என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சனி தோஷம் நீக்கும் பரிகாரங்கள்
- சனி ஒளியற்ற இருளைச்சுட்டிக் காட்டக் கூடிய கிரகம்.
- சனி சுப வலுப்பெற்றால் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
கர்ம வினைப்படி ஒரு மனிதன் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்ப துன்பங்களையும் வழங்குபவர் சனி பகவான். அதாவது பூர்வ ஜென்ம கணக்குப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை நிர்ணயம் செய்பவர் சனி பகவான். அதனால் தான் அவர் நியாயத்தராசை ராசிச் சின்னமாகக் கொண்ட துலாம் ராசியில் உச்சம் அடைகிறார். சனி சுப வலுப்பெற்றால் மட்டுமே பிறப்பு முதல் இறப்பு வரை வசதியான வாழ்க்கை, நிறைந்த தொழில், நீண்ட ஆயுள் இவற்றை ஒரு மனிதன் பெற முடியும். சனி ஒளியற்ற இருளைச்சுட்டிக் காட்டக் கூடிய கிரகம். வாழ்வில் நடக்கும் மங்கலம் இல்லாத விஷயங்களை சுட்டிக் காட்டும் கிரகம். சனி தூய்மையின்மை, அழுக்கு, தடை, தாமதம், சோம்பல், ஊனம் போன்றவற்றிற்கு காரக கிரகம் என்பதால் சுய ஜாதகத்தில் சனி பலம் குறைந்தால் வறுமை, கடன், நிலையில்லாத தொழில், கஷ்ட ஜீவனம், தடை, தாமதம் போன்றவை நிறைந்து இருக்கும்
இனி பனிரெண்டு ராசிக்கு சனி தோஷம் நீக்கும் பரிகாரங்கள் காணலாம்.
மேஷம்:- மேஷ ராசிக்கு சனி பகவான் 10,11- ம் அதிபதி. தொழில் ஸ்தானாதிபதி மற்றும் லாப அதிபதி. இவரே பாதகாதிபதி என்பதால் ஆட்சி, உச்சம் பெறுவதை விட சுப கிரக சம்மந்தம் பெறுவது திரிகோணாதிபதி சாரம் பெறுவது என சூட்சம வலுப்பெற்றால் சிறப்பு. சனி சுப வலுப்பெற்றால் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். இவர்களது திறமைகள் வெளி உலகத்திற்கு தெரியும் படியாக புகழ், அந்தஸ்துடன் இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட லாபகரமான தொழில் புரிவார்கள். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். நிலையான, நிரந்தரமான லாபம் நிறைந்திருக்கும். அதிகாரப் பதிவுகள் தேடி வரும். அரசியல் ஆதாயம் உண்டு. சனி வலுக் குறைந்தால் அசுப கிரக சம்பந்தம் இருந்தால் நினைத்ததை செயல்படுத்த முடியாத வகையில் தடை இருக்கும். சிலர் படித்த படிப்பிற்கு தகுந்த தொழில், வேலை கிடைக்காது. பரம்பரையாக அடிமையாக கஷ்டமான வேலையில் சொற்பமான பணம் சம்பாதிப்பார்கள்.
பரிகாரம்:- சனிக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.
ரிஷபம்:- ரிஷப ராசிக்கு சனி 9,10-ம் அதிபதி. பாக்கியாதிபதி, தொழில் ஸ்தான அதிபதி மற்றும் பாதகாதிபதி. சுய ஜாதகத்தில் சனி சுப வலுப்பெற்றால் தயாள குணம் கொண்டவர்கள். முன்னோர்கள் வம்சாவழியாக சுய தொழில் செய்தவர்களாக இருப்பார்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். இது தர்ம கர்மாதிபதி யோகமாகும். தந்தை வழி குலத்தொழிலை தொடர்ந்து செய்பவர்களாக இருப்பார்கள். பூர்வீக சொத்து, தொழில் மூலம் வருமானம் உண்டு. தொழிலில் நேர்மை, நாணயம் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்திடம் பாராட்டும் புகழும் பெறுவார்கள். அரசாங்கத்தில் உயர் பதவி உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணக்கூடியவர்கள். சனி அசுப வலிமை பெற்றால் தொழில் மூலம் தன் சந்ததிகளுக்கு பாவம் சேர்த்து வைப்பார்கள்.
பரிகாரம்:- சனிக்கிழமை சனி ஒரையில் சிவனுக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழபடவும்.
மிதுனம்:- மிதுன ராசிக்கு சனி அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. சனி தசை வராத வரை மிதுன ராசியினர் பாக்கியவான்கள். சனி தசை காலங்களில் சனி பகவான் எந்த நிலையில் இருந்தாலும் அஷ்டமாதிபதி வேலையை நடத்தத் தவறுவது இல்லை. கடந்த இரண்டரை ஆண்டுகள் சனி மகரத்தில் நின்ற போது அஷ்டமச் சனியினால் அல்லல் பட்ட மிதுன ராசியினரை விட மிதுன லக்னத்தினர் தான் அதிகம். அதுவும் சனி தசை நடந்த மிதுன லக்னத்தினர் சாமானியர் முதல் சாதனையாளர்கள் வரை பட்ட அவமானம் சொல்லிமாளாது.
பரிகாரம்:- சனி தசை காலங்களில் அசைவ உணவை தவிர்த்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வர வேண்டும்.
கடகம்:- கடக ராசிக்கு சனி களத்திர ஸ்தானாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. சனி மகரம், கும்பத்தில் இருக்கும் காலங்களில் பிறந்த கடக ராசியினர் பலர் திருமண வாழ்க்கையில் விவாகரத்தை சந்தித்தவர்கள். அல்லது 30 வயதிற்கு மேல் திருமணம் நடந்தவர்கள். கிடைத்த திருமண வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போராடுபவர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகள் மகரத்தில் சனி இருந்த காலத்தில் 30, 35க்கு மேல் உள்ள பல கடக ராசியினருக்கு திருமணம் நடந்தது. சனி கும்பத்திற்குள் அதிசாரத்தில் நுழைந்தது முதல் தற்போது மீண்டும் பெயர்ச்சியாகி கும்பத்தில் ஆட்சி பலம் பெற்றது வரை விவாகரத்து வழக்கிற்காக அதிகம் வக்கீலையும், ஜோதிடரையும் சந்திப்பவர்கள் கடக ராசியினர். சனி பகவான் கர்மக் கணக்கை தக்க சமயத்தில் நேர் செய்து விடுவார் என்பதற்கு இதை விட வேறு எந்த சாட்சியும் தேவையில்லை.
பரிகாரம்:- சனிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.
சிம்மம்:- சிம்ம ராசிக்கு சனி 6, 7ம் அதிபதி. ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி. சற்று ஏறக்குறைய கடக ராசிக்கு சொன்ன அனைத்து பலன்களும் சிம்ம ராசிக்கு பொருந்தும். சனி தசை காலங்களில் திருமண வாழ்க்கையில் பிரச்சனையை சந்திக்காதவர்கள் கடனால், நோயால், ஜாமீன் பிரச்சனையால் நிம்மதி இழக்கிறார்கள்
பரிகாரம்:- சனிக்கிழமை சூரிய ஓரையில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
ஐ.ஆனந்தி
கன்னி:- கன்னி ராசிக்கு சனி பகவான் 5,6-ம் அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி. சனி சுப வலுப்பெற்றால் பூர்வ புண்ணியம் மிகுந்தவர்கள். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்து உடன் வரும். தாத்தாவின் தொழிலை செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பிள்ளைகள் குல கவுரவத்தை காப்பாற்றுவார்கள். அறிவாளியாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள். குல தெய்வ அருள் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது கவுரவ பதவியில் இருப்பார்கள்.
அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன் படுத்துவார்கள். சிலர் அதிர்ஷ்ட வசத்தால் திடீர் பணக்காரர்களாக மாறுவார்கள். சனி பலம் குறைந்தால் அதிர்ஷ்டம் குறைவுபடும். புத்திக்கூர்மை குறைவுபடும். புத்திர தோஷம் உண்டாகும். சிலருக்கு வம்சம் தலைக்காது. சிலருக்கு வாரிசுகளால் குடும்ப கவுரவம் கெடும். புகழ், அந்தஸ்து கவுரவம் மட்டுப்படும். குல தெய்வ அருள் கிடைக்காது.
பரிகாரம்:- பவுர்ணமி நாட்களில் குலதெய்வ, சிவ வழிபாடு நடத்துவது நல்லது.
துலாம்:- துலாம் ராசிக்கு சனி 4,5-ம் அதிபதி. சுக ஸ்தானாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. சனி சுப வலுப்பெற்றால் முன்னோர்களால், குலதெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பரம்பரை பூர்வீகச் சொத்து நிச்சயம் உண்டு. அதிர்ஷ்டம், குன்றாத செல்வம், புகழ், கீர்த்தி உண்டு. குலப் பெருமை, கவுரவம் உண்டு. புத்திரர்களால் நிம்மதி, சந்தோஷம் அடைவார்கள். பிள்ளைகள் பிறந்த பின்பு வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். சொத்துக்கள் குவிந்து கொண்டே இருக்கும். சொத்துக்கள் மூலம் நிரந்தர வருமானம் உண்டு. பல அடுக்குமாடி வீடு கட்டுபவர்கள், வாழ்நாள் முழுவதும் பூர்வீகச் சொத்தில் வசிப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறப்பவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும். இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கும். சனி அசுப வலுப்பெற்றால் பூர்வீகம் குல தெய்வம் தெரியாது. பெற்றவர்களின் நிம்மதியை குலைக்கும் குழந்தைகளே பிறக்கும்.
பரிகாரம்:- குல தெய்வ கோவில் அல்லது சிவன் கோவிலில் ஆல மர, அரச மரங்களை நட்டு வளர்க்கவும்.
விருச்சிகம்:- விருச்சிக ராசிக்கு சனி பகவான் 3,4-ம் அதிபதி. சகாய ஸ்தானாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதி. சனி சுப வலுப்பெற்றால் தைரியம், தன்னம்பிக்கை, திடகாத்திரம், ஆரோக்கியம், இன்பம், மகிழ்ச்சி உடையவர். தன் சுய முயற்சியால் நல்ல பொருளாதார வளர்ச்சி உண்டு. இன்பம், செல்வம் அறிவு நிரம்ப பெற்றவர். தாய் வழி ஆதரவு உண்டு. தன்னை சார்ந்தவர்களும் உயர உதவுபவர். வீடு, வாகன வசதி உண்டு. உற்றார், உறவினர்களால் போற்றப்படுவார்கள். ஆரம்பகல்வி, பள்ளி படிப்பில் முதன்மையான மாணவராக திகழ்வார்கள். சனி அசுப வலுப்பெற்றால் சில கெட்டபழக்கங்கள் அல்லது உடல்நிலையை பாதுகாக்க நேரமின்மை போன்றவற்றால் உடல்நலம் பாதிக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் மிகுதியாக இருக்கும். குடும்ப உறவுகளின் ஆதரவின்மை பங்கு துரோகம் உண்டு. தாயன்பு கிடைக்காது. கல்வி தடைபடும்.
பரிகாரம்:- சனிக்கிழமை செவ்வாய் ஓரையில் நல்லெண்ணெய் தீபம் 6 ஏற்றி முருகப் பெருமானை வழிபடவும்.
தனுசு:- தனுசு ராசிக்கு சனி பகவான் 2, 3-ம் அதிபதி. தன அதிபதி, முயற்சி ஸ்தான அதிபதி. சனி சுப வலுப்பெற்றால் சுயமாக சிந்தித்து செயல்படுவார்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து கூட்டுக் குடும்பமாக வசிப்பார்கள். அல்லது இவர்களுடைய பொருளாதாரம் உடன் பிறந்தவர்களுக்கே பயன்படும் அல்லது உடன் பிறந்தவர்களுக்காகவே வாழ்வார்கள். சகோதர ஆதாயம் உண்டு. தன் தனித் திறமையால் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அதிகம் சம்பாதித்து பிரபலமடைவார்கள். சனி அசுப வலுப்பெற்றால் வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருப்பார்கள். பிறரை நம்பாதவர்கள். ஞாபகசக்தி குறைவால் திறமையை வெளிப்படுத்த முடியாதவர்கள். சிலருக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் தங்காது.
பரிகாரம்:- சனிக்கிழமை பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.
மகரம்:- மகர ராசிக்கு சனி ராசி அதிபதி மற்றும் தன அதிபதி. சுய ஜாதகத்தில் சனி வலுப்பெற்றால் சுப வலுப்பெற்றால் ஜாதகர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறக்கும் போது குடும்பம் சாதாரண நிலையில் இருந்தாலும் இவர் பிறந்த பிறகு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ஜாதகரிடம் பொது நல சிந்தனை மிகுதியாக இருக்கும். இடம் பொருள் ஏவல் பார்த்து வாக்கு பிரயோகம் செய்வார். அதிகாரமான தெளிவான பேச்சால் அனைவரையும் கவருபவர். தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். எப்பொழுதும் தன் சுய பெருமைகளைப் பற்றி பிறரிடம் பேசிக் கொண்டே இருப்பார். இவர்கள் பூர்வீகத்தில் வருமானம் ஈட்டி சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். மகிழ்சியான குடும்ப வாழ்க்கை அமையும். சனி அசுப வலிமை பெற்றால் கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வீகத்தில் வாழ முடியாத நிலை, குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை இன்மை, பிறரை அண்டி பிழைத்தல் போன்ற நிலை நீடிக்கும். கண் தொடர்பான பிரச்சினை இருக்கும்.
பரிகாரம்:- சனிக்கிழமை குளத்து மீன்களுக்கு பொரியிட வேண்டும்.
கும்பம்:- கும்ப ராசிக்கு சனி பகவான் ராசி அதிபதி மற்றும் விரய அதிபதி.
ராசி அதிபதி சனியே விரய அதிபதியாக இருப்பதால் தனக்கு நடக்கும் நல்லது கெட்டது இரண்டிற்கும் ஜாதகரே காரணமாக இருப்பார். அதனால் சனி ஆட்சி உச்சம் பெறக்கூடாது. சூட்சும வலுப்பெற வேண்டும். சனி சூட்சம வலுப்பெற்றவர்கள் வெளியூர், வெளிநாட்டில் வசித்தால் விரயம் இருக்காது. பூர்வீகத்தில் வசித்தால் நிலையான வருமானம் இருக்காது. பிறருக்கு அடிமையாக தன் உழைப்பை விரயம் செய்து கஷ்ட ஜீவனம் நடத்த வேண்டும்.
பரிகாரம்:- சனிக்கிழமை பித்ருக்களை வழிபட வேண்டும்.
மீனம்:- மீன ராசிக்கு சனி பகவான் லாப அதிபதி, விரய அதிபதி. சுய ஜாதகத்தில் சனி வலுப்பெற்றால் பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரவாதிகள். ஜாதகர் செல்வாக்கு மிகுந்தவர். எதிலும் வெற்றி நிச்சயம். தன் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாகனம், சொத்து சுகம் போன்ற வசதிகளை அடைவார்கள். ஜாதகருக்கு மூத்த சகோதரத்தால், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு. பிறவியில் ஏழையாக இருந்தாலும் இரண்டாம் திருமணத்திற்குப் பிறகு அசுர வளர்ச்சி உண்டு. சனி அசுப வலுப் பெற்றால் வெளிநாட்டு, வெளி மாநில வாழ்க்கை சிறப்பு. மூத்த சகோதரம், சித்தப்பாவிற்கு, இளைய மனைவிற்கு அதிக செலவு, விரயம் செய்ய நேரும். கடன் தொல்லை உண்டு. எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் இருக்கும். தொழிலுக்காக கடன் பட நேரும் அல்லது தொழில் கடனை அடைக்க முடியாது. சிலர் கடனுக்கு பயந்து தலை மறைவாக வாழ நேரும்.
பரிகாரம்:- சனிக்கிழமை சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும். சுய ஜாதகத்தில் சனி தோஷத்தால் இன்னல்களை அனுபவிப்பவர்கள் மேலே கூறிய பரிகாரங்களை கடைபிடிக்க சுப பலன்கள் அதிகரிக்கும்.
செல்: 98652 20406






