என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • மாற்றி யோசியுங்கள் என்று ஒரு புதிய வழியைக் காண்பிக்கிறார் எட்வர்ட் டி போனோ!
    • பிரிட்டானிய ஏர்வேஸ். ஆப்பிள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களில் உள்ளோருக்கு இதில் பயிற்சியும் தர ஆரம்பித்தார்.

    பிரச்சனைகளும் தீர்வுகளும்: வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அன்றாடம் ஏராளமான பிரச்சனைகள் தோன்றுகின்றன. சிந்திக்கி றோம்; சிலவற்றிற்குத் தீர்வு கிடைக்கிறது. சிலவற்றிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறோம்.

    மாற்றி யோசியுங்கள் என்று ஒரு புதிய வழியைக் காண்பிக்கிறார் எட்வர்ட் டி போனோ!

    மாற்றி யோசிப்பது என்றால், அது என்ன? எப்படி மாற்றி யோசிப்பது?

    இதை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட புதிர்களை முதலில் விடுவியுங்கள்.

    முடியாவிட்டால் விடைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது! அதைப் பார்த்துக் கொள்ளலாம்.

    புதிர் - 1: ஒரு பெண்மணிக்கு ஒரே நாளில் ஒரே சமயத்தில் இரு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் அவர்கள் இரட்டையர் இல்லை. அப்படி என்றால் இதற்கான விளக்கம் என்ன?

    புதிர் - 2: வேகமாகச் சென்ற ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணித்த தந்தை உடனே இறந்து விடுகிறார். அபாய நிலையில் இருந்த பையனை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கின்றனர். அறுவைசிகிச்சைக்காக உள்ளே வந்த சர்ஜன், "இந்த ஆபரேஷனை என்னால் செய்ய முடியாது. இவன் எனது மகன்" என்கிறார். இதற்கான விளக்கம் என்ன?

    புதிர் - 3: அழகிய ராஜகுமாரியை ஏழை ஒருவன் காதலித்தான். அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். ஆனால் இதை அறிந்து கொண்ட அரசன் கோபப்பட்டான். அவனுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் அவன் தன் மக்களிடம் தான் நேர்மை தவறாத ஒருவனாக நடந்து கொள்வதாகக் காண்பிக்க ஆசைப்பட்டான். அரசவையைக் கூட்டிய அரசன் தான் இரு துண்டுச் சீட்டுகளை ஒரு பெட்டியில் போடுவதாகவும் ஒன்றில் வேண்டாம் என்று இருக்கும், இன்னொன்றில் மணம் புரியலாம் என்று இருக்கும் என்றும் எந்த ஒன்றை அந்த ஏழை எடுக்கிறானோ அதன் படியே முடிவு இருக்கும் என்று சொன்னான்.

    பெட்டியில் இரு துண்டுச் சீட்டுகளை அவன் மக்களின் முன்னே போட்டான். ஆனால் அந்த இரண்டிலும் வேண்டாம் என்றே எழுதப்பட்டிருந்தது. இது யாருக்கும் தெரியாது.

    ஏழையைக் கூப்பிட்டு ஒரு சீட்டை எடு என்றான் அரசன்.

    அரசனின் தந்திரத்தை ஏழை புரிந்து கொண்டான். மாற்றி யோசித்தான். செயல்பட்டான்

    ராஜகுமாரியை மணந்து கொண்டான். எப்படி?

    புதிர் - 1 : விடை: அந்தப் பெண்மணிக்கு இரண்டுக்கும் மேல் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்தக் குழந்தைகளை இரட்டையர் என்று சொல்ல முடியாதல்லவா?!

    புதிர் - 2: விடை: ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த சர்ஜன் பையனுடைய அம்மா!

    புதிர் - 3: விடை: தனது மாமனராக ஆகப் போகும் அரசனை இழிந்தவனாகக் காட்டக் கூடாது. அதே சமயம் தான் ராஜகுமாரியையும் மணந்து கொள்ள வேண்டும். இரண்டு சீட்டுகளையும் மக்கள் முன்னால் காண்பியுங்கள் என்றோ அரசன் நியாயமானவன் இல்லை என்றோ சொன்னால் அதன் பின் விளைவுகள் நன்றாக இருக்காது.

    ஆகவே அந்த ஏழை யோசித்தான். பெட்டியில் கையை விட்டு ஒரு சீட்டை எடுத்தான். அதைப் படித்தான். அதை உடனே சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டான்.

    "அரசரே! நான் எடுத்த சீட்டில் மணம் புரியலாம் என்று எழுதப்பட்டிருந்தது என்றான். அடுத்த சீட்டை எடுத்துப்பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள், மக்களுக்கும் காட்டுங்கள்" என்றான் அவன்.

    இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. அடுத்த சீட்டில் வேண்டாம் என்று இருக்கிறது.

    ஆகவே அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதோடு தனது மருமகனாக வருபவன் ஒரு புத்திசாலி, தன் பெயரைக் காப்பாற்றுவான் என்பதையும் புரிந்து கொண்டான்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    திருமணம் நடந்தது!

    மாற்றி யோசியுங்கள்! நிலைமையைச் சமாளியுங்கள்!!

    மாற்றி யோசித்து எப்படி ஒரு நிலைமையைச் சமாளிப்பது?

    இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு அருமையான சம்பவம் உண்டு.

    ஒரு கைதி தனது மனைவிக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் அதிகாரிகளால் நன்கு படிக்கப்பட்டு சென்ஸார் ஆன பின்னே அவளிடம் சேர்க்கப்படுகிறது என்பதை நன்கு அறிவான்.

    ஒரு நாள் மனைவியிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. மனைவி, தனக்கு தோட்டத்தில் செடிகளை நட ஆசை என்றும் ஆனால் தோட்டத்தில் உள்ள பூமியை உழுது தோண்டும் மெஷினை தனக்கு இயக்கத் தெரியாதென்றும் எழுதி இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் அவள் வருத்தப்பட்டிருந்தாள்.

    கைதி உடனே பதில் எழுதினான் மனைவிக்கு: "அன்பே! அப்படி எதுவும் செய்து விடாதே! அந்தத் தோட்டத்தில்தான் நான் திருடிய அத்தனை சொத்தையும் புதைத்து வைத்திருக்கிறென்" என்று!

    ஒரே வாரத்தில் மனைவிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.

    திடீரென்று அரசு அதிகாரிகள் அங்கு வந்து நிலத்தை நன்கு தோண்டி எதையோ தேடினர் என்றும் ஒன்றும் காணாமல் திரும்பிப் போய் விட்டனர் என்றும் இப்போது செடிகளைதான் விரும்பியபடி நடப் போவதாகவும் எழுதியிருந்தாள்.

    கைதிக்கு மகிழ்ச்சி. மாற்றி யோசித்து ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்டான் அல்லவா! அதனால்!

    இதே போல் ஏராளமான சுவையான மாற்றி யோசிக்கும் வழிகளைக் கூறும் புதிர்களும் நிஜ சம்பவங்களும் உண்டு.

    இதை உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர் தான் எட்வர்ட் டி போனோ

    பிறப்பும் இளமையும்: எட்வர்ட் சார்லஸ் ஃபிரான்ஸிஸ் பியூப்ளியஸ் டி போனோ தெற்கு ஐரோப்பாவில் உள்ள மால்டா என்ற தீவில் செயிண்ட் ஜூலியன்ஸ் பே என்ற இடத்தில் 1933-ம் ஆண்டு மே மாதம் 19-ம் நாள் அன்று பிறந்தவர்.

    வகுப்பில் படிக்கும் போதெல்லாம் இவரே வகுப்பில் மிகவும் குறைந்த வயதுள்ள மாணவனாக இருப்பார். ஒவ்வொரு வகுப்பாகப் போகாமல் இரண்டு முறை மேல் வகுப்புகளுக்கு படிப்பில் சூரனாக இருந்ததால் தாவினார். பின்னர், மால்டா பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவர் ஆனார். பின்னர் ஆக்ஸ்போர்டுக்குச் சென்றார். அங்கு உளவியலிலும் மனவியலிலும் தேர்ச்சி பெற்றார். தனது பிஹெச்.டி பட்டத்தைப் கேம்பிரிட்ஜில் பெற்றார்.

    லேடரல் திங்கிங் (பக்கவாட்டு சிந்தனை):

    பக்கவாட்டுச் சிந்தனை எனப்படும் லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா உத்தியைக் கண்டுபிடித்து அதை உலகமெங்கும் பரப்ப ஆரம்பித்தார் இவர்.

    1967-ம் ஆண்டு தனது முதல் நூலான 'தி யூஸ் ஆஃப் லேடரல் திங்கிங்' என்ற நூலை அவர் வெளியிட்டார். சிறிது காலத்திலேயே பிரபலமான அவரது புதிய சிந்தனா முறையால் சைமன்ஸ், நோகியா. ஷெல் உள்ளிட்ட பன்னாட்டு உலக நிறுவனங்கள் அவரை அழைத்து இதில் பயிற்சியைத் தருமாறு வேண்டின...

    பிரிட்டானிய ஏர்வேஸ். ஆப்பிள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களில் உள்ளோருக்கு இதில் பயிற்சியும் தர ஆரம்பித்தார்.

    இங்கிலாந்து, ஜப்பான், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இவர் அழைக்கப்பட்டார். 1982-ல் பிபிசியில் ஒளிபரப்பான இவரது நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

    எதையும் புதிய கோணத்தில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தால் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் என்பது இவரது கொள்கை.

    லேடர்ல் திங்கிங் பற்றிய இவரது நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆயிற்று. 46க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டது, 85க்கும் மேற்பட்ட இவரது நூல்கள், முன்னேறத் துடிக்கும் அனைவரும் நாடும் நூல்களாக அமைந்தன.

    மனித குலத்தின் சிந்தனா போக்கை உருவாக்கிய 250 பேரில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    திட்டத்தின் கருவிகள்: லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா முறைக்கு சிந்திக்கும் வழிமுறைக்கான கருவிகள் பல உள்ளன. அவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:-

    உங்களின் எண்ணத்தால், திட்டத்தால், முடிவால் ஏற்படப் போகும் குறுகிய கால நீண்ட கால விளைவுகள் என்ன?

    உங்கள் எண்ணத்தின் அல்லது திட்டத்தின் நல்ல விளைவுகள், தீய விளைவுகள் அல்லது சுவையான நிகழ்வுகள் எதாக இருக்கும்?

    இந்த திட்டத்தின் எல்லை எது? இதை அமுல்படுத்த வசதியாக இருக்கும் சின்ன சின்ன அம்சங்களும் கால அளவும் என்ன?

    இந்த திட்டத்தால், செயலால், முடிவால் என்னென்ன நேரலாம்? முழுவதும் அலசிப் பாருங்கள்

    இந்தத் திட்டத்தின் நோக்கம், குறிக்கோள் என்ன? இது ஏன் முக்கியமாக இருக்கிறது?

    இதை நிறைவேற்ற மாற்று ஏற்பாடுகள், திட்டங்கள், விருப்பத் தேர்வுகள் உண்டா?

    இதைப் பற்றிய மற்றவர்களின் கருத்து, பார்வை என்ன? இதை எப்படி அவர்கள் ஏற்கக் கூடிய விதத்தில் விளக்க முடியும்?

    இதில் உள்ள மிக மிக முக்கியமான மதிப்புள்ள விஷயங்கள் யாவை?

    இதை செயலாக்குவதில் முதலில் செய்ய வேண்டியவை, அடுத்து செய்யவேண்டியவை என்ற பட்டியல் ரெடியா?

    இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு, இதன் விளைவு, செய்யப்படும் முறை, செயல் திட்டம் ஆகியவை தயாராக இருக்கிறதா?

    இப்படி முதலில் பக்கவாட்டுச் சிந்தனை

    கருவிகள் எனப்படும் இந்தக் கேள்விகளுக்

    கான பதிலை தயார் செய்யுங்கள். பிரச்சனை சுமுகமாக முடியும்!

    புதிய குறியீட்டு மொழி உருவாக்கம்:

    2000-ம் ஆண்டில் இப்போதுள்ள மொழிகள்

    ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்லும்

    விதத்தில் வார்த்தைகளைக் கொண்டிருக்க வில்லை என்றும் ஆகவே குறியூட்டு வார்த்தைகள் கொண்ட ஒரு மொழியைத் தான் உருவாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 'தி எட்வர்ட் டி போனோ கோட் புக்' என்ற இவரது புதிய புத்தகம் உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அது என்ன குறியீட்டு மொழி?

    எடுத்துக்காட்டாக டி போனாவின் 6/2 என்பதைச் சொன்னால் அது, "நீ எனது கருத்தின் பார்வையை எனக்குக் கொடு. நான் உனது கருத்தின் பார்வையை உனக்குக் கொடுக்கிறேன்" என்று பொருளாகும். இப்படி ஒரு புதிய மொழியை அவர் உருவாக்கினார்.

    புதிய சிந்தனா முறையால் உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சச்சரவுகளைப் போக்கிக் கொள்ளலாம் என்பது இவரது ஆக்கபூர்வமான எண்ணமாக இருந்தது.

    புதிய சிந்தனா முறைக்கான உலக மையத்தை (தி வோர்ல்ட் செண்டர் ஃபார் நியூ திங்கிங்) இவர் மால்டாவில் நிறுவினார்.

    குடும்பம்: டி போனோ 1971-ல் ஜோஸபைன் ஹால் ஒய்ட் என்பவரை மணந்தார். இரு மகன்கள் பிறந்தனர். பின்னால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். டி போனோ தனது 88-ம் வயதில் 2021 ஜூன் 9-ம் நாளன்று இயற்கை எய்தினார்.

    அவரது கூற்றுகளில் சில:

    படைப்பாற்றல் சிந்தனை என்பது ஒரு திறமை அல்ல, அது வளர்க்கப்படக்கூடிய ஒரு சாமர்த்தியம் தான்!

    படைப்பாற்றல் என்பது சம்பிரதாயமான வழிகளை உடைத்து வித்தியாசமான வழியில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது தான்!

    மனம் எதைப் பார்க்கத் தயாராக இருக்கிறதோ அதைத் தான் பார்க்கும்!

    நுண்ணறிவு என்பது பிறப்புடன் வருவது. சிந்திப்பது என்பது கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு திறமை!

    புதிய சிந்தனா முறையை மேற்கொள்வோமா டி போனோவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து விட்டு!

    • 63 நாடுகளின் மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் சேர்ந்து படிக்கிறார்கள்.
    • நுழைவுத் தேர்வில் 680 மதிப்பெண்கள் வரை பெற வேண்டியது அவசியமாகும்.

    உலக அளவில்மிகவும் பிரபலமான பெருமை வாய்ந்த பல்கலைக்கழகமாக திகழ்வது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகும்.

    இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க இடம் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

    இங்கு 350க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்புகளும் 53க்கு மேற்பட்ட பட்டப்படிப்புகளும் நடத்தப்படுகின்றது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கு, பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 90 முதல் 93 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பில் சேருவதற்கு, மேல்நிலைப்பள்ளி தேர்வில் எல்லா பாடங்களையும் சேர்த்து குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல படிப்புகள் நடத்தப்பட்டாலும், பயோ கெமிஸ்ட்ரி (BIO-CHEMISTRY), கம்ப்யூட்டர் சயின்ஸ் (COMPUTER SCIENCE ), இன்ஜினியரிங் சயின்ஸஸ் (ENGINEERING SCIENCES), மருத்துவம் (MEDICINE) பொருளாதாரம் (ECONOMICS) , எம்.பி.ஏ. (M.B.A.) நிதி

    (FINANCE) போன்ற பாடங்களை அடிப்படையாகக் கொண்ட படிப்புகளுக்கு மிகவும் மதிப்பு அதிகம் .

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக எம்.பி.ஏ. படிப்பு

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களது படிப்பு விவரங்களை முதலிலேயே சரி பார்த்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே தங்கள் மதிப்பெண்களை சரியாக கணக்கிட்டு கொள்வது நல்லது.

    இந்த பல்கலைக்கழகத்தில் மொத்தம் 334 மாணவ, மாணவிகள் எம்.பி.ஏ. படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். உலகில் உள்ள சுமார் 63 நாடுகளின் மாணவ, மாணவிகள் இந்த படிப்பில் ஆண்டுதோறும் சேர்ந்து படிக்கிறார்கள்.

    இந்த படிப்பில் சேர்வதற்கு Graduate Management Admission Test (ஜி.எம்.ஏ.டி) (GMAT) என்னும் நுழைவுத் தேர்வில் 680 மதிப்பெண்கள் வரை பெற வேண்டியது அவசியமாகும். இவைதவிர, பணி அனுபவம் சுமார் ஆறு வருடங்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்தும் இன்னும் சில படிப்புகள்:

    1.எம்.எஸ்.சி. இன் பைனான்சியல் எக்கனாமிக்ஸ் (M.Sc., in பைனான்சியல் ECONOMICS)

    2.எம்.எஸ்.சி குளோபல் ஹெல்த்கேர் லீடர்ஷிப் (M.Sc., GLOBAL HEALTH CARE LEADERSHIP)

    3.எம்.எஸ்.சி. லா அண்ட் பைனான்ஸ் (M.Sc. LAW AND FINANCE)

    4.எம்.எஸ்.சி. இன் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ் (M.Sc. in ADVANCEDCOMPUTER SCIENCE)

    5.எம்.எஸ்.சி. இன் எக்கனாமிக் அண்ட் சோசியல் ஹிஸ்டரி (M.Sc. in ECONOMIC AND SOCIAL HISTORY)

    மேலே குறிப்பிட்டுள்ள படிப்புகளில் எம்.எஸ்.சி இன் பைனான்சியல் எக்கனாமிக்ஸ் (M.Sc. in FINANCIAL ECONOMICS) படிப்பில் சேர்வதற்கு கண்டிப்பாக ஜி.எம்.ஏ.டி. தேர்வில் 742 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். பணி அனுபவம் விரும்பத்தக்கது.

    ஆனால், இந்த படிப்பை தவிர மற்ற படிப்புகளில் சேர்வதற்கு Graduate

    Management Admission Test (ஜி.எம்.ஏ.டி)(GMAT) நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.

    இருந்தபோதும், எம்.எஸ்.சி. குளோபல் ஹெல்த் கேர் லீடர்ஷிப் (M.Sc., GLOBAL HEALTH CARE LEADERSHIP) படிப்பில் சேர கண்டிப்பாக ஐந்து வருட பணி அனுபவம் தேவை.

    மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பட்ட மேற்படிப்புகளிலும் சேர்வதற்கு பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும்

    பொதுவாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அக்டோபர் மாதம்வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால், பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் மாறுதலுக்கு உட்பட்டது.

    ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்தும் பிரபலமான படிப்புகள்:

    ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்...

    1.எம்.பி.ஏ. (M.B.A.)

    2.எம்.எஸ்சி. பயோ கெமிஸ்ட்ரி (M.Sc Bio-Chemistry)

    3.எம்.எஸ்சி. கெமிக்கல் பயாலஜி (M.Sc Chemical Biology)

    4.எம்எஸ்.சி அட்வான்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் (M.Sc., Advanced ComputerScience)

    5.எம்.இன்ஜினியரிங் சயின்ஸ் (M.Eng Engineering sciences)

    6.எம்.எஸ்சி இன்ஜினியரிங் சயின்ஸ் -சிவில் அண்ட் ஆப்சோர் இன்ஜினியரிங் (M.Sc Engineering Science - Civil and Offshore Engineering)

    7.எம்.எஸ்.சி. லா அண்ட் பைனான்ஸ் (M.Sc Law and Finance)

    8.எம்.எஸ்சி., மேத்தமேட்டிக்கல் அண்ட் கம்ப்யூடேஸ்னல் பைனான்ஸ் (M.ScMathematical and Computational Finance)

    9.எம்.எஸ்சி., சோசியல் டேட்டா சயின்ஸ் (M.Sc Social Data Science)

    10.எம். எஸ்சி., பைனான்சியல் எக்கனாமிக்ஸ் (M.Sc., Financial Economics)

    11.பி.எஸ். மெடிசின் (B.S Medicine)

    12.எம்.பி.பி.எஸ் (M.B.B.S)

    13.பி.எஸ். கெமிஸ்ட்ரி (B.S. Chemistry)

    14.பி.ஏ. கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.A.Computer Science)

    15.பி.ஏ. பயோ மெடிக்கல் சயின்ஸ் (B.A Biomedical Sciences)

    ஆகிய படிப்புகள் இங்கு பிரபலமான படிப்புகளாக உள்ளன.

    பட்ட மேற்படிப்பில் சேர்வது எப்படி?

    ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு கீழ்கண்ட சான்றிதழ்களும் ஆவணங்களும் கண்டிப்பாக தேவை.

    1.OFFICIAL ACADEMIC TRANSCRIPT

    2.OFFICIAL CERTIFICATES OF PREVIOUSLY ATTENDED INSTITUTIONS.

    3.ACADEMIC AVERAGE REQUIRED: 3.5-3.7GPA or 90-93%

    4.7.0 IELTS (6.5 per component)

    5.STATEMENT OF PURPOSE AND RESEARCH PROPOSAL.

    6.WRITTEN WORK

    7.GRE CERTIFICATE

    8.SCHOLARSHIP SUPPORTING STATEMENT.

    9.PORTFOLIO

    10.THREE LETTERS OF RECOMMENDATION

    11.COPY OF PASSPORT

    12.CV/RESUME

    ஆக்ஸ்போர்ட்பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை:

    பொதுவாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் மிகவும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களையும் சிறப்பு திறமை கொண்டவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளுகிறார்கள்.

    குறிப்பாக, மாணவர் சேர்க்கையின்போது, மாணவர்களின் தலைமை பண்பு, படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், படிப்போடு தொடர்புடைய மற்ற திறமைகள், படிப்போடு தொடர்புடைய அறிவு போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

    எனவே, படிப்பில் மிக சிறந்து விளங்கு பவர்களும், சிறந்த தனித்திறமைகள் கொண்டவர்களும், பல்கலைக்கழகம் எதிர்பார்க்கும் தகுதி கொண்டவர்களும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சிறந்த கல்வி பெறலாம்.

    ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி:

    https://www.ox.ac.uk/

    E-Mail:nellaikavinesan25@gmail.com

    • சனி ஒளியற்ற இருளைச்சுட்டிக் காட்டக் கூடிய கிரகம்.
    • சனி சுப வலுப்பெற்றால் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

    கர்ம வினைப்படி ஒரு மனிதன் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்ப துன்பங்களையும் வழங்குபவர் சனி பகவான். அதாவது பூர்வ ஜென்ம கணக்குப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை நிர்ணயம் செய்பவர் சனி பகவான். அதனால் தான் அவர் நியாயத்தராசை ராசிச் சின்னமாகக் கொண்ட துலாம் ராசியில் உச்சம் அடைகிறார். சனி சுப வலுப்பெற்றால் மட்டுமே பிறப்பு முதல் இறப்பு வரை வசதியான வாழ்க்கை, நிறைந்த தொழில், நீண்ட ஆயுள் இவற்றை ஒரு மனிதன் பெற முடியும். சனி ஒளியற்ற இருளைச்சுட்டிக் காட்டக் கூடிய கிரகம். வாழ்வில் நடக்கும் மங்கலம் இல்லாத விஷயங்களை சுட்டிக் காட்டும் கிரகம். சனி தூய்மையின்மை, அழுக்கு, தடை, தாமதம், சோம்பல், ஊனம் போன்றவற்றிற்கு காரக கிரகம் என்பதால் சுய ஜாதகத்தில் சனி பலம் குறைந்தால் வறுமை, கடன், நிலையில்லாத தொழில், கஷ்ட ஜீவனம், தடை, தாமதம் போன்றவை நிறைந்து இருக்கும்

    இனி பனிரெண்டு ராசிக்கு சனி தோஷம் நீக்கும் பரிகாரங்கள் காணலாம்.

    மேஷம்:- மேஷ ராசிக்கு சனி பகவான் 10,11- ம் அதிபதி. தொழில் ஸ்தானாதிபதி மற்றும் லாப அதிபதி. இவரே பாதகாதிபதி என்பதால் ஆட்சி, உச்சம் பெறுவதை விட சுப கிரக சம்மந்தம் பெறுவது திரிகோணாதிபதி சாரம் பெறுவது என சூட்சம வலுப்பெற்றால் சிறப்பு. சனி சுப வலுப்பெற்றால் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். இவர்களது திறமைகள் வெளி உலகத்திற்கு தெரியும் படியாக புகழ், அந்தஸ்துடன் இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட லாபகரமான தொழில் புரிவார்கள். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். நிலையான, நிரந்தரமான லாபம் நிறைந்திருக்கும். அதிகாரப் பதிவுகள் தேடி வரும். அரசியல் ஆதாயம் உண்டு. சனி வலுக் குறைந்தால் அசுப கிரக சம்பந்தம் இருந்தால் நினைத்ததை செயல்படுத்த முடியாத வகையில் தடை இருக்கும். சிலர் படித்த படிப்பிற்கு தகுந்த தொழில், வேலை கிடைக்காது. பரம்பரையாக அடிமையாக கஷ்டமான வேலையில் சொற்பமான பணம் சம்பாதிப்பார்கள்.

    பரிகாரம்:- சனிக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    ரிஷபம்:- ரிஷப ராசிக்கு சனி 9,10-ம் அதிபதி. பாக்கியாதிபதி, தொழில் ஸ்தான அதிபதி மற்றும் பாதகாதிபதி. சுய ஜாதகத்தில் சனி சுப வலுப்பெற்றால் தயாள குணம் கொண்டவர்கள். முன்னோர்கள் வம்சாவழியாக சுய தொழில் செய்தவர்களாக இருப்பார்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். இது தர்ம கர்மாதிபதி யோகமாகும். தந்தை வழி குலத்தொழிலை தொடர்ந்து செய்பவர்களாக இருப்பார்கள். பூர்வீக சொத்து, தொழில் மூலம் வருமானம் உண்டு. தொழிலில் நேர்மை, நாணயம் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்திடம் பாராட்டும் புகழும் பெறுவார்கள். அரசாங்கத்தில் உயர் பதவி உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணக்கூடியவர்கள். சனி அசுப வலிமை பெற்றால் தொழில் மூலம் தன் சந்ததிகளுக்கு பாவம் சேர்த்து வைப்பார்கள்.

    பரிகாரம்:- சனிக்கிழமை சனி ஒரையில் சிவனுக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழபடவும்.

    மிதுனம்:- மிதுன ராசிக்கு சனி அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. சனி தசை வராத வரை மிதுன ராசியினர் பாக்கியவான்கள். சனி தசை காலங்களில் சனி பகவான் எந்த நிலையில் இருந்தாலும் அஷ்டமாதிபதி வேலையை நடத்தத் தவறுவது இல்லை. கடந்த இரண்டரை ஆண்டுகள் சனி மகரத்தில் நின்ற போது அஷ்டமச் சனியினால் அல்லல் பட்ட மிதுன ராசியினரை விட மிதுன லக்னத்தினர் தான் அதிகம். அதுவும் சனி தசை நடந்த மிதுன லக்னத்தினர் சாமானியர் முதல் சாதனையாளர்கள் வரை பட்ட அவமானம் சொல்லிமாளாது.

    பரிகாரம்:- சனி தசை காலங்களில் அசைவ உணவை தவிர்த்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வர வேண்டும்.

    கடகம்:- கடக ராசிக்கு சனி களத்திர ஸ்தானாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. சனி மகரம், கும்பத்தில் இருக்கும் காலங்களில் பிறந்த கடக ராசியினர் பலர் திருமண வாழ்க்கையில் விவாகரத்தை சந்தித்தவர்கள். அல்லது 30 வயதிற்கு மேல் திருமணம் நடந்தவர்கள். கிடைத்த திருமண வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போராடுபவர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகள் மகரத்தில் சனி இருந்த காலத்தில் 30, 35க்கு மேல் உள்ள பல கடக ராசியினருக்கு திருமணம் நடந்தது. சனி கும்பத்திற்குள் அதிசாரத்தில் நுழைந்தது முதல் தற்போது மீண்டும் பெயர்ச்சியாகி கும்பத்தில் ஆட்சி பலம் பெற்றது வரை விவாகரத்து வழக்கிற்காக அதிகம் வக்கீலையும், ஜோதிடரையும் சந்திப்பவர்கள் கடக ராசியினர். சனி பகவான் கர்மக் கணக்கை தக்க சமயத்தில் நேர் செய்து விடுவார் என்பதற்கு இதை விட வேறு எந்த சாட்சியும் தேவையில்லை.

    பரிகாரம்:- சனிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.

    சிம்மம்:- சிம்ம ராசிக்கு சனி 6, 7ம் அதிபதி. ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி. சற்று ஏறக்குறைய கடக ராசிக்கு சொன்ன அனைத்து பலன்களும் சிம்ம ராசிக்கு பொருந்தும். சனி தசை காலங்களில் திருமண வாழ்க்கையில் பிரச்சனையை சந்திக்காதவர்கள் கடனால், நோயால், ஜாமீன் பிரச்சனையால் நிம்மதி இழக்கிறார்கள்

    பரிகாரம்:- சனிக்கிழமை சூரிய ஓரையில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    கன்னி:- கன்னி ராசிக்கு சனி பகவான் 5,6-ம் அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி. சனி சுப வலுப்பெற்றால் பூர்வ புண்ணியம் மிகுந்தவர்கள். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்து உடன் வரும். தாத்தாவின் தொழிலை செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பிள்ளைகள் குல கவுரவத்தை காப்பாற்றுவார்கள். அறிவாளியாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள். குல தெய்வ அருள் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது கவுரவ பதவியில் இருப்பார்கள்.

    அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன் படுத்துவார்கள். சிலர் அதிர்ஷ்ட வசத்தால் திடீர் பணக்காரர்களாக மாறுவார்கள். சனி பலம் குறைந்தால் அதிர்ஷ்டம் குறைவுபடும். புத்திக்கூர்மை குறைவுபடும். புத்திர தோஷம் உண்டாகும். சிலருக்கு வம்சம் தலைக்காது. சிலருக்கு வாரிசுகளால் குடும்ப கவுரவம் கெடும். புகழ், அந்தஸ்து கவுரவம் மட்டுப்படும். குல தெய்வ அருள் கிடைக்காது.

    பரிகாரம்:- பவுர்ணமி நாட்களில் குலதெய்வ, சிவ வழிபாடு நடத்துவது நல்லது.

    துலாம்:- துலாம் ராசிக்கு சனி 4,5-ம் அதிபதி. சுக ஸ்தானாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. சனி சுப வலுப்பெற்றால் முன்னோர்களால், குலதெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பரம்பரை பூர்வீகச் சொத்து நிச்சயம் உண்டு. அதிர்ஷ்டம், குன்றாத செல்வம், புகழ், கீர்த்தி உண்டு. குலப் பெருமை, கவுரவம் உண்டு. புத்திரர்களால் நிம்மதி, சந்தோஷம் அடைவார்கள். பிள்ளைகள் பிறந்த பின்பு வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். சொத்துக்கள் குவிந்து கொண்டே இருக்கும். சொத்துக்கள் மூலம் நிரந்தர வருமானம் உண்டு. பல அடுக்குமாடி வீடு கட்டுபவர்கள், வாழ்நாள் முழுவதும் பூர்வீகச் சொத்தில் வசிப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறப்பவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும். இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கும். சனி அசுப வலுப்பெற்றால் பூர்வீகம் குல தெய்வம் தெரியாது. பெற்றவர்களின் நிம்மதியை குலைக்கும் குழந்தைகளே பிறக்கும்.

    பரிகாரம்:- குல தெய்வ கோவில் அல்லது சிவன் கோவிலில் ஆல மர, அரச மரங்களை நட்டு வளர்க்கவும்.

    விருச்சிகம்:- விருச்சிக ராசிக்கு சனி பகவான் 3,4-ம் அதிபதி. சகாய ஸ்தானாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதி. சனி சுப வலுப்பெற்றால் தைரியம், தன்னம்பிக்கை, திடகாத்திரம், ஆரோக்கியம், இன்பம், மகிழ்ச்சி உடையவர். தன் சுய முயற்சியால் நல்ல பொருளாதார வளர்ச்சி உண்டு. இன்பம், செல்வம் அறிவு நிரம்ப பெற்றவர். தாய் வழி ஆதரவு உண்டு. தன்னை சார்ந்தவர்களும் உயர உதவுபவர். வீடு, வாகன வசதி உண்டு. உற்றார், உறவினர்களால் போற்றப்படுவார்கள். ஆரம்பகல்வி, பள்ளி படிப்பில் முதன்மையான மாணவராக திகழ்வார்கள். சனி அசுப வலுப்பெற்றால் சில கெட்டபழக்கங்கள் அல்லது உடல்நிலையை பாதுகாக்க நேரமின்மை போன்றவற்றால் உடல்நலம் பாதிக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் மிகுதியாக இருக்கும். குடும்ப உறவுகளின் ஆதரவின்மை பங்கு துரோகம் உண்டு. தாயன்பு கிடைக்காது. கல்வி தடைபடும்.

    பரிகாரம்:- சனிக்கிழமை செவ்வாய் ஓரையில் நல்லெண்ணெய் தீபம் 6 ஏற்றி முருகப் பெருமானை வழிபடவும்.

    தனுசு:- தனுசு ராசிக்கு சனி பகவான் 2, 3-ம் அதிபதி. தன அதிபதி, முயற்சி ஸ்தான அதிபதி. சனி சுப வலுப்பெற்றால் சுயமாக சிந்தித்து செயல்படுவார்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து கூட்டுக் குடும்பமாக வசிப்பார்கள். அல்லது இவர்களுடைய பொருளாதாரம் உடன் பிறந்தவர்களுக்கே பயன்படும் அல்லது உடன் பிறந்தவர்களுக்காகவே வாழ்வார்கள். சகோதர ஆதாயம் உண்டு. தன் தனித் திறமையால் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அதிகம் சம்பாதித்து பிரபலமடைவார்கள். சனி அசுப வலுப்பெற்றால் வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருப்பார்கள். பிறரை நம்பாதவர்கள். ஞாபகசக்தி குறைவால் திறமையை வெளிப்படுத்த முடியாதவர்கள். சிலருக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் தங்காது.

    பரிகாரம்:- சனிக்கிழமை பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.

    மகரம்:- மகர ராசிக்கு சனி ராசி அதிபதி மற்றும் தன அதிபதி. சுய ஜாதகத்தில் சனி வலுப்பெற்றால் சுப வலுப்பெற்றால் ஜாதகர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறக்கும் போது குடும்பம் சாதாரண நிலையில் இருந்தாலும் இவர் பிறந்த பிறகு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ஜாதகரிடம் பொது நல சிந்தனை மிகுதியாக இருக்கும். இடம் பொருள் ஏவல் பார்த்து வாக்கு பிரயோகம் செய்வார். அதிகாரமான தெளிவான பேச்சால் அனைவரையும் கவருபவர். தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். எப்பொழுதும் தன் சுய பெருமைகளைப் பற்றி பிறரிடம் பேசிக் கொண்டே இருப்பார். இவர்கள் பூர்வீகத்தில் வருமானம் ஈட்டி சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். மகிழ்சியான குடும்ப வாழ்க்கை அமையும். சனி அசுப வலிமை பெற்றால் கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வீகத்தில் வாழ முடியாத நிலை, குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை இன்மை, பிறரை அண்டி பிழைத்தல் போன்ற நிலை நீடிக்கும். கண் தொடர்பான பிரச்சினை இருக்கும்.

    பரிகாரம்:- சனிக்கிழமை குளத்து மீன்களுக்கு பொரியிட வேண்டும்.

    கும்பம்:- கும்ப ராசிக்கு சனி பகவான் ராசி அதிபதி மற்றும் விரய அதிபதி.

    ராசி அதிபதி சனியே விரய அதிபதியாக இருப்பதால் தனக்கு நடக்கும் நல்லது கெட்டது இரண்டிற்கும் ஜாதகரே காரணமாக இருப்பார். அதனால் சனி ஆட்சி உச்சம் பெறக்கூடாது. சூட்சும வலுப்பெற வேண்டும். சனி சூட்சம வலுப்பெற்றவர்கள் வெளியூர், வெளிநாட்டில் வசித்தால் விரயம் இருக்காது. பூர்வீகத்தில் வசித்தால் நிலையான வருமானம் இருக்காது. பிறருக்கு அடிமையாக தன் உழைப்பை விரயம் செய்து கஷ்ட ஜீவனம் நடத்த வேண்டும்.

    பரிகாரம்:- சனிக்கிழமை பித்ருக்களை வழிபட வேண்டும்.

    மீனம்:- மீன ராசிக்கு சனி பகவான் லாப அதிபதி, விரய அதிபதி. சுய ஜாதகத்தில் சனி வலுப்பெற்றால் பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரவாதிகள். ஜாதகர் செல்வாக்கு மிகுந்தவர். எதிலும் வெற்றி நிச்சயம். தன் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாகனம், சொத்து சுகம் போன்ற வசதிகளை அடைவார்கள். ஜாதகருக்கு மூத்த சகோதரத்தால், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு. பிறவியில் ஏழையாக இருந்தாலும் இரண்டாம் திருமணத்திற்குப் பிறகு அசுர வளர்ச்சி உண்டு. சனி அசுப வலுப் பெற்றால் வெளிநாட்டு, வெளி மாநில வாழ்க்கை சிறப்பு. மூத்த சகோதரம், சித்தப்பாவிற்கு, இளைய மனைவிற்கு அதிக செலவு, விரயம் செய்ய நேரும். கடன் தொல்லை உண்டு. எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் இருக்கும். தொழிலுக்காக கடன் பட நேரும் அல்லது தொழில் கடனை அடைக்க முடியாது. சிலர் கடனுக்கு பயந்து தலை மறைவாக வாழ நேரும்.

    பரிகாரம்:- சனிக்கிழமை சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும். சுய ஜாதகத்தில் சனி தோஷத்தால் இன்னல்களை அனுபவிப்பவர்கள் மேலே கூறிய பரிகாரங்களை கடைபிடிக்க சுப பலன்கள் அதிகரிக்கும்.

    செல்: 98652 20406

    • சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழவே சங்கடஹர சதுர்த்தி.
    • விநாயகப் பெருமானுக்கு திருமஞ்சனம் செய்வித்து வழிபடலாம்.

    ஒருவரது வாழ்வில் அடுத்தடுத்து சங்கடங்கள் வந்து கொண்டே இருந்தால், சந்தேகமே வேண்டாம். அவை தோஷங்களின் பாதிப்புதான்.

    இந்த சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழவே விநாயகருருக்கு உரிய சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை தோற்றுவித்ததாக வரலாறு கூறுகின்றது. இவ்விரதத்தை தொடங்கும் நாளில் சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து சங்கல்பம் செய்து கொண்டு நீராடி விநாயகப் பெருமானைத் தியானம் செய்ய வேண்டும். அன்று உபவாசம் இருப்பது நல்லது.

    விநாயக புராணத்தை பாராயணம் செய்தல், சதுர்த்தி விரதம் போன்று இதற்கும் விநாயகப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வித்து வழிபடலாம். மாலையில் சந்திரனை வழிபட்டு, கோவிலுக்கு சென்று அபிஷேகம் பார்த்து கவசம் படித்து முடித்து கொள்ளலாம். இதனால் கடன் தொல்லை, நோய், பகை, தோஷங்கள் மறைந்து நல்லன எல்லாம் விரைவிலேயே அடையலாம்.

    சில தோஷங்கள் நிம்மதி இழக்க செய்து விடும். அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழ மையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்க வேண்டும்.

    சுக்ல சதுர்த்தி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் வெற்றி பெறும்.

    வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கினால் தோஷம் நீங்கி நல்லருள் பெறலாம்.

    மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமண தோஷம் விலகி தாலி பாக்கியம் விரைவில் வரும்.

    நவக்கிரக தோஷமுள்ளவர்கள் விநாய கருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.

    வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை தோஷம் விலகி விடும்.

    சதுர்த்தியன்று அரிசி நொய்யைச் சாதமாக்கி பிள்ளை யார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.

    உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்பில் தடை ஏற்பட்டு தோஷத்தால் கல்வி தடை ஏற்பட்டால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் தாருங்கள். பேச்சு தாமதமாகும் குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாய கரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானமாகத் தாருங்கள்.

    விநாயகர் ஜாதகத்தை ஒவ்வொரு சதுர்த்தியன்றும் வழிபடுவது சிறப்பு தரும். அவருடைய ஜென்ம நட்சத்திரம் அஸ்தம் - ஜென்ம ராசி கன்னி. ஜென்ம லக்கினம் விருச்சிகம்.

    இந்த ஜாதகத்தை வளர்பிறை சதுர்த்தி நாளில் தொடங்கி 48 நாட்கள் பூஜை செய்து வர திருமணத் தோஷங்கள் நீங்கும். கணபதி மூல மந்திரத் திரிசதி வாசிக்க வியாபார தோஷம் விலகி லாபம் கிடைக்கும்.

    விநாயகர் அகவல், விநாயகர் கவசம் போன்றவற்றைப் படிக்க படிக்க நீங்கள் நினைத்தது நடக்கும்.

    சென்னையில் உள்ள திருநீர்மலை புராணகால முக்கியத்துவம் பெற்று அங்குள்ள மணி கர்ணிகா தடாகம் என்ற திருக்குளத்தின் கரை யில்தான் ராகு-கேது தோஷங்களை போக்கும் தூமகேது விநாயகர் ஆலயம் உள்ளது.

    "தூமம் என்றால் ராகு என்றும், கேது என்றால் ஞானகாரகன் கேதுவை யும் குறிக்கும்". இந்த இரண்டு ரூபமும் சேர்ந்த வர்தான் தூமகேது கணபதி.

    மேலும் ஆகம வரிசைப்படி, புகை வடிவ தூமராசன் என்ற அரக்கனை அழித்த ரூபமான தூமகேது என்றும் புகழப்படுகிறார்.

    ஒரு பெண் ஜாதக அமைப்பில் ராகு-கேதுவால் தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்பட்டாலும், மற்ற கிரக தோஷங்களால் தடை ஏற்பட்டாலும், இந்த ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தால் தடைகள் விரைவில் விலகி திருமணம் நடைபெறும்.

    திருமணம் நீண்ட நாட்களாக தடைபட்டால், அதற்குரிய பரிகாரத்தை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களிலும் செய்யலாம்.

    ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று காலை எட்டு மணி முதல் பதினோரு மணி வரை, நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்காக, சந்தான கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.

    விசேஷ திராவிய ஹோமம் முடிந்ததும் மிகப்பெரிய வலம்புரி சங்கால் பால் அபிஷேகம் தூமகேது கணபதிக்கு நடத்தப்பட்டு, அன்று வரும் அனைத்து கணவன்-மனைவிக்கும் சங்கு பால் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    முதன்முதலாக கணபதியின் கல்யாண வைபோக விழாவை மிகச்சிறப்பாக நடத்திய பெருமை திருநீர்மலை அடிவாரத்தில் உள்ள தூமகேது விநாயகர் ஆலயத்தையே சேரும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கும், காரைக்குடிக்கும் இடையே அமைந்துள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் அருள் பாலித்து வருகிறார். ஆறடி உயரத்தில் பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கும் இந்த விநாயகர் வலது கையில் சிவலிங்கத்தினை வைத்து யோக நிலையில் உலக நன்மைக்காக ஞானத்துவம் புரிந்து கொண்டிருப்பதாக ஐதீகம்.

    கேட்டவருக்கு கேட்டவரம் தரும் இவ்விநாயகர் வலஞ்சுழித்த நிலையில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பதால் இவரை வழிபடுவோருக்கு தோஷங்கள் விலகி வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    புதுச்சேரியில் உள்ள விநாயகரை மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக போற்றி பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    தாமரை, அருகம்புல்லுடன் தேங்காய்களை மாலையாக கோர்த்து மணக்குள விநாயக ருக்கு அணிவித்து வணங்கினால் அவர் முன்வினை தோஷங்களை மறைய செய்து மனம் குளிர வைப்பார் என்று பக்தர்கள் கூறுகின்றனர். எனவே மன அமைதியை பெற விரும்புபவர்கள் மணக்குள விநாயகரை தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

    திண்டிவனம் அடுத்த தீவனூரில் பொய்யா மொழி விநாயகர் கோவில் உள்ளது. நெல்லுக்குத்தி விநாயகர்: நெல்லுக்குத்த பயன்பட்ட கல் இங்கு விநாயகராக மாறியதால் இவருக்கு நெல்லுக்குத்தி விநாயகர் என்றும் பெயர் வந்தது. ஒரு நாள் மிளகு வியாபாரி ஒருவரிடம் விநாயகருக்கு பொங்கல் படைக்க சிறிது மிளகு வேண்டும் என கேட்க, அதற்கு மூட்டையில் உளுந்து உள்ளதாக பொய் கூறினார்.

    ஆனால் அந்த மூட்டைகளுடன் உளுந்தூர்பேட்டை சந்தைக்கு சென்று மூட்டைகளை பிரித்தவர் உளுந்து இருப்பது கண்டு திடுக்கிட்டார். உடனே அங்கிருந்து தீவனூர் வந்த விவசாயி விநாயகரிடம் முறையிட்டார். பின்னர் கோவில் பிரசாதம் பெற்று உளுந்தூர்பேட்டை சென்றவர் மூட்டை யில் இருப்பது மிளகாக மாறி இருந்ததை கண்டார். எனவே இவர் பொய்யா மொழி விநாயகர் என பெயர் பெற்றார்.

    இந்த கோவில் தலவிருட்சம் விழுதில்லா ஆலமரம் ஆகும். மும்மூர்த்திகள் இங்குள்ள விநாயக ரிடம் வரம் கேட்க வந்து ஆலமரமாக ஆன தாக வரலாறு. இந்த ஆல மரம் விழுதில்லாதது தனிச்சிறப்பாகும். இந்த மரத்தை சுற்றி நூல் சுற்று வோருக்கு 90 நாட்க ளுக்குள் மாங்கல்ய தோஷங்கள் விலகி பாக்கியம் கிடைக்கும்.

    சுயம்பு மூர்த்தியாக விளங்கும் இந்த பொய்யாமொழி விநாயகர் சன்னதியில் திருமணம் நடைபெறும் அனைவருக்கும் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக பிறக்கும் என்பது ஐதீகம்.

    மேலும் குழந்தை வரம், மாங்கல்ய பாக்கியம், வியாபாரம் தழைக்க என பலவித தோஷ நிவர்த்தி வேண்டுதல்கள் இங்கே நிறைவேறுகின்றன.

    விநாயகர் வழிபாட்டால் தோஷங்கள் விலகும் அடுத்த வாரம் தொடரும்....

    • துரியோதனனிடமும் பல நல்ல குணங்கள் இருந்தன.
    • தன் மனைவியினை அன்போடும், மரியாதையோடும் நடத்தியவன்.

    மகாபாரதத்தில் துரியோதனன் செய்த செயல்களே அவரை பெரிய வில்லனாக கூறுகின்றன. உண்மைதான். ஆனால் துரியோதனனிடமும் பல நல்ல குணங்கள் இருந்தன.

    * அவனது நாட்டினைப் பொறுத்த வரையில் குடிமக்களின் மீது மிகுந்த அக்கறை கொடுத்தான்.

    * தன் உடன் பிறந்த சகோதரர்களை சிறப்பாக பாதுகாத்தான்.

    * யுத்தத்தில் கடைசி வரை சிறந்த வீரனாக இருந்து மடிந்தான்.

    * தன் மனைவியினை அன்போடும், மரியாதையோடும் நடத்தியவன்.

    * தன் நண்பன் கர்ணனுக்காக தயங்காமல் சமுதாயத்தில் கவுரவ நிலையினை ஏற்படுத்தியவன். ஆனால் பல அழிவுப் பூர்வமான சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டான்.

    * மகா பாரத யுத்தம் நாட்டு நன்மைக்காக நடத்தப்பட்டது அல்ல. துரியோதனின் தீய எண்ணத்தினால் நடத்தப்பட்டது. பாண்டவர்களுக்கு 5 வீடு கூட தர மறுத்து தன்னை மிகவும் தீயவன் ஆக்கிக் கொண்டான் துரியோதனன்.

    * பாண்டவர்கள் உலகில் எங்கு வாழ்வதை யும் துரியோதனன் வெறுத்தான். இந்த அளவு அதிகமான வெறுப்புணர்ச்சியே துரியோதன னுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் தீமையை ஏற்படுத்தியது.

    * அதிகம் தீய யோசனைகளைச் சொன்ன 'சகுனி'யைச் சார்ந்து இருந்தான். அவன் சொல்படியே நடந்தான்.

    * தன் நலனுக்காகவே எதனையும் செய்தான்.

    * திரவுபதி பெண்தானே. பல வீனமானவள் என தப்பு கணக்கு போட்டு மிக கீழ்தரமாய் நடந்தான். திரவுபதியின் பிறப்பு, பலம் இதனை கணிக்கத் தவறி விட்டான்.

    இந்த தீய குணங்களினால் துரியோதனன் இழந்தது ஏராளம், ஏராளம். பேராசையும், மூர்க்கத்த னமும் ஒரு சாம்ராஜ்யத்தினையே சீரழித்தது. துணிச்சல் உடைய வனாக இருந்தும் தலைமைப் பதவிக்கான தகுதிகள் இருந்தும், அனைத்து பிரச்சினைகளையும் (அவனே உருவாக்கியது ஆனா லும்) எதிர் கொண்டாலும் அவன் அழிவினை தீய குணங்களே ஏற்படுத்தின என்பதே உண்மை.

    * என்னால் முடியாது என்று சொல்வதற்கு முன் நீங்கள் அதனை முடியும் என்று சொல்ல ஏதாவது முயற்சி செய்தீர்களா?

    * காலை முதல் இரவு வரை தன் பிரச்சினை ஒன்றினைப் பற்றியே பேசுவது, நினைப்பது, புலம்புவது, பின் மறுநாளும் அதனையே தொடருவது என்ற வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமா?

    * இப்படி இதனையே நீங்கள் பேசுவதால் அதுவே உங்களிடம் வந்து விடுமாம். தேவையா இது? ஆக நல்லவற்றினை மட்டுமே நினைத்து பழகுவோமே!

    * அப்படி நினைத்தால் நீங்கள் விரும்பியதே உங்களுக்கு வரும்.

    * பயம், தயக்கம் என்று வந்து விட்டால் போதும் தோல்வி ஓடி வந்து பசை போல் ஒட்டிக் கொள்ளும்.

    *ஆக அழிவுப்பூர்வமான எண் ணங்கள் பக்கமே கூட போகா தீர்கள்.

    * எனக்கு கடவுள் எதுவுமே கொடுக்க வில்லை என்று எண்ணாதீர்கள். '10 கோடி' ரூபாய் தருகி றேன். உன் இரண்டு கால்களை யும் கொஞ்சம் வெட்டிக் கொள் என்றால் நீங்கள் சம்ம திப்பீர்க ளா? ஆக விலை மதிப் பற்ற பல பொக்கிஷங் களை இறைவன் நமக்குத் தந்துள்ளார் என்பதே உண்மை.

    * அவரவரின் முதல் எதிரி அவரது சோம்பல்தான். இருப்பதைக் கொண்டு நிறைவு காணாவிடில் வாழ்வு துக்கம் நிறைந்தது ஆகி விடுகின்றது.

    பற்றற்ற வாழ்க்கை போன்ற ஒரு சவுகரியமான வாழ்க்கை கிடையாது. ஆனால் அவ்வாறு அநேகராலும் வாழ முடிவதில்லை. தெரிந்து எந்த குற்றங்களும், அதாவது சொல், சிந்தனை, செயல் இவற்றினால் செய்யாமல் இருந்தாலே மனம் தெளிவாக இருக்கும்.

    இறைவனைத் தவிர யாரிடமும் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். கேட்கவும் வேண்டாம். அப்படி இருந்தால் உங்கள் மீது மரியாதையினையும், கவுரவத்தினையும் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும்.

    இறைவனுக்கு நம்மிடம் இருப்பதைக் கொண்டு செய்தாலே போதும். மற்றவர்களை கொள்ளையடித்து நான் இறைவனுக்கு செய்கிறேன் என்பதனை இறைவன் ஒரு போதும் ஏற்பதில்லை.

    நீலஸ் என்பவர் இளம் வயதிலேயே போர் திறமையை நன்கு அறிந்த காரணத்தினால் சோழ மன்னர் முத்தரையா என்பவரிடம் சேனாதிபதியாக பணியாற்றினார். மிகத் திறமையாக பணியாற்றியதால் முத்தரையர் நீலனை ஆல என்ற நாட்டிற்கு அரசனாகவே ஆக்கினார். இந்நாட்டின் தலைநகரம் திருமங்கை என்பதால் திருமங்கை அரசன் என்றே குறிப்பிடப்பட்டார்.

    எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து அவர்களை அழித்ததால் 'பாகாலன்' என்ற பெயர் பெற்றார்.

    திருமங்கை மன்னர் குமுதவல்லி என்ற பெண்ணை மணந்தார். அவரது மனைவியின் வேண்டுகோள்படி 1008 வைணவர்களுக்கு தினமும் விருந்து அளித்தார். இப்படி தொடர்ந்து செய்ததால் இவரது செல்வம் வெகுவாய் குறைந்தது. இருப்பினும் இவர் மனைவிக்கு அளித்த வாக்குறுதியினை விடவில்லை.

    ஆகவே கொள்ளையடித்து அதில் விஷ்ணு பக்தர்களுக்கு உணவு அளித்தார். இதனை இறைவன் விரும்புவாரா? இல்லை ஏற்றுதான் கொள்வாரா? ஓருநாள் இறைவனும், இறைவியும் மணக்கோலத்தில் அதிக நகைகளை அணிந்து கொண்டு அவ்வழி வந்தனர். மன்னரும் அவர்களது நகைகளை கொள்ளையடித்து மூட்டைகளாகக் கட்டினார்.

    ஆனால் என்ன ஆச்சரியம்? அந்த மூட்டைகளை அவரது ஆட்களால் நகர்த்தக் கூட முடியவில்லை. கோபம் அடைந்த திரு மங்கை மன்னர் மணமகனாக இருந்த திரு மாலைப் பார்த்து 'நீ ஏதோ மந்திரம் செய்துள் ளாய்? அந்த மந்திரத்தினை உடனடியாக சொல். நான் இந்த மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் மன்னர்.

    திருமால் மன்னரை அருகே வருமாறு அழைத்தார். மன்னன் காதில் ரகசியமாக "நாராயணா" என்றார். அதனை உச்சரித்த வுடன் மன்னன் தெளிவு பெற்றான். தன் தவறுகளை உணர்ந்து திருந்தினான்.

    திருமாலும், மகாலட்சுமியும் மன்னனுக்கு காட்சி அளித்தனர். மன்னன் அனைத்தினையும் துறந்தான். திருமாலை பாடி துதித்து திருமங்கை ஆழ்வார் என்றும் ஆனார்.

    இந்த கதை உணர்த்துவது என்ன? இறைவனுக்கே என்றா லும் இறைவன் திருட்டினை ஏற்ப தில்லை. அப்படியிருக்க சுய நலத்திற்காக திருடி விட்டு சாமிக்கும் நான் ரூ.100 பூ வாங்கி னேன் என்று கூறுவது பாவமே. இறைவன் அதனை ஏற்பதில்லை என்பதே உண்மை.

    பெரிய தவறு செய்பவர்க ளுக்கும் திருந்த இறைவன் வாய்ப்பு தருகின்றார்.

    ராவணனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் அதிகம். "இன்று போய் நாளை வா" என்று கூட வாய்ப்பு கிடைத்தது. ராவணனால் தன்னை மாற்றிக் கொள்ள முயலவில்லை.

    கர்ணனுக்கும் கிருஷ்ணன் அனைத்தையும் விளக்கினார். 'செஞ்சோற்று கடன்' என்பதற்காக கர்ணன் தவறு எனத் தெரிந்தும் துரியோதனன் பாதையில் சென்றான்.

    பெற்ற மகனான பிரகலாதனை வெகு காலம் ஹிரண்யன் கொடுமை செய்தான். இறுதியில் இறைவன் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனை அழித்தார்.

    துரியோதனனுக்கு கிருஷ்ணன் 'ஸ்ரீமன் நாராயணனே' என்று நன்கு தெரிந்தும் தன்னை திருத்திக் கொள்ள முயலவில்லை. ஆனால் அர்ஜுனனோ சரணாகதி வழியில் கிருஷ்ண னிடம் வந்தான்.

    முதலில் நம் பெற்றோர் சொல்வதை பெரியோர் சொல்வதை, ஏற்க, செயல்பட கற்க வேண்டும். பல கர்மாக்கள் நம்மை சேராமல் அவர்கள் அறிவுரையே நம்மை காப்பதற்கு அரணாக நிற்கும்.

    எத்தனை முறை எழுதினாலும், எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் ஞாப கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய சில வரிகளை நாம் பார்ப்போம். இவை களை நடை முறைப்படுத்தா விட்டால் இன்றி ஒரு வர் தன்னுள் ஒளி யினைத் தேட முடியாது.

    * அதிக அழி வுப்பூர்வமான சிந்தனை, செயலில் இருப்பவர்கள் உட னடியாக அதனை விட்டு வெளிவர வேண் டும். இது ஒரு சுழல். ஒருவரை அழித்து விடும்.

    * காலை முதல் மாலை வரை புளி மூட்டை போல் அசையாது அமர்ந்தே இருப்பது கொடுமையான தற்கொலைக்குச் சமம்.

    * அதிக மது அருந்துதல். இதன் தீங்கினை சொல்லாதவர்கள் இல்லை.

    * உடற்பயிற்சி அன்றாடம் 20 நிமிடமாவது அவசியம். * சூரிய ஒளியினை உங்கள் உடலும், ஆத்மாவும் பெற வேண்டும்.

    * அதிக சர்க்கரை, அதிக உப்பு இவை ஒருவர் அவரே அவரது ஆயுளை குறைத்துக் கொள்ளும் பாதை.

    * உணவில் ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லையெனில் ஒருவர் வரும் புலன்களை கட்டுப்படுத்துவது கடினம்.

    * செல்போனிலேயே வாழ்க்கையை செலவிடுபவர் தன் வாழ்வினை வீணடிக் கின்றார்.

    * கோபம், எரிச்சல், முரட்டுத்தனம் இவை ஒருவரை அழிக்கும் ஆயுதங்கள்.

    * சற்று ஓய்வு, பொழுது போக்கு அவசியமே.

    * சுத்தமான ஆடை அணிவது அவசியம்.

    * எப்போதும் சோர்ந்த, பலவீனமான முகம் வெற்றி தராது.

    * ஒருவரை நேருக்கு நேர் பார்த்து பேச வேண்டும். உங்களது கம்பீரம் உயரும்.

    * நிதானமாய், தெளிவாய், கூச்சலின்றி பேச வேண்டும்.

    * பசியோடு அதிக நேரம் இருப்பது கடினம்தான். சேமிப்பு என்பதும் கடினம்தான்.

    நல்ல புத்தகங்களை படிப்பது கடினம்தான். இந்த கடினத்தினை நாம் பின்பற்றினால் வெற்றி நமக்குதான்.

    • எப்படி நடிப்பது என்ற தயக்கம் மனதிற்குள் இருந்தது.
    • பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்ட பிறகு தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    அம்மனாக உங்கள் அழகு மீனா...

    கொஞ்சம் யோசித்து பாருங்கள்... துள்ளித்திரியும் இளம் வயதில் மாடல் உடைகளில் கலக்கிய காலம். காதல், டூயட், ஆட்டம், பாட்டம் என்று திரை களத்தில் கலக்கி கொண்டு இருந்த நேரம். திடீரென்று அம்மன் வேடத்தில் என்னை கொண்டு நிறுத்தினால் எப்படி இருக்கும்....?

    உண்மையிலேயே அப்படி நிறுத்தியும் விட்டார் டைரக்டர் ராமநாராயணன் சார். அந்த காலக்கட்டத்தில் பக்தி படங்களை எடுப்பதில் அவர் வல்லவர் மட்டுமல்ல, அந்த படங்கள் மூலம் மக்களை கவர்ந்தவர். 'பாளையத்தம்மன்' என்ற படத்தில் பாளையத்து அம்மனாக என்னை நடிக்க கேட்டார்கள்.

    அந்த படத்தின் கேமராமேனாக பணியாற்றியவர். விஸ்வநாதன் சார். அவரிடம் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே பல படங்களில் நடித்திருக்கிறேன். அதனால் என் மீது அதிக அக்கறை கொண்டவர். அந்த படத்திற்கு என்னை தேர்வு செய்வதாக பேச்சு எழுந்த போதே மீனா நம்ம பொண்ணாச்சே. சூப்பரா இருக்கும் என்று அவரும் சொல்லியிருக்கிறார்.

    ஆக, படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். ஆனால் எனக் குத்தான் என்னையும் அறியாமல் ஒரு விதமான பயம் மனதில் எழுந்தது. குடும்ப பாங்கான கதைகள், காதல் கதைகள், நகைச்சுவை, சோகம் என்று பலதரப்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடிக்க தெரியும். கடவுள் வேடத்தை போட்டுக்கொண்டு எப்படி நடிப்பது என்ற தயக்கம் மனதிற்குள் இருந்தது.

    எப்படி இருந்தாலும் ஒத்துக்கொண்டாயிற்று. இனி நடித்து தானே ஆக வேண்டும்...? அதற்கா கவே அந்த காலங்களில் பக்தி படங்களில் அம்மன் வேடங்களில் எல்லோரையும் கவர்ந்த கே.ஆர்.விஜயா அம்மா, நவராத்திரியில் சாவித்திரி அம்மா ஆகியோர் நடித்த படங்களை பார்த்தேன். அந்த படங்களில் தலையில் அம்மன் கிரீடத்தையும் சுமந்த படி கையில் திரிசூலம் போன்ற ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு எப்படி நடித்திருக்கிறார்கள்? அவர்கள் உடல் அசைவுகள், முக பாவனைகள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து கற்றுக் கொண்டேன். அதன் பிறகு தான் படப்பிடிப்புக்கு தயாரானேன்.

    இருந்தாலும் சாமி படமாச்சே ஏனோ தானோ என்று இருந்து விடக்கூடாது என மனதிற்குள் முடிவெடுத்து அந்த படத்தில் அம்ம னாக நடிப்ப தற்காக விர தமும் மேற் கொண்டு இருந்தேன். தினமும் அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்ட பிறகு தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    சிக்கன், மட்டன் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அந்த படத்தில் நடிக்கும் போது அசைவ உணவை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன். சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டேன். படப்பி டிப்புக்கான நாளும் வந்தது. மதுரையில் படப்பிடிப்பு.

    மேக்-அப் போட தயாரா னார்கள். முற்றிலும் மாறுபட்ட மேக்-அப். அம்மன் வேடத்துக்கான பட்டு சேலையை பரத நாட்டிய உடைபோல் அணிந்து இடுப்பில் பெரிய ஒட்டி யாணம் அணி வித்தார்கள். முகம், கைகள், காலில் பச்சை வர்ணம் பூசி னார்கள். தலையில் பெரிய கிரீட த்தை அணி வித்தா ர்கள். அதை அணி விப்பதற்கு முன்பு சரியாக பொருந்துவதற்காக தலையில் இன்னொரு கவசமும் உண்டு.

    தலையில் அணிவித்த கிரீடத்தை ஷூட்டிங் முடியும் வரை சுமார் 4 மணி நேரம் அகற்ற முடியாது. படப்பிடிப்பு தொடங்கியது. வெயில் காலம் வேறு. லேசாக வியர்த்ததும் முழங்கைகள், கழுத்து சுருக்கங்களில் பச்சை கலர் அழிந்து வெள்ளையாக சரும கலர் தெரியும். உடனே அதை 'டச்சப்' செய்வார்கள். இதுவே பலமுறை நடக்கும். நான் நடித்த முதல் பக்தி படம் 'பாளையத்து அம்மன்' தான். இந்த படம் மறக்க முடியாத பல அனுபவங்க ளையும் கொடுத்தது.

    அம்மனாக நடித்ததால் பேசுவது, பார்ப்பது, நடப்பது, உடல் அசைவுகள் எல்லாமே முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

    அதற்காக கடுமையான முயற்சி யும், பயிற்சியும் தேவைப்பட்டது.

    ஸ்கூலுக்கு போகும் போது தேர்வு நாளில் கடவுளே, கேள்விகள் எளி தாக இருக்க ணும். பரீட்சை நல்லா எழுதனும் என்று வேண்டிக் கொள்வது போலவே நானும் தினமும் வேண்டு கோள் வைக்க தவறியதில்லை.

    எந்த தப்பும் நடந்து விடக் கூடாது. எல்லா காட்சியும் நன்றாக வர வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொண்டு தான் செல்வேன். பொதுவாக ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சி எடுத்து முடிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும். ஆனால் இந்த படத்தில் ராமநாராயணன் சார் திட்டமிட்டு ஒரு மணி நேரம் கூட வீணாகாதபடி ஷூட்டிங்கை நடத்தினார்.

    தினமும் காலையில் மேக்-அப் போட்டுக் கொண்டு செட்டுக்கு வந்ததில் இருந்து 3 முதல் 4 மணி நேரம் தான் படப்பிடிப்பு நடக்கும். அப்படி 3 நாட்களிவ் ஒரு பாடலை படமாக்கி விட்டார்.

    மூன்று விதமான கெட்-அப்பில் நடித்தேன். பாளை யத்து அம்மன் முகம் பச்சை வண்ணத்தில் இருக்கும். கருமாரி அம்மன் முகம் கருப்பு வண்ணத்தில் இருக்கும்.

    முக்கியமாக அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அட்சயாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ரொம்ப க்யூட்டான குழந்தை. பேச வேண்டிய டய லாக்குகளை கூட படித்து அழகாக பேசுவாள். நான் சின்ன குழந்தையாக இருந்தபோது எப்படி இருந்தேனோ அதே போல் அவளும் இருநததால் எனக்கு அவளை ரொம்பவே பிடித்து போய் விட்டது.

    இதனால் அவளுடன் நடிக்கும் போதும், பேசும் போதும் உற்சாகமாக இருக்கும். அதே போல் 'வேப்பஞ் சேலை' நேர்த்திக்கடன் பற்றியும் கேள்விப் பட்டிருந்தேன். இந்த படத்தில் தான் அது எவ்வாறு நிறை வேற்றப்படுகிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

    அப்படியே அம்மனாக நடந்து செல்லும் போதெல்லாம் பின்னணி யில் அதிரும் இசையோடு

    திரிபுரசுந்தரி நீ

    பவ தாரணி நீ

    திரிசூலினி நீ

    அசுரசம்ஹாரினி நீ... என்று வரும் பாடல் வரிகள் அப்ப டியே திரையில் அதிர வைக்கும்... நிஜ மாகவே அதிர வைத்த சம்பவங்க ளுடன் அடுத்த வாரம் வருகிறேன்....

    தொடரும்...

    • வாழ்க்கையில் வரும் துன்பங்களும் முட்டுக்கட்டைகளே.
    • வாழ்க்கை என்றாலும் உண்மையில் இன்பம் பாதி! துன்பம் பாதி!

    துன்பத்தைத் துணையாகக் கொண்டு இன்பத்தை அடைய முடியுமா? என்பதைத் தெரிந்துகொள்ளக் காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்!.

    "மேடு பள்ளங்களும் வளைவு நெளிவுகளும் இல்லாத பாதை உலகத்தில் இல்லை; அதேபோல இன்ப துன்பங்களும் கஷ்ட நஷ்டங்களும் இல்லாத வாழ்க்கை மனிதர்க்கு இல்லை!". இந்த வாசகத்தை நாம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை என்றாலும் உண்மையில் இன்பம் பாதி! துன்பம் பாதி! எனக் கலந்ததாக வாழ்க்கை அமைந்திருக்கிறது?. இல்லையே! துன்பம் பெரும்பகுதி! இன்பம் அதில் சிறுபகுதி! எனவல்லவா கலவை விகிதாசாரமற்றவையாக இருக்கிறது! என்று நம்மில் பெரும்பாலோர் புலம்புவதும் காதில் ஒருபக்கம் விழத்தான் செய்கிறது.

    'இன்னாது அம்ம இவ்வுலகம்!' என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே நமது சங்கச் சான்றோன் தெளிவாகவே குறித்துவிட்டான்; இந்த உலகம் துன்பமயமானது தான். இருளும் ஒளியும் மாறிவரும் உலகில் இருட்டு நிரந்தரமா? ஒளி நிரந்தரமா? என்ற கேள்வியை அறிவியல் பூர்வமாகக் கேட்டுப் பார்த்தால், இந்த உலகில் இருட்டே நிரந்தரமானது என்பது விளங்க வரும். பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் வந்து, இயன்ற அளவுக்கு பூமியின் பக்கங்களில் ஒளியைப் பாய்ச்சி வெளிச்சப்படுத்தப் பார்க்கின்றன. நாமும் முடிந்த அளவுக்குப் பல்வகையான விளக்குகளை உருவாக்கி இருளை விரட்ட முயற்சிக்கிறோம்.

    ஆனாலும் இருளே வலிமையானது. 'விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல்' என்று குறளாசான் குறிப்பிடுவதைப் போல, வானத்தில் வலம்வரும் இயற்கை விளக்குகளாயினும் மனிதர் ஏற்றிவைக்கும் பல்வகைச் செயற்கை விளக்குகளாயினும் அவை எப்போது அணைந்து மறையும்? எனத் தக்க நேரம் பார்த்துப் பரவுவதற்காக இருள் எப்போதும் காத்திருக்குமாம். அவ்வகையில் இருளைப் போன்றவை மனிதர்க்கு வரும் துன்பங்கள்; அதே போல வெளிச்சத்தைப் போன்றவை அவர் அனுபவிக்கும் இன்பங்கள்!.

    அப்படியானால் உலகில் இருள் நிரந்தரமானது என்பதைப் போல மனித வாழ்க்கையில் துன்பமும் நிரந்தரமானது என்று முடிவுக்கு வந்துவிடலாமா?. அப்படி வந்துவிட்டால் துன்பத்தை வைத்துக் கொண்டு இன்பம் உருவாக்குவது எப்படி?. பள்ளத் தாக்குகளுக்குள் நின்றுகொண்டு சிகரங்களை எட்டிப் பிடிப்பது எப்படி? வேப்பிலைச் சாற்றினைத் தேன்சுவைச் சாரலாக்குவது எப்படி?. சுவையான சவால் தான்.

    ஒரு பெரிய காட்டை ஓர் இளைஞன் நடந்து கடந்து கொண்டிருந்தான். நண்பகல் நேரம்; பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது; நடுக்காட்டில் பசியமர்த்த என்ன உணவு கிடைக்கப் போகிறது?. கடும் பசியோடு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தான். பாதையோரத்தில் ஒரு பெரிய மாமரம் தென்பட்டது; அருகில் சென்று பார்த்தால், மரத்திலேயே பழுத்துப், பெரும்பெரும் மாம்பழங்கள் சடைச் சடையாய்த் தொங்கிக் கொண்டிருந்தன.

    விறுவிறுவென மரத்தில் ஏறினான்; பழங்களைப் பறித்து மரக்கிளையில் அமர்ந்தவாறே சாப்பிடத் தொடங்கினான். பசி தணிந்தபாடில்லை; உயரே உயரேயுள்ள கிளைகளில் நல்ல சுவையான மாம்பழங்கள் இருந்ததால், கிளைவிட்டுக் கிளைதாவி, மேலே மேலே ஏறி , உச்சியிலுள்ள நுனிக் கிளைக்குச் சென்றுவிட்டான். அங்குள்ள பழங்களைப் பறிக்க முற்படும்போது, இவனது எடை தாங்கமுடியாமல் நுனிக்கிளை முறிந்து கீழே விழத் தொடங்கினான். மரம் பெரிய மரமாக இருந்தபடியால் கீழே இடையில் இருந்த மரக்கிளையில் சிக்கினான்.

    அந்த மரக்கிளையைக் கெட்டியாப் பிடித்துத் தொங்கிக் கொண்டே கீழே பார்த்தான்; தரை ரொம்ப தூரத்தில் இருந்தது. அங்கிருந்து கீழே குதித்தால் பெரிய அடியாக விழுந்து காயங்கள் ஏற்படும்; நுனிக்கிளையிலிருந்து மேலே உள்ள கிளைக்கு ஏறிச் செல்லவும் முடியாது; .யாராவது கீழே செல்பவர்கள் பார்த்து மரத்தில் ஏறிவந்து காப்பாற்றினால்தான் உண்டு. "யாராவது காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! மரக்கிளை யில் மாட்டித் தொங்கிக் கொண்டிருக்கிறேன்!" என்று பலம்கொண்ட மட்டும் குரலெடுத்துக் கத்திப் பார்த்தான். அப்படியே மயங்கிப் போனான்; மயக்கத்தில் இருந்தாலும் மரக்கிளைப் பிடிமானத்தை மட்டும் விடவேயில்லை.

    அப்போது அந்த வழியாகச் சென்ற பெரியவர் ஒருவர், மரத்தில் மயங்கித் தொங்கிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தார்; வயதானவர் என்பதால், அவரால் மரத்தில் ஏறமுடியாது. யோசனை செய்தார். கீழேகிடந்த ஒரு கல்லை எடுத்து தொங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞனைக் குறிபார்த்து எறிந்தார். படக்கென்று விழித்துக்கொண்ட இளைஞன் கீழே பார்த்தான்.

    அந்தப் பெரியவர் மற்றொரு கல்லை எடுத்து, மீண்டும் இவன்மீது எறியக் குறிபார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கல் தன்மீது படுவதற்குள் தப்பித்துவிட வேண்டும் என நினைத்த இளைஞன், தொங்கிக் கொண்டிருந்த கிளைக்கு மேலிருந்த கிளையை முயன்று பற்றினான்; அதற்குள் அவரது இரண்டாவது கல்லும் அவன்மீது சுரீரெனப் பட்டது. பிடிபட்ட கிளையைப் பற்றி வசதியாகக் கீழே இறங்குவதற்கு வழிபார்த்தான் இளைஞன். அப்போது பெரியவர் மூன்றாவது கல்லையும் இளைஞனை நோக்கி எறிந்தார்; எறி வாங்கிக்கொண்டே விறுவிறு எனக் கீழிறங்கி வந்துவிட்டான் இளைஞன்.

    கீழே வந்தவுடன் பெரியவரைப் பார்த்து இளைஞன் கேட்டான்,''ஐயா! மரத்தில் தொங்கி ஆபத்தில் இருந்த என்னை மரமேறி வந்து காப்பாற்றுவீர்கள் என்று பார்த்தால், நீங்கள் என்ன என்மீது கற்களை எறிந்து காயப்படுத்தப் பார்க்கிறீர்கள்?".

    "தம்பி! நான் வயதானவன். என்னால் மரத்தில் ஏறிவந்து உங்களை மீட்டெடுக்க முடியாது. நான் கற்களைக்கொண்டு உங்கள் மீது வீசியதுகூட உங்களைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான். அப்படி உங்கள்மீது நான் கற்களை வீசவில்லையென்றால் நீங்கள் விழித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்!; இப்படி முயற்சியெடுத்து மேற்கிளையைப் பற்றிக் கீழே இறங்கி வந்திருக்கவும் மாட்டீர்கள்!" என்றார் பெரியவர்.

    கல்லால் எறிவது ஒருவிதமான துன்புறுத்தல் தான் என்றாலும், இளைஞன் மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழ்நிலையில், அந்தத் துன்புறுத்தலும் அவனை விடுவிப்பதற்கான ஒருவிதமான இன்ப வைத்தியம் போலத்தான் அமைந்துவிட்டது.

    அந்த இளைஞன் மரக்கிளையைப் பற்றிக்கொண்டு மயங்கிக் கிடந்தபோது அவனது மூளை உறைந்து விட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையற்ற வனாகிவிட்டான். அவன் மீது பட்ட முதல் கல்எறி அவனை விழிப்படையச் செய்தது. இரண்டாவதாகப் பட்ட கல்எறி அவனிடமிருந்த அச்சத்தைப் போக்கித் துணிச்சலை உண்டாக்கியது. மூன்றாவது பட்ட கல் எறி அவன் மனத்தில் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தை உருவாக்கித் தப்பிக்கச் செய்துவிட்டது.

    பாசிபடர்ந்த குளத்தில் தொடர்ந்து கற்களை எறிய எறியப், பாசம் அகல்வதுபோல நம்மீது தொடர்ந்து நடத்தப்படும் துன்பக் கல்வீச்சுக்களும் நம்மை மேம்படுத்துவதற்காகவும் இருக்கலாம். தாங்கிக் கொள்வதும், அதற்கேற்பச் செயல்முறைகளைத் தகவமைத்துக் கொள்வதும் நம்மை மேலும் சிறப்பாக்கலாம்.

    துன்பங்கள் தொடர்ந்து வந்து எழமுடியாத அளவுக்குத் துன்புறுத்தினாலும், சிலர் அதிலேயே சுகம்கண்டு போய்ச் சுருண்டு கிடப்பார்கள். துன்பங்களை எதிர்க்க முதலில் நமக்குப் பதற்றமில்லாத பொறுமை தேவை; வலிதாங்கு வதே வாழ்க்கை என்பதை உணர வேண்டும். அப்போதுதான் துன்பம் நாடி, துன்பத்திற்கான மூலத்தை நாடி, அதைத் தணிக்கும் வழியைக் கண்டு பிடித்து, வாய்ப்பாகச் செய்து வெல்ல முடியும்.

    பொறுமைக்கு அடுத்து நமக்குத் தேவைப்படுவது தீர்மானமாக முடிவெடுத்துச் செயல்படுத்தும் திறமை. மூன்றாவதாக முத்தாய்ப்பாகத் தேவைப்படுவது எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் நியாயத்தின் பக்கமே நின்று போரிடும் நேர்முறைத் தன்மை. பொறுமை, தீர்மானமாக இயங்கும் வைராக்கியம், நேர்முறைத் தன்மை ஆகிய இவை மூன்றுபோதும் எவ்வகைத் துன்பத்தையும் வல்லமையோடு எதிர்த்து நின்று வெல்வதற்கு.

    வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரேமாதிரி துன்பங்கள் வருவதில்லை; வந்தவருக்குக்கும் ஒரேமாதிரி துன்பங்கள் திரும்பத் திரும்ப வருவதில்லை. வந்த துன்பமே திரும்பத் திரும்ப வந்தால் துன்பமும் சலித்துப்போகும்; வாழ்க்கையும் புளித்துப்போகும். புதிதுபுதிதாகத் துன்பங்கள் வருவதைச் சிலர் ஆர்வத்தோடு வரவேற்பதைப் பார்த்திருக்கிறேன். அப்போது தான் அவற்றைத் தீர்ப்பதற்குப் புதிதுபுதிதாக வழிமுறைகள் காணமுடியும் என்றும், அறிவுக்கு அது சவாலாக இருப்பதாகவும் கூறி மகிழ்கின்றனர்.

    'காலா! வாடா! உன்னைக் காலால் உதைக்கிறேன் வாடா!' என்று மகாகவி பாரதி, எமனையும் வரவேற்று வெல்லத் துடிக்கிற கவிதை துன்பத்தில் உழல்கிற எல்லாருக்கும் உத்வேகம் தருகிற கவிதை. மரணத்தை விடவா பெருந்துன்பம் இருந்துவிடப் போகிறது?.

    வருகிற துன்பம் பெரியதோ சிறியதோ அதனை ஏற்கமறுத்துப் புறக்கணிக்கக் கூடாது; அதற்காக அதற்குள்ளேயே வாழவும் பழகிவிடக்கூடாது. துன்பம் வாழ்வின் ஓர் அங்கம் என இயல்பாய் ஏற்றுக்கொண்டு, அதனை வெல்வதற்கான தீர்வுகளைக் காண்பதிலேயே மனத்தைக் கூர்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். துன்பம் தொடராகவோ அல்லது பெரியதாகவோ தோன்றினால், அவற்றைச் சிறுசிறு பகுதிகளாகப் பகுத்துப், பகுதி பகுதியாக வெல்வதற்கான வழிமுறைகளை உருவாக்கி வெற்றி காணலாம்.

    துன்பம் யாருக்கும் தனித்து வருவதில்லை: ஒருவர் மூலமாகவும் வருவதில்லை; பலர் வழியாகப், பலரூபங்களில் துணைகளோடு துன்பங்கள் துரத்திக்கொண்டு வரலாம். அதனால் அவற்றைத் தனியராக நின்று வென்றுவிடுவோம் என்று யாரும் எண்ணிவிடவும் கூடாது. குடும்பத்தினர், நண்பர்கள், அலுவல்புரியும் இடத்தின் சக பணியாளர்கள், அரசாங்கத்தினர் எனப் பலருடைய துணை களையும் கூட்டிக்கொண்டு, துன்பம் அகற்றப் பாடுபடவேண்டும். சிலவேளைகளில் நமது துன்பங்களை அகற்றுவதற்கு நமது எதிரிகள்கூட நமக்கு உதவிசெய்திட நேரிடலாம்.

    அனுபவங்கள் என்பவை பெரும்பாலும் துன்பத்தை அனுபவித்து அதிலிருந்து வெளியேறிய தருணங்களாகவே இருக்கும். அந்த வகையில் புதிதாக வரும் துன்பத்தினை விரட்டுவதற்குப், பழைய அனுபவங்கள் கூட நல்ல ஆசிரியனாக அமையலாம்.

    துன்பங்கள் நம்மைப் புடம்போடுகின்றன. வாழ்க்கையில் ஒரே மாதிரியான பயணத்தைத் தவிர்த்துப் புதியதான புத்துணர்வு வழிகளை ஏற்படுத்திக்கொள்ள இக்கட்டுக்களே நம்மை திசைதிருப்பி விடுகின்றன.

    திருக்கோயில் தேரை நேர்வழியில் நகர்த்துவதுவதற்கும், விரும்பிய திசைகளில் திருப்புவதற்கும் அவ்வப்போது அடிப்பகுதியில் ஒரு கட்டையைப் போட்டு மாற்றிவிடுவர். அந்த கட்டைக்குப் பெயர் 'முட்டுக் கட்டை'. வாழ்க்கையில் வரும் துன்பங்களும் முட்டுக்கட்டைகளே!. அவற்றைப் பொறுமை யோடும், நேர்முறைச் சிந்தையோடும், வெற்றிகாண்டுவிடலாம் என்கிற தீர்மானச் சிந்தையோடும் எதிர்கொண்டால் வாழ்க்கையில் எப்போதும் வளமே!.

    துன்பங்களையே துணையாகக் கற்றவர்க்கு எந்நாளும் இன்பமே.

    தொடர்புக்கு 9443190098

    • சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
    • கனிவான கண்டிப்பும், மறைமுகமான பாசமும் தந்தையின் அடையாளமாக விளங்குகின்றன.

    'அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம். இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்', 'அன்புக்கு அன்னை, அறிவுக்கு தந்தை' எனவும் கவிஞர் கண்ணதாசன் தமது உயரிய வரிகளால் இதனை சுட்டி காட்டி உள்ளார். தாயின் கர்ப்பகாலம் 10 மாதம். ஆனால் தந்தையோ அந்த குழந்தை சொந்தக் காலில் நிற்கும் வரை சுமை தாங்கியாக இருப்பார். 'தான் பட்ட கஷ்டம்', என் பிள்ளையும் படக்கூடாது என்று அனுதினமும் உழைப்பவர் தந்தை. தமது குடும்பம் யாரிடமும் கையேந்தக் கூடாது என்பதற்காக குடும்பத்திற்காக உழைத்து, ஓடாய் தேயும் தந்தையின் தியாகமும், அவர் படும் வேதனைகளும் வெளியே தெரியாது. துன்பத்தின் சாயல் தம்பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தன் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள் பலர் உள்ளார்கள்.

    அமெரிக்காவில் 1909-ம் ஆண்டு சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற பெண், அன்னையர் தினம் கொண்டாடுவது போல், தந்தையர் தினமும் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார். அவருடைய தாயாரின் மறைவுக்குப் பின், தந்தை வில்லியம் 6 குழந்தைகளை கொண்ட குடும்பத்தை சிரமங்களுக்கு இடையே வளர்த்து ஆளாக்கினார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை லூயிசுக்கு ஏற்படுத்தியது. இதன்படி 1910-ம் ஆண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1972-ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. 

    பத்து மாதம் சுமக்க முடியவில்லை என்பதால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தந்தையானவர், தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார். அப்பேர்பட்ட தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையார் தினம் ஜூன் 3-வது ஞாயிற்றுக்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது.

    சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இந்த தினத்தின் நோக்கமாகும். அம்மாக்களை போல, அப்பாக்களுக்கு பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது. கனிவான கண்டிப்பும், மறைமுகமான பாசமும் தந்தையின் அடையாளமாக விளங்குகின்றன.

    சிறு வயதில், தாய் தந்தையரின் கை விரலைப்பிடித்து தத்தித் தத்தி நடக்க பழகும் குழந்தைகள், தங்களது பெற்றோரின் முதுமை காலத்தில், அவர்களின் நடை தளரும்போது, கையை பிடித்து நடக்க உதவுவதுதான், தாய் தந்தைக்கு திரும்ப செலுத்தும் மரியாதையாகும். அதற்கான உறுதியை இன்றைய தந்தையர் தினத்தில் அனைவரும் ஏற்க வேண்டும். ஒவ்வொரு வரும் தங்களது தந்தைக்கு இன்று வாழ்த்து தெரிவிப்பதைவிட, அவரிடம் வாழ்த்து பெறுவோம்.

    • பிள்ளையின் சமகாலத்தில் வாழ்ந்தவர் தாண்டவராயத் தம்பிரான் என்ற பெரியவர்.
    • தமிழின் பரந்த இலக்கியப் பரப்பில் பிள்ளைக்கு இணையாகச் செய்யுள்களை எழுதிக் குவித்தவர்கள் யாருமில்லை.

    உ.வே.சாமிநாதய்யருக்குத் தமிழ் கற்பித்த குரு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. தமிழ்த் தாத்தாவுக்கே ஆசிரியரான இவர் `தலபுராண வேந்தர்' என்று போற்றப்படும் பெருமை உடையவர்.

    கடல்மடை திறந்ததுபோல் கவிதைகள் சொல்லும் ஆற்றல் படைத்த இவர் கவிஞர்களின் கவிஞர் என அழைக்கப்பட்டார்.

    எழுத்தெண்ணிப் பாடவேண்டிய கட்டளைக் கலித்துறை என்ற இலக்கண வகையில் கூட, தங்குதடையில்லாமல் கவிசொல்லும் தமது அபாரத் திறமை காரணமாக `கவிக்காவிரி` என்ற பட்டம் பெற்றவர்.

    எண்ணற்ற ஆலய வரலாறுகளை ஆராய்ந்து தலபுராணங்களை அழகிய செய்யுள்களில் எழுதிக் குவித்தவர். தங்கள் ஊர் ஆலயம் குறித்தும் இவர் தலபுராணம் எழுதித் தரவேண்டும் என்ற வேண்டுகோள்கள் இவர் வாழ்நாள் முழுவதும் இவருக்கு வந்த வண்ணமாகவே இருந்தன.

    பல சைவத் திருத்தலங்களில் குடிகொண்ட இறைவன், இவர் மூலமாகத் தனக்கான தலபுராணங்களை எழுதுவித்துக் கொண்டான் என்பதே சரி.

    சிதம்பரம் பிள்ளைக்கும், அன்னத்தாச்சி அம்மையாருக்கும் 6.4.1815 அன்று மகனாகப் பிறந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழில் அதிக எண்ணிக்கையில் செய்யுள் நூல்கள் எழுதியவர் என்ற வகையில் வரலாற்றில் பதிவானவர்.

    குசேலோபாக்கியானம் என்ற செய்யுள் நூலைப் பிள்ளையவர்களும் அவருடைய மாணவர் தேவராச பிள்ளையும் இணைந்து இயற்றினார்கள் என்று சொல்வ துண்டு. ஆனால் மற்ற ஏராளமான நூல்கள் இவர் மட்டுமே எழுதிக் குவித்தவை.

    கையில் ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, தனக்குக் கவியெழுச்சி வரும்போதெல்லாம் உடனடியாக எந்த இடமானாலும் அங்கு அமர்ந்து கவிதைகள் எழுதியவர்.

    தொண்ணூறுக்கும் மேற்பட்ட தலபுராணங்களைச் செய்யுள் வடிவில் எழுதிய இவர், உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் போன்ற பல வடிவங்களிலும் நூல்கள் இயற்றியுள்ளார்.

    இவரது காந்திமதியம்மைப் பிள்ளைத் தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ், முருகன் பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் போன்ற நூல்கள் பெரும்புகழ் பெற்றவை. (உண்மையில் மீனாட்சி சுந்தரம் `பிள்ளை` எழுதிய எல்லா நூல்களுமே ஒருவகையில் `பிள்ளைத் தமிழ்' தானே!)

    சேக்கிழார் பிள்ளைத் தமிழில் இவர் எழுதிய `பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ!' என்ற தொடர் பின்னாளில் பெரும்புகழ் பெற்றுப் பலராலும் எடுத்தாளப்பட்டது.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்


    `திருவாவடுதுறை ஆதீனத்துக் குருபரம்பரை அகவல், திருக்குடந்தை திரிபந்தாதி` போன்ற இவரது நூல்களும் பலராலும் பயிலப்படுபவை. `அம்பலவாண தேசிகர் கலம்பகம், வாட்போக்கிக் கலம்பகம்' போன்ற நூல்களாலும் இவர் பெருமை உயர்ந்தது.

    பிள்ளை தமது அழகிய புத்தம்புதிய கற்பனைகளால் பக்தி இலக்கியத்தைப் பெரிதும் வளப்படுத்தியவர்.

    அசதியாடல் என்ற வகையில் சிவபெருமான்மேல் வஞ்சப் புகழ்ச்சி அணியாகப் பல செய்யுள்களைத் தீட்டியுள்ளார். `திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை'யில் இவர் எழுதியுள்ள ஒரு பாடலில் வரும் கற்பனை நயமானது.

    நூறு செய்யுள்களை உடைய அந்நூலில் `விழியிடந்தப்பி மகவரிந்தூட்டி` என வரும் பாடலில் தாம் ஏன் சிவனைச் சரணடையாமல் அகிலாண்ட நாயகியைச் சரணடைய நேர்ந்தது என்பதை விளக்குகிறார்.

    இயற்பகை நாயனார், சிறுத்தொண்டர், கண்ணப்பர் வரலாற்றுச் செய்திகளையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறார்.

    `மனைவியை விட்டுக்கொடுக்க என்னால் இயலாது, பிள்ளைக்கறி சமைக்கப் பிள்ளையைத் தரவும் இயலாது, என் கண்ணை இழக்கவும் என் மனம் இடம்தராது, இப்படியெல்லாம் செய்தால்தான் உன் கணவன் சிவன் அருள் புரிவான்.

    ஆனால் நீ இதுபோன்ற செயல்களை எதிர்பார்ப்பவள் அல்லவே? எனவே உன்னைச் சரணடைந்தேன். என் நிலைமை குறித்து நீ உன் கணவன் சிவனிடம் சொன்னால் அவன் கட்டாயம் கேட்பான், எனக்காகப் பரிந்துரை செய் தாயே!` என தமிழ்நயம் கொஞ்சக் கொஞ்சத் தாயிடம் வேண்டுகிறார் பிள்ளை.


    பிள்ளையவர்களின் இன்னொரு கற்பனை வியக்க வைக்கிறது. சிவபெருமான் திருநீறணிய, அந்தத் திருநீற்றின் துகள் பாம்பின் கண்ணில் சிறிது விழுந்து விட்டதாம். அதனால் அது சீறியதாம். பாம்பு ஏன் சீறுகிறது என்றறிய விழித்துப் பார்த்ததாம் நெற்றிக் கண்.

    அடடா. நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட நெருப்புப் பொறி பிறை நிலவின் மேல் அல்லவா பட்டுவிட்டது! அமுதைப் பொழியும் பிறைநிலவு சற்று உருகத் தொடங்கிவிட்டதே?

    பொன்னார் மேனியன் புலித்தோலை அல்லவோ இடுப்பில் கட்டியிருக்கிறான்! அந்த அமுதத் துளி, புலித்தோல் மேல் படுகிறதே! அமுதம் பட்டால் புலித்தோல் வெறும் தோலாகவா இருக்கும்? அமுதத்தால் அதற்கு உயிர் கிட்டிவிடுமே? எனவே புலித்தோல் உண்மையான புலியாகவே மாறி விடுகிறது!

    அந்த நிஜப் புலியைப் பார்த்த சிவனாரின் வாகனமான காளை மாடு மிரண்டு ஓடுகிறது என்று நயமாகத் தன் கற்பனைச் சித்திரத்தைத் தீட்டுகிறார் பிள்ளை!

    இதுபோலவே இன்னோர் அழகிய கற்பனை, சிவன் சைவமா அசைவமா என்று ஆராய்ந்து முடிவு சொல்கிறது!

    பிள்ளைக்கறி சாப்பிடுவதாகச் சிவன் சொன்னாலும் அவர் அந்தக் கறியைச் சாப்பிடவில்லை. சீராளா என்றழைத்ததும் கறியாகச் சமைக்கப்பட்ட சீராளன் உயிரோடு தோன்றிவிட்டான்.

    நமக்கு ஓர் ஐயம் வருகிறது. பிள்ளைக் கறியை அவர் சாப்பிடவில்லை என்றாலும் கண்ணப்பன் அசைவ உணவை அவருக்குப் படைத்தானே? சிவபெருமான் அந்த அசைவ உணவை ஏற்றாரா இல்லையா? பார்த்து அங்கீகரித்தார், அவ்வளவுதான். சாப்பிட்டதாய்ச் செய்தி இல்லை.

    உண்மையில் சிவன் சைவமா அசைவமா? பதில் சொல்கிறார் பிள்ளையவர்கள்.

    `சிவனின் ஒரு கரத்தில் மான் இருக்கிறது. மானை வெட்டி மான்கறி உண்ண வேண்டுமானால் அதை வெட்ட இன்னொரு கரத்தில் மழு இருக்கிறது. வெட்டிய மாமிசத்தைத் தூய்மைப்படுத்த வேண்டுமானால், அதற்குத் தேவையான நீர் கங்கையாக சிவன் தலையிலேயே இருக்கிறது.

    தூய்மை செய்த மாமிசத்தைச் சமைக்க வேண்டுமானால் நெருப்பும் சிவன் கையிலேயே இருக்கிறது. சமைத்த மாமிசத்தை வைத்துச் சாப்பிடத் தேவையான திருவோடும் கூடச் சிவனிடமே இருக்கிறது.

    இத்தனை வசதிகள் இருந்தும் சிவன் கரத்தில் உள்ள அந்த மான் உயிரோடு தானே இருக்கிறது, இதிலிருந்தே தெரியவில்லையா சிவபெருமான் சைவ உணவுக்காரர்தான் என்று?` என வினவுகிறார் அவர்!

    பிள்ளையின் சமகாலத்தில் வாழ்ந்தவர் தாண்டவராயத் தம்பிரான் என்ற பெரியவர். அவர் முகத்தில் கட்டி வந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம்.

    அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட்டாற் போலிருக்கும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் உரையாடி அவரது சொல்லமுதத்தைச் செவியால் பருகலாம் என்று அவரைத் தேடிச்சென்றார் தம்பிரான்.

    சொக்கவைக்கும் பிள்ளையவர்களின் சுந்தரப் பேச்சில் மனம் பறிகொடுத்தார். தம்பிரானின் கட்டியால் விளைந்த வலியை அவர் மறந்தேபோனார். இச்சம்பவம் குறித்துத் தம்பிரான் எழுதியுள்ள குறிப்பு தமிழ்நயம் செறிந்தது.

    `அடியேன் திரிசிரபுரத்தில் மவுன சுவாமிகள் மடத்தில் பரு வரலால் பருவரல் உற்று, மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சம்பாஷணையால் அஞ்சு தினங்களையும் அஞ்சுதினங்களாகக் கழித்தேன்...' என்கிறார் அவர்.

    (பரு வரல் - முகத்தில் கட்டி வருதல். பருவரல் - துன்பம். அஞ்சு தினம் - ஐந்து தினங்கள். அஞ் சுதினம் - அழகிய நல்ல நாட்கள்)

    லண்டனில் இருந்து ஒரு தமிழ் அன்பர் பிள்ளையவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். சரியான முகவரி தெரியாததால் `மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இந்தியா` என்று மட்டுமே முகவரியில் குறிப்பிட்டிருந்தார்.

    கடிதம் மிகச் சரியாக அவரிடம் வந்து சேர்ந்துவிட்டது. தாம் வாழ்ந்த காலத்தில் அத்தகைய பெரும்புகழோடு விளங்கியவர் அவர்.

    ஒருதுறை சார்ந்தவர்கள் அந்தத் துறையில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பது இவர் கொள்கை. அதனால் பாட்டுக் கற்றுக் கொண்டிருந்த உ.வே.சா.வைப் பாட்டுக் கற்றுக் கொள்ளாதே என்று சொல்லித் தடுத்துவிட்டதாக உ.வே.சா. எழுதியுள்ளார்.

    திருவாவடுதுறை ஆதீனப் புலவராக விளங்கிய பிள்ளை வாழ்நாள் முழுவதும் தமிழ் நூல்களைத் தேடித் தேடிக் கற்பதும் கற்பிப்பதுமாகவே வாழ்ந்தார். நந்தன் கதை எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார் இவரது சம காலத்தவர். இவரது புலமை அறிந்து இவரிடம் வாழ்த்துக் கவிபெற வேண்டி எவ்வளவோ முயற்சித்தார்.

    நந்தனார் கீர்த்தனை நூலில் பேச்சு வழக்குகளும் ஆங்காங்கே உண்டு. இதனால் இலக்கணத்தின் மேல் பெருவிருப்புக் கொண்ட பிள்ளையவர்கள் வாழ்த்துக் கவி தராமல் காலந்தாழ்த்திக் கொண்டிருந்தார்.

    ஒருமுறை பிள்ளையவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய `சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா` என்ற பாடலைக் கேட்டு வியந்தது பிள்ளையவர்களின் உள்ளம். உடனே தன் கருத்தை மாற்றிக்கொண்டு நந்தனார் கீர்த்தனை நூலுக்கு வாழ்த்துரை வழங்கினார் பிள்ளை.

    1.2.1876-ல் அவர் காலமானார். சீடர் ஒருவரிடம் திருவாசகம் படி என்ற கருத்தில் திருவாசகம் என்று சொன்ன அவர் கண்மூடிவிட்டார். அவர் இறுதியாகச் சொன்ன ஒரு வாசகம் திருவாசகம் என்பதுதான்.

    அவர் காலமானபோது உடனிருந்த சீடர்கள் சொன்ன சொற்கள் அவர் பெருமையை உணர்த்தும். `தமிழ்க் காளிதாசரே. போய்விட்டீரா?' என்றும் `இன்றைய கம்பரே போய்விட்டீரா?` என்றும் அவர்கள் கதறி அழுதார்கள்.

    தமிழின் பரந்த இலக்கியப் பரப்பில் பிள்ளைக்கு இணையாகச் செய்யுள்களை எழுதிக் குவித்தவர்கள் யாருமில்லை. தமிழின் செழுமை நிறைந்த பக்தி இலக்கிய வரலாற்றில் என்றென்றும் ஒரு மாணிக்கமாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறார் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • மனம் ஒடுக்க பயிற்சி என்பது தியானம்.
    • நாம் யாருக்கும் துன்பம் கொடுக்காத வகையில் நம்மை பார்த்து கொள்ள வேண்டும்.

    அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், இன்பத்தை வெளி விஷயங்களில் அனுபவித்த, அனுபவிக்க நமக்கு ஆசைகள் அதிகம் ஆகி கொண்டே போகும். தர்ம விஷயமான ஆசைகளுக்கு மட்டும் தான் நாம் இடம் கொடுக்க வேண்டும். நம்முடைய குணத்திற்கு ஏற்றார் போல், நம்முடைய பழக்க வழக்கம், அதற்கு ஏற்றார்போல, நம் இன்ப துன்பம் வரும். எனவே வாழ்க்கையில் இனிமேல் அளவு முறையை கடைபிடிக்க வேண்டும். இதில் தவறு செய்யும் போது தான் நமக்கு துன்பம் வருகிறது.

    கிருஷ்ணர் காவியத்தில், கிருஷ்ணர், காளிங்கன் என்கின்ற பாம்பின் மீது ஏறி நின்று நர்தனம் ஆடினார். ஏனெனில் அந்த பாம்பு அங்கு வாழும் மக்களுக்கு துன்பத்தை கொடுத்தது. ஒரு கட்டத்தில் அந்த பாம்பு மிகவும் சோர்ந்து போய், ஏன் என் மீது இப்படி செய்கிறாய் என்று கேட்டது. அதற்கு நீ என் மக்களின் மீது விஷத்தை கக்குகிறாய். எனவே உனக்கு இப்படி செய்தேன் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

    அதற்கு அந்த பாம்பு, நீ என்னை படைக்கும் போது, விஷத்தை வைத்து தானே படைத்தாய்? அதனால் தான் மக்கள் மீது விஷத்தை கக்கினேன். அமிர்தத்தோடு என்னை, நீ படைத்து இருந்தால் அதை மக்களுக்கு தருவேன். அவர்கள் நான் இருக்கும் இடத்திற்கு வரும் போது, என்னை பாதுகாத்து கொள்வதற்காக தான் இப்படி செய்கிறேன் என்றது.

    ஆனால் நாம் மனித பிறவி எடுத்த பிறகும் கூட, மனதிற்கு இதம் இல்லாமல், சொல்லால், செயலால் எல்லா மக்களிடமும் விஷத்தை கக்குகிறோம். தர்மம் என்னவென்றால், எப்போது நம்முடைய குணத்தினால், மற்றவர்களுக்கு துன்பம் வருகிறதோ, எப்போது நம்மால், நம்முடைய குணத்தை மாற்றிகொள்ள முடியவில்லையோ, அப்போது நாம் யாருக்கும் துன்பம் கொடுக்காத வகையில் நம்மை பார்த்து கொள்ள வேண்டும்.

    நமது குணத்தை, தர்மம், ஞானம் என்கின்ற இரண்டில் நம் மனதை செலுத்தி பழகி கொள்ள வேண்டும். அப்படி நாம் செய்தால் நமது குணம் மற்றவர்களை பாதிக்காது. அதே போல மற்றவர்கள் குணமும் நம்மை பாதிக்காது. இது சற்று கடினமாக இருக்கும். இதற்கு குரு வழியில் நின்று நம் மனதை நாம் அடக்க நினைக்காமல் அறிய முற்பட்டால், இதில் வெற்றி கிடைக்கும். இதை தான் வேதாத்திரி மகரிஷி தனது கவியில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

    மனம் அறிவு ஆதியெனும் மூன்றும் ஒன்றே

    மறைகளெல்லாம் விரித்துணர்த்தும் உண்மை ஈதே

    மனம் வடிவாய்க் குணங்களாய் எல்லைக் கட்டும்

    மதி உயர்ந்த சிறப்பில் இந்த தடையை நீக்கி

    மனத்தினது ஆதி நிலை அறிய நாடும்

    மனிதனிடம் இச்சிறப்பே பிறவி நோக்கம்

    மனம் விரிந்தோ, ஒடுங்கியோ தன் முனைப்பு அற்றால்

    மறைமுடிவாம் ஆதியாம் மூன்றும் ஒன்றே.

    அதாவது மனித பிறவியின் நோக்கம், வாழும் காலத்திலேயே மனதை அடிப்படை கருவியாக வைத்து, ஆதி நிலை ஆன்மா என்பதை உணர்வது ஆகும். மனம் ஆனது எப்போது தனது தன் முனைப்பை விடுகிறதோ, அப்போது தான், நாம் நம்முடையை ஆதி நிலையான இறைவனை உணர முடியும். எனவே நாம் நம்மனதை முதலில் செம்மை படுத்த வேண்டும் என்று ேவதாத்திரி மகரிஷி இந்த கவியிலே மிகவும் எளிமையாக குறிப்பிடுகிறார்.

    இதில் தன் முனைப்பு என்பது வாழ்க்கையில் நான், எனது என்பது ஆகும். அதாவது நான் என்கின்ற அதிகாரம் உடைய பற்றும், எனது என்கின்ற அதிகாரம் உடைய பொருள் பற்றும் உள்ள வரை மனதை அறிய முடியாது. இதையே மகான் திருமூலர் தனது திரு மந்திரத்திலே கூறும் போது,

    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்

    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்

    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்

    மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.

    பொதுவாக இந்த பாடலின் பொருள் என்ன வென்றால், நம்முடைய மனம் ஆனது செம்மையாகி விட்டால், நாம் மந்திரம் செபிக்க தேவையில்லை. பிராணாயாமம் செய்ய தேவையில்லை, மூச்சை நிறுத்த தேவையில்லை. இவை அனைத்தும் எப்போது தேவை இல்லை எனில், என்று நம் மனம் அறியப்படுகிறதோ அன்று தான் சாத்தியம் ஆகும். ஆனால் இது பயிற்சியின் மூலமாக தான் நமக்கு கிடைக்கும்.

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்


    அதற்கு முதல் நிலை தான் பக்தி மார்க்கத்தில், மந்திரம் செபிக்கும் வழியாகும். இதன் அடுத்த நிலையில் அந்த மந்திர அட்சரங்கள் (வார்த்தை அல்லது எழுத்துக்கள்) நமது உடலில் உள்ள யோக சக்கரங்களை எழுப்பி ஆனந்த அதிர்வு அலைகளை எழுப்பும். அப்போது மனம் ஆனது, வெளி உலகில் உள்ள தொடர்புகளில் இருந்து, தன்னை சற்றே விடுவித்து கொண்டு அக உலகை நோக்கி நமக்கு உள்ளே பிரயாணம் ஆகும். அப்போது தான் நமக்கு நம் உயிர் மீது அக்கறை வரும். இந்த நேரத்தில் தான் பிராணாயாமம் பயிற்சி செய்ய வேண்டும். அப்போது நமது மூச்சு கட்டுப்படும்.

    இந்த நிலையில் தினமும் நாம் பழக பழக, மூச்சு ஒடுங்க தொடங்கும். அடுத்த கட்டமாக மனம் செம்மையாகி அது பிராணனை ஆதாரங்களில் நிறுத்த பழகும். இதன் தொடர்ச்சியால் பிராணன் நிலைபட்டு நாம் பேசும் வார்த்தைகள் அனைத்தும் மந்திரமாக மாறும்.

    இதில் யோக சக்கரங்கள் என்பது மூலாதாரம் (முதுகு தண்டின் கீழ் பகுதி) சுவாதிஷ்டானம் (தொப்புளுக்கும் உயிர் நிலைக்கும் இடைபட்ட பகுதி) மணிபூரகம் (தொப்புள் பகுதி) அனாகதம் (நெஞ்சு குழி), விசுத்தி (தொண்டை பகுதி) ஆக்கினை (புருவமத்தி) துரியம் (தலை உச்சி) என்று ஏழு யோக சக்கரங்கள் உள்ளது.

    இதை தான் நாம் நடைமுறை வார்த்தையில் நாளமில்லா சுரப்பிகள் என்று கூறுகிறோம். மருத்துவ விஞ்ஞானத்தில் இதையே SEXUAL GLAND, ADRENAL GLAND, PANCREAS GLAND, THYMUS GLAND, THYROID GLAND, PITUITARY GLAND AND PINEAL GLAND என்று கூறுகிறார்கள்.

    யோகத்திலே இந்த சக்கரங்கள் தான் உயிர் சக்தி என்று கூறுகின்றனர். மருத்துவ விஞ்ஞானத்திலே இந்த சக்கரங்களில் இருந்து வரும் சக்தியை தான் ஹார்மோன்ஸ் என்று கூறுகிறோம். இதற்கு இனிமை என்று பொருள்.

    உடல், மனம், உயிர் இந்த மூன்றும் ஒன்றாக இணைந்திருந்தால் இனிமையாக இருத்தல் என்று அர்த்தம். இந்த மூன்றையும் எவர் ஒருவர் இணைக்கிறார்களோ அவர்கள் யோகிகள் அல்லது அந்த பயிற்சிக்கு தான் யோகம் என்று பெயர். எனவே நாம் யோகம் செய்வதற்கு யோகம் செய்து இருக்க வேண்டும். அதாவது புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

    மனம் ஒடுக்க பயிற்சி என்பது தியானம். அதன் முதல்படி தான் பிராணாயாமம். தியானம் என்பது மனம் உதிக்கின்ற இடத்தில் நிற்பது ஆகும். சில மகான்கள் தியானம் என்றால் தன்னையறிதல் என்றும், மனம் அற்ற நிலை என்றும் கூறுகின்றனர்.

    இதுவரை நாம், வாழ்க்கையில் அடையாத ஒன்றை உணராத ஒன்றை அடைவதற்கு நாம் எடுக்கும் பெறும் முயற்சி அல்லது பயிற்சியே தியானம் ஆகும். அதே நேரம் தியானம் என்பது சுயம்பு. தானாக உள்ளிருந்து எழும் ஒரு நிகழ்வு ஆகும். அது எப்போது வேண்டுமானாலும் சித்தியாகலாம். அது தான் பிறவி பயனை அடைவதற்கும் பிறவி தொடரை அறுப்பதற்குமான வழியாகும்.

    மாயையில் இருந்து விடுபட ஒரே வழி தியானம் மட்டுமே. தியானம் நமக்கு எப்போது சித்தியாகிறதோ, அந்த நொடியே நமக்குள் பரமனின் பதத்தினை காட்டிவிடும். அந்த நிலையில் நமக்கு எண்ணத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். ஏனெனில் எண்ணங்களே சித்தத்தின் பாசறையாகும். தியானத்தால் மட்டுமே எண்ணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இந்த நிலை வந்து விட்டால், இறைவனிடம் நாம் கேட்க வேண்டியது ஒன்றும் இல்லை. ஏனெனில் நமது தேவை என்ன என்பது அதற்கு தெரியும்.

    எனவே எண்ணங்கள் குறைந்தால் மனம் உதிக்கின்ற இடத்திலே நம்மால் நிற்க முடியும். ஏனெனில் எண்ணங்களின் தொகுப்பு தான் மனம். மனதின் வேலைகாரர்கள் தான் புற உலகோடு தொடர்பு கொள்ளும் நமது புலன்கள் ஆகும். மனம் தான் நமது ஐந்து புலன்களை அடக்கி ஆள்கிறது. ஆதலால் நாம் எந்த செயலை செய்தாலும் ஐந்து புலன்கள் வழியாக செய்வதால், அந்த புலன்களிலே அளவு முறையை பின்பற்றி செய்தால் நமக்கு துன்பம் வராது.

    இதை தான் வேத சாஸ்திரங்கள் தர்மம் என்றும் ஞானம் என்றும் கூறுகிறது. நாம் சில நேரங்களில் இறைவனை கூட வழிபடாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையிலே தர்மத்தின் படி நடக்க ஒரு நாளும் மறக்க கூடாது. அதுவே நாம் ஞான சக்தியை அடைய செய்யும்.

    இந்த தர்மம் மற்றும் ஞானம் என்கின்ற இரண்டுக்கும் இடையில் வருவது தான் பக்தி. மனம் ஆனது அமைதி அடைய அடைய ஞானத்தை நோக்கி செல்லும். ஞானம் என்பது அறிவை அறிதல் என்று பொருள். அந்த அறிவை அறியும் போது அறிபவரும் அறியப்படுபவரும் ஒன்றாகி விடுவர்.

    அறியப்படுபவர் என்பது இறைவன். அறிபவர் என்பது நாம். எனவே ஞானத்தால் இந்த நிலை வந்துவிட்டால் அறிபவர் கரைந்து போய்விடுவர். அந்த இடத்திலே அறியப்பட்ட பொருள் ஒன்றே உள்ளது. அது தான் மெய் பொருள். அதை தான் நாம் இறைவன் என்றும், ஹரி, சிவன், சக்தி, அல்லா, ஏசு என்று கூறுகிறோம். இதற்கான முதல்படி தான் தியானம். இந்த தியானத்தின் மூலமாக எப்படி அகம் நோக்கி பிரயாணம் செய்வது என்பதை பற்றி ஆராய்ச்சி செய்வோம்.

    போன்: 9444234348

    • குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதற்கு முக்கியம்.
    • ரத்தச் சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு முக்கியம்.

    வைட்டமின் "பி12" (B12) மிகவும் சக்தி வாய்ந்த, நீரில் கரையும் ''பி''-காப்ளக்ஸ் வைட்டமின் ஆகும். இது நம் உடலின் ஆற்றல் மையமாகச் செயல்படுகிறது. நம் உடல் வைட்டமின் "பி12"-ஐ தானாகத் தயாரிக்க முடியாது. எனவே தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    வைட்டமின் "பி12" நம் உடல் நலனை எவ்வாறு பேணிப்பாதுகாக்கிறது? எவ்வளவு இருக்க வேண்டும்? அதன் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்கள் யாவை? எந்த உணவில் அதிகமாக இருக்கிறது? அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்புகள் யாவை? என்பன பற்றி இப்போது பார்க்கலாம்.

    நம் உடல் நலனில் வைட்டமின் "பி12"-ன் பங்கு என்ன?

    குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதற்கு முக்கியம். மூளை மற்றும் நரம்புகளைச் சுற்றி உள்ள மைலின் உருவாக்கத்திற்கும் செயல்பாட்டிற்கும் முக்கியம். மூளையில் உள்ள வேதியியல் பொருட்களின் தயாரிப்புக்கு முக்கியம். ரத்தச் சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு முக்கியம்.

    நம் அணுக்களில் உள்ள டிஎன்ஏ-வின் உருவாக்கத்திற்கு முக்கியம். ஞாபக மறதிநோய் வராமல் தடுப்பதற்கு முக்கியம்.

    ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியம். மனநோய்களான மனஅழுத்தம், படபடப்பு, மனப்பதற்றம் போன்றவை வராமல் தடுப்பதற்கு முக்கியம்.

    பிறவியில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வயது மூத்தோருக்கு வரும் கண் குறைபாடுகளைத் தடுக்கிறது.

    இதய நலனுக்கு உதவுகிறது. நகம், தோல், கண்களின் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக தேவைப்படுகிறது.

    இவ்வளவு நன்மைகளைத் தரும் வைட்டமின் "பி12"-ஐப் போதுமான அளவு எடுத்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் அதன் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

    ஒரு நாளைக்குத் தேவையான அளவு என்ன?

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி



    வைட்டமின் "பி12" ஒரு நாளைக்குத் தேவைப்படும் அளவானது வயதிற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. அவை பின்வருமாறு மைக்கிரோ கிராம் அளவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.

    *பிறந்த குழந்தைக்கு - 0.4 மைக்கிரோ கிராம்

    *ஒரு வயதுக் குழந்தைக்கு - 0.5 மைக்கிரோ கிராம்

    *1-3 வயதுக் குழந்தைகளுக்கு - 0.9 மைக்கிரோ கிராம்

    *4-8 வயதுக் குழந்தைகளுக்கு - 1.2 மைக்கிரோ கிராம்

    *9-13 சிறார்களுக்கு - 1.8 மைக்கிரோ கிராம்

    *14 வயதிற்குப் பிறகு - 2.4 மைக்கிரோ கிராம்

    உணவில் உள்ள "பி12" இரைப்பையில் உள்ள ஒரு இன்ட்ரன்சிக் பேக்டரோடு இணைந்து சிறுகுடலைச் சென்றடைந்து அங்கிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் வழியாக கல்லீரலைச் சென்றடைகிறது. நம் கல்லீரலில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குத் தேவையான "பி12" சேமித்து வைக்கப்படுகிறது.

    எனவே சில நாட்கள் நாம் உணவின் வழியாகக் கொடுக்க முடியாமல் போனாலும், கல்லீரலில் உள்ள சேமிப்பில் இருந்து நம் உடல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் 6 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்போது குறைபாட்டினால் ஏற்படும் சிக்கல்கள் உண்டாகின்றன.

    வைட்டமின் "பி12" குறைபாடு யாருக்கு அதிகமாக வருகிறது?

    அசைவ உணவை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு "பி12" குறைபாடு வருகிறது. ஆனால் அசைவ உணவு எடுத்துக் கொள்ளாத அனைவருக்குமே வரும் என்று கூறஇயலாது. ஒரு சிலர் மட்டுமே இதன் குறைபாட்டினால் ஏற்படும் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.

    மது அருந்துபவர்களுக்கு "பி12" குறைபாடு ஏற்படுகிறது, ஏனென்றால் பி12-ஐ உறிஞ்சும் தன்மை குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மது கல்லீரலை பாதிப்பதால் "பி12"-ஐ சேமித்து வைக்கும் தன்மையைக் கல்லீரல் இழந்து விடுவதும் இதற்கு ஒரு காரணம்.

    தொடர்ந்து வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் "பி12" குறைபாடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    சிலருக்குச் சிறுகுடலை முற்றிலுமாக நீக்கி அறுவை சிகிச்சை செய்யும்போது வைட்டமின் "பி12" குறைபாடு ஏற்படுகிறது. சில சிறுகுடல் நோய்களில் வைட்டமின் "பி12"-ஐ உறிஞ்சும் தன்மை சிறு குடலுக்கு இல்லாமல் போகும்போதும் குறைபாடு ஏற்படலாம். அட்ரோபிக் கேஸ்ட்ரைடிஸ் எனப்படும் வயிற்றுப்புண் நோயாலும் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது.

    "பி12" குறைவதால் ஏற்படும் சிக்கல்களும் அதன் அறிகுறிகளும்

    ரத்தச்சோகை-

    இதனால் உடல் சோர்வு, சோம்பல் மற்றும் பலவீனம் ஆகியவை ஏற்படுகின்றன.

    நரம்புத் தளர்ச்சி-

    கால்களில் உணர்ச்சி குறைவது போன்ற உணர்வு, ஊசி குத்துவது போல் கால் விரல் நுனிகள் இருப்பது, நடக்கும்போது பாதங்கள் பஞ்சு மெத்தையில் நடப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவது ஆகியவைகள் நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் ஆகும். நீரிழிவு நோயாளிகள் "பி12" குறைபாடு உள்ளதா? என்பதைப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது, ஏனென்றால் நீரிழிவு நோய் 5 வருடங்களுக்கு மேலாக இருக்கும்போது நரம்புத் தளர்ச்சி வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. இவர்களுக்கு "பி12" குறைபாடு சேரும்போது நரம்புத் தளர்ச்சியின் வீரியத் தன்மை அதிகரிக்கிறது.

    பார்வை நரம்புகளைப் பாதிக்கும் நோய்-

    ஆப்டிக் நியூரைட்டிஸ் என்ற இந்த மைலின் சிதைவு நோய் வருவதற்கு வைட்டமின் "பி12" குறைபாடும் ஒரு முக்கியக் காரணம். இதில் நோயாளிக்குப் பார்வைக் கோளாறு ஏற்படுகிறது.

    ஞாபக மறதி நோய்-

    புதிதாக நடக்கும் நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாகிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் எப்போதும் நினைவில் நிலைத்து நிற்கும். எனவே இவர்கள் பழைய நினைவுகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டே இருப்பார்கள். புதிதாக நடப்பவைகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதனாலேயே பல குடும்பங்களில் சிக்கல்கள் வருகின்றன.

    மன அழுத்தம், மனப்பதற்றம்-

    நம் மூளையில் உள்ள வேதியியல் பொருட்களின் தயாரிப்புக்கு "பி12" மிகமுக்கியப் பங்கு வகிப்பதால் இதன் குறைபாட்டால் வேதியியல் பொருட்களின் சுரப்புத் தன்மை பாதிக்கப்படுவது, மனம் தொடர்பான நோய்களுக்குக் காரணமாகிறது.

    உறக்கமின்மை-

    மனஅழுத்தம் அதிகரிப்பது உறக்கமின்மைக்கு காரணமாகிறது.

    தோலின் நிறம் வெளிரிப்போதல்-

    ரத்தச்சோகை ஏற்படுவதால் தோலின் நிறம் குறைகிறது, சுவாசித்தலில் பிரச்சனை ஏற்படுகிறது.

    செரிமானக் கோளாறுகள் மற்றும் பசி உணர்வு குறைதல்.

    வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுப் பொருட்கள்:

    அசைவ உணவுகள்-

    முட்டை, மீன் மற்றும் கோழி, ஈரல் மற்றும் சிவப்பு மாமிசம்.

    சைவ உணவுகள்-

    வலு ஊட்டப்பட்ட தானியங்கள், பால் பொருட்கள், சோயா, பாதாம் உள்ளிட்டவைகளில் அதிக அளவில் வைட்டமின் "பி12"உள்ளது.

    இந்த வைட்டமின் "பி12" -ஐ அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

    மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது இதனால் தலைச்சுற்றல், தலைவலி, மனப்பதற்றம் மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே மருத்துவரின் ஆலோசனையின்றி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

    நம் உடலின் ஆரோக்கியத்திற்கு "பி12" அவசியம் என்பதையும், ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அளவையும், எந்த உணவில் அதிகம் உள்ளது என்பது பற்றியும் இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    • உள் மருந்து செய்முறைகளில் சித்தர்கள் அறிவியல் திறனோடு நெறிப்படுத்தினர்.
    • பல்வேறு வேதியல் ஆய்வுகளை செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.

    சித்த மருந்தியல் நெறி:

    மருந்தியல் நெறி என்பது மருந்தின் குணம், மருந்து மற்றும் நோய்க்கு ஏற்ற துணை மருந்து, மருந்தினை உண்ண தகுந்த காலம், இடம், அளவு, உணவு முறை, வாழ்வியல் முறை, எதிர் விளைவு, அதனை முறிக்கும் முறை என விரிவாக அமைந்துள்ளது. (தேரையர் யமக வெண்பா, மருத்துவாங்கச் சுருக்கம் போன்ற நூல்களில் இவை பற்றிய விளக்கங்களை சான்றுடன் அறியலாம்).

    சித்த மருந்தியல்:

    நோய் தீர்க்கும் மருந்து உடலில் எவ்வகை மாற்றங்களை உண்டாக்க வல்லவை என்பதை உணர்த்தும் மருந்தியல் திறன்களை சித்தர்கள் மிக நுட்பமாக அறிந்திருந்தனர்.

    நஞ்சு நூல் எனும் தொகுப்பில் காணப்படும் பலவகை தாவர, சங்கம(கடல்), தாது, உலோக நஞ்சுகள் பற்றிய விளக்கங்கள் தமிழர்களின் மருந்தியல் புலமையை புலப்படுத்தும்.

    நஞ்சுத் தன்மை மட்டுமின்றி மருந்து செய்முறைகளையும் சித்தர்கள் அறிந்திருந்தனர்.

    தட்ப வெப்பநிலை, துணை மருந்துகள் எனப்படும் அனுபான முறை மூலம் மருந்துகளை நெறிப்படுத்தி பயன்படுத்தினர்.எடுத்துக்காட்டு பற்பம், செந்தூரங்களை நேரடியாக கொடுக்காமல் தேன், பால், நெய், மூலிகை குடிநீர் போன்ற அனுபான மருந்துகள் மூலம் கொடுத்தனர்.

    மருந்துகளின் அளவும் , மருந்தினை உட்கொள்ளும் கால அளவு , மருந்து உட்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய உணவு, வாழ்வியல் முறைகளையும் கூறியுள்ளனர். இச்சா பத்தியம், குடும்ப பத்தியம், கடும் பத்தியம் எனும் பத்திய முறைகள் மருந்தின் குணத்திற்கு ஏற்ப அமைந்தவை. அனைத்துக்கும் மேலாக மருந்தின் தீய விளைவினை முறிக்கக் கூடிய முறிப்பு மருந்துகளையும் அறிந்து வைத்திருந்தனர்.

    சித்தர்களின் மருந்து செய்முறைகளில் உள்ள அறிவியல் திறன்:

    சித்தர்கள் மருந்தினை உள் மருந்து 32, வெளி மருந்து 32 ஆக பிரித்து பிரித்து 64 வகையான மருந்து செய்முறைகளை கூறியுள்ளனர்

    உள் மருந்து செய்முறைகளில் சித்தர்கள் அறிவியல் திறனோடு நெறிப்படுத்தினர். எந்த மருந்து தன்னளவில் கெடாமல் இருக்கின்றதோ, அந்த மருந்துதான் நோயை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்த மருந்து என கருதிய தமிழ் மருத்துவர்கள், அத்தகைய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் பல்வேறு வேதியல் ஆய்வுகளை செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.

    சித்த மருந்துகளின் காலக்கெடு (Excpiry Date) அவற்றின் நீண்ட நாள் கெடாமல் இருக்கும் பக்குவம் சித்தர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்துகிறது. எடுத்துகாட்டு தைல வகைகள் - 1 ஆண்டு, மெழுகு, குழம்பு - 5 ஆண்டுகள், ரசம் பதங்கம் - 10 ஆண்டுகள், செந்தூரம் - 75 ஆண்டுகள், பற்பம், கட்டு, களங்கு - 100 ஆண்டுகள், சுண்ணம்- 500 ஆண்டுகள், கற்பம், குரு, குளிகை - காலக்கெடு கடந்தவை.

    நவீன மருத்துவத்தில் சிக்கல் நிறைந்த அபாயம் என கருதப்படும் உலோக மருந்துகள் சித்த மருத்துவத்தின் சிறந்த மருந்தறிவியல் மூலம் அவற்றின் நச்சுத்தன்மையை சுத்தி செய்து கொடிய நோய்களில் இருந்து உயிரை காக்கும் உயரிய மருந்துகளாக பயன்படுத்துகின்றது.

    பாதரசம் மிகக் கடுமையான நஞ்சுள்ள உலோகமாகவும் அதனை மருந்தாக்கும் முறைகள் சித்த மருத்துவத்தில் இருப்பது சிறப்பம்சமாகும்.

    வேதியல் சார்ந்த மருந்து முறைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சித்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு அகத்தியர், போகர், தேரையர் ஆகியோர் கூறியதாக கருதப்படும் பாடல்களில் காணலாம்.

    இவையின்றி பிணி வராமல் தடுக்க உதவும் கற்ப மருந்துகள், நீண்ட நாள் வாழ உதவும் குரு மருந்துகள் போன்றவை இக்கால மருத்துவர்கள் சிந்தித்து அவர்களின் ஆராய்ச்சியை புதிய பாதைக்கு உந்தக்கூடிய ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளது.

    சுத்தி முறை முக்கியத்துவம்:

    உள் மருந்துகளைத் தயாரிக்கப் பயன்பட்ட மூலப் பொருட்களை, அவற்றின் வாதம், பித்தம், ஐயம் எனும் உயிர் தாதுக்களின் நிலைகளை அறிந்தே மருந்து செய்ய பயன்படுத்தினர். அதனுடன் ஒவ்வொன்றுக்கும் இயல்பாய் இருக்கும் நஞ்சுத் தன்மையை மிக தெளிவாக அறிந்து அதனை போக்கும் நுட்பங்களையும் கூறியுள்ளனர்.

    மருந்து செய்முறையில் முதல் விதி மூலப்பொருட்களின் நஞ்சு தன்மையை அறிதல், அடுத்த விதி நஞ்சு தன்மையை நீக்குதல் அதாவது சுத்தி செய்தல் ஆகும். சுத்தி செய்யாமல் மருந்து செய்யக்கூடாது என்பதை சித்தர்கள் வகுத்த சித்த மருத்துவத்தின் முக்கிய விதியாக வைத்துள்ளனர்.

    மிளகு, சுக்கு, கடுக்காய் எனப்படும் சாதாரண தாவர பொருட்களில் இருந்து வீரம், பூரம், ரசம், தாளகம், லிங்கம் என விரியும் அத்தனை மூலப் பொருட்களையும் சுத்தி செய்த பின்னரே மருந்து செய்ய பயன்படுத்த வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

    சித்த மருத்துவத்தில் அனுபானம் கூறுவது ஏன்?

    இந்த சூரணத்தினை ஏன் நெய்யில் கலந்து சாப்பிட சொல்றீங்க? இந்த மருந்தை ஏன் வெண்ணெயில் கலந்து சாப்பிட சொல்றீங்க? இதனை ஏன் தேனில் சாப்பிட சொல்றீங்க? என நவீன அறிவியல் ஆய்வாளர்கள் வியந்து பார்க்கும் படியாக நம் துணை மருந்தின் அனுபானக் கோட்பாடு உள்ளது.

    சித்த மருத்துவத்தில் அனுபானம், துணை மருந்து பங்கு அதிகம். எப்படியானால் செல்ல வேண்டிய இடத்திற்கு தனியாக செல்வதற்கும், ஒரு வழிகாட்டியுடன் சேர்ந்து செல்வதற்கும் உள்ள வித்தியாசம் தான்.

    சில சித்தர் மருந்துகளை ஒரு சில மருந்துடன் சேர்த்து தரும்போது தான் பலன் நன்றாக கிடைக்கிறது. எல்லா மருந்துக்கும் பால், தேன், நெய் மட்டுமே அனுபானம் கிடையாது. உதாரணத்திற்கு நிலவேம்பினை தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம். ஏனெனில் நிலவேம்பின் பைடோகெமிக்கல், ஹைட்ரோபிலிக் என்று சொல்லக்கூடிய வேதிப்பொருட்கள் நீரில் காய்ச்சும் போது மருத்துவத் தன்மைகளை வெளிப்படுத்துவதால் கஷாயமாக காய்ச்சி குடிக்கிறோம்.

    கரிசலையை எண்ணையாக காய்ச்சி பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது லிபோபிலிக் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது.

    இது மாதிரி நெய் பற்றி கூறும் போது சிறுவர்களுக்கு கொடுக்கும் மருந்துகள் எல்லாம் பிரமி நெய், வல்லாரை நெய், தூதுவளை நெய் போன்றவற்றில் நெய்யினை சேர்ப்பதால் மூலிகை சாற்றை நெய் உள்வாங்கி பிளட் பிரைன் பேரியர் என்று சொல்லக்கூடிய மூளை உரையைத் தாண்டி செல்லக்கூடிய ஆற்றல் நெய்க்கு உண்டு. இதை தண்ணீரில் சாப்பிட்டால் பலன் கிடையாது. இதிலிருந்து எவ்வளவு கைதேர்ந்தவர்களாக சித்தர்கள் இருந்திருக்கின்றார்கள் என்று நம்மால் அறிய முடிகிறது...

    ஒரு உலோகம் மூலம் கொண்டு செய்யப்படும் பற்பம், அணு அளவிற்கும் நுண்ணியமானவை என்பதையும், நெய்யின் துணையோடு மூளையை சென்றடைகிறது என்கிற அறிவியல் உண்மையையும் இக்கால அறிவியல் உலகமே வியந்து பார்க்கிறது.

    சித்த மருத்துவத்தில் பத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

    சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற வருவோரில் பெரும்பாலானவர்கள் முதலிலே கேட்கும் கேள்வி பத்தியம் இருக்கனுமா ? ஆமாம் என்று சொன்னால் சிலர் என்னால் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். இதற்குக் காரணம் பத்தியம் என்பது என்ன என்று சரியான புரிதல் இல்லாதது.

     பத்தியத்தை இரண்டு விதமாக பார்க்கலாம்:

    1. நோய்க்கு அல்லது மருந்துக்கு ஒத்துக்கொள்ளாததை நீக்குவது.

    2. நோய் உள்ளபோது சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்.

    இந்த இரண்டு முறையுமே விரைவில் நோய் குணமாகவும், நோயினால் பாதிக்கப்பட்ட உடல் தேறவும் அவசியமாகும்.

    ஜுரம் உள்ளபோது கஞ்சியும், வெந்நீரும் உட்கொள்வது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு, மாவுப் பொருட்களை நீக்குவது, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் உப்பினை உணவில் குறைத்துக் கொள்வது என்பதெல்லாம் நோய்க்கான பத்தியம்.

    உலகத்தில் உள்ள அனைத்து மருத்துவத்திலும் நவீன மருத்துவம் உள்பட நோயிற்கு ஏற்ற உணவு, வாழ்வியல் முறைகளை அவர்கள் மொழியில் கூறுகிறார்கள்.

    சற்று கடினமான நாட்பட்ட நோய்களுக்கு சற்றே பெரிய மருந்துகள் கொடுக்கும்போது கோழிக்கறி, பாகற்காய், அகத்திக்கீரை, நண்டு முதலியவற்றை நீக்குவது மருந்துகளுக்கான பத்தியம் ஆகும்.

    பால், மோர், நெய், பிஞ்சு காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நோயினால் மெலிந்த உடலை தேற்றவும், மருந்தினால் ஏற்படும் உடல் சூட்டை குறைப்பதற்குமான பத்தியமாகும்.

    குறிப்பிட்ட ஒரு நோய்க்கு தகுந்த பத்தியத்துடன் மருந்து உட்கொண்டால் அந்த நோய் விரைவில் தீரும்.

    தகுந்த பத்தியம் இல்லாமல் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டுக்கொண்டு மருந்து உட்கொண்டால் நோய் குணமாக நீண்டகாலம் ஆகும். இத்துடன் பணமும் விரையம் ஆகும். மருத்துவர் மற்றும் சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகும்.

    இவ்வாறு பத்தியம் காக்காமல் மருந்து சாப்பிடுவது என்பது ஓட்டை பானையில் நீர் நிரப்புவதற்கு சமம்.

    சித்த மருத்துவத்தில் நோயாளியை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்தியம் கூறவில்லை. நோயினை நீக்குவதற்கு காரணமாகவே பத்தியம் கூறுகின்றனர். இன்னும் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் நோயை விட பத்தியும் ஒன்றும் அவ்வளவு கொடூரமானது அல்ல. நோயின் கொடூரத்தை உணரும்போது இது புரியும்.

    இக்காலத்தில் நவீன மருத்துவம் உட்பட உலகத்தில் உள்ள அனைத்து வகை மருத்துவத்திலும் நோயிற்கான உணவு,பழக்கவழக்க முறைகள் கூறி மருத்துவம் செய்கிறார்கள்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்த மருத்துவத்தில் பத்தியத்தின் முக்கியத்துவத்தை கூறி மருத்துவம் செய்ததை பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது. மனக்கட்டுப்பாட்டோடு பத்தியம் காத்துக்கொண்டால் நலம் உங்களை நாடி வரும்.

    ×