் குளம் தோண்டும்போது 7 அடி உயரமுள்ள ராட்சத விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதை மன்னர் திருமலை நாயக்கர் மீனாட்சி கோவிலில் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.

    முக்கு தெருக்களில் ஊரணி தோண்டும் போது கிடைத்ததால் முக்குருணி விநாயக ராக வணங்கப்பட்டார். 3 குருணி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைத்து விநாயகர் சதுர்த்தியின்போது வழிபடுவதால் முக்குருணி விநாயகர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இவ்விநாயகர் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவரை வணங்கினால் கண் திருஷ்டி தோஷம் விலகும். இடையூறுகள் விலகி காரியம் ஜெயம் ஆகும்.

    மதுரை அருகே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புவனம். அங்கு வைகை ஆற்றுப்பாலத்தை கடந்து நடந்து சென்றால் மடப்புரம் விலக்கு, ஆர்ச் எதிரில் 4 கோட்டை சுவர் போன்ற அமைப்பு காணப்படும். அந்த பகுதியில் விசாலாட்சி ஜோதிட மந்த்ராலயத்தில் திசை மாறி தெற்கு முகமாக விசாலாட்சி விநாயகர் அருள் பாலித்து வருகிறார்.

    இங்கு செவ்வாய், வியாழன், வெள்ளிக் கிழமைகளிலும் சங்கடஹரசதுர்த்தி அன்றும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் வருகை தந்து 7 பெரிய தேங்காய் மாலையாக சமர்ப்பித்து 7 லட்டு, 7 எலுமிச்சம்பழம் வைத்து 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

    இதனால் முன்னோர் சாபங்களால் உருவான தோஷங்கள் நீங்கி தொழில் வளம் பெருகும் என்கிறார்கள். அதோடு கடன் தொல்லை தீர்ந்து, திருமணத்தடையும் அகலும் என்பது ஐதீகம்.

    கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழியில் புகழ் பெற்ற வெள்ளை வர்ண விநாயகர் ஆலயம் உள்ளது. ஆவணி மாதம் சதுர்த்தி நாளில் வெள்ளை வர்ண விநாயகரை வணங்கினால் பாவ தோஷம் நீங்கப் பெறலாம் என்கிறது தல புராணம்.

    இவர் கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. கற்பூரப் பொடி அபிசேகம் மட்டுமே செய்யப்படுகிறது. இவருக்கு கமலாம்பாள், வாணி என இரு மனைவியர் உண்டு. இவரை வணங்கினால் திருமணத் தடைக்கான தோஷங்கள் இருந்தால் அவை நீங்கும், குழந்தை செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் மேலக் கோட்டையூர் இருக்கிறது. இந்த ஊரில் ஸ்ரீதலை வெட்டி பிள்ளையார் உள்ளார்.

    ஒரு காலத்தில், இந்த பிள்ளையாரின் சிரசில் "தன் தலையை நீக்கி தனத்தை எடு" என்று ஒரு வாசகம் இருந்ததாம்.

    அதன்படி விநாயகரின் தலை துண்டிக கப்பட்டதாம். அதுக்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து, ஊருக்கு குளம் வெட்டவும். கிணறு வெட்டவும் பயன்படுத்தினார்கள். இந்த பிள்ளையார் அன்றிலிருந்து தலை வெட்டி விநாயகர் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது.

    கல்யாணத்தடையால் கலங்கி தவிப்ப வர்கள் இங்கு வந்து பொங்கல் படையலிட்டு ரோஜா சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவித்து பச்சரிசி, எள், வெள்ளம் எனக் கலந்த கலவையைக் கீழே சிந்தி யபடி விநாயகரை மூன்று முறை வலம்வர வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும்.

    பிறகு விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். இந்த பரிகார வழிபாடு காரணமாக முன் வினை தோஷங்கள் விலகி, விரைவில் திருமண யோகம் தேடி வரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஸ்ரீசர்ப்ப விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகருக்கு சர்ப்பம் தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது.

    விநாயகரின் உடலில் 5 பாம்புகள் இடம் பெற்றுள்ளன. அரை ஞான் கயிறாக ஒன்று, இடையில் கட்டிய ஆடையின் மீது ஒன்று, பூணுலாக ஒன்று, கைக்கடங்களாக இரண்டு என்ற முறையில் ஐந்து சர்ப்பங்களும் அமைந்துள்ளன.

    ராகு, கேது தோஷங்கள் இவரை வழி பட்டால் நீங்கும். நாக தோஷங்கள் நீங்கவும், நச்சுப்பிணிகள் தீரவும் இந்த சர்ப்ப விநாயகரைத் தரிசித்து பலன் பெறலாம்.

    தஞ்சாவூருக்கு அருகே உள்ள திருக்கண்டிய ஸ்ரீ பிரம்மசிரகண்டீசுவரர் ஆலயத்தில் சப்த விநாயகர் என்ற பெயரில் ஏழு விநாயகப் பெருமான்கள் அருள் பாலிக்கின்றனர்.

    "சப்த விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்கினால், ஏழேழு ஜென்மத்தின் பாவங்கள் மற்றும் தோஷங்களில் இருந்தும் விமோசனம் பெறலாம்" என்பது ஐதீகம்.

    திருச்சி பாலக்கரை சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் இரண்டு பிள்ளை யார்கள் காட்சி தருகின்றனர். சதுர்த்தி நாளில் இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் தீராத கவலையும் தீரும்.

    வருடந்தோறும், இரண்டு முறை வரும் தூர்வர கணபதி விரத நாளும் இங்கு விசேஷம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த நாளில் விநாயகர்களை தீபம் ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    'நாக சதுர்த்தி' அன்று விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்து, அருகம்புல்லால் ஆன கிரீடம் மற்றும் ஆபரணத்தை அணிவித்து வேண்டிக் கொண்டால் நாக தோஷம் விலகும். இதே போல் கேது தோஷம் உள்ளவர்களும் இரட்டை விநாய கர்களை பிரார்த்தித்தால் பலன் நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

    இரட்டைப் பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு செய்து தரிசித்து வந்தால் கடன் தோஷம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் வில்வ தளங்களால் ஆன மாலையைச் சாற்றி வேண்டிக் கொண்டால், நோய்கள் தொடர்பான தோஷங்கள் தீரும். ஆரோக்கி யத்துடன் வாழலாம்.

    விசாக நட்சத்திரத்தில் பூப்பாவாடை சார்த்தி இந்த விநாயகரை வழிபட்டால் உறவுகளுக்கு இடையிலான கிரக தோஷங்கள் சரியாகி விடும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

    மதுரை தல்லாகுளம் பகுதியில் ஸ்ரீ இரட்டை விநாயகர் வீற்றிருக்கின்றனர். சுயம்பு மூர்த்தமாகத் தோன்றிய இந்த விநாயகரை தரிசித்தால், நல்லவை எல்லாம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    கல்யாண வரன் அமைய வேண்டும் என்று விரும்புவோர், குழந்தை பாக்கியம் கேட்டுப் பிரார்த்திப்போர், வழக்கில் நல்ல தீர்ப்புக்காக காத்திருப்போர் ஆகியோர் இங்கு வந்து, ஸ்ரீ இரட்டை விநாயகர்களுக்கும் தேங்காய் மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும்.

    அதே போல், தங்களுக்கு என்ன வயதோ, (25 வயது என்றால் 25 விரலி மஞ்சள்) அந்த வயதைக் குறிக்கும் வகையில் விரலி மஞ்சளைத் தொடுத்து மாலையாக விநாய கருக்கு சாற்றினால், எல்லாவித தோஷங்கள், வினைகள் நீங்கி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    விநாயகர் வழிபாட்டால் விலகும் தோஷங்கள் அடுத்த வாரம் தொடரும்...

    • கழுத்தில் சுற்றி கிடக்கும் பாம்பும் எனது வலது கை அருகில் படம் எடுத்தபடி நிற்க வேண்டும்.
    • தமிழகத்தின் கோவில் மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி தான்.

    ஆத்தாடி...

    பாம்பா... ஆ...

    சாமி கெட்-அப் என்றதுமே நடிப்பதற்கு ஒரு விதமான பயம் இருந்து கொண்டே இருந்தது. அந்த பயத்துடன்தான் பாளையத்தம்மன் படத்தில் நடித்து கொண்டிருந்தேன்.

    இதற்கிடையில் ஒரு காட்சியை பற்றி விளக்கினார்கள். அதாவது அம்மன் கெட்-அப்பில் நான் வலது கையை ஆசி வழங்குவது போல் வைத்திருக்க வேண்டும். அப்போது கழுத்தில் சுற்றி கிடக்கும் பாம்பும் எனது வலது கை அருகில் படம் எடுத்தபடி நிற்க வேண்டும். இப்படி போட்டோக்களில் சாமி படங்களை பார்த்திருப்போம். நல்லாத்தான் இருக்கும். நிஜத்தில் அப்படி நிஜ பாம்பையே கழுத்தில் போட்டுக் கொண்டு நடிக்க சொன்னால் எப்படி இருக்கும்?

    அப்படித்தான் நிஜபாம்பை கழுத்தில் போட்ட படி நடிக்க சொன்னார் ராமநாராயணன் சார்.

    சார்... பாம்புன்னாலே எனக்கு ரொம்ப பயம்சார். என்னால் முடியாது சார் பிளீஸ்... என்று நான் அவரிடம் கெஞ்ச... அவரோ 'பிளீஸ்மா... இந்த ஒரு காட்சிதாம்மா படத்துக்கே உயிர். பாம்பை நினைத்து பயப்படாதே! அதன் வாயை கட்டித்தான் வச்சிருக்கோம். கடிக்காது. தைரியமா இரு என்று என்னிடம் கெஞ்சினார்.

    என் பயத்தை போக்க என் கண் முன்னால் ஒரு ஊழியரின் கழுத்தில் அந்த பாம்பை சுற்றி போட்டார்கள். "அதோ பாரு ங்க... இப்படித்தான் இருக்கும். எதுவும் செய்யாது." என்று நம்பிக்கையூட்டினார்கள்.

    பாம்பாட்டியும் வந்தார். அவரும் தன் பங்குக்கு பாம்பை கையில் வைத்து கொண்டு அப்படி இப்படி போட்டு காட்டினார். 'அவருக்கென்ன...? பாம்புடன் பல நாட்கள் பழகியவர்'. ஆனால் நமக்கு பாம்பை பார்த்தாலே கை, கால்கள் உதறல் எடுக்கிறதே?

    நான் என்ன சொன்னாலும் படக்கு ழுவினர் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் அரைகுறை மனதுடன் சரி என்று சம்மதித்தேன். அது மட்டுமா? கழுத்தில் சுற்றி போடப்பட்ட பாம்புடன் அம்மன் வேடத்தில் நின்று அம்மனுக்கே உரித்தான தெய்வீக புன்னகை யையும் முகத்தில் தவழவிட வேண்டும் என்று டைரக்டர் காட்சியை பற்றி விளக்கினார். அந்த நேரத்தில் எப்படி இருந்திருக்கும் பாருங்க...! எப்படியோ ஒரு வழியாக அந்த காட்சியில் நடித்து விட்டேன்.

    மதுரை மீனாட்சி...!

    தமிழகத்தின் கோவில் மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி தான். நகரம் என்று பெயர் பெற்ற மதுரை வழியாக பல தடவை படப்பிடிப்புகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போனது கிடையாது. அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பது தான் உண்மை.

    அந்த வாய்ப்பும் பாளையத்து அம்மன் அருளால் கிடைத்தது. ஒரு பாடல் காட்சி மீனாட்சி அம்மன் கோவிலில் நடத்தப்பட்டது. எனது பெயரிலேயே ஒரு கோவில் இருப்பது போல் மதுரை மீனாட்சியை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சி. கோவிலுக்குள் சென்றதும் அதன் பிரமாண்டம் என்னை மிகவும் கவர்ந்தது.

    காலங்களால் அழியாத கலை வண்ணம் நிறைந்த அந்த கோவிலில் ஷூட்டிங் நடந்தது கூடுதல் சந்தோசத்தை தந்தது. பாளையத்து அம்மா நீ பாச விளக்கு... உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு...


    என்ற பாடலும் அதற்கு முந்தைய சரண வரிகள் ஒலிக்கும் போதும் அம்மனின் ஆவேச நடனத்துக்கு ஏற்ப வெளி வரும் உடுக்கை ஒலியுடன் குரவை சத்தமும் இணைந்த இசையும் நிஜமாகவே மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியதை என்னால் அனுபவித்து உணர முடிந்தது. அது வேற லெவலாக இருந்தது. அதை விவரிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. கிட்டத்தட்ட மெய் மறந்து ஆடினேன். பக்தி படம் என்றால் பரவசமாக இருக்கும் என்று சும்மா சொல்ல வில்லை போலும்!

    பாளையத்து அம்மன் பக்தி படம் தான். ஆனால் பாடல்கள் அனைத்தும் எல்லோராலும் ரசித்து கேட்கப்பட்டது. இந்த படத்தில் தான் முதன் முதலாக தலையில் கரகம் வைத்து ஆடினேன்.

    ஆடி வந்தேன்... ஆடி வந்தேன்... அஞ்சு குடைக் காரி...

    பாடி வந்தேன்... பாடி வந்தேன்... பாண்டியனார் தேவி...

    என்ற கரகாட்ட பாடல் சூப்பர் ஹிட்.

    நான் பாம்பு என வேம்பு என மாறுகிற

    சாதி. மாரி இவ சன்னதியில் மாறாது நீதி... இந்த பாடல்களெல்லாம் அந்த காலத்தில் தியேட்டர்களையே அதிர வைத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். கர காட்ட ஸ்டைலில் ஆடிய அந்த டான்சும் வித்தியாசமாக அமைந்தது. எல்லோரையும் கவர்ந்தது. பக்திமணமும், கிராமத்து இசை வாசனையும் படம் முழுக்ககமக மத்தது.

    பார்த்தவர்கள் அனைவரையும் மெய்சிலிர்த்து ரசிக்க வைத்தது. மீனா கழுத்தில் எப்படியாவது பாம்பு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

    தொடரும்...

    • காலத்திற்கேற்ற சில மாறுதல்கள் அவசிய மாகின்றது.
    • சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனியுங்கள்.

    காலத்திற்கேற்ற சில மாறுதல்கள் அவசிய மாகின்றது. நம் முன்னோர்கள் வளர்ந்த முறை, வாழும் முறை என்பது அதிக பண்புடன் கூடியவைகளாக இருந்தது. இன்னமும் இருக்கின்றது.

    ஆனால் நியாயமற்ற வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில் இவை எல்லாம் எடுபடாது. நட்பு என்ற வார்த்தைக்காக தன் உயிரைக் கூட கொடுப்பவர்கள் இன்றும் உள்ளனர். ஆனால் அந்த நட்பு இவர்களுக்கு கடைசியில் அநேகமாக துரோகத்தினைச் செய்கின்றது. இதை தாங்க முடியாமல் உடல், பொருள், ஆவி என அனைத்தும் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு வலியைக் கொடுக்கிறது.

    எனவே எதிலும் அதிக நட்பு என்பது இந்த காலத்தில் பிரச்சினைகளையும், மரியாதை இன்மையையுமே தருகின்றது. ஆகவே எந்த இடத்திலும் சற்று தள்ளி இருந்து பழகுவதே உங்கள் ஒளி சக்தியினைக் காக்கும். எதற்கும் ஒரு எல்லை கோடு வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஆசையும், கனவும் மட்டுமே வாழ்வில் எதனையும் பெற்றுத் தராது. அதற்கான கடும் உழைப்பு வேண்டும். உழைப்பு தரும் பலனை பரம்பரை சொத்து கூட தராது.

    * உங்கள் உழைப்பிற்காக பிறர் உதவியினை எதிர்பார்க்க வேண்டாமே.

    * ரொம்ப ரொம்ப அதிகமாக யோசித்துக் கொண்டிருந்தால் பிரச்சினை தானே உருவாகி விடும். பிரச்சினைக்கென தினமும் 10 நிமிடங்கள் ஆய்வு செய்யுங்கள், செயல்படுத்துங்கள். அவ்வளவு போதும். பிரச்சினை தானாகவே கரைந்து விடும்.

    * சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனியுங்கள். இதுவும் ஒரு தவம்தான்.

    * தரமற்ற நட்பு, உறவு வேண்டாமே!

    * நீங்கள் உறுதி எடுத்தால் யாரால் உங்களை தடுக்க முடியும். வெற்றி உங்களுடையது மட்டுமே. இத்தோடு சில சின்ன சின்ன பழக்கங்களும் நமது வெற்றிக்கு கை கொடுக்கும்.

    * காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர்.

    * காலை வேலைகளை முடிக்கும் வரை செல்போனை தொடாது இருப்பது.

    * 20 நிமிட தியானம் செய்வது.

    * 20 நிமிட உடற்பயிற்சி செய்வது.

    * காலையில் கூட சிறிது நேரம் படிக்கலாம்.

    * பழக்கம் உள்ளவர்கள் 10 நிமிட பிரார்த்தனை செய்யலாம். சிறிய பழக்கங்கள்தான். ஆனால் பெரிய மாறுதல்களைத் தந்து விடும். சிலவற்றினை மனதில் செதுக்கி விடுங்கள்!

    * நாம் எதை நினைக்கின்றோமோ, எதனை செயல்படுத்துகின்றோமோ அது பிரபஞ்சத்தினை அடைகின்றது. பிரபஞ்சத்தில் இருந்து நாம் கொடுத்ததே நமக்கு திரும்பி வருகின்றது.

    * கடந்த காலத்தினையே திரும்பி பார்ப்பதாலும், அந்த நிகழ்வுகளில் மூழ்குவதாலும் மேலும் இழப்பே ஏற்படுகின்றது.

    * எதை செய்தாலும் சிறப்பாக மட்டுமே செய்ய வேண்டும்.

    * எப்போதும் ஒருவர் தன்னை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மனதால் பலவீனமாக இருக்கும் போது வாக்குவாதங்கள் செய்யக் கூடாது.

    * யார் எதிரிலும் அழக் கூடாது.

    * தன்னைத் தானே நொந்து, தன்னைத் தானே திட்டி, தன்னை தானே தாழ்த்தி பேசி, தன்னைத் தானே ஒருவர் காயப்படுத்திக் கொள்ளக் கூடாது.

    * அழிவுப்பூர்வமான சிந்தனை உடைய வர்களிடம் இருந்து ஓடி விடுங்கள்.

    * அதிக சோக படங்கள், சோக பாடல்களை பார்க்க, கேட்கக் கூடாது. அவ்வாறே ஒருவர் வாழ ஆரம்பித்து விடுவார். கவனம் தேைவ.

    * பிரபஞ்சம், பிரபஞ்ச சக்தி, பிரபஞ்ச இயக்கம் இவற்றினைப் பற்றி படிக்க வேண்டும்.

    * தனக்கு எது அவசியம் தேவையோ அதனை தயக்கமின்றி செய்து கொள்ள வேண்டும்.

    * எது நமக்குத் தேவையோ அதற்காக நாம் தினமும் 15 நிமிடமாவது பயிற்சி, முயற்சி செய்ய வேண்டும்.

    * தினமும் காலையில் 20 நிமிடமாவது நடந்து பாருங்கள். உடலில் பல நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

    * இன்று மாலையே நாளைய ஆரம்பத்திற்கான வேலை செய்வது பட படப்பினை நீக்கும்.

    ஒரு குட்டி கதையினை படித்தேன். பயனுள்ளதாக இருந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

    காட்டில் புலியிடம் கழுதை ஒன்று சொன்னது

    'புல் நீல நிறம்'

    புலி: இல்லை, இல்லை புல் பச்சை நிறம்.

    கழுதை: இல்லவே இல்லை. புல் நீல நிறம்தான்.

    புலி: 'ராஜாவே, இவன் (கழுதை) புல் நீல நிறம் என்கின்றான்.

    சிங்கம் பதிலளித்தது: 'ஆம், புல் நீல நிறம்தான்'

    கழுதை: இதைத்தான் நான் சொன்னேன். சிங்க ராஜாவே.

    ஆனால் புலி இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அவருக்கு தண்டனை கொடுங்கள்' என்றது.

    சிங்கம் புலிக்கு தண்டனை வழங்க சம்மதித்தது.

    பின் சிங்கம் சொன்னது. 'புலியே, நீ ஐந்து வருடங்கள் பேசக் கூடாது. மவுனமாக மட்டுமே இருக்க வேண்டும்' என்றது.

    கழுதை மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடியது.

    புலி தன் தண்டனையை ஏற்றுக் கொண்டது. இருப்பினும் அதன் மனம் வேதனைப்பட்டது.

    'சிங்க ராஜாவே, நான் உங்கள் தண்டனையினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் புல்லின் நிறம் பச்சை தானே' என்றது.

    சிங்கம்: 'ஆம், புல்லின் நிறம் பச்சைதான்'

    புலி: 'பின் ஏன் தண்டனை அளித்தீர்கள்?'

    சிங்கம்: இந்த தண்டனை புல் பச்சை நிறமா? நீல நிறமா? என்பதற்காக அல்ல. வீரமும், புத்திசாலி தனமும் நிறைந்த நீ ஒரு முட்டாள் கழுதையுடன் வாதிட்டாய். அதற்கு மேல் என்னிடமும் வந்து என் நேரத்தினை வீணடித்தாய். அதற்கான தண்டனையே இது' என்றது.

    இதன் மிகப்பெரிய பாடத்தினை அனை வரும் புரிந்து கொள்வோம்.

    நாம் நல்லவரா? என்பதை அறிந்து கொள்ள சில சுய பரிசோதனைகள் இதோ:-

    * நீங்கள் வீட்டிற்குள்ளோ, ஆபீசுக்குள்ளோ (அ) உறவினர் வீட்டிற்குள்ளோ நுழைகின்றீர்கள். அப்போது அங்கு அனைவரும் உங்களை பார்த்து சந்தோஷம் அடைகின்றனரா?

    * உங்கள் கருத்திற்கு அதிக கவனம் கொடுத்து வருகின்றனரா?

    * உங்கள் அறிவுரையும், வழி காட்டுதலும் தேவை என்று நினைக்கின்றனரா?

    * அனைவரும் உங்களை கண்டவுடன் இதயத்தில் இருந்து புன்னகைக்கின்றனரா?

    * நீங்கள் மன்னிக்கும் குணம் கொண்டவர், பழி வாங்க மாட்டீர்கள் என நம்புகின்றார்களா?

    * எதுவும் மன்னிக்கக் கூடிய விஷயங்களுக்கு மட்டுமே மன்னிப்பீர்கள் என்று அறிந்து வைத்திருக்கின்றார்களா?

    * மற்றவர் செய்யும் சிறிய உதவிகளுக்கு கூட நீங்கள் நன்றி உணர்வோடு இருக்கின்றீர்களா?

    * உங்கள் அருகில் இருக்க நண்பர்கள், உறவினர்கள் ஆசைபடுகின்றனரா?

    * கெட்ட நிகழ்வுகளை மனதில் தூக்கி அலை யாமல் உடனடியாக மறந்து விடுகின்றீர்களா?

    * உயர் சக்தி (அ) மனசாட்சி இதற்கு கட்டுப்பட்டு நடப்பவரா?

    * அமைதியை விரும்புபவரா?

    * தர்ம சிந்தனை உங்களிடம் இருக்கின்றதா?

    உங்களை நீங்களே முதுகில் தட்டிக் கொடுத்து இதே உணர்வோடு, குணத்தோடு, பண்போடு வாழ்வினை எளிதாய் தொடரலாம். இல்லையெனில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே.

    அடிக்கடி ஏதோ அழிவுப்பூர்வமான ஒன்றினை நினைத்து அது நடந்து விடுமோ என்று ரொம்பவும் பயப்படக்கூடாது. இப்படி பயந்தால் அது நிகழ்ந்து விடும் வாய்ப்புகள் அதிகம்.

    * ஏதாவது பிரச்சினையா? குழம்புகிறதா? அந்த பிரச்சினையை பற்றிய விவரங்களை ஒரு ேபப்பரில் எழுதத் தொடங்குங்கள். தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் எழுதுங்கள். இப்படி எழுதும் பொழுதே தெளிவு பிறந்து பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

    * அறிவு, புத்தி, நுண்ணறிவு- இதனை கூர்மையாக்குங்கள். பொருள் வந்து சேரும். சில முயற்சிகளை சற்று புதிதாக செய்து பார்க்கலாமே

    * ஒவ்வொருவருக்கும் சில இலக்குகள் இருக்கும். எத்தனை இலக்குகள் உங்களுக்குள் இருக்கும். சுமார் 20 அல்லது 25 இருக்குமா? பொதுவில் இவ்வளவு இருப்பது அதிகம்தான். எனவே 10 என்று வைத்துக் கொள்வோம். அதனை எழுத வேண்டும். தெளிவாக சுருக்கமாக எழுத வேண்டும்.

    அதில் முதல் மூன்றினை எடுத்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மனதில் அதிக முக்கியத்துவம் பெற்றதே முதல் மூன்றில் இடம்பெறும். அதற்கு அதிக முக்கியத்துவத்தினை கொடுங்கள்.

    * 3-க்கு மேல் எழுதியுள்ளவற்றை அடித்து விடுங்கள். சிறிது கூட அவற்றிற்கு கவனம் தர வேண்டாம். ஏனெனில் முக்கிய மூன்றில் கவனம் செலுத்தும் பொழுது மற்றவை அதனை சிதறச் செய்யும்.

    * எதனையும் எழுதுங் கள். கை, பேனா இவற் றின் பலம் மற்ற கருவி களை விட அதிகம் என்பதனை காலப் போக்கில் உணருவீர்கள்.

    * தினமும் 10 நிமிட மாவது உங்கள் இலக் குக்கு செலவழிப்பதால் காலப்போக்கில் இது வளரும். செய்வோமா?


     

    • நேர்த்தியாகப் பகுத்து வாழ்வதில்தான் திறமை இருக்கிறது.
    • கவனக்குறைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

    குடும்பத்தின் மீதும் அலுவலகக் கடமைகள் மீதும் அக்கறை கொண்டுள்ள அன்பின் வாசகர்களே! வணக்கம்!.

    குடும்பமாக வாழ்வது என்பது உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள சமூகக் கடமை ஆகும். அதே நேரத்தில், குடும்ப வாழ்வியலைச் செம்மையாக நடத்துவதற்கான அடிப்படைத் தேவையான பொருளாதாரத்தை ஒவ்வொரு மனிதனும் யாதானுமொரு தொழில் செய்தோ! அல்லது ஏதாவதொரு அலுவலகத்தில் பணிபுரிந்தோ ஈட்டியே ஆகவேண்டும் என்கிற கட்டாயமும் உண்டு.

    தனக்கு வாய்த்துள்ள ஒவ்வொரு நாளையும் குடும்பத்திற்கென ஒரு நேரம், பணியாற்றிப் பொருளீட்டுவதற்கென ஒரு நேரம், ஓய்விற்கும் பொழுதுபோக்கிற்கும் என சில போழுதுகள் ஆகியவற்றை நேர்த்தியாகப் பகுத்து வாழ்வதில்தான் திறமை இருக்கிறது.

    ஒவ்வொரு மனிதனும் குடும்பத்தையும் வேலையையும் சரிசமமாகப் பகுத்துக் கொண்டு, சமநிலை பிறழ்ந்துவிடாமல் வாழவேண்டும் என்றுதான் கருதுகிறான். நடந்து செல்ல இரண்டு கால்கள் இருக்கலாம்; ஆனாலும் நடக்கும்போது ஒருகால் முன்னே செல்லும்போது மற்றொருகால் பின்னே போவதைப் போலத்தான் இவ்விரண்டிற்குமான முக்கியத்துவங்கள் இருக்க வேண்டும்.

    சிலர், 'எனக்கு அலுவலக வேலைதான் முதல் மனைவி!' என்று அலுவலகங்களில் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். குடும்பத்தை மறந்து அலுவலகமே கதி எனக் கிடப்பவர்களும் உண்டு. சிலரை 'மதுப் பிரியர்கள்' என்று அழைப்பதைப் போல இவர்களை `வேலைப்பிரியர்கள்' என்று அழைப்பார்கள். நம்மை நம்பி வாழும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு இந்த வேலைதான் காரணம் என்றாலும், குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்கினால்தானே அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்?.

    சிலர் அலுவலகத்தில் இருந்தாலும் சதா குடும்ப நினைவாகவே இருப்பார்கள். அலுவலக வேலையைப் பார்க்காமல் குடும்ப வேலைகளையே திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். வேலைக்குத் தாமதமாக வருவது, நேரம் முடிவதற்கு முந்தியே சென்று விடுவது; அலுவலக வசதிகளைக் குடும்ப வேலை களுக்குப் பயன்படுத்துவது; தனது பணி அதிகாரங்களைச் சுயலாபங்களுக்காக மட்டும் பயன்படுத்துவது; மொத்தத்தில் வாங்குகிற சம்பளத்திற்கான வேலையைக்கூடப் பார்க்காமல் வெட்டியாய் அமர்ந்திருப்பார்கள்.

    சிலர், உண்மையிலேயே அலுவலகப் பணிச்சுமை, மிகுந்திருந்தாலும், வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மன அழுத்தத்துடன் வேலைபார்த்து வருவார்கள். ஒரு கட்டத்தில் குடும்பத்தில் மனைவி, குழந்தைகள் மீது அக்கறை காட்ட முடியாமலும், அலுவலகப் பணியைச் சரிவர முடிக்க முடியாமலும் மனவிரக்திக்கு ஆளாகி விடுவார்கள். இதுபோன்ற சமத்தன்மை இல்லாமல் அலுவலகத்தையும் குடும்பத்தையும் ஈடுகட்ட முடியாமல் தவிப்பவர்கள், ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் தோல்வி அடைந்து விடுகிறார்கள்.

    எல்லாருக்கும் நேரம் இருக்கிறது; எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது; நேரத்தைப் பகிர்ந்து கொள்வதில் திறமை; இயன்ற வேலையை மட்டுமே ஒத்துக்கொள்கிற நேர்மை; எதையுமே பரபரப்பின்றிப் பொறுமையோடு செய்கின்ற அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய இவற்றால் எத்தகைய பணியையும், வீட்டிலும் சரி! பணியிடத்திலும் சரி! சுணக்கமின்றிச் செய்து முடிக்கலாம்.

    அந்த காலத்தில் ஓர் ஆசிரியர் காலையில் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் எல்லா மாணவர்களையும் அடிஅடியென அடிக்கத் தொடங்கினால், மாணவர்களே பேசிக்கொள்வார்கள்,' வீட்டில் மனைவியிடம் வாங்கி வந்ததை இங்கே மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்!'.

    அதேபோல அலுவலகத்துக்குள் நுழைகிற மேலதிகாரி பார்க்கிற எல்லார் மீதும் எரிந்து விழுந்தால்,'வீட்டில் மேடம் நல்ல குடு குடுத்திருப்பாங்க போல' எனப் பணியாளர்கள் பேசிக்கொள்வார்கள். அதே போல அலுவலகம் முடிந்து வீட்டுக்குத் திரும்பிய அப்பா, பிள்ளைகள் மீது காரணமின்றிக் கோபம் கொள்வதும், மனைவி, கணவர்மீது எரிந்துவிழுவதும், அலுவலகம் தந்தனுப்பிய விரக்தித் தபால்களின் விளைவுகள்.

    சிலர் சொல்வார்கள், அலுவலகமும் குடும்பமும் எண்ணெயும் தண்ணீரும் போல; ஒட்டவே ஒட்டாது என்று. ஆனால் உண்மை அதுவன்று. ஒரு நல்ல குடும்பப் பாங்கான மனிதராலேயே நல்லபடியாக ஓர் அலுவலகத்தைக் கொண்டு செலுத்த முடியும். இதை அப்படியே திருப்பிப் போட்டும் சொல்லலாம்.

    ஆனால் கலந்து குழப்பிக்கொள்ளக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், ஒரு குடும்பத்தைப்போல அரவணைப்பு உணர்வோடு அலுவலகத்தை நடத்தலாம்; ஆனால் ஓர் அலுவலகத்தைப்போல விதிமுறைகளோடு குடும்பத்தை நடத்துவது கடினம். ஏனெனில் கோப்புகளைத் தாண்டியது குடும்பப் பாசம்.

    படிப்பிலும் திறமையிலும் சிறப்பான ஓர் இளைஞன் ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தான். இரண்டு மூன்று சுற்றுகளில் தேர்ந்துவிட்டான்; கடைசிச் சுற்று நேர்முகச் சுற்று; அதை அந்த நிறுவனத்தின் இயக்குநரே நேரடியாகக் கலந்துகொண்டு நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்ந்துவிட்டால் நேராக மேலாளர் பணியில் அமர்ந்து விடலாம்.

    அன்று நேர்முகத் தேர்வுக்காக இயக்குநர் அறையில் காத்திருந்தான் அந்த இளைஞன். இயக்குநர் வந்தார்; அவனது தன்விவரக் குறிப்புகளைக் கவனத்துடன் படித்தார். பள்ளிக் கல்வியிலிருந்து, பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு என எல்லாவற்றிலும் முதன்மை மதிப்பெண்களைப் பெற்றிருந்தான். எந்த ஆண்டிலும், எந்தப்படிப்பிலும் சோடை போகாத கல்விச் சாதனைகளை அவன் கொண்டிருந்தான்.

    நேர்முகத்தேர்வை ஆரம்பித்தார் இயக்குநர்," பள்ளிப் படிப்புப் படிக்கும்போது நீ கல்வி உதவித்தொகை ஏதேனும் பெற்றாயா?".

    "இல்லை. நான் ஆராய்ச்சிப்படிப்பை முடிக்கும் வரை எந்த உதவித் தொகையையும் பெறவில்லை" என்று பதிலளித்தான் இளைஞன்.

    "அப்படியானால் உன் படிப்புக்கான முழுச் செலவையும் உன் தந்தைதான் செய்தாரா?" இயக்குநர் கேட்டார்.

    " இல்லை. நான் ஒரு வயதுக் குழந்தையாய் இருந்தபோதே என் தந்தையார் காலமாகிவிட்டார். என் தாய்தான் என் படிப்புச் செலவைப் பார்த்துக் கொண்டார்.

    " உன் தாயார் என்ன வேலை செய்து வருகிறார்?"

    " வீடுகளில் அழுக்குத் துணிகளை வாங்கி அவற்றை எங்கள் வீட்டில் வெளுத்துத் தரும் வேலையைப் பார்க்கிறார்".

    இளைஞனின் அந்த பதிலைக்கேட்ட இயக்குநர், "எங்கே உன் கைகளைக் காட்டு!" எனக் கேட்டு அவனது இரண்டு உள்ளங்கைகளையும் தன்னுடைய கைகளால் தடவிப் பார்த்தார். இளைஞனின் உள்ளங்கைகள் பூப்போல மென்மையாக இருந்தன. "அப்படியானால் நீ துணிதுவைக்கும் பணியில் உன் தாயாருக்கு நீ உதவி செய்வதில்லையா?"கேட்டார் இயக்குநர்.

    "ஐயா! நான் எப்போது உதவி செய்யப்போனாலும், 'நீ உன் படிப்பை மட்டுமே கவனி! என் வேலையை நானே பார்த்துக்கொள்கிறேன்' என்று மறுத்து விடுவார். மேலும் என்தாய் என்னைவிட அதிவேகமாகவும் தூய்மையாகவும் துணி துவைப்பதில் கெட்டிக்காரர்!" என்றான் இளைஞன்.

    இயக்குநருக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களைப் பார்த்தால் இது ஏதோ மேலாளர் பணிக்கான நேர்முகம்போலத் தோன்றாதுதான். இயக்குநர் இளைஞனைப் பார்த்து, " நீ என்றைக்காவது உன் தாயாரின் உள்ளங்கைகளை, இப்போது நான் உன் உள்ளங்கைகளைப் பிடித்ததுபோலத், தொட்டுப் பார்த்திருக்கிறாயா?" எனக் கேட்டார்." இல்லை!" என்றான் இளைஞன்.

    "நான் இன்னும் ஒருநாள் தருகிறேன். நீ நேராக வீட்டுக்குப் போய், உன் தாயாரின் உள்ளங்கைகளை ஸ்பரிசித்துப் பார்!. நாளை மீண்டும் இங்கு நேர்முகம் வந்து உன் அனுபவம் சொல்!" என்று அனுப்பிவைத்தார்.

    வீட்டுக்குப் போனான் இளைஞன்; மலர்ந்த முகத்தோடு வந்த அம்மா, " என்ன வெற்றிதானே! வேலை கிடைத்துவிட்டதா?" என்று கேட்டார். எதுவும் பேசாமல், அம்மாவின் கரங்களை இறுகப் பற்றி உள்ளங்கைகளை விரித்துப் பார்த்தான்.

    சுருக்கம் சுருக்கமாய்க், காய்காய்த்துப் போய், சில இடங்களில் ஆறியும் சில இடங்களில் ஆறாததுமாய் ரணங்களோடு இருந்ததைப் பார்த்த மகன் "அம்மா!" என அலறிக் கண்ணீர் அருவிகொட்டச் செயலற்று நின்றுவிட்டான்.

    `எனக்காகத் தண்ணீரும் சோப்பும் நாள்தோறும் பட்டுப்பட்டுக் காய்த்துப்போய், மேடும் பள்ளங்களுமாய் நீங்கள் பெற்ற அந்த ரணங்கள்தாம் நான்பெற்ற பட்டங்களா அம்மா?' மனத்துள் ஆர்ப்பரிக்கும் அழுகைக் கேள்வி களை வெளிப்படுத்த முடியாமல் நின்றான்.

    மறுநாள், அதே நேர்முக அறை. இயக்குநர் வந்தார். "நேற்று நான் சொன்னதைச் செய்தாயா?; என்ன நடந்தது?" இளைஞனைப் பார்த்துக் கேட்டார். கொப்பளிக்கும் அழுகை யோடு, நேற்று அம்மாவிடம் பேசாத வார்த்தை களையெல்லாம் உணர்ச்சிப்பெருக்கோடு இயக்குநரிடம் கொட்டித் தீர்த்துவிட்டான் இளைஞன்.

    "என்னை இந்த அளவுக்கு உயர்த்து வதற்கு என் அம்மா பட்ட பாடுகளையும் என் அம்மா செய்த தியாகங்களையும் நான் உணரும்படி செய்ததற்கு உங்களுக்கு என் நன்றிகள். இந்த வேலையை எனக்கு நீங்கள் வழங்குகிறீர்களோ இல்லையோ, இனிமேல் நான் பணியமர்ந்து கடமையாற்றப் போகிற ஒவ்வொரு நொடிகளிலும் நான் என் அம்மாவுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்!" என்றான் இளைஞன்.

    "நல்வாழ்த்துகள்!; இன்றுமுதல் நீங்கள் இந்த நிறுவனத்தின் மேலாளராகப் பணியமர்த்தப் படுகிறீர்கள்!" என்று மகிழ்ச்சியோடு சொல்லி, இளைஞனுக்குப் பெருமிதத்தோடு கைகொடுத்தார்.

    இயக்குநர் மேலும் சொன்னார்," தனக்காகத் தனது குடும்ப உறுப்பினர்கள் எப்படிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணரத் தெரிந்த மனிதனாலேயே, அலுவலகத்தில் தன்னோடு பணிபுரியும் சக ஊழியர்களின் கஷ்ட நஷ்டங்களையும் உணர்ந்து செயல்படமுடியும். அப்படிப்பட்ட மனிதநேய உணர்வு, அலுவலக மேலாண்மைக்குக் குடும்பத்திலிருந்தே வரவேண்டும். அதனால்தான் நேர்முகத்தேர்வை நான் அந்தக் கோணத்தில் நடத்தினேன்".

    அலுவலகம் என்பது ஒரு குறிப்பிட்ட சட்ட விதிமுறைகளுக்கேற்ப இயங்குவதுதான்; அதில் பணிபுரியும் அலுவலர்கள், கொடுத்த பணியை முடிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டியவர்கள்தாம். ஆனாலும் சில ஏற்ற இறக்கங்கள், லாப நஷ்டங்கள், காலதாமதங்கள், கவனக்குறைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

    அலுவலகங்களில் இயந்திரங்கள் இருக்கும்; ஆனால் அவற்றை இயக்குபவர்கள் இயந்திரங்கள் அல்லவே!. மனிதர்கள்தாமே!. எனவே அலுவலக மேலாண்மையில் சட்டதிட்டங் களுக்கு இணையான முன்னுரிமையை மனித நேயத்திற்குத் தரவேண்டியதும் அவசியமாகிறது.

    அன்பு, கருணை, இரக்கம், கனிவு, இன்சொல், அடுத்தவர் துன்பம்கண்டு உதவத் துடிக்கும் பரோபகாரம் , நட்பு, உறவாய்ப்பேணும் சகோதரத்துவம் இவற்றையெல்லாம் தாள்களும், பேனாக்களும், கோப்புகளும் உள்ள அலுவலகத்திலிருந்து கண்டெடுக்க முடியாது.

    குடும்பம் என்னும் கோயில் தன்மையில் இருந்தே இவற்றை அலுவலிடத்திற்கு நாம் மடைமாற்றம் செய்ய வேண்டும்.

    எத்தனை துன்பங்கள், எத்தனை சண்டை சச்சரவுகள் இருந்தாலும் குடும்பமே அமைதி தவழும் நந்தவனம். அப்படி அலுவலகத்தையும் ஆக்குவதற்குக் குடும்ப மேன்மைகளைப் புகுத்திக் கொண்டாடக் கற்றுக்கொள்வோம்!.

    தொடர்புக்கு 9443190098

    • வடலூர் ராமலிங்க வள்ளலாரை சுவாமிகள் சந்தித்துள்ளார்.
    • அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தவம் நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது.

    ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் தாத்தா சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் தாத்தா சுவாமிகளின் வயது என்ன என்றுதான் யாராலும் கண்டறிய முடியவில்லை.

    அவரின் அன்பரான வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள், பலமுறை அவர் வயதை அறிய முற்பட்டுக் கேள்விகள் கேட்டிருக்கிறார்.

    ஒவ்வொரு முறையும் `மரம் பழுத்துக் கனிந்திருந்தால் அதன் பழத்தைப் பறித்துச் சாப்பிடாமல் மரத்தின் வயதையா கேட்டுக் கொண்டிருப்பது?` என்று சொல்லி தன் சரியான வயதைத் தெரிவிப்பதைத் தவிர்த்தே வந்திருக்கிறார் சுவாமிகள்.

    கி.வா.ஜ. போலவே குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவும் சுவாமிகளின் அன்பர்களில் ஒருவர். அவர் சுவாமிகளைப் பற்றிக் கவிதை புனைந்திருக்கிறார்.

    இரண்டு பாரதியார்களையும் தாம் சந்தித்திருப்பதாக ஒருமுறை சொல்லியிருக்கிறார் சுவாமிகள். ஒருவர் நந்தனார் சரிதம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார். இன்னொருவர் தேசியக் கவி மகாகவி பாரதியார். எனவே இவ்விருவர் காலத்திலும் சுவாமிகள் வாழ்ந்திருக்கிறார் எனத் தெரிகிறது.

    ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் சற்றுக் குள்ளமானவர். பாரதியார் சொல்லும் குள்ளச்சாமி என்பவர் இவர்தான் என்று கருதுபவர்கள் உண்டு.

    ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு தோதாபுரி அளித்த தீட்சை பற்றியும் விவேகானந்தருக்கு பரமஹம்சர் அளித்த தீட்சை பற்றியும் தாம் தனிப்பட்ட முறையில் அறிந்ததாக ஞானானந்தகிரி சுவாமிகள் குறிப்பிட்டதுண்டு.

    வடலூர் ராமலிங்க வள்ளலாரை சுவாமிகள் சந்தித்துள்ளார். மதுரைக் கோவிலில் சிறுவன் ரமணனைத் தாம் கண்டதாகவும் பின்னர் மகரிஷி ரமணராக அவர் பரிணாமம் பெற்ற போது திருவண்ணாமலையில் அவரைப் பார்த்ததாகவும் சுவாமிகள் கூறியதுண்டு.


    ஸ்ரீரமணர் விரூபாட்ச குகையில் வசித்தபோது சுவாமிகள் அடிக்கடி அவரைச் சந்தித்து ஆன்மிக உரையாடல்கள் நிகழ்த்தியுள்ளார் என்பதும் பதிவாகியுள்ளது.

    சீரடி பாபா, ஸ்ரீஅரவிந்தர், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற அருளாளர்களை அவர் நேரில் சந்தித்துள்ளார்.

    இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சுவாமிகளின் வயதை இன்னதென்று கணக்கிட முடியாமல் திகைப்பு ஏற்படுகிறது.

    சுவாமிகளின் வயது நூற்றியைம்பது என்றும் இருநூறு என்றும் அதற்கு மேலும் இருக்கலாம் என்றும் இவ்விதமெல்லாம் பற்பல ஊகங்கள் சொல்லப்படுகின்றன. எவ்விதமானாலும் நூறாண்டுகள் தாண்டிப் பற்பல ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கிறார் என்பது உண்மை.

    மகான் ஸ்ரீராமானுஜர் நூற்று இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். காஞ்சி பரமாச்சாரியார் நூறாண்டு வாழ்ந்தார். பாரத தேசத்தில் நெடுங்காலம் வாழ்ந்த துறவியர் இன்னும் சிலர் உண்டு.

    அதிக காலம் உடல் தரித்து வாழ்ந்து பக்தர்களை நெறிப்படுத்திய துறவியர் வரிசையில் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.

    நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் பூர்வாசிரமம் பற்றிய செய்திகள் எதுவும் அதிகம் கிட்டவில்லை.

    அவர் கன்னட தேசத்தில் மங்களபுரி என்ற ஊரில் வெங்கோபா கணபதி, சக்குபாய் ஆகிய தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் என்றும், அவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்றும் சொல்லப்படுகிறது. அவர் தம் ஏழு வயதில் தம் தந்தையிடமிருந்து காயத்ரி மந்திர உபதேசம் பெற்றதாகவும் கூறுகிறார்கள்.

    இயற்கையிலேயே ஆன்மிக நாட்டத்துடன் திகழ்ந்த சுப்பிரமணியனுக்குச் சராசரிப் பள்ளிக் கல்வியில் அதிக ஈடுபாடு ஏற்படவில்லை என்பது புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

    அவருக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, அடிக்கடி அவர்முன் ஒரு ஜோதி தோன்றி அவரை வழிநடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    இளம் வயதிலேயே அந்த ஜோதி காட்டும் வழியைப் பின்பற்றி அவர் வீட்டைத் துறந்து வெளியேறிவிட்டார். எல்லா உறவுகளையும் துறந்த அவர், தேசாந்திரியாகப் பற்பல இடங்களுக்குச் சென்றார்.

    பாரத தேசமெங்கும் பல திருத்தலங்களில் உறைந்துள்ள தெய்வ சக்தியை ஆங்காங்குள்ள வடிவங்களில் பக்தியோடு வழிபட்டார். அவ்வகையில் பண்டரிபுரத்திற்கும் சென்று பாண்டுரங்கனையும் தரிசித்தார். ஏராளமான பக்தர்கள் எந்தப் பண்டரிநாதன் அருளில் திளைத்தார்களோ அதே பண்டரிநாதன் அருளில் இவரும் மூழ்கித் திளைத்தார்.

    பின்னர் ஜோதிர்மடத்தின் பீடாதிபதியான சிவரத்னகிரி சுவாமிகளை நேரில் சந்தித்து அவரால் ஈர்க்கப்பட்டார். ஜோதிர்மடம் என்பது ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் ஒன்று. இந்த மடம் ஆதிசங்கரரின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவரான தோடகாச்சாரியார் பரம்பரையில் வரும் மடமாகும்.

    இவரது அளவற்ற ஆன்மிக நாட்டத்தைக் கண்டு வியந்த சிவரத்னகிரி சுவாமிகள் இவரைத் தன் சீடராக ஏற்று ஆட்கொண்டார்.

    அவரே இவரைத் துறவியாக்கி ஞானானந்தகிரி என்ற தீட்சா நாமத்தை இவருக்கு வழங்கினார். இவரது பற்றற்ற நிலைகண்டு மகிழ்ந்து, தனக்குப் பின் ஜோதிர்மடத்தின் பீடாதிபதியாகவும் இவரையே அறிவித்தார்.

    சிவரத்னகிரி சுவாமிகள் சித்தி அடைந்தபின், ஜோதிர்மடத்தின் பீடாதிபதிப் பொறுப்பை ஏற்றார் ஞானானந்தகிரி சுவாமிகள். ஆனால் மடாபதியாகத் தொண்டு செய்வதை விடத் தவம் செய்வதிலேயே அவர் மனம் பெரிதும் ஈடுபட்டது.

    எனவே பீடாதிபதி பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே வேறொருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தவமியற்ற இமய மலைக்குச் சென்றுவிட்டார். தனிமையில் இறைவனை ஓயாமல் சிந்திப்பதிலும் நாள்முழுவதும் மந்திர ஜபம் செய்வதிலும் அவருக்குப் பேரார்வம் இருந்தது.

    இமய மலைப் பிரதேசங்களில் பனிக் குகைகளில் பற்பல ஆண்டுகளைத் தவத்தில் கழித்தார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தவம் நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது.

    பின்னர் திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா எனப் பல இடங்களுக்கும் சென்றார். இறுதியாக தமிழகத்தில் விழுப்புரம் அருகே திருக்கோவிலூரை அடுத்து அமைந்துள்ள சித்தலிங்க மடம் என்ற சித்தர்கள் வாழ்ந்த புராதன தலத்தில் வந்து தங்கினார்.

    அங்கு சிலகாலம் அருளாட்சி புரிந்து தன்னைத் தேடிவந்த அன்பர்களை வழிநடத்தினார்.

    பின்னர், திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், தென்பெண்ணை ஆற்றின் வடக்குக் கரையில் ஞானானந்த தபோவனம் என்ற ஆசிரமம் ஒன்றை ஏற்படுத்தி, அந்தத் தபோவனத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழலானார். அங்கிருந்தபடியே பல அடியவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

    தபோவனம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. அங்கு வந்தவர்கள் சுவாமிகளின் முன்னிலையில் தங்கள் மனத்தில் சாந்தி தோன்றுவதை அனுபவித்தார்கள். மலர் இருக்கும் இடத்தைத் தேடி வண்டுகள் வருவதுபோல், ஏராளமான அடியவர்கள் தபோவனத்தைத் தேடி வரத் தொடங்கினார்கள்.

    தபோ வனத்தில் ஞான விநாயகர், ஞானஸ்கந்தர், ஞானபுரீசர், ஞானாம்பிகை, ஞானலட்சுமி, ஞானவேணுகோபாலர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட சிலைகளை நிறுவி அந்தந்த சன்னிதிகளில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார் சுவாமிகள்.

    அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதை அவர் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னார். இந்த அரிய மனிதப் பிறவியை பொருட்செல்வம் மற்றும் சிற்றின்பத்தை நாடி வீணாக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். தன்னை உணர்வதும் அதன்வழி இறைவனை உணர்வதுமே மனித வாழ்க்கையின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

    தன்னை நாடிவரும் பக்தர்களுக்குத் தொடக்கத்தில் உலகியல் ரீதியாக அவர்கள் வேண்டியதையெல்லாம் அருளினார். அவரிடம் எந்தக் கோரிக்கையைச் சொன்னாலும் சிறிது காலத்தில் அது நிறைவேறுவதை அறிந்த அன்பர்கள் அவரை மொய்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

    அவ்விதம் அவர்களைக் கவர்ந்து, பின்னர் மெல்ல மெல்ல ஆன்மிகப் படிநிலையில் அவர்களை மேலே உயர்த்தி முக்திக்கு வழிகாட்டினார் சுவாமிகள். தேவாரம் திருவாசகம் போன்ற பக்திப் பனுவல்களை அடியவர்களுக்கு போதித்தார். அவற்றில் இளமையிலேயே ஈடுபாடு வரும் வகையில் குழந்தைகளுக்கும் அவற்றைக் கற்பிக்கச் செய்தார்.

    கள்ளம் கபடமில்லாத குழந்தைகளிடம் அவருக்கு மிகுந்த அன்பிருந்தது. குழந்தைகளும் தாத்தா சுவாமிகளைப் பெரிதும் நேசித்தார்கள். அவர் சொன்னதையெல்லாம் கடைப்பிடிக்கும் அளவு அவர்கள் அவரை மதித்தார்கள்.

    பஜனை சம்பிரதாயம் சார்ந்த நாம சங்கீர்த்தனத்தில் பேரார்வம் உடையவர் ஸ்ரீ சுவாமிகள். புகழ்பெற்ற நாம சங்கீர்த்தன விற்பன்னரும் ஜல சமாதியடைந்து மறைந்தவருமான ஹரிதாஸ்கிரி, இவரது பிரதான சீடர்களுள் ஒருவர்தான்.

    ஹரிதாஸ்கிரி தாம் செல்லும் இடங்களிலெல்லாம் தமது குரு ஸ்ரீஞானானந்த கிரியின் பாதுகைகளை உடன் எடுத்துச் சென்று பூஜித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகள் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் நாள் இறைஜோதியில் ஐக்கியமானார். அவரைப் போன்ற துறவிகள் சித்த புருஷர்கள். அவர்கள் ஸித்தி அடைந்தாலும் காலம் கடந்தும் வாழ்கிறார்கள். அவர்களின் பொன்னுடல் நம் கண்ணை விட்டு மறைந்தாலும் அருளுடல் நிரந்தரமாய் வாழ்கிறது.

    அடியவர்கள் சொல்லும் சில சம்பவங்கள் மூலம் அத்தகையோரது வாழ்க்கையின் சில துளிகளை நாம் அறியலாமே அன்றிப் பூரணமான வாழ்வை அறிய இயலாது. அது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட மகத்துவம் உடையது. திருக்கோவிலூர் தபோவனத்தில் ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளின் சமாதிக் கோவில் உள்ளது.

    அண்மையில் இந்தக் கோவிலுக்கு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பற்பல யாகங்கள் நிகழ்த்தப்பட்டன. சுவாமிகளுக்குப் பிடித்த பஜனை நிகழ்ச்சிகளும் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன.

    தமிழகத்தில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமிகளின் அருளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இன்றும் சுவாமிகள் தம்மை நாடிவரும் அடியவர்களுக்கு அருள்புரியக் காத்திருக்கிறார். அவரைத் தேடி அவர் அருளைப் பெறத் தபோவனம் வரும் அன்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • உடல் அழிந்த பின்பு இந்த ஆத்மா எங்கு செல்ல வேண்டும்.
    • இதமான மனதிற்கு மருந்து எது என்றால் தியானம் தான் சிறந்த வழியாகும்.

    அன்பார்ந்த வாசகர்களே, தியானம் செய்தால் உடல் நலம், மனவளம், ஆன்மிக நலம் ஓங்கும். எந்த ஒரு செயலை செய்தாலும் அதை தொடங்கும் முன்பே, செயல்படுத்தினால் அதன் விளைவு நன்மையா, தீமையா என்பது தெரிந்துவிடும். நன்மை என்றால் மட்டுமே, அந்த செயலை நாம் செய்வோம். எல்லாவற்றுக்கும் மேலாக பட்டினத்தார் ஒரு படி மேலே போய் பரலோகம் சித்திக்கும் என்று தனது பாடலிலே கீழ்கண்டவாறு கூறுகிறார்..

    'மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாசல் மட்டே

    இமைக்கும் செல்வமும் மயானம் மட்டே

    வழிக்கு துணை எது?

    தினையாமளவு எள்ளளவாயினும் நீ முன் செய்த தவம்

    தனையாள பரலோகம் சித்திக்கும் இது சத்தியமே' - என்கிறார்.

    இதன் பொருள் என்னவென்றால், நாம் இறந்து விட்டால், நம் மனைவி, பெற்ற குழந்தைகள், உறவுகள், வாழ்ந்த வாழ்க்கை, சேர்த்து வைத்த நகை, பணம், நிலம், வீடு, வாகனம் இவை அனைத்தும் மரணத்திற்கு பிறகு, நம் வாசல் தாண்டி வராது.

    இமைக்கும் செல்வம் என்றால், நமது வாரிசு, மயானத்தில் இறுதி சடங்கு செய்யும் வரை தான் இருப்பா். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் ஒன்று எரித்து விட்டோ அல்லது புதைத்து விட்டோ சென்று விடுவர்.

    உடல் அழிந்த பின்பு இந்த ஆத்மா எங்கு செல்ல வேண்டும். கர்ம வினை பதிவுகளின் பலனாக மறுபடி பிறக்க வேண்டுமா? இல்லையா என்று கேட்கிறார்.

    அடுத்த வரியிலேயே நாம் வாழும் காலத்திலே, இறப்பதற்கு முன் தினையளவு அல்லது எள்ளளவு தியானம் செய்து இருந்தால், இந்த குழப்பம் இருக்காது. ஆத்மா மறுபிறவி இல்லாமல் இறைவனோடு இரண்டர கலந்து விடும் என்று குறிப்பிடுகிறார்.

    அதனால் தான் நம் முன்னோர்கள், தினமும் நம்மை சிறிது நேரம் கண்களை மூடி கொண்டு சும்மா இரு என்று சொன்னார்கள். சும்மா இருந்தால் நமக்கு சுகம் கிடைக்கும். சுகம் என்பது மனதின் குணம். எனவே தான் இதமான மனம் உடையவர் தான் மனிதர் என்கிறோம்.

    இதமான மனதிற்கு மருந்து எது என்றால் தியானம் தான் சிறந்த வழியாகும். இதையே மகான் விவேகானந்தர் உன் குண்டலினி சக்தியை தியானம் என்னும் கோலால் மெதுவாக தட்டி எழுப்பு என்கிறார். இந்த பிரபஞ்சம் ஆனது இறைவனுடைய படைப்பிலே மூன்றரை மண்டலங்களாக உள்ளது என்று வேதம் சொல்கிறது. அதே போல, நமது முதுகு தண்டின் கீழ் உள்ள மூலாதாரத்திலே நமது குண்டலினி சக்தியானது மூன்றரை மண்டலங்களாக உள்ளது. அதனால் தான் அண்டத்தில் உள்ளது, எதுவோ அதுவே இந்த பிண்டத்திலும் உள்ளது என்று கூறுகின்றனர்.

    குண்டலினி சக்தியை குரு ஆனவர் சீடரின் மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை நாடி வழியாக மேல் எழுப்பி அந்த சக்தியை புருவ மத்தியில் நிலை நிறுத்துவார். மூலாதாரத்தில் இருந்து மேல் எழும்பிய உயிர் சக்தி புருவ மையம் வந்தவுடன் நெற்றிக்கண் திறக்கப்படுகிறது. இதுவே ஆன்மீக வாழ்வின் ஆரம்பம் ஆகும். இதை ஒரு குரு மூலமாக மட்டுமே மேல் எழுப்ப வேண்டும் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


    இதை தான் கீதையிலே பகவான் கிருஷ்ணர், எவர் ஒருவர் வெளி உலக நாட்டத்தை மறந்து, தனது ஐந்து புலன்களை கட்டுக்குள் கொண்டு வந்து நாசியின் வழியாக உள்ளே மற்றும் வெளியே செல்லும் மூச்சு காற்றை, புருவ மத்தியில் நிறுத்தி எவர் ஒருவர் தியானம் செய்கிறாறோ அவரே யோகி என்று குறிப்பிடுகிறார். இதையே வேதாத்திரி மகரிஷி ஞான ஆசிரியர்கள் மூலமாக குண்டலினி சக்தியை மேல் எழுப்பும் தவமாக ஆக்கினை தீட்சை நமக்கு வழங்குகிறார். ஆக்கினை என்றால் கட்டளை என்பது பொருள். கட்டளை யாருக்கு என்றால், இத்தனை நாள் மனம் புலன்கள் வழியாக புற உலகத்தோடு தொடர்பு கொண்டு இன்ப, துன்ப அனுபவங்களை உணர்வதால் மனம் சொல்படி தான் நாம் கேட்டோம். ஆனால் இந்த ஆக்கினை தீட்சை (தியானம்) எடுத்தவுடன், நாம் என்ன சொல்கிறோமோ, நம் மனம் அதை கேட்கும். எனவே ஆக்கினை தீட்சை என்பது நம்முடைய மனதிற்கு இடும் கட்டளையாகும். இதற்கு நாம் தினமும் பழகுதல் அவசியம்.

    சிறிது நேரத்திலே நம் மனதிற்கு எவ்வாறு கட்டளை இடவேண்டும் என்பதை பார்போம். முதலில் உடலையே கவனிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக உடல் அசைவுகளை நிறுத்த வேண்டும். உடல் அசைவுகளை நிறுத்த மனதிற்கு கட்டளை இடவேண்டும். இப்போது உடல் அசைவு அற்ற நிலையில், ஒரு கல் சிலை போல அமர்ந்து இருப்பதை உணர வேண்டும்.

    அடுத்த நிலை எண்ணத்தின் ஓட்டங்களை குறைக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். அதாவது மூச்சை உள் இழுக்கும் நேரமும், மூச்சை வெளிவிடும் நேரமும் எண்ணங்கள் குறைந்த நிலையில் வந்துவிடும்.

    இப்போது உடல் அசைவு அற்ற நிலையிலும் மனம் ஓட்டம் குறைந்த நிலை வரும் போது குரு சுட்டி காட்டிய (தொட்டு காட்டிய) இடமான புருவ மத்தியில் மனம் வைத்து தியானம் செய்யும் போது உடல் முழுவதும் உள்ள உணர்வு மறைந்து புருவ மத்தியில் மட்டும் ஒரு இன்பமான உணர்வு ஏற்படும். அந்த இடத்திலே நாம் எதை உணர்கிறோமோ அதுவே உயிர்.

    இந்த உலகத்திலே நாம் பார்க்க முடியாத இரண்டு எது என்றால் உயிரும், இறைவனும். ஆனால் தியானத்தின் மூலமாக இரண்டையும் நம்மால் உணர முடியும். எப்போது உயிரை உணர்கிறோமோ அதுவே இறைவனை உணர்வதற்கு சமம். ஏனெனில் அந்த உயிருக்குள் உயிராக இருப்பது தான் இறைவன்.

    இந்த நிலையில் தியானம் செய்யும் போது, உடலின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடைய இறுதிமூச்சு வரை நம்மோடு பயணம் செய்யக்கூடியது இந்த உடல் மட்டுமே. அதற்கான மரியாதையை கொடுத்து, உடல் உறுப்புகளை சீராக இயங்க வைத்தால் தான் மனம் அமைதி நிலைக்கு செல்ல முடியும். இல்லை என்றால் தியானம் நமக்கு சித்தி ஆகாது.

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்


    ஏனெனில் உடலிலே பல நோய்கள் மற்றும் வலிகளை வைத்து கொண்டு, நாம் தியானத்தில் அமர்ந்தால், சிறிது நேரத்திலே உடல் சார்ந்த வலிகள் தலை தூக்கும். மனம் ஒடுங்காமல், வலி பக்கம் மனம் சென்று தியானத்திற்கு தடையை ஏற்படுத்தி விடும். இதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் ஆகிறது. ஏனெனில் உடலில் பிரச்சனை இருந்தால் அது நன்றாக உள்ள மனதை பாதித்து விடும். அது போல மனதில் பிரச்சனை இருந்தால் அது நன்றாக உள்ள உடலை பாதித்து விடும். உடலுக்கும் மனதிற்கும் பிரச்சனை வந்துவிட்டால் அது உயிரை பாதித்துவிடும்.

    எனவே தியானத்தில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் உடற்பயிற்சியும் அவசியம் என்பதை உணர வேண்டும். உடலும் மனமும் ஒன்று சேர்ந்து விட்டால், உயிர் நீண்ட ஆயுளாக மாறிவிடும். எப்போது உடல், மனம், உயிர் ஒன்று சேர்கிறதோ ஒரு யோகியின் நிலைக்கு மனிதரால் மாறிவிட முடியும். அதற்கு பிறகு தான் ஆத்மாவை சுத்தம் செய்ய கூடிய பயிற்சியான அக ஆராய்ச்சி என்கின்ற அகத்தாய்வு செய்தால் தான் நம்முடைய குணத்தை மாற்றி கொள்ள முடியும். இந்த அகம் நோக்கிய பயணத்திற்கு மனம் தான் முக்கிய துடுப்பு ஆகும். மனம் இந்த பயிற்சியின் மூலம் ஒடுங்கிவிட்டால் அடுத்த நிலையான ஆத்ம தரிசனம் என்ற முக்தி நிலைக்கு செல்லும் வழியாகிய மவுனம் என்கின்ற அற்புத நிலைக்கு செல்ல முடியும்.

    இதை தான் மகான்கள், நீ பேசாது இருக்கும் போது, உனக்குள் இருக்கும் இறைவன் பேசுவது உனக்கு கேட்கும். இது தான் "ஜீவ பிரம்ம ஐக்கிய முக்தி நிலை" என்று கூறுவர்.

    மனிதர் வாழும் காலத்திலேயே தெய்வமாக மாறுவதற்கு இந்த ஐந்து நிலைகளில் பயிற்சி செய்ய வேண்டும். அதாவது உடல், மனம், உயிர், குணம், ஆத்மா ஆகும். இதற்கு தினமும் உடலுக்கு உடற்பயிற்சியும், மனதிற்கு தியானம் பயிற்சியும், உயிரை நீண்ட ஆயுளாக மாற்றி விதியை மதியால் வெல்வதற்கு காயகல்பம் பயிற்சியும், குணத்தை மேம்படுத்த அகத்தாய்வு பயிற்சியும், தான் யார் என்பதை உணர்ந்து அதிலேயே லயித்து நிற்க மவுனப் பயிற்சியும் செய்தால் நீண்ட ஆயுள் நிச்சயம் கிடைக்கும். எந்த கர்மாவும் நம்மை பாதிக்காது. அதையும் மீறி ஏதாவது துன்பங்கள் வந்தால் அதை மனதார ஏற்று கொண்டு, அதில் இருந்து விடுபடுவது எப்படி என்பது புரியும்.

    இந்த ஐந்து நிலைகளுக்கான பயிற்சிகளை தான் வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கம் மூலம் உலகம் முழுவதும் தன்னார்வ தொண்டுள்ளம் படைத்த ஞான ஆசிரியர்கள் மூலமாக மிகவும் எளிமையாக கற்று கொடுக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியின் மூலம் தன்னை அறியும் நிலை ஏற்படுகிறது. அதனால் மற்றவர்களிடம் உள்ள குறைகளை சுட்டி காட்டாமல், தன் குறைகளை உணரவும் ஏற்று கொள்ளமும் முடிகிறது. அதன் அடுத்த நிலையில் தான் அந்த குறைகளை போக்க என்ன வழி என்று சிந்திக்க முடிகிறது. அதன் தொடர் முயற்சியால் தான் நாம் வகுத்த வழியில் வாழ வாழ்க்கை பாதை நமக்கு அமைகிறது. இதை பற்றிய தெளிவான விளக்கங்களோடு உடல் சம்பந்தப்பட்ட நமது ஆராய்ச்சி தொடரும்.

    போன்: 9444234348

    • விருந்தோம்பல் என்பது நட்பை உபசரித்தல் ஆகும்.
    • விருந்தினரையும் ஞானிகளையும் உபசரிப்பவர்களை கடவுள் ஆசீர்வதிப்பார்.

    அதிகாரம்: விருந்தோம்பல்

    இந்த அதிகாரத்தில் ,

    இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி

    வேளாண்மை செய்தல் பொருட்டு.

    என்ற குறளில் தொடங்கி

    மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து

    நோக்கக் குழையும் விருந்து .

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    விருந்தோம்பல் என்பது நட்பை உபசரித்தல் ஆகும், விருந்தினரை உபசரித்தால் நட்பு பெருகும், உறவுகள் நீடிக்கும், பலர் நம்மீது அன்பு கொள்வர். அதனால் நம் வீட்டில் நடைபெறுகின்ற சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். சோதனைக் காலங்களில் நமக்கு உதவி செய்யக் காத்திருப்பார்கள். எனவே விருந்தினரை போற்றுதல் வேண்டும். இல்லறத்தின் பயனே விருந்தினரைப் போற்றி உபசரித்து அவர்களுக்கு உதவி செய்வதே. அதனால் நட்புறவு வளரும்.

    வருகின்ற விருந்தினர் வீட்டின் புறத்தே இருக்க, அப்பொழுது நாம் உயர்ந்த உணவுப் பொருள்கள் அல்லது அமிர்தத்தையே வைத்திருந்தாலும் அதனை விருந்தினர்களுக்குப் படைத்தல் வேண்டும். உண்ணுகின்ற உனவை வள்ளுவர் அமிர்தம் என்று குறிப்பிடுகின்றார்.

    அமிர்தம் யோகிகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியது. அதனை அருந்துபவர்களுக்கு மரணம் கிடையாது. தாய்ப்பாலையும் அமிர்தம் என்று கூறுவர். நாள்தோறும் விருந்தினரை உபசரித்துப் போற்றி வாழ்கின்றவனுக்கு வறுமை வராது, விருந்தை விட்டுவிட்டால் நட்பு பெருகாமல் வெறும் வீடாக இருக்கும்.

    மலர்ந்த முகத்துடன், மகிழ்ச்சியுடன் விருந்தினரை உபசரிப்பவர் வீட்டில் திருமகள் தங்குவாள். விருந்தினரை முதலில் உபசரித்து பின்னர் எஞ்சி உள்ள உணவை உண்பவருடைய நிலத்தில், வித்தும் விதைக்க தேவையில்லை. அவர்களுக்கு பொருளும், செல்வமும் பல வழிகளிலும் வந்து சேரும்.

    வந்த விருந்தினரைப் போற்றியும், வரவேண்டிய விருந்தினரை எதிர்பார்த்தும் வாழ்கின்றவரைப் பலரும் போற்றுவார்கள். விருந்தினரையும் ஞானிகளையும் உபசரிப்பவர்களை கடவுள் ஆசீர்வதிப்பார். அவர்களுக்கு எந்தத் துன்பங்களும் வராது.

    விருந்தின் சிறப்பு என்னவென்றால், சான்றோர்க்கும், ஞானிகளுக்கும் இறைவன் மீது பக்தி கொண்டவர்களுக்கும் விருந்து அளித்தால், மூன்று சிவாகத்தில் உள்ளவர்களுக்கும் அதாவது, முவாயிரம் கோடி மக்கள் சாப்பிட்டதற்குச் சமமான புண்ணியத்தையும் பயனையும் தரும்.

    இளமை முறுக்குக் காரணத்தினாலும், செல்வச் செருக்கினாலும், விருந்தோம்பல் அற்று வாழ்ந்தால் பிற்காலத்தில் தனிமரமாக நின்று தானும் அழிந்து தன் சுற்றத்தாரும் அழியக் காரணமாவான்.

    எத்தகைய செல்வம் பெற்றிருந்தாலும் தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்காவிடில் அவன் செல்வம் இருந்தும் வறுமையில் உள்ளவன் ஆவான். இத்தகைய அறியாமை அறிவிலிகளிடம் மட்டுமே உள்ளதாகும்.

    அனிச்சமலர், தொட்டு முகர்ந்தால் வாடிவிடும். ஆனால் விருந்தினரோ மாறுபட்டுப் பார்த்தாலே வாடிவிடுவர். எனவே, விருந்தினரைக் கைக்கூப்பி வணங்கி, மலர்ந்த முகம் காட்டி, இன்சொல் பேசி உபசரித்தல் வேண்டும். இதுவே விருந்தோம்பலுக்குச் சிறப்பாகும்.

    நம்மீது பகை கொண்டவர்கள் நம்மிடம் வரும்பொழுது நாம் பகை உணர்வை வெளிப்படுத்தாது இனிமையாக பேசவேண்டும்.

    அதிகாரம்: இனியவை கூறல்

    இந்த அதிகாரத்தில்,

    இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

    என்ற குறளில் தொடங்கி

    இனிய உளவாக இன்னாத கூறல்

    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    இனியவை கூறல் என்பது மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சொற்களைச் சொல்ல வேண்டும் என்பதேயாகும்.

    இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று உலகநடை, நட்புக்காக பயன்படுத்தக்கூடியது. மற்றொன்று மரணத்தை வென்றவர்களின் சொல்லாகும். அவர்களின் சொல் பிறவிப்பிணிக்கு மருந்தாகும்.

    ஞானிகள் செம்பொருள் கண்டவர்கள், செம்பொருள் என்பது உண்மைப்பொருள். அதனை வெளியில் காணுவதா அல்லது உள்ளே காணுவதா? செம்பொருள் கண்டவர்களின் திருவடியை வணங்கினாலொழிய அதற்கு நாம் விடைகாண முடியாது.

    செம்பொருள் அறிய சிறப்பறிவுவேண்டும். சிறப்பறிவு பெற பக்தி வேண்டும். குற்றமற்றவர்கள் மீது பக்தி செலுத்த வேண்டும்.

    குற்றம் நம் உடம்பில் உள்ளதா? அல்லது வெளியில் உள்ளதா? மும்மலக் கசடுகளை நீக்கி காமத்தை வென்றவர்கள்தான், உண்மைப் பொருளை அறிந்தவர்கள். பலவிதமான கற்பனைகளையும் ஆசைகளையும் சாகும்வரை நினைப்பவன் வாழ்க்கையை வீணாக்கிக்கொள்வான்.

    ஆனால் செம்பொருள் கண்டவர்களிடம் இத்தகைய கற்பனைகள், ஆசைகள் இருக்காது. அவர்கள் எதனையும் கண்டு மயங்காமல் இருப்பார்கள். தலைவன் மீது பக்தி செலுத்தி ஆசைகளை வென்றுவிட்டார்கள். இவர்களே காமத்தை அறுத்தவர்கள், விகாரமற்றவர்கள், மயக்கமற்றவர்கள், உண்மையை அறிந்தவர்கள். இவர்கள் வஞ்சகமற்ற உள்ளத்துடன் விடாமுயற்சியுடன் தலைவன்மீது பக்தி செலுத்தி உண்மைப் பொருளை அறிந்தவர்கள்.

    அசைவற்ற ஒன்று பிரம்மம். அசைவற்ற ஒன்றிலிருந்து ஓர் இயக்கம் தோன்றி மறுபடியும் பிரம்மத்தில் ஒடுங்குவது எதுவோ அதுதாள் செம்பொருள். ஆதி பிரம்மம் செம்மையானது, காமமற்றது, விகாரமற்றது, அசைவற்றது, நிரந்தரமானது, ஸ்திரமானது.

    ஆதிபிரம்மத்தில் இருந்து தோன்றிய உயிரினங்களெல்லாம் ஓர் இயக்கத்தில் இயங்கி, மும்மலச் சேர்க்கையால் உருவாக்கப்பட்டுத் தடுமாறுகிறது. ஞானிகள், எல்லாம்வல்ல பரப்பிரம்மத்தில் மனதை லயப்படுத்தியவர்கள். மனதை லயப்படுத்த பக்தி செலுத்த வேண்டும்.

    ஞானிகள் அனைவரும் பரப்பிரம்மமாக உள்ளார்கள். ஞானிகளுக்கு பசி இல்லை, தாகம் இல்லை, உணர்வு இல்லை, உறக்கமில்லை. ஞானிகள் வகுத்துக் கொடுத்ததே திருக்குறள், திருஅருட்பா, திருமந்திரம், திருவாசகம் போன்ற உயர்ந்த நூல்கள் ஆகும். இந்த நூல்களெல்லாம், எல்லாம்வல்ல பரப்பிரம்மத்தின் அருளால் தோன்றியவை, எனவே தூய்மையானது. இதுவே செம்பொருள் கண்டவர்களின் சொல்லாகக் கருதப்படுகிறது.

    அழுக்கு என்பது காமம், காமமற்ற தேகம் உள்ளவர்கள் சொல்லுகின்ற சொல் செம்பொருள். மனமகிழ்ந்து பொருள் கொடுப்பதைவிட முகம் மலர்ந்து இனிய சொற்கள் பேசுவது பயன் உள்ளது. புண்ணியம் செய்த மக்களிடத்திலேயே அன்பும் பாசமும் நிறைந்திருக்கும். அவர்கள் மகிழ்ச்சிக்கடலாய் உள்ள ஞானியர்களைப் பூஜை செய்தவர்களாய் இருப்பார்கள். உண்மைப்பொருள் அறிந்தவர்களின் சொல்லுக்கு அளவில்லாத பெருமை உண்டு.

    தன்னைச் சார்ந்தவர்களிடமும் உறவினர்களிடமும் இதயத்தில் அன்பு பொருந்தி மலர்ந்த முகத்துடன் இன்சொற்களைப் பேசுவதே மிக உயர்ந்த அறமாகும். இனிமையாகப் பேசுபவனிடம் நட்பு பெருகும். கடுகடுப்பாகப் பேசுபவர் வறுமையை அவனே ஏற்படுத்திக்கொள்வான். இனியவை பேசி சுற்றத்தைப் பெருக்கிக் கொள்பவனிடம் அவன் விரும்பிய பொருள் கை கூடும், வறுமை இல்லாத வாழ்வு உண்டாகும்.

    ஒருவருக்கு இதயத்தில் பணிவு வேண்டும். அவர்கள் மற்றவர்களை மதித்து பிறரின் மதிப்பையும் பெறுவார்கள். தன்னை நோக்கி வருபவர்களிடம் பணிவாக நடந்து கொள்ளுதல், மரியாதை தருதல், இன்சொல் பேசுதல் அடக்கத்துடன் நடத்தல் போன்றவைகளே ஒருவருக்கு அணிகலன்கள் ஆகும்.

    சிறப்பறிவு உள்ளவர்களே செம்பொருள் அறிந்தவர்கள். அவர்களின் சொல்லே, பாவங்களைத் தவிர்க்கும், புண்ணியத்தைப் பெருக்கும், அறத்தை வளர்க்கும், புண்ணியவான்களைப் பூஜை செய்து, அறம் செய்ய வேண்டும்.

    நாம் அறியாமையை உண்டாக்கக் கூடிய சொற்களை பேசி மக்களை அறிவிலியாக்கக் கூடாது. பிறருக்குப் பயன்தரக்கூடிய சொற்களைச் சொல் வேண்டும். அதுவும் பண்பிலிருந்து மீறாததாக இருக்க வேண்டும்.

    அந்த சொற்கள் மனிதனை உயர்நிலை அடையச்செய்து மீண்டும் பிறவாதிருக்க வழி வகுப்பதாக இருக்க வேண்டும். முன்னோர்கள் சொன்ன கூற்றிலிருந்து விடுபடக்கூடாது, அனுசரித்துச் சொல்தல் வேண்டும்.

    கேட்பவர்களின் கல்வித் தரத்திற்கு ஏற்றவாறு சொல்லுதல் வேண்டும். அத்தகைய சொல் ஆன்மலாபத்தை உண்டாக்கும்.சாதிவெறி, மதவெறி, காமவெறி போன்ற தீய உணர்வுகளைத் தூண்டும் சொற்கள் மக்களுக்கு அழிவை உண்டாக்கும்.

    நாம் மக்களிடம் வஞ்சனையற்ற சொற்கள், அறிவு தெளிவு பெறக்கூடிய சொற்கள், அஞ்ஞானம் நீங்கிய சொற்கள், சிறந்த அறிவாற்றல் தரக்கூடிய சொற்கள் போன்ற உயர்நிலையை அடையக்கூடிய சொற்களைச் சொல்ல வேண்டும்.

    ஞானிகளின் புகழ் பேசினாலும், ஞானிகளின் செம்மொழி கேட்டாலும், இந்த ஜென்மம் மட்டுமின்றி அடுத்த ஜென்மத்திலும் பயன்தரும். இங்கு அடுத்த ஜென்மம் என்பது இடகலையையும், பின்கலையையும் புருவமத்தியில் செலுத்தி விட்டால், மூச்சுக் காற்று புருவமத்தியில் ஒடுங்கிவிடும்.

    அவன் மீண்டும் பிறக்க மாட்டான். இதுவே மறுபிறவியாகும். இது திருவருள் துணையில்லாமல் நடக்காது.

    இனிமையாகப் பேசப்பேச நட்பு பெருகும். நாம் உலகத்தில் நல்லபடியாக வாழவேண்டுமெனில், நல்ல நட்புகளைப் பெற்றிருக்க வேண்டும். இனிமையாகப் பேசுவதால் தாமும் மகிழ்ச்சியடைந்து பிறருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கலாம். வன்சொற்களால் யாதொரு பயனும் இல்லை, பாவம் மிகுதியாகும். நம் மனத்திலிருந்து வருபவையே, இனிய சொற்கள். அவைகள் வேறு எங்கிருந்தும் வராது. நம் மனத்தைப் பக்குவப்படுத்தினால் மா, பலா, வாழைக்கனிகள் போன்ற இனிமையான சொற்களே வரும்.

    அவ்வாறு பேசாமல் வன்சொல் பேசுவது நல்லவை இருந்தும் இனிமையில்லாத கசப்பான காய்களைச் சாப்பிடுவதற்குச் சமமாகும்.

    • 1947ம் ஆண்டு நடிக்க வந்தவர்.
    • இந்திய உச்சரிப்பில் பாடுவது இயல்பிலேயே இவருக்கு கை வந்தது.

    மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடனான நடிகர் ஜெ.பி.சந்திரபாபுவுடைய அபூர்வ நட்பைப் பார்த்தோமில்லையா..?

    ஜெ.பி.சந்திரபாபு தூத்துக்குடியில் கிருத்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய அப்பா ஜெ.பி.ரோட்டரிக்ஸ் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் என்பதால் அவரை கைது செய்து, விடுதலையானவுடன் இலங்கைக்கு நாடு கடத்தியதாம் பிரிட்டிஷ் அரசு.

    தனது கல்லூரி படிப்பை கொழும்புவில் முடித்தார் சந்திரபாபு. பின்னர் இந்தியா திரும்பியது அவரது குடும்பம். அந்தக் காலத்திலேயே கல்லூரியில் படித்தவர், கிருத்துவர் என்பதினாலும் ஜெ.பி. சந்திரபாபுவின் நடை, உடை, பாவனைகள் மிகவும் நவநாகரிகமாக இருந்தன.

    ஒரு படப்பிடிப்பு தளத்தின் உள்ளே சென்று நடிக்க வாய்ப்புத்தேட அனுமதிக்கப்படாததால் தற்கொலைக்கு முயன்றவர் இவர். திரைப்படத்துறையின் மீது அப்படியொரு ஈர்ப்பு! 1947ம் ஆண்டு நடிக்க வந்தவர்.

    1950ம் ஆண்டில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக ஆனார். நடித்த படங்களில் எல்லாம் சொந்தக் குரலில் பாடி நடித்தார். இவரது குரல் லேசான அதிர்வுடன் கூடிய ஒரு தனித்தன்மையாக இருக்கும். மேற்கத்திய இசையில் வந்த பாடல்களை ஆங்கிலோ-இந்திய உச்சரிப்பில் பாடுவது இயல்பிலேயே இவருக்கு கை வந்தது!

    எம்.எஸ்.வி. திரைப்படத்திற்கு இசையமைக்க வந்தபோது, கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் மட்டுமே பாடிக் கொண்டிருந்த நேரம். பாடல்கள் கர்நாடக சங்கீத பாணியில் தான் வர முடியும். இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் கொஞ்சம் இசையை மெல்லிசைப் படுத்தினார். கே.வி.மகாதேவன் கர்நாடக அடிப்படையிலும், ஆதி நாராயண் ராவ் (நடிகை அஞ்சலி தேவியின் கணவர்) இந்துஸ்தானி மெட்டில் பாடல்தந்து புகழ்ப் பெற்றார்கள்.

    1953ல் "குலேபகாவலி" படத்தில் ஜெ.பி.சந்திரபாபுவுடன் மோதல் ஏற்பட்டாலும் பிறகு மிகவும் நட்பு பாராட்டிய எம்.எஸ்.வி. 'புதையல்' படத்தில் 1957ல் மீண்டும் ஒன்றாக வேலை செய்யும் வாய்ப்பு வருகிறது. சந்திரபாபுவின் மேற்கத்திய பழக்கம் புரியவந்ததில், அவருக்காகவே பொருந்துகிற மாதிரியானப் பாடல்களை தருகிறார்.

    முன்பு "ராக் ராக் ராக் & ரோல்" என்ற பாடலில் ராக் & ரோல் இசையும், கர்நாடக இசையும் சேர்ந்த இணைவு இசை வகைப் பாடலாக அமைந்ததைப் பார்த்தோம். 1957ல் வெளிவந்த "புதையல்"- என்றப் படத்தில் தஞ்சை ராமைய்ய தாஸ் எழுதியப் பாடல், "ஹல்லோ மை டியர் ராமி, எங்கம்மா உனக்கு மாமி"- என்றப் பாட்டு.

    இது ராக் & ரோல் உடன் கிராமியம் அதுவும் கானாப் பாடல் சேர்ந்த பாடல்! இதிலும் விசில், யோடிலிஸ், கைத்தட்டல்கள் என்று அந்தக் காலத்திலேயே புதுமையானப் பாடல்! வருடங்களை குறிப்பிட்டு சொல்லக் காரணம். அந்தக் காலக் கட்டத்திலேயே முதன் முதலில் பாடல்களில் பல்வேறு இசை வகைகளை கொண்டு வந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்பது தான்.

    இவர்கள் புதுமையாகவும், புரட்சியாகவும் பாடல்களை கொண்டு வர நினைத்தாலும், அந்த வகைப் பாடல்களை கற்றுக்கொண்டு, அதே வகையில் பாட சரியான பின்னணி பாடகர்களும் வேண்டுமில்லையா?

    புதுப்புது வகை இசைகளை எப்படி முயற்சித்துப் பார்க்கமுடியும்? தொழிலின் ஆரம்ப காலத்திலேயே மேற்கத்திய இசை நுட்பங்களை கொண்டு வர முடிந்ததில் சுந்திரபாபுவின் ஆங்கிேலா-இந்திய உச்சரிப்பு, ராப் பாடல் போல் பாடும் முறை ஒரு கூடுதல் பலம் என்றே சொல்லலாம்!

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,பாட்டாளிகளின் வாழ்க்கையை எல்லாப் பாடல்களிலும் வைத்து அக்கறையுடன் எழுதும், எளிய மனிதர்களுக்கான கவிஞர். நிறைய கண்திறப்புப் பாடல்களை "தூங்காதே தம்பி தூங்காதே", "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா" "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" போன்ற பல பாடல்களை எழுதியவர்.

    30 வது வயதுக்குள்ளேயே தனது வாழ்க்கையைக் கூட "ஹைக்கூ" கவிதைப்போல் சிறுவயதிலேயே முடித்துக் கொண்டவர். இவர் திரைத்துறைக்கு வந்ததும் ஒரு சுவாரஸ்யமான கதை!

    "பாசவலை" என்ற மார்டன் தியேட்டரின் படத்தில் கதையுடன் பொருந்திப் போகிற மாதிரி தத்துவப் பாடல் தேவை. அப்போதெல்லாம் ஒரே சூழலுக்கு இரண்டு பாடலாசிரியர்களைக்கூட எழுதச் சொல்வார்களாம். இரண்டில் இருந்து சிறந்த வரிகளை எடுத்துக்கொள்வார்களாம். அப்படி இரண்டு பாடலாசிரியர்களை வைத்து எழுதியும் எம்.எஸ்.வி. யோசித்திருந்த மெட்டுக்கு ஏற்ற பல்லவி வரிகள் அமையவில்லை.

    நான்கு நாட்கள் கடந்தபடியால் நிறுவன மேலாளர் சுலைமான் என்பவர் எம்.எஸ்.வியிடம் ஒரு புதிய பாடலாசிரியரை அறிமுகம் செய்யட்டுமா என்று கேட்கிறார். எம்.எஸ்.வி. "என்னங்க அனுபவமுள்ளவங்களே எழுதியும் பல்லவி சரியா அமையலைன்னு நாங்களே பதட்டமாயிருக்கோம். நீங்க புதுசா பாட்டு எழுதுறவரை அழைத்து வரட்டுமான்னு கேட்கறீங்க. புதியவங்களை இப்ப அவசரமான நேரத்திலே எழுத வைக்க முயற்சிப் பண்ண முடியாதுங்க" என்று மறுத்துவிடுகிறார்.

    பாடல் அமையவேயில்லை. சுலைமான் அப்போது ஒரு தாளை நீட்டுகிறார். "எதற்கும் இந்த பல்லவியை ஒருமுறை படிச்சு பாருங்க. பிடிக்கலேன்னா விட்டுடலாம்."

    'கொடுங்க, பாக்கலாம்' வாங்கிப்படிக்கிறார்..

    "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்கு சொந்தம்,

    குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம்,

    தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்,

    சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்தம்!"

    -படித்தவர், நெக்குருகிப் போகிறார்.

    "அடடா, யாருப்பா இந்தப் பாட்டு வாத்தியார். உடனே கூப்பிடுங்க". (திரைப்பட பாடலாசிரியர்களை பாட்டு வாத்தியார் என்றுதான் அழைப்பார் எம்.எஸ்.வி.)

    பல்லவி வரிகள் திரைக்கதைக்கு சரியாகப் பொருந்திப் போகிறவரிகள். மெட்டுக்குப் பொருந்தும் வீச்சமான வரிகள்!

    நான்கு நாட்களாக பாடலெழுத வாய்ப்புக்கு காத்திருந்த அந்த இளைஞனோ இதற்கு மேல் எங்கே கூப்பிடப் போகிறார்கள் என்ற விரத்தியில் போய்விட்டார். எப்படியோ தேடி கண்டுபிடித்து அழைத்து வந்தார்கள்.

    "இந்தப் பல்லவியை நீங்களா எழுதினீங்க தம்பி?

    ஆமாங்க..!

    இத்தனை நாளா எங்கிருந்தீங்க தம்பி?"என்று மகிழ்ந்து வாழ்த்திவிட்டு அடுத்த இருபது நிமிடங்களில் அந்த வரிகளுக்கு மெட்டும் போட்டுவிட்டார். எம்.எஸ்.வி. அந்த பாடலாசிரியர்தான் பட்டுக்கோட்டையார்.

    இன்னொரு முறை, இவரிடம் கேட்டார்..

    "அதென்ன தம்பி, எல்லோரும் ஆறடி என்று தானே சொல்வாங்க. நீங்க எட்டடி தான் சொந்தம்-னு ஏன் எழுதினீங்க?

    அண்ணே, நானே ஆறடி உயரம், அதனால் எட்டடி என்று எழுதினேன்.

    "குட்டி ஆடு தப்பி வந்தா"-பாடல் ஒலிப்பதிவு முடிந்த அன்று இரவு தூக்கம் பிடிக்காமல் தவிக்கிறார் எம்.எஸ்.வி. "எனக்கு கர்வம் வந்துவிட்டதோ? புதிய பாடலாசிரியரிடம் திறமை இருக்காது என்று எப்படி என்னால் தப்பாக முடிவெடுக்க முடிந்தது? எப்படிப்பட்ட ஒரு பாடலாசிரியரை திரைத்துறை இழக்க நான் காரணமாக ஆகியிருப்பேனே" - என்று இரவு புலம்பி அழுதாராம். இதை அவரே தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

    அன்று முதல் யாராவது புதியவர்கள் தன்னை சந்திக்க வந்தால் மறுக்காமல் அவர்களை சந்தித்து 10 நிமிடம் ஒதுக்கி பேச வேண்டும் என்பதை ஒரு பாடமாகக் கொண்டாராம்.

    இவர்கள் கூட்டணியில் உருவான இன்னொரு அழகானப் பாடல் 1957ல் வந்த "புதையல்" படத்தில் வரும் இசைப்பேரரசி பி.சுசீலா குழுவினருடன் பாடியப் பாடல் "சின்னச்சின்ன இழைப் பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலையடி, நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி". நெசவு நெய்துக் கொண்டே பத்மினி பாடுவதாக வரும் பாடல்! நெசவு செய்யும் இடத்திற்கே போய் நெசவு செய்யும் போது கட்டைகளில் ஏற்படும் ஒலிகளை கவனித்து, அந்த ஒலிகளுக்கு ஏற்ற தாளகதியில் தத்தகரம் சொல்லி பாடலை எழுதி மெட்டமைத்தப் பாடல் அது!

    பல்லவியில் 14 சொற்கள். தொடர்ந்து இடையில் நிறுத்தம் செய்யாமல் பாடப்படும்!! கையோடு "தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி"-என்று நெசவுத் தொழிலைப் போற்றியும் வரிகளை வைத்திருக்கிறார். பாடல் முழுக்க மெட்டுகள் மாறிக்கொண்டே போகும் அழகானப் பாடலில், பறவைகளின் கீச்சொலி, பெண்களின் கும்மி சத்தம், தைய்யா தைய்ய தான்னா என்ற 'வெற்று சொற்களும்' அமைந்தது. "இதை ஓட்டும் ஏழைக் கூட்டுறவாலே உலகில் தொழில் வளம் உயரும்" என்று உலகளவில் புகழ்வாய்ந்த நம் நாட்டு கைத்தறியின் சிறப்பை சொல்லும் வரிகள் உள்ளப் பாடல்!

    மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன போது, "எனது பதவி நாற்காலியின் நான்கு கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டையாரால் வந்தது" என்றார். எம்.ஜி.ஆருக்கு பட்டுக்கோட்டையார் எழுதிய தன்னெழுச்சி, தத்துவம் என எல்லாப் பாடல்களிலும் இருந்த வரிகள் மக்கள் மனதில் எம்.ஜி.ஆரை ஒட்ட வைத்தன! கட்டி வைத்தன என்பது உண்மை.

    "பதிபக்தி" படத்தில் பட்டுக்கோட்டையாரின் ஒரு பாடல். ரிக்ஷா இழுப்பவர்கள் பாடும் பாடலை எழுதியிருப்பார். எளிய நிலை மக்கள் தங்களின் துன்பங்களைக் கூட தாமே நையாண்டி செய்துக் கொண்டு துள்ளளலாகப் பாடுவதாக அமைந்தப் பாடல்! இப்போது சொல்கிற கானாப் பாட்டு, குத்துப் பாட்டுக்கான அத்தனை வேக தாளகதிப் பாடல்!

    எனக்குத் தெரிந்து தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலில் வந்த நீள கானாப் பாடல் இது! "தாந்துனக்கடி, தக்கடி, அஜக், என்றெல்லாம் கானாப்பாடலுக்கே உரிய வெற்று சொற்கள் எல்லாம் சேர்த்து வந்தப் பாடல். இன்று கேட்டாலும் நேற்று வந்தப் பாட்டு போல தோன்றும்! 1958-ல் வந்து 66 ஆண்டுகளான பின்பும் நவீனமாக இருக்கும்.

    வரிகளோ மனதை உலுக்கி கேள்வி கேட்கும். 1973க்கு முன் விலா எலும்பு துருத்தி தெரியும் ஒரு மனிதன், தொந்தி பருத்த மனிதனை உட்கார வைத்து கால்நடையைப் போல் இழுக்கும் அவலம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவேண்டுமென்றால், இந்தப் பாடலை அவசியம் பார்க்க வேண்டும்.

    இதில் சந்திரபாபு பாடிய விதமும், நடனமும் பாடலை எங்கோ கொண்டு சென்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஆடி ஒயிலாக நடித்திருப்பார்.

    பொதுவாகவே, சந்திரபாபுக்கு அசையாமல் துள்ளாமல் பாட வராது. இவர் பாடும் போது ஒலிப்பதிவில் நான்கு பக்கமும் சுற்றிலும் வெற்று மைக்கை வைத்தால்தான் பாடலை பதிவு செய்ய முடியுமாம்.

    "ஜெனோவா" என்றத் திரைப்படம் ஈ.பி.ஈச்சப்பன் தயாரித்தார். இதில் எம்.எஸ். ஞானமணி என்பவர் இசையமைத்தாலும், எம்.எஸ்.வியும் சிலப் பாடல்களுக்கு இசையமைக்க வேண்டுமென தயாரிப்பாளர் விரும்பினார். ஆனால் கதாநாயகனான எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்.வி. இசையமைப்பதில் விருப்பமில்லை.

    வளர்ந்து வரும் புதியவரை சேர்க்கணுமா என நினைத்தாராம். தயாரிப்பாளரின் பிடிவாதத்தால் "ஜெனோவா"வில் எம்.எஸ்.வியும் இசையமைத்தார். பாடல் கேட்ட எம்.ஜி.ஆரே எம்.எஸ்.வி.யை நேரில் பாராட்டி வாழ்த்தினார், என்பதும் இனி நீ, என் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று சொன்னதும் வரலாறு!!

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    இணைய முகவரி:

    banumathykrishnakumar6@gmail.com

    • தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இளைய தளபதியாக உயர்ந்துள்ளார்.
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அவதாரம் எடுத்துள்ளார்.

    நடிகர் விஜய், திரையுலகுக்கு வந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இளைய தளபதியாக உயர்ந்து, இன்று "தமிழக வெற்றிக் கழகம்" கட்சியின் தலைவராக அவதாரம் எடுத்துள்ள நிலையில் அவர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது இந்த சினிமா - அரசியல் பயணம் குறித்து பார்ப்போம்..

    நடிகர் விஜய் 1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி பிறந்தார் . அனைத்து குழந்தைகளுக்கும் தனது தந்தைதான் முதல் ஹீரோவாக இருப்பார். ஆனால் விஜய்யின் பயணத்தில், மகனை ஹீரோவாக பார்த்து பார்த்து செதுக்கினார் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். சென்னையில் பிறந்து வளர்ந்த விஜய், விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் முடித்தவர்.

    குழந்தை நட்சத்திரம்: எஸ்.ஏ. சந்திரசேகர் வெற்றிகரமான இயக்குநராக இருந்த காலகட்டத்தில் வெற்றி, குடும்பம், வசந்த ராகம், நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். இப்படித்தான் விஜய்யின் சினிமா பயணம் தொடங்கியது.

    1992-ம் ஆண்டு "நாளைய தீர்ப்பு" என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்யை முதன்முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ. சந்திரசேகர். ஹீரோவாக அறிமுகமான போதும், அந்த படத்தில் விஜய்க்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

    இந்த சூழலில் நடிகர் விஜயகாந்துடன் விஜய்யை இணைத்து நடிக்க வைத்தது. எஸ்.ஏ.சி. இயக்கத்தில் விஜயகாந்த், விஜய் நடிப்பில் வெளியான "செந்தூரப்பாண்டி" திரைப்படம், எதிர்பார்த்தபடி விஜய்யை பிரபலமாக்கியது. விஜய் என்கிற நடிகனை தமிழ் ரசிகர்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றது.

    இதனைத் தொடர்ந்து, தந்தையின் பட்டறையிலேயே தொடர்ந்து பட்டை தீட்டப்பட்டார் விஜய். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்திலேயே "ரசிகன்", "தேவா", "விஷ்ணு" என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

    இந்த காலகட்டத்தில்தான் நடிப்பு, நடனம், பாடல், நகைச்சுவை, ரொமேன்ஸ், ஆக்சன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் படிப்படியாகக் கற்றுக்கொண்டு மெறுகேறினார் விஜய்.

    இளைய தளபதி: தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து 1994-ம் ஆண்டு வெளியான 'ரசிகன்' படத்தில்தான் விஜய்யின் பெயருக்கு முன்னால் "இளைய தளபதி" பட்டம் முதன்முதலில் போடப்பட்டது.

    சென்டிமெண்ட் இயக்குநர் விக்ரமன், விஜய்யை வைத்து இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியானது. நடிகர் விஜய்யின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் இதுதான்.

    அதுவரை, 4 ஃபைட், 5 பாட்டு என்று வழக்கமான கமெர்ஷியல் ஃபார்முலா வளையத்திற்குள், சாதாரண ஹீரோ கதாபாத்திரத்திற்குள் சுற்றிக் கொண்டிருந்த விஜய்யை ஓவர் நைட்டில் சூப்பர் நடிகர் என அடையாளப்படுத்தினார் இயக்குநர் விக்ரமன்.

    "பூவே உனக்காக" திரைப்படம்தான் விஜய்யின் குடும்ப வாழ்க்கைக்கு அச்சாரமிட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

    இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் படித்து வளர்ந்த ஈழத்தமிழர் பெண்ணான சங்கீதா சொர்ணலிங்கம், "பூவே உனக்காக" படத்தைப் பார்த்து விஜய்யின் தீவிர ரசிகை ஆனாராம். பின்னர் விஜய்யைப் பார்ப்பதற்காகவே லண்டனில் இருந்து கிளம்பி வந்தவர், ரசிகை என்று அறிமுகமாகி, தோழியாகி, காதலியாகி, பின் மனைவியும் ஆனார்.

    1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் நாள், குடும்பத்தினர் ஆசிர்வாதத்தோடு சங்கீதாவின் கரம்பிடித்தார் விஜய். திருமணம் ஆனவுடனேயே விஜய்யின் சொந்த காஸ்ட்யூம் டிசைனராக மாறினார் மனைவி சங்கீதா.

    ஸ்டார் நடிகர் அந்தஸ்து: 1998-ல் சங்கிலி முருகன் தயாரிப்பில், ஃபாசில் இயக்கத்தில் "காதலுக்கு மரியாதை" திரைப்படம் வெளிவந்தது. இதில், நடிகர் விஜய் மற்றும் ஷாலினியின் ஜோடி மக்களை பெரிதும் கவர்ந்தது.

    "காதலுக்கு மரியாதை" திரைப்படத்தைத் தொடர்ந்து, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கத்தில் வெளியான "லவ் டுடே" திரைப்படமும் ஹிட் அடித்ததால், ஸ்டார் நடிகர்கள் பட்டியலுக்குள் நுழைந்தார் விஜய். இளைஞர்களிடம் விஜய்க்கான தனி இடத்தை உறுதிப்படுத்தியது "லவ் டுடே".

    தொடர்ந்து காதல் கதைகளங்களில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்ற விஜய், அந்த வெற்றியைத் தக்கவைக்க திட்டமிட்டார். அதற்காக தெளிவாக வியூகம் அமைத்தவர், " நினைத்தேன் வந்தாய்", "துள்ளாத மனமும் துள்ளும்" உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ்நாட்டில் அனைவரும் கொண்டாடும் ஜனரஞ்சக நாயகன் ஆனார்.

    எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த "குஷி" திரைப்படத்தின் மூலம் கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்த்தார். அத்துடன் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமை யாளர்கள் என அனைவரிடமும் "மினிமம் கேரண்டி ஹீரோ" என்ற பட்டத்தையும் பெற்றார்.

    தமிழகத்தில் குழந்தைகளை கவர்ந்துள்ள முதன்மையான ஹீரோ யார் என்றால்? அது விஜய் என்றே சொல்லலாம். அதற்கு காரணம், பெரும்பாலான ஹீரோக்களுக்கு மிகவும் சிரமமான காமெடி மற்றும் நடனம், விஜய்க்கு கை வந்த கலை. சித்திக் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஃப்ரெண்ட்ஸ்.

    இதில் சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி உள்ளிட்டோருடன் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார் விஜய். மேலும் சச்சின், வசீகரா திரைப்படங்களில், வித்தியாசமான காமெடி சென்சை வெளிப்படுத்தியிருப்பார் விஜய்.

    இந்த படங்கள் முழுக்க நகைச்சுவை பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கும்.

    தொடர்ந்து "பிரியமானவளே", "பத்ரி", "ஷாஜகான்", "யூத்" என அடுத்தடுத்து கமர்ஷியல் ஹிட் கொடுத்து தனக்கான நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொண்டதோடு, ரசிகர்களின் எண்ணிக்கையையும் பெருக்கிக்கொண்டார்.

    நடனம் பாட்டிலும் அசத்தல்:

    மற்ற ஹீரோக்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்களுக்கும் விஜய்யின் நடனம் கட்டாயம் பிடிக்கும். நடனத்தை போன்றே பாடலிலும் தனது தனி முத்திரையை பதித்துள்ளார் விஜய். தான் நடிக்கும் திரைப்படங்கள், நண்பர்களின் திரைப்படங்கள் என 30-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் விஜய்.

    நடிகனாக தன்னை நிலைநிறுத்தி மென்மையான காதல் கதைகளில் மட்டுமே நடித்துவந்த விஜய், ஆக்சன் ட்ராக்கிற்கு மாறி முதன் முதலில் நடித்த திரைப்படம்தான் "தமிழன்". இதனைத்தொடர்ந்து திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

    ஆக்சன் களத்தில் இறங்கியபோது "திருமலை" படத்தை இளம் அறிமுக இயக்குநர் ரமணா இயக்கிய நிலையில், அப்போதிலிருந்தே நிறைய புது இயக்குநர்களுடன் பணியாற்ற தொடங்கினார் விஜய். 'முதல்வன்', 'சாக்லேட்' ஆகிய படங்களை தயாரித்த ஆர்.மாதேஷ் 'மதுர' படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார். 'திருப்பாச்சி' படம்தான் பேரரசுவின் முதல் படம்.

    மறைந்த பழம்பெரும் இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன், 'சச்சின்' படம் மூலம்தான் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். முன்னணி நடிகராக வலம் வந்த பிரபுதேவா 'போக்கிரி' படம் மூலம்தான் தமிழில் இயக்குநர் ஆனார். 'கில்லி', 'மதுர' படங்களுக்கு வசனம் எழுதிய பரதன், 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கினார். 'குருவி' படத்திற்கு வசனம் எழுதிய பாபுசிவன் 'வேட்டைக்காரன்' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

    "பாக்ஸ் ஆஃபிஸ் கிங்"

    இன்று விஜய் படம் ரிலீசாகிறது என்றால், வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று அதனை திருவிழா கூடமாக மாற்றிவிடுகின்றனர். அந்த அளவுக்கு நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்சன் என அனைத்திலும் சொல்லி அடிக்கும் கில்லியாக மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார் விஜய்.

    ஆனால் இதே விஜய்யைதான் ரசிக்க முடியவில்லை என ஆரம்ப கால கட்டத்தில் பெரும்பாலான ஊடகங்கள் விமர்சித்தன. அத்தனை விமர்சனங்களையும், பலவீனங்களையும் தனது பலமாக மாற்றி இன்று தமிழ் சினிமாவின் "பாக்ஸ் ஆஃபிஸ் கிங்"காக ஜொலிக்கிறார் விஜய்.

    இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை அப்லோட் செய்தவுடன் வெறும் 24 நிமிடங்களில் 4 மில்லியன் லைக்குகளைப் பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகவும் திகழுகிறார் அவர்.

    திரையில் அரசியல்: சினிமாவில் தனது மகனுக்கு "இளைய தளபதி" பட்டத்தை சூட்டி ஜெயிக்க வைத்த எஸ்.ஏ. சந்திரசேகர், அரசியலிலும் தன் மகனை தலைவனாக்க துடித்தார். அதன் வெளிப்பாடாகவே 2010-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியான தனது படங்களில் அவ்வப்போது அரசியல் வசனங்களை மறைமுகமாக பேசி வந்தார் இளைய தளபதி விஜய்.

    2017ல் மெர்சல் படத்தில் நேரடியாக அரசியல் பேசினார். அதன்பிறகு வந்த தெறி, சர்கார் போன்ற படங்களிலும் பல அரசியல் கருத்துகளைப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    "என் நெஞ்சில் குடியிருக்கும்..": சினிமாவில் அரசியல் வசனங்கள் பேசுவதுடன், "என் நெஞ்சில் குடியிருக்கும்" என ரசிகர்களை அழைத்து குட்டிக் கதைகளை சொல்ல ஆரம்பித்த விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலமாக நேரடியாக சமூக பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

    மேலும், மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்க, கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10, 12 -ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு பரிசு தொகையுடன், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். விஜய்யின் இந்த சமூக பணிகள், அவரது அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பைத் தூண்டின.

    "தமிழக வெற்றிக் கழகம்"

    விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக தனது கட்சி பெயரை 02.02.2024 அன்று அறிவித்தார்.

    "தமிழக வெற்றிக் கழகம்" என்று கட்சியின் பெயரை அறிவித்த விஜய், தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைத்தே தனது கட்சி செயல்படும் என அறிக்கை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல், தீவிர அரசியலில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்தார்.

    தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T என்ற படத்தில் நடித்துகொண்டிருக்கும் விஜய், அடுத்ததாக விஜய் 69 படத்தில் நடிக்க உள்ளதாகவும், அத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இவருக்கெல்லாம் எதுக்கு சினிமா? ஹீரோவுக்கான தகுதியே இல்லை என்று தன் சினிமா என்ட்ரியின்போது தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு எல்லாம் பேச்சால் பதில் சொல்லாமல், தனது உழைப்பின் மூலம் பதில் அளித்தார். அதாவது தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காவும் உயர்ந்து நெத்தியடி கொடுத்த இளைய தளபதி விஜய்யின் ஃபார்முலா, தற்போது அரசியல் களத்திலும் தொடர்வதால் அரசியல் களமும் பரபரப்பாக காணப்படுகிறது.

    -நிரா

    • ஆற்றல்தான் மனிதரின் பெரும்பாலான வெற்றி, தோல்விகளை உறுதிசெய்கிறது.
    • நினைவாற்றல் குறையும்போது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேர்கிறது.

    ஒரு நிகழ்வையோ அல்லது செய்தியையோ நம் நினைவில் வைத்து, அதை தேவையான நேரத்தில் பயன்படுத்துவதுதான் நினைவாற்றல். இந்த ஆற்றல்தான் மனிதரின் பெரும்பாலான வெற்றி, தோல்விகளை உறுதிசெய்கிறது. நினைவாற்றல் குறையும்போது அவர் தனது வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்க நேர்கிறது. எனவே நினைவாற்றலின் வகை, அதை எப்படி அதிகரித்துக் கொள்வது? என்பது பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

    நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என்று 2 வகையாகப் பிரிக்கலாம்

    குறுகிய கால நினைவாற்றல்:

    உடனடியாகக் கூறும் நினைவாற்றல்: அதாவது இப்போது ஒருவர் கூறிய செய்திகளை, அடுத்த வினாடியே அப்படியே கூறு வதாகும், எடுத்துக்காட்டுக்குத் தொலைபேசி எண்களை ஒருவர் சொல்லி முடித்ததும், அடுத்தவினாடியே திரும்பி அதையே சொல்வது. இந்த நினைவாற்றல் மூளையின் பிரண்டல் (Frontal) பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.

    குறுகிய கால நினைவாற்றல்: இது 5 நிமிடங்கள் முதல் 1 மணிநேரத்திற்கு அல்லது ஒரு சில நாட்களுக்கு முன்னால் நடந்தவற்றை நினைவு கூர்வது. எடுத்துக்காட்டுக்குக் காலையில் என்ன உணவு எடுத்துக் கொண்டோம் என்பதை நண்பகல் வேளையில் நினைவு கூர்வது. இந்த நினைவாற்றல் மூளையில் ஹிப்போகாம்பஸ் (Hippocampus) என்னும் பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.

    நீண்டகால நினைவாற்றல்:

    சிறுவயதில் நடந்தவைகள் மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவைகளை நினைவுகூர்வது. எடுத்துக்காட்டுக்குத் தற்போது உங்கள் வயது 40 என்று வைத்துக்கொண்டால், நீங்கள் படித்த பள்ளியின் பெயர், அப்போதைய நண்பர்கள், ஆகியவற்றை நினைவுகூர்வது. இந்த நினைவாற்றல் பெருமூளையில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது. இவை தவிர இன்னும் சில நினைவாற்றல் வகைகள் உள்ளன.

    செயல் நடைமுறை நினைவாற்றல் :

    சில வேலைகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பழகி அதன்படி அதைத் திறம்படச் செய்து முடிப்பது. எடுத்துக்காட்டுக்கு: ஊர்தி ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, உடை அணிவது, சமையல் செய்வது ஆகியவையாகும். இந்த நினைவாற்றலைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது மட்டுமே கடினமாக இருக்கும். அதில் தேர்ச்சி பெற்று விட்டால் அந்தச் செயலைச் செய்வதற்கு, நாம் அதிகத் துயர்கொள்ளத் தேவையில்லை.

    நினைவுமறதி நோயின் முற்றிய நிலையில் கூட இந்த நினைவாற்றல் அவர்களுக்கு நிலைத்து நிற்கும். அதனால்தான் அவர்களால் ஊர்திகளை இயக்க முடியும், ஆனால் எங்குச் சென்று, எப்படித் திரும்பி வருவது என்பதை மறந்து விடுவார்கள். இந்த நினைவாற்றல் மூளையின் பேசல் கேங்கிலியா (Basal Ganglia) என்ற பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்ப டுகிறது.

    உணர்வுகளுக்கான நினைவாற்றல் :

    நம் வாழ்க்கையில், ஒரு சில நேரங்களில் நடக்கும் நிகழ்வுகளால் எதிர்மறை அல்லது நேர்மறை உணர்வுகள் பாதிக்கப்பட்டு, உணர்ச்சிகளின் உச்சத்திற்கு உந்தப்பட்டிருப்போம். இவை நம் நினைவில் எப்போதும் நீங்காமல் நிலைத்தி ருக்கும். அதே எதிர்மறையான நிகழ்வு மீண்டும் நடக்கும் போது, நம் மூளை, நம்மை எச்சரிக்கும் அல்லது நேர்மறையான (மகிழ்ச்சி) நிகழ்வாக இருந்தால் அதை அப்படியே செய்யத் தூண்டும். இந்த நினை வாற்றல் மூளையில் உள்ள லிம்பிக் வளையம் (Limbic Circute) என்ற தனிப்பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.

    காட்சிகளுக்கான நினைவாற்றல் :

    ஓர் இடத்தில் இருந்து, வேறு ஓர் இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும், எப்படித் திரும்பி நம் வீட்டுக்கு வரவேண்டும் என்று நினைவில் கொள்வது. எடுத்துக்காட்டுக்கு, திருச்சியிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று, மீண்டும் திருச்சியிலுள்ள நம் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்றால், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோமோ, அதே வழியில் மீண்டும் திரும்பி வீட்டிற்கு வருவது இந்த நினைவாற்றல் கையில்தான் உள்ளது.

    ஒரு சில பாதைகளைத் தவற விடும்போது, இந்த நினைவாற்றல்தான் நம்மை எச்சரிக்கை செய்து மீண்டும், சரியான வழியைத் தேர்ந்தெடுக்கச் செய்கிறது. இந்த நினைவாற்றல் நம் மூளையில் பரைட்டல் (Patietal Lobe) பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது. நினைவாற்றலின் வகைகள் பற்றிப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து நினைவாற்றலை எவ்வாறு அதிகரிப்பது என்று பார்க்கலாம்.

    நினைவாற்றலை அதிகரிக்க:

    நாம் படிப்பதற்கும் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் எடுப்பதற்கும் ஒரு வேலையை விரைவாகச் செய்வதற்கும் என அனைத்திற்கும் இந்த நினைவாற்றல் மிகவும் தேவை. இதை அதிகரிக்கக் கண்டிப்பாக முயல வேண்டும். அதற்கான சில வழிமுறைகள் இதோ...

    1.இரவு நேர ஆழ்ந்த உறக்கத்தின் போது நினைவாற்றல் வலுவடைகிறது.

    2.வைட்டமின் "சி" உள்ள பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வது.

    3.காய்கறி, கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது.

    4.வாதுமைக் கொட்டைகள் நினைவுத்திறனை அதிகரிக்கக் கூடியவை. எனவே தினமும் இரண்டு வீதம் காலையில் எடுத்துக்கொள்வது.

    5.விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிப்பது.

    6.குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்கெடுப்பது.

    7.காலையில் இருந்து இரவுவரை என்ன செய்தோம் என்பதை நினைவு கூர்வது.

    8.புதிய கலைகளைக் கற்றுக்கொள்வது, குறிப்பாக இசை மற்றும் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது.

    9.நாளும் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்வது.

    10.ஏதாவது ஒரு விளையாட்டில் அல்லது செய்யும் வேலைகளில் மனத்தை நிலைநிறுத்தி விளையாடுவது / செய்வது.

    11.மூச்சைக் கவனிப்பது.

    12.ஒவ்வொரு நாளும் 20- நிமிடமாவது தியானம் செய்வது.

    13.பல சிந்தனைகளை மனத்தில் கொண்டு, செய்யும் வேலையில் கவனம் இல்லாமல் இருப்பது மூளை நலனுக்கு நல்லதல்ல. ஒருநேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் முழுவதையும் ஒருங்கிணைத்துச் செய்வதைத்தான் Mindful Living என்று கூறுகிறோம்.

    14.மூச்சைக் கவனித்துக்கொண்டே தோப்புக்கரணம் போடுவது. தோப்புகரணத்தைச் சூப்பர் பிரைன் யோகா (Super Brain Yoga) என்று கூறுகிறோம்.

    இதில் வலக் கையைக் கொண்டு இடக் காதையும், இடக் கையைக் கொண்டு வலக் காதையும் மாற்றிப் பிடிப்பதால், மூளையின் இரண்டு அரைக்கோளங்களும் தூண்டப்படுகின்றன. மேலும் ஞாபகத்திறன், ஒருங்கிணைப்புத் திறன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதைப் படிக்கும் குழந்தைகள் அன்றாடம் செய்வது நல்லது.

    இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள், குழந்தைகள் தவறு செய்தால் அல்லது மதிப்பெண் குறைந்தால் தோப்புக்கரணம் போடவைத்தனர், கோவில் சென்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை பிள்ளையாரைப் பார்த்துத் தோப்புக்கரணம் போடுவது என்று நம் வாழ்க்கையோடு தோப்புக்கரணத்தை இணைத்திருக்கிறார்கள்.

    அவர்களின் கூர்த்தமதி போற்றத்தக்கது. மேற்கூறிய 14-வழி முறைகளைப் பின்பற்றுவதால், நம் மூளையில் உள்ள நினைவுத் திறனுக்கான பகுதிகள் தூண்டப்பட்டு, அனைத்து வகையான நினைவாற்றலையும் அதிகரித்து, வாழ்வை வண்ணமயமாக்கிக் கொள்ளலாம்.

    எனைத்தானும் நல்லவை கேட்க!

    மறதியை மறப்போம்!

    நினைவாற்றலை வளர்ப்போம்!

    • ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது.
    • மாணவர்களின் கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதிய மோதலை குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது.

    சந்து குழுவின் பரிந்துரைகள்:

    • அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது. அவை அரசு பள்ளிகளாக மாற்றம் செய்யப்படவேண்டும்.
    • தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.
    • குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.
    • ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்
    • மாணவர்களின் கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்
    • மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.
    • பள்ளி வளாகத்தில் உள்ள சாதி தொடர்பான பெயர்களை அகற்ற வேண்டும். பள்ளிக்கு நன்கொடை வழங்கி இருந்தாலும் அவர்களின் பெயரையும் அகற்ற வேண்டும்.

    ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை பலரால் வரவேற்பை பெற்றாலும் சிலர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சந்துரு குழு அறிக்கையை எதிர்க்கும் பாஜக:

    பாஜகவை சேந்த ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ராஜபாண்டி இந்த அறிக்கையை ஊராட்சிக்குழு கூட்டத்திலேயே கிழித்து எரிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

    நெற்றியில் திலகம் இடக்கூடாது கையில் கயிறு கட்டக்கூடாது என கூறுவது இந்து மாணவர்களுக்கு எதிரானது என்று அவர் தெரிவித்தார்.

    ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என நிர்வாகம் அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணிந்து வர ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பொட்டு வைக்கக் கூடாது, திலகம் இடக்கூடாது, கையில் கயிறு கட்டக்கூடாது என்று சொல்வது தவறானது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், கள்ளர் சீர்மரபு பள்ளிகளை ஆதிதிராவிட பள்ளிகளுக்கு கீழ் கொண்டு வரும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆல்பாபெட் ஆர்டரில் மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது. வண்ணக்கயிறுகளை சாதிகளோடு அடையாளப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    பாஜகவை சேர்ந்த பலரும் சந்துரு குழு அறிக்கையைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்து மாணவர்களை இது பாதிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    வண்ணக்கயிறும் நெற்றி திலகமும் ஹிஜாபும் ஒன்றா?

    வண்ணக்கயிறு, நெற்றித் திலகம், போட்டு ஆகியவை இந்து மத அடையாளங்கள். வண்ணக்கயிறை போல ஹிஜாபை, சிலுவையை தடை செய்வீர்களா என்று வாதம் செய்கின்றனர்.

    ஹிஜாபும், சிலுவையும் மத அடையாளங்கள். அவற்றில் சாதி இல்லை. ஆனால் வண்ணக்கயிறுகளிலும் நெற்றித் திலகத்திலும் சாதி இருக்கிறதே. ஒவ்வொரு சாதியையும் குறிப்பிட்ட நிறத்திலான கயிறுகளையும், குறிப்பிட்ட வண்ணத்திலான நெற்றித் திலகத்தையும் வைப்பதே இங்கு பிரச்சனையாக மாறுகிறது.

    ஒருவர் ஹிஜாப் அணிந்தோ, சிலுவை அணிந்தோ வந்தால் தான் அவரின் மதத்தை கண்டுபிடிக்க தேவை இங்கு இல்லை. ஒருவரின் பெயரை வைத்தே அவரின் மதத்தை நம்மால் அடையாள காணமுடியும். ஆனால் பெயரை வைத்து தமிழ்நாட்டில் சாதியை கண்டுபிடிக்க முடியாது.

    பெயர்களுக்கு பின்னர் சாதிப்பெயரை சேர்க்காத பெருமை தமிழ்நாட்டிற்கு உள்ளது. அப்படியொரு மாநிலத்தில் எந்த ஊர், என்ன குலசாமி, அம்மா அப்பாவுக்கு என்ன வேலை போன்ற கேள்விகளிலும் சாதிக்கயிறு, சாதி பொட்டுகளிலும் சிலர் சாதியை அடையாளம் காண்கின்றனர்.

    இதன் மூலம் ஒரே சாதியை சேர்ந்த சிலர் ஐக்கியமாகி மற்ற சாதியை அடையாளம் கண்டு அவர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்தும் சம்பவங்கள் பள்ளி கல்லூரிகளில் அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது.

    அதனை தடுப்பதற்கு இத்தகைய பரிந்துரைகள் அவசியம். ஆகவே சந்துரு குழுவின் இந்த பரிந்துரைகள் இந்து மதத்திற்கு எதிரானது கிடையாது, சாதிய அணிதிரட்டலுக்கு சாதிய வன்முறைக்கு எதிரானது என்று சிலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    சாதியை குறிக்கும் விதமாகவும் அரசியல் கட்சிகளின் கொடியின் வண்ணத்தை குறிக்கும் விதமாகவோ வண்ண கயிறு அணிந்து வந்தால் பிரச்சனை. மற்றபடி கருப்பு, சிவப்பு போன்ற சாதாரண நிறத்தில் வண்ணக்கயிறு கட்டுவதாலோ, குங்குமம் சந்தன அபோட்டு வைப்பதாலோ எந்த பிரச்சனையும் இல்லை. ஆகையால் அதற்கு தடை விதிப்பது சரியல்ல என்றுதான் வாதம் செய்கிறோம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் - சாதிய அடையாளமா?

    தலித்துகளுக்கும் கள்ளர் சமூக மக்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இவை நேரடியாக பள்ளிக்கல்வித்துறையில் கீழ் வராது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ஆதி திராவிடர் பள்ளிகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் கள்ளர் பள்ளிகளும் வரும்.

    இந்நிலையில், ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வி துரையின் கீழ் கொண்டு வரலாம் என்று சந்துரு குழு பரிந்துரைத்தது.

    ஏனெனில் ஆதி திராவிடர், கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அந்த பள்ளிகளின் பெயரால் சாதி ஒடுக்குமுறை நிகழ்த்த வாய்ப்புள்ளது ஆகவே அந்த பெயர்களை நீக்க அக்குழு பரிந்துரைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

    தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்பதும் நல்ல கோரிக்கையாக உள்ளது என்று பலரும் இந்த சந்துரு குழுவின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

    ×