என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • வால்மார்ட் அமெரிக்காவில் மட்டுமின்றி 15 வெளிநாடுகளிலும் கடைகளைக் கொண்டிருக்கிறது.
    • உங்களிடம் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளரையும் நன்கு மதிப்பதோடு அவர்களுக்கு உரிய பணத்தை சரியாக வழங்குங்கள்.

    அமெரிக்காவில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியாமல் தவியாய்த் தவித்த ஒருவர் பிரமாண்டமான கடைகளை நிறுவி 4 லட்சம் பேரை தன்னிடம் வேலைக்கு அமர்த்திய ஒரு அதிசய மனிதராக மாறினார், அவர் யார் தெரியுமா? அவர் தான் வால்மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்!

    பிறப்பும் இளமையும்: ஓக்லஹோமாவில், கிங்பிஷரில் 1918ம் ஆண்டு மார்ச் மாதம்

    29-ந்தேதி தாமஸ் கிப்சன் வால்டன் என்பவருக்கும் நான்சி லீக்கும் சாமுவேல் மூர் வால்டன் மகனாகப் பிறந்தார். விவசாயத்தில் ஈடுபட்ட தந்தைக்கு வருமானம் சரியாக இல்லை. 1923-ல் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் சேர்ந்த அவர் தனது தொழிலைக் கைவிட்டு விட்டு ஒவ்வொரு ஊராகச் செல்ல ஆரம்பித்தார். அப்போது அமெரிக்காவில் 'கிரேட் டெப்ரஷன்" என்று அனைவராலும் அறியப்படும் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.

    சாப்பிடவே வழியில்லை. குடும்பம் தவித்தது. அன்றாடச் செலவுக்கு பணம் வேண்டுமே! வால்டன் பசுமாட்டின் பாலைக் கறக்க ஆரம்பித்தார்.

    கறந்த பாலை வாடிக்கையாளர்களுக்கு 'டோர்-டெலிவரி' செய்தார். அன்றாடம் பேப்பர் வாங்குபவர்களுக்கு நாளிதழ்களைக் கொண்டு சென்று கொடுத்தார். எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்ய ஆரம்பித்தார். ஒரு வழியாய் குடும்பச் செலவை சமாளித்தார்.

    1929 முதல் 1939 முடிய இந்தப் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவைப் பெரிதும் பாதித்தது!

    ஊர் ஊராகச் சென்ற குடும்பம் இப்போது கொலம்பியாவில் செட்டில் ஆனது. கொலம்பியாவில் தனது படிப்பை முடித்தார் வால்டன். பள்ளியில், "பல்துறை திறமை வாய்ந்த பையன்" என்று அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்த வால்டன் மிசவுரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். படிப்புச் செலவிற்கு பல்வேறு சிறு சிறு வேலைகளைச் செய்யலானார். டேபிள்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்து பதிலாக உணவைப் பெற்றுக் கொண்டார்.

    1940-ல் கல்லூரியில் தேறிய அவரை அனைவரும் நிரந்தர வகுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அந்த அளவுக்கு அவர் அனைவரிடமும் நல்ல பெயரை எடுத்தார்.

    கடை ஆரம்பிக்கும் எண்ணம்: மாதம் 75 டாலர் சம்பளத்திற்கு ஒரு நிர்வாகப் பயிற்சி பெறும் பயிற்சியாளராக அவர் ஐயோவா நகரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலக மகாயுத்தம் வரவே 1942ல் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது தான் அவருக்கு ஒரு கடை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது!

    1945-ல் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் தனது மாமனாரிடமிருந்து 20000 டாலரைப் பெற்றார். தனது சேமிப்பாக இருந்த 5000 டாலரையும் சேர்த்து ஒரு கடையை அர்கான்சாசில் நியூபோர்ட் என்ற இடத்தில் வாங்கினார். 26-ம் வயதில் அவர் ஆரம்பித்த முதல் கடை இது!

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    தனது வியாபாரத்தில் புதுப்புது உத்திகளைத் தொடர்ந்து அவர் புகுத்திக் கொண்டே இருந்தார். கடைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தார்.

    அனைத்துப் பொருள்களும் அவர் கடையில் எப்போதும் இருக்கும்! விலை மிகவும் சரியாக இருக்கும்! வாடிக்கையாளர்களை வரவேற்று திருப்திப்படுத்தி அவர் அனுப்புவார்.

    இதனால் மூன்றே ஆண்டுகளில் அவரது விற்பனை 80000 டாலரில் இருந்து 2,25,000 டாலராக ஆனது.

    தனது கடையை அவருக்கு லீசுக்குக் கொடுத்திருந்த பெரும் செல்வந்தரான ஹோம்ஸ், வால்டனின் வெற்றியைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தார் . லீசை புதுப்பிக்க மறுத்தார். இது வால்டனுக்கு வணிகத்தில் முதல் பாடமாக அமைந்தது. தானே ஒரு சொந்தக் கடையை பெண்டன்வில்லி என்ற இடத்தில் ஆரம்பித்தார்.

    ஏராளமான போட்டிகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது. ஆகவே கடையின் மீது கவனம் செலுத்துவதே அவரது 24 மணி நேர வேலையாக ஆனது.

    முதல் வால்மார்ட் கடை: 1962, ஜூலை மாதம் இரண்டாம் நாள் அர்கான்சாசில் ரோஜர்ஸ் என்னுமிடத்தில் முதல் வால்மார்ட் கடை அதே பெயருடன் தொடங்கப்பட்டது. ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களையும் எந்த வாடிக்கையாளரும் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் அனைத்துப் பொருள்களையும் அவர் கடையில் அற்புதமாக அடுக்கி வைக்கும் முறையைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்தார்.

    ஒவ்வொரு சிறு சிறு நகரத்திலும் கடைகளைத் திறக்க ஆரம்பித்தார்.

    கடைகளில் பொருள்கள் தீரத் தீர உடனடியாக அதை நிரப்ப நிறைய சேமிப்புக் கிடங்குகளையும் அவர் தொடங்கினார். விலையில் சிறப்புத் தள்ளுபடி முறையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

    1977-ல் 190 கடைகள் இருந்தன. அதுவே 1985-ல் 800-ஆக வளர்ந்தது.

    இந்த வெற்றியைப் பார்த்த அனைவரும் இதை 'வால்மார்ட்- எபெக்ட்" (வால்மார்ட் விளைவு) என்று கூற ஆரம்பித்தனர்.

    6 லட்சம் என்ற பெரும் எண்ணிக்கையில் விற்பனையை அமெரிக்காவில் மட்டும் வால்மார்ட் செய்கிறது. ஒவ்வொரு விற்பனையையும் வாடிக்கையாளர் திருப்தியுறும் வகையில் அது மிக்க மரியாதையுடனும் மதிப்புடனும் செய்கிறது.

    கடை அமைப்பு: சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கடை அமைப்பு இது: மிக பிரமாண்டமான கடைக்குள் செக்யூரிட்டியைத் தாண்டி உள்ளே செல்லும் போதே தனக்கு வேண்டிய டிராலியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லலாம். வெவ்வேறு பொருள்கள் அதற்குரிய அடையாள போர்டுடன் மிகச் சிறப்பான முறையில் வாடிக்கையாளர் தானே எடுத்துக்கொள்ளும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

    மளிகைப் பொருள்கள், பால், தயிர், வெண்ணெய் வகை பொருள்கள், கறிகாய்கள், பழங்கள், இறைச்சி வகைகள், எலக்ட்ரிக் சாதனங்கள், கணினிகள் மற்றும் அதன் உதவி சாதனங்கள், போன் வகைகள் என அங்கு இல்லாத பொருள்களே இல்லை என்று சொல்லும் அளவில் அனைத்தும் கிடைக்கும்.

    அவற்றை எடுத்துக் கொண்டு பில் போடும் கவுண்டரில் பணத்தைக் கொடுத்து வெளியே பில்லுடன் வரலாம்.

    ஒரு பொருளுக்கும் பில் போடாமல் வெளியே வர முடியாது. பில் போடாமல் வரும் பொருளுக்கு, செக்யூரிட்டிக்கு 'க்விங் க்விங்' எச்சரிக்கை ஒலியை அது தரும்.

    வால்மார்ட் கடைக்குப் போவதில் அனைவருக்கும் உள்ள ஒரு கஷ்டம் என்னவென்றால் அங்கு கார் பார்க்கிங்கிற்கு இடம் கிடைக்காது. ஆகவே வரிசையாக நின்று ஒரு கார் போனவுடன் அந்த இடத்தை உடனடியாக "பிடிக்க" வேண்டும்.

    ஒரு பொருளை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்றால் அதை அங்கே பில்லை எடுத்துக் கொண்டு சென்று காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

    குடும்பம்: 1943 பிப்ரவரி 14-ம் நாளன்று வாலண்டைன் தினத்தில் ஹெலன் ராப்சன் என்பவரை வால்டன் மணந்தார். அப்போது அவர் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ராணுவப் பணி காலத்தில் மட்டும் அவர் இரண்டு இடங்களில் 16 இடங்களுக்கு மாறி மாறிச் செல்ல வேண்டியிருந்தது. கடைசி பணிக்களமாக அவருக்கு அமைந்தது சால்ட் லேக் சிட்டி ஆகும். அங்குள்ள நூலகத்திற்கு தினமும் மாலை வேளையில் சென்று சில்லரை வணிகம் சம்பந்தமான அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்தார்.

    அவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு.

    வால்டன் தம்பதியினருக்கு சேவை மனப்பான்மை அதிகம். ஆகவே நல்ல காரியங்களுக்கு அவர்கள் தாராளமாக நன்கொடை வழங்க ஆரம்பித்தனர்.

    மறைவு: லுகேமியா வியாதியால் பாதிக்கப்பட்ட வால்டன் 1992-ல் ஏப்ரல் மாதம் 5-ம் நாள் தனது 74-ம் வயதில் மறைந்தார். ஒரு வகையான ரத்தப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு அவர் இறந்த போது வால்மார்ட்டின் 30-வது ஆண்டு விழாவிற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்தன.

    மருத்துவமனையில் இருந்த போதும் கூட படுக்கையில் இருந்தவாறே அவர் தனது விற்பனைத் தரவை மதிப்பீடு செய்து கொண்டிருந்தார்.

    அவர் மறையும் போது வால்மார்ட்டில் வேலை பார்த்தோரின் எண்ணிக்கை 4 லட்சம். மொத்த வால்மார்ட் கடைகளின் எண்ணிக்கை 1960. அப்போது வருடாந்திர விற்பனை 5000 கோடி டாலரைத் தாண்டி இருந்தது. (ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ 83.34).

    விருதுகளும் பெற்ற சிறப்புகளும்: 1998-ல் டைம்ஸ் பத்திரிகை அறிவித்த 20-ம் நூற்றாண்டில் தலை சிறந்த செல்வாக்கு பெற்றவர்களின் பட்டியலில் வால்டனும் இடம் பெற்றிருந்தார்.

    அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷிடமிருந்து 'பிரசிடென்ஷியல் மெடல் ஆப் பிரீடம்' விருதை அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் பெற்றார்.

    இது மட்டுமல்ல 1982 முதல் 1988 முடிய அமெரிக்காவின் பணக்காரர்களில் முதல் இடத்தை அவர் வகித்திருந்தார்.

    வால்மார்ட் அமெரிக்காவில் மட்டுமின்றி 15 வெளிநாடுகளிலும் கடைகளைக் கொண்டிருக்கிறது.

    வால்டனின் கொள்கையும் விதியும்: அவர் தனக்கென வகுத்துக் கொண்ட விதிகளும் கொள்கைகளும் தனி இடம் பெறுபவை.

    அவற்றில் முக்கியமானவை சில: "உங்கள் வாடிக்கையாளர்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் வகிக்கும் பங்கை நன்கு உணர்ந்து செயலாற்றுங்கள்."

    "நீங்கள் விற்கும் பொருள்களைப் பற்றி நன்கு அறிவதோடு அதை யார் விநியோகிக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

    உங்களுக்கு யார் போட்டியாக இருக்கிறார்கள் என்பதை நன்கு அறியுங்கள்."

    "உங்களிடம் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளரையும் நன்கு மதிப்பதோடு அவர்களுக்கு உரிய பணத்தை சரியாக வழங்குங்கள்."

    "சரியான பொருளை சரியான விலையில் சரியான சமயத்தில் சரியான இடத்தில், சரியான அளவில் விற்பனை செய்யுங்கள். அவர்கள் தரும் பணத்திற்கு உரிய அவர்கள் விரும்பும் பொருள்களை வழங்குங்கள்"

    உலகில் வணிகத்தில் வெற்றி பெற விரும்புவோருக்கு வால்டன் கூறும் அன்புரை இது:

    சாதாரணமாக எளிய உழைக்கும் வர்க்கத்தில் உள்ள யாருக்கும் சரியான வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்கப்பட்டு அவர்கள் செயலுக்கு உரிய ஊக்கப்பரிசும் கொடுக்கப்பட்டால் அவர்கள் முன்னேறுவதற்கு ஒரு எல்லைக்கோடு என்பதே கிடையாது.

    கடுமையான உழைப்பு, புதிய உத்திகள், வாடிக்கையாளர் திருப்தி ஆகிய இவையே வால்மார்ட் சங்கிலித் தொடர் கடைகளின் வெற்றிக்குக் காரணம் என்பதில் ஐயமில்லை!

    • பனிரெண்டு லக்னத்திற்கும் குரு தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
    • மனித வாழ்வின் வெற்றிக்கு குரு பலம் மிக அவசியம்.

    மனித வாழ்வின் வெற்றிக்கு குரு பலம் மிக அவசியம். அதனால் தான் குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி என்ற பழமொழியை கூறினார்கள். குரு எந்த ஒரு ஜாதகதாரரையும் கெட்டு போக விடாது. அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது. இனி பனிரெண்டு லக்னத்திற்கும் குரு தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்கு குரு 9, 12-ம் அதிபதி, பாக்கிய அதிபதி மற்றும் விரய அதிபதி. சுய ஜாதகத்தில் குருவும் பலம் பெற்றால் சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கவுரவத்துடன் வாழ்வார்கள். தந்தை வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தர்ம காரியங்கள் செய்து மகிழும் பாக்கியம் பெற்றவர்கள். தாயும், தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.தாய், தந்தை வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள்.

    சுய ஜாதகத்தில் குரு பலம் குறைந்து பனிரெண்டாமிடமும் வலுத்தால் இவர்கள் பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். இவர்களுடைய சொத்துக்கள் உறவுகளுக்கே பயன்படுகிறது. அல்லது குடும்ப சொத்துக்களை தந்தைக்காக அல்லது தந்தையால் இழக்க நேரும். அல்லது பாக்கியமும் தன யோகமும் குறைவுபடும். பணக்கஷ்டம், மனக்கஷ்டம், தாங்க முடியாத வைத்தியச் செலவும் இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு குரு 8, 11-ம் அதிபதி. அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதி. அஷ்டமாதிபதியாக குரு சுப வலுப்பெற்றால் சிலருக்கு அதிர்ஷ்ட பணம், லாட்டரி, உயில் சொத்து கிடைக்கும். அஷ்டமாதிபதியாக குரு அசுப வலுப்பெற்றால் விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், தீராத கடன் ஏற்படும். பெண்களுக்கு கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாக்கும். சிலருக்கு கால தாமத திருமணத்தை தரலாம் அல்லது திருமணத்திற்குப் பிறகு வம்பு வழக்கை சந்திக்க நேரும்.

    லாப அதியாக குரு சுப வலுப்பெற்றால் எந்த தவறு செய்தாலும் தண்டணையிலிருந்து தப்பி விடுவார்கள். தொட்டது துலங்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பங்கு வர்த்தகம், அதிர்ஷ்ட வருமானம் இருக்கும். நயா பைசா பாக்கி இல்லாமல் எல்லா கடனையும் பைசல் செய்து நாணயத்தை காப்பாற்றுவார்கள்.மத்திம வயதில் குரு தசை புத்தி வந்தால் ரகசிய இரண்டாம் திருமணம் நடக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சுக்ர ஓரையில் லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு குரு 7,10ம் அதிபதி. களத்திர ஸ்தானம், மற்றும் தொழில் ஸ்தானம் என்ற இரு கேந்திரங்களுக்கு அதிபதி என்பதால் கேந்திரா திபத்திய தோஷம் உண்டு. உபய லக்னம் என்பதால் பாதகா திபத்திய தோஷமும் ஏற்படும்.7ம் அதிபதியாகிய குரு சுப பலம் பெற்றால் வாழ்க்கைத் துணை யால் நண்பர்களால், தொழில் கூட்டாளியால், வாடிக்யா ளர்களால் சகாயமான பலன் உண்டு.

    10-ம் அதிபதியாக குரு பலம் பெற்றால் தொழில் மூலம் ஒரு உயர்வு உண்டு. வருமானம் அதிகமாக இருக்கும். அசுப பலம் பெற்ற குரு தசை புத்தி காலங்களில் மாரகம், பாதகம் மிகைப்படுத்தலாக இருக்கும். கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் விவாகரத்து பெறுவது, நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு உருவாகுவது போன்றவற்றால் நிம்மதி குறையும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை ஸ்ரீ ராமானுஜரை வழிபட நன்மைகள் நடக்கும்.

    கடகம்

    கடக ராசிக்கு குரு 6, 9-ம் அதிபதி. ருண ரோக சத்ரு ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தான அதிபதி.லக்னத்தில் குரு உச்சம் பெற்றாலும் தனுசில் ஆட்சி பெற்றாலும் கடன் கதவை தட்டும். குருவிற்கு சனி, கேது சம்பந்தம் இருந்தால் கடன் தீராது. தனித்த குருவாக இருந்தல் கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

    ஏதாவது ஒரு வழியில் ரொட்டேஷன் செய்து தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள். குருவிற்கு சனி,கேது சம்பந்தம் இருப்பவர்களின் கடன் ஜாதகரை உறுத் தெரியாமல் ஆக்கி விடும். குரு மற்றும் கேது தசை காலங்களில் மிகுந்த கவனம் தேவை. குருவே பாக்கிய அதிபதி என்பதால் முன்னோர்களின் நல்லாசியும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு பிறவிக் கடனும், பொருள் கடனும் தொடர் கதையாக இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு குரு 5, 8-ம் அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. குருவும் 5,8-மிடமும் பலம் பெற்றால் பிள்ளைகளால் பெருமை, பாராட்டு உண்டு. மந்திர உபதேசம், குருவின் நல்லாசிகள் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். பங்குச் சந்தை, உயில் சொத்து, லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வருமானம் உண்டு. குருவும் 5,8மிடம் பலம் குறைந்தால் கற்ற வித்தை பலன் தராது.பங்குச்சந்தை வணிகத்தில் அதிக இழப்பை சந்திப்பார்கள். சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும். பெண்கள் கணவருடன் தீராத வம்பு வழக்கு, கடன் தொல்லை தாங்க முடியாமல் தாலியை கழட்டி வீசுகிறார்கள் அல்லது தாலியை அடமானம் வைக்கிறார்கள்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    கன்னி

    கன்னி ராசிக்கு குரு 4,7-ம் அதிபதி. சுக ஸ்தானம், களத்திர ஸ்தான அதிபதி. பாதகாதிபதி, மாரகா திபதி. சுய ஜாதகத்தில் குருவும் 4,7-மிடமும் பலம் பெறும்போது அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். தாய், தாய் வழி உறவுகளின் அன்பும், ஆதரவும் நிறைந்து இருக்கும். சகல வசதிகளும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும்.

    கணவன் மனைவிக்குள் அன்யோன்யமும், நல்லுறவும் நிறைந்தி ருக்கும். குருவும் 4,7-மிடமும் அசுப வலுப்பெற்றால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கையைத் தருகிறது. திருமண வாழ்க்கையில் பாதகத்தையும் மாரகத்தையும் செய்யத் தவறுவது இல்லை. பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வரும் கிரகங்கள் தசாபுத்தி காலங்களில் எதிர்பாராத தண்டனையைக் கொடுத்து விடும். உபயம லக்னம் என்பதால் பிரச்சினையின் தீவீரத்தை உணரும் முன்பு தண்டனையே கிடைத்துவிடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை புதன் ஓரையில் சக்ரத்தாழ்வாரை வழிபட வேண்டும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு குரு 3,6-ம் அதிபதி. சகாய ஸ்தானம் மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதி.

    சுய ஜாதகத்தில் 3ம்மிடமும் குருவும் பலம் பெற்றால் ஆன்லைன் வர்த்தகம் நல்ல பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். அதே போல் ஊடகம், தகவல் தொடர்பு துறையில் பணி புரிபவர்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். 6-ம்மிடமும் குருவும் பலம் பெற்றால் அடிமைத் தொழிலில் இருப்பவர்களும், முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும் போதும் பெரும் வாழ்வியல் மாற்றமும் சுப யோகமும் உண்டாகிறது. அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்யும் துலா லக்னத்தினர் தொழிலால் கடனாளி யாகிறார்கள். உடன் பிறந்த இளைய சகோதரத்தால் தாய்மாமாவால் வஞ்சிக்கப்படுகி றார்கள். சிலர் ஜாமீன் பிரச்சினையில் மாட்டுகிறார்கள்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்கு குரு 2, 5-ம் அதிபதி தனா திபதி, பஞ்சமாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால். மாபெரும் புண்ணியம். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே இணையப் பெற்றவர்கள். குல தெய்வ அனுகிரகம் உண்டு. பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்க ளால் பிள்ளைகளுக்கும் பயன் உண்டு.

    உயர் கல்வி யோகம் உண்டு. வக்கீல்கள், ஜோதிடர்கள், நிதித்துறை, நீதித்துறை,ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, போன்றவற்றில் இருப்ப வர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.குரு பலம் குறைந்தால் நிலையான வருமானம் இருக்காது. பிள்ளைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். அதிர்ஷ்டம் குறைவுபடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை நவகிரக குருபகவானை வழிபட வேண்டும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு குரு 1, 4-ம் அதிபதி. லக்னா அதிபதி, கேந்திராதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் நிச்சயம் வீடு மனை யோகம் சித்திக்கும். நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். பொன்னும் பொரு ளும் சேரும். 16 வகைச் செல்வங்களும் நிறைந்து இருக்கும். இவர்கள் பண்ணை யாளர்களாக, விவசாயிகளாக இருப்பார்கள். தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்து வார்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்த வர்களாக இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு.

    குரு பலம் குறைந்தால் சொத்துக்களால் பயன் இருக்காது. பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் உடல் நல பாதிப்பு இருக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் அனுசரனை இருக்காது. தாய் அடிக்கடி நோய் வாய்ப்படுவார். குரு கேந்திராதிபதி என்பதால் தசை புத்தி காலங்களில் தாய்வழி உறவுகளுடன் தேவையற்ற மனக் கசப்பு உண்டாகும். சுக போகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் குறைவுபடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை குரு ஓரையில் பஞ்சமுக கணப தியை வழிபட வேண்டும்.

    மகரம்

    மகர ராசிக்கு குரு 3,12-ம் அதிபதி. சகாய ஸ்தான அதிபதி விரய அதிபதி. மூன்றாம் அதிபதியாகி குரு பலம் பெறும் போது லட்சியங்கள் நிறைந்தவர்கள். திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள். உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். 12ம்மிடம் வலுப்பெற்றால் வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுக்காக சொத்து, சுகத்தை விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். செவித் திறன் குறையும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை இருக்கும். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு இருக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஏமாற்றத்தை சந்திபார்கள். வேலையாட்களால் இழப்பு இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    கும்பம்

    கும்ப ராசிக்கு 2,11-ம் அதிபதி. குரு தன, லாப அதிபதி. இவர்களுக்கு குரு அதிகப்படியான யோகத்தை வழங்குவார். சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் செல்வாக்கு, சொல்வாக்கு நிறைந்தவர்கள். தனது வாக்கு திறமையை வைத்தே குடும்பத்தை காப்பாற்று வதில் வல்லவர். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர்.

    ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு உயர்வு உண்டு. வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதர ஆதாயமும் உண்டு. குரு பலம் குறைந்தால் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை குறையும். புகழ், அந்தஸ்து, கவுரவம் மட்டுபடும். தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் தவறிப் போகும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வு உண்டு.

    மீனம்

    மீன ராசிக்கு குரு 1, 10-ம் அதிபதி. லக்னாதிபதி, பத்தாம் அதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள் இவர்கள் ஆசிரியராகவோ, காலேஜ் புரபசராகவோ, அல்லது யாரேனும் ஒருவருக்கு ஆலோசனை வழங்கு பவராகவோ இருப்பார்கள். நிலையான நிரந்தரமான தொழில், அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. புகழ், அந்தஸ்து, கவுரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடி வரும்.

    குரு பலம் குறைந்தால் லக்னாதிபதி என்பதால் எளிதில் கண் திருஷ்டி தோஷம், அவமானம் போன்றவை தொடர்கதையாக இருக்கும். குரு கேந்திராதிபதி என்பதால் வருமான வரி துறையிடம் சிக்குவது, கொடுக்கல் வாங்கலில் நட்டம், தொழில் இழப்பு போன்ற அசவுகரியங்கள் உண்டாகும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை குபேர லட்சு பூஜை செய்ய வேண்டும். ஒரு ஜாதகத்தின் பலமே குரு பலம் தான். எனவே குரு பலத்தை அதிகரிக்க உரிய பரிகாரத்தை பயன்படுத்தி பயன் பெற நல் வாழ்த்துக்கள்.

    பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • வியாழ பகவான் வலுவான இடத்தில் அமைந்து விட்டால் அதிர்ஷ்டமான சூழ்நிலைகளை தங்கு தடையின்றி கொடுத்து கொண்டே இருப்பார்.
    • சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5-ம் வீட்டில் அல்லது 9-ம் வீட்டில் குரு இருந்தால் குரு சந்திரயோகம் உண்டாகும்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வந்து கொண்டு இருக்கின்றன. எதிர்பார்த்த தலைவர்கள் ஏமாற்றம் கொடுத்து தோல்வியை தழுவி இருப்பார்கள். எதிர்பாராத வேட்பாளர்கள் வெற்றிகனியை தட்டி பறித்து இருப்பார்கள்.

    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..... என்று சொல்வார்கள். ஆனால் இந்த வெற்றிக்கும், தோல்விக்கும் பின்னணியில் அரசியல்வாதிகளின் திட்டமிடலும், உழைப்பும், நிர்வாக திறமையும், பணம் செலவழிப்பதும் அடங்கி இருப்பதாக பொதுவாக சொல்வார்கள்.

    சில வேட்பாளர்களுக்கு, "நாம் ஏன் தோற்றோம்?" என்பது புரியாத புதிராக இருக்கும். "எப்படி தோற்றோம்?" என்று மண்டையை பிய்த்துக்கொண்டு யோசிப்பார்கள். ஆனால் தோல்விக்கான உண்மையான காரணம் தெரியவே தெரியாது. ஜோதிடர்களை கேட்டால் ஒரே வரியில் 'கர்ம வினை' அல்லது 'தோஷங்களாக இருக்கும்' என்று சொல்வார்கள்.

    ஒருவர் வாழ்க்கையில் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற வேண்டுமானால் அவரது ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ப கிரகங்களின் தாக்கங்கள் அமைய வேண்டும். இல்லை யெனில் தேர்தல் மட்டுமல்ல எந்த விஷயமாக இருந்தாலும் தோல்விதான் கிடைக்கும்.

    ஒருவரது தனிப்பட்ட அரசியல் வெற்றி போன்ற சாதனைகளுக்கு எந்த கிரகம் பொறுப்பு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப வழிபாடுகள் செய்தால் தேர்தல் வெற்றிகளை எளிதாக அறுவடை செய்ய முடியும். பொதுவாக வெற்றிக்கான முக்கிய கிரகமாக சூரிய பகவானின் அமைப்பு சொல்லப்படுகிறது.

    ஒருவரது தனிப்பட்ட திறமை, ஆற்றல், முடிவெடுக்கும் திறன், நம்பிக்கையான செயல்பாடுகள், சக ஊழியர்களை பணியாற்ற வைக்கும் பாங்கு போன்றவை எல்லாமே சூரியனை பின்பற்றியே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் வெற்றி அடைவதற்கான குணங்களை அள்ளித்தரும் ஆற்றல் சூரிய பகவானுக்கு மட்டுமே உண்டு.

    எனவே அரசியல் உள்பட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் சூரியன் வழிபாட்டை தவறாமல் செய்து வரவேண்டும். சூரியனை போலவே வியாழன் கிரகமும் இந்த விசயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    ஏனெனில் ஒருவரது வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பதில் வியாழன் கிரகத்தை தவிர்க்கவே முடியாது. ஒருவரது ஜாதகத்தில் வியாழன் நல்ல பலன் தரும் இடத்தில் அமர்ந்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். அது மட்டுமல்ல. அரசியலில் எப்படி செயல்பட வேண்டும் என்ற அபரிமிதமான ஞானத்தை கொடுப்பது வியாழன்தான்.

    அரசியலில் உச்சம் தொட்ட தலைவர்களின் ஜாதக கட்ட அமைப்புகளை ஆய்வு செய்து பாருங்கள். அவர்களது ஜாதகத்தில் வியாழனின் பங்களிப்பு மிக மிக சிறப்பானதாக இருக்கும். அதுபோல தேர்தலில் தோல்வி அடையாத தலைவர்களின் ஜாதகங்களை ஒரு கண்ணோட்டமாக அலசி பார்த்தால் அவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் வியாழன் துணை நிற்பது தெரியும்.

    வியாழ பகவான் வலுவான இடத்தில் அமைந்து விட்டால் அதிர்ஷ்டமான சூழ்நிலைகளை தங்கு தடையின்றி கொடுத்து கொண்டே இருப்பார்.

    சிலருக்கு அவர்களது ஜாதக அமைப்புபடி செவ்வாய் கிரகம் வெற்றியை கொடுக்கும் கிரகமாக அமையும். பொதுவாக ஒருவரது செயல்பாட்டை, அவர்களது ஆர்வத்தை தீர்மானிக்கும் சக்தி செவ்வாய் கிரகத்துக்கு மட்டுமே உண்டு. மேலும் செவ்வாய் கிரகம் சரியான இடத்தில் அமர்ந்து இருந்தால் அரசியலில் எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறியும் மன உறுதியை கொடுக்கும்.

    அதுபோல சிலருக்கு சனி கிரகம் வெற்றியை கொடுப்பதோடு மட்டுமின்றி செல்வாக்கை உயர்த்தவும் அடிப்படையாக இருக்கும். சிலருக்கு சனி பகவானின் பார்வை காரணமாக அரசியலில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காது. ஆனால் அதே சனி பகவான் வெற்றியின் இலக்கை நோக்கி ஒருவரை தள்ளிக்கெண்டு இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    எனவே சனியின் பார்வை மற்றும் இட அமைப்புகள் சரியாக இல்லாதபட்சத்தில் அரசியல்வாதிகள் சனி பகவானை அவசியம் வழிபட வேண்டும். சனீஸ்வரனுக்குரிய அர்ச்சனைகளை செய்து வர வேண்டும். வாய்ப்பு இருப்பவர்கள் சனீஸ்வரனை மனம் மகிழ செய்யும் வகையில் தானங்கள் செய்தால் தோஷங்களை விலக்கி அரசியல் பார்வையில் முன்னேற்றத்துக்கு செல்ல முடியும்.

    அரசியலை பொறுத்தவரை சிலர் திடீரென புதிய புயல் போல வருவார்கள். வந்த வேகத்திலேயே அதிகாரம் மிக்க பதவிகளையும் கைப்பற்றும் யோகத்தை பெறுவார்கள். அவர்களது ஜாதகத்தை ஆய்வு செய்து பார்த்தால் சூரியனும், சந்திரனும் உரிய இடத்தில் அமர்ந்து அவர்களை சரியான பாதையில் கொண்டு சென்று இயக்குபவர்களாக இருப்பார்கள்.

    அரசியலில் தேர்தல் சமயத்தில் மிக எளிதாக வெற்றி பெறுபவர்களுக்கு கஜகேசரி யோகம், குரு சந்திர யோகம், அம்ச யோகம், அரசாளும் யோகம் போன்ற யோகங்கள் இருக்கும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரனுக்கு குருகேந்திரம் எனும் 4-ம் வீட்டில் அல்லது 7-ம் வீட்டில் அல்லது 10-ம் வீட்டில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும்.

    சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5-ம் வீட்டில் அல்லது 9-ம் வீட்டில் குரு இருந்தால் குரு சந்திரயோகம் உண்டாகும். சில அரசியல்வாதிகள் 50 வயதுக்கு மேல் தொடர்ந்து போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெறுவார்கள். இதற்கு காரணம் அவர்களது ஜாதகத்தில் இந்த குரு சந்திர யோகம் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம்.

    அதுபோல ஜாதகத்தில் குரு லக்கனத்திற்கு கேந்திரம் எனப்படும் 4, 7, 10-ம் இடங்களில் குரு பகவான் உச்சம் பெற்று இருந்தால் அம்ச யோகம் கிடைக்கும். இந்த யோகம் இருந்தால் தேர்தலில் போட்டியிடும்போது எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அவர் வெற்றி பெறுவார்.

    சில அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதற்கு போராடுவார்கள். ஆனால் அம்ச யோகம் இருந்தால் அவர்களை தேடி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தானே வந்து நிற்கும். சிலரது ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் பலம் பெற்று லக்கனத்தில் இருந்து 6, 7, மற்றும் 9-ம் இடங்களில் அதிபதிகளாக ஆட்சி பெற்று இருப்பார்கள். இத்தகைய அமைப்பை ஒருவர் பெற்று இருந்தால் அரசியலில் அவரை அசைக்க முடியாது. மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக அவர் வலம் வருவார்.

    இவையெல்லாம ஜாதக ரீதியாக அமைய வேண்டுமானால் குல தெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். பொதுவாக குல தெய்வத்தை வணங்காதவர்களுக்கு தேர்தலில் தொடர் வெற்றிகள் கிடைப்பது இல்லை. தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும் போதாது. மனதில் தைரியமும் இருக்க வேண்டும். அந்த தைரியத்தை தருவது தலவிருட்ச வழிபாடு.

    ஆலயங்களுக்கு செல்லும்போது பிரகாரங்களை சுற்றி வருகையில் தல விருட்சத்தை பார்க்கலாம். தல விருட்சமாக வன்னி மரம் இருந்தால் விட்டு விடாதீர்கள். வன்னி மரத்தை ஒரு அரசியல்வாதி எந்த அளவுக்கு வழிபடுகிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு வெற்றிக்கான வழிகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். குறிப்பாக வளர்பிறை தசமி திதியில் வன்னி மரத்தை 9 தடவை சுற்றி வழிபட்டால் நாடாளும் அரச யோகம் கிடைக்கும்.

    சிலரது ஜாதக அமைப்புபடி அரசியலில் அடுத்தடுத்து தோல்வி வந்தாலும் ஆலயங்களுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நீங்கி அரசியலில் முன்னேற்ற படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். ஆலயங்களுக்கு சென்று வழிபட விரும்பாத அரசியல்வாதிகள் வீட்டில் இருந்து கொண்டே அனுமன் படத்துக்கு அலங்காரம் செய்து நைவேத்தியம் படைத்து அனுமன் மகிழும் போற்றிகளையும், பாடல்களையும் பாடி வந்தாலே போதும் அடுத்த தேர்தலில் கைமேல் பலன்களை பெறுவார்கள். 

    இந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. இனி வரும் நாட்களில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மனை தினமும் இஷ்ட தெய்வமாக நினைத்து வழிபட தொடங்குங்கள். நாட்கள் செல்ல... செல்ல... கட்சியிலும், அரசியல் பணிகளிலும் புதிய பதவிகள் தேடி வருவதை கண்கூட பார்ப்பீர்கள்.

    சிலருக்கு அரசியலுக்குரிய ஜாதக கட்ட அமைப்புகள் நன்றாக இருக்கும். ஆனால் கூடவே இருந்து முதுகில் குத்துபவர்களால் அவர்கள் அரசியலில் உரிய பதவிகளை பெற முடியாமல் இருப்பார்கள். குறிப்பாக தேர்தலில் போட்டியிடுவது என்பது அவர்களுக்கு கனவாகவே போய் விடுமோ? என்ற கவலை ஏற்பட்டு விடும். அத்தகைய மனநிலையில் இருப்பவர்களுக்கு கர்மவினை தோஷங்கள் தான் அதிகமாக இருக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    இத்தகைய கர்மவினை தோஷங்களை விரட்ட வேண்டுமானால் ராகு பகவான் ஆட்சி செய்யும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகள் செய்யுங்கள். ராகு பகவானுக்குரிய பரிகாரங்களை செய்யுங்கள். அரசியலில் புதிய அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.

    அரசியலில் வெற்றியும் பதவியும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சில ஆலயங்களுக்கு தவறாமல் செல்ல வேண்டும்.

     அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம், வேதாரண்யம் திருமறைகாடர் ஆலயம், செருகுடி சூட்சும புரீஸ்வரர் ஆலயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சதுரங்கஈஸ்வரர் ஆலயம், திருவாணைகாவல் ஆலயம், மதுரை மீனாட்சி ஆலயம், ஸ்ரீவை குண்டம் ஆலயம், சென்னை கொளப்பாக்கம் ஆலயம், கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவில் ஆலயம், சென்னை ஆண்டார்குப்பம் ஆலயம் போன்றவை அரசியல்வாதிகளுக்கு வெற்றி தரும் ஆலயம் ஆகும்.

    எந்த ஒரு அரசியல்வாதி இந்த ஆலயங்களுக்கு சென்று மனமுருக வழிபடுகிறாரோ அவர்களது தோஷங்கள் எல்லாம் விலகி இனி வெற்றிதான் கிடைக்கும். வெற்றி பெற்றவர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவி தேடி வரும்.

    • ‘என்னால் நல்ல திறமைசாலியாக வாழ முடியும்’ என்ற நம்பிக்கையினை மனதில் ஆழ பதிய வைத்துக் கொள்ளலாம்.
    • பழைய சாதம், நீராகாரம் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.

    கடுமையான நேரத்தினை தாண்டுவது என்பது அனைவருக்கும் ஒரு சவால்தான். ஒவ்வெரு நொடியும் ஒரு யுகமாய் தெரியும். விடாமுயற்சி, ஆக்க பூர்வமான எண்ணங்கள் இவையே கதி என இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    அவை:

    * அனைத்து மகிழ்வற்ற சூழ்நிலைகளும் நிச்சயமாக மாறும்.

    * மன எண்ண ஓட்டங்கள், தவிப்பினை நீக்க சூழ்நிலையினை மாற்றுங்கள். நண்பர்களோடு வெளியில் செல்லுங்கள்.

    * அழகிய இயற்கை சூழலில் இருக்கலாம். நகைச்சுவை சினிமா பார்க்கலாம்.

    * ஏற்கனவே நீங்கள் தீயதினை வென்று விட்டீர்கள். நடப்பது ஒரு சிறு அனுபவம் அவ்வளவே.

    * பிறரது தவறான எண்ணங்கள், பேச்சுகள் இவற்றிற்கு நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும். அதனை அவர்களிடமே திருப்பி கொடுத்து விடுங்கள். அவர்களே அதனை வைத்து கவலைபடட்டும்.

    * நமக்கு மகிழ்ச்சி தேவை. நகைச்சுவை தேவை.

    * நம் மீது நாம் அன்பாக, கருணையாக இருக்க வேண்டும்.

    * எந்த சூழ்நிலையிலும் நாம் நன்றி சொல்ல ஏதோ ஒன்றினை பிரபஞ்சம் நமக்கு அளித்து கொண்டுதான் இருக்கின்றது.

    ஒரு நாளில் எந்நேரமும் மனதினில் ஏதோ ஒன்றினைப் பற்றி யோசிப்பதும் குழம்புவதுமாக இருப்பவரா நீங்கள்?

    * முதலில் உங்களுடன் நீங்கள் பேசும் முறையினை மாற்றிக் கொள்ளுங்கள்.

    * அதிகமாக உங்களுக்கு நீங்களே அழிவுப்பூர்வமான சிந்தனைகளை கொடுக்காதீர்கள்.

    * என்னால் முடியாது, என்றால் படிக்க முடியாது, திறமையாக பேச முடியாது என உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்கள் மூளை அதனையே நிஜம் என பதிவாக்கி அதன்படியே செயல்படத் தொடங்கி விடும்.

    * கடந்த கால கசப்பான நினைவுகளில் மூழ்கி வெளிவராது உள்ளுக்குள்ளேயே புழுங்கி, புழுங்கி தவிப்பவர்கள் ஏராளம். நிகழ்காலம் என்ற உணர்வே இல்லாது போய்விடும்.

    * கடந்த காலம் சில பாடங்களை நமக்கு கற்றுத்தரலாம். அந்த பாடங்கள் இனி நாம் தவறு செய்யாத நிலையினை உருவாக்கலாம்.

    * ஒவ்வொரு நொடியும் நிகழ்காலத்தில் மட்டுமே இருப்பது எளிதானது. சிறந்த பலனை அளிக்கவல்லது.

    * விடாமல் சில எண்ண ஓட்டங்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியவில்லையா? உங்கள் எண்ணங்களை பொறுமையாய், முழுமையாய் ஒரு பேப்பரில் எழுதுங்கள். பின் அதனை கிழித்து எறிந்து விடுங்கள்.

    * அதிகம் யோசிப்பதற்கு பயம் ஒரு காரணம் என்பர். இப்படி நடந்து விடுமோ? அப்படி நடந்து விடுமோ? என்ற பயம் மனிதனை அரித்து விடுகின்றது. இதில் இருந்து விடுபடுவது எப்படி? பயத்தில் இருந்து விடுபட வேண்டும். சிலருக்கு பல்லி, கரப்பான் பூச்சி கூட பயம்தான். அதற்கு தீர்வாக வீட்டில் இவை இல்லாமல் செய்து விடுவதுதான். இது ஒரு சிறிய உதாரணம்தான். இதைப் போலத்தான் சிறிதோ, பெரிதோ பயத்தில் இருந்து வெளிவர முயற்சிகள் செய்து தீர்வு காண வேண்டும்.

    ஒன்றினை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதிகம் யோசித்துக்கொண்டு இருப்பவர்கள் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் ஆவர். ஆகவே தீர்வுகளைப் பற்றி அளவாக, அமைதியாக யோசிக்கலாம். எழுதலாம்.

    'என்னால் நல்ல திறமைசாலியாக வாழ முடியும்' என்ற நம்பிக்கையினை மனதில் ஆழ பதிய வைத்துக் கொள்ளலாம்.

    சிலருக்கு எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருக்கும். இரவு தூங்காமல் இருந்து மறுநாள் இப்படி இருப்பது ஒரு சாதாரண நிகழ்வு எனலாம். ஆனால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றுவது கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகின்றது.

    * சிலருக்கு எப்போதுமே சோர்வாக இருக்கக்கூடும். இது பெண்களுக்கு சற்று கூடுதலாக இருக்கக்கூடும்.

    * கவனம் செலுத்த முடியாமை

    * தலை சுற்றுதல்

    * உடம்பு வலி

    * மூட்டு வலி

    * தலைவலி

    * தொண்டை கட்டு போன்ற காரணங்களால் அதிக சோர்வு, தூக்கம் ஏற்படலாம்.

    தைராய்டு குறைபாடு:

    * தசைகள் வலுவின்மை * சோர்வு * ஜில்லென இருப்பது * மூட்டுகள், தசைகளில் வலி * இருதய துடிப்பு சற்று வேகம் குறைந்து இருப்பது * வியர்வை குறைவு * மலச்சிக்கல் *மனச்சோர்வு * வறண்ட சருமம் * முகம் உப்பி இருத்தல் * கரகரப்பான குரல் * மாதவிடாய் காலத்தில் அதிக உதிர போக்கு போன்ற காரணங்கள் தைராய்டு குறைபாட்டில் இருக்கும். இதன் காரணமாகவும் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம்.

     

    ரத்த சோகை: உடலில் சுறுசுறுப்பின்றி இருப்பர். சக்தி இல்லாமல் எப்போதும் படுத்துக் கொண்டே இருப்பார்கள். வெளி நிற சருமம், முறையற்ற இருதய துடிப்பு போன்றவை இருக்கும்.

    தசை நார்வலி: உடல் முழுவதும் வலி என்பர். சோர்வு, இரவில் தூக்கமின்மை இருக்கும். இதனால் மனச் சோர்வு, படபடப்பு, தலைவலி, உடல் இறுக்கம் என இருக்கும்.

    அலர்ஜி: இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். கண்களில் அரிப்பு இருக்கலாம்.

    ப்ளூ போன்ற வைரஸ் பாதிப்புகள்: இத்தகு பாதிப்பு நேரங்களில் அதிக தூக்கம் தேவைப்படும்.

    * ஆர்த்ரைட்டிஸ், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற நோய்களின் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.

    * உணவில் சத்து மற்றும் வைட்டமின்கள் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    உடலில் நீர் சத்து குறைவாக இருப்பது:

    அதிக தாகம், சிறுநீர் அளவு குறைதல், அடர்ந்த சிறுநீர், வறண்ட சருமம், தலை சுற்றல் இவை அறிகுறிகளாகத் தெரியும். உடலில் நீர் சத்து குறைவது என்பது சற்று ஆபத்தானதே.

     

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    மன அழுத்தம்: போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு வாங்கும். வயிறு பிரச்சனை, பசியின்மை இருக்கும். ஊட்டச் சத்து சரிவர உறிஞ்ச படாது இருக்கலாம். படபடப்பு ஏற்படும்.

    * மனச் சோர்வு, கவலை இவையும் இத்தகு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

    * மாத விடாய் காலங்களில் வயிற்று பிரட்டல், தலைவலி, முதுகு வலி, எரிச்சல் காரணமாக படுத்துக்கொண்டே இருப்பர்.

    * கர்ப்ப காலத்தில் ரத்த சோகை, ஹார்மோன் மாறுபாடுகள் இதே பிரச்சனையைத் தரும்.

    சரி இதையெல்லாம் திடீரென இப்போது எழுத என்ன காரணம்? கோடை காலம் அல்லவா!

    அதிக வெப்பம் நம்மை பல விதங்களில் வாட்டும். ஆனால் பல உடல்நல பிரச்சனைகளை நாம் கோடை பிரச்சனை என்று எண்ணி கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. கோடைக்கான கவனமும் தேவை. * அன்றாடம் இருமுறை குளியுங்கள்.

    * 2 லிட்டர் நீர் அருந்துங்கள்.

    * காபி, டீ இவற்றினை காலை ஒரு வேளையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

    * பழைய சாதம், நீராகாரம் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.

    * நீர் மோர் நிறைய குடியுங்கள்.

    * காரம், புளி இவற்றினை வெகுவாய் குறைத்து விடுங்கள்.

    * கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்வதனை தவிர்த்து விடுங்கள்.

    * வெயிலோ, மழையோ கண்டிப்பாய் பத்து நிமிடமாவது தியானம் செய்யுங்கள்.

     சியா விதையை உணவில் சேருங்கள்

    ஏன் இன்னமும் அனைவரும் சியா விதையை உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளவில்லை? இதனைப் பற்றி எழுதாத உணவு கட்டுரைகளே இல்லை.

    2 டீஸ்பூன் சியா விதையில் பசலைக்கீரையை விட 3 மடங்கு அதிகமான இரும்பு சத்து இருக்கிறது. பாலை விட சுமார் 6 மடங்கு அதிகமான கால்சியம் சத்து உள்ளது.

    புரத சத்து சுமர் 25 சதவீதம் கொண்டது. அன்றாட தேவைக்கான நார் சத்து 40 சதவீதம் கொண்டது. சாலமன் மீனை விட 95 சதவீதம் ஒமேகா 3 கொண்டது. 30 சதவீதம் அன்றாட தேவைக்கான மக்னீசியம் கொண்டது. இத்தனை சத்துக்கள் கொண்ட இதனை நாள் ஒன்றுக்கு 2 டீஸ்பூன் அளவுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனை ஜீஸ், சாலட் இப்படி எதிலும் கலந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

    காலையில் இதனை எடுத்துக் கொள்ளலாம். அதிக அளவில் எடுத்துக் கொண்டால் வயிற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும். வயிற்று வலி, உப்பிசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு என்ற பாதிப்புகள் ஏற்படும். எதிலும் அளவுடன் இருப்பது நன்மை பயக்கும்.

    • 10-ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்டத்தை கலைஞர் நிறைவேற்றினார்.
    • கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தியதில் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு.

    திருவாரூரில் 1930-களில் பள்ளி மாணவனாக இருந்தபொழுதே கலைஞர் அவர்களின் தமிழ்ப்பணி தொடங்கியது. தமிழ்மொழியை காக்க வேண்டிய போராட்டக்களத்தில்தான் கலைஞரின் அரசியல் வாழ்வு அடித்தளமிடப்பட்டது.

    இயல், இசை, நாடகம் மட்டுமில்லாமல் 92 அடையாளங்களால் தமிழை உருவகப்படுத்தினார். தமிழை மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆளுமைகளையும் கொண்டாட தவறவில்லை. அவர் ஆட்சிப்பொறுப்பேற்ற பொழுது தமிழில் உறுதி மொழி எடுத்துக்கொண்டவர்.

    சென்னையில் வள்ளுவருக்கு கோட்டம், குமரிமுனையில் வள்ளுவருக்கு சிலை, பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம், எனப் பல நினைவுச் சின்னங்களை இன்றைய தலைமுறைக்காக வடிவமைத்தார். தமிழுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தி நம் அன்னைத்தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுத்தந்து மொழிக்காவலர் ஆனார்.

    பொது அரசியல் என்பதைத்தாண்டி மொழி அரசியல் மூலம் இந்த சமூகத்தை கட்டமைத்தவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சிறப்பான திட்டங்கள் இதோ.

    தமிழ் பாரம்பரியத்தை காக்க நடவடிக்கை

    10-ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்டத்தை கலைஞர் நிறைவேற்றினார். இது தமிழ்நாட்டின் மொழியியல் மற்றும் கலாசார அடையாளத்தை வலுப்படுத்தியது. பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. மொழிப் புலமை, இலக்கியம் மீதான மதிப்பு, மற்றும் பாரம்பரியத்தை இந்த சட்டம் பாதுகாக்கிறது.

    செம்மொழியாம் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 'செம்மொழி படிப்புக்கான மத்திய கல்வி நிறுவனத்தை சென்னையில் கலைஞர் தொடங்கினார். அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான மையமாக விளங்கி, தமிழின் வளமான மரபு பற்றிய ஆழமான புரிதலை வளர்க்கிறது.

    மெய்நிகர் வகுப்புகள்

    கலைஞர் ஆட்சியில் மெய்நிகர் வகுப்புகள் தொடங்கின. கம்ப்யூட்டர் புரட்சியால் தொலைதூர கல்வி சாத்தியமானது. ஏராளமான மென்பொருள் வல்லுநர்கள் உருவானார்கள்.

    பிளஸ் 2-வில் கம்ப்யூட்டர் பாடம்

    கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வளர்ச்சியை உணர்ந்து பிளஸ்-2 வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகப்ப

    டுத்தினார். ஆண்டுக்கு ரூ.186 கோடி செலவில் ஒவ்வொரு ஆண்டும் 48 ஆயிரம் மாணவர்கள் இந்த படிப்பை முடித்து வருகிறார்கள்.

    கணினி பயிற்சி வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கலைஞரை ஆதரித்து தீர்ப்பு வழங்கியது. அனைவருக்கும் சம வாய்ப்பையும் சமூக நீதியையும் வழங்கும் கல்வி முயற்சியாக இது போற்றப்பட்டது.

    கல்வி வளர்ச்சி அடுத்த நிலையை எட்டும் வகையில் கலை அறிவியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கால்நடை கல்லூரி போன்றவற்றிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் கல்வியின் வளர்ச்சியை தரப்படுத்தினார். இதன் மூலம் ஆண்டுக்கு 60 ஆயிரம் மாணவர்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயின்று வருகிறார்கள்.

    உலக செம்மொழி மாநாடு

    தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டின் ஆழமான சாரத்தைக் கொண்டாட அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்களை ஒன்றிணைக்கும் வகையில், 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. இலக்கியம், இசை, நடனம், கலை ஆகியவற்றில் தமிழ் பாரம்பரிய மரபுகளை வெளிப்படுத்தும் விவாதங்கள், விளக்கக்காட்சிகள் இடம்பெற்றது.

    அரசு அலுவலகங்களில் கணினி தொழில்நுட்பம்

    கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தியதில் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு. பதிவுத்துறை, மோட்டார் வாகன பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேகமாகவும் தவறில்லாமலும் பணிகள் நடப்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது.

    • கட்டியிருந்த பட்டுப்புடவை யுடனேயே படப்பிடிப்புக்கு சென்றேன்.
    • மறக்க முடியாத நினைவுகள் உண்டு.

    மதுரை டூ காரைக்குடி... தினசரி பயணமாகி விட்டது. அதிகாலையில் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு காரைக்குடி செல்வேன்.

    இரணியன் பட காட்சியில் நடித்து விட்டு இரவில் மதுரை ஆஸ்பத்திரிக்கு வருவேன். அம்மாவை பார்த்துவிட்டு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இரவில் தூங்குவேன்.

    தினமும காரைக்குடிக்கு சென்று இரணியனுக்காக நடித்தாலும் மனம் மட்டும் பிரகலாதனை போல் என் அம்மா மீதே இருந்தது என்பதே உண்மை.

    அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் காட்சிகளில் சொதப்பாமல் சிறப்பாக நடித்ததாக டைரக்டர் பாராட்டினர். அது மனதுக்கு நிறைவாக இருந்தது.

    அம்மா உடல் நலம் தேறிக்கொண்டிருந்தார். ஒரு நாள் டாக்டர் என்னை அழைத்தார்.

    'மேடம், அம்மா ரொம்ப டென்ஷனாக இருக்கிறார்கள். அந்த அளவு டென்ஷனை கொடுக்காதீர்கள்' என்று ஆலோசனை வழங்கினார்.

    அதை கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அம்மா டென்ஷன் ஆகும் வகையில் நடந்ததில்லை.

    ஆனால் இரவு-பகல் பாராமல் உழைத்தது. சரியான சாப்பாடு கிடையாது. தூக்கம் கிடையாது. அதையெல்லாம் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்தவர் அம்மா.

    ஒரு தாயாக பிள்ளைபடும் கஷ்டங்களை பார்க்கும் போது இயல்பாகவே அவரது மனமும் கஷ்டப்படத்தானே செய்யும். அப்படித்தான் அவரது மனமும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன்.

    முடிந்தவரை அம்மா மனம் கஷ்டப்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டேன்.

    ஆடத்தெரியாதவர் தெருகோணல் என்று சொல்வாராம். அப்படியானால் ஆடத் தெரிந்தவர்....?

    பாரம்பரிய நடனத்தை முறையாக கற்றிந்த நானே அய்யய்யோ நம்மால் ஆட முடியுமா? என்று தயங்கியதும் உண்டு.

    நடிகர் சிரஞ்சீவியுடன் தெலுங்கு படமான முட்டா மேஸ்திரியில் நடித்தேன். அந்த படத்தில் 'சிக்கி சிக்கி சான்....' என்ற சூப்பரான பாடல் காட்சி. நானும் சிரஞ்சீவியும் ஆடும் டூயட் பாடல் அது.

    அந்த கால கட்டத்தில் தான் 'ஹிப்-ஹாப்' நடனம் நமது திரை உலகிலும் அறிமுகம் ஆனது. அந்த படத்தில் நடன மாஸ்டர் பிரபுதேவா.

    சிக்கி சிக்கிச்சான் பாடலில் அவர் ஹிப்-ஹாப் நடனத்தையும் புகுத்தி இருந்தார். அது ஒரு மேற்கத்திய இசை நடனம்.

    அமெரிக்காவில் உருவானதாக சொல்வார்கள். இதில் அப்ராக், பிரேக்கிங் மற்றும் பங்க் ஸ்டைலும் அடங்கும்.

    அந்த பாடல் காட்சியில் நடிக்க அந்த வகை நடனத்தை மாஸ்டர் சொல்லித் தந்தார். டான்சர்ஸ் ஆடிக் கொண்டே இருந்தார்கள். நானும் சொல்லித் தந்தபடி ஆடினேன். ஒரே மூவ்மென்ட்டை 4 தடவை ஆடனும். எனக்கு ஒரு தடவை ஒழுங்காக வரும். பின்னர் வராது. அய்யய்யோ நமக்கெல்லாம் இந்த 'ஸ்டெப்' வராது போயிருக்கேன் என்று மனசுக்குள் நினைத்தேன். அதை எப்படி வெளியே சொல்வது?

    மீனா என்றால் பெரிய டான்சர்.... அவளே ஆட முடியாது என்றால்... மனசுக்குள் அவ மானமாக இருந்தது.

    நான் தயங்கியதை பார்த்து சிரஞ்சீவி என்னை ஊக்கப்ப டுத்தினார். ம்.... ஆடு.... உன்னால் நிச்சயம் முடியும் என்று உற்சாகப்ப டுத்தினார். இருந்தாலும் என்னால் முடியவில்லை என்பதை மாஸ்டரிடம் சொல்லி விட்டேன். பின்னர் நான் சரியாக நடித்த 2 டேக்குகளை எடுத்து காட்சியில் சேர்த்தார்கள்.

    அந்த பாட்டு தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. ஆந்திராவில் பட்டி தொட்டி யெல்லாம் ஒலித்தது. அந்த படத்தில் நடித்த போது ஒருநாள் சிரஞ்சீவி அவரது வீட்டில் இருந்து டிபன் கொண்டு வந்து எல்லோருக்கும் பரிமாறினார்.

    தோசையும், சிக்கனும் தான். பரிமாறியதுமே வாசனை மூக்கை துளைத்தது. வாவ்..... தோசை இவ்வளவு மிருது வாக இருக்குமா?

    மிருது வான தோசை... கூடவே சிக் கன்... செம டேஸ்ட். அந்த மாதிரி ருசி யான மிருது வான தோசை. நான் சாப்பிட் டது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    மேடம் சூப்பரா பண்ணியி ருக்காங்க என்றேன். அது மட்டு மல்ல. அதை பார்த்து விட்டு என் அம்மா அவரது மனைவியை பார்த்து பேசி 'நானும் இந்த மாதிரி தோசை சுட கத்துக்கணும்' என்று ஆசைப்பட்டார்.

    அந்த சமயத்தில்தான் நடிகர் விஜய்-சங்கீதா திருமணம் சென்னையில் நடந்தது. நானோ பயங்கர பிசியாக இருந்தேன். ஐதராபாத், சென்னை, கோவை என்று ஓடிக் கொண்டிருந்தேன்.

    எப்படியாவது திருமணத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவசரமாக சென்னைக்கு வந்தேன்.

    என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. நிகழ்ச்சியை பொறுத்து உடை அணிந்து செல்வேன். திருமண நிகழ்ச்சிகளுக்கு எப்படி செல்ல வேண்டும்? கோவில்களுக்கு சென்றால் எந்த மாதிரி செல்ல வேண்டும்? குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளும்போது எப்படி இருக்க வேண்டும்? சினிமா தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? என்று எனக்கு நானே வரையறை வைத்துள்ளேன்.

    திருமண நிகழ்ச்சி என்றால் பட்டு புடவை கட்டி, தலையில் பூ வைத்து, நிறைய நகைகள் அணிந்து செல்வேன். எனவேதான் விஜய் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்காகவும் பட்டு புடவை அணிந்து சென்றேன். துணைக்கு அப்பாவை அழைத்து சென்றேன். விஜய்க்கு வாழ்த்து சொல்லி விட்டு உடனே ஷூட்டிங் செல்ல வேண்டும். வீட்டுக்கு சென்று உடை மாற்றி செல்லக்கூட நேரமில்லை.

    திருமண நிகழ்ச்சியை யை முடித்து விட்டு காரில் வைத்தே நகைகளை கழட்டி அப்பாவிடம் கொடுத்தேன். கட்டியிருந்த பட்டுப்புடவை யுடனேயே படப்பிடிப்புக்கு சென்றேன். இரவு 10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கோவைக்கு ரெயிலில் புறப்பட்டேன். தொடர்ந்து பொள்ளாச்சியில் படப்பிடிப்பு. தல.. தளபதி... என்று ரசிகர்கள் கொண்டாடும் இருவரோடும் மறக்க முடியாத நினைவுகள் உண்டு. அதுபற்றி அடுத்த வாரம் விவரிக்கிறேன். பை.... பை..

    (தொடரும்)

    • உருவமில்லாத உயிர் மட்டுமே நமக்குடையது.
    • உலகத்தை இரவலாக வழங்கி ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான்.

    இரவல் குறித்த செய்திகளை இனிமையுடன் வாசிக்கக் காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்.

    மனிதராகப் பிறந்துள்ள நம் ஒவ்வொருவருக்கும் இந்த வாழ்க்கை இரவலாக வழங்கப்பட்டுள்ளது எனத் தத்துவவாதிகள் கூறுகின்றனர். உருவமில்லாத உயிர் மட்டுமே நமக்குடையது. அதற்குத் தகுந்தாற்போல உடம்பையும், வாழ்விட வசதிகளாகிய உலகத்தையும் இரவலாக வழங்கி ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான்.

    இரவலாகப் பெற்ற உடம்பை வைத்துக்கொண்டு, வாய்க்கின்ற வாழ்க்கை இன்பமோ? துன்பமோ? முடியும் வரை வாழ்ந்துவிட்டு, இரவலாகப் பெற்ற உடம்பை இறைவனிடமோ இயற்கையிடமோ திரும்ப வழங்கிவிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்கின்றனர்.

    'இரவல் தந்தவன் கேட்கின்றான்! அதை இல்லையென்றால் அவன் விடுவானா?' எனும் அர்த்தப் பொதிவுள்ள கவியரசர் கண்ணதாசனின் பாட்டு இரவல் எனும் பொருண்மையின் ஆழத்தை நமக்கு எடுத்துரைக்கிறது. நம்முடைய பிறப்பு என்பது எந்த விதக் கட்டணமுமின்றி இயற்கையாகவே நிகழுகிறது. மருத்துவக் கட்டணம் மனிதர்க்கானது; ஆயினும் மனிதப் பிறப்பின் நிகழ்விற்காக எந்தக் கட்டணத்தையும் நாம் இயற்கையிடம் செலுத்துவதில்லை.

    உடல், கண், காது, மூக்கு, வாய் ஆகிய பொறிபுலன்கள், கை, கால்கள் முதலிய அங்கங்கள், மூளை, மனம் முதலிய அறிவின் செயலாக்கங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் முதலிய உள்ளுறுப்புகள், உதவிக்கென நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐம்பூதங்கள் கொண்ட இயற்கையின் தொகுதி இவற்றையெல்லாம் இறைவன் நமக்கு இரவலாகவே வழங்கியிருக்கிறான்.

    அது என்ன இரவல்?

    ஒருவரிடமிருந்து ஒரு பொருளை அல்லது ஒரு சேவையைப் பெறுகிறோம் என்றால் அதனை நான்கு வகையில் பெறலாம்.

    பணம் கொடுத்துப் பெறுவது முதல் வகை. இவ்வகையில் பொருளுக்கான அல்லது சேவைக்கான பணமதிப்பைத் தருபவர் தீர்மானிப்பார்.

    பெறுபவர் அதனை ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த விலை கொடுத்துப் பெற்றுக் கொள்வார்; அல்லது தனக்கு உகந்த குறைந்த ஒரு விலையைக் கூறி, விற்பவர் அந்த விலைக்கு ஒத்துவரும் பட்சத்தில் அதைக் கொடுத்துப் பெற்றுக் கொள்வார். பொருளை விலைகொடுத்து வாங்குவது முதல் வகை.

    ஒரு பொருளை இலவசமாகப் பெறுவது அல்லது பண்டமாற்று எதுவுமின்றி வாங்குவது இரண்டாவது வகை. இதில் கொடுப்பவர் முழுமனத்தோடு பொருளை அடுத்தவருக்குக் கொடுப்பார்; பெறுபவர் மனமகிழ்ச்சியோடு அதனைப் பெற்றுக்கொள்வார். யாசகமாகப், பிச்சையாகப் பெறுவதையும் ஒருவகையில் இதனோடு சேர்த்துக் கொள்ளலாம். இலவசமாகப் பொருளை வாங்குவது இரண்டாவது வகை.

    ஒரு பொருளை விலைக்கும் கொடுக்காமல். இலவசமாகவும் வழங்காமல் கடனுக்குக் கொடுப்பது மூன்றாவது வகை. இவ்வகையில் பெரும்பாலும் பணமே கடனாக வழங்கப்படும். வாங்குகிற பணத்தைத் திருப்பிக் கட்டவேண்டும் என்கிற கடப்பாடோடு இது பெறப்படுவதால் இதற்குக் 'கடன்' என்று பெயர். 'கடன்' என்றால் தமிழில் கடமை என்கிற பொருளும் உண்டு.

    பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையென்பதால் அப்பெயர். பெற்றவனுடைய பற்றாக்குறைத் தேவையை நிவர்த்தி செய்ய அக்கடன்தொகை உதவியதால் கடனைத் திருப்பியளிக்கும்போது வட்டியாகச் சிறிது கூடுதல் தொகையும் வழங்கியாக வேண்டும். நிதிமேலாண்மையில் பெறப்படுகிற கடனுக்கேற்ற வட்டிவிகிதங்களும் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொருளைக் கடனாக வாங்குவது மூன்றாவது வகை.

    விலைக்கும் வாங்காமல், இலவசமாகவும் பெறாமல், கடனாகவும் பெற்றுக்கொள்ளாமல், ஒரு பொருளை வாடகைக்கு வாங்குவது நான்காவது முறை. குறுகிய காலத் தேவைக்கு மட்டுமே பயன்படுகிற சிலபொருள்களை விலைகொடுத்து வாங்குவது பண விரயம் என்று எண்ணுபவர்கள் அவற்றைத் தேவைப்படும்போது மட்டும் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திவிட்டுத் திருப்பித் தந்துவிடுவது இவ்வகை.

    நிரந்தரமாக இல்லாமல் சில ஊர்களில் தற்காலிகமாகப் பணியாற்றுபவர்கள் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிப், பிறகு பணிமாறுதல் பெற்றவுடன் அடுத்த ஊரில் வாடகைக்கு வீடு தேடுவர். இவர்கள் ஊர்கள்தோறும் சொந்த வீடுகள் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு வசதிகள் அற்றவர்கள் அல்லது தேவையுமற்றவர்கள்.

    அந்தக் காலங்களில் சொந்தமாகச் சைக்கிள்கூட வைத்துக்கொள்ளும் வசதியற்றவர்களாய் மக்கள் இருந்தனர். அதனால் கிராமங்கள்தோறும் வாடகைக்குச் சைக்கிள்கள் விடும் கடைகள் இருந்தன. அன்றாடக் குறுகிய தூரப் பயணங்களுக்கு மக்கள் வாடகைச் சைக்கிள்களைப் பயன்படுத்தினர். சொற்ப வாடகைச் செலவில் குறிப்பிட்ட காலத்திற்குப் பொருளின் முழுப் பயனையும் இவர்கள் பெற்று விடுவர். ஒத்திக்கு வாங்குவது, குத்தகைக்கு எடுப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

    இரவல் என்பது இவை அத்தனையையும் தாண்டியது. இரவலாக வாங்கப் படும் பொருள் எந்தப் பணப்பலனையும் சாராதது; அதே நேரத்தில் இலவசமானதும் கிடையாது. இரவலாக ஒரு பொருளை ஒருவரிடமிருந்து ஒருவர் பெறுகிறார் என்றால், அதற்கு விலையாகவோ, கடனாகவோ, வாடகையாகவோ அல்லது பிணையாகவோ எந்தப் பொருளையும், பணத்தையும் தரவேண்டியது இல்லை.

    எனவே இரவலாகப் பெறப்படும் பொருள் முழுக்க முழுக்கத் தருபவருக்கு உரிமையான சொந்தப் பொருளாகவே இருக்கும். வாங்கியவர் பொருளின் பயனை அனுபவித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் இரவல் வாங்கிய பொருளைத் தந்தவருக்கு உரிய நன்றியுடன் திருப்பித் தந்துவிட வேண்டும்.

    அந்தக் காலங்களில் தங்கநகை முதலிய அணிகலன்கள் வசதிபடைத்தவர்கள் வீடுகளில் மட்டுமே இருக்கும். திருமணம் மற்றும் மங்கல விழாக்கள் வரும்போது வசதியற்ற உறவினர்கள், வசதியுள்ளோரிடம் இரவலாக அணிக்கலன்களை வாங்கி அணிந்துகொள்வது வழக்கம். விசேஷம் முடிந்ததும் திருப்பிக்கொடுத்து விடுவர். இன்று எல்லார் வீடுகளிலும் தங்க ஆபரணங்கள் இருந்தாலும், திருட்டுபயத்திற்கு அஞ்சி, நகைகளை வங்கி லாக்கரில் தான் வைத்துவிடுகிறோம்; விசேஷங்களுக்குத் தேவையென்றால் வங்கிக்குச் சென்று இரவல்நகை பெற்று வருவதுபோலப் பத்திரமாக எடுத்து, விழா முடிந்ததும் பத்திரமாகத் திருப்பி வைத்து விடுகிறோம்.

    அதுபோல ஆடைகளையும் இரவல்வாங்கி அணிந்துகொண்ட காலம் ஒன்று இருந்தது." மாப்ள அவருதான் ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது!" என்பதுபோன்ற திரைப்படக் காமெடிகள் இதை விளக்கும்." பட்டுப் புடவைய இரவல் குடுத்துட்டுப் பின்னாடியே பாயை எடுத்திட்டுப்போய் அவ உட்கார்ற இடமெல்லாம் விரித்துப் பட்டுப் புடவையை அழுக்காகாமல் பார்த்துக்கொண்ட பெண்மணி" கதைகளும் பழமொழிகளில் உண்டு.

    சைக்கிள், இருசக்கர வாகனங்கள், கார் முதலான வாகனங்களையும் இரவல் வாங்கிப் பயன்படுத்துகிற பழக்கம் இன்றும் இருக்கிறது. சில பொருள்கள் இரவல் வாங்குவதற்கென்றே படைக்கப்பட்டவை போல இருக்கும். வீடுகளில் பால், சீனி, காபிப் பொடி போன்றவை அடிக்கடி இரவலாகப் பெறப்படுபவை. அதே போல ஆணி அடிக்கப் பயன்படும் சுத்தியல், திருப்புளி, மின்சார டெஸ்டர், ஏணி,அயர்ன்பாக்ஸ், குடை போன்றவையும் இரவல் பட்டியலில் இடம்பெறுபவை.

    வங்கிகளுக்குச் சென்றால், அங்கே படிவங்களை நிரப்பப், பேனாவிற்காக, வந்திருப்பவர்களின் சட்டைப் பைகளையும் கைகளையும் நோட்டமிடுபவர்களைப் பரவலாகப் பார்க்கலாம். சிலர், படிவம் நிரப்பிக் கொண்டிருப்பவரின் அருகில் வந்து நின்றுகொண்டு, கொஞ்சம் எழுதி முடிச்சிட்டுப் பேனாவை எனக்குத் தருவீர்களா? எனச் சொந்தப் பேனாவைக் கேட்பதைப்போலக் கேட்பர்.

    இதற்கும் மேலே சிலர், சார் உங்களோடதை நிரப்பிட்டு எனக்கும் கொஞ்சம் நிரப்பித் தருவீங்களா? என்று படுத்துவார்கள். பெருவாரியான மக்கள் பேனாவை இரவல் கேட்கும் இடம் வங்கிதான். அதிலும் பலர் இரவல் வாங்கிய பேனாவைத் திருப்பித் தராமலேயே சென்றுவிடுவதும் உண்டு.

    இரவல் கொடுக்கிற பொருள்களிலேயே பெரும்பாலும் திரும்பி வராத பொருள் புத்தகம் தான். நிறையப் புத்தகங்களைத் தன் வீட்டில் வைத்திருக்கும் ஒரு எழுத்தாளர் சொன்னார்," கேட்பது யாராக இருந்தாலும் புத்தகங்களை மட்டும் இரவலாகக் கொடுக்காதீர்கள்; அவை எக்காலத்திலும் திரும்ப வரப்போவதேயில்லை. என்னிடம் இருக்கிற பல புத்தகங்கள் நான் இரவலாகப் பெற்றுத் திரும்பக் கொடுக்காதவைதாம்".

    மார்க் ட்வைன் பிரபலமான மேனாட்டு எழுத்தாளர். அவர் எங்கு சென்றாலும், எப்போது சென்றாலும் கையில் ஒரு குடையோடு செல்வது வழக்கம். அந்த நகரில் மார்க் ட்வைன் என்றாலே கையில் குடையோடு இருப்பவர் என்பதே அடையாளமாகிப் போனது.

    அவர் ஒருநாள் தனது கையிலிருந்த குடை மிகவும் பழையதாகவும் பழுதாகவும் போய்விட்டதால் அதைக் குப்பையில் எறிந்து விட்டுப் புதிதாகஒரு குடை வாங்கிக்கொள்ள முடிவு செய்தார். தனது பழைய குடையை அன்று மாலை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார். மறுநாள் காலை விடிந்ததும் வீட்டு வாசலில் அழைப்புமணி ஒலித்தது. தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்து பார்த்தார் மார்க் ட்வைன்.

    அந்தப் பகுதியைத் துப்புரவு செய்யும் தொழிலாளி, மார்க் ட்வைன் குப்பைத் தொட்டியில் போட்ட குடையுடன் நின்றிருந்தார். " இது உங்கள் குடை தானே!; இந்தக் குடையோடு அடிக்கடி உங்களை இந்தத் தெருவில் பார்த்திருக்கிறேன்; குப்பைத் தொட்டிக்குள் யாரோ தெரியாமல் போட்டிருக்கிறார்கள்! இதோ பெற்றுக் கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.

    அடுத்து என்ன செய்வது? என யோசித்த மார்க் ட்வைன் அந்தக் குடையோடு அந்தப் பகுதியிலிருந்த குளக்கரைக்குச் சென்று குளத்திற்குள் குடையை வீசியெறிந்து விட்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அந்தோ பரிதாபம்! அன்று மாலையே இவருடைய நண்பரொருவர், குடையை குளக்கரையில் கண்டெடுத்ததாகச் சொல்லி, மார்க் ட்வைனிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

    நிரந்தரமாக அந்தக் குடையிடமிருந்து பிரிவது எப்படி?. மார்க் ட்வைன் பக்கத்து வீட்டு நண்பரின் கதவைத் தட்டினார்; குடையை இரவலாகத் தருகிறேன்; வைத்திரு; நான் கேட்கும்போது திருப்பித்தா! எனத் தந்துவிட்டு வந்தார். அந்தக் குடை திரும்ப வரவேயில்லை. இரவலுக்கு அவ்வளவு சக்தி.

    இரவல் என்பது அவசர ஆத்திரத்திற்குக் கருணையோடு கிடைக்கிற உதவி; அதுவும் நூல்களாக இருந்தால் பேரறிவு. பெற்றதைத் திரும்ப அளிக்கும் குணம் இரவல் பெறுவதில் இனிமையோடு இருக்க வேண்டும்.

    யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்! தாம் இன்புறுவது உலகு இன்புறக் காணும் பரோபகாரம் இரவல் தருவதில் உண்டு. நாம் தொடக்கத்தில் கண்டதைப்போல இந்த வாழ்வே நமக்கு இரவல் வாழ்க்கைதான். நன்றாக வாழ்ந்துவிட்டு எதிர்காலச் சமூகத்திற்காக இந்த பூமியின் செல்வ வளத்தை, அறிவு வளத்தை மேலும் செழுமையாக்கித் திருப்பித் தந்துவிட்டுச் செல்வதே இரவல் வாழ்வியலின் லட்சியமாக இருக்கட்டும்.

    தொடர்புக்கு 9443190098

    • இசைக்கு வசப்படாத உயிர்கள் ஏது?
    • திறமைகளுக்கு மரியாதைக் கொடுத்து பழகி வந்தவர் எம்.எஸ்.வி.

    "இசைக்கு வசப்படாத உயிர்கள் ஏது? "இசை" என்றாலே கேட்கும் அல்லது எழுப்பப்படும் ஒலி நயமாக இருந்தால் நம்மையறியாமல் நாம் அந்த ஒலியுடன் ஒன்றிவிடுகிறோம்! இசைந்து விடுகிறோம். அதனுடன் நல்லிணக்கத்துடன் ஒன்றிப்போக செய்வதால் தான் அப்படி வாசிக்கப்படும் காற்று இசைக் கருவியை "ஹார்மோனியம்" என்கிறோம்.

    மகாகவி பாரதியார் தான் பாடும் பாடல்கள் எந்த ராகத்தில் அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டு விடுவாராம். 1890 முதல் 1973 வரை வாழ்ந்த இசை அறிஞர் பாபநாசம் சிவன் தான் இயற்றும் பாடல்கள் எந்த ராகங்களில் இருக்கிறது என்று குறிப்பிட்டு விடும் பழக்கம் இவருக்குமுண்டு.

    இவர் திரைப்பட பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இருந்தார். "மன்மத லீலையை வென்றார் உண்ேடா" என்ற புகழ்ப்பெற்றப் பாடலை எழுதியவர் இவர்தான். இப்படி பாரம்பரியமாக பாடல்கள் இசையமைக்கப்பட்ட காலங்கள் அவை!

    அந்த காலத்தில் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்த "ஜீபிடர் பிக்சர்ஸ்" ஒரே சமயத்தில் நான்கு படங்கள் தயாரித்தார்கள். அப்படங்களுக்கு இசையமைக்க, கோயம்புத்தூ ருக்கு சென்னையில் இருந்து சி.ஆர்.சுப்பாராமன், டி.கே.ராமமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா, சி.எஸ்.ெஜயராமன் ஆகியோர் போவார்கள்.

    இசையமைத்துவிட்டு சென்னை திரும்பும் வரையில் அவர்களுக்கு சுரங்கள் எழுதித்தருவது, அரங்கம் ஏற்பாடு செய்வது, பாடல் ஒத்திகைக்கு உதவுவது என்று எல்லாப் பொறுப்புகளையும் நிர்வாகித்து வந்தவர் எம்.எஸ்.வி.

    இதனால் அவர் பெற்ற இசை ஞானம், திறமை, அனுபவம் இசையமைக்கத் தேவையான எல்லா மேலாண்மையும் கைகூடி வந்தது என்றே சொல்லவேண்டும்.

    இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமனிடம் உதவியாளராக சேர்ந்த எம்.எஸ்.வி. விரைவில் தனது நேர்மையான உழைப்பால், தலைமை உதவியாளரானார். இதற்கிடையே 'ெஜனோவா' என்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்திற்கு ஏற்கனவே ஞானமணி என்ற இசையமைப்பாளர் இருந்தாலும் எம்.எஸ்.வி. அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு தரப்பட்டது.

    பகலில் சி.ஆர்.சுப்பாராமன் படத்திற்கு இசையமைப்புக்கான உதவிகள் செய்வதும், அவரிடம் ஆசிப் பெற்று, இரவுகளில் "ஜெனோவா" படத்திற்கு இசையமைப்பதுமான அவரது உைழப்பு எல்லோரையும் வியப்புடன் எம்.எஸ்.வி. யை திரும்பி பார்க்க வைத்தது. தனது உதவியாளர், படத்திற்கு இசையமைப்பாளராக முன்னேறியதில் சுப்பாராமனுக்கு மிகவும் மகிழ்ச்சி!

    தனது குருவிற்கு தான் இசையமைத்த படத்தின் பாடல்களை நேரில் போட்டுக்காட்டி ஆசி பெறவேண்டும் என நினைத்து அதற்கென ஒரு நாளும் குறித்து அரங்கமும் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துவிட்டார்... அப்போதுதான், சுப்பாராமன் இறந்துவிட்ட செய்தி வருகிறது. நொந்து அழுதேவிட்டார் எம்.எஸ்.வி. ஏற்கனவே, சுப்பாராமனிடம் இசையமைப்பில் எல்லா பொறுப்பிலும் இருந்து வந்த எம்.எஸ்.வி.யிடம், சுப்பாராமன் பாதியில் இசையமைத்து நின்றுவிட்ட படங்களுக்கு இசையமைத்து முடித்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொல்லி கேட்டார்கள் தயாரிப்பாளர்கள். எம்.எஸ்.வி. அவற்றை முடித்துக் கொடுத்தார்.

    சுப்பாராமன் குழுவிலிருந்த டி.கே.ராமமூர்த்தி என்பவருக்கும் வாய்ப்புகள் வந்தன. டி.கே.ராமமூர்த்தி சிறந்த வயலின் மேதை. இவர் 72 மேளகர்த்த ராகங்களையும் வாசிக்கத்தெரிந்தவராம். அதுமட்டுமல்ல, இசையமைப்பில் வயலின்கள் வாசிக்கும் போது எந்த வரிசையில் இருக்கும் என்பதையும் கலைஞர் தவறாக வாசிக்கிறார் என்பதையும் துல்லியமாக சொல்லும் அளவிற்கு நுட்பம் ெதரிந்தவர். இவருடைய இந்த திறமைகளுக்கு மரியாதைக் கொடுத்து பழகி வந்தவர் எம்.எஸ்.வி.

    "அபூர்வ ராகங்கள்" - என்றொரு திரைப்படம் 1975ல் வந்தது. இயக்குநர் சிகரம், கே. பாலசந்தர் இயக்கியிருந்தார். இந்த திரைக்கதையே ஒரு அபூர்வம். தன்னைவிட மூத்தவரான நடிகை ஸ்ரீவித்யாைவ நடிகர் கமல்ஹாசன் விரும்புவார். கமல்ஹாசன் தந்தையான மேஜர் சுந்தர ராஜனை, ஸ்ரீவித்யா மகளான நடிகை ஜெயசுதா விரும்புவார். ஒரு சிக்கலான கதை.

    இயக்குநர் கே. பாலசந்தர், கதையை சொல்லும் போது, எனக்கு ஒரு அபூர்வமான பாடல் வேண்டும். வித்தியாசமான ராகத்தில் இருக்கணும் என்றார். இதுவரை யாரும் மெட்டு போடாததாக இருந்தால் சிறப்பு என்றார்.

    எம்.எஸ்.வி. சரி என்று சொல்லிவிட்டு, சங்கீத வித்தகர் பாடகர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணவிடம் சென்று, செய்தியை சொல்லி, "அண்ணே ஒரு அபூர்வமான ராகத்தை சொல்லுங்கள் " என்று கேட்டார்.

    அவர், "மஹதி" என்றொரு ராகம், இருக்கிறது. அது நான்கே சுரங்கள் கொண்டது. அதில் மெட்டமைத்துப் பாருங்கள்" என்று சொல்லி விட்டார்.

    'மஹதி ராகம்' - ச,க,ப,நி, என்ற நான்கே சுரங்கள் கொண்டது. நான்கு சுரங்களுக்குள் இசை அமைப்பது கடினம்.

    கமல்ஹாசன் விரும்பும் ஸ்ரீவித்யாவின் பெயர் "பைரவி" .அது ஒரு ராகத்தின் பெயர்! இதனால் ஸ்ரீவித்யாவின் பெயரை பாடலில் நடுவில் வைத்து "அவளொரு பைரவி" - என்று எழுதியிருப்பார் கவியரசர்.

    ஆனால், பாடல் கே.பி.சார். கேட்டபடி மஹதியில் தரவேண்டும். அவ்வாறே செய்து நடுவில் அவள் பெயரை பைரவி என்று குறிப்பிடும் இடத்தில் 'பைரவி' ராகத்தையும் காட்டியிருப்பார்.

    திரைப்படங்களில் காட்சிகளை சொல்ல ஒரு சில உவமைகளை காட்டி குறிப்பால் உணர்த்துவார்கள். அதைப் போல அந்தப் பாடலின் சுட்டிக்காட்டும் வகையில் சிம்பாலிக் சுரம் கொண்டு வந்திருப்பார் எம்.எஸ்.வி. ஒரு புதிய உத்தி அது! இந்த இரண்டு ராகங்களை இணைத்திருப்பது என்பது எம்.எஸ்.வி. யின் படைப்புத்திறனுக்கு ஒரு மைல் கல்!

    "நீ காதலிக்கும் பெண் யார்" என்று கமலிடம் ஸ்ரீவித்யா கேட்கிறார். கமல்ஹாசன் இசையிலே புதிர் போடுகிறார். தான் காதலிக்கும் பெண்ணின் சிறப்புகளை அதிசய ராகமான மஹதியில் வர்ணித்துக் கொண்டே வருகிறார்.

    அதிசய ராகம்....

    ஆனந்த ராகம்....

    அழகிய ராகம்ம்ம்...

    அபூர்வ ராகம்.... என்று பல்லவி பாடுகிறார்.

    பல்லவி என்றால் பாடலின் முதல் 2 அல்லது 4 வரிகள். அனுபல்லவி என்றால் பல்லவி அடுத்து வரும் 2 வரிகள். அதற்கு பின் வரும் பத்திகளுக்கு சங்கீதத்தில் சரணம் என்று பெயர்.

    அடுத்து வரும் சரணத்திலும் காதலியைப் பற்றிய புகழ்ச்சி தான். இரண்டாம் சரணம் முடிந்தவுடன் வரும் இசையிலே ஒரு மாற்றம் தருகிறார். இங்குதான் மெட்டும் மாறுகிறது.

    "ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி!

    மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி"

    இந்த இருவரிகளையும் "பைரவி" ராகத்தில் அமைத்திருப்பார். எம்.எஸ்.வி.

    கமல்ஹாசன், "நான் காதலிக்கும் பெண் 'பைரவி' யாகிய நீ தான் என்பதை புரிந்துக் கொள்ளேன் என்று சொல்லாமல் சொல்லும் விதமாக இசை ரீதியான துப்பு ஒன்று கொடுக்கிறார்.

    ஸ்ரீவித்யாவிற்கு, திடீரென ஏன் பைரவி ராகத்தில் பாடுகிறார்? 'பைரவி' என்ற பெயரில் தன் மாணவிகளில் யாருமில்லையே என்ற சிந்தனையிலேயே இருப்பார், யோசிக்கையில் புருவம் சுருக்குவதை கூட காட்டுவார் கே.பி.

    "இன்னுமா புரியலை" என்ற வசனம் பாடலின் நடுவில் கமல்ஹாசன் சொல்லிவிட்டு மறுபடியும் பாடுவார்.

    "முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி:

    முழுவதும் பார்த்தால், அவளொரு பைரவி,

    அவளொரு பைரவி, அவளொரு பைரவி"என்று பைரவி ராகத்தில் பாடுவது மட்டுமில்லாமல் பெயரையும் அழுத்தந்திருத்தமாக மூன்று முறை சொல்வார்!

    ஸ்ரீவித்யா விக்கித்து நிற்கிறார். தன்னைவிட இளையவரான கமல்ஹாசன் தன்னை காதலிக்கிறாரா என்ற சந்தேகம் கூட அதுவரை அவருக்கு வந்ததில்லை.

    காதலிப்பதாக இவ்வளவு நேரம் பாடியது, இசை மூலமாக சொன்னது தன்னைத்தான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

    இப்போது கமல்ஹாசன் மீண்டும் பழைய பல்லவியே பாடுகிறார் (மஹதி). "அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்..."

    இந்த வரிகளைப் பாடும்போது முடிவில் சரசரமாக வாசிக்கப்படும் வயலின்களில் அதிகமாகிக் கொண்டே போகும், ஒரு பரபரப்பு தொனிப்பதை உணரலாம்.

    இந்தப் பாடலில் நான்கு சுரங்களுக்கு ஏற்றபடி முதல் நான்கு வரிகளில் நான்கு எழுத்து சொற்கள் ' அதிசய, ஆனந்த, அழகிய, அபூர்வ" என்றும்,

    'இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்' என்ற வரியில் 72 ராகங்களில் அவள் பெயரும் ஒரு பாகம் என்பதையும்,

    இணையில்லாமல் இருக்கும் நாயகிக்கு ஏற்றவாறு 'சக்கரவாகம்' என்ற சொல்லாடல் பயன்படுத்தியிருப்பதுவும் (சக்கரவாகம் பறவை இணை இழந்தால் சோகமாக பாடும்) என்று கவிதையில் சிலம்பம் ஆடியிருப்பார், கவியரசர் கண்ணதாசன்.

    பாடலுக்கு சாஸ்திரிய சங்கீதமாக மட்டுமே மஹதியிலும், பைரவியிலும் அமைத்து, பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களை பாடவைத்ததில், கேட்கிற, நாம் மெய்மறக்கிறோம்!

    பெண்களுக்குத் தெரியும் பார்ட்டி சேரிஸ் என்று ஒரு டிசைன் புடவை, புடவையின் துவக்கத்தில் ஒரு டிசைன், நடுவில் வேறு டிசைன், மீண்டும் முதலில் வந்த டிசைன் கலந்து முந்தாணை முடியும். அதுபோன்ற ஒரு டிசைன் பாடல் தான் இது! என்று சொன்னால் மிகையில்லை. 50 வருடங்களாக கோலோச்சி கொண்டிருக்கும் பாடல் இது!!!

    கே.பாலசந்தரின் திரைப்படம் இயக்கும் திறன் எல்லோருக்கும் தெரிந்தது தானே? இப்படி சவாலாக திருப்பங்கள் அமைந்த தினால் தான் இந்தப் பாட்டில் இருவேறு ராகங்கள் எம்.எஸ்.வி. இசையமைத்தாரா என்றால்... அதுதானில்லை, இருவேறு ராகங்கள் மட்டுமல்ல. இருவேறு எதிரான இசை வகைகளையும் உள்ளடக்கியப் பாடல்களையும் நிறைய தந்திருக்கிறார்!!

    "பதிபக்தி" என்று ஒரு திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்ரி, நடித்தது. அதில் ஒரு பாடல் காட்சியில் நாட்டியக் கலைஞராக ஜே.பி.சந்திரபாபு, தனது குழுவினரோடு "ராக் ராக் ராக்" என்று ராக் அண்ட் ரோல் பாணி நடனத்தை ஆடுவார். அதற்கு போட்டியாக இரு பெண்கள் பரத நாட்டியம் ஆடுவார்கள். இந்த பாடலை மேற்கத்திய இசையிலும் 'அடாணா' ராகத்தில் கர்நாடக இசையிலும் ஜமாய்த்திருப்பார்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவரும்.

    ஒரே பாடலில் இரு வகை இசை வந்தால் அதை இணைவு இசை என்பார்கள். 1958 லேயே இந்த உத்தியை மெல்லிசை மன்னர்கள் கையாண்டது புதுமை!!

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    இணைய முகவரி: banumathykrishnakumar6@gmail.com

    • இந்து ஜனத்தொகை குறைந்து விடும் என்கிற அரசியல் காரணமாக அதை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளவில்லை.
    • பழங்குடி மக்கள் பேசுகிற மொழிகள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற வேண்டுமென்று பழங்குடியினர் கேட்டு வந்தனர்.

    குமரி முனை விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம்!

    இறுதிக்கட்டப் பரப்புரை ஓய்வுக் காலத்தில் பிரதமர் இப்படி அப்பட்டமான விதி மீறலில் ஈடுபடலாமா? அதுவும் அவரே ஒரு வேட்பாளராக வாரணாசியில் களம் காணும்போது? காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையக் கதவுகளைத் தட்டி உள்ளன. அது வழக்கம்போல கொர்.. கொர்!

    இந்த இறுதிக் கட்ட உத்தி புதிதல்ல. 2014 தேர்தல் 9 கட்டம்! பரப்புரை ஓய்வுக் காலத்தில் மராட்டிய மாநிலம் பிரதாப்கட் கோட்டையில் வீர சிவாஜி மாதிரி காட்சி தந்தார், மோடி!

    மகாராஷ்டிராவில் அதிக தொகுதிகளைப் பிடித்தது பா.ஜனதா தலைமையிலான

    என்.டி.ஏ. மொத்தம் உள்ள 48-ல் 42-ஐ கொத்தாக அள்ளியது. மராட்டிய மண்ணின் இதய தெய்வம் வீர சிவாஜி என்பது தெரிந்ததே.

    பல வருடங்களுக்கு முன்பு "கல்கி" பத்திரிகையில் சத்ரபதி சிவாஜி பற்றிய தொடர் ஒன்றை எழுதி வந்தேன். அப்போது மும்பை சிவசேனா நண்பர்களின் உதவியோடு மராட்டிய கிராமங்களைச் சுற்றி இருக்கிறேன்.

    சிவாஜியின் சாகசங்களைப் பாடுகிற "பகர்" பாடல்கள் அங்கு பிரபலம். பிரதாப்கட் கோட்டை அருகில் உள்ள மகாபலீஷ்வரில் "ஷிவ் ஜெயந்தி" (வீர சிவாஜி) கொண்டாட்டத்தைப் பார்த்தேன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிவாஜி மற்றும் ஜிஜாபாய் வேடத்தில் இருந்தார்கள்.

    வீர சிவாஜி பற்றிய மகத்தான பெருமித உணர்வு மராட்டியர்களுக்கு உண்டு. 2014ல் அதைத் தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் மோடி! பிரதாப்கட் சிவாஜியின் வெற்றிக் கோட்டை.

    படையெடுத்து வந்த பிஜப்பூர் இஸ்லாமிய தளபதி அபசல்கானை "வாக் நாக்" என்ற புலிநகக் கையுறையால் சிவாஜி வீழ்த்திய இடம் பிரதாப்கட். ஹிந்தவி சுயராஜ் என்ற வர்ணனையை முதன் முதலில் பயன் படுத்தியவர் அவர்.

    இந்த வரலாற்றை வைத்து அறிஞர் அண்ணா "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" என்ற நாடகத்தை எழுதி உள்ளார். அதில் நடித்ததால் தான் நடிகர் திலகம் சிவாஜி என்று அழைக்கப்பட்டார்.

    இப்படியான இந்து தேசிய உணர்வை வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்த பிரதாப்கட் வியூகம் மோடிக்கு 2014 -ல் கை கொடுத்தது. மன்மோகன் சிங் மாதிரியான மென்மையான அரசியல்வாதிக்கு இப்படியான அதிரடி வசப்படவில்லை. பாவம்!

    இதே உத்தியை 2019-ல் மீண்டும் கையில் எடுத்தார் மோடி! கடைசி நாளன்று கேதார்நாத் ருத்ரா குகையில் அவர் காவி உடையில் தியானம் செய்தார். அந்தப் படக்காட்சிகள் இறுதிக் கட்ட வாக்குப் பதிவின்போது இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டன.

    இப்போது நடந்துள்ள விவேகானந்தர் பாறைத் தியானமும் இதே "ரீப்பீட்" தான்!

    தராசு ஷ்யாம்

    தராசு ஷ்யாம்

    ராமகிருஷ்ண பரமஹம்சர் 1886-ம் ஆண்டு இறந்தார். பின்னர் விவேகானந்தரும் பிற சீடர்களும் துறவிகள் ஆனார்கள். 4 ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை நேரடியாக அவர் அனுபவித்து அறிந்தார்.

    பயண முடிவில் 24 டிசம்பர் 1892-ல் கன்னியாகுமரியை அடைந்தார் விவேகானந்தர். அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறைக்கு நீந்திச் சென்றார். அதன் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார். அதுவே இன்றைய விவேகானந்தர் நினைவிடம்.

    வங்கத்தில் பிறந்த வீரத் துறவியான விவேகானந்தரை உலகறிந்த ஆன்மிகத் தத்துவஞானியாக வெளிச்சம் போட்டு காட்ட உதவிபுரிந்தவர் ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னர். இது தமிழகத்துக்கே சிறப்பு.

    சென்ற 2014 தேர்தலின் கடைசி வாக்குப்பதிவு 41 தொகுதிகளுக்கு நடந்தது. இறுதி நாள் உத்தி மூலம் மகாராஷ்டிரா உட்பட வடக்கில் கணிசமான வெற்றி பெற்றது பா.ஜ.க.

    போன 2019-ல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதி! அதில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்தது 24. அதன் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்தது 6. மொத்தம் 30-ஐ அள்ளியது என்.டி.ஏ. கேதார்நாத்துக்கு ஜே!

    இந்த முறை ஏழாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 57 தொகுதிகளில் நடக்கிறது. மோடி போட்டியிடும் வாரணாசி, யோகியின் சொந்த பூமியான கோரக்பூர் உட்பட உத்தரபிரதேசத்தில் மட்டும் 13. கிழக்கு உத்தரபிரதேசம் என்று அழைக்கப்படும் பூர்வாஞ்சல் பகுதி அது. அங்கு ஜெயிக்க வேண்டியது கவுரவப் பிரச்சனை!

    எனவே ஏற்கனவே பரிசோதித்துப் பார்த்து வெற்றி கண்ட இந்து தேசிய உணர்வு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார் மோடி. ஆனால் இதில் ஒரு ஆபத்தும் உள்ளது.

    இந்த முறை இந்துத்துவாவுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மும்பையில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சித் தலைவர் புஜ்பால் 400 சீட் இலக்கும், இந்து தேசியவாதமும் மராட்டியத்தில் பா.ஜ.க. ஆதரவு வாக்கு வங்கியை மடை மாற்றியுள்ளன என்பது அவரது கருத்து.

    சென்ற தேர்தலில் மோடிக்கு வாக்களித்த தலித் இன மக்கள் பவுத்த வழிபாடு, புத்தர் கோவில்கள், தியான மண்டபங்கள் என்று அவர்கள் விழிப்படைந்துள்ளனர். இந்து தேசிய வாதம் தங்கள் வழிபாட்டு உரிமையைப் பாதிக்கும் என்று அவர்கள் இந்த முறை கருதுகின்றனர்.

    எனவே மராட்டியத்தில் பா.ஜ.க.வுக்கு விழவேண்டிய வாக்கு பெரிதும் குறைந்துள்ளது என்பது புஜ்பால் கருத்து.

    பழங்குடி மக்களும் இந்து தேசிய வாதத்தை எதிர்க்கின்றனர். மேற்கு வங்க பா.ஜ.க. எம்.பி. ஹேம்ராம் "பழங்குடி மக்களின் ஒற்றுமையைப் பாதிக்கிறது இந்துத்துவா ஆதிக்கம்" என்று கூறினார். அவர் இப்போது ராஜினாமா செய்துள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலப் பழங்குடி மக்கள் சந்தால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்கள். அவர்களது கோரிக்கைகளில் ஒன்று "சர்னா கோட்". அது என்ன?

    இந்தியாவில் பழங்குடி சமூகங்கள் சர்னா அல்லது இயற்கை வழிபாட்டைப் பின்பற்றுகிறார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது சர்னாவுக்கு ஒரு தனிக் (கோட்) வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

    அதாவது இந்து, கிறித்துவம் அல்லது பிற மதங்களில் இருந்து வேறுபட்டு நிற்கும் பழங்குடியினரின் தனித்துவ மத நம்பிக்கைகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை நாடுகிறது சர்னா கோட். ஆனால் இந்து ஜனத்தொகை குறைந்து விடும் என்கிற அரசியல் காரணமாக அதை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளவில்லை.

    பட்டியல் பழங்குடியினருக்குத் தேசிய ஆணையம் உள்ளது. சென்சஸ் மதக் குறியீடுகளில் "சர்னா" ஒரு சுதந்திரப் பிரிவாக இருக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்துத்துவா தேசியவாதம் இதற்குத் தடையாக உள்ளது என்று பழங்குடியினர் கருதுகிறார்கள்.

    மேலும் பழங்குடி மக்கள் பேசுகிற மொழிகள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற வேண்டுமென்று பழங்குடியினர் கேட்டு வந்தனர். பா.ஜ.க. 2014, 2019 தேர்தல்களில் இதற்கு ஆதரவளித்ததால் கணிசமான வெற்றி பெற்றது.

    பழங்குடி ஓட்டு வங்கி சுமார் 40க்கும் மேற்பட்ட எம்.பி. தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி. இந்த முறை அதில் பெரும்பகுதி பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.

    மேற்படிக் கோரிக்கைகளை ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தி வந்தார். நிலஅபகரிப்புக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அது பழங்குடியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இப்போது ஹேமந்த்தின் மனைவி கல்பனா முர்மு சோரன் தேர்தல் பரப்புரைகளில் மேற்படிக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார். எனவே மோடியின் தியான உத்திக்கான 2019 கவர்ச்சி இப்போது பட்டியல் பழங்குடியினரிடம் இல்லை என்று வட இந்திய அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    இறுதிக்கட்ட வாக்குப் பதிவில் உள்ள இன்னொரு முக்கிய மாநிலம் பஞ்சாப். அங்கு சென்ற 2019-ல் பல தொகுதிகளில் தியான அறுவடை கிடைத்தது. ஆனால் இந்த முறை முக்கிய பிரச்சனையாக பஞ்சாப்பில் உருவெடுத்துள்ளது போதை!

    பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் போதை மருந்துகள். வேலையில்லாத் திண்டாட்டம், ராணுவ ஆட்சேர்ப்பை அக்னிபத் முறைக்கு மாற்றியது ஆகியவை தான் பஞ்சாப் இளைஞர்களைப் போதைப் பாதைக்குத் தள்ளியது என்ற பெரிய குமுறல் உள்ளது.

    மேலும் "சாண்ட்விச் ஜோன்" என்று அழைக்கப்படும் எல்லையோரக் கிராமங்களில் ராணுவ நடமாட்டம் காரணமாக ஏக்கருக்கு 10,000 ரூபாய் சிரம இழப்பீடாகத் தரப்பட்டு வந்தது. இரண்டு வருடங்களாக அது மத்திய அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. விவசாய விளை பொருட்களின் குறைந்த பட்ச ஆதார விலை தான் முக்கிய பிரச்சனை.

    பஞ்சாப்பின் தேர்தல் பரப்புரைப் பேசுபொருள் இவை தான். இங்கு இந்துத்துவா மற்றும் தியான உத்தி கை கொடுக்காது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

    தியானத்தில் சிறந்தது கோட்டையா, குகையா, மண்டபமா? 2024 தேர்தல் நிறைவு நாளின் பட்டிமன்றத் தலைப்பு இது தான்!

    • கருவறையில், அன்னையின் இடது பாதத்தின் கீழ் அசுரன் மிதிபட்டுக் கிடக்க, அவளின் வலது கால் தூக்கி மடக்கிவைத்த நிலையில் காணப்படுகிறது.
    • தேவிக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் அன்னையை வழிபட்டால், சகல நன்மைகளையும் அருளி காத்திடுவாள்.

    கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூரில் இறங்கினால், ஒரு பர்லாங் தூரத்தில் ஸ்ரீ உலகாட்சி அம்மன் ஆலயம் உள்ளது.

    முதலாம் பராந்தக சோழனால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அம்பிகை, திருவிடைமருதூர் செங்கழுநீர் வாருணிக்கு வடகரையில் (தெற்கு விதி) சிறு கோட்டத்தில் குடிகொண்டுள்ளாள். நிசும்பசூதனி எனும் வடிவுடைய பத்ரகாளியே ஆயினும், உலகத்துக்கே தாயாக விளங்கி அருளாட்சி செய்யும் அன்னைக்குச் சோழ மன்னர்கள் ஸ்ரீஉலகாட்சி யம்மை என்று திருநாமம் சூட்டி வழிபட்டுள்ளனர்.

    கருவறையில், அன்னையின் இடது பாதத்தின் கீழ் அசுரன் மிதிபட்டுக் கிடக்க, அவளின் வலது கால் தூக்கி மடக்கிவைத்த நிலையில் காணப்படுகிறது. வலதுபுறத்து நான்கு கரங்களில் குறுவாள், போர்வாள், வில், உடுக்கை ஆகியவை உள்ளன. இடதுபுறத்து நான்கு கரங்களில் விஸ்மய முத்திரை, அம்பு, கேடயம், கபாலம் ஆகியவை இருக்கின்றன. கீழிரு கரங்களில் சூலாயுதத்தைத் தாங்கியிருக்கிறாள்.

    வலிமை பொருந்திய அசுரனை அழிக்க வந்தவளாக... கோரைப் பற்களும், பிதுங்கி சிவந்த விழிகளும், வளைந்து உயர்ந்த புருவங்களும், தீப்பிழம்பு போன்ற நெற்றிக் கண்ணும் துலங்க, இந்த அன்னை மறக்கருணையோடு காட்சி அளிக்கிறாள். முகத்தில் அறக்கருணை வெளிப்படுகிறது. அன்னையின் சிரசில் சூரிய சந்திரரும் சூலக் குறியும் திகழ, அதற்கு நேர்மேலாக சர்ப்பம் பொறிக்கப் பெற்றுள்ளது. மேலாடைக்குப் பதிலாக அரவம் புனைந்து காட்சி தரும் இந்த மாகாளி, தன்னை வணங்கிடுவோருக்கு அருள்மழைப் பொழியும் கற்பகமாக விளங்குகிறாள்.

    பராந்தக சோழன் காலத்தில் வெற்றித் தெய்வமாக வழிபட பெற்ற இந்த அன்னையின் ஆலயம் காலப்போக்கில் சிதிலமடைந்து போன, 1962-ம் வருடத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில் முற்றிலும் சேதமுற்றது. ஆயினும், இந்த அன்னையின் திருமேனி மட்டும் எவ்வித சேதமும் இன்றி பொலிவுடன் இருந்ததை வியப்புடன் சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

    நீண்ட வருடங்களுக்குப் பிறகு, திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதினத்தின் ஒத்துழைப்பாலும், பக்தர்களின் சீரிய முயற்சியாலும் புது ஆலயம் எழுப்பப் பெற்று குடமுழுக்கு செய்யப்பட்டது.

    "இந்தக் காளி நரம்பு மண்டலத்துக்கு அதிபதி. ராகு கிரகத்துக்குரிய தேவதை. இந்த தேவியைச் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் சிவந்த நிற ஆடை சாத்தி, செம்மலர்க ளால் அர்ச்சித்து வழிபடுவோருக்குச் சகல தோஷங்களையும் போக்கி வெற்றிகள் குவிந்திட அருள்பாலிப்பாள்.

    தேவிக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் அன்னையை வழிபட்டால், சகல நன்மைகளையும் அருளி காத்திடுவாள். அன்புடன் தன்னை வழிபடுவோரின் குறைகளைப் போக்கி அவர்களுக்கு நன்மைகளை அருள்கிறாள் இந்த தசபுஜ மாகாளி" என்கிறார்கள்.

    • ராகு காலம் என்பது துர்கா தேவியை ராகு கிரகம் வழிபடும் நேரம்.
    • அம்பாள் ஆகாய மார்க்கமாக, தினமும் காசிக்கு சென்று வருவதாக ஐதீகம்.

    மாங்கல்ய பலம், மன தைரியம், செல்வ வளம் தரும் வனதுர்க்கை கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் அருள்பாலிக்கிறாள்.

    தல வரலாறு:

    பூலோகத்தில் யாகங்களை செய்யவிடாமல் முனிவர்களைத் தடுத்து வந்தனர் மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் ஆகிய அசுரர்கள். இதனால் தேவர்களுக்கு அவிர்பாகம் கிடைக்கவில்லை. அவர்கள் சிவன், திருமால், பிரம்மாவிடம் முறையிட்டனர்.

    அனைவருமாக இணைந்து ஆதிபராசக்தியின் அருள் வேண்டி மிகப்பெரிய யாகம் செய்தனர். யாக குண்டத்தில் தேவி எழுந்தருளி, "விரைவில் அசுரர்களின் கதை முடியும்," என வாக்களித்தாள். பின்பு பூவுலகில் துர்க்கையாக அவதரித்து அசுரர்களை அழித்து தேவர்களை காத்தாள். பின், அவள் தனித்த நிலையில் 'சிவ மல்லிகா' என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் தங்கி உலக நலன் கருதி தவம் செய்யத் தொடங்கினாள். அந்த தலமே இன்றைய கதிராமங்கலம்.

    ஊர் பெயர்க்காரணம்:

    இத்தலத்தின் அருகில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த தேரழுந்தூர் உள்ளது. இவர் வனதுர்க்கையின் மீது தீவிர பக்தி கொண்டவர். ஒரு மழைக்காலத்தில் கம்பர் வீட்டுக்கூரை சிதைந்தது. கம்பர் அம்பாளை நினைத்து மனமுருகி, "அம்மா உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்!'' எனக்கூறி படுத்து விட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக் கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டிருந்ததைக் கண்டு மனமுருகி 'கதிர்வேய்ந்த மங்கல நாயகி' எனப்பாடி உருகினார். 'கதிர்வேய்ந்த மங்கலமே' நாளடைவில் 'கதிராமங்கலம்' ஆனது.

    அகத்தியருக்கு அருளிய துர்க்கை:

    அகத்தியர், அம்மையப்பனின் திருமணக் கோலத்தை காண வேதாரண்யத்திற்கு செல்லும் வழியில், விந்தியன் என்ற அசுரன் அவரை வழிமறித்தான். அவனை சம்ஹரிக்க தமக்கு சக்தி வேண்டும் என அவ்விடத்திலேயே தங்கி, துர்க்கையை உபாசித்தார். அன்னையின் அருளால் விந்தியனை சம்ஹரித்தார். அகத்தியர் இவ்வனத்தில் தங்கி இத்துர்க்கையின் அருள் பெற்றதால் வாழ்வித்த அன்னை வனதுர்க்கா என போற்றினார். எனவே இத்துர்க்கைக்கு 'வன துர்க்கை என்ற திருநாமம் ஏற்பட்டது.

    சிறப்பம்சம்:

    பொதுவாக துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள் பாலிப்பது வழக்கம். ஆனால் இங்கு கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறாள். வலதுகை சாய்ந்த நிலையில் அபய ஹஸ்தம், வரதம் என இரண்டு முத்திரைகளைக் காட்டி அருள் பாலிப்பது வேறு எந்த அம்மனிடத்திலும் காண முடியாத தனி சிறப்பு.

    அர்ச்சனை செய்யும்போது அம்பாளின் வலதுகரத்தில் உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அம்மன் சிலைக்கு மேல் மேற்கூரை எதுவும் இல்லாமல் திறந்த வெளியாக இருந்துள்ளது. காலப்போக்கில் அம்மனுக்கு மேல் தனி விமானம் கட்டப்பட்டது. ஆனாலும், பழைய ஐதீகம் மாறாமல் வெயிலும், மழையும் அம்மனின் மேல் விழும்படியாக விமானத்தின் மேல் ஒரு சிறு துவாரம் உள்ளது.

    இதன் வழியாக அம்பாள் ஆகாய மார்க்கமாக, தினமும் காசிக்கு சென்று வருவதாக ஐதீகம். இதனால் இவளுக்கு 'ஆகாச துர்க்கை' என்ற பெயரும் உண்டு. இந்த அம்மன் சிலை அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மிருகண்டு மகரிஷியால் பூஜிக்கப்பட்டது.

    இவள் திருமணத்தடை களைபவள். தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்பவள். செல்வவளம் தருவாள். ராகு காலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பு.

    ராகு காலம் என்பது துர்கா தேவியை ராகு கிரகம் வழிபடும் நேரம். அந்த நேரத்தில் துர்க்கையை வழிபடும்போது ராகுவின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும்.

    எனவே தான் ராகு திசை அல்லது ராகு புத்தி நடப்பவர்கள் துர்க்கையை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றியும், 108 அல்லது 54 எண்ணிக்கையில் எலுமிச்சை மாலை சாற்றியும் வழிபடுகின்றனர். மிருகசீரிஷ நட்சத்திரத்தினர் இவளை வழிபட்டால் தீர்க்காயுளும், செல்வ வளமும் கிடைக்கும். சோதனைகள் நீங்கும்.

     

    கோவில் அமைப்பு:

    மூன்று நிலை, ஐந்து கலசங்களுடன் கூடிய கிழக்குப் பார்த்த ராஜகோபுரமும், அம்மனுக்கு மேல் கலசத்துடன் கூடிய ஏகதள விமானமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு எதிரில் தாமரைத் தடாக தீர்த்தம் இருக்கிறது. வடக்கே யாகசாலையும், அன்னதானக் கூடமும் அமைந்துள்ளன. அம்மன் எதிரில் சிம்ம வாகனம் உள்ளது.

    கருவறை வாசலுக்கு மேல் சக்தியின் வடிவங்களான சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சண்டகண்டீ, கூஷ்மாண்டீ, ஸ்கந்தமாதா, சித்தி தாயிணி, காத்யாயிணி, காலராத்ரி, மகாகவுரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவுவாசலின் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர்.

    அம்பாளின் வலது மேற்கரம் தீவினையறுக்கும் பிரத்யேக கரமாக உள்ளது. இடது மேற்கரத்தில் சங்கு, வலதுகீழ் கரத்தில் அபய வரத ஹஸ்தம், இடது கீழ் கரத்தில் ஊர்த்து விஹாஸ்தம் (இடுப்பில் கை வைத்த எழிலான பாவனை) கொண்டு, தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்கிறாள்.

    விழாக்கள்:

    தனி விழா இல்லை. தினமும் ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை.

    இருப்பிடம்:

    கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை, சூரியனார்கோவில் வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 26 கி.மீ. துாரத்தில் கதிராமங்கலம் அமைந்துள்ளது.

    திறக்கும் நேரம் :

    காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை. மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை.

    • பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
    • படித்த பெற்றோர்களுக்குக்கூட தங்களுடைய பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெரிவதில்லை.

    "நான் குழந்தையா இருந்தப்போ எப்படி இருந்தேன் தெரியுமா? எங்க அப்பா அம்மா என்னை எப்படி வளர்த்தாங்க தெரியுமா?" என்று நாம் அனைவருமே வாழ்நாளில் ஒருமுறையாவது நம் பெற்றோர் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கு காரணம், அதிநவீன நாகரிக வளர்ச்சி என்று சொல்லலாம்.

    30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஊருக்கு ஒரு போன் இருந்த நிலை மாறி, இப்போது ஒருவருக்கு இரண்டு செல்போன்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதனால் வாழ்க்கைமுறை, சமுதாயம் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

    இதுபோன்ற மாற்றங்கள் ஒவ்வொரு தனிநபரின் நடத்தை, குணாதியசங்கள் போன்றவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. மேலும் கல்வி, தொழில் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி காரணமாக இப்போதுள்ள பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் தங்களுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாமை, அவர்களுடைய படிப்பில் கவனம் செலுத்தமுடியாமை போன்ற நிலைகளுக்கு தள்ளப்படுகின்றனர்.

    இதனாலேயே இன்று டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய வளர் இளம்பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் உளவியல் பிரச்சனைகளுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. என்னதான் பள்ளிக்குச் சென்று பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினாலும் பெற்றோரின் நடத்தை மற்றும் அவர்களுடைய செயல்கள்தான் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் அமைதியாகவும், தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிரமப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இன்றைக்கு பல பெற்றோர்கள், தங்களை தொல்லை செய்யக்கூடாது, சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே ஒரு வயது குழந்தை கையில்கூட செல்போன்களை கொடுக்கின்றனர். முன்பெல்லாம் நிலா காட்டி சாப்பாடு ஊட்டிய காலம் மாறி இப்போது செல்போன் காட்டினால்தான் சாப்பிடுவோம் என குழந்தைகளும் அடம்பிடிக்கின்றன.

    இப்படி குழந்தை பருவத்தில் இருந்தே செல்போனும் கையுமாக வளரும் குழந்தை வளர் இளம் பருவத்தை அடையும்போது செல்போன் இல்லாமல் இருக்கமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. இது யாருடைய தவறு? குழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர் செய்யும் தவறுகள் குறித்தும், சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்தும் சற்று விரிவாக காணலாம்.

    செல்போனுக்கு அடிமையாகும் பெற்றோர்கள்:

    கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு வரை படிக்கும்போது செல்போன் எதற்கு? என கேட்ட பெற்றோர்களே அதன்பிறகு படிப்பதற்காகவே செல்போன் வாங்கிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. முந்தைய தலைமுறை பெற்றோர்களுடன் ஒப்பிடுகையில் இப்போதுள்ள இளம் பெற்றோர்கள் பெரும்பாலும் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக, பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நம்மால் கண்கூடாக பார்க்கமுடிகிறது.

    இப்போது இந்தியா போன்ற நாடுகளில் டிக்டாக் போன்ற செயலிகள் தடைசெய்யப்பட்டாலும் அதே வசதிகள் பிற செயலிகளிலும் வந்துவிட்டன. இதனை பார்த்து வளரும் குழந்தைகளும் அதேபோன்று வளருகின்றனர்.

    மேலைநாடுகளில் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூகத்துடன் ஒன்ற முடியாத நிலை, பேச்சு மற்றும் செயல்திறன் குறைபாடு, மனிதர்களுடனான் தொடர்பின்மை போன்ற நிலை இருக்கின்றன. இதே நிலை இப்போது வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடுகளிலும் உருவாகி வருகிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரியாவிட்டால் அதை அவமானமாகவே கருதும் அளவிற்கு பலரின் மனதிலும் ஒருவிதமான எதிர்மறை தாக்கத்தை சமுதாயம் ஏற்படுத்தி இருப்பதை நம்மால் மறுக்கமுடியாது.

    இப்போதுள்ள படித்த பெற்றோர்களுக்குக்கூட தங்களுடைய பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெரிவதில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடாததுதான் அதற்கு காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள்.


    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டாலே போதும், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற மனநிலைதான் இன்று 90 சதவீதம் பெற்றோருக்கு இருப்பதாக கூறுகிறார்கள். குழந்தைகள் நல்ல மார்க் வாங்காதபோதுதான், அவர்களுக்கு கவனக் குறைபாடு இருப்பதாக உளவியாளர்களை அணுகுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே பெற்றோருக்கு டிஜிட்டல் சாதனங்களின் மீதான ஈர்ப்பும் குழந்தைகளின் மீது அக்கறை இல்லாமையும் தான் என்கின்றன ஆய்வுத்தரவுகள்.

    'பிரைவேட் டைம்' என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளிடம் செல்போன், டிவி, லேப்டாப் அல்லது டேப்லெட் என ஏதேனும் ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தை கொடுத்துவிட்டு இவர்களுடைய வேலையை பார்ப்பதால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான நேரம் குறைந்து விடுகிறது. இதனால் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசுவதில்லை.

    இப்படி பெற்றோரிடம் தனது அன்றாட செயல்களை பகிர்ந்துகொள்ளாத குழந்தைகள் தங்களையும் அறியாமல் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்கின்றன ஆய்வுகள். எனவே பெற்றோர் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது மிகவும் அவசியம்.

    ஸ்க்ரீன் டைமினால் ஏற்படும் தாக்கங்கள்!

    ஒரு ஆரோக்கியமான குழந்தை இரண்டு முதல் மூன்று வயதிற்குள் நன்றாக பேசத் தொடங்கும். அந்த வயதில்தான் பெற்றோரிடம் அதிக கேள்விகளை கேட்கும். அந்த சமயத்தில் நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளின் கையில் செல்போனை கொடுத்துவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு கேள்வித்திறனும் பேச்சுத்திறன் குறைபாடும் ஏற்படுகிறது. குழந்தைகள் அதிக நேரம் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுடன் நேரம் செலவிடும்போது மூளையில் பேச்சுத்திறனுக்கான இடம் சுருங்கிப்போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    அதேபோல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளுக்கு கவனக் குறைவு, மோசமான நடத்தை, விமர்சன சிந்தனை, தவறான தகவல்களை மனதிற்குள் ஏற்றுதல், தூக்க பாதிப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பதை பல ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

    குறிப்பாக, டீன் ஏஜ் பருவத்தினர்கள் அதிகமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். ஏதேனும் ஒருவர் ஒரு தவறான கருத்தை பதிவிட்டாலே மனம் சோர்ந்து போவதுடன் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

    மனநல பிரச்சனைகள் போக, கண்பார்வை, செவித்திறன் மற்றும் கற்றல் திறன் போன்றவற்றில் கடுமையாக பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஆளானாலும் நிறைய பெற்றோருக்கு அதுகுறித்து ஆரம்பத்திலேயே தெரிவதில்லை. அவர்களுக்கு தெரியவரும்போது மனநல ஆலோசனை பெறவேண்டிய கட்டாயத்திற்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர்.

    ரீல்ஸ் தாக்கம் - பெற்றோர்களே வற்புறுத்தும் நிலை:

    சில நேரங்களில் குழந்தைகளே வெளியே சென்று விளையாடவேண்டும் என நினைத்தாலும் சில பெற்றோர்கள் ரீல்ஸ் செய்து போஸ்ட் போடுமாறு குழந்தைகளை கட்டாயப்படுத்துகின்றனர். அதற்கு ஒரே காரணம், சமூக ஊடகங்கள் வாயிலாக கிடைக்கும் வருமானம்தான்.

    உனக்கு எத்தனை பாலோவர்கள் இருக்கிறார்கள்? என்று கேட்பதே இப்போது ஒரு ஃபேஷனாகிவிட்டது. பாலோவர்கள் குறைவாக இருந்தால் தனக்கு திறமை இல்லை என தங்களை தாங்களே குறைத்து மதிப்பிடும் நிலைக்கு சில பெற்றோர்களும் நண்பர்களுமே குழந்தைகளை தள்ளுகின்றனர். சமீபகாலமாக இதுகுறித்த ரீல்ஸ்களும், மீம்ஸ்களும் டிரெண்டாகி வருவதை நம்மால் பார்க்கமுடிகிறது. குறிப்பாக, பிற குழந்தைகளுடன் ஓப்பிடும்போது அது தாழ்வு மனப்பான்மையையும் இயலாமையையும் வளர்த்துவிடும்.

    பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:

    சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் குழந்தைகளை எப்படி மீட்பது? என்பது குறித்து பல பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். அவர்களுக்காக சில டிப்ஸ்:

    குழந்தைகளுக்கு தானாக கெட்ட பழக்கங்கள் உருவாகாது. பெற்றோர்களை பார்த்து வளரும் பிள்ளைகளின் நடத்தையில் அவர்களுடைய பேச்சு, செயல்பாடுகள் போன்றவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தெரிந்தோ, தெரியாமலோ குழந்தைகள்முன்பு தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதோ அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதோ, பிறரை பற்றி தாழ்வாகவோ தரக்குறைவாகவோ பேசுவது கூடாது.

    இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். நிறைய செயலிகளில் பெற்றோர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் பயன்படுத்தும் வண்ணம் 'சைல்டு - லாக்' வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் குழந்தைகள் என்ன போஸ்ட் செய்கிறார்கள்? எதை பார்க்கிறார்கள்? யாருடன் பேசுகிறார்கள்? எத்தனை மணிநேரம் ஒரு செயலியை பயன்படுத்துகிறார்கள்? என்பது போன்ற சமூக ஊடகங்களின் கட்டுப்பாடுகள் அனைத்தும் பெற்றோரிடம் இருக்கவேண்டும்.

    தினமும் பெற்றோர் குழந்தைகளுக்கென்று நேரம் ஒதுக்கி அவர்களிடம் பேசவேண்டும். அவர்களிடம் சமூக ஊடகங்களில் என்ன பார்க்கிறார்கள்? என்பதை கேட்டு தெரிந்துகொண்டு அதிலிருக்கும் நல்லது கெட்டதை எடுத்துக்கூற வேண்டும். சமூக ஊடகங்களில் தெரிந்த தெரியாத பலர் இருப்பதால் யாருடனும் தன்னை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்பதை புரிய வைக்கவேண்டும்.

    சமூக ஊடகங்களை தொடர்ந்து பார்க்கும் பிள்ளைகளிடையே நடத்தையில் தவறான மாற்றங்கள் தெரிகிறதா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, தூங்கவேண்டிய நேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் அதை தடுத்து குழந்தைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டியது பெற்றோரின் கடமை.

    மூளை வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்பாட்டுக்கு தூக்கம் மிகவும் அவசியம். தினசரி குழந்தைகள் 8 - 9 மணிநேரம் தூங்குவதை உறுதிசெய்யவேண்டும்.

    அதேபோல் தினசரி வேலைகளை சரியாக செய்கிறார்களா? மனிதர்களுடைய தொடர்பை தவிர்த்து சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்களா? உடலுழைப்பின்றி எப்போதும் செல்போனும் கையுமாக இருக்கிறார்களா? என்பதையும் பெற்றோர் கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம்.

    -தாரா

    ×