என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உள்ளே இன்பம்: வெளியே துன்பம்
- மனிதர்கள் அவர் அவர்களுடைய கர்ம வினைக்கு ஏற்ப பல வகைப்பட்ட தகுதியை உடையவர்கள்.
- மனமானது நமது வசம் ஆகிவிட்டால் உலகத்தில் உள்ள எல்லாமே நமது வசமாகிவிடும்.
நாம் முழுமை பேறு அடைய வேண்டும் என்றால், புற உலக பந்தங்களில் இருந்து விடுபட வேண்டும். அதை தான் தியான யோகம் என்கிறோம். தியான யோகம் என்றால் மனிதராக பிறந்த எவரும், வாழும் காலத்திலேயே, வெளி உலகில் உள்ள உறவுகளோடு விலகி, அக உலகிற்கு சென்று தனது மனதையும், ஆத்மாவையும் சேர்க்கும் செயல்தான் தியான யோகம் ஆகும்.
மனிதர்கள் அவர் அவர்களுடைய கர்ம வினைக்கு ஏற்ப பல வகைப்பட்ட தகுதியை உடையவர்கள். ஆகையால் அவர் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப குருவினால் செய்யப்படும் தீட்சைகள் பல வகைகள் உண்டு. அவை 1. ஸ்பரிசதீட்சை, 2. நயன தீட்சை 3. மானச தீட்சை 4. வாசக தீட்சை 5. சாத்திர தீட்டை 6. யோக தீட்சை 7. அவுத்திரி தீட்சை என்று ஏழு வகைகள் உண்டு. அவகைளை பற்றி பார்ப்போம்.
ஸ்பரிச தீட்சை: என்பது குரு சிவ சக்தியை நினைத்து தனது பூ விரலால் சீடருடைய நெற்றி, அதாவது புருவ மத்தியில் வைத்து சிவ சக்தியை அவரிடம் இறங்கும்படி செய்து, மாயையை விலக்கும் தீட்சையாகும்.
நயன தீட்சை: என்பது குரு ஆனவர், சீடரை, சிவ பாவனையில், தனது கண்கள் மூலமாக சீடருடைய கண்கள் வழியாக பார்த்த மாத்திரத்தில், மாயையை விலக்கும் தீட்சை தான் இந்த நயன தீட்சையாகும்.
மானச தீட்சை: என்பது குரு ஆனவர் சீடரை தனது ஆன்மீக ஆற்றலால், சீடருடைய இருதயத்திலே புகுந்து, தனது இருதயத்துடன், சிவ சைத்தன்யத்துடன் கலந்ததாக பாவித்து உடலுக்கு உள்ளே அளிக்கும் தீட்சையாகும். இதுவே மானச தீட்சை எனப்படும்.
வாசக தீட்சை: என்பது சீடரது மாயையை விலக்க, மந்திரங்களுடன் ஐந்து எழுத்தையும் (சிவாயநம) அவற்றின் பொருளையும் அவற்றை ஓதும் முறையையும் உணர்த்தி அளிக்கம் தீட்சையே வாசக தீட்சை எனப்படும்.
சாத்திர தீட்சை: என்பது குரு ஆனவர், சீடருக்கு ஆகமங்களில் உள்ளபடி பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (பற்று) இவற்றின் இலக்கணங்களை உணர்த்தி, அவற்றை அறியப்படும்படி செய்யும் தீட்சை தான் சாத்திர தீட்சையாகும்.
யோக தீட்சை: என்பது குரு தனது யோக சக்தியால், சீடருடைய இருதயத்திலே பிரவேசித்து, மாயையை விலக்கி சிவத்தோடு சீடரை ஒப்படைக்கும் தீட்சை தான் யோக தீட்சையாகும். இதில் சீடர் ஆனவர் குருவின் உதவியால், தான் தானாக நின்று தன் மூலத்தோடு இணைந்து தானே சிவமாகும் நிலைக்கு வருவார்.
அவுத்திரி தீட்சை: என்பது குரு ஆனவர் தனது யோக சக்தியால், ஓமம் கிரியைகளுடன் சீடரின் மாயையை நீக்க செய்யும் தீட்சையாகும். இதில் யாகம் முக்கிய பங்கு வகிக்கும். இதில் சித்தர்கள் மகிவும் முக்கியத்துவம் கொடுப்பது தச தீட்சை தான். தச தீட்சை என்றால் பத்து வகையான தீட்சை என்பது பொருள் அல்ல. நமது உடலிலே வலது கண் ஒளிக்கு 8 என்ற எண்ணும், இடது கண் ஒளிக்கு 2 என்ற எண்ணும் சித்தர்கள் குறிப்பாக சொல்கின்றனர்.
இந்த எட்டையும், இரண்டையும் ஒன்று சேர்த்தால், நம் உயிர் ஸ்தானம் ஆகிய அக்னி கலையை அடையலாம். இந்த 10 எண் இடமானது நம் பரு உடலிலே இரு கண்கள் உள் சேரும் இடத்தில் தான் நம் உயிர் உள்ளது. இங்குள்ள உயிர் ஒளியை பெருக்குவது தான் தச தீட்சை என்று சித்தர்கள் சொல்கின்றனர். திருமூலர் அவர்கள் தனது திரு மத்திரத்திலே,
''எட்டும் இரண்டும் இனிதறிகின்றலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க பாதமே'' என்று குறிப்பிடுகிறார்.
பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்
எட்டும், இரண்டும் இனிதாக பேரின்பத்தை கொடுக்கும் என்பதை அறியாதவர்கள், பொருள், பணம் இருந்தும் ஏழைகளாகவே இருப்பர். அதுபோல், எட்டையும், இரண்டையும் அறிந்தவர்கள் ஞானம் ஆகிய செல்வம் பெற்ற பணக்காரர்கள். இதை அறியாதவர்கள், ஞானம் ஆகிய செல்வத்தை அறியாத ஏழைகள், அவர்கள் இதன் இன்பத்தை அறிய மாட்டார்கள்.
எட்டு என்பது தமிழில் 'அ' என்றும், சூரியன் என்றும் நமது வலது கண் என்றும் மறைபொருளை உணர்த்துவதாகும். இரண்டு என்பது தமிழில் '2' என்றும், சந்திரன் என்றும் இடது கண் என்றும் கூறுவர் (8+2=10). இந்த அ+உ=ய என்பதாகும். சூரியனும், சந்திரனும் நமது சாதனையால் ஒன்றுபட்டு, உள் முகமாக சென்று பத்தாகிய 'ய' என்கின்ற அக்னியோடு சேர்த்தாலே, திருவடி ஜோதியை, இறைவனை தரிசிக்க முடியும். இதைத்தான் 'முச்சுடரும் ஒன்றை முடிந்தோர் சோதி. பாதம் அச்சுதனும், அயனும் காண அனந்தமா பாதம்' என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே தியானம் என்பது என்னவென்றால் 'மனசஹா சமாதி' என்கின்றனர் மகான்கள். மனம் தான் சாந்திக்கு (அமைதி) மூலமாக உள்ளது. இந்த மனமானது நமது வசம் ஆகிவிட்டால் உலகத்தில் உள்ள எல்லாமே நமது வசமாகிவிடும். அதே நேரம் அந்த மனமானது, நம் வசம் இல்லையென்றால், எல்லாமே நம்மைவிட்டு போய்விடும். இதைத்தான் கீதையிலே அர்சுனன், கிருஷ்ணரிடம் என் மனம் மிகவும் குழப்பமாக உள்ளது என்று கூற அதற்கு அவர் கொடுத்த சிறந்த மருந்துதான் கீதை எனப்படுகிறது.
ஏனெனில் மனம் என்றால் குழப்பம் என்றுதான் மனிதர்களிடையே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, படிக்காதவர்களைவிட, படித்தவர்களிடம் தான் இன்று மனகுழப்பம் அதிகமாக உள்ளது. இதுவே வெகு விரைவில் மனோ வியாதியாக மாறுகிறது. எனவே இந்த மனதை ஓர் நிலைப்படுத்த நாம் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பயிற்சி இல்லாமல் ஞானம் இல்லை.
பதஞ்சலி யோக சத்திரத்திலே மனதை நிலைப்படுத்த அப்பியாசம் பயிற்சிகள் இருக்கிறது. அது போல வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனதை நிலைப்படுத்தவும், அறியவும் ஒன்பது வகையான தியானங்களை கொடுத்து இருக்கிறார்கள். இது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் எளிமையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும், ஆண், பெண் இரு பாலருக்கும் சமமாக கற்றுக்கொள்ளும் படியும் உள்ளதுதான் இதன் சிறப்பாகும்.
பதஞ்சலி அவர்கள், மனதை பற்றி சொல்லும்போது, 'சித்த விரோதி நிரோதஹா' என்கிறார். அதாவது மனதின் ஓட்டத்தை நிறுத்துவது அப்யாச வைராக்கியம்தான் நிரோதஹா என்று கூறுகிறார். பயிற்சியால் மட்டும் நிறுத்தும்போது அந்த நேரத்தில் மட்டும்தான் சுகம் கிடைக்கும். மீண்டும் சிறிது நேரம் கழித்து பழைய நிலைக்கு சென்றுவிடும். இது உபயோகம் இல்லை. எல்லா நேரமும் அதே நிலையில் இருந்து பழகுவதுதான் முக்கியம்.
ஆனால் நம் மனமானது மீண்டும் மீண்டும் வெளியே செல்கிறது. இதற்கு காரணம் என்ன என்றால், நம் மனமானது, வெளியில் உள்ள பொருளில்தான் சந்தோஷம் உள்ளது என்று நினைக்கிறது. வேதத்திலே இதற்கு மூன்று காரணங்கள் அழகாக சொல்லப்படுகிறது. 1. அந்த பொருளில் சுகம் இருக்கிறது 2. அது அழகாக இருக்கிறது 3. நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இந்த மூன்றையும்தான் மனம் எப்போதும் தேடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த மூன்றும் வெளியில் தேடினால் கிடைக்காது. இவை உனக்குள் உள்ளது.
நம் அறிவின் மூலமாக இதை நாம் எப்போது அறிகிறோமோ அந்த நேரம் முதல் மனம் நம் வசமாகி விடும் என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். மேலும், மகரிஷி மனதை அடக்க முயன்றால் அது அலையும் என்றும், அதை அறிய நினைத்தால் அடங்கும் என்றும் கூறுகிறார்.
இந்த மனமானது உன் வசப்படும் நிலைதான் தியானம், யோகமாகும். இந்த நிலையில் அறிவு முழுமை பெறும்போது நமக்கு வாழும் காலத்திலேயே முக்தி கிடைக்கிறது. எனவே முதலில் ஆத்மா தான் எல்லாவற்றிற்கும் மூலம் என்பதை உணர வேண்டும்.
இதற்கு நமக்கு எளிதில் பதில் வேண்டும் என்றால், திருவண்ணாமலையில் நடமாடும் சித்தராக வாழ்ந்த மகான் ஸ்ரீ ரமண மகரிஷியிடம் செல்ல வேண்டும். அவரிடம் ஒரு சீடர் கேட்டார், எல்லா சாஸ்திரங்களும் சொல்வது, மனம் அடங்கினால் சுகம் இருக்கும் என்று. நமக்கும் அது புரிகிறது. அனுபவத்தால் நாம் தூங்கும்போது எந்த கவலையும் இல்லை. சுகமாக உள்ளது. அதே போல தியானம் செய்யும் போது நம்மை மறந்து சுகமாக உள்ளது. பிறகு வெளி விஷயங்களில் நம் மனம் மாட்டிக் கொள்ளும்போது துன்பம் வருகிறது. துக்கம், கவலை, மன அழுத்தம் வந்து ஆத்மாவில் நிலைப்பது இல்லை. ஆனால், சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாம் அதற்கான பயிற்சி செய்து வெற்றி பெறலாம் என்கிறது. அது எப்படி என்று கேட்டார்.
அதற்கு ரமணர் உடனடியாக எந்த பதிலும் சொல்லவில்லை. 3 நாட்கள் கழித்து அவரது ஆசிரமத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. அவர் எல்லா ஜீவ ராசிகளிடத்தும், அன்பாக இருப்பார். அவரிடம் நிறைய அணில்கள் பழகி வந்தது. அதில் ஒரு பெண் அணில் குட்டி போட்டது. அது குட்டி போட்ட சில மணி நேரத்திலேயே அந்த தாய் அணிலை பூனை தனக்கு உணவாக பயன்படுத்திக் கொண்டது. அந்த அணில் குட்டிகளை அன்பாக வளர்த்தார். அவைகள் பெரிதானதும் அங்கும் இங்குமாக ஓட ஆரம்பித்தன. அதை ரமணர் ஒவ்வொன்றாக பிடித்து ஒரு பெட்டியில் போடுவார். அதற்குள் மற்றொன்று வெளியே ஓடிவிடும். இப்படியே பிடித்து பிடித்து போட்டுக்கொண்டு இருந்தார். அந்த கேள்வி கேட்ட சீடரும் அங்கு இருந்தார். இதை பார்த்த ரமணர், இந்த அணில் குஞ்சு போலத்தான் நமது மனமும். இந்த குஞ்சுகளுக்கு எப்படி நம் அம்மாவை சாப்பிட்ட பூனை வெளியில் இருக்கிறது என்று தெரியாமல் அதனிடம் மாட்டி கொள்ள வெளியில் ஓடுகிறதோ அதுபோல நம் மனமும் வெளி விஷயத்தில் துன்பம் இருக்கிறது என்று தெரியாமல் அலைகிறது. இதற்கு தான் குரு தேவை என்றார்.
போன்: 9444234348
(ஆராய்ச்சி தொடரும்)






