என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- கேரள கடற்கரை பகுதி முதல் மங்களூர் வரை பரசுராம சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
- தசரா பண்டிகையின் பத்து நாட்கள் இங்குள்ள கொலு மண்டபத்தில் ஒன்பது தேவிகள் கொலு வைக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் போல் பரபரப்பு இல்லாமல் அரபிக் கடலோரம் அழகானதொரு நகரான மங்களூர் தென்கன்னட மாவட்ட தலைநகராக விளங்குகிறது.
இங்கு வசிக்கக்கூடிய மக்கள் பேசும் மொழிகளில் முதன்மையான மொழியாக துளு உள்ளது. கன்னடம், மலையாளம் இஸ்லாமிய மக்கள் பேசும் பேரி..இந்துக்கள் பேசும் கொங்கணி வேறு, கிறித்துவ கொங்கணி வேறு.. இவ்வாறாக பல மொழி பேசும் மக்களின் சங்கமமாக மங்களூர் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே இருக்கும் இந்த நகரை அடைவதற்கு முன் நேத்ராவதி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள ரெயில் மற்றும் வாகனங்கள் செல்லக்கூடிய இரண்டு பாலங்களும் நம்மை வரவேற்கும். நேத்ராவதி மற்றும் குருபுரா நதிகள் இந்த நகரை சுற்றி வருகின்றன.
மங்களூரை ஒட்டி உள்ள இன்னொரு மாவட்டம் உடுப்பி. இந்த இரண்டு மாவட்டங்களும் ஆன்மீகச் சுற்றுலா செல்வதற்கு மிகவும் உகந்த இடங்களை.. சிறப்பு வாய்ந்த கோவில்களை... கொண்டதாக உள்ளன.
குறிப்பாக வருடத்தின் 365 நாட்களும் தமிழகத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் பேருந்துகள்... ரெயில்... விமானம்....மகிழுந்துகளின் வழி வந்து போய் கொண்டே இருப்பதன் மூலம் இந்த மாவட்டங்களின் சிறப்பை அறிய முடிகிறது.
கேரள கடற்கரை பகுதி முதல் மங்களூர் வரை பரசுராம சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு பார்க்க வேண்டிய கோவில்கள் பல இருந்தாலும் மங்களூர் என பெயர் வர காரணமாக இருக்கும் மங்களாதேவி கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவிலாக இருக்கிறது.
"குதிரொலி கோகர்நாத்"கோவில் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் இப்போது கட்டியவாறு கண்களை கவரும் வகையில் உள்ளது. சுவர்களில் அமைக்கப்பட்ட கடவுள் சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டு தகதகவென மின்னுவதும் தூய்மையான பராமரிப்பும் நம்மை பார்த்து வா வா அழைப்பது போலிருக்கும். இந்த கோவிலில் மூலவராக "கோகர்ண நாதரும் அன்னையான அன்னபூரணியும்" அருள்பாலிக்கின்றனர். மற்றும் பல சன்னதிகளும் அழகுடன் பக்தி கலந்த உணர்வை ஊட்டும்.
தசரா பண்டிகையின் பத்து நாட்கள் இங்குள்ள கொலு மண்டபத்தில் ஒன்பது தேவிகள் கொலு வைக்கப்படுகிறது. மைசூர் தசரா போன்று துளு கலாச்சாரத்தை முன்னிறுத்தும் வகையில் புராணங்களில் சொல்லப்பட்ட முக்கியமான காட்சிகளை மையப்படுத்தி பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து பவனி நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். (அடுத்த தசரா விடுமுறைக்கு மங்களூர் செல்ல திட்டமிட்டுக் கொள்ளுங்கள்)
கர்நாடக மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான கோவில், கதிரி மஞ்சுநாதர் கோவில் ஆகும். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இந்த கோவில் கேரள அமைப்பில் காணப்படுகிறது.

தேன்மொழி
இங்கு ஒன்பது பாகங்களாக பிரிக்கப்பட்ட அழகிய குளம் அமைந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு இந்த குளத்தில் பெண்கள் நீராடி இறைவனை வணங்குவார்கள்.
சுற்றிலும் பசுமையான மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில் காசிக்கு நிகரான கோவிலாக வணங்கப்படுகிறது.
இங்குள்ள விநாயகர் சன்னதி ஆனைமுகத் தாவாரத்தில் இருந்து தொடர்ந்து கொட்டும் தீர்த்தம் காசியில் இருந்து வரும் கங்கையாக நம்பப்படுகிறது.
அந்த சன்னதிக்கு மேலே பாண்டவர்கள் வந்து தங்கி சென்றதாக சொல்லப்படும் குகையும் அதன் அருகில் மிக உயர்ந்த ஆஞ்சநேயர் சிலையும், அதையும் தாண்டி மேலே ஏறிச் செல்ல... குழந்தைகள் பெரியவர்கள் விளையாடுவதற்கும் சுற்றி திரிவதற்கும் ஏற்ற இடமாக "கதிரி பூங்கா" உள்ளது.
மேலும் இங்கு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மிலா கிராஸ் சர்ச்...பிஜய் சர்ச்...ரொசாரிய சர்ச் போன்ற பல தேவாலயங்களும், மங்களூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உள்ளாலா தர்கா போன்றவையும் சிறப்பு மிக்கவை.
செயின்ட் அலோசியஸ் தேவாலயத்தில் மேற்கூரையில் சுவர்களில் உள்ள வண்ண ஓவியங்கள் இன்று வரை வெகு அழகாக அப்படியே இருப்பதை காண முடிகிறது.
மங்களூர் நகரத்திற்கு வெளியே 35 கிலோமீட்டர் தொலைவில் "மூடுபத்திரி" என்ற இடத்தில் ஆயிரம் தூண்கள் கொண்ட ஜெயின் கோவில் அனைவரும் சென்று பார்க்கக்கூடிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டட கலையாக விளங்குகிறது.
மங்களூர் புதிய துறைமுகம் அரபிக் கடலில் ஒரு முக்கியமான துறைமுகமாகும். மங்களூர் நெய்தல் நில மக்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை "தக்கே" என்ற இடத்தில் சந்தைப்படுத்துகின்றனர்.
"பொக்கே பட்டணா" என்ற இடத்தில் மிதக்கும் உணவகம் உள்ளது. இரவு நேரத்தில் இசையுடன் வண்ண விளக்குகள் மிளிர.. சைவ அசைவ உணவுகள் குறிப்பாக கடல் உணவுகளை ருசிப் பார்த்துக் கொண்டே நேத்ராவதி நதியில் பயணித்து பொழுதுபோக்கலாம்.
பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நிச்சயதார்த்தம் போன்ற பல சுப நிகழ்ச்சிகளும் அந்த கப்பல் தளத்தில் கொண்டாடுகிறார்கள்.
பகல் நேரங்களில் சிறு படகுகள் மூலம் இக்கரையில் இருந்து அக்கரைக்கு தாண்டி கடற்கரையில் வசிக்கும் கிராம மக்களுடன் நாமும் அந்த இயற்கை எழிலை அனுபவிக்கலாம்.
இங்கு மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை தொடர்வதால் அந்த காலத்தில் மீன் பிடிக்க தடை. மழைக் காலங்களில் இதை போன்ற சேவைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
கடற்கரைகள்:
மங்களூரையொட்டி பல்வேறு அழகிய கடற்கரைகள் உள்ளன. கேரள எல்லைக்கு அருகில் உள்ள சோமேஸ்வரா என்ற இடம் பாறைகள் நிறைந்த கடற்கரையாகும். இங்கு சோமேஸ்வரர் என்ற பழமையான கோவிலும் உள்ளது.
இந்த கடற்கரையில் மாலை 5 மணி அந்தி சாயும் வேளையில் உலா சென்றால் பாறையில் வந்துபோதும் அலைகள், நம்மீது தெறிக்கும் நீர்த்திவலைகள் அளிப்பது மகிழ்ச்சியானதொரு அனுபவம்.
மங்களூரை அடுத்து உள்ள பனம்பூர் கடற்கரை தற்போது சுற்றுலாப் பயணிகள் தேடிப் போகும் குட்டி கோவாவாக மாறி வருகிறது. "ஸ்கை டைனிங்" எனப்படும் 120 அடி உயர கோபுரத்தில் உணவகம் அமைந்துள்ளது. இதில் அமர்ந்து கடற்கரையின் எழிலை பருகிக் கொண்டே உணவு அருந்தலாம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
"சீ வாக்" என்னும் மிதக்கும் கடல் பாலத்தில் அலைகளின் வேகத்திற்கேற்ப நடப்பது, கடலின் மேல் நடப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆழமில்லாத கடல் பகுதி என்பதால் மக்கள் கூட்டம் விடுமுறை நாட்களில் அலை மோதுகிறது.
பிலிகுலா: மங்களூர் நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிலிகுலா என்னும் இடம் பொழுதுபோக்குக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள இடமாகும்.
மானசா தீம் பார்க்....நீர் சறுக்கு விளையாட்டுகள்... நீச்சல் குளம் மற்றும் சாகச விளையாட்டுக்கள் போன்ற பொழுதுபோக்குகள் நிறைந்த இடமாக அது இருக்கிறது.
அதன் அருகிலேயே உள்ள உயிரியல் பூங்காவில் வரிகுதிரை, ஒட்டகச்சிவிங்கி தவிர அனைத்து வகை விலங்கினங்களும் கண்டு ரசிக்கலாம்.
கோளரங்கம் மற்றும் இயற்பியல் செய்முறைகளை விளக்கும் வகையில் அரங்கமும் அமைந்துள்ளது. இது கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.
அங்குள்ள ஏரியும் அதனை ஒட்டியுள்ள பூந்தோட்டங்களும் அந்த இடத்தை விட்டு நகராமல் நம்மை கட்டிப் போடக் கூடியவைகளாக இருக்கிறது.
இவை அனைத்தும் மங்களூர் நகரை சுற்றி 30 கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதியில் அமைந்துள்ளன.
இங்கே இருக்கக்கூடிய துளு மக்களின் "யட்சகானா, பூத்த கோலா" என்ற பாரம்பரிய வழிபாட்டு முறை பார்க்க வியப்பாக இருக்கும். ஜல்லிக்கட்டு போன்று 'கதிரி கம்ளா' என்ற விழாவும் வருடத்தில் பல இடங்களில் பரவலாக நடத்தப்படுகிறது.
"குத்து மனே"என்று அழைக்கப்படுகின்ற வீடுகள் துளுவ மக்களின் பாரம்பரியத்தின் பண்புகளை பறைசாற்றுவதாக இருக்கின்றன.
இவ்வாறாக கடலும் மலையும் சூழ்ந்த இந்நகரம் மருத்துவம் பொறியியல் போன்ற மேற்படிப்பு படிப்பதற்கு ஏற்ற நகரமாகவும் உள்ளது.
பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் விமான சேவை இங்கு இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இருந்து ரெயில்களும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
உடுப்பி, கொல்லூர் மூகாம்பிகை கோவில் செல்வதற்கும், மேலும் பல முக்கிய இடங்களுக்கு செல்வதற்கும் மங்களூர் மையமாக விளங்குகிறது. எனவே மங்களூர் சுற்றுலா வருபவர்கள் மகிழ்வான அனுபவங்களை நிச்சயம் பெறலாம்.
இணைய முகவரி:
thaenmozhi27@gmail.com
- கறுப்பினப் பெண்மணிகளுக்கு சிகை அலங்காரம் பற்றிச் சொல்லிக் கொடுத்தார்.
- கனவில் கண்ட கலவை அமோக விற்பனையைத் தந்தது.
ஏழு வயதிலேயே அனாதையாக ஆகி, வீடுகளில் வேலை பார்த்து, ஒவ்வொரு தொழிலாக மாறி ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணிகளில் முதல் கோடீசுவரியாக ஆன ஒருவர் யார் தெரியுமா?
உலகம் வியக்கும் மேடம் சி.ஜே.வாக்கர் என்பவரே அந்தப் பெண்மணி! அது மட்டுமல்ல கின்னசு ரெக்கார்டில் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க கோடீசுவரி என்று அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவரும் இவர் தான்?
பிறப்பும் இளமையும்: மேடம் சி.ஜே. வாக்கர் என்று பின்னால் பிரபலமாக அறியப்பட்ட சாரா பிரீட்லவ், ஓவன் மற்றும் மினர்வா பிரீட்லவ் ஆகியோருக்கு 1867-ம் ஆண்டு பிறந்தார். கூடப் பிறந்தவர் ஐவர். மூத்தவர் இவரே. ஐந்து வயதில் தாய் இறந்தார். தந்தையும் அவரது ஏழாம் வயதில் இறந்தார். மிசுஸிபியில் இருந்த தனது மாமா வீட்டிற்கு அவர் சென்றார். அங்கு வீடுகளில் எடுபிடி வேலை செய்யும் வேலைக்காரியாக ஆனார். படிப்பு என்பது மூன்றே மாதங்களில் அவருக்கு முடிந்து விட்டது.
குடும்பம்: 1882-ம் ஆண்டு அவரது 15-ம் வயதில் அவருக்கும் மோஸசு மக்வில்லியம்சு என்பவருக்கும் திருமணம் நடந்தது. லைலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. மோஸசு 1887-ல் இறக்கவே சாரா ஜான் டேவிட் என்பவரை 1894-ல் மணந்தார். ஆனால் ஒன்பது வருடங்களில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் 1906-ல் அவரது 39-ம் வயதில் செய்தித்தாள் விளம்பர விற்பனையாளராக இருந்த சார்லசு ஜோஸப் வாக்கர் என்பவரை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு அவர் மேடம் சி.ஜே.வாக்கர் என்ற பெயரால் அறியப்பட்டார்; பிரபலமும் ஆனார். மேடம் என்ற அடைமொழி பிரான்ஸில் ஒப்பனைப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபடுவோருக்குக் கொடுக்கப்படுவது வழக்கம்.
சுய தொழில் ஆரம்பம்: வாக்கருக்கு திடீரென்று தலை வழுக்கை ஆகும் அளவு கேசம் உதிரவே அதைச் சமாளிக்க கேசம் பற்றி தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.
கேசப் பராமரிப்பிற்கான பொருள்களைத் தயாரிக்கவும் ஆரம்பித்தார். கறுப்பினப் பெண்மணிகளுக்கு சிகை அலங்காரம் பற்றிச் சொல்லிக் கொடுத்தார். வீடு வீடாகச் சென்று தான் தயாரித்த பொருள்களை விற்க ஆரம்பித்தார்.
அவருக்கு எப்படி தலை முடிக்கான சிறப்பான கலவை ஒன்றை உருவாக்க முடிந்தது?
அவர் கண்ட கனவு ஒன்றினால்தான்! தனது தலை வழுக்கை பற்றி அவர் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் கண்ட கனவைப் பற்றி அவரே கூறுகிறார் இப்படி:
"இறைவன் எனது பிரார்த்தனைக்குச் செவி மடுத்தான். ஏனெனில் ஒரு நாள் கனவு ஒன்றைக் கண்டேன். அதில் ஒரு பெரிய கறுப்பான மனிதன் தோன்றி என் தலைமுடியில் என்னென்ன கலந்து பூச வேண்டும் என்று சொன்னான். அதில் சில ஆப்பிரிக்காவில் வளர்பவை. உடனே ஆப்பிரிக்காவைத் தொடர்பு கொண்டு அவற்றைத் தருவித்துக் கலவையை உருவாக்கினேன். என் தலையில் அதைப் பூசினேன். சில வாரங்களிலேயே என் தலைமுடி நன்கு வளர்ந்தது. அதே கலவையை சிலருக்குக் கொடுத்துப் பரீட்சித்துப் பார்த்தேன். அவர்களுக்கும் தலைமுடி வளர்ந்தது. பின்னர் தான் அதை விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தேன்."
கனவில் கண்ட கலவை அமோக விற்பனையைத் தந்தது.
இதே போல கனவினால் உந்தப்பட்டு பயன் பெற்றோர் வரலாற்றில் ஏராளம் பேர் உண்டு. உதாரணத்திற்குச் சிலரைச் சொல்லலாம்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சிறந்த விஞ்ஞானியான லூயி அகாஸிசு (1807-1853) மீன்களின் தொல்படிமங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வந்தார், ஒரு பாறையில் மீன் படம் ஒன்றைக் கண்டார். அது எந்த வகை மீன் என்று அவருக்குப் புரியவில்லை. அன்று இரவிலிருந்து மூன்று இரவுகள் தொடர்ந்த அந்த மீன் கனவில் தோன்றி தனது வகையை இன்னதென்று இனம் காட்டியது. அதாவது ஒரிஜினல் மீனைக் கனவில் அப்படியே அவர் கண்டார்.

ச.நாகராஜன்
கணித மேதை ராமானுஜன் கனவில் பல தீர்வுகளைக் கண்டார். அவர் கூறினார்: "தூங்கும்போது அசாதாரணமான ஒரு அனுபவத்தைப் பெற்றேன். ரத்தம் பாய்ந்து சிவப்பாக இருக்கும் ஒரு சிவப்புத்திரையைக் கண்டேன்.அதை உற்றுப் பார்த்தேன். அப்போது ஒரு கை அதில் எழுத ஆரம்பித்தது. எலிப்டிக் இண்டகரலில்' பல முடிவுகளை அது எழுதியது. விழித்து எழுந்தவுடன் அதை அப்படியே எழுதி வைத்துக் கொண்டேன்" நாமகிரி அம்மனே தன்னை வழி நடத்துவதாக அவர் பலமுறை கூறியதுண்டு.
பிரபலமான கோல்ப் விளையாட்டு வீரர் ஜாக் நிக்கோலசு மட்டையைப் பிடித்து விளையாடுவதில் பெரிய நிபுணர். ஒரு சமயம் அவருக்குப் பெரிய தொய்வு ஒன்று ஏற்பட்டது. அப்போது ஒரு புதன்கிழமை இரவில் அவர் கனவில் அவர் மட்டை பிடித்திருந்த விதத்தில் ஒரு மாறுதலைப் பார்த்தார். மறுநாள் வியாழக்கிழமை அதே உத்தியைக் கையாண்டபோது பெரிய வெற்றி ஏற்பட்டது. அதுவே அவருக்கு நிரந்தர உத்தியானது.
இதே போல ஜெர்மானிய விஞ்ஞானி ஆட்டோ லேவி, இன்னொரு ஜெர்மானிய விஞ்ஞானியான பிரடரிக் அகசுட் கெக்குலே ஆகியோர் கனவில் கண்ட வழிமுறைகளால் பெரும் வெற்றியைப் பெற்றனர்.
மேடம் வாக்கர் கம்பெனி: மேடம் சி.ஜே.வாக்கர் மானுபாக்ஸரிங் கம்பெனி என்ற நிறுவனத்தை 1910-ல் இண்டியானாபோலிசில் தொடங்கி ஷாம்பூ உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்து விற்க ஆரம்பித்தார்.
1911 முதல் 1919 முடிய ஆயிரக் கணக்கில் அவரிடம் விற்பனைப் பிரதிநிதிகளாக ஏராளமானோர் வேலைக்குச் சேர்ந்தனர்.
1917-ல் 20 ஆயிரம் பேருக்கு நிறுவனம் பயிற்சி தந்து விட்டது. அவர்கள் அனைவரும் தமக்கென ஒரு யூனிபார்ம் உடையை அணிந்து வலம் வந்தனர். தங்களுடன் கொண்டு சென்ற அழகு சாதனை பொருள்களை வீடு வீடாக எடுத்துச் சென்று அங்குள்ள பெண்மணிகளுக்கு ஒப்பனை செய்து அவர்கள் அழகை "எடுத்துக் காட்டினர்". கேட்க வேண்டுமா, ஆதரவு பெருகியது.
கரிபியன் மற்றும் மத்திய அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று தனது தயாரிப்புகளை அவர் அறிமுகப்படுத்தினார்.
தொழில் வளர்ச்சியில் அவரது மகள் லைலா பெரும் பங்கு வகித்தார். கடுமையான போட்டி அழகு சாதனப் பொருள்களின் தயாரிப்பிலும் விற்பனையிலும் நிலவி வந்தது. அதற்கு ஈடு கொடுத்து தொழிலை தாயும் மகளும் வளர்த்தனர்.
ஆங்காங்கே பியூட்டி பார்லர்களையும் சலூன்களையும் நிறுவி தங்கள் தயாரிப்புகளை மக்களிடையே அவர்கள் விளம்பரப்படுத்தினர்.
சுயமுயற்சியால் பெற்ற வெற்றி: அந்தக் காலத்தில் கறுப்பினப் பெண்கள் அடிமையாக விற்கப்பட்டனர். கொடுமையாக நடத்தப்பட்டனர். ஆபிரகாம் லிங்கன் (1809-1865) இதற்கு ஒருவழியாக முடிவு கட்டினார். மறுமலர்ச்சி காலமும் வர ஆரம்பித்தது!
1912-ல் நேஷனல் நீக்ரோ பிசினசு லீக் வருடாந்திர விழாவில் அவர் பேசினார்.
"நான் தெற்கில் பஞ்சு உற்பத்தியாகும் நிலப்பகுதியில் இருந்து வந்த பெண்மணி. அதிலிருந்து துணி தோய்ப்பதற்கு எனக்கு பிரமோஷன் கிடைத்தது. அதிலிருந்து பின்னர் சமையலறையில் நுழைந்து சமைப்பதற்கு எனக்கு பிரமோஷன் கிடைத்தது. அதிலிருந்து என்னை நானே தலைமுடி வளர்க்க உதவும் பொருள்களைத் தயாரிப்பதற்கு பிரமோஷன் வாங்கிக் கொண்டேன். என்னுடைய கம்பெனியை என் சொந்த முயற்சியினால் நானே உருவாக்கினேன்."
உலகின் ஆகப் பெரும் கோடீசுவரியாக தனது சொந்த முயற்சியால் ஆன முதல் கறுப்பினப் பெண்மணியான இவர் நியூயார்க்கில் இர்விங்கில் ஒரு மாபெரும் மாளிகையைத் தனக்கென கட்டிக் கொண்டார். 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் 2,50,000 டாலர் செலவில் நியூயார்க்கில் அவர் வீடு கட்டப்பட்டது. அவரது அடுத்த வீட்டில் மிகப் பெரும் கோடீசுவரரான ஜான் டி.ராக்பெல்லர் வசித்து வந்தார். அவருக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொண்டார் வாக்கர்.
சமுதாய சேவை: உலகின் மிகப் பெரும் கோடீசுவரியாகி விட்ட அவர் தன் கவனத்தை சமுதாயத்தின் மீது கவனம் செலுத்தினார். இண்டியானாபோலீசில் ஒய்.எம்.சி.ஏ. கறுப்பினத்தவர்களுக்கான சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து பல்லாயிரம் டாலர்களை அவர் கல்வி மேம்பாட்டிற்காகவும் இதர மேம்பாடுகளுக்காகவும் கொடுக்க ஆரம்பித்தார்.
தாழ்த்தப்பட்டுக் கிடந்த கறுப்பினப் பெண்மணிகளுக்கு அவர் எப்படி பட்ஜெட்டை தயாரித்து தாங்களே சுயதொழிலை மேற்கொண்டு முன்னேறுவது என்பதைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
அரசியலில் செல்வாக்கு பெற்ற அவருக்கு புக்கர் டி வாஷிங்டன், மேரி மக்லீட் பெதூன் உள்ளிட்ட பல சமுதாயத் தலைவர்கள் சிறந்த நண்பர்களாக ஆயினர்.
முதல் உலகப்போர் முடிவில் அவர் நீக்ரோ போர் நிவாரண வட்டத்திற்கு தலைவராக இருந்து நீக்ரோக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க ஏற்பாடு செய்தார்.
மறைவு: வாக்கருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. 51-ம் வயதில் ஹைபர் டென்ஷனால் பாதிக்கப்பட்டார். 1919, மே மாதம் 25-ம் நாள் தனது 51-ம் வயதில் அவர் மறைந்தார். அவர் நியூயார்க் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
டாகுமெண்டரி: ரெஜினா டெய்லர் என்பவர் வாக்கரைப் பற்றி 2006-ல் 'தி டிரீம்சு ஆப் சாரா ப்ரீட்லவ்' என்ற ஒரு நாடகத்தை எழுதினார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இவரது வரலாற்றை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சீரியலாகக் காட்டின. அவரை கவுரவித்து தபால் தலை வெளியிடப்பட்டது. அவர் பெயரால் பல விருதுகள் அறிவிக்கப்பட்டன.
பெண்களுக்கு அன்புரை: உலகில் வாழும் பெண்மணிகளுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்மணிகளுக்கு மேடம் வாக்கரின் அன்புரை இது தான்:
"எனது வாழ்க்கையையும் எனது வாய்ப்பையும் நானே உருவாக்கிக் கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் அதை நான் உருவாக்கிக் கொண்டேன். வெறுமனே உட்கார்ந்து கொண்டு வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். எழுந்திருங்கள். அவற்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்"
- ஒரு மனிதன் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை.
- சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும் கெடாமல் வலுப்பெற்று இருக்க வேண்டும்.
மனித வாழ்க்கையில், காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன். ஒரு மனிதன் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை. அதனால் சுக போகத்தின் அதிபதி, சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும் கெடாமல் வலுப்பெற்று இருக்க வேண்டும்.
அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம்பரமான கார், சொகுசான இன்பமயமான வாழ்க்கை இத்தனை யையும் ஒருவருக்கு குறைவின்றி கொடுக்கும் கிரகம் சுக்கிரன் பாவக, ஆதிபத்திய ரீதியாக வலுப்பெற்றால் பெரிய பொருளாதாரம் ஈட்டுதல், சுக்ரனின் காரகங்க ளான நவீனம், வாசனைப் பொருட்கள், உயர்ரக வாகனம், வீடு, இசை, கவிதை ஆர்வம், அலங்காரம், ஒப்பனை, நளினம் போன்றவற்றில் ஆர்வம் கூடும்.
கோடிக்க ணக்கில் கொட்டி கொடுத்து பெரிய உயரமும் தொட வைக்கும். காரக, பாவக ஆதிபத்திய ரீதியாக சுக்ரன் பலம் குறைந்தால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்பு இருக்கும். சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் செய்யும். அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் இரு பாவகத்திற்கு உள்ள பலன்களை நடத்தியே தீரும்.இனி பனிரென்டு ராசிக்கும் சுக்ர தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு சுக்ரன் 2, 7-ம் அதிபதி. தன ஸ்தான அதிபதி. களத்திர ஸ்தான அதிபதி. சுக்ரன் பலம் பெற்றால் பொருளாதார வெற்றி, வீடு மனை வாகனம் போன்றவை கிடைக்கும்.சுக்ரனின் தன்மை கொண்ட வாழ்க்கை துணை அமையும் அழகு ,காதல் உணர்வு , நல்ல புரிந்துணர்வு ,தாம்பத்யம் சுகம் போன்றவை கிடைக்கும். மனதிற்கினிய வாழ்க்கை துணையாக அழகு அந்தஸ்து உடையவராக இருப்பார்.
திருமணத்திற்கு பிறகு அதிர்ஷ்டம் திருப்புமுனை உண்டாகும். இவர்களுக்கு சுக்ரன் நல்ல நிலையில் இருந்தால் சிறப்பான திருமண வாழ்க்கை உண்டு. சுக்ரன் பாதிக்கப்பட்டால் பொருளாதாரத்தில் தன்னிறைவு இருக்காது. வறுமை, கடன் போன்ற வற்றால் தம்பதிகளிடம் நெருக்கம் குறையும்.வாழ்க்கைத் துணையால் மன நிம்மதி போகும். சிலருக்கு திருமணமே நடக்காது.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு சுக்ரன் லக்னாதிபதி மற்றும் ஆறாம் அதிபதி. இவர்களுக்கு சுக்ரன் வலுப்பெற்றால் ஆடம்பரத்திற்காக கடன் பெறுவார்கள். ஜாதகரின் கடன் பிரச்சினைக்கு ஜாதகரின் நடவடிக்கைகளே காரணமாக இருக்கும். ஜாத கரின் சகிப்புத் தன்மையற்ற நட வடிக்கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும்.
நோய்க்கு வைத்தியம் செய்ய கடன் பெறுவார்கள். கடனுக்கு பயந்து நோய் கூடிக் கொண்டே போகும். அதே போல் சுக்ரன் பலம் குறைந்தாலும் தசா புத்தி காலங்களில் கடன், நோய் பாதிப்பு எதிரி தொல்லை இல்லா மல் போகாது. இவர்க ளுக்கு சுக்ர தசை, புத்தி காலங்களில் பாதிப்பு அதிகமா கவும் பிற நேரங்களில் பாதிப்பு குறைவாகவும் இருக்கும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் லஷ்மி நரசிம்மரை வழிபட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. விரயாதிபதி. சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றால் குல கவுரவம் நிரம்பியவர்கள். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள்.
தலைமைப் பதவி தேடி வரும். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நன்மக்கட்பேறு உண்டாகும். புத்திரர்களால் இவர்களுக்கும் இவர்களால் புத்திரர்களுக்கும் பயன் உண்டு. அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். சுக்ரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்றாலும் அசுப கிரக சம்பந்தம் இருந்தாலும் பூர்வீகத்தில் வாழ முடியாது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. பிள்ளைகளால் மன வேதனை மிகும். குல தெய்வ அருள் கிடைக்காது.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் படைத்து குல தெய்வத்தை வழிபட வேண்டும்.
கடகம்
கடக ராசிக்கு சுக்ரன் 4,11-ம் அதிபதி. சுகாதிபதி மற்றும் லாப ஸ்தானாதிபதி. கடக ராசிக்கு சுக்ரன் பாதகாதிபதி. துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்ற சுக்ரனும் மீனத்தில் உச்சம் பெற்ற சுக்ரனும் நிறைவான சொத்து சுகத்தையும் நிறைந்த லாபத்தையும் தாய் வழி உறவுகளின் அனுசரணையும், வழக்குகளில் வெற்றியையும் முன்னோர்களின் நல்லாசியையும் வழங்கும். நன்றாக படிப்பார்கள்.
கற்ற கல்வியால் பயன் உண்டு.ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணிகளில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள்.அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்கக் பலர் விரும்புவார்கள். ரிஷபத்தில் ஆட்சி பலம் பெற்ற சுக்ரன் பாதகத்தை மிகைப்படுத்துவார். சனி பலம் குறைந்தால் மறு திருமணத்தை நடத்துவார். அசுப வலிமை படைத்த சுக்ரன் காதல், காமத்தால் வம்பு, வழக்கைத் தருவார்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் சிவ சக்தியை வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு சுக்ரன் சகாய ஸ்தான அதிபதி தொழில் ஸ்தான அதிபதி. 3,10-ம் அதிபதி. சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றால் புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம் மிகும்.கவர்ச்சியான விளம்ப ரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன் பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள்.
8ல் உச்சம் பெற்ற சுக்ரனால் சிலருக்கு தொழிலில் பெரும் இழப்பு, நட்டம், அவமானம், வம்பு, வழக்கு ஏற்படு கிறது. சுக்ரன் பலம் குறைந்தால் தகுதி, திறமைக்கு தகுந்த நிரந்தர, தொழில் உத்தி யோகம் அமையாது. சிலர் உடன் பிறப்பிற்காக, குடும் பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்ட பெயர் எடுப்பார்கள். பிழைக்க தெரியாத ஏமாளியாக இருப்பார்கள்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் சிவ வழிபாடு செய்யவும்.
கன்னி
கன்னி ராசிக்கு சுக்ரன் தனாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. 2,9-ம் அதிபதி. சுக்ரன் பலம் பெற்றால் நிர்வாகத் திறமை உண்டு. தனது புத்தி சாதுர்ய பேச்சால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். பலவிதமான யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள்.
பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார். அரச பதவி, அரசு உத்தியோகம் அந்தஸ்து உண்டு. இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் அல்லது சுக்ரன் பலம் குறைந்தால் நிலையான பொருள் வரவு இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு குறையும். மீனத்தில் உச்சம் பெற்ற சுக்ரன் சிலருக்கு மாரகத்தை மிகைப்படுத்தும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கவும்.
துலாம்
துலாம் ராசிக்கு சுக்ரன் லக்னாதிபதி, அஷ்டமா திபதி. சுக்ரன் எந்த நிலையில் இருந்தாலும் தசை, புத்தி காலங்களில் அவமானம் / கடன், வம்பு, வழக்கு உண்டு. தசை ஆரம்பத்தில் சில யோகத்தைச் செய்தால் தசை முடியும் போது அவயோகம் உண்டு. துலாம் ராசிக்கு சுக்ர தசை வராமல் இருப்பது நல்லது.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் லஷ்மி குபேர பூஜை நடத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிகத்திற்கு சுக்ரன் 7, 12-ம் அதிபதி. களத்திர ஸ்தான அதிபதி விரயாதிபதி. 5,7-ல் பலம் பெற்ற சுக்ரன் காதல் திருமணத்தை தருகிறது. குலதெய்வ அருள் கிடைக்கும், அயன சயன போகம் சிறந்த நிலையில் இருக்கும்.
ஜாதகர் அழகு, ஆடம்பரத்திற்கு அதிகம் செலவு செய்யக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 12-ல் ஆட்சி பலம் பெற்ற சுக்ரன் எளிதில் திருமண வாழ்க்கையை அமைத்து தராது. பலருக்கு தவறான உறவை மிகைப்படுத்துகிறது. வயோதிகத்தில் சுக்ர தசை மாரகத்தை தருகிறது.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் கால பைரவரை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கு சுக்ரன் 6,11-ம் அதிபதி. ருண, ரோக சத்ரு ஸ்தான அதிபதி. லாபாதிபதி. சுக்ரன் வலுத்த தனுசு லக்னத்தினர் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் கடன்ப டுவார்கள். தாய்மாமன் வாழ்நாள் முழுவதும் மதி மந்திரியாக இருப்பார்.
அனுபவ ரீதியாக கேது தசையில் கடன் பட்ட தனுசு லக்னத்தினர் சுக்ர தசையில் கடன் நிவர்த்தி பெறுகின்றனர். கேது தசையில் கடன் படாத தனுசு லக்னத்தினர் சுக்ர தசை முழுவதும் கடனால் அவதிப்படு கிறார்கள். கேது குறுகிய கால தசை. சுக்ரன் நீண்ட கால தசை. சுய ஜாதகத்தில் சுக்ரனும் கேதுவும் நின்ற நிலைக்கு ஏற்ப பலன் மாறுபடும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்கு சுக்ரன் ஐந்து, பத்தாம் அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி. சுய ஜாதகத்தில் சுக்ரன் வலுத்த மகர லக்னத்தினர் அதிர்ஷ்டசாலிகள். ஒரு கேந்தி ரத்திற்கும் திரிகோணத்திற்கும் அதிபதிகள்பெயர் சொல்லக் கூடிய குடும்பம். அரசு உத்தியோகம், கவுரவ பதவி உண்டு.
சிலர் குலத்தொழில் செய்ப வர்கள். சமுதாய அங்கீகாரம் நிறைந்த வர்கள். நல்ல பண்பான, பணிவான புத்திரர்கள் பிறப்பார்கள். குலதெய்வ கோவிலில் அதிக தானம், தர்மம் செய்பவர்கள். சுக்ரன் வலு குறைந்தால் நிலையான பதவி, புகழ் இருக்காது. ஆன்மீக நாட்டம் குறையும். பிள்ளை களால் மனக் கஷ்டம் மிகும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை குல தெய்வத்திற்கு அபிசேக ஆராதனை செய்து வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு சுக்ரன் 4, 9-ம் அதிபதி. சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. கும்பத்திற்கு 9-ல் அமர்ந்த சுக்ரன் நிச்சயம் பாதகத்தை தசை புத்தி காலங்களில் செய்வார். சுக்ரனும், சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் பாதகத்தை செய்ய மாட்டார் என பலர் கூறினாலும் வினையை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் வலியின் வேதனை புரியும்.
சுக்ரன் சுய ஜாதகத்தில் சுப வலு பெற்றவர்கள் பூமியினாலும், பயிர்களினாலும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்கு பயன் படுத்துவார். கடமையே கண்ணாக உள்ளவர்கள். தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மீது பற்றும் பாசமும் உண்டு சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் குறைந்தால் தசை, புத்தி காலங்களில் பாதகம் குறையும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை குளிகை நேரத்தில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.
மீனம்
மீன ராசிக்கு சுக்ரன் முயற்சி ஸ்தான அதிபதி. அஷ்டமாதிபதி. 3, 8-ம் அதிபதி. உடன் பிறந்த சகோதரர்களால் இன்னல்கள் வம்பு வழக்கு,நஷ்டம் மிகுதியாகும். அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க முடியாது.முக்கிய சொத்துக்கள், பாகப் பிரிவினை போன்ற எதற்கும் முறையான ஆவணம் இருக்காது.
சொத்துதகராறு, பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலமும் உண்டாகும். சிலருக்கு மதம் மாறும் சிந்தனை மேலோங்கும். தெய்வ நம்பிக்கை குறையும். சிலருக்கு அடிக்கடி தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அடிக்கடி வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும்.
சொல் புத்தியும் இருக்காது. சுய புத்தியும் கிடையாது. பய உணர்வு மிகுதியாக இருக்கும். தைரியம், வீரியம் குறைவுபடும். கற்பனையில் வாழ்வார்கள். செவித்திறன் குறைவுபடலாம். கீழ்படியாத வேலை யாட்கள் கிடைப்பார்கள். திட்டமிட்டு செயல்படுத்த முடியாமல் தோல்வியை சந்திப்பார்கள்.விலை உயர்ந்த ஆபரணங்களை அடிக்கடி கைமறதியாக வைப்பார்கள் அல்லது அடகு வைப்பார்கள். மீன லக்னத்திற்கு சுக்கிர தசை வரவே கூடாது.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழிபட வேண்டும். மேலே சொன்ன பலன்கள் அவரவர்கள் ஜாதகத்தில் சுக்ரனோடு இணைந்த பார்த்த மற்ற கிரகம் பொருத்து பலனில் சிறு மாற்றத்தை தரும்.

`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நம் மனதினை வருத்தப்படுத்தும் அளவுக்கு நடக்கலாம்.
- வளர்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவ வழிபாட்டினை மேற்கொள்வோரும் உண்டு.
அன்றாட வாழ்க்கையில் நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக போராடுகின்றோம். தினமும் யாருடனோ எதற்காகவோ வாக்குவாதம் ஏற்படுகின்றது. இப்படி நடந்தாலே அன்றைய நாள் முழுவதும் மனம் எதிலும் செல்லாமல் இந்த நிகழ்வினையே நினைத்து மூழ்குகின்றது. நம்மில் அநேகர் இப்படித்தான் வாழ்கின்றோம். இப்படி எல்லோரிடமும் வாதிட வேண்டும் என்ற அவசியம் இல்லையே!
கழுகு என்றாலே பட்சிகளின் ராஜா என்கின்றோம். இந்தப் பறவையின் முதுகின் மேல் அமர்ந்து அதன் கழுத்தினை காயப்படுத்தும் தைரியம் அண்டங்காக்கைக்கு உண்டு. ஆனால் அதற்காக கழுகு உருண்டு புறண்டு தன் வீரத்தினை காட்டுவதில்லை. அண்டங்காக்காவினை காயப்படுத்த முயல்வதுமில்லை. மிக உயர உயர பறக்க ஆரம்பித்து விடும். காக்கைகளோ மூச்சு விடுவதில் கடினமாகி கீழே விழுந்து விடும்.
இது போல் தான் நாமும் இருக்க வேண்டும். நம்மை நாம் முயன்று முன்னேற்ற பாதையில் சென்றால் பல தொந்தரவுகள் தானே விழுந்து விடும்.
இதனைப் பற்றி யாரிடமும் பேச வேண்டிய அவசியம் இல்லை. யாரும் அடுத்தவர் வாழ்வில் என்ன பிரச்சனை என்பதனை பார்ப்பதில்லை. பிறர் சொல்லி உங்கள் திறமையை அறிந்து கொள்வது என்பதனை காட்டிலும் உங்களின் சுய ஆய்வில் நீங்களே அறிந்து கொண்டால் வாழ்க்கை எளிதாகவும் நலமாகவும் இருக்கும்.
ஒருவரின் இறுதி நேரத்தில் அவருடைய சாதனைகள் அவருக்கு பெரிதாக தெரியாது. அவரது நினைவில் நிற்கும் நிகழ்வுகளே அவருக்குத் தோன்றும். ஆக நல்ல நிகழ்வுகளை நாம் நன்கு வாழும் காலத்திலேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பது நம்முள் தான் இருக்கின்றது. நாம் ஏனோ அதனை வெளியில் தேடுகின்றோம்.
கீழே கூறப்படும் சில வரிகளையும் சற்று சிந்தித்துப் பார்க்கலாமே!

கமலி ஸ்ரீபால்
வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நம் மனதினை வருத்தப்படுத்தும் அளவுக்கு நடக்கலாம். ஆனால் காலம் அதனை ஆறவைத்து விடும். என் மகன், என் மனைவி, என் பணம் என எதனை நீங்கள் இறுக்கி பிடித்து வைத்துக் கொண்டாலும் அவை ஒருவரை விட்டு நீங்க தான் செய்யும். தாமரை இலை மேல் தண்ணீர் போல வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
பலரிடம் காணப்படும் குறைபாடுகள் என்ன என்றால் - என் திறமைக்கு என்னை சிறந்த பள்ளியில் சேர்த்திருக்கலாம். நான் கூடுதல் சாதனை செய்திருப்பேன். எனக்கு பாட்டில் ஆர்வம் அதிகம். ஆனால் அதற்கு எங்களுக்கு வசதி இல்லை என ஏதோ ஒரு குறையினை தன் வளர்ச்சிக்கு தடையாக கூறிக் கொண்டிருப்பர்.
பறவைகள் மூலம் எங்கெங்கோ விழும் விதைகள் நிலம் சரியில்லை, நீர் வளம் இல்லை என்று குறை கூறுவது இல்லை. கிடைக்கும் சூழ்நிலையில் முயற்சி செய்து வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மிகச்சிறந்த இடத்தில் இருக்கும் ஒருவரது பிள்ளைகள், எத்தனை சூழ்நிலை உதவி இருந்தாலும் அந்த இழப்பினை அடைய முடிவதில்லை. எந்த உதவியும் இல்லாத ஒருவர் உயர்நிலையினை அடைய தவறுவதுமில்லை. பூர்வ ஜென்ம பலன் என்ற ஒன்று இருந்தாலும் மனதினை ஒருமுகப்படுத்தி அதில் ஈடுபடும் பொழுது வெற்றி உறுதியாகின்றது. நம்மால் முடியுமா? என்று நினைப்பதை விட நம்மால் முடியும் என்று நினைப்பதும் கவனச் சிதறல் இல்லாமல் இருப்பதுமே வாழ்வின் முன்னேற்றத்தினை முடிவு செய்கின்றது.
நம்ம ஊரில் மக்கள் தன் சொந்த ஊருக்கு செல்லும் காரணமாக கூறுவது, குலதெய்வ வழிபாடு மற்றும் ஊரில் தேர் திருவிழா என்ற காரணங்களாக இருக்கும். தேர் திருவிழா என்றாலே ஊர் விழா கோலம் பூண்டு விடும். இறைவன் ஊர்வலமாக பிரமாண்டமாய் அலங்கரித்த தேரில் வீதியில் பவனி வருவதும் அந்த காட்சியினை கொண்டாடுவதும் வடத்தினை பிடித்து தேர் இழுப்பதும் மிகப் புண்ணிய செயல்கள். தேர் வடம் பிடிக்க அனைவரும் போட்டி போட்டு செல்லுவர்.
இந்த தேர் இழுப்பதன் பலனை தெய்வம் மகா பெரியவர் கூறியதையும் அறிவோமா!
ஒரு முறை நிலச் சொந்தக்காரர் ஒருவர் சொத்து தகராறு காரணமாக மன நிம்மதி இன்றி தவித்தார். காஞ்சி மகா பெரியவரை சென்று சந்தித்தார். அவரின் மனவேதனையை உணர்ந்த மகா பெரியவர் அவரிடம் தேர் இழுத்தீர்களா? என்று கேட்டார். அந்த நில சொந்தக்காரர் இல்லை என்று பதில் அளித்தார். ஒருமுறை தேர் இழுத்து விட்டு உங்கள் வேலைகளைத் தொடங்குங்கள். எல்லாம் நன்றாக நடக்கும் என்று ஆசிர்வதித்தார் மகா பெரியவர்.
சுமார் 3, 4 மாதங்களுக்குப் பிறகு அந்த நிலச் சொந்தக்காரர் மீண்டும் மகா பெரியவரை சந்திக்க வந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
"தேர் இழுத்தாயோ" என்று மகா பெரியவர் கேட்க வந்தவரும் 'ஆம்! அதன் பிறகு எல்லாம் நன்றாக நடந்தது' என்றார்.
'தேர்' என்பது நடமாடும் கோவில். முதியவர்கள், நோயாளிகள், முடியாதவர்கள் இவர்களுக்கு கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பது சிரமமான செயல். அவர்களுக்காக இறைவனே வீதி வலம் வருகின்றார். அப்போது தெய்வ சக்தி ஊர் முழுவதும் அள்ளி கொட்டி கிடக்கும். தீய சக்திகள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடும். தேர் இழுக்கும் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு என்றே இருக்காது. தேர் வடம் பிடித்து இழுக்கும் போது பிரார்த்தனையின் சக்தி வலுப்பெறுகின்றது. தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கே மகா புண்ணியம் செய்திருக்க வேண்டும். நம்மால் ஆன பங்களிப்பினை அளிக்க வேண்டும்.
தேர் திருவிழாவில் கலந்து கொள்வதால் * வெற்றி கிடைக்கும் * நோய்கள் தீரும் * வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும் * கடவுள் அருள் கூடும் * மன நிம்மதி கிடைக்கும் * சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
இனி நீங்கள் எங்கு இருந்தாலும் தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தவற விட்டு விடக்கூடாது.
இந்த கட்டுரையினை நான் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன். மகா பெரியவரின் வாக்கு மகேசனின் வாக்கு ஆகும்.
உணர்ச்சிகள் நம் உடலை பாதித்து பாடாய் படுத்தி வீடுகிறது.
* அதிக கோபம் கல்லீரலை பலவீனப்படுத்துமாம்.
* அதிக கவலை வயிற்றினை பாதித்து சதா வயிற்றில் பிரச்சனை இருக்குமாம்.
* அதிக துக்கம் நுரையீரலை பாதிக்குமாம்.
* பயம் சிறுநீரகங்களை பாதிக்குமாம்.
* மன உளைச்சல் இருதயம், மூளையின் செயல்பாடுத் திறனை பாதிக்குமாம்.
இதனை ஆய்வு கட்டுரையாக குறிப்பிட்டு இருந்தனர். பொதுவில் வேதனை, கவலை எல்லாம் உடலை பாதிக்கும் என்பது உண்மையே.
இம்மாதிரி தேர் திருவிழா பண்டிகைகள் குல தெய்வ வழிபாட்டிற்கு அனைவரும் ஒன்று கூடுவது போன்றவை உடல் நலம், மன நலத்தினை நன்கு வைக்கும்.
இன்றைய கால கட்டத்தில் மக்கள் அநேக பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எங்கு தீர்வு எனத் தேடும் போது கால பைரவர் வந்து மக்களை காப்பாற்றுகின்றார். பொதுவில் காளி, துர்க்கை, அம்மன்கள், கால பைரவர், அய்யனார் வழிபாடுகளை துடிப்பான தெய்வ வழிபாடுகள் என்று கூறுகின்றோம். இதில் கால பைரவர் சிவபெருமானின் ருத்திர ரூபமாக வழிபடப்படுகின்றார்.
சிவன் கோவில்களில் வடகிழக்கு பகுதியில் இருப்பவர். இவர் 12 கைகளுடன் காணப்படுபவர். நாகத்தினை பூணூலாக அணிந்திருப்பவர். அங்குசம், பாசக் கயிறு, சூலாயுதம் ஆயுதங்களை தாங்கியவர். நிர்வாண ரூபம் கொண்டவர்.

இவரது வாகனம் நாய். பைரவருக்கு கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உக்ர பைரவர் என பல ரூப வழிபாடுகள் உண்டு. காலத்தினையே கட்டுப்படுத்துவதால் இவரை கால பைரவர் என்கின்றனர்.
கால பைரவர் சனியின் குரு, 12 ராசிகள், நவக்கிரகங்களை கட்டுப்படுத்துபவர், பஞ்ச பூதங்களும் இவர் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை ஆகும்.
சரி. எதற்காக இந்த பைரவ வழிபாடு இத்தனை முக்கியத்துவம் பெறுகின்றது. பைரவரை வழிபட்டால் பயம் நீங்கும். பயம் நீங்க வேண்டும் என்றால் கவலை, கஷ்டம் நீங்க வேண்டும். ஆக கவலை, கஷ்டம் நீக்குபவர் பைரவர். அதிலும் தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் பைரவ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. வளர்பிறை அஷ்டமியிலும் பைரவ வழிபாடு செய்யலாம்.
பொதுவில் சிறப்பு வழிபாடாக பஞ்ச தீப எண்ணை ஊற்றி விளக்கேற்றி வழிபடுவர். சிலர் நெய் ஊற்றி தீபம் ஏற்றுவர். சிலர் உடைத்த தேங்காயில் எண்ணை ஊற்றி தீபம் ஏற்றுவர். சிலர் பூசணிக்காய் உடைத்து அதில் தீபம் ஏற்றுவர். இது அவரவர் விருப்பத்தினை பொறுத்தது. தீபம் பைரவ பகவானை நோக்கி இருக்க வேண்டும். சிவப்பு பூ, வில்வம் இவை பூஜைக்கு உகந்தது. நைவேத்தியமாக உப்பில்லா தயிர் சாதம் செய்வர். உளுந்து வடை மாலை சாத்துவர். வாசனை மலர்களும் சூட்டுவர். பைரவர் வாகனமாகிய நாய்க்கு பிஸ்கட் வாங்கி வைப்பர்.
பைரவரை வழிபட அனைத்து நாட்களும் உகந்ததே. ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலமும் உகந்த நாளாகும். பொதுவில் வளர்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு செய்பவர்கள் தனது தேவைகள் நிறைவேற உதாரணமாக வேலை கிடைக்க, கல்யாணம் ஆக பைரவர் அருள வேண்டும் என பிரார்த்தனை செய்வர். தேய்பிறை அஷ்டமியில் பிரச்சனைகள் தீர உதாரணமாக கடன், நோய், எதிரிகள் தொல்லை போன்றவை நீங்க வழிபாடு செய்வர். பொதுவில் ஏதாவது ஒரு வழிபாட்டினை மேற்கொள்வது நல்லது.
பைரவர் மகா சக்தி கொண்டவர். எனவே உங்கள் வழிபாடுகள் நியாயமானதாக இருக்கட்டும்.
மிளகினை சிறிதளவு (எண்ணி போடும் பழக்கமும் உண்டு) சின்ன மூட்டையாக கட்டி அதை நல்லெண்ணை தீபத்தில் வைத்து விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உள்ளது. மிளகு சாதம், வெண் பொங்கல், தயிர் சாதம், நைவேத்தியம் செய்யும் வழக்கமும் உள்ளது.
எதிரிகளை துவம்சம் செய்து விடுபவர் என்பதால் எதிரிகளால் அதிக கஷ்டப்படுபவர்கள் அவரவர் சக்திக்கேற்ப வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். வளர்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவ வழிபாட்டினை மேற்கொள்வோரும் உண்டு. பைரவ வழிபாடு செய்வோம். துயர் நீங்கி வாழ்வோம்.
- மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது.
- ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இன்று வரை இருக்கிறது.
என்னை விட உங்களுக்கு அஜித்தை தானே ரொம்ப பிடிக்கும் என்று விஜய் கேட்டால் எப்படி இருக்கும்? அதற்கு என்ன பதில் சொல்வது?
அப்படி ஒரு கேள்வியை என்னிடம் விஜய் கேட்டார். அதை கேட்டதும் 'இதென்னடா வம்பா போச்சு?' இப்படி ஒரு கேள்வியை கேட்கிறாரே என்று சிரித்தேன்.
அவர் ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டார்....? அதற்கும் ஒரு காரணம் உண்டு.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி ஆகி நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி சார் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உள்பட பெரும்பாலும் எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறேன்.
அஜித்துடன் 'ஆனந்த பூங்காற்றே', 'வில்லன்', 'சிட்டிசன்' ஆகிய 3 படங்களில் நடித்துள்ளேன். அந்த மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது.
ஆனால் விஜய்யுடன் ஒரு படத்தில் கூட நடிக்க முடியாமல் போனது. அது உண்மையிலேயே எனக்கு வருத்தமான விசயம். சில நேரங்களில் என்னதான் நாம் நினைத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லாவிட்டால் என்ன செய்வது?
அப்படித்தான் விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்புகளும் வாய்க்காமல் போயிற்று. 'பிரியமுடன்' மற்றும் 'பிரண்ட்ஸ்' ஆகிய படங்களுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது நான் ரொம்ப பிசியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இதனால் ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இன்று வரை இருக்கிறது.
ஆனால் ஷாஜகான் படத்தில் 'சரக்கு வச்சிருக்கேன். இறக்கி வெச்சிருக்கேன்' என்ற ஒரே ஒரு பாடலுக்கு விஜய்யுடன் டான்ஸ் ஆடியிருக்கிறேன்.
அதுவும் குத்து டான்ஸ் போல் இருக்கும். அந்த பாடலில் ஆட நான் முதலில் தயங்கினேன். ஆனால் ஆர்.பி.சவுத்ரி விரும்பி கேட்டதால் என்னால் தவிர்க்க முடியவில்லை. ஒத்துக் கொண்டேன்.
சரக்கு வெச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முழகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா
கோழியை தின்பேன்
குமரி ருசியா இருந்தா
குமரியை தின்பேன்...
என்ற அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அஜித் ஜோடியாக நடித்த ஆனந்த பூங்காற்றே படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் வரும்
"செம்மீனா... விண்மீனா.." என்ற பாடல் சூப்பர். எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பாடல் முழுக்க மீனா... மீனா.. என்று வரும். தன்னை பற்றி பாடி புகழ்ந்தால் யாருக்குதான் சந்தோசம் வராது? அப்படித்தான் எனக்கும். அந்த பாடல் ரொம்ப பிடித்து போனது. பாடல் காட்சிகளை குலுமணாலியில் படமாக்க திட்டமிட்டார்கள்.
டெல்லியில் இருந்து குலுமணாலி செல்ல சுமார் 600 கிலோ மீட்டர் பயணம். பஸ்சில் செல்ல வேண்டுமென்றால் 15 மணி நேரம் ஆகும். இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லா வரை விமானத்தில் சென்று அங்கு இருந்து பஸ்சிலும் பயணிக்கலாம்.
பனி படர்ந்த பிரதேசம். பார்க்க பரவசமாக இருக்கும். ஆனால் குளிர் நடுங்க வைக்கும். நாங்கள் டெல்லியில் இருந்து விமானத்தில் தான் செல்ல திட்டமிட்டோம். ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்தாகி விட்டது. வேறு வழியில்லாமல் எல்லோரும் பஸ்சில் 15 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி யதாயிற்று. அந்த பயணம் திரில்லிங்கானது என்பதை விட திகிலூட்டுவதாக இருந்தது. இந்த படத்தில் தான் மாளவிகா அறிமுகமானார். முக்கிய வேடத்தில் கார்த்திக் சாரும் நடித்து இருந்தார்.
குலுமணாலி எல்லைப் பகுதியில் இருப்பதால் ராணுவ கட்டுப்பாடு நிறைந்த பகுதி. இஷ்டத்துக்கு சுற்ற முடியாது. கேமராவின் கண்களுக்குள் பனிமலை முகடுகளை முழுமையாக படமாக்கினார்கள். டைரக்டர் ராஜ்கபூர்சார். சிதறிய பனியில் நான் போட்டிருந்த மேக்-அப் கூட கலைந்தது. அடிக்கடி டச்-அப் செய்து கொண்டேன். ஆனால் மேக்-அப்பை பற்றி கவலைப்படாத மனிதர் அஜித். ஏனென்றால் அவர் பெரும்பாலும் மேக்-அப்பே போடுவது கிடையாது. குலுமணாலியில் செம்மீனா டூயட் பாடலுக்கு ஆடிய போது குளிரும் சேர்ந்து மிரட்டியது. தொட்ட இடம்... கை பட்ட இடம் எல்லாம் சுர்ரென்று குளிர் மின்சாரம் போல் தாக்கியது.
அதைவிட இன்னொரு வேடிக்கை... அஜித்தை தொடும் போதும் சுர்.... என்று ஷாக் அடிப்பது போல் இருக்கும். சார்... உங்க மீது கை வைத்தால் ஷாக் அடிக்குது சார் என்பேன். குளிர் பிரதேசத்தில் தண்ணீர் குழாயை திறந்து தண்ணீரில் கை வைத்தால் 'சுர்' என்று பிடிக்கும். அதே போல்தான் பனியில் அஜித் உடலும் சுர் என்றது ஆச்சரியமாக இருந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற "மீனாட்சி... மீனாட்சி... அண்ணன் காதல் என்னாச்சு" என்ற பாடலும் அப்போது எல்லா இடங்களிலும் ஒலித்தது.
அஜித் காம்பினேஷனில் என் படம் வெற்றி பெற்றதும், நல்ல ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டதும் உண்மை. அதற்காக விஜய்யுடன் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இல்லாமல் போகுமா?
ஆனால் அந்த குறையை என் மகள் நைனிகா தீர்த்து வைத்தாள். விஜய்யின் தெறி படத்தில் அவள் சிறப்பாக நடித்ததை விஜய் மனம் திறந்து பாராட்டினார். அப்போது தான் ஜோவியலாக 'உங்களுக்கு என்னை விட அஜித்தை தானே ரொம்ப பிடிக்கும்?' என்ற ஒரு கேள்வியையும் தூக்கி போட்டார்.
என்னடா இப்படி ஒரு கேள்வி கேட்கிறாரே என்று நினைத்தபடி ஏன் அப்படி கேக்குறீங்க என்றேன். உடனே அவர் 'நீங்க என்கூட ஒரு படம் கூட நடிக்கவில்லை. ஆனால் அஜித்தோடு மட்டும் மூன்று படம் பண்ணியிருக்கீங்க... என்றார்.
அய்யய்யோ... சார் உங்களோடு நடிக்க வாய்ப்பு வந்தபோது நான் ரொம்பவே பிசியாக இருந்தேன். அதான் சார் முடியவில்லை. வேறு எதுவும் இல்லை என்று நான் சொன்னதும் அவரும் சிரித்தார். நானும் சிரித்தேன்.
ஆனந்த பூங்காற்று போல் ஆனந்தமுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.
(தொடரும்).
- புன்னகை தவழச் செல்வந்தரைப் பார்த்த துறவி ஒரு கதை சொன்னார்.
- குழந்தை உள்ளம் என்பது வஞ்சமும் சூதும் வந்து படியாத தூய்மை உடையது.
மழலை உள்ளம் தான் எப்போதும் மகிழ்ச்சியின் இல்லம் என்பதில் இருவேறு கருத்து இல்லாத இனிய வாசகர்களே! வணக்கம்.
தொல்லைகள் நிறைந்த உலகம் என்று எப்போதும் அலுத்துக் கொண்டுதான் வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது. துன்பம் யாவற்றையும் இன்பமாக்கவே மனித முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆயினும் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்புகள் நழுவிக்கொண்டேதான் போகின்றன. "பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா!" என்னும் கவியரசரின் வரிகள் அறுபதாண்டுகளுக்குப் பின்னாலும் அர்த்தம் செறிந்தவையாகவே இருக்கின்றன.
மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்ததா? இல்லை பொருள்கள் சார்ந்ததா? என்கிற ஆழமான ஒரு கேள்வியை முன்வைத்து நாம் ஓர் ஆராய்ச்சியைத் தொடங்குவோம். மகிழ்ச்சிக்குப் பொருள்வடிவம் என்பதோ அளவை மற்றும் உருவ வடிவம் என்பதோ கிடையாது எனும்போது அதற்குப் பொருள்கள் காரணமாக இருக்க முடியாது. எனவே மகிழ்ச்சிக்கு மனம் என்பதே பெரும்பாலும் காரணமாக அமைகிறது.
மனித மனம் என்பதற்கு வடிவ அமைப்பு இல்லை என்றாலும், வயதுக்கு ஏற்றவாறு அதில் அறிவுசார்ந்த வளர்ச்சி நிலைகள் உண்டாகின்றன. மனிதன் குழந்தையாக இருக்கும்போது அவனுக்கு அப்பழுக்கற்ற மனம் இயல்பாக அமைகிறது. அந்த வகையில் குழந்தை மனம் என்பது, இயல்பாகச் சிந்திக்கிறது, இயல்பாகச் சிரிக்கிறது, இயல்பாகக் கோபப்படுகிறது, இயல்பாக அழுகிறது. குழந்தை உள்ளம் தம்மால் இயலாத சிக்கல்களுக்குள் வம்படியாக மாட்டிக்கொண்டு அல்லல்படுவதில்லை; வீணான ஆசைகளை வளர்த்துக்கொண்டு, தேவையற்ற பரபரப்பு, மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குள் அகப்பட்டுப் பெரிய நோய்களுக்கான வாசல் களைத் திறந்து விடுவதில்லை.
ஒரு பெரிய செல்வந்தர், ஒரு துறவியிடம் சென்றார். "வாழ்க்கையில் தேவையான அளவுக்குமேல் சொத்துச் சேர்த்து விட்டேன். மனைவி மக்கள் சுற்றம் என எல்லோரும் புடைசூழப் பெரிய மாளிகையில் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் நான் உண்மையான மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறேனா என்பதில் பெரிய சந்தேகம் இருக்கிறது.
இப்போது இருக்கிற செல்வம், பணம், காசு எல்லாமும் ஒருநாள் ஒருநொடியில் இல்லாமல் போய்விடும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஆனாலும் மனைவி, மக்கள், சுற்றத்தினர் அனைவரும் என்னிடம் பாசமாக இருப்பதுபோல் தெரிந்தாலும், ஏதாவதொரு பயன்கருதியே போலி அன்புடன் பழகி வருவதாகவே தோன்றுகிறது. உண்மையான மகிழ்ச்சி என்பது எது? அதை அடைவதற்கு நான் இனிமேல் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
புன்னகை தவழச் செல்வந்தரைப் பார்த்த துறவி ஒரு கதை சொன்னார்." ஓர் ஊரில் ஓர் இடத்தில் ஆயிரம் கண்ணாடிகள் கொண்ட அறை என ஓர் அறை இருந்தது. அந்த அறைக்குள் ஒருநாள் ஓர் அழகிய சிறுமி நுழைந்தாள். நுழைந்தவுடன், அந்தச் சிறுமியின் பிம்பம் ஆயிரம் கண்ணாடிகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. தன்னைச் சுற்றித், தன்னைப்போல ஆயிரம் அழகிய குழந்தைகள் நிற்பதைப் பார்த்து, அவர்கள் அனைவரும் தன்னோடு விளையாட வந்திருப்பதாக மகிழ்ந்தாள். கைதட்டி ஒலியெழுப்பிச் சிரித்தாள். சுற்றிநின்ற ஆயிரம் குழந்தைகளும் கைதட்டி ஒலியெழுப்பிச் சிரித்தனர். இவளுக்கு மகிழ்ச்சி தாங்க முடிய வில்லை. உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான இடம் இதுதான் என்று அடிக்கடி அந்த ஆயிரம் கண்ணாடி அறைக்குச் சென்று மகிழ்ச்சியோடு விளையாடி வந்தாள்.
அதே இடத்திற்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒரு மனிதர் சென்றார். உள்ளே செல்லும்போதே சற்றுக் கோபத்துடன் சென்ற அவர், அறைக்குள் ஆயிரம் கண்ணாடிகளில் இவரைப்போலவே ஆயிரம் மனிதர்கள் தெரிந்ததால் மேலும் கோபமடைந்து விட்டார். அச்சத்துடன், அந்த பிம்பங்களைப் பார்த்தார். அவர்களை அடிக்கப் போவதைப்போலக் கைகளை ஓங்கினார்.
பதிலுக்கு அவர்களும் கைகளை ஒரேமாதிரி ஓங்கியதும், உலகத்திலேயே மோசமான இடம் இதுதான். எல்லா மனிதர்களும் என்னுடன் சண்டையிடவே வருகின்றனர்! என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டார்.
இந்தச் சமூக வாழ்க்கையும் அந்த ஆயிரம் கண்ணாடி அறை போலத்தான். நாம் மற்றவர்களை எந்த மனநிலையோடு பார்க்கிறோமோ, அதே மனநிலையோடுதான் மற்றவர்களும் நம்மைப் பார்ப்பார்கள். நாம் நமது உள்ளத்தை எப்படி வைத்திருக்கிறோமோ அதற்கேற்பத்தான் மகிழ்ச்சி பெருகுவதும், இல்லாமல் போவதும். மனத்தை ஒரு குழந்தையின் மனம்போல வைத்துக்கொண்டால் எந்நாளும் மகிழ்ச்சிநாளே. மனநிலை குழம்பியவர் மனநிலை வயப்பட்டால் துன்பமும் துயரமுமே மிஞ்சும்" என்று சொல்லி முடித்தார் துறவி.

சுந்தர ஆவுடையப்பன்
மனிதனுக்கு வயது ஆக ஆக அவனது பருவங்களும் வளர்ந்து வளர்ந்து மாறிக் கொண்டே போகின்றன. எனவே அவன் தனது வாழ்நாளில் குறுகிய ஒரு பகுதியையே குழந்தைப் பருவமாக வாழ முடியும். அப்படி யானால், அவன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி யாக வாழக் குழந்தைப் பருவத்தை எப்படித் தக்கவைத்துக் கொள்ள முடியும்? அப்படியே குழந்தை மனத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழ்வதென்றால், குழந்தை உள்ளத்திற்கு அப்படி என்ன சிறப்பு?.
குழந்தை உள்ளம் என்பது வஞ்சமும் சூதும் வந்து படியாத தூய்மை உடையது. அதனால் அது எதைச் செய்தாலும் நேரடியான பயனை நோக்கியதாக இருக்கும். சிரிப்பு வந்தால் சிரிக்கும். அழுகை வந்தால் அழும்!. அவ்வளவுதான். எதைச் செய்தாலும் நெஞ்சுக்குள் ஒரு சூழ்ச்சியை வைத்துக்கொண்டு, முகத்தளவில் போலியாய் ஒரு புன்னகையை உருவாக்கிக் காட்டாது.
அதனால் குழந்தையின் சிரிப்பில் ஒரு பூவின் மலர்ச்சி, தெய்வத் தன்மையோடு வெளிப்பட்டு நிற்கும். குழந்தை உள்ளம் அப்பழுக்கற்ற தன்மையில் முழுமையும் தனது மகிழ்ச்சியைச் சிரிப்பாய் வெளிப்படுத்தும்போது, மகிழ்வின் முழுப்பலனும் உடல்முழுவதும் பரவி நோய்த்துன்பம் அகன்று போகும். உடம்பும் மனமும் புத்துணர்வில் பொங்கிச் சிலிர்க்கும்.
மனிதன் குழந்தையாக இருக்கும்போது ஒருநாளைக்குக் குறைந்தது முந்நூறு தடவை சிரிக்கிறானாம். யாரைப்பார்த்தாலும் சிரிப்பு! எது அசைந்தாலும் சிரிப்பு! எந்த ஓசை கேட்டாலும் சிரிப்பு! அடுத்தவர் குழந்தையைப் பார்த்துச் சிரித்தால் கேட்கவே வேண்டாம், துள்ளிக் குதிக்கிற சிரிப்பு! இப்படிச் சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் வாழ்ந்த மனிதன், வயது ஏறஏறப் பருவம் வளர வளர எங்கே தொலைத்தான் தனது சிரிப்பையும் மகிழ்ச்சியையும்?. அறிவும் சிந்தனையும் பெருகப் பெருகப் பொதுநலமும் பரந்த மனப்பான்மையும் சிந்தையில் வளராமல் சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொள்கலமாகிப் போனதே காரணமாகிப் போனது.
" சீரகம் இல்லாத குழம்பும் குழம்பல்ல! சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல!" என்கிற ஒரு பழமொழியை என்னுடைய தாயார் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன். இதன் பொருள், 'பெரியவர்களாகக் கூடியிருக்கும் வீட்டில் குதூகலம் என்பது குடியிருக்காது!; எதைப்போல என்றால் சீரகம் போடாத குழம்பில் சுவையிருக்காது! என்பதைப் போல'. சோர்ந்துகிடக்கும் ஒரு தந்தை தாயின் முகத்தை, ஒருகுழந்தையின் புன்னகை மாற்றிவிடும். தூங்கி வழிந்து சென்று கொண்டிருக்கும் ஒரு பேருந்துக்குள், கைக் குழந்தையோடு ஒரு தாய் ஏறியதும், அந்தக் குழந்தையின் மகிழ்ச்சி முகத்தையும் குதூகலமாகத் துள்ளிக்குதிக்கும் அழகையும் பார்த்து ஒட்டு மொத்தப் பயணிகளும் மகிழ்ச்சியில் மாறிப்போனதைக் கி.ரா.வின் சிறுகதையொன்று விளக்கும்.
குழந்தை அழுவதும் அப்படித்தான். தேவைக்காக அழும்; கிடைத்துவிட்டால் அடுத்த நொடியே அழுகை கையை நிறுத்திவிடும். கிடைக்காமல் போனாலும் அதை நினைத்து ஏங்கியே அழுகையைத் தொடராது.
அடுத்ததில் கவனத்தை மாற்றி மறந்து போகும். பசிக்காக அழும் குழந்தை பசி அடங்கியதும் நிறுத்திவிடும். அடுத்த இரண்டு, மூன்று மணி நேரங்களில் பசித்தால் என்ன செய்வது என்று இப்போதே மனத்தைப்போட்டு உலுக்கித் துன்பப் படுத்தாது. அப்போது வரும்போது அதை நினைக்கும்; முடிந்துபோனால் மறந்து போகும்.
குழந்தைக்கு வருகிற கோபமும் அப்படித்தான். அடுத்த சில நொடிகளிலேயே அது மாறிப்போகும்.
வளர்ந்த மனிதனுக்கு ஒருவர் மீது கோபம் வந்தால், சண்டைபோடத் தூண்டும்; புண்படுத்தும் வார்த்தைகளால் வசைமாரி பொழியும்; கைகலப்பில் தொடங்கிக் காவல் நிலையம் வரை இட்டுச் செல்லும். பிறகு சமாதானமாகப் போனாலும், மனத்தில் வஞ்சத்தை உருவாக்கிப் பழிவாங்குவதையே குறியாகக் கொண்டு திரியும்.
குழந்தைகள் போட்டுக்கொள்கிற சண்டையே விளையாட்டைப் போன்றுதான் அமையும். குழந்தைகளை முன்னிட்டுப் பெரியவர்கள் போட்டுக்கொள்கிற சண்டையில்கூட ஒரு தீவிரத் தன்மை இருக்கும். ஆனால் குழந்தைகள் வெகு எளிதாகக் கை விரல்களை நீட்டியே 'உன் பேச்சுக் காய்!' என்றும் 'உன் பேச்சுப் பழம்!' என்றும் நொடிக்கு நொடி சண்டைபோட்டு, அடுத்தடுத்த நொடிகளிலேயே சமாதானமாகிக் கொள்வார்கள். இன்று சண்டைபோட்டுக் கொள்வதையே விளையாட்டாக விளையாடுகிறார்கள் இன்றைய சிறுவர்கள். பொறாமை என்பது துளியும் இருக்காது. குழந்தை மனத்தில் எல்லா உணர்வுகளுக்கும் தற்காலிகத் தன்மையே உண்டு.
மகிழ்வது ஒன்றே மனிதவாழ்வின் எல்லையற்ற குறிக்கோள். அதை நோக்கிய பயணத்தில், பணம், செல்வம், வீடு, வாகன வசதிகள் எல்லாம் உதவிடும் துணைக் காரணங்களாக அமைகின்றன. ஆனால் மனிதர்கள் இவற்றை முதன்மைக் காரணங்களாக எண்ணி மயங்கி, தேவையற்ற துன்பங்களில் சிக்கி அல்லாடித் தவிக்கிறார்கள். நிம்மதியை இழக்கிறார்கள். நிம்மதி மனம் சார்ந்ததாக இருக்கின்ற பட்சத்தில், அந்த நிம்மதியைப் பெறுகிற தகுதி வாய்ந்ததாகக் குழந்தை மனமே திகழுகிறது.
குழந்தைப் பருவத்தை தாண்டிவிட்ட நிலையில் குழந்தை மனத்தைப் பெறுவது எவ்வாறு? குந்தை மனத்தை எந்த வயதிலும் பெற முடியுமா?. குழந்தை மனம் என்பது வேறு எங்கிருந்தோ, பயிற்சி எடுத்தோ அல்லது காசு கொடுத்தோ பெற வேண்டியது அல்ல. நாம் கடந்து வந்த பருவம்தான். அன்றாடம் நாம் நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாலே போதும். குழந்தைகளோடு குழந்தையாய் நம் மனத்தை ஆக்கிகொண்டு பழகத் தொடங்கினாலே போதும்.
நம் மனத்திற்குள் வேர்விட்டுப் பரவிக்கிடக்கும் விஷத் தன்மைகள் எல்லாம் அமுதத் தன்மைகளாய் மாறிப்போகும். வஞ்சக மனித மனங்களோடு பழகிப் பழகிக் கலங்கிக் கிடக்கும் நமது உள்ளம் தெளிவான மழைத்துளிப் பிரயாகை போல் புனிதப் பட்டுப்போகும். வளர்ந்து பக்குவம் பெற்றுள்ள அறிவின் துணைகொண்டு பிள்ளை உள்ளமெனும் வெள்ளை உள்ளம் பெறுவோம்! கொள்ளை மகிழ்வை அடைவோம்!.
தொடர்புக்கு 9443190098
- பல்வேறு சுவாச சம்மந்தமான நோய்களில் சளியுடன் அல்லது வறட்டு இருமலாக இருக்கும்.
- பெருகுடல் புண்ணில் அடிவயிறு வலி, ரத்த கடுப்பு, வயிற்றுப் போக்கு மற்றும் உடல் எடை குறைதல் பிரச்சனை இருக்கும்.
நோய் நாடி நோய்முதல் நாடி அதுதனிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல்
நோயின் தன்மையை அறிந்து அதற்கான காரணங்களை கண்டறிந்து முழுமையாக சிகிச்சை அளித்தால் நோய் பூரணமாக குணமடையும் என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கேற்ப ஹோமியோபதி மருந்து செயல்படுகிறது.
இன்றைய மருத்துவத்துறையில் பல்வேறு நோய்களை பக்க விளைவுகளின்றி குணப்படுத்துவதில் ஹோமியோபதி மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இம்மருத்துவமுறையானது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் ஆங்கில மருத்துவரான சாமுவேல் ரெடரிக் ஹனிமன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
பொதுவாக சிகிச்சையின் போது மருந்துகள் அதிக அளவில் கொடுக்கப்படுவதால் போது பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுத்துவதை அவர் கண்டறிந்தார். எனவே மருந்துகள் அளவில் மிகவும் குறைக்கப்பட வேண்டும் என்பதனால் ஹோமியோபதி எனும் மருத்துவத்தில் மருந்துகள் மிகக்குறைந்த அளவில் கொடுக்கப்படுகின்றது. மேலும் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற தத்துவத்திற்கு ஏற்ப நோயை நோயால் குணப்படுத்துதல் என்ற அடிப்படையில் உருவானது இம் மருத்துவம். ஒத்த நோய்க்குறியீடுகளை ஒத்த நோய்க்குறியீடுகளால் குணப்படுத்துவதே இம்மருத்துவத்தின் அடிப்படை.
உடலில் ஏற்படும் பல்வேறு கிருமிகளால் உண்டாகும் நோய் தொற்றுகளில் கிருமிகளை நேரடியாக அழிக்காமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி இயற்கையான முறையில் நோயை குணப்படுத்துவதே இம்மருத்துவ முறையாகும். ஹோமியோபதி மருத்துவத்தில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மற்றும் ஆண், பெண் என அனைவருக்குமான மருத்துவமாக திகழ்கிறது.
குழந்தைகளுக்கான டான்சில் கட்டிகள் (தொண்டையில்), வயிற்றுப் போக்கு, தோல்வியாதிகள், காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றிற்கும் சிறப்பு சிகிச்சை உண்டு.
சுவாச கோளாறுகள்:
சைனஸ், ஆஸ்துமா, அலர்ஜி, இருமல் போன்றவற்றிற்கு சிகிச்சை உண்டு. சைனஸ் என்பது மூக்கின் அருகில் உள்ள காற்றுப் பைகளில் அழற்சியினால் சீழ்கட்டு ஏற்பட்டு தலைபாரம், தலைவலி, மூக்கடைப்பு, மூக்கிலிருந்து சளி வருதல் மற்றும் காய்ச்சல் இருக்கும்.
ஆஸ்துமா என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண், பெண் அனைவரையும் பாதிக்கக்கூடியது. இதில் இழப்பு அதாவது மூச்சு வாங்குதல் உட்கார்ந்து இருக்கும் போதும், மேலும் படுக்கும் போதும், இரவிலும் அதிகமாக இருக்கும். இருமலும் இருக்கும். சளி அதிகம் வருவதில்லை. உடல் இளைத்திருக்கும்.
இருமல்:
பல்வேறு சுவாச சம்மந்தமான நோய்களில் சளியுடன் அல்லது வறட்டு இருமலாக இருக்கும். தொண்டையில் ஏற்படும் அழற்சி மற்றும் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொற்று, காற்றுப்பைகளில் ஏற்படும் அழற்சி தொற்று போன்றவைகளால் தொடர் இருமல் இருக்கும்.
குடல் சார்ந்த பிரச்சனைகளான வாய்ப்புண், வயிற்றுப்புண், சிறுகுடல், பெருகுடல் புண் மற்றும் மூலம், பவுத்திரம் போன்ற வியாதிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி பக்கவிளைவுகள் அற்ற ஹோமியோ மருந்துகளின் மூலமாக சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயிற்றுப்புண்ணால் மேல் வயிற்றில் எரிச்சல், வயிறு உப்பசம், புளியேப்பம், நெஞ்சுகரிப்பு போன்றவை இருக்கும். பெருகுடல் புண்ணில் அடிவயிறு வலி, ரத்த கடுப்பு, வயிற்றுப் போக்கு மற்றும் உடல் எடை குறைதல் பிரச்சனை இருக்கும்.
தோல் வியாதிகளான தோல் அழற்சி, சொரியாசிஸ், படர்தாமரை, வெண்புள்ளிகளுக்கு சிகிச்சை உண்டு.
தோல் அலர்ஜி, கை, கால்களில் தோலில் சிரங்கு போன்றும் நீர் வடிதல் இருக்கும். மேலும் தோல் தடித்து கருத்து காணப்படும்.
சொரியாசிஸ்:
தலை, காதின் பின்புறம், கை, கால் மூட்டுகளின் பின்புறம் மற்றும் உடலின் அனைத்து பகுதிகளிலும் பாதிக்கும். வெண் செதில்கள் உருவாகி கொட்டும். மிகுந்த அரிப்பு, எரிச்சல் இருக்கும்.
படர்தாமரை:
தொடை உட்பகுதி, கை, கால்களில் படை போன்று இருக்கும். தோல் கருத்துவிடும். மிகுந்த அரிப்பு, எரிச்சல், இருக்கும்.
வெண்புள்ளிகள்:
முகம், உதடு, கை, கால் மற்றும் உடலின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும். மேற்கண்ட அலர்ஜி, சொரியாசிஸ், வெண் புள்ளிகள் இவை அனைத்துக்கும் மரபியல் பின்னணி உண்டு. மரபியல் சார்ந்த பிரச்சனைகளில் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தி குணப்படுத்தக் கூடிய சிறந்த மருந்தாக ஹோமியோபதி திகழ்கிறது.
மேலும் மூட்டுவலி, முழங்கால் வலி, கை, கால்களில் வலி, வீக்கம் மற்றும் சரவாங்கி நோய், ஆர்த்தரைட்டிஸ் போன்ற நோய்களுக்கும் பக்க விளைவுகள் அற்ற ஹோமியோ மருந்து உண்டு. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்களை ஹோமியோபதி மருந்துகளால் குணப்படுத்த முடியும். முகப்பரு, பொடுகு, முடி உதிர்தல், தைராய்டு பிரச்சனைகளுக்கும் சிறப்பு சிகிச்சை உண்டு.
பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பப்பை கோளாறுகள், சினைப்பை, நீர்க்கட்டிகளுக்கு சிறந்த மருந்துகள் உண்டு. குழந்தையின்மைக்கும் ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடு, ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சிக்கும், ேஹாமியோபதியில் சிறப்பு சிகிச்சை உண்டு.
இம்மருத்துவத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான அரசால் அங்கீகரிக்கப்பட்ட லைசன்ஸ் பெறப்பட்ட மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு நோய்களுக்கு ஜெர்மனியில் இருந்து தருவிக்கப்பட்ட மருந்துகளாலும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹோமியோ மருந்துகள் செறிவூட்டப்படுவதனால் இதில் நச்சுத் தன்மையோ, கெமிக்கலோ கிடையாது. ஆகையால் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. அனைத்து பிரச்சனைகளுக்கும் நோயின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் நாள்பட்ட நோய்கள் அனைத்தும் முழுமையாக குணப்படுத்தப்படுகிறது.
- மனிதர்கள் அவர் அவர்களுடைய கர்ம வினைக்கு ஏற்ப பல வகைப்பட்ட தகுதியை உடையவர்கள்.
- மனமானது நமது வசம் ஆகிவிட்டால் உலகத்தில் உள்ள எல்லாமே நமது வசமாகிவிடும்.
நாம் முழுமை பேறு அடைய வேண்டும் என்றால், புற உலக பந்தங்களில் இருந்து விடுபட வேண்டும். அதை தான் தியான யோகம் என்கிறோம். தியான யோகம் என்றால் மனிதராக பிறந்த எவரும், வாழும் காலத்திலேயே, வெளி உலகில் உள்ள உறவுகளோடு விலகி, அக உலகிற்கு சென்று தனது மனதையும், ஆத்மாவையும் சேர்க்கும் செயல்தான் தியான யோகம் ஆகும்.
மனிதர்கள் அவர் அவர்களுடைய கர்ம வினைக்கு ஏற்ப பல வகைப்பட்ட தகுதியை உடையவர்கள். ஆகையால் அவர் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப குருவினால் செய்யப்படும் தீட்சைகள் பல வகைகள் உண்டு. அவை 1. ஸ்பரிசதீட்சை, 2. நயன தீட்சை 3. மானச தீட்சை 4. வாசக தீட்சை 5. சாத்திர தீட்டை 6. யோக தீட்சை 7. அவுத்திரி தீட்சை என்று ஏழு வகைகள் உண்டு. அவகைளை பற்றி பார்ப்போம்.
ஸ்பரிச தீட்சை: என்பது குரு சிவ சக்தியை நினைத்து தனது பூ விரலால் சீடருடைய நெற்றி, அதாவது புருவ மத்தியில் வைத்து சிவ சக்தியை அவரிடம் இறங்கும்படி செய்து, மாயையை விலக்கும் தீட்சையாகும்.
நயன தீட்சை: என்பது குரு ஆனவர், சீடரை, சிவ பாவனையில், தனது கண்கள் மூலமாக சீடருடைய கண்கள் வழியாக பார்த்த மாத்திரத்தில், மாயையை விலக்கும் தீட்சை தான் இந்த நயன தீட்சையாகும்.

மானச தீட்சை: என்பது குரு ஆனவர் சீடரை தனது ஆன்மீக ஆற்றலால், சீடருடைய இருதயத்திலே புகுந்து, தனது இருதயத்துடன், சிவ சைத்தன்யத்துடன் கலந்ததாக பாவித்து உடலுக்கு உள்ளே அளிக்கும் தீட்சையாகும். இதுவே மானச தீட்சை எனப்படும்.
வாசக தீட்சை: என்பது சீடரது மாயையை விலக்க, மந்திரங்களுடன் ஐந்து எழுத்தையும் (சிவாயநம) அவற்றின் பொருளையும் அவற்றை ஓதும் முறையையும் உணர்த்தி அளிக்கம் தீட்சையே வாசக தீட்சை எனப்படும்.
சாத்திர தீட்சை: என்பது குரு ஆனவர், சீடருக்கு ஆகமங்களில் உள்ளபடி பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (பற்று) இவற்றின் இலக்கணங்களை உணர்த்தி, அவற்றை அறியப்படும்படி செய்யும் தீட்சை தான் சாத்திர தீட்சையாகும்.
யோக தீட்சை: என்பது குரு தனது யோக சக்தியால், சீடருடைய இருதயத்திலே பிரவேசித்து, மாயையை விலக்கி சிவத்தோடு சீடரை ஒப்படைக்கும் தீட்சை தான் யோக தீட்சையாகும். இதில் சீடர் ஆனவர் குருவின் உதவியால், தான் தானாக நின்று தன் மூலத்தோடு இணைந்து தானே சிவமாகும் நிலைக்கு வருவார்.
அவுத்திரி தீட்சை: என்பது குரு ஆனவர் தனது யோக சக்தியால், ஓமம் கிரியைகளுடன் சீடரின் மாயையை நீக்க செய்யும் தீட்சையாகும். இதில் யாகம் முக்கிய பங்கு வகிக்கும். இதில் சித்தர்கள் மகிவும் முக்கியத்துவம் கொடுப்பது தச தீட்சை தான். தச தீட்சை என்றால் பத்து வகையான தீட்சை என்பது பொருள் அல்ல. நமது உடலிலே வலது கண் ஒளிக்கு 8 என்ற எண்ணும், இடது கண் ஒளிக்கு 2 என்ற எண்ணும் சித்தர்கள் குறிப்பாக சொல்கின்றனர்.
இந்த எட்டையும், இரண்டையும் ஒன்று சேர்த்தால், நம் உயிர் ஸ்தானம் ஆகிய அக்னி கலையை அடையலாம். இந்த 10 எண் இடமானது நம் பரு உடலிலே இரு கண்கள் உள் சேரும் இடத்தில் தான் நம் உயிர் உள்ளது. இங்குள்ள உயிர் ஒளியை பெருக்குவது தான் தச தீட்சை என்று சித்தர்கள் சொல்கின்றனர். திருமூலர் அவர்கள் தனது திரு மத்திரத்திலே,
''எட்டும் இரண்டும் இனிதறிகின்றலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க பாதமே'' என்று குறிப்பிடுகிறார்.

பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்
எட்டும், இரண்டும் இனிதாக பேரின்பத்தை கொடுக்கும் என்பதை அறியாதவர்கள், பொருள், பணம் இருந்தும் ஏழைகளாகவே இருப்பர். அதுபோல், எட்டையும், இரண்டையும் அறிந்தவர்கள் ஞானம் ஆகிய செல்வம் பெற்ற பணக்காரர்கள். இதை அறியாதவர்கள், ஞானம் ஆகிய செல்வத்தை அறியாத ஏழைகள், அவர்கள் இதன் இன்பத்தை அறிய மாட்டார்கள்.
எட்டு என்பது தமிழில் 'அ' என்றும், சூரியன் என்றும் நமது வலது கண் என்றும் மறைபொருளை உணர்த்துவதாகும். இரண்டு என்பது தமிழில் '2' என்றும், சந்திரன் என்றும் இடது கண் என்றும் கூறுவர் (8+2=10). இந்த அ+உ=ய என்பதாகும். சூரியனும், சந்திரனும் நமது சாதனையால் ஒன்றுபட்டு, உள் முகமாக சென்று பத்தாகிய 'ய' என்கின்ற அக்னியோடு சேர்த்தாலே, திருவடி ஜோதியை, இறைவனை தரிசிக்க முடியும். இதைத்தான் 'முச்சுடரும் ஒன்றை முடிந்தோர் சோதி. பாதம் அச்சுதனும், அயனும் காண அனந்தமா பாதம்' என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே தியானம் என்பது என்னவென்றால் 'மனசஹா சமாதி' என்கின்றனர் மகான்கள். மனம் தான் சாந்திக்கு (அமைதி) மூலமாக உள்ளது. இந்த மனமானது நமது வசம் ஆகிவிட்டால் உலகத்தில் உள்ள எல்லாமே நமது வசமாகிவிடும். அதே நேரம் அந்த மனமானது, நம் வசம் இல்லையென்றால், எல்லாமே நம்மைவிட்டு போய்விடும். இதைத்தான் கீதையிலே அர்சுனன், கிருஷ்ணரிடம் என் மனம் மிகவும் குழப்பமாக உள்ளது என்று கூற அதற்கு அவர் கொடுத்த சிறந்த மருந்துதான் கீதை எனப்படுகிறது.
ஏனெனில் மனம் என்றால் குழப்பம் என்றுதான் மனிதர்களிடையே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, படிக்காதவர்களைவிட, படித்தவர்களிடம் தான் இன்று மனகுழப்பம் அதிகமாக உள்ளது. இதுவே வெகு விரைவில் மனோ வியாதியாக மாறுகிறது. எனவே இந்த மனதை ஓர் நிலைப்படுத்த நாம் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பயிற்சி இல்லாமல் ஞானம் இல்லை.
பதஞ்சலி யோக சத்திரத்திலே மனதை நிலைப்படுத்த அப்பியாசம் பயிற்சிகள் இருக்கிறது. அது போல வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனதை நிலைப்படுத்தவும், அறியவும் ஒன்பது வகையான தியானங்களை கொடுத்து இருக்கிறார்கள். இது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் எளிமையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும், ஆண், பெண் இரு பாலருக்கும் சமமாக கற்றுக்கொள்ளும் படியும் உள்ளதுதான் இதன் சிறப்பாகும்.
பதஞ்சலி அவர்கள், மனதை பற்றி சொல்லும்போது, 'சித்த விரோதி நிரோதஹா' என்கிறார். அதாவது மனதின் ஓட்டத்தை நிறுத்துவது அப்யாச வைராக்கியம்தான் நிரோதஹா என்று கூறுகிறார். பயிற்சியால் மட்டும் நிறுத்தும்போது அந்த நேரத்தில் மட்டும்தான் சுகம் கிடைக்கும். மீண்டும் சிறிது நேரம் கழித்து பழைய நிலைக்கு சென்றுவிடும். இது உபயோகம் இல்லை. எல்லா நேரமும் அதே நிலையில் இருந்து பழகுவதுதான் முக்கியம்.
ஆனால் நம் மனமானது மீண்டும் மீண்டும் வெளியே செல்கிறது. இதற்கு காரணம் என்ன என்றால், நம் மனமானது, வெளியில் உள்ள பொருளில்தான் சந்தோஷம் உள்ளது என்று நினைக்கிறது. வேதத்திலே இதற்கு மூன்று காரணங்கள் அழகாக சொல்லப்படுகிறது. 1. அந்த பொருளில் சுகம் இருக்கிறது 2. அது அழகாக இருக்கிறது 3. நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இந்த மூன்றையும்தான் மனம் எப்போதும் தேடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த மூன்றும் வெளியில் தேடினால் கிடைக்காது. இவை உனக்குள் உள்ளது.
நம் அறிவின் மூலமாக இதை நாம் எப்போது அறிகிறோமோ அந்த நேரம் முதல் மனம் நம் வசமாகி விடும் என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். மேலும், மகரிஷி மனதை அடக்க முயன்றால் அது அலையும் என்றும், அதை அறிய நினைத்தால் அடங்கும் என்றும் கூறுகிறார்.
இந்த மனமானது உன் வசப்படும் நிலைதான் தியானம், யோகமாகும். இந்த நிலையில் அறிவு முழுமை பெறும்போது நமக்கு வாழும் காலத்திலேயே முக்தி கிடைக்கிறது. எனவே முதலில் ஆத்மா தான் எல்லாவற்றிற்கும் மூலம் என்பதை உணர வேண்டும்.
இதற்கு நமக்கு எளிதில் பதில் வேண்டும் என்றால், திருவண்ணாமலையில் நடமாடும் சித்தராக வாழ்ந்த மகான் ஸ்ரீ ரமண மகரிஷியிடம் செல்ல வேண்டும். அவரிடம் ஒரு சீடர் கேட்டார், எல்லா சாஸ்திரங்களும் சொல்வது, மனம் அடங்கினால் சுகம் இருக்கும் என்று. நமக்கும் அது புரிகிறது. அனுபவத்தால் நாம் தூங்கும்போது எந்த கவலையும் இல்லை. சுகமாக உள்ளது. அதே போல தியானம் செய்யும் போது நம்மை மறந்து சுகமாக உள்ளது. பிறகு வெளி விஷயங்களில் நம் மனம் மாட்டிக் கொள்ளும்போது துன்பம் வருகிறது. துக்கம், கவலை, மன அழுத்தம் வந்து ஆத்மாவில் நிலைப்பது இல்லை. ஆனால், சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாம் அதற்கான பயிற்சி செய்து வெற்றி பெறலாம் என்கிறது. அது எப்படி என்று கேட்டார்.
அதற்கு ரமணர் உடனடியாக எந்த பதிலும் சொல்லவில்லை. 3 நாட்கள் கழித்து அவரது ஆசிரமத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. அவர் எல்லா ஜீவ ராசிகளிடத்தும், அன்பாக இருப்பார். அவரிடம் நிறைய அணில்கள் பழகி வந்தது. அதில் ஒரு பெண் அணில் குட்டி போட்டது. அது குட்டி போட்ட சில மணி நேரத்திலேயே அந்த தாய் அணிலை பூனை தனக்கு உணவாக பயன்படுத்திக் கொண்டது. அந்த அணில் குட்டிகளை அன்பாக வளர்த்தார். அவைகள் பெரிதானதும் அங்கும் இங்குமாக ஓட ஆரம்பித்தன. அதை ரமணர் ஒவ்வொன்றாக பிடித்து ஒரு பெட்டியில் போடுவார். அதற்குள் மற்றொன்று வெளியே ஓடிவிடும். இப்படியே பிடித்து பிடித்து போட்டுக்கொண்டு இருந்தார். அந்த கேள்வி கேட்ட சீடரும் அங்கு இருந்தார். இதை பார்த்த ரமணர், இந்த அணில் குஞ்சு போலத்தான் நமது மனமும். இந்த குஞ்சுகளுக்கு எப்படி நம் அம்மாவை சாப்பிட்ட பூனை வெளியில் இருக்கிறது என்று தெரியாமல் அதனிடம் மாட்டி கொள்ள வெளியில் ஓடுகிறதோ அதுபோல நம் மனமும் வெளி விஷயத்தில் துன்பம் இருக்கிறது என்று தெரியாமல் அலைகிறது. இதற்கு தான் குரு தேவை என்றார்.
போன்: 9444234348
(ஆராய்ச்சி தொடரும்)
- குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற ஒரே ஒரு தொகுதி இதுதான்.
- அதிகாரச் சமநிலை மாறவில்லை. ஆனால் ஆட்சிச் சமன்பாடு சரிந்து விட்டது.
"உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் ஒன்றை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள். ஏழைத் தாய்மார்களின் தாலிகளைக் கூடப் பிடுங்கி விடுவார்கள்."
இந்த வெறுப்புப் பேச்சுகள் 2024 தேர்தலில் பெரும் விமர்சனத்துக்குள்ளானவை. அவை எழுப்பப்பட்ட குஜராத் மாநிலம் பனாஸ்கந்த் தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற ஒரே ஒரு தொகுதி இதுதான்.
வெற்றி வேட்பாளர் ஜெனிபென் தாகூர் என்கிற பெண் வேட்பாளர். எருமை வளர்ப்புக்குப் புகழ்பெற்றது பனாஸ்கந்த். அது ஒரு பால் உற்பத்திக் கேந்திரம்.
கேரளாவின் திருச்சூரில் பா.ஜ.க. பெற்ற ஒற்றை வெற்றிக்குக் கிடைத்த அதே முக்கியத்துவத்தைப் பனாஸ்கந்த் தொகுதியும் பெற்றது. குஜராத் மாநில அரசியலில் ஏற்படவிருக்கும் எதிர்கால மாற்றத்திற்கான திசை காட்டி அது.

பிரதமர் நரேந்திர மோடியின் பரப்புரைகளை வாக்காளர்கள் பெரும்பாலும் நிராகரித்து இருக்கிறார்கள். இறுதிக் கட்ட தியானமும் கை கொடுக்கவில்லை.
ஜனநாயகத்தில் எண்ணிக்கையை விட எண்ணங்கள் முக்கியம் இந்திய வாக்காளர்கள் வெறுப்புப் பிரசாரத்தை நிராகரித்து இருக்கிறார்கள். ஆனாலும் எண்ணிக்கை பலமும் கூட்டணியும் சிம்மாசனத்தை நிர்ணயித்திருக்கின்றன.
தேர்தல் முடிவுகள் யூடியூப் சேனல்களுக்குச் சமர்ப்பணம். மெயின் மீடியா சொல்லாத விஷயங்களை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்தவை அவை தான்! சில இந்தி மொழி யூடியூப் சேனல்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்டிருந்தன.
குறைபாடுகள் இருந்தாலும் சரி பார்த்துச் சமன் செய்யும் அமைப்புகளாக 2024 தேர்தலில் திகழ்ந்தவை யூடியூப் சேனல்கள். அவற்றின் நம்பகத்தன்மையைத் தராதரம் பார்த்துப் பிரித்துப் புரிந்து கொண்டார்கள் இந்திய வாக்காளர்கள். சர்வ வல்லமை பொருந்திய டெல்லியால் வாய்ப் பூட்டுப் போட முடியவில்லை.

நேர்மையான வாக்கு எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தின் நடுநிலைக்கு எடுத்துக்காட்டு என்கிற வாதம் தவறு. ஏனென்றால் அட்டவணை மற்றும் பரப்புரைகளில் சமமான ஆடுகளத்தை ஆணையம் ஏற்படுத்தி இருந்தால் முடிவுகள் இன்னும் கூர்மைப்பட்டிருக்கும்.
அதிகாரச் சமநிலை மாறவில்லை. ஆனால் ஆட்சிச் சமன்பாடு சரிந்து விட்டது. இப்போதும் பாரதிய ஜனதா தான் தனிப்பெருங்கட்சி. ஆனால் நரேந்திர மோடியின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணிக் கபடியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உருவாகி விட்டது.
10 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்த அதிகாரக் குவிப்பு இனி பரவலாக்கப்படும். பலவீனப்படுத்தப்பட்டிருந்த மக்களாட்சி அமைப்புகள் முதுகெலும்போடு தலை நிமிரும்.
இன்றைய புதிய ஆட்சியாளர்கள் பழைய முரட்டு பயில்வான்கள் இல்லை. ஆட்ட விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் கூட்டணி ஆட்சியால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் போன்ற எல்லா அமைப்புகளும் இனி சுதந்திரப் பெருமூச்சு விடலாம்.
மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி! அறிஞர் அண்ணாவின் தத்துவம் இதுதான்!! அது 2024லிலும் மீண்டும் நிரூபணமாகி இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பான்மைக்கு இன்றியமையாத எண்ணிக்கையைக் கையில் வைத்திருக்கும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு. இருவருமே மோடி எதிர்ப்பாளர்கள்.
சென்ற 2014 மோடி வெற்றியில் நாயுடுவுக்கும் பங்கு உண்டு. ஆனால் ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து விவகாரம் காரணமாக அது 2018-ல் கசந்தது.
அதன் பின்னர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார் சந்திரபாபு நாயுடு. 2019 தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளோடு அவர் உடன்பாடு கண்டார்.
அதேபோல் நிதிஷ்குமார் 2014 தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. உறவை முறித்துக் கொண்டார். மதச்சார்பற்ற ஒருவர்தான் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்று குரல் கொடுத்தார். மோடிக்கு எதிராக இந்தியா–கூட்டணி உருவாக்க முன் முயற்சி எடுத்தவர் அவர் தான்.
சுருக்கமாகச் சொன்னால் நிதிஷ்குமார் ஒரு நிர்பந்தக் குமார். சந்திரபாபு நாயுடு நிபந்தனை நாயகன். இப்போது இருவரும் மோடியின் வலது மற்றும் இடது கரங்கள். இருவரும் போடுகிற கிடுக்கிப் பிடிகள் போகப் போகக் குரல்வளையை நெரிக்கும்.
மோடி வெற்றி நாயகன் ஆன 2014 தேர்தலின் முதல் பேரணியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உரையாற்றினார். பாரதிய ஜனதாவில் 3 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளதாக அவர் அப்போது கூறினார்.
"சட்டமன்றத் தேர்தல்களில் ஹாட்ரிக் சாதனை படைத்தவர் மோடி மட்டும் அல்ல. சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராமன் சிங் ஆகியோரும் அவரைப் போலவே 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்!" என்று அஹ்மத் நகரில் பிரசாரம் செய்தார் அத்வானி.
மத்தியபிரதேசத்தின் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சத்தீஸ்கரின் ராமன் சிங் ஆகிய இருவரும் மோடியால் ஓரங்கட்டப்பட்டனர். அத்வானிக்கும் அதே நிலை தான் பின்னர் ஏற்பட்டது. இப்போது சவுகான் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஆவார் என்ற செய்திகள் தலைநகரில் சிறக்கடித்துப் பறக்கின்றன.
அதே அத்வானி 1989-ல் 'வின்னர் டேக்ஸ் ஆல்!' என்றார். இரண்டாவது வந்தவர்தான் உண்மையான வெற்றியாளர் என்பது பொருள். முந்தைய 1984 தேர்தலில் இரண்டே இரண்டு சீட்டுகள் வென்றிருந்த பா.ஜ.க. ஐந்தே ஆண்டுகளில் 85 சீட்டுகள் பெற்றது என்பதையே அவர் அப்படிக் குறிப்பிட்டார்.

தராசு ஷ்யாம்
அந்தத் தேர்தலில் 197 சீட் எடுத்து தனிப் பெருங்கட்சியாக வந்த காங்கிரஸ் டல் அடித்தது. ஆனால் வெறும் 85 எடுத்த பா.ஜ.க. உற்சாகப்பட்டது. அரசியல் சதுரங்கத்தில் சரியான நகர்வுகளைச் செய்யும் எதிர்க்கட்சி அடுத்த முறை ஆளுங்கட்சி என்பார்கள்.
இந்தத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப் பெருங்கட்சியாக வந்த பா.ஜ.க.வில் பெரிய உற்சாகத்தைக் காணோம். ஏனென்றால் அது எதிர்பார்த்த மிருகபல மெஜாரிட்டி அதற்குக் கிடைக்கவில்லை.
மாறாக, 2-ம் இடத்துக்கு வந்திருக்கும் இந்தியா கூட்டணி, குறிப்பாக 99 இடம் பெற்றுள்ள காங்கிரஸ் துள்ளலில் இருக்கிறது.
காங்கிரஸ் தனது எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி இருக்கிறது. பா.ஜ.க.வுடன் நேரடியாக மோதிய தொகுதிகளில் வெற்றி விகிதத்தை அதிகரித்திருக்கிறது. தலித் மற்றும் பட்டியல் பழங்குடி தொகுதிகளில் வாக்கு மற்றும் அதன் வெற்றி பெருகி இருக்கிறது.
இந்துத்துவத்தின் பட்டறையான யோகியின் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு இந்தியா கூட்டணி செக் வைத்திருக்கிறது. அங்கு பா.ஜ.க. வென்ற தொகுதிகளில் கூட 23 இடங்களில் வாக்கு வித்தியாசம் இரண்டு சதவீதம்தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியின் பைசாபாத்
எம்.பி. இப்போது சமாஜ்வாடி கட்சி. பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளரை நிறுத்தி அந்த ஜனநாயகப் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது இந்தியா கூட்டணி.
இனி "உடனே என்.ஆர்.சி. அதற்கடுத்தாற்போல் பொது சிவில் சட்டம், பின்னர் பாரதம், அதற்கடுத்து ஒரே நாடு.. ஒரே தேர்தல், 2029க்கு முன் இந்து ராஷ்டிரம்தான்!" என்றெல்லாம் உருட்டிக் கொண்டிருந்தவர்கள் கப்சிப்! எதுவுமே இனிமேல் நிகழ வாய்ப்பு இல்லை.
பின்தங்கிய நிலையில் உள்ள இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை சந்திரபாபு கூர்மைப்படுத்தும்போது மோடி என்ன செய்வார்? பா.ஜ.க.வின் பலம் நிறைந்த பீகாரில் நிதிஷ் தன் வலிமையைப் பெருக்க முயற்சிப்பார். இப்போதே அவர் அங்கு தன் மகன் நிஷாந்த் குமாரைக் களத்துக்குக் கொண்டு வந்து விட்டார்.
லாலுவின் குடும்ப அரசியலை எதிர்த்தது பா.ஜ.க. இனி அது டெல்லிக்காக நிதிஷ் குமாரோடு அனுசரித்துப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்..
என்ற சத்திமுற்றப் புலவரின் பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது.
மத நல்லிணக்கம் இந்தியாவின் சிறப்பு களில் ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக அது பேராபத்தில் சிக்கியிருந்தது. இனி யார் நினைத்தாலும் மதம், மொழி மற்றும் பழங்குடிச் சிறுபான்மையினரின் உரிமைகள் மீது ஆக்கிரமிப்புச் செய்ய முடியாது.
கருத்துச் சுதந்திரம் மறு கட்டமைக்கப்படும். மத்திய புலனாய்வுத் துறைகள் ஏவிவிடப் படுவதும், அவற்றை வைத்து மாநிலக் கட்சிகளை உடைப்பதும் இனி பழங்கதை!
வெற்றுவேட்டு தியான ஸ்டண்ட்களை நிறுத்தி விட்டு வேலைவாய்ப்பு மாற்று விலைவாசி உயர்வுக் கட்டுப்பாடு போன்ற வற்றில் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.
தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 100 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது.
நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மாதந்தோறும் மின்சார பில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவற்றை 2025-க்குள் நிறைவேற்றியே ஆக வேண்டும்.
டெல்லியின் புதிய சாம்ராஜ்ஜியத்தை வற்புறுத்தக் கூடிய எண்ணிக்கை பலத்தை வாக்காளர்கள் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாட்டில் வழங்கி இருக்கிறார்கள். எனவே மக்கள் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்... வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு இருக்கவே இருக்கிறது அடுத்த தேர்தல்!
- புது பாடலாசிரியராக வந்த இளைஞர் தான் கவியரசு கண்ணதாசன்.
- அந்த கால கட்டத்தில் நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தார்கள்.
"இசை!
இசை எப்போது உருவாகியிருக்கும்?
குகைகளில், மரக்கிளைகளில் மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகளிடம் இருந்தும், ஊர்வன விஷப்பூச்சிகளிம் இமிருந்தும் தங்களை காத்துக் கொள்ள, இரவின் இருள் பயத்தால் ஒருவருக்கொருவர் தங்கள் இருப்பை தெரிவித்துக் கொள்ள ஏதோ ஓசை, சத்தம், சீழ்க்கை ஒலி (விசில்) போன்ற ஒலிகளை எழுப்பியிருக்கக்கூடும்.
தாங்கள் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் தோல்களை குளிருக்கும் வெயிலுக்கும் போர்த்திக் கொண்டு உடையாய் மாற்றியதைப் போல, தோலை மரக்கட்டைகளில் சேர்த்துக்கட்டி, குச்சிகளால் ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டியிருப்பார்கள். இவையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேம்பட்டு, பக்குவப்பட்டு இசைக் கருவிகளாக தோன்றியிருக்கும்!
வாங்க, கொஞ்சம் கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி போகலாம்.
1918-ல் தென்னிந்தியாவின் முதல் அசையும் திரைப்படம், ஆனால் மவுன திரைப்படம் "கீசகவதம்". 14.3.1931-ல் இந்தியாவின் முதல் பேசும்படம் "ஆலம் ஆரா" திரையிடப்பட்டதாம். தமிழகத்தில் 1931ல் வெளிவந்த முதல் பேசும் படம் "காளிதாஸ்".
அப்போதைய கட்டுப்பெட்டியான காலக்கட்டத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு வீடுகளில் ஏகப்பட்ட கெடுபிடி, தடை. அதனால் பக்தி படங்கள், புராணக் கதைகளை சொல்லும் திரைப்படங்கள் மட்டுமே தயாரிக் கப்பட்டது. சுதந்திரம் அடையாத காலம். அதனால் ஆங்கிலேய அரசுக்கு எதிரான படங்கள் எதுவும் எடுத்துவிட முடியாது. அரசின் தணிக்கைக் கட்டுப்பாடும் இருந்தது.
அதன் பிறகு அரசர்கள் கால கதைகளைக் கொண்ட திரைப் படங்கள் வந்தன. பெண்கள் யாரும் நடிக்க முன் வராத அந்த காலக்கட்டத்தில் நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தார்கள். திரைப்படங்கள் பக்திப் படங்களாக இருக்கவே கொஞ்சமாக பெண்களும் திரைத்துறைக்கு வந்தனர்.
இன்னொரு புறம், அப்போது பின்னணி பாடல்கள் ஒலிப்பதிவு செய்யும் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை. நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் போதே காமிராவுக்கு தெரியாதவாறு கூடவே ஹார்மோனியம் போன்ற குறைந்த இசைக் கருவிகள் மட்டுமே வைத்துக் கொண்டு, பேசியும் பாடியும் நடிப்பதை படமாக்குவார்கள். அதனால், பாடத்தெரிந்த ஆண், பெண்கள் மட்டுமே நடிக்க முடியும்.
இந்த காலக் கட்டத்தில் தான் எம்.கே. தியாகராஜ பாகவதர் 1934ல், எம்.கே.ராதா -1936ல், பி.யு.சின்னப்பா 1938ல், டி.ஆர்.மகாலிங்கம் 1937ல் நடிக்க வருகிறார்கள். இவர்களின் பாடல்களுக்காகவே ஓடியத் திரைப்படங்கள் உண்டு.
நடிகைகளில் டி.பி.ராஜலட்சுமி 1931ம் ஆண்டில் முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் நடித்தவர். அந்த காலத்திலேயே அஷ்டாவதானி என புகழப்பட்டவர். முதல் பெண் இயக்குநர்! கண்ணாம்பா 1938ல் நடிக்க வருகிறார். கே.பி.சுந்தராம்பாள் 1935ல் பக்த நந்தனார் பேன்ற திரைப்படத்தில் நந்தனாராக நடித்தார். அந்த நாளிலேயே தனது பாடல்களுக்காகவே பிரபலமானவர்.
திராவிட இயக்கத்தை சேர்ந்த பலர் நாடகங்கள் நடத்தி வந்தனர். நாடகங்களின் மூலம் சுதந்திரக்கால வரலாறு, மற்றும் தேசத் தலைவர்கள் போராடியக் கதைகள் எல்லாம் பொதுமக்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நேரடியாக சேர்த்தது. திரையரங்குகளை விட நாடங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் மெல்ல மெல்ல சமூகக் கதைகளும் வர ஆரம்பித்தன.
கால இயந்திரத்தை விட்டு இறங்கி விடுவோம். திரும்ப அடுத்த தொடரில் தொடரலாம்!
"இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனிடம் உதவியாளராகயிருந்த எம்.எஸ்.வி.
பாடலாசிரியர்களிடம் மெட்டுக் கேற்ற பாடல் எழுதி வாங்குவார் என்று பார்த்தோமில்லையா?
"கன்னியின் காதலி" என்றொரு திரைப்படம் 1949ல் வந்தது. அப்படத்திற்கு பாடல் எழுத ஒரு புதிய இளைஞன் தேர்வானார். அவரிடம் "தத்தகாரம்" சொல்லி பாடலுக்கு காத்திருந்தார் எம்.எஸ்.வி.
(இசை அமைக்க வேண்டிய மெட்டுக்கு தானா, தன்னன்னா, தையன்னா, தத்தத்னா" என்று சொற்கள் இல்லாத ஓசையை மட்டும் பாடிக்காட்டவேண்டும். அந்த ஓசைக்கு பொருத்தமான சொற்களை பாடலாசிரியர்கள் எழுதுவார்கள்.
"வறுமையின் நிறம் சிவப்பு" படத்தில் "முத்து இருக்குது சிப்பி இருக்குது"? என்ற பாட்டில் வருமே, அதுபோல் தானே என்று கேட்கறீங்க? அதுதான்! அதுவேதான்!)
புதுக் கவிஞரும் பாட்டு எழுதி தந்துவிட்டார். வாங்கிப் படித்துப் பார்த்த எம்.எஸ்.வி. "இதென்ன களி, கூத்து"ன்னு எழுதியி ருக்கீங்க? என்கிறார். அந்த இளைஞனோ, "ஏன் பாட்டு மெட்டில பொருந்துகிறதே" என்கிறார்.
"மெட்டுக்கு சரியா பொருந்துது, ஆனா... இந்த களி,கூத்து இதெல்லாம் சரியில்லை. மாத்திடுங்க", என்கிறார் எம்.எஸ்வி.
"அவைதான் சரியான சொற்கள், அதையேன் மாத்தணும்?"
அப்போதெல்லாம் வடமொழி சொற்கள் கலந்தும் பாடல்கள் இருக்கும்! இவர்களின் முதல் சந்திப்பே வாக்குவாதம்! அப்போது ஜூபிடர் பிக்சர்சல் நிறுவன கவிஞராக இருந்த "உடுமலை நாராயண கவி" அந்த வழியாக வந்தார், புதுக்கவிஞரின் வரிகளை வாங்கிப் படித்துப் பார்க்கிறார். 'அட, சரியான தமிழ் வார்த்தைகள் தான் எழுதியிருக்கீங்க" என்று பாராட்டிவிட்டு, தம்பி இந்த களி, கூத்து இதெல்லாம் இவங்களுக்கு வித்தியாசமாக தெரியுது. அதற்கு பதில் "காரணம்தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே'ன்னு போட்டு பாருங்க" என்கிறார்.
இது மெட்டுக்கு சரியாப் பொருந்துதுண்ணே என உற்சாகமாகிறார் எம்.எஸ்.வி. எல்லாருக்கும் புரிகிற மாதிரி இருக்கட்டுமேன்னு தான்... சொன்னேன்.
திரைப்படங்களில் காட்டப்படும் எழுதப்படாத சட்டம் போல "மோதலில் உருவான இவர்களது அன்பு" இறுதிக் காலம் வரை, "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று இரட்டையர்களாகவே திரையுலகில் கொடிக் கட்டிப் பறந்தார்கள். அந்த புது பாடலாசிரியராக வந்த இளைஞர் தான் கவியரசு கண்ணதாசன்.
உடுமலை நாராயண கவிப் பற்றி பார்த்தோமில்லையா? அவரின் வரிகளுக்கு சி.ஆர்.சுப்பராமன் பாடி, இசையமைத்த ஒரு பாடல்! "மருமகள்"என்றத் திரைப்படத்தில் இடம் பெற்ற "லாலி சுபலாலி, காதலர் ஜாலி வெகு ஜாலி".
கல்லூரி மாணவர்களில் ஒருஜோடி பதிவுத் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். மீதி தோழி, தோழர்கள் அவர்களை வாழ்த்திப் பாடுகிறார்கள். வழக்கமாக சம்பிரதாயமானப் பாடல்கள் என்றால் திருமணம் முடிந்தவுடன் வரும் நலுங்குப் பாடலை "ஆனந்த பைரவி" ராகத்தில் அமைப்பார்கள். இது கல்லூரி மாணவர்கள் பாடுவது இல்லையா? அதனால் ராக் அண்ட் ரோல், கைத்தட்டல் என்று ஜமாய்த்திருப்பார்கள்.
இதில் இன்னொரு புதுமையாக பாடலின் ஆரம்பத்திலும், கடைசி யிலும் "லாலி", "காதலர் வெகு ஜாலி" என்றவரிகள் வரும் போது பாடகர்கள் ஒரு மெட்டிலும், குழுவினர் லல்லல்லல்ல லல்லல்ல லா என்று வேறு ஒரு மெட்டிலும் பாடியிருப்பார்கள்.
இந்த பாடல் சி.ஆர்.சுப்பராமன் இசையமைத் திருந்தாலும், அவருக்கு உதவியாளராக எம்.எஸ்.வி. இருந்தார் என்பதும் பாட்டுப் புத்தகம் வழியே தெரிகிறது.
மேலே சொன்ன இசை வகை, "கவுண்டர் பாயிண்ட்" என்கிற மேற்கத்திய இசை முறையாகும். ஒருவர், பாடலில் ஒரு மெட்டில் பாடும்போது, இன்னொருவர் அதே நேரத்தில் அதே பாடலில் வேறு மெட்டில் பாடுவது. அந்தக் காலக் கட்டத்தில் இந்த இசையமைப்பு புதிது.
இந்த இசை முறை மிக மிக முன்னோடியாக சி.ஆர்.சுப்பராமன் அவர்களால் கையாளப் பட்டிருப்பது 1953-ல் வந்த 'மருமகள்' படத்தில் வந்த 'லாலி சுபலாலி' பாடலில் என்பது ஒருபுறம் இருந்தாலும், 1952ல் வெளிவந்த 'பணம்' என்றத் திரைப்படத்திலும் கூட 'ஏழை நின் கோவிலை நாடினேன், எழில் மின்னும் சிலை வண்ண தேவியே' என்றப் பாடலில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி தங்களின் முதல் படத்திலேயே இந்த நுட்பத்தை கையாண்டு இருக்கிறார்கள்.
இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கிலேயும், கடைசியிலும் கவுண்டர் பாயிண்ட் பாடல் வகையை பயன்படுத்தியிருப்பது மட்டுமில்லை, இந்த பாடலில் Over lapping என்ற முறை அதாவது ஒருவர் பாடும்போதே அந்த குரலின் கூடவே இன்னொரு குரலையும் பாட வைப்பது.
இரு குரலும் ஒரே மெட்டில் ஒரே நேரத்தில் பாடினால் அது ஓவர் லாப்பிங் இரு குரலும் வேறு வேறு மெட்டில் ஒன்றாக ஒரே நேரத்தில் பாடுவது கவுண்டர் பாயிண்ட். இந்த இரண்டு நுட்பமுமே தங்களது முதல் படத்திலேயே கொண்டு வந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, "ஏழை நின் கோவிலை" பாடல் வால்ட்ஸ் என்ற மேற்கத்திய வகைப்பாடல்.
24 வயது இளம் முதல் பட இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன், அப்போதைய மிகப் புகழ்பெற்ற, கர்நாடக சங்கீதத்தில் பெயர் பெற்ற எம்.எல்.வசந்தகுமாரி (நடிகை ஸ்ரீவித்தியாவின் அம்மா) அவர்களை முற்றிலும் புதிய மேற்கத்தியம் பாடவைத்தது புதுமை, புரட்சி எனலாம்.
'குலேபகாவலி' என்றவொரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த போது அதைக் கேட்ட ஜே.பி.சந்திரபாபு "இந்த மாதிரி இசைக்கு எப்படி ஆடமுடியும்? என்னால் ஆட முடியாது" என்று சொன்னதற்கு "நான் ஆடிக்காட்டுகிறேன் பாருங்கள்" என்று சொல்லி ஆடியும் காட்டினாராம் எம்.எஸ்.வி. அவர் சிறு வயதில் முறையாக நடனம் கற்றவராம். நடனத்தால் சந்திரபாபு அசந்துவிட்டாராம்.
முன்பு ஒரு முறை செண்ட்ரல் ஸ்டுடியோவில் எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவிடம் பாட வாய்ப்பு கேட்டு சந்திரபாபு போனபோது, "பாடவில்லை, முனகுகிறார்"என்று சந்திரபாபுவை மறுத்தவர் தான் உதவியாளராக இருந்த எம்.எஸ்.வி. பின்னாட்களில் இருவரும் உயிருக்கு உயிரான நண்பராகி விட்டார்கள்.
இரவில் பதினோரு மணிக்கு கூட எம்.எஸ்.வி.யின் தாயார் நாராயணிக்குட்டி அம்மாவை தோசை சுட்டுத் தர சொல்லி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமான சந்திரபாபுவின் கடைசி காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து கவனித்துக் கொண்டார்.
எம்.எஸ்.வி. "நான் இறந்துவிட்டால் எனது உடலை கொஞ்ச நேரம் விஸ்வநாதனின் வீட்டில் கிடத்தி விட்டு பிறகு மயானத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்" என்று ஜே.பி.சந்திரபாபு சொல்லியிருந்தாராம். அப்படியே நடந்ததாம். மோதலில் பூத்த இன்னொரு அழகான நட்பு இது!
தொடர்ந்து புதையல் எடுப்போம்...

கவிஞர்
கி.பானுமதி கிருஷ்ணகுமார்
இணைய முகவரி:banumathykrishnakumar6@gmail.com
- கபோதகம்’ என்றால் புறா என்று பொருள்.
- பல ஆன்மிகக் கதைகளில் புறாக்கள் பாத்திரங்களாக வருகின்றன.
நமது ஆன்மிக நெடும்பரப்பில் படபடத்துப் பறக்கும் பறவையினங்களில் முக்கியமான ஒன்று புறா. `விருந்தோம்பல், செய்நன்றியறிதல், சரணடைந்தோரைக் காப்பாற்றுதல்' போன்ற உயரிய விழுமியங்களை உணர்த்துவதற்குக் கூறப்படும் பல ஆன்மிகக் கதைகளில் புறாக்கள் பாத்திரங்களாக வருகின்றன. தங்கள் பேச்சாலும் செய்கையாலும் அவை மனித குலத்திற்குப் பற்பல அறநெறிகளை எடுத்துச் சொல்கின்றன.
இரண்டு புறாக்கள் செய்த தியாகத்தைப் பற்றி உருக்கமாக விவரிக்கிறது `கபோத உபாக்யானம்' என்ற சமஸ்கிருத நூல்.
`கபோதகம்' என்றால் புறா என்று பொருள். `உபாக்யானம்' என்றால் சிறிய கதை. விருந்தோம்பலின் உயர்வைச் சொல்லும் அந்த அழகிய சிறிய கதை சுவாரஸ்யமானது.

வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாட வந்தான். வலை வீசி ஒரு பெண் புறாவைப் பிடித்தான்.
அப்போது திடீரெனக் கடும் மழை பொழியத் தொடங்கியது. வலையில் பிடிபட்ட பெண் புறாவும் அதன் ஜோடியான ஆண் புறாவும் எந்த மரத்தில் வசித்தனவோ அந்த மரத்தடியிலேயே அவன் மழைக்கு ஒதுங்கி நின்றான்.
சிறிது நேரத்தில் மழை நின்றது. ஆனால் அதற்குள் கானகத்தில் இருள் சூழ்ந்துவிட்டது. இருளில் எப்படி திரும்பிப் போகும் வழியைக் கண்டுபிடிப்பது?
ஒரே குளிர் வேறு. வேடனால் உடனே அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடல் நடுங்கவே அந்த மரத்தடியிலேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.
இதைப் பார்த்தது மரத்தின் மேலிருந்த ஆண் புறா. தன் ஜோடியான பெண் புறாவை வலைவீசிப் பிடித்தவன் அவன் என்பதை அது தெரிந்து கொண்டது.
ஆனாலும் அவனுக்கு அந்த ஆண் புறா கெடுதல் நினைக்க வில்லை. நம் பாரத தேசத்தின் மிக உயர்ந்த விருந்தோம்பல் பண்பு அந்தச் சிறிய பறவை யிடமும் குடிகொண்டிருந்ததுதான் ஆச்சரியம்.
என்ன செய்வது இப்போது? நாம் வசிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் விருந்தாளி ஆகிறான். `அதிதி தேவோ பவ! விருந்தாளியைத் தெய்வமாக நினை' என்கிறதே வேதம்!
`இந்த விருந்தாளிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்' என்று நினைத்தது அந்த ஆண்புறா.
முதலில் குளிரில் நடுங்குகிறவனின் குளிரைப் போக்க வேண்டும். தன் கூட்டையே பிரித்து அதிலிருந்த காய்ந்த குச்சிகளை அலகால் தூக்கிவந்து வேடனுக்கு முன்னால் போட்டது. அவன் நெருப்பு மூட்டிக் கொள்ள உதவியாக சிக்கி முக்கிக் கற்களையும் தேடிக் கொண்டுவந்து அவன்முன் போட்டது.
ஆண்புறாவின் செயல்களைப் பார்த்துக் கொண்டே இருந்த வேடன் வியப்படைந்தான். சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பு உண்டாக்கி அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்றவைத்துக் குளிர் காயலானான்.
கூடவே அவன் மனத்தில் யோசனைகள் ஓடின. ஒரு புறா தனக்கு இத்தனை உதவி செய்கிறதே என அவன் மனம் இளகியது. தான் வலையில் பிடித்திருந்த அதனுடைய பெண் துணையை வெளியே விட்டு விட்டான்.
பெண்புறா பறந்து தப்பிக்கவில்லை. 'விருந்தோம்பல் என்றால் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் நம் விருந்தா ளியாக வந்துவிட்டுப் பட்டினி கிடக்கி றானே? இவனுடைய பசியைப் போக்குவதே நம் தர்மம்' என்று நினைத்தது பெண் புறா.
`வேடனே, உன் பசிதீர என்னை உணவாக எடுத்துக்கொள்' என்று சொல்லி அந்த நெருப்பில் சடாரென விழுந்து உயிர்த்தியாகம் செய்துவிட்டது.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பறவை `என்னையும் உணவாக ஏற்றுக்கொள்' என்று சொன்னவாறே தானும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னையும் அவனுக்கு உணவாக அளித்துவிட்டது.
திகைத்துப்போன வேடன் சிந்தனையில் ஆழ்ந்தான். பறவைகளுக்கு இத்தகைய பண்பு நலனா? என்று எண்ணியெண்ணி வியந்தான். தன் வில்லையும் அம்பையும் ஒடித்துப் போட்டுவிட்டான்.
அன்றுமுதல் அவன் வேட்டையாடுவதையே விட்டுவிட்டான். விருந்தோம்பலின் சிறப்பை புறாக்களைப் பாத்திரங்களாக்கிச் சொன்ன பழைய கதை இது.

சரணடைந்தவரை என்ன செய்தாகிலும் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்கிறது சோழ வம்சத்தின் முன்னோரான சிபிச் சக்கரவர்த்தியின் வரலாற்றில் வரும் நிகழ்ச்சி.
அவனது அரண்மனையின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது ஒரு பருந்து. அதன் விழிகள் கீழே தனக்கு இரை கிட்டுமா எனப் பார்த்துக் கொண்டிருந்தன.
அரண்மனை முற்றத்தில் ஒரு புறா தரையில் சிந்தியிருந்த தானியங்களைக் கொத்தித் தின்று கொண்டிருந்தது.
இரை தின்னும் புறாவை இரையாக்கிக் கொள்ள நினைத்த பருந்து மேலிருந்து கீழே சடாரென இறங்கியது.
பருந்திடமிருந்து தப்பிக்க வேண்டுமே? என்ன செய்வது இப்போது? தர்மநெறி தவறாத சிபிச் சக்கரவர்த்தியைச் சரணடைவோம். இப்படி எண்ணிய புறா, விருட்டென அரண்ம னைக்குள் பறந்து சென்று ராஜசபையில் வீற்றிருந்த சிபிச் சக்கரவர்த்தியின் பாதங்களின் கீழ் தஞ்சமடைந்து அமர்ந்துகொண்டது. அதன் உடல் அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது.
சரணடைந்த புறாவை அன்போடு எடுத்து அதன் உடலின் நடுக்கத்தை நீக்கும் வகையில் ஆதரவோடு அதன் முதுகைத் தடவிக் கொடுத்தான் அரசன்.
இதன் அச்சத்திற்குக் காரணம் என்ன என மன்னன் யோசிப்பதற்குள் அந்தக் காரணம் அவன் முன்னே பறந்துவந்து நின்றது! புறாவைத் துரத்திக் கொண்டுவந்த பருந்து மன்னனிடம் கடுமையான குரலில் பேசலாயிற்று.
`புறா என் இரை. அதை நான் தின்னக் கொடுத்துவிடு.'
`சாத்தியமே இல்லை பருந்தே! என்னைச் சரணடைந்துள்ளது இந்தப் புறா. சரணடைந்தவர்களைக் காப்பாற்றுவதே தர்ம நெறி. அப்படிச் செய்யாவிட்டால் பெரும் பாவம் என்னை வந்து சேரும்.`
`புறாவைக் காப்பாற்றினால் என்னைப் பட்டினி போட்ட தேவை உன்னை வந்து சேரும். எந்தப் பாவம் தேவலாம் எனச் சிந்தித்துச் செயல்படு!` என்று அதட்டியது பருந்து.
மன்னன் தீவிரமாக யோசித்தான். இரண்டு பாவங்களும் தனக்குச் சேராமல் இருக்க என்ன வழி? புறாவும் இறக்கக் கூடாது. பருந்தும் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதானே?
ஏவலரை அழைத்து ஒரு தராசைக் கொண்டுவரச் சொன்னான். தராசின் ஒரு தட்டில் புறாவை அமர்த்தினான். தன் வாளை உருவி தன் காலின் தொடைச் சதையை வெட்டி எடுத்து இன்னொரு தட்டில் வைத்தான்.
சமமான எடையளவு சதை தட்டில் வைக்கப்பட்டதும் `இந்த மாமிசத்தை உணவாக எடுத்துக் கொண்டு போ. புறாவைத் தொடாதே!` என்றான் மன்னன்.
இந்தச் செய்தி பழைய தமிழ் இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற மன்னனின் கொடைச் சிறப்பைப் பற்றிப் பேசும்போது, `பருந்துக்குத் தன் சதையை உணவாகக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் மரபில் வந்தவன்' என்கிறது புறநானூறு. புலவர் மாறோக்கத்து நப்பசலையார், புலவர் கோவூர் கிழார் இருவரும் இந்தச் செய்தியைத் தங்கள் பாடல்களில் பேசுகிறார்கள்.
சிலப்பதிகாரத்தில் தன் கணவன் கொலைக்குப் பாண்டிய மன்னனிடம் நியாயம் கேட்கும் கண்ணகி, தான் பிறந்த சோழநாட்டு மன்னனின் அருளாட்சி பற்றி விவரிக்கும்போது சிபிச் சக்கரவர்த்தி புறாவைக் காப்பாற்றிய வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.
`சரணடைந்தோரைக் காப்பாற்றும் சிபிச் சக்கரவர்த்தியின் நாட்டில் இருந்து வந்தி ருக்கிறேன். ஒரு புறாவைக் காப்பாற்றிய அவன் எங்கே? என் கணவனை கொலை உண்ணக் காரணமான நீ எங்கே?` என்பதுதான் கண்ணகி கேட்ட கேள்வியின் மறைபொருள்.
செய்ந்நன்றியறிதல் என்ற உயரிய குணத்தை விளக்கவும் புறாவைப் பாத்திரமாகக் கொண்ட ஒரு கதை சொல்லப்படுகிறது.
பொய்கைக் கரையில் வளர்ந்தி ருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்திருந்தது ஒரு புறா. கீழே குளத்தில் ஒரு கட்டெறும்பு எப்படியோ விழுந்து தத்தளித்துக் கொண்டி ருப்பதைப் பார்த்தது அது.
புறாவின் மனத்தில் இரக்கம் பொங்கியது. எப்படியாவது இந்த எறும்பைக் காப்பாற்ற வேண்டுமே? மரத்தில் இருந்து ஓர் இலையை அலகால் கொத்திப் பறித்து, எறும்பின் அருகே விழுமாறு குளத்து நீரில் வீசியது.
கட்டெறும்பு மெல்லத் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. இலை காற்றில் அசைந்தசைந்து கரையில் ஒதுங்கிய போது எறும்பும் உயிர் போகாமல் கரைசேர்ந்து விட்டது. மேலே கிளையில் அமர்ந்து தன்னைக் காப்பாற்றிய மேலான செயலைச் செய்த புறாவை நன்றியோடு பார்த்தது எறும்பு.
காலம் கொஞ்சம் சென்றது. பொய்கைக் கரைக்கு வந்தான் ஒரு வேடன். அதே புறா அன்று மரக்கிளை ஒன்றில் தன்னை மறந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. வேடன் ஒலியெழுப்பாமல் வில்லில் அம்பைப் பூட்டினான். புறாமேல் எய்ய வேண்டிக் குறிபார்த்தான்.
அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டது கட்டெறும்பு. என்ன இது? புறா வேடனைக் கவனிக்கவே இல்லையே? தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைத் தான் காப்பாற்ற வேண்டுமே?
யோசித்த கட்டெறும்பு, ஊர்ந்துவந்து வேடனின் காலை நறுக்கெனக் கடித்தது. ஆ என அலறினான் வேடன். அவன் வைத்த குறி தவறி அம்பு புறாவைத் தாக்காமல் எங்கோ போய் விழுந்தது. அவன் அலறல் ஒலிகேட்டு திகைத்த புறா பறந்துசென்று தப்பித்துக் கொண்டது.
நாம் ஒருவருக்கு நன்மை செய்தால் அது நமக்கே திரும்ப வரும் என்ற நீதியைச் சொல்லும் இக்கதை பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்று.
புறாக்கள் காலம் காலமாக நம் மனத்தில் பற்பல ஆன்மிகச் சிந்தனைகளை எழுப்புகின்றன. புறாக்கள் தூது செல்லப் பயன்பட்டிருக்கின்றன. சமாதானச் சின்னமாகவும் கொண்டாடப்படுகின்றன. சண்டையிடாமல் சமாதானமாக இருப்பதிலும் விருந்தினர்களை உபசரிப்பதிலும் துன்பத்தில் ஆழ்வோருக்கு உதவி செய்வதிலும் நாம் புறாக்களைப் பின்பற்றலாம்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- உறக்கம் என்பது வயதிற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.
- நாம் நலமாக இருக்க உறக்கம் மிகவும் தேவை.
பகல், இரவு மாறி மாறி வருவது போலத்தான் நாமும் பகலில் வேலை செய்கிறோம். இரவில் உறங்குகிறோம். இயற்கைக்கு ஒரு வழிமுறை இருப்பதுபோல், நமக்கும் ஒரு வழிமுறை உண்டு. நன்கு உறங்கினால்தான் நம் மூளை புத்துணர்ச்சியுடன் அடுத்த வேலையைச் செய்யத் தொடங்கும். உறக்கத்தின் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
ஏன் உறங்க வேண்டும்?
நம் மூளையில் பகல் முழுவதும் சில கழிவுகள் (நச்சுப்பொருள்கள்) சேர்ந்து கொண்டே உள்ளன. இந்தக் கழிவுகள் நாம் உறங்கும்போதுதான் கிலிம்பாட்டிக் சிஸ்டம் என்ற அமைப்பின் மூலம் மூளையில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.
இந்த கிலிம்பாட்டிக் சிஸ்டம் என்பது நாம் உறங்கும்போது மட்டும் தான் வேலை செய்யும். அதனால்தான் சரியான நேரத்தில் உறங்காதவர்களுக்கு வாழ்வியல் முறை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் விரைவில் வந்து விடுகின்றன.
இதற்குக் காரணம் என்ன? என்று பார்க்கும்போது சில புரதப்பொருள்கள் குறிப்பாகப் பீட்டா அமைலாய்டு, டார்வா மற்றும் பிற நச்சுப்பொருள்கள் எல்லாம் மூளையில் இருந்து வெளியேற்றப்படாததுதான் என்று ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
எவ்வளவு நேரம் உறங்க வேண்டும்?
உறக்கம் என்பது வயதிற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. பிறந்த குழந்தை 20 மணி நேரம் உறங்கவேண்டும். 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் 12 முதல் 15 மணி நேரமும், 6 முதல் 10 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் 10 முதல் 12 மணி நேரமும் உறங்கவேண்டும்.
11 முதல் 15 வயது வரை உள்ளவர்கள் 8 முதல் 9 மணி நேரமும், 20 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் 6-8 மணி நேரமும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 5-6 மணி நேரமும் உறங்கவேண்டும்.
எந்த நேரத்தில் உறங்க வேண்டும்?
நம் மூளையில் உள்ள சுப்ராகயாஸ்மெடிக் நியூக்ளியஸ் என்ற கடிகாரம் சரியாகச் செயல் படுவதற்கு இரவு 11 மணிமுதல் காலை 4 மணிவரை கண்டிப்பாக உறங்க வேண்டும். இந்த நேரத்தில் உறங்காமல் இருப்பதால் மூளையில் உள்ள கழிவுகள் அகற்றப்படுவதில்லை. பகல் உறக்கமும் இரவு உறக்கமும், சமம் அல்ல என்பது இப்போது புரிந்திருக்கும்.
உறக்கம் எப்படி வருகிறது?
உறக்கம் நமக்கு அளிக்கப்பட்ட ஓர் அருட்கொடை. நம் கண்களில் இரெட்டினா என்ற ஒரு விழித்திரை உள்ளது. நாம் கண்களை மூடுகையில் இருட்டை இரெட்டினா உணர்ந்த பிறகு, நம் மூளையில் இருந்து மெலடோனின் என்னும் வேதியியல் பொருள் சுரந்து, நமக்கு உறக்கம் வருவதற்கான அறிவிப்புகளை அனுப்புகிறது.
உறக்கம் வராமல் இருக்கக் காரணம்:
நாம் அதிக வெளிச்சம் உள்ள திரைகளை அதாவது தொலைக்காட்சி, கணினி, மடிக்கணினி மற்றும் அலைபேசி போன்றவற்றை இரவில் பார்ப்பதால் இரெட்டினாவானது தூங்குவதற்கான அறிவிப்புகளை மூளைக்கு அனுப்புவது இல்லை. இதனால் "மெலடோனின்" என்னும் வேதியியல் பொருள் சுரக்காமல் இருப்பதால் தூக்கம் நமக்கு இயல்பாக வருவதில்லை.
அதே சமயம் பகல் முழுவதும் போதுமான உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும், பகலில் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குபவர்களுக்கும், இரவுத் தூக்கம் படுத்தவுடன் வருவதில்லை. எனவே உறங்குவதற்கு நம்மை ஆயத்தம் செய்வது நம் கடமையாகும். ஏனென்றால் நாம் நலமாக இருக்க உறக்கம் மிகவும் தேவை. அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
உறக்கத்தினால் ஏற்படும் நன்மைகள்:
* நினைவாற்றல் இல்லையென்றால் ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்டுப் புரிந்து கொள்ள முடியாது. அதை மனத்தில் வைத்து வாழ்வில் செயல்படுத்தவும் முடியாது. எனவே நினைவாற்றல் வளர்ச்சி என்பது உறக்கத்தின் போது மட்டுமே நடைபெறுகிறது. எனவே நாமும், நம் குடும்பத்தினரும் நல்ல அறிவோடும், நினைவுத்திறனோடும் இருக்க வேண்டும் என்றால் இரவில் ஆழ்ந்து உறங்க வேண்டும்.
மரு.அ.வேணி
*நோய் இன்றி வாழ்வதற்கு நம் உடலில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதாவது நம் உடலில் உள்ள எதிர்ப்பாற்றல் பாக்டீரியா அல்லது வைரஸ் நோயுடன் போராடி, நம் உடலைப் பாதுகாக்கிறது. இந்த எதிர்ப்பாற்றல் நன்கு திறம்பட வேலைசெய்ய உறக்கம் மிகவும் தேவையாகிறது.
* உறக்கம் நம் உடலின் வெப்பநிலையைச் சீர்செய்ய உதவுகிறது. உடல் வளர்ச்சிக்கு அது மிகவும் தேவை. ஹைப்போதலாமசில் இருந்து வரும் ஹார்மோன்கள் உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை இயங்க வைக்கிறது. இதயத்துடிப்பு மற்றும் இனப்பெருக்கச் செயல்பாடு போன்றவற்றை நாளமில்லாச் சுரப்பிகள் கட்டுப்படுத்துகின்றன. ஹைப்போதலாமஸ், பீனியல், பிட்யூட்டரி இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்த உயிரியல் கடிகாரம். இவற்றுக்கு நாம் இரவில் ஓய்வு தரவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நாம் நலவாழ்வைப் பெற முடியும்.
* ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குச் செல்லக்கூடிய மரபணுவில், ஆழ்ந்த உறக்கத்தின்போது சில மாறுதல்கள் நடைபெறுகின்றன, எனும் பேருண்மையை நினைவிற் கொண்டு இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளுங்கள்.
* உறக்கத்தின் போது நம் உடலில் உள்ள தசைகள், உறுப்புகள் ஓய்வு எடுத்து மறுநாள் நாம் நன்கு பணியாற்றுவதற்கு உதவி புரிகின்றன.
* உறக்கத்தின்போது வரும் கனவு, மூளையில் உள்ள சைனாப்ஸ் எனப்படும் இணைப்புகளை வலுப்படுத்துகின்றது. இது மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் முதன்மையான ஒன்று.
உறக்கமின்மையால் ஏற்படும் நோய்கள்:
மன அழுத்தம், மனப்பதற்றம், நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, பக்கவாத நோய், நினைவு மறதிநோய், நடுக்குவாத நோய், தலைவலி, வலிப்பு நோய், உடல் வலிகள், விரைவில் சோர்ந்து போதல், வேலையில் நாட்டமில்லாமல் இருப்பது, அதிகமாகக் கோபப்படுவது, சாலை விபத்துகள்.
எனவே உறக்கம் என்பது நச்சுப்பொருள்களை வெளியேற்றுகிறது, எதிர்ப்பாற்றலை வலுவடையச் செய்கிறது, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது, உடல் வெப்பநிலையைப் பேணுகிறது, உடலைப் பல்வேறு வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. உறங்குவதற்கென்று நாம் பணம் செலவழிக்கத் தேவையில்லை.
உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கலாம், ஆனால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு உடல் நலத்தை முழுமையாக விலைக்கு வாங்க முடியாது. எனவே அனைத்திலும் முதன்மையான நம் நலத்தைக் காக்க, ஆழ்ந்த உறக்கம் கொள்வோம், நலமுற்று வாழ்வோம்!






