என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உடல்+மனம்+உயிர்= யோகா
- மனம் ஒடுக்க பயிற்சி என்பது தியானம்.
- நாம் யாருக்கும் துன்பம் கொடுக்காத வகையில் நம்மை பார்த்து கொள்ள வேண்டும்.
அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், இன்பத்தை வெளி விஷயங்களில் அனுபவித்த, அனுபவிக்க நமக்கு ஆசைகள் அதிகம் ஆகி கொண்டே போகும். தர்ம விஷயமான ஆசைகளுக்கு மட்டும் தான் நாம் இடம் கொடுக்க வேண்டும். நம்முடைய குணத்திற்கு ஏற்றார் போல், நம்முடைய பழக்க வழக்கம், அதற்கு ஏற்றார்போல, நம் இன்ப துன்பம் வரும். எனவே வாழ்க்கையில் இனிமேல் அளவு முறையை கடைபிடிக்க வேண்டும். இதில் தவறு செய்யும் போது தான் நமக்கு துன்பம் வருகிறது.
கிருஷ்ணர் காவியத்தில், கிருஷ்ணர், காளிங்கன் என்கின்ற பாம்பின் மீது ஏறி நின்று நர்தனம் ஆடினார். ஏனெனில் அந்த பாம்பு அங்கு வாழும் மக்களுக்கு துன்பத்தை கொடுத்தது. ஒரு கட்டத்தில் அந்த பாம்பு மிகவும் சோர்ந்து போய், ஏன் என் மீது இப்படி செய்கிறாய் என்று கேட்டது. அதற்கு நீ என் மக்களின் மீது விஷத்தை கக்குகிறாய். எனவே உனக்கு இப்படி செய்தேன் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
அதற்கு அந்த பாம்பு, நீ என்னை படைக்கும் போது, விஷத்தை வைத்து தானே படைத்தாய்? அதனால் தான் மக்கள் மீது விஷத்தை கக்கினேன். அமிர்தத்தோடு என்னை, நீ படைத்து இருந்தால் அதை மக்களுக்கு தருவேன். அவர்கள் நான் இருக்கும் இடத்திற்கு வரும் போது, என்னை பாதுகாத்து கொள்வதற்காக தான் இப்படி செய்கிறேன் என்றது.
ஆனால் நாம் மனித பிறவி எடுத்த பிறகும் கூட, மனதிற்கு இதம் இல்லாமல், சொல்லால், செயலால் எல்லா மக்களிடமும் விஷத்தை கக்குகிறோம். தர்மம் என்னவென்றால், எப்போது நம்முடைய குணத்தினால், மற்றவர்களுக்கு துன்பம் வருகிறதோ, எப்போது நம்மால், நம்முடைய குணத்தை மாற்றிகொள்ள முடியவில்லையோ, அப்போது நாம் யாருக்கும் துன்பம் கொடுக்காத வகையில் நம்மை பார்த்து கொள்ள வேண்டும்.
நமது குணத்தை, தர்மம், ஞானம் என்கின்ற இரண்டில் நம் மனதை செலுத்தி பழகி கொள்ள வேண்டும். அப்படி நாம் செய்தால் நமது குணம் மற்றவர்களை பாதிக்காது. அதே போல மற்றவர்கள் குணமும் நம்மை பாதிக்காது. இது சற்று கடினமாக இருக்கும். இதற்கு குரு வழியில் நின்று நம் மனதை நாம் அடக்க நினைக்காமல் அறிய முற்பட்டால், இதில் வெற்றி கிடைக்கும். இதை தான் வேதாத்திரி மகரிஷி தனது கவியில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
மனம் அறிவு ஆதியெனும் மூன்றும் ஒன்றே
மறைகளெல்லாம் விரித்துணர்த்தும் உண்மை ஈதே
மனம் வடிவாய்க் குணங்களாய் எல்லைக் கட்டும்
மதி உயர்ந்த சிறப்பில் இந்த தடையை நீக்கி
மனத்தினது ஆதி நிலை அறிய நாடும்
மனிதனிடம் இச்சிறப்பே பிறவி நோக்கம்
மனம் விரிந்தோ, ஒடுங்கியோ தன் முனைப்பு அற்றால்
மறைமுடிவாம் ஆதியாம் மூன்றும் ஒன்றே.
அதாவது மனித பிறவியின் நோக்கம், வாழும் காலத்திலேயே மனதை அடிப்படை கருவியாக வைத்து, ஆதி நிலை ஆன்மா என்பதை உணர்வது ஆகும். மனம் ஆனது எப்போது தனது தன் முனைப்பை விடுகிறதோ, அப்போது தான், நாம் நம்முடையை ஆதி நிலையான இறைவனை உணர முடியும். எனவே நாம் நம்மனதை முதலில் செம்மை படுத்த வேண்டும் என்று ேவதாத்திரி மகரிஷி இந்த கவியிலே மிகவும் எளிமையாக குறிப்பிடுகிறார்.
இதில் தன் முனைப்பு என்பது வாழ்க்கையில் நான், எனது என்பது ஆகும். அதாவது நான் என்கின்ற அதிகாரம் உடைய பற்றும், எனது என்கின்ற அதிகாரம் உடைய பொருள் பற்றும் உள்ள வரை மனதை அறிய முடியாது. இதையே மகான் திருமூலர் தனது திரு மந்திரத்திலே கூறும் போது,
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.
பொதுவாக இந்த பாடலின் பொருள் என்ன வென்றால், நம்முடைய மனம் ஆனது செம்மையாகி விட்டால், நாம் மந்திரம் செபிக்க தேவையில்லை. பிராணாயாமம் செய்ய தேவையில்லை, மூச்சை நிறுத்த தேவையில்லை. இவை அனைத்தும் எப்போது தேவை இல்லை எனில், என்று நம் மனம் அறியப்படுகிறதோ அன்று தான் சாத்தியம் ஆகும். ஆனால் இது பயிற்சியின் மூலமாக தான் நமக்கு கிடைக்கும்.
கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்
அதற்கு முதல் நிலை தான் பக்தி மார்க்கத்தில், மந்திரம் செபிக்கும் வழியாகும். இதன் அடுத்த நிலையில் அந்த மந்திர அட்சரங்கள் (வார்த்தை அல்லது எழுத்துக்கள்) நமது உடலில் உள்ள யோக சக்கரங்களை எழுப்பி ஆனந்த அதிர்வு அலைகளை எழுப்பும். அப்போது மனம் ஆனது, வெளி உலகில் உள்ள தொடர்புகளில் இருந்து, தன்னை சற்றே விடுவித்து கொண்டு அக உலகை நோக்கி நமக்கு உள்ளே பிரயாணம் ஆகும். அப்போது தான் நமக்கு நம் உயிர் மீது அக்கறை வரும். இந்த நேரத்தில் தான் பிராணாயாமம் பயிற்சி செய்ய வேண்டும். அப்போது நமது மூச்சு கட்டுப்படும்.
இந்த நிலையில் தினமும் நாம் பழக பழக, மூச்சு ஒடுங்க தொடங்கும். அடுத்த கட்டமாக மனம் செம்மையாகி அது பிராணனை ஆதாரங்களில் நிறுத்த பழகும். இதன் தொடர்ச்சியால் பிராணன் நிலைபட்டு நாம் பேசும் வார்த்தைகள் அனைத்தும் மந்திரமாக மாறும்.
இதில் யோக சக்கரங்கள் என்பது மூலாதாரம் (முதுகு தண்டின் கீழ் பகுதி) சுவாதிஷ்டானம் (தொப்புளுக்கும் உயிர் நிலைக்கும் இடைபட்ட பகுதி) மணிபூரகம் (தொப்புள் பகுதி) அனாகதம் (நெஞ்சு குழி), விசுத்தி (தொண்டை பகுதி) ஆக்கினை (புருவமத்தி) துரியம் (தலை உச்சி) என்று ஏழு யோக சக்கரங்கள் உள்ளது.
இதை தான் நாம் நடைமுறை வார்த்தையில் நாளமில்லா சுரப்பிகள் என்று கூறுகிறோம். மருத்துவ விஞ்ஞானத்தில் இதையே SEXUAL GLAND, ADRENAL GLAND, PANCREAS GLAND, THYMUS GLAND, THYROID GLAND, PITUITARY GLAND AND PINEAL GLAND என்று கூறுகிறார்கள்.
யோகத்திலே இந்த சக்கரங்கள் தான் உயிர் சக்தி என்று கூறுகின்றனர். மருத்துவ விஞ்ஞானத்திலே இந்த சக்கரங்களில் இருந்து வரும் சக்தியை தான் ஹார்மோன்ஸ் என்று கூறுகிறோம். இதற்கு இனிமை என்று பொருள்.
உடல், மனம், உயிர் இந்த மூன்றும் ஒன்றாக இணைந்திருந்தால் இனிமையாக இருத்தல் என்று அர்த்தம். இந்த மூன்றையும் எவர் ஒருவர் இணைக்கிறார்களோ அவர்கள் யோகிகள் அல்லது அந்த பயிற்சிக்கு தான் யோகம் என்று பெயர். எனவே நாம் யோகம் செய்வதற்கு யோகம் செய்து இருக்க வேண்டும். அதாவது புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
மனம் ஒடுக்க பயிற்சி என்பது தியானம். அதன் முதல்படி தான் பிராணாயாமம். தியானம் என்பது மனம் உதிக்கின்ற இடத்தில் நிற்பது ஆகும். சில மகான்கள் தியானம் என்றால் தன்னையறிதல் என்றும், மனம் அற்ற நிலை என்றும் கூறுகின்றனர்.
இதுவரை நாம், வாழ்க்கையில் அடையாத ஒன்றை உணராத ஒன்றை அடைவதற்கு நாம் எடுக்கும் பெறும் முயற்சி அல்லது பயிற்சியே தியானம் ஆகும். அதே நேரம் தியானம் என்பது சுயம்பு. தானாக உள்ளிருந்து எழும் ஒரு நிகழ்வு ஆகும். அது எப்போது வேண்டுமானாலும் சித்தியாகலாம். அது தான் பிறவி பயனை அடைவதற்கும் பிறவி தொடரை அறுப்பதற்குமான வழியாகும்.
மாயையில் இருந்து விடுபட ஒரே வழி தியானம் மட்டுமே. தியானம் நமக்கு எப்போது சித்தியாகிறதோ, அந்த நொடியே நமக்குள் பரமனின் பதத்தினை காட்டிவிடும். அந்த நிலையில் நமக்கு எண்ணத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். ஏனெனில் எண்ணங்களே சித்தத்தின் பாசறையாகும். தியானத்தால் மட்டுமே எண்ணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இந்த நிலை வந்து விட்டால், இறைவனிடம் நாம் கேட்க வேண்டியது ஒன்றும் இல்லை. ஏனெனில் நமது தேவை என்ன என்பது அதற்கு தெரியும்.
எனவே எண்ணங்கள் குறைந்தால் மனம் உதிக்கின்ற இடத்திலே நம்மால் நிற்க முடியும். ஏனெனில் எண்ணங்களின் தொகுப்பு தான் மனம். மனதின் வேலைகாரர்கள் தான் புற உலகோடு தொடர்பு கொள்ளும் நமது புலன்கள் ஆகும். மனம் தான் நமது ஐந்து புலன்களை அடக்கி ஆள்கிறது. ஆதலால் நாம் எந்த செயலை செய்தாலும் ஐந்து புலன்கள் வழியாக செய்வதால், அந்த புலன்களிலே அளவு முறையை பின்பற்றி செய்தால் நமக்கு துன்பம் வராது.
இதை தான் வேத சாஸ்திரங்கள் தர்மம் என்றும் ஞானம் என்றும் கூறுகிறது. நாம் சில நேரங்களில் இறைவனை கூட வழிபடாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையிலே தர்மத்தின் படி நடக்க ஒரு நாளும் மறக்க கூடாது. அதுவே நாம் ஞான சக்தியை அடைய செய்யும்.
இந்த தர்மம் மற்றும் ஞானம் என்கின்ற இரண்டுக்கும் இடையில் வருவது தான் பக்தி. மனம் ஆனது அமைதி அடைய அடைய ஞானத்தை நோக்கி செல்லும். ஞானம் என்பது அறிவை அறிதல் என்று பொருள். அந்த அறிவை அறியும் போது அறிபவரும் அறியப்படுபவரும் ஒன்றாகி விடுவர்.
அறியப்படுபவர் என்பது இறைவன். அறிபவர் என்பது நாம். எனவே ஞானத்தால் இந்த நிலை வந்துவிட்டால் அறிபவர் கரைந்து போய்விடுவர். அந்த இடத்திலே அறியப்பட்ட பொருள் ஒன்றே உள்ளது. அது தான் மெய் பொருள். அதை தான் நாம் இறைவன் என்றும், ஹரி, சிவன், சக்தி, அல்லா, ஏசு என்று கூறுகிறோம். இதற்கான முதல்படி தான் தியானம். இந்த தியானத்தின் மூலமாக எப்படி அகம் நோக்கி பிரயாணம் செய்வது என்பதை பற்றி ஆராய்ச்சி செய்வோம்.
போன்: 9444234348






