என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மாற்றி யோசித்தல்
    X

    பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் 'மாற்றி யோசித்தல்'

    • மாற்றி யோசியுங்கள் என்று ஒரு புதிய வழியைக் காண்பிக்கிறார் எட்வர்ட் டி போனோ!
    • பிரிட்டானிய ஏர்வேஸ். ஆப்பிள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களில் உள்ளோருக்கு இதில் பயிற்சியும் தர ஆரம்பித்தார்.

    பிரச்சனைகளும் தீர்வுகளும்: வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அன்றாடம் ஏராளமான பிரச்சனைகள் தோன்றுகின்றன. சிந்திக்கி றோம்; சிலவற்றிற்குத் தீர்வு கிடைக்கிறது. சிலவற்றிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறோம்.

    மாற்றி யோசியுங்கள் என்று ஒரு புதிய வழியைக் காண்பிக்கிறார் எட்வர்ட் டி போனோ!

    மாற்றி யோசிப்பது என்றால், அது என்ன? எப்படி மாற்றி யோசிப்பது?

    இதை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட புதிர்களை முதலில் விடுவியுங்கள்.

    முடியாவிட்டால் விடைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது! அதைப் பார்த்துக் கொள்ளலாம்.

    புதிர் - 1: ஒரு பெண்மணிக்கு ஒரே நாளில் ஒரே சமயத்தில் இரு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் அவர்கள் இரட்டையர் இல்லை. அப்படி என்றால் இதற்கான விளக்கம் என்ன?

    புதிர் - 2: வேகமாகச் சென்ற ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணித்த தந்தை உடனே இறந்து விடுகிறார். அபாய நிலையில் இருந்த பையனை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கின்றனர். அறுவைசிகிச்சைக்காக உள்ளே வந்த சர்ஜன், "இந்த ஆபரேஷனை என்னால் செய்ய முடியாது. இவன் எனது மகன்" என்கிறார். இதற்கான விளக்கம் என்ன?

    புதிர் - 3: அழகிய ராஜகுமாரியை ஏழை ஒருவன் காதலித்தான். அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். ஆனால் இதை அறிந்து கொண்ட அரசன் கோபப்பட்டான். அவனுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் அவன் தன் மக்களிடம் தான் நேர்மை தவறாத ஒருவனாக நடந்து கொள்வதாகக் காண்பிக்க ஆசைப்பட்டான். அரசவையைக் கூட்டிய அரசன் தான் இரு துண்டுச் சீட்டுகளை ஒரு பெட்டியில் போடுவதாகவும் ஒன்றில் வேண்டாம் என்று இருக்கும், இன்னொன்றில் மணம் புரியலாம் என்று இருக்கும் என்றும் எந்த ஒன்றை அந்த ஏழை எடுக்கிறானோ அதன் படியே முடிவு இருக்கும் என்று சொன்னான்.

    பெட்டியில் இரு துண்டுச் சீட்டுகளை அவன் மக்களின் முன்னே போட்டான். ஆனால் அந்த இரண்டிலும் வேண்டாம் என்றே எழுதப்பட்டிருந்தது. இது யாருக்கும் தெரியாது.

    ஏழையைக் கூப்பிட்டு ஒரு சீட்டை எடு என்றான் அரசன்.

    அரசனின் தந்திரத்தை ஏழை புரிந்து கொண்டான். மாற்றி யோசித்தான். செயல்பட்டான்

    ராஜகுமாரியை மணந்து கொண்டான். எப்படி?

    புதிர் - 1 : விடை: அந்தப் பெண்மணிக்கு இரண்டுக்கும் மேல் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்தக் குழந்தைகளை இரட்டையர் என்று சொல்ல முடியாதல்லவா?!

    புதிர் - 2: விடை: ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த சர்ஜன் பையனுடைய அம்மா!

    புதிர் - 3: விடை: தனது மாமனராக ஆகப் போகும் அரசனை இழிந்தவனாகக் காட்டக் கூடாது. அதே சமயம் தான் ராஜகுமாரியையும் மணந்து கொள்ள வேண்டும். இரண்டு சீட்டுகளையும் மக்கள் முன்னால் காண்பியுங்கள் என்றோ அரசன் நியாயமானவன் இல்லை என்றோ சொன்னால் அதன் பின் விளைவுகள் நன்றாக இருக்காது.

    ஆகவே அந்த ஏழை யோசித்தான். பெட்டியில் கையை விட்டு ஒரு சீட்டை எடுத்தான். அதைப் படித்தான். அதை உடனே சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டான்.

    "அரசரே! நான் எடுத்த சீட்டில் மணம் புரியலாம் என்று எழுதப்பட்டிருந்தது என்றான். அடுத்த சீட்டை எடுத்துப்பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள், மக்களுக்கும் காட்டுங்கள்" என்றான் அவன்.

    இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. அடுத்த சீட்டில் வேண்டாம் என்று இருக்கிறது.

    ஆகவே அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதோடு தனது மருமகனாக வருபவன் ஒரு புத்திசாலி, தன் பெயரைக் காப்பாற்றுவான் என்பதையும் புரிந்து கொண்டான்.

    ச.நாகராஜன்

    திருமணம் நடந்தது!

    மாற்றி யோசியுங்கள்! நிலைமையைச் சமாளியுங்கள்!!

    மாற்றி யோசித்து எப்படி ஒரு நிலைமையைச் சமாளிப்பது?

    இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு அருமையான சம்பவம் உண்டு.

    ஒரு கைதி தனது மனைவிக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் அதிகாரிகளால் நன்கு படிக்கப்பட்டு சென்ஸார் ஆன பின்னே அவளிடம் சேர்க்கப்படுகிறது என்பதை நன்கு அறிவான்.

    ஒரு நாள் மனைவியிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. மனைவி, தனக்கு தோட்டத்தில் செடிகளை நட ஆசை என்றும் ஆனால் தோட்டத்தில் உள்ள பூமியை உழுது தோண்டும் மெஷினை தனக்கு இயக்கத் தெரியாதென்றும் எழுதி இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் அவள் வருத்தப்பட்டிருந்தாள்.

    கைதி உடனே பதில் எழுதினான் மனைவிக்கு: "அன்பே! அப்படி எதுவும் செய்து விடாதே! அந்தத் தோட்டத்தில்தான் நான் திருடிய அத்தனை சொத்தையும் புதைத்து வைத்திருக்கிறென்" என்று!

    ஒரே வாரத்தில் மனைவிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.

    திடீரென்று அரசு அதிகாரிகள் அங்கு வந்து நிலத்தை நன்கு தோண்டி எதையோ தேடினர் என்றும் ஒன்றும் காணாமல் திரும்பிப் போய் விட்டனர் என்றும் இப்போது செடிகளைதான் விரும்பியபடி நடப் போவதாகவும் எழுதியிருந்தாள்.

    கைதிக்கு மகிழ்ச்சி. மாற்றி யோசித்து ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்டான் அல்லவா! அதனால்!

    இதே போல் ஏராளமான சுவையான மாற்றி யோசிக்கும் வழிகளைக் கூறும் புதிர்களும் நிஜ சம்பவங்களும் உண்டு.

    இதை உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர் தான் எட்வர்ட் டி போனோ

    பிறப்பும் இளமையும்: எட்வர்ட் சார்லஸ் ஃபிரான்ஸிஸ் பியூப்ளியஸ் டி போனோ தெற்கு ஐரோப்பாவில் உள்ள மால்டா என்ற தீவில் செயிண்ட் ஜூலியன்ஸ் பே என்ற இடத்தில் 1933-ம் ஆண்டு மே மாதம் 19-ம் நாள் அன்று பிறந்தவர்.

    வகுப்பில் படிக்கும் போதெல்லாம் இவரே வகுப்பில் மிகவும் குறைந்த வயதுள்ள மாணவனாக இருப்பார். ஒவ்வொரு வகுப்பாகப் போகாமல் இரண்டு முறை மேல் வகுப்புகளுக்கு படிப்பில் சூரனாக இருந்ததால் தாவினார். பின்னர், மால்டா பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவர் ஆனார். பின்னர் ஆக்ஸ்போர்டுக்குச் சென்றார். அங்கு உளவியலிலும் மனவியலிலும் தேர்ச்சி பெற்றார். தனது பிஹெச்.டி பட்டத்தைப் கேம்பிரிட்ஜில் பெற்றார்.

    லேடரல் திங்கிங் (பக்கவாட்டு சிந்தனை):

    பக்கவாட்டுச் சிந்தனை எனப்படும் லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா உத்தியைக் கண்டுபிடித்து அதை உலகமெங்கும் பரப்ப ஆரம்பித்தார் இவர்.

    1967-ம் ஆண்டு தனது முதல் நூலான 'தி யூஸ் ஆஃப் லேடரல் திங்கிங்' என்ற நூலை அவர் வெளியிட்டார். சிறிது காலத்திலேயே பிரபலமான அவரது புதிய சிந்தனா முறையால் சைமன்ஸ், நோகியா. ஷெல் உள்ளிட்ட பன்னாட்டு உலக நிறுவனங்கள் அவரை அழைத்து இதில் பயிற்சியைத் தருமாறு வேண்டின...

    பிரிட்டானிய ஏர்வேஸ். ஆப்பிள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களில் உள்ளோருக்கு இதில் பயிற்சியும் தர ஆரம்பித்தார்.

    இங்கிலாந்து, ஜப்பான், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இவர் அழைக்கப்பட்டார். 1982-ல் பிபிசியில் ஒளிபரப்பான இவரது நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

    எதையும் புதிய கோணத்தில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தால் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் என்பது இவரது கொள்கை.

    லேடர்ல் திங்கிங் பற்றிய இவரது நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆயிற்று. 46க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டது, 85க்கும் மேற்பட்ட இவரது நூல்கள், முன்னேறத் துடிக்கும் அனைவரும் நாடும் நூல்களாக அமைந்தன.

    மனித குலத்தின் சிந்தனா போக்கை உருவாக்கிய 250 பேரில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    திட்டத்தின் கருவிகள்: லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா முறைக்கு சிந்திக்கும் வழிமுறைக்கான கருவிகள் பல உள்ளன. அவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:-

    உங்களின் எண்ணத்தால், திட்டத்தால், முடிவால் ஏற்படப் போகும் குறுகிய கால நீண்ட கால விளைவுகள் என்ன?

    உங்கள் எண்ணத்தின் அல்லது திட்டத்தின் நல்ல விளைவுகள், தீய விளைவுகள் அல்லது சுவையான நிகழ்வுகள் எதாக இருக்கும்?

    இந்த திட்டத்தின் எல்லை எது? இதை அமுல்படுத்த வசதியாக இருக்கும் சின்ன சின்ன அம்சங்களும் கால அளவும் என்ன?

    இந்த திட்டத்தால், செயலால், முடிவால் என்னென்ன நேரலாம்? முழுவதும் அலசிப் பாருங்கள்

    இந்தத் திட்டத்தின் நோக்கம், குறிக்கோள் என்ன? இது ஏன் முக்கியமாக இருக்கிறது?

    இதை நிறைவேற்ற மாற்று ஏற்பாடுகள், திட்டங்கள், விருப்பத் தேர்வுகள் உண்டா?

    இதைப் பற்றிய மற்றவர்களின் கருத்து, பார்வை என்ன? இதை எப்படி அவர்கள் ஏற்கக் கூடிய விதத்தில் விளக்க முடியும்?

    இதில் உள்ள மிக மிக முக்கியமான மதிப்புள்ள விஷயங்கள் யாவை?

    இதை செயலாக்குவதில் முதலில் செய்ய வேண்டியவை, அடுத்து செய்யவேண்டியவை என்ற பட்டியல் ரெடியா?

    இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு, இதன் விளைவு, செய்யப்படும் முறை, செயல் திட்டம் ஆகியவை தயாராக இருக்கிறதா?

    இப்படி முதலில் பக்கவாட்டுச் சிந்தனை

    கருவிகள் எனப்படும் இந்தக் கேள்விகளுக்

    கான பதிலை தயார் செய்யுங்கள். பிரச்சனை சுமுகமாக முடியும்!

    புதிய குறியீட்டு மொழி உருவாக்கம்:

    2000-ம் ஆண்டில் இப்போதுள்ள மொழிகள்

    ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்லும்

    விதத்தில் வார்த்தைகளைக் கொண்டிருக்க வில்லை என்றும் ஆகவே குறியூட்டு வார்த்தைகள் கொண்ட ஒரு மொழியைத் தான் உருவாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 'தி எட்வர்ட் டி போனோ கோட் புக்' என்ற இவரது புதிய புத்தகம் உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அது என்ன குறியீட்டு மொழி?

    எடுத்துக்காட்டாக டி போனாவின் 6/2 என்பதைச் சொன்னால் அது, "நீ எனது கருத்தின் பார்வையை எனக்குக் கொடு. நான் உனது கருத்தின் பார்வையை உனக்குக் கொடுக்கிறேன்" என்று பொருளாகும். இப்படி ஒரு புதிய மொழியை அவர் உருவாக்கினார்.

    புதிய சிந்தனா முறையால் உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சச்சரவுகளைப் போக்கிக் கொள்ளலாம் என்பது இவரது ஆக்கபூர்வமான எண்ணமாக இருந்தது.

    புதிய சிந்தனா முறைக்கான உலக மையத்தை (தி வோர்ல்ட் செண்டர் ஃபார் நியூ திங்கிங்) இவர் மால்டாவில் நிறுவினார்.

    குடும்பம்: டி போனோ 1971-ல் ஜோஸபைன் ஹால் ஒய்ட் என்பவரை மணந்தார். இரு மகன்கள் பிறந்தனர். பின்னால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். டி போனோ தனது 88-ம் வயதில் 2021 ஜூன் 9-ம் நாளன்று இயற்கை எய்தினார்.

    அவரது கூற்றுகளில் சில:

    படைப்பாற்றல் சிந்தனை என்பது ஒரு திறமை அல்ல, அது வளர்க்கப்படக்கூடிய ஒரு சாமர்த்தியம் தான்!

    படைப்பாற்றல் என்பது சம்பிரதாயமான வழிகளை உடைத்து வித்தியாசமான வழியில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது தான்!

    மனம் எதைப் பார்க்கத் தயாராக இருக்கிறதோ அதைத் தான் பார்க்கும்!

    நுண்ணறிவு என்பது பிறப்புடன் வருவது. சிந்திப்பது என்பது கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு திறமை!

    புதிய சிந்தனா முறையை மேற்கொள்வோமா டி போனோவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து விட்டு!

    Next Story
    ×