என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- குளம் விஜயா தீர்த்தம், நாரிகுளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
- காசியில் வழிபட்ட பலனை இந்த தலத்தில் அருளியதாக வரலாறு உள்ளது.
உமையவள் அருளாட்சி நடத்தும் தலமே 'உமையாள்புரம்.' கும்பகோணத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உமையாள்புரம் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெருமைகள் அனேகம். பிரம்மாண்ட புராணத்தில் உமாபுர மகாத்மியம் என்கிற தலைப்பில் இவ்வாலயச் சிறப்புகள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கு கோவில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ குங்கும சுந்தரி சமேத ஸ்ரீகாசி விசுவநாதரின் மகிமையையும், காசியை விடச் சிறந்த இவ்வூர் மயானச் சிறப்பும் மிக அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயம் இங்கு உருவானதன் பின்னணியில் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. விஜயா என்ற சுந்தர்வப் பெண் பார்வதிக்கு ஒரு கோவில் எழுப்ப எண்ணி கடும் தவம் புரிந்தாள். கோவில் அமைக்க தகுதியான இடத்தை தேடி அலைந்தாள். இதற்காக தேவியை வழிபட்டபோது, அம்பாளே இத்தலத்தைக் காட்டிய சிறப்பான தலம் இது.
சுந்தர்வப் பெண்ணின் ஆணையின் பேரில் விசுவகர்மாவால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் தென்புறம், அவள் கடும் தவம் புரிந்த குளம் உள்ளது. அந்த குளம் விஜயா தீர்த்தம், நாரிகுளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இங்கு அருள் புரியும் அம்மன் பெண்களுக்கு தீர்க்க சவுமாங்கல்யம் அளிக்கும் 'குங்கும சுந்தரி' என்ற அழகிய திருநாமத்துடன் காட்சி அளிக்கிறாள்.
கமலா என்ற பெண் தன் கணவனின் தீர்க்க முடியாத நோயைத் தீர்க்க குங்குமத் தால் அர்ச்சனை செய்து தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொண்டதால் இவ்வம்மனுக்கு 'குங்கும சுந்தரி' என்ற பெயர் வந்ததாக புராணத்தில் அம்பாளின் வாக்காகவே கூறப்படுகிறது. பிரணவப் பொருளை அறியாத பிரம்மனை சிறை வைத்த குமரக் கடவுளிடம் அப்பிரணவ மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டினார் சிவபிரான். முருகப் பெருமான் 'தத்துவ உபதேசத்தை' முறைப்படி பெற வேண்டும் எனக் கூற, ஈசனும் தன் சக்தி சேனைகளுடன் திருவையாறு வந்து நந்தி தேவரை அனுப்பி "எப்பொழுது உபதேசம் பெற வரலாம்?" என்று கேட்டார். அதற்கு முருகப்பெருமான், "எல்லா சேனைகளையும் விட்டு தனியாக, அடக்கத்துடன் வருமாறு" கூற, அதன்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் விட்டு விட்டு, தான் மட்டும் சுவாமிமலை சென்றார் இறைவன். அவ்வாறு உமையவளை விட்டுச் சென்ற இடமே உமையாள்புரம் ஆகும்.

கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்தில் தல விநாயகரை தரிசித்து, நந்தியை வணங்கி மகா, அர்த்த மண்டபங்களை கடந்து சென்றால் கருவறை அடையலாம். அங்கு ஸ்ரீ காசி விசுவநாதர் அருள் காட்சி அளிக்கின்றார்.
காசிக்குச் செல்ல முடியாத ஒருவருக்கு கனவில் இப்பெருமான் தோன்றி தரிசனம் அளித்தார். எனவே காசியில் வழிபட்ட பலனை இந்த தலத்தில் அருளியதாக வரலாறு உள்ளது.
நாமும் அப்பலனை வேண்டி இறைவனை மனமுருக வேண்டலாம். காசி விசுவ நாதரை வழிபட்ட பிறகு பிரகாரம் வலம் வரும் போது தட்சிணா மூர்த்தி. வள்ளி, தேவயானை சமேத முருகப் பெருமானை வணங்கலாம்.
வடமேற்கில் தனி சந்நிதியில் குங்கும சுந்தரி அருள் பாலிக்கிறாள். அழகும். கருணையும் கொண்ட இரு நயனங்களுடன் அருள் தரும் அதரங்களில் குறுநகையுடன் நம்மைப் பார்த்து 'எதுவும் கேள் தருகிறேன்' என்று சொல்வது போல் காட்சி தரும் தேவியை காணக்கண் இரண்டு போதாது. நாம் வேண்டியதைத் தருவதிலும், நினைத்ததை நிறைவேற்றுவதிலும் இவளுக்கு நிகர் இவளே! இத்தேவிக்கு குங்கும் அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். இந்த ஆலயத்தில் ஸ்ரீசண்டி கேசுவரர், துர்க்கை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோவிலின் சாந்நித்தியத்தை ஒவ்வொரு சன்னதியிலும் உணர முடிகிறது. இவ்வூர் மயானத்தில் வெட்டியான்களே கிடையாது. எரிக்கப்பட்ட உடல்கள் கலையாமலும், மற்ற பிராணிகளால் சேதப்படுத்தப்படாமலும் இருக்க இங்கு கோவில் கொண்டுள்ள 'காவற்காரப் பிள்ளையாரே' காரணம் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை.
இங்கு வைகாசி விசாகத்தன்று நடக்கும் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பானது. ஆடி மாதம் முழுவதும் இந்த ஆலயத்தில் சவுந்தர்யலஹரி பாராயணம் செய்யப்படுகிறது. நவராத்திரி 10 நாட்களும் தேவி, விதவிதமான அலங்காரங்களில் ஜெகத் ஜோதியாகக் காட்சி தருவாள். மேலும் கந்தசஷ்டி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, மகர சங்கராந்தி நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மாவிளக்கு ஏற்றினால் மழலை வரம்...
கும்பகோணம் அருகே குடவாசல் உள்ளது. இங்கிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் கீரணங் குடி ஸ்ரீபுற்று மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில், நரசிங்கம்பேட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி, கீரணங்குடிக்குத் திருமணமாகி வந்தாளாம். அவளைப் பார்த்ததும் ஊர் மக்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு, 'அம்மனாட்டம் எவ்ளோ அழகா இருக்கா; கண்ல ஒளி மின்னுது பாருங்க...' என்று சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போனார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டுச் சென்றால், அன்றைய நாள் மிக இனிமையான நாளாகக் கழியும் என்றும், 'போன வேலை நல்லபடியா முடிஞ்சுச்சு' என்றும் ஒவ்வொருவரும் பாராட்டிப் பேசினார்கள்.
ஒருநாள்... அந்தப் பெண்ணுக்கு திடீரென அம்மை நோய் வந்தது. வீட்டைவிட்டு எங்கும் செல்லாமல், உள்ளேயே படுத்துக் கிடந்தாள். அவளைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் அந்தக் கிராமமே தவித்தது. இந்த நிலையில் ஒருநாள்... அவள் இறந்துவிட, வீட்டு வாசல் முன்பு திரண்ட ஊர் மக்கள் கதறினர். 'இவ இருந்த வரை ஊர்ல எல்லாமே நல்ல விதமாவே நடந்துச்சு. இனி என்ன ஆகுமோ!' என்று வருந்தினர்.
சில காலம் கழித்து... கீரணங் குடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விளைநிலத்தில் உழுது கொண்டிருந்த போது, பூமியில் ஏதோ ஒன்று இடறித் தள்ளவே... அங்கிருந்தவர்கள் ஓடி வந்தார்கள். அந்தப் பகுதியிலிருந்து மண்ணை எடுத்து அப்புறப்படுத்த... அங்கே அம்மனின் விக்கிரகத் திருமேனி இருந்தது. 'இந்த அம்பாளின் முகத்தைப் பார்த்தியா..! சில வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஊர்ல குடி வந்த பொண்ணு மாதிரியே முகம், சிரிப்பு, கண்கள் எல்லாம் இருக்கு பாரு!' என்று வியப்போடு சொல்லிச் சொல்லி மகிழ்ந்த கிராம மக்கள், அந்த இடத்திலேயே அம்மனைப் பிரதிஷ்டை செய்து, கோவிலும் எழுப்பினர். புற்று போல் இருந்த மேட்டில் இருந்து விக்கிரகம் கிடைத்ததால், ஸ்ரீபுற்று மாரியம்மன் என்றே திருநாமம் சூட்டி வழிபட ஆரம்பித்தார்கள். இங்கே, பரிவார தெய்வங்களான ஸ்ரீகருப்பன், ஸ்ரீகழுவடி யான், ஸ்ரீகாத்தவராயன், ஸ்ரீபெரியாச்சி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
பங்குனித் திருவிழா இங்கு விசேஷம்! அப்போது, அம்மன் திருவீதி உலாவாக வருவாள். பிறகு, அப்படியே நரசிங்கம் பேட்டைக்குச் சென்று திரும்புவாள். ஆவணி மாதத்தில், காத்தவராய சுவாமியின் சரித விழா நடைபெறும். ஆடி மாதம் வந்துவிட்டால், தினந்தோறும் திருவிழாதான்!
திருமணம் ஆகாத பெண்கள், பச்சரிசி மற்றும் சர்க்கரை கலந்து படையலிட்டு, மஞ்சள் சரடை (கயிறு) கோவிலில் உள்ள வேப்ப மரத்தில் கட்டி விட்டு ஸ்ரீபுற்று மாரியம்மனைப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண வரன் கைகூடும்; ஆடி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து, வயிற்றில் மாவிளக்கு ஏற்றி வழிபட, விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்கின்றனர் பெண்கள்!
விழாக்களின்போது, ஊர்மக்கள் மொத்த மாக விரதம் மேற்கொள்வது இந்தக் கோவிலின் சிறப்பு. அந்தக் காலகட்டங்களில், கல்யாணம்- காது குத்து போன்ற வீட்டு விசேஷங்களைச் செய்யமாட்டார்கள். பாயில் படுக்கமாட்டார்கள். விழாக் காலங்களில், வெளியூர்க்காரர்கள் இங்கு தங்க அனுமதி இல்லை. உள்ளூர்க்காரர்களும் வெளியூரில் தங்குவதில்லை.
- 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் வோஸ்டாக் 6 என்ற விண்கலத்தில் விண்ணில் பறந்தார் வாலண்டினா. 48 முறை அவர் பூமியைச் சுற்றினார்.
- விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பி வந்த முதல் விண்வெளி வீராங்கனைக்கு யாரும் எதிர்பார்க்காத அளவு உலகம் வரவேற்பு கொடுத்தது.
ஒரு பெண்ணினால் எதையும் சாதிக்க முடியும். அதிலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண பெண்மணி முன்னேறி உயர்ந்து விண்ணில் பறக்க முடியும் என்பதை நிரூபித்தவர் வாலண்டினா தெரஷ்கோவா என்ற ரஷ்ய பெண்மணி!
உலகப் பெண்களின் ஆதர்ச நாயகியாக கொண்டாடப்படும் இவருக்கு இப்போது வயது 87. இன்னும் அனைவரையும் உற்சாகப்படுத்திக்கொண்டு வாழும் இவரது வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை!
பிறப்பும் இளமையும்: ரஷியாவின் பிரசித்தி பெற்ற வோல்கா நதிக்கரையில் அமைந்துள்ள போல்ஷோவ் மஸ்லென்னிகோவோ என்ற கிராமத்தில் 6-3-1937 அன்று எளிய உழைக்கும் வர்க்க குடும்பத்தில பிறந்தார் வாலண்டினா தெரஷ்கோவா.
அவரது தந்தை விளாடிமிர் தெரஷ்கோவ் ஒரு விவசாயி. டிராக்டர் டிரைவராக பணி புரிந்தார். வாலண்டினாவிற்கு இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் பின்னிஷ் விண்டர் போரில் சோவியத் படையின் சார்பாகப் போரிட்டு இறந்தார். தாயார் சின்னக் குழந்தையை தூக்கிக்கொண்டு யரோஸ்லவ் என்ற ஊருக்கு இடம் பெயர்ந்து ஒரு பஞ்சாலையில் வேலை பார்க்க ஆரம்பித்தார்.
எட்டு வயதில் பள்ளியில் சேர்ந்த வாலண்டினா 16 வயதில் படிப்பை முடித்தார். முதலில் ஒரு டயர் தொழிற்சாலையிலும் பின்னர் பஞ்சாலை ஒன்றிலும் வேலை பார்க்க ஆரம்பித்தார். தபால் மூலம் அவரது படிப்பு தொடர்ந்தது.
ஸ்கை டைவிங்: இயல்பாகவே அவருக்கு ஸ்கை-டைவிங்கில் ஆர்வம் ஏற்பட்டது. 22-ம் வயதில் 21-5-1959-ல் தனது முதல் பயிற்சியாக வானத்தில் இருந்து குதித்தார். பாராசூட்டில் இருந்து குதிப்பது அவருக்கு எளிதில் கை வந்த கலையாக ஆனது.அத்தோடு கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு உறுப்பினராகவும் அவர் 1962-ல் சேர்ந்தார்.
விண்வெளியில் பறந்த யூரி ககாரின்: 1961-ல் யூரி ககாரின் விண்வெளியில் பறந்து உலகையே பரபரப்புக்குள்ளாக்கினார். இந்தப் பரபரப்பை மேலும் அதிகமாக்க ரஷியா விரும்பியது. ஒரு பெண்மணியை விண்வெளியில் பறக்க வைத்தால் என்ன என்ற யோசனை ரஷிய உயர்மட்ட அதிகாரிகளிடம் தோன்றவே அதை நிறைவேற்ற தகுந்த ஒரு பெண்மணியை அவர்கள் தேடலாயினர்.
பெண்மணிக்கு வாய்ப்பு: 80000 பெண்மணிகள் விண்ணில் பறக்க விரும்பி விண்ணப்பம் செய்தனர். 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும், 70 கிலோ எடைக்குள்ளாக இருக்க வேண்டும், உயரம் 170 சென்டிமீட்டரைத் தாண்டக்கூடாது, விண்ணில் பறக்கும் திறன் இருக்க வேண்டும் - ஆகிய இவை அடிப்படைத் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன.
ஏராளமான கடுமையான பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்குத் தரப்பட்டது. அதில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் இறுதிச் சுற்றுக்குத் தயாராயினர்.
வாலண்டினா 126 முறை பாராசூட்டிலிருந்து குதித்து நல்ல திறமையைப் பெற்றிருந்ததால் அவர் இந்த ஐவரில் ஒருவராக இருந்தார். சோவியத் விமானப்படையில் சேர்க்கப்பட்டு பயிற்சியும் அவருக்குத் தரப்பட்டது.
எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார்: இவருடன் போட்டியிட்ட ஐவரில் சோலோவ்யெவா என்பவர் 700 முறை பாராசூட்டிலிருந்து குதித்திருக்கிறார். பாராசூட் ஜம்பிங்கில் மாஸ்டர் என்ற பெயர் எடுத்திருக்கிறார். ஆனால் இவரையும் மீறி வாலண்டினா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்?
அவரது குடும்பப் பின்னணி அவருக்கு உதவி செய்தது. சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்மணியாக அவர் இருந்ததால் ரஷிய அதிபரான குருஷேவ் அவரைத் தேர்ந்தெடுத்தார். மக்களின் பெண்மணியாக அவர் திகழ்வார் என்று அவர் நம்பினார். ஆகவே அவரே விண்வெளிப் பெண்மணியாக அறிவிக்கப்பட்டார்.
அத்துடன் மட்டுமின்றி மற்ற பெண்மணிகள் விண்ணிலிருந்து வந்த பின்னர் அவர்கள் விண்வெளித் துறையில் மட்டுமே ஈடுபடுத்த வல்லவராக இருப்பார்கள். ஆனால் வாலண்டினாவோ நல்ல மன உறுதி வாய்ந்தவர், ஒவ்வொருவரிடமும் பழகும் போதும் மிக நல்ல பெயரை எடுக்கிறார், நாட்டின் பெருமையை உயர்த்த வல்ல பேச்சுத் திறனுடன் சமுதாயத்தில் நன்கு பழகக் கூடியவர். ஆகவே சமூகத்தில் சிறப்புடன் பணியாற்ற முடியும். இப்படிப்பட்ட காரணங்களை அவரது கமாண்டர் நிகோலய் கமான் தனது குறிப்பேட்டில் பதிவு செய்தார். ஆகவே இவையும் அவருக்குச் சாதகமாக அமைந்தது.
விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி: 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் வோஸ்டாக் 6 என்ற விண்கலத்தில் விண்ணில் பறந்தார் வாலண்டினா. 48 முறை அவர் பூமியைச் சுற்றினார். மூன்று நாட்கள் அவர் விண்வெளியில் இருந்தார். விண்வெளியில் தனியாகப் பறந்த பெண்மணி என்ற பெயரையும் பெருமையையும் அவர் பெற்றார். 26-ம் வயதிலேயே விண்வெளி வீராங்கனை ஆனதால் விண்ணில் பறந்ததிலேயே இளமையானவர் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது.
அவருக்குப் பின்னால் 19 வருடங்கள் கழிந்த பின்னரே, 1982-ல் தான் ஸ்வெட்லான ஸவிட்ஸ்கயா என்ற ரஷிய பெண்மணி அடுத்ததாக விண்ணில் பறந்தார்.
பல அபாயங்கள்: விண்ணில் இருந்தபோது அவர் நெடுநேரம் மவுனமாகவே இருந்தார். நிர்ணயிக்கப்பட்டிருந்த அனைத்து சோதனைகளையும் அவரால் முடிக்க முடியவில்லை. களைப்பினால் ஒரு சமயம் அவர் விண்கலத்தில் தூங்கி விட்டார். பூமியிலிருந்து வரும் தகவல்களுக்குச் சில சமயம் அவர் பதில் சொல்லவே இல்லை. ஒரு வழியாக அவரைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினர். ஆனால் ஏராளமான அபாயங்களுக்கு ஈடு கொடுத்து அவர் விண்ணில் இருந்து மீண்டார்.
சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் தான், ஒரு பேட்டியில் நடந்தது என்ன என்பதை அவர் குறிப்பிட்டார்.
வோஸ்டாக் - 6 என்ற அவரது விண்கலம் தவறான கோ- ஆர்டினேட்டுகளை கணினியில் கொண்டிருந்தது. அதைக் கண்டுபிடித்து, சரி செய்து பூமியில் இறங்கும் தருணம் வந்தபோது விண்கலம் நேர் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தது. இதைப் பார்த்து திடுக்கிட்ட வாலண்டினா உடனடியாக கணினி இயக்கத்தை நிறுத்தி விட்டு நேரடியாக தானாகவே விண்கல இயக்கத்தை சரியான ஓடு பாதையில் ஓடும்படி சரி செய்தார்.
பூமிக்கு வந்து இறங்கியதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் இருந்து சிறிது விலகினார். அவரது மீட்புக் குழு அவரிடம் வந்து சேரும் முன்னர், விண்ணில் சோதனைக்காக எடுத்துச் சென்றிருந்த உருளைக்கிழங்கினால் ஆன பசைபோன்ற உணவின் ஒரு பகுதியை அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு விநியோகித்து மகிழ்ந்தார்.
இதைக் கேள்விப்பட்ட உயர் அதிகாரியான கோரொலெவ், "ஐயோ! போதும், போதும் இன்னொரு பெண்மணியை எனது ஆயுள் காலத்தில் விண்வெளிக்கு அனுப்பமாட்டேன்" என்று ஜோக் அடித்தார்.
விண்வெளிப் பயணத்திற்குப் பின்!
விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பி வந்த முதல் விண்வெளி வீராங்கனைக்கு யாரும் எதிர்பார்க்காத அளவு உலகம் வரவேற்பு கொடுத்தது.
முக்கியமாக பெண்மணிகள் ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி ஆனந்தமாகக் கொண்டாடினர்.

ச.நாகராஜன்
ஏராளமான இசைத் தட்டுகள் வெளியாகின. உலகெங்கிலும் இருந்து அவருக்கு பாராட்டுச் செய்திகள் மலையெனக் குவிந்தன.
டெல்லியில், "பெண்களின் அடிமைத் தளையை உடைக்கப் பிறந்த பெண்மணி" என்று அவர் கொண்டாடப்பட்டார்.
குடும்பம்: வாலண்டினா 1963-ம் வருடம் நவம்பர் மாதம் 3-ம் தேதி ஆண்ட்ரியன் நிலோலயெவ் என்பவரை மணந்தார். திருமணத்திற்கு ரஷிய அதிபர் நிகிதா குருஷேவ் தலைமை தாங்கினார். 1964, ஜூன் எட்டாம் தேதி எலினா என்ற பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். ஆண்ட்ரியனும் விண்வெளி வீரர் என்பதால் விண்வெளி தம்பதிகளுக்குப் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையை இந்தக் குழந்தை பெற்றது.
1977-ல் திருமண உறவு ஒரு முடிவுக்கு வர 1982-ல் ஆண்ட்ரியனை விவாகரத்து செய்தார் வாலண்டினா. தனது கணவரைப் பற்றி விவாகரத்து ஆனதற்குப் பின்னர் ஒரே ஒரு முறை தான் அவர் விமர்சனம் செய்து கூறினார் இப்படி : "வேலையில் அவர் தங்கம்; வீட்டில் அவர் சர்வாதிகாரி!"
பின்னர் யூலி ஷபோஷ்னிகோவ் என்பவரை மணந்தார். 1999-ல் யூலி மறைந்தார்.
அரசியல் பிரவேசம்: 1966-ல் அவர் அரசியல்வாதியாக ஆனார். சோவியத் பெண்கள் கமிட்டிக்குத் தலைவராக ஆனார். ரஷிய சுப்ரீம் கவுன்சிலுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது உடை அணியும் பாணியும், அவர் அணிந்து கொள்ளும் உடைகளும் அனைத்துப் பெண்மணிகளையும் கவர்ந்தன.
உலகெங்கும் அவர் செல்ல வேண்டி இருந்ததால் ஆங்காங்குள்ள பெண்மணிகள் ஆடைகள் பற்றி அவரிடம் டிப்ஸ் கேட்டு வாங்கி மகிழ்ந்தனர்.'
ரஷிய அதிபர் புதினின் பாராட்டு: வாலண்டினாவும் ரஷிய அதிபர் புதினும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பாராட்டுபவர்கள். வாலண்டினா மீது பெரும் மதிப்பு கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2017-ல் வாலண்டினாவின் பிறந்தநாள் அன்று, "எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்ல, வாலண்டினா, "நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். நன்றி" என்று பதில் கூறினார்.
வாலண்டினாவின் செய்தி:
வாலண்டினா தனது விண்வெளி அனுபவத்தின் மூலமாக உலக மக்களுக்கு ஏராளமான செய்திகளைத் தந்துள்ளார்.
"விண்வெளிக்குச் சென்று ஒருவர் சிறிது நேரம் கழித்தால் கூடப் போதும் அவர் விண்வெளியை ஆயுள் முழுவதும் நேசிப்பார். வானம் பற்றிய எனது இளமைக் கால கனவை நான் சாதித்து விட்டேன்"
"விண்வெளிக்கு நீங்கள் சென்று விட்டீர்கள் என்றால் பூமி எவ்வளவு சிறியது, சுலபமாக நொறுங்கக் கூடியது என்பதை அறிவீர்கள்"
"பெண்கள் ரஷியாவில் ரெயில் தண்டவாளம் அமைப்பதில் பணி செய்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் விண்வெளிக்குச் செல்லக் கூடாது?" என்று கேட்டார் அவர்.
பெண்களுக்கு அவர் கூறும் முக்கிய செய்தி இது:
ஒரு பெண்ணானவள் என்றுமே பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். பெண்மையைப் போற்றும் எதுவும் அவளுக்கு அந்நியமாக இருக்கக்கூடாது. அதே சமயம் விஞ்ஞானத்திலோ, பண்பாட்டுத்துறையிலோ எதில் அவள் ஈடுபட்டிருந்தாலும் சரி எவ்வளவு கடுமையாக, தீவிரமாக அதில் அவள் உழைத்தாலும் சரி, அது அவளது புராதனமான பழம்பெரும் ஆச்சரியகரமான உயரிய குறிக்கோளான "அன்பு பாராட்டு; அன்பைக் கொள் - என்ற அவளது தாய்மைக்காக ஏங்கும் ஆனந்தத்திற்கு முரணாக அமைந்து விடக் கூடாது.
பெண்மையைப் போற்றி உலகப் பெண்மணிகளுக்கு 'வானளவு' நம்பிக்கையைத் தந்த வாலண்டினா 'விண்ணளந்த வீராங்கனை' என்ற சிறப்புப் பெயருக்கு உரியவர் தானே!
தொடர்புக்கு:-
snagarajans@yahoo.com
- குடகு மாவட்டத்தின் எல்லையை தொடும்போது சில்லென்ற காற்று நம்மை வருடும்.
- காவிரி ஆற்றின் நீர்மட்டத்தை வைத்து ‘ஒயிட் வாட்டர் ரேப்டிங்’ என்ற சாகச படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் குடகு மாவட்டத்தை சுற்றிலும் அரணாகவும் அழகாகவும் கண்களை கவரும் விதமாக காட்சியளிக்கிறது குடகு மலை. கத்திரி வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாதவர்கள் தப்பிக்கவும்.. விடுமுறையில் குடும்பத்துடன் நேரத்தை குதூகலத்துடன் செலவழிக்க விரும்புபவர்களுக்கும் இயற்கை என்னும் இளைய கன்னியை ரசிப்பவர்களுக்கும் மலையேற்றம் (டிரெக்கிங்) போன்ற சாகச நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கும் கர்நாடகா மற்றும் கேரளத்தின் இடையே உள்ள இந்த கோடை வாழ் தலம் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.. வாருங்கள்...! இந்த அருமையான சுற்றுலா தலத்திற்கு பயணிப்போம்.
கூர்க் என்று அழைக்கப்படும் குடகு மாவட்டத்தின் தலைநகர், மடிக்கேரி. ஆங்கிலத்தில் மெர்க்காரா என அழைக்கப்படும் இந்தப் பகுதி ஆங்கிலேயருக்கு பிடித்த வகையில் இயற்கையிலேயே குளுகுளுவென இருந்ததால் குடகு அரசர்களுக்கு பின்பு அவர்கள் கைவசம் இருந்திருக்கிறது.
குடகு மாவட்டத்தின் எல்லையை தொடும்போது சில்லென்ற காற்று நம்மை வருடும். வழியெங்கும் காபி எஸ்டேட்கள்... இடையில் ஆரஞ்சு.. மிளகு கொடிகள்... அடி கனத்த மரங்கள்... போன்றவையும், கண்களை கவரும்.

மைசூரு நகரத்தில் இருந்து 3 மணி நேர பயணத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைலக்குப்பா என்ற இடம் நமது நாட்டிற்குள் குட்டி திபெத் நாட்டைப் போல இயங்குகிறது. 1960-ம் ஆண்டு திபெத்திய அகதிகளுக்கு கர்நாடக மாநிலம் அளித்த பரந்த நிலப்பரப்பில் பத்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்து திபெத் நாட்டினை போன்றே.. கலாச்சாரம். உணவு பழக்க வழக்கங்கள்.. ஆடைகள்.. புத்த துறவிகள் தோற்றம் கொண்டவர்களாய் வலம் வருகின்றனர். இங்குள்ள பொற்கோவிலில் பொன்னால் ஆனதுப் போல் புத்தர் சிலைகள் அத்துனை அழகு. சுவர்களில் உள்ள வண்ண வண்ண ஓவியங்களும் திபெத்தியக் கலை நுணுக்கத்தை உணர்த்துகின்றன. இந்த முகாம்களை சுற்றி வருகையில் மெரூன் நிற ஆடைகளை அணிந்து பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் முதல் பல்கலைக்கழகம் படிக்கும் பெரியவர்கள் வரை அவர்கள் நாட்டு பண்பாட்டில் திளைத்தவர்களாக இருப்பதை காண முடிகிறது.
அவர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை விவசாய பூமி ஆக்கியது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஸ்வெட்டர் பின்னுதல் கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்தல் போன்ற தொழில்களின் மூலம் சுறுசுறுப்பாக உழைக்கின்றனர். தற்போது சுமார் 70 ஆயிரம் மக்களுக்கு மேல் வசிப்பதால் நமக்கு திபெத்தில் இருப்பதைப் போன்ற உணர்வே ஏற்படுத்துகின்றது என்பதால் இது ஒரு சுற்றுலா தலமாக அனைவரையும் ஈர்க்கிறது.
அருகிலேயே குஷால் நகர் பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் 'காவிரி நிசர்க தாமா' என்ற சிறிய பூங்கா குழந்தைகள் சுற்றி விளையாடும் வகையில் உள்ளது. குஷால் நகரில் இருந்து சித்தாப்பூர் போகும் வழியில் 'துபாரே' என்ற வனப்பகுதியில் யானைகளின் முகாம் காணப்படுகிறது. இங்கு ஆனைகள் தும்பிக்கையில் நீர்ப் பீய்ச்சியடித்து குளித்து மகிழ்வதை.. சாப்பிடுவதை அருகில் இருந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கிடைப்பதால் அனைவருக்கும் பிடித்தமான இடமாக அமைகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மழைக்காலம். அதன் பின் காவிரி ஆற்றின் நீர்மட்டத்தை வைத்து 'ஒயிட் வாட்டர் ரேப்டிங்' என்ற சாகச படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது. பயம் கலந்த மகிழ்ச்சியுடன் மக்கள் கூக்குரலிட்டவாறு படகு சவாரியை ரசிக்கின்றனர்.
மடிக்கேரி:
குடகு மாவட்டத்தில் தலைநகராக உள்ள இந்த நகரத்தின் தொடக்கத்திலேயே ராஜா சீட் என்ற வண்ண மலர்களால் ஆன பூங்கா நம்மை இதமான குளிருடன் வரவேற்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் பெஞ்சுகளில் அமர்ந்து புகைப்படங்கள் எடுப்பதும் இயற்கையை ரசிப்பதுமாக சுற்றுலா பயணிகள் வலம் வருகின்றனர். காலை நேரத்தில் இங்கு நம் எதிரே மிதந்து செல்வது மேகக் கூட்டமா... பனிமூட்டமா என்று அறியாமல் நமக்கு கீழே மூடியிருக்கும் வெண் பஞ்சு பொதிகள் விமான பயணத்தை நினைவூட்டுவதாக இருக்கக்கூடிய ரம்யமான சூழல் மிகவும் அழகு.

தொடர்ந்து 1 கி.மீ. அருகிலேயே லிங்க ராஜேந்திர உடையார் என்ற குடகு அரசர் கட்டியதாக கூறப்படுகின்ற கோட்டை உள்ளது. தற்போது அதனை பயணிகளை கவரும் வகையில் மீட்டுருவாக்கம் செய்து வருகின்றனர். நகரத்தின் நடுவிலேயே உள்ள ஓம்காரேஸ்வரர் கோவில் நமக்கு பஞ்சாப்பில் உள்ள பொற்கோவிலை நினைவூட்டக்கூடியதாக இருக்கிறது. இந்தக் கோயில் காலை 6 மணியில் இருந்து 12 மணி வரையும் மாலை 5 மணியில் இருந்து 8 மணி வரையும் திறந்து இருக்கக்கூடியது. அமைதியான சூழல் நமக்கு நிம்மதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
தலை காவிரி:
மடிக்கேரியில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் தலைக்காவேரி என்று அழைக்கப்படும் காவிரி உற்பத்தியாகும் சிறிய குண்டம் போன்ற இடமும் அங்கேயே குளமும் காணப்படுகிறது. இங்கு ஐப்பசி மாத தொடக்கத்தில் அக்டோபர் 17, 18-ந் தேதிகளில் காவிரி நீர் பொங்கி வருவதை காணலாம். அந்நாளில் குடகு மாவட்டத்தை சேர்ந்த கொடவா மக்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி அந்த குளத்தில் துலா நீராடல் செய்யும் புண்ணிய தலமாக தலைக்காவேரி விளங்குகிறது. தென்னிந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இந்த குளத்தில் குளித்து அருகே உள்ள கோயிலில் இறைவனை வணங்கி மலையடிவாரத்தில் பாகமண்டலா என்னும் இடத்தில் கன்னிகா.. காவேரி...சுஜோத்தி என்ற மூன்று நதிகள் இணையும் முக்கூடலில் (திரிவேணி சங்கமம்) பயணிகள் நீராடி அருகில் உள்ள பாகனேஸ்வரா.. விஷ்ணு... சுப்ரமணிய சாமியை வழிபடுகிறார்கள்.

மடிக்கேரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள *நாப்போல்* என்ற ஊரில் *நாக்கு நாடு அரண்மனை* உள்ளது கூர்க் அரசர் தனது குடும்பத்துடன் சில காலம் இந்த அரண்மனையில் தங்குவார் என்று அந்த ஊர் மக்கள் பெருமையுடன் சொல்கின்றனர்.
பாடி இக்கு தப்பே என்ற இடத்தில் சிவன் மற்றும் சுப்பிரமணியர் கோவில் உள்ளது இந்த கோவில் கொடவா இன மக்களின் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது போன்ற சுப காரியங்கள் நடத்துகிறார்கள். அருகில் இருக்கும் தாடியண்ட மோலு பெட்டா என்ற இடத்திற்கு மலையேற்றம் செல்கிறார்கள். யூத் ஆஸ்டல் ஆர்கனைஸ் என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்கிறது. இதன் அருகில் தங்குவதற்கு ரூம்ஸ்டே வசதிகள் இருக்கின்றன. இயற்கை சூழலில் தங்குவதற்கு மக்கள் முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் குடகின் கிழக்கு, மேற்கு, தெற்கு போன்ற பகுதிகளில் அனைத்து வசதிகளும் உள்ளன.
கோணிகுப்பல் என்னும் ஊரில் இருந்து பொன்னம்பட்டு தாண்டி டீ ஷெட்டி கேரே என்ற இடத்தில் டாட்டாவின் டீ எஸ்டேட் ஊட்டியில் இருப்பது போல் பரந்து விரிந்த அளவில் ஒழுங்காக பயிரிடப்படுவது கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சி. அதன் அருகில் மிருதஞ்செய கோயில் என்ற கோவில் ஆரோக்கியம் வழங்கக்கூடிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
தென் குடகு மாவட்டத்தில் உள்ள இருப்பு நீர்வீழ்ச்சி பார்க்க வேண்டிய ஒரு இடமாகும். ராமன் சீதையை மீட்டுக் கொண்டு திரும்பி வரும் வழியில் சீதையின் தாகம் தீர்க்க அம்பை விட்டு எய்த இடம் ராம தீர்த்தம் லட்சுமண தீர்த்தம் என்று ராமாயண காப்பியத்தை சார்ந்து முக்கிய புராண வழிப்பாட்டுக்குரிய தலமாக இருக்கிறது.
சாந்தஹல்லி வனப்பகுதியின் அருகே உள்ள புஷ்பகிரி கோயில் தாரகாசுரனை அழிக்க கார்த்திகேயனை பெற்றெடுக்க சிவ பார்வதி திருமணம் செய்த தலமாக கருதப்படுகிறது. இதன் அருகில் உள்ள மல்ஹள்ளி நீர்வீழ்ச்சியும் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல வெண்மையாக தெறிக்கும் நீர்த்திவலைகளுடன் குளிர்ச்சியளிக்கிறது.

இர.தேன்மொழி
ராஜீவ் காந்தி தேசிய பூங்கா ஒரு பகுதி மைசூருவையும் இன்னொரு பகுதி குடகையும் வளைத்திருக்கிறது. இந்த பூங்காவில் பலவகை மான்கள், காட்டெருமை, யானைகள், புலிகள் காட்டுப்பன்றி, சிறுத்தை, காட்டு பூனை போன்ற வனவிலங்குகளை பாதுகாக்கும் பகுதியாகவும் இருக்கிறது. வனவிலங்குகளை காணும் போது நாமும் குழந்தைகளோடு குழந்தையாக மாறி குதூகலிக்கும் அளவிற்கு சபாரி அமைகிறது.
இங்கு பெண்கள் புடவை அணியும் முறை மாறுபட்டு காணப்படுகிறது. கொடவா மொழி... தமிழ், கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவர்கள் உணவில் அரிசி ரொட்டி, பன்றி இறைச்சி அதிகமாக சுப நிகழ்வுகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. அனைவரும் படித்தவர்களாக நேர்மையுடன் நடந்து கொள்பவர்களாக நடப்பது குடகின் சிறப்பு. தேவையான தங்குமிடம் வாகன வசதிகள் போன்றவை சரியான விலையில் கிடைக்கக்கூடியதாகவும் தமிழகத்திற்கு அருகிலேயே இருப்பதால் நம் மக்கள் விடுமுறை நாட்களில் குடகு மலை முழுவதும் மூன்று நான்கு நாட்களாக தங்கி இருந்து வலம் வரலாம். தற்போது தென்மேற்கு பருவமழையின் முதல் மழை ஆரம்பித்தவுடன் எங்கும் பசுமையாக இருக்கக்கூடிய குடகு மலை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இணைய முகவரி:
thaenmozhi27@gmail.com
- தோஷ தாக்கங்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுக்க பரிகார ஆலயங்கள் இருக்கின்றன.
- சிலரது ஜாதகத்தில் சுக்கிரனை சில குறிப்பிட்ட பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்.
ஒருவருக்கு ஏதாவது பிரச்சனைகள் வரும்போதுதான் முன் ஜென்மவினை மற்றும் தோஷங்கள் பற்றிய நினைப்பே வரும். கடந்த பிறவிகளில் செய்த பாவங்கள்தான் தோஷமாக மாறி இந்த பிறவியில் பல வகைகளில் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் கர்மவினைகளை அனுபவித்தே தீரவேண்டும் என்றும் பெரியவர்கள் சொல்வது உண்டு. ஆனால் ஜாதக ரீதியாக அந்த தோஷ தாக்கங்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுக்க பரிகார ஆலயங்கள் இருக்கின்றன.
எந்த தோஷத்துக்கு எந்த ஆலயத்துக்கு சென்றால் பிரச்சனை தீரும் என்பதை தெரிந்துக் கொண்டு செயல்படுவதுதான் நல்லது. ஏனெனில் தோஷம் என்று வாழ்வில் ஒன்றை மட்டுமே சுட்டிக்காட்டி விட்டு நகர்ந்து விட முடியாது.
ஒருவருக்கு ஒரு தோஷம் ஏற்பட்டு இருப்பதாக கருதினால் அந்த தோஷமானது வேறு சில வகையான தோஷங்களுடனும் நிச்சயமாக தொடர்பு கொண்டு இருக்கும். ஒருவரது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக அமைப்புகளை கொண்டே இதை எளிதாக சொல்லி விட முடியும்.
அந்த வகையில் அமைந்து இருப்பதுதான் தார தோஷம். இந்த தோஷம் மற்ற தோஷங்களுடன் தொடர்பு கொண்டது. குறிப்பாக செவ்வாய் தோஷத்தின் துணை தோஷம் என்று கூட தார தோஷத்தை ஜோதிடர்கள் குறிப்பிட்டு சொல்வது உண்டு. அதாவது செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்தால் தார தோஷமும் சேர்ந்து வரும் என்பார்கள்.
ஆனால் எல்லோருடைய ஜாதக அமைப்பிலும் அப்படி அமைவது இல்லை. செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் தார தோஷம் இல்லாமல் இருப்பது உண்டு. அது போல செவ்வாய் தோஷம் இல்லாமலேயே தார தோஷ பாதிப்புடன் இருப்பவர்களும் ஜாதக ரீதியாக எத்தனையோ பேர் உள்ளனர்.
எனவே ஒருவருக்கு தார தோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஒருவரது ஜாதகத்தின் கிரக அமைப்புகளை துல்லியமாக ஆய்வு செய்யும் போதுதான் சரியாக கண்டுபிடிக்க முடியும். பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் குடும்ப ஸ்தானத்தையும், வாழ்க்கை துணைக்கான ஸ்தானத்தையும் அடிப்படையாக வைத்து தார தோஷத்தை ஜோதிடர்கள் கணிப்பது உண்டு.
குடும்ப ஸ்தானம் என்பது ஜாதகத்தில் 2-ம் இடத்தை குறிக்கும். வாழ்க்கை துணைக்கான ஸ்தானம் என்பது ஜாதகத்தில் 8 மற்றும் 9-ம் இடத்தை குறிக்கும். இந்த இடங்களில் அமைந்திருக்கும் கிரகங்களை பொருத்துதான் தார தோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் 8 மற்றும் 9-ம் இடத்தில் பாவ கிரகங்கள் மிக கடுமையான நிலையில் அமர்ந்திருந்தால் அது தார தோஷத்துக்கு வழி வகுக்கும். சிலரது ஜாதகத்தில் சுக்கிரனை சில குறிப்பிட்ட பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த நிலையையும் தார தோஷம் என்றுதான் சொல்வார்கள். சூரியன் 7 மற்றும் 8-வது இடத்தில் இருந்தால் அதையும் தார தோஷம் என்று குறிப்பிடுவது உண்டு.
சனி தன் பார்வையால் 7 மற்றும் 8-ம் இடத்தை பார்வையிட்டால் அதுவும் தார தோஷத்துக்கு வழிவகுத்து விடும். சிலர் களத்திர தோஷத்தையும், தார தோஷத்தையும் ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டும் வேறுவேறு. தார தோஷம் சிலரது வாழ்வில் புயலை கூட ஏற்படுத்தி விடும்.
பொதுவாக செவ்வாய் தோஷம் அல்லது களத்திர தோஷத்துடன் கூடிய தார தோஷம் இருந்தால் அந்த ஜாதகக்காரர் மிக கவனமாக தனது எதிர்கால வாழ்க்கையை கையாள வேண்டும். திருமணம் விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பது அவசியம். இதை கருத்தில் கொண்டுதான் தார தோஷம் உடையவர்களை சற்று கால தாமதமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துவது உண்டு.
சிலருக்கு நாக தோஷம், செவ்வாய் தோஷம் திருமணத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. பரிகாரம் செய்து விட்டால் கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் தார தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கையில் நிச்சயம் அது சூறாவளியை உருவாக்கி விடும். இதற்கு பயந்துதான் தார தோஷம் உள்ளவர்கள் 30 வயதை கடந்த பிறகு திருமணத்தை பற்றி யோசிப்பது உண்டு.

சிலர் தார தோஷம் இருக்கிறது என்று தெரிந்த பிறகும் துணிந்து திருமணம் செய்வார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே தம்பதியினர் இடையே தேவையில்லாமல் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு. அது விரும்பதகாத முடிவுகளை கொடுத்து விடும். சில ஜோதிடர்கள் தார தோஷம் இருப்பவர்களுக்கு வாழை மரத்துக்கு தாலி கட்டும் பரிகாரத்தை சொல்வார்கள். அதாவது வாழை மரத்தை ஒரு பெண்ணாக நினைத்து தாலி கட்டினால் தார தோஷம் நீங்கி விடும் என்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் இது பலன் அளிப்பது இல்லை. எனவே ஆலய வழிபாடு ஒன்றுதான் தார தோஷத்துக்கு சரியான தீர்வாக அமையும். தார தோஷம் இருக்கிறது என்று தெரிந்து விட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் ஆஞ்ச நேயரை வழிபட்டாலே போதும் தார தோஷம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
செவ்வாய் தோஷத்தால் தார தோஷம் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிந்தால் முருகப் பெருமானை தினமும் வழிபட்டால் போதும். வாய்ப்பு இருப்பவர்கள் அருகில் உள்ள முருகன் ஆலயத்துக்கு சென்று தினமும் வழிபடலாம். செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
இவற்றை செய்ய முடியாவிட்டால் தினமும் காலை-மாலை இரு நேரமும் கந்தசஷ்டி கவசம் படியுங்கள் அல்லது கேளுங்கள் போதும். வசதி இருப்பவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். வீட்டில் பரிகார பூஜை செய்தால் நல்லது. இல்லாவிட்டால் தினமும் மாலையில் விளக்கு ஏற்றும் போது முருகன் பாடல்களை பாடுங்கள் போதுமானது.
மிக கடுமையான தார தோஷம் இருப்பவர்கள் தினமும் காலை முருகன் படம் முன்பு தீபம் ஏற்றி வைத்து கந்தசஷ்டி கவசத்தை படிக்க வேண்டும். கந்தசஷ்டி கவசத்தில் ஏராளமான மந்திர சொற்கள் இருக்கின்றன. அவை தார தோஷத்தின் வீரியததை குறைத்து மண வாழ்க்கை இனிமையாக அமைய வழி வகுக்கும்.
குல தெய்வ வழிபாடும் மிக மிக நல்லது. தார தோஷம் இருப்பவர்கள் தங்களது ஜென்ம நட்சத்திர தினத்தன்று குல தெய்வ ஆலயத்துக்கு சென்று அபிஷேக ஆராதனைகள் நடத்தி மனமுருக வழிபட வேண்டும். சிலர் வாழை மரத்துக்கு தாலி கட்டுவதை குல தெய்வ ஆலயத்தில் வைத்து நடத்துவது நல்லது என்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் ஆண்கள் மட்டுமே இந்த பரிகார பூஜை செய்ய வேண்டும்.
இரண்டு திருமண யோகம் அமைந்த ஜாதகம் கொண்ட பெண்கள் வாழை மரத்துக்கு தாலி கட்டி பூஜை செய்யும் பரிகாரத்தை செய்யக் கூடாது என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு இருக்கும் தார தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபடலாம்.
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை வழிபடும்போது தங்களுக்கு நல்ல மணமகனை தேடித்தர வேண்டும். மனமுருக பெண்கள் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ஆண்டாளையும் மறக்காமல் உரிய முறையில் வழிபட வேண்டும். இது பெண்களுக்கான தார தோஷத்தை நிவர்த்தி செய்யும்.
குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதரை சேர்த்தி சேவையின் போது வழிபடுவது உடனடி பலனை தரும். ஸ்ரீரங்கம் தவிர வேறு சில ஆலயங்களும் தார தோஷத்துக்குரிய பரிகார தலங்களாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் மூலங்குடியில் உள்ள மீனாட்சி சுந்த ரேஸ்வரர் ஆலயம் அருமையான தார தோஷ நிவர்த்தி ஆலயம் ஆகும். அங்கு ஈசனுக்கு மனம் குளிர அபிஷேகம் செய்து வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை என்ற ஊரில் இருக்கும் சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி கோவிலும் சிறந்த தார தோஷ நிவர்த்தி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் வியாழக்கிழமைகளில் வழிபடுவது மிகவும் நல்லது என்கிறார்கள். அன்றைய தினம் அர்ச்சனை செய்து வழிபட்டால் தார தோஷம் விலகுவதோடு உடனடியாக தாலி பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. பொதுவாக தார தோஷத்துக்கு ஆஞ்ச நேயரையும், முருகரையும் விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டாலே போதும். தார தோஷம் உங்கள் பக்கத்தில் வருவதற்கு யோசிக்கும். மனம் ஒருமித்த வழிபாடு மட்டுமே தோஷத்தை கட்டுப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- வாழ்க்கை வளம் பெற புத பலம் மிக அவசியம் என்பதால் 12 ராசிக்கும் புதன் தோஷம் நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.
- மனிதன் அனைத்து சூழ்நிலையிலும் சுயமாக இயங்க புத்தி அவசியம்.
மனித வாழ்க்கை செம்மை பெற புத்தி, அறிவு, ஞானம் அவசியம். இவற்றை புதன் வழங்குவதால் புத்திக்காரகன் என்று பெயர் உண்டு.
ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் என்பதால் வித்யாகாரகன் என்ற பெயரும் உண்டு. புதன் சுப வலுப் பெற்றவர்களுக்கு புத்திசாலித்தனம் இருக்கும். எனவே வாழ்க்கை வளம் பெற புத பலம் மிக அவசியம் என்பதால் 12 ராசிக்கும் புதன் தோஷம் நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு புதன் 3, 6-ம் அதிபதி என்பதால் சுய ஜாதகத்தில் புதன் சுப வலுப்பெற்றால் அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்ய நேரும். உடன் பிறந்தவர்களுடன் ஒத்துப் போகாது. ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் உண்டு. உடன் பிறந்தவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள். அடிக்கடி உத்தியோகத்தை மாற்றுவார்கள்.
திட்டமிடாத செயல்பாடுகளால் அதிக கடன் சுமை இருக்கும். நிறைய எதிரிகளையும் சம்பாதித்துக் கொள்வார்கள். ராசி அதிபதி நல்ல நிலையில் இல்லாத பொழுது ஜாதகருக்கு நரம்பு, தோல், வலிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அஜீரணக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
புதன் கிழமை ராகு காலத்தில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு புதன் 2, 5-ம் அதிபதி. சுய ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம், சுப வலு பெறுவது சிறப்பு. புதன் சுபப் தன்மை பெற்றவர்கள் கல்வி ஆர்வம் நிறைந்தவர்கள். நன்றாகப் படித்து பதக்கங்கள் பெறுவார்கள். உயர் கல்வி யோகம் உண்டு. கற்ற கல்விக்கு தொடர்பான உத்தியோகம், தொழிலில் இருப்பவர்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள் அல்லது பணிபுரிவார்கள் அல்லது ஞான உபதேசம் செய்வார்கள். பூர்வீகச் சொத்தை சுகந்திரமாக அனுபவிப்பார்கள். வம்சாவளியாக குலத் தொழிலில் ஈடுபடுவார்கள். புதன் அசுபத் தன்மை பெற்றவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்காது. கற்ற கல்வியால் பயன் இருக்காது. பூர்வீகம் சிறப்பல்ல.
பரிகாரம்: புதன் கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு புதன் லக்னாதிபதி நான்காம் அதிபதி. சுய ஜாதகத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திரா திபத்திய தோஷம் உண்டாகும். ராசி சுப வலுப்பெற்றால் தலைமைப் பண்பு நிறைந்தவர்கள். திறமைசாலிகள், தவறான வழியில் செல்லமாட்டார். நல்ல சிந்தனையும், புகழும் அடைவார்கள். சுய முயற்சியில் பணக்காரர் ஆவார்கள். சுக வாழ்வு அமையும். புதன் அசுப வலிமை பெற்றவர்களுக்கு சொல் புத்தியும் கிடையாது. சுய புத்தியும் இருக்காது.
பெதுவாக மிதுன ராசிக்கு புதன் எந்த நிலையில் இருந்தாலும் படிக்காத மேதையாக படிக்காமலே பரிட்சையில் பாஸ் ஆகிவிடுவார்கள். படிப்பிற்கும் தொழில், வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. வாகனம், பூமி லாபம், அரசு வகையில் ஆதாயம், உயர்ந்த பதவி அமையும். செல்வச் செழிப்பு உண்டு. பல விதமான சுப பலன்கள் வாழ்நாள் முழுவதும் மிகுந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை புதன் ஓரையில் தாயாருடன் இணைந்த மகா விஷ்ணுவை வழிபட வளர்ச்சி அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசிக்கு புதன் 3, 12-ம் அதிபதி. உப ஜெயஸ்தானமான 3-ம்மிடம் பலம் பெற்றால் முயற்சியால் உழைப்பால் உயர்ந்த, உயர விரும்பும் உத்தமர். ஜாதகர் தைரியமானவர். பலசாலி. வீரியம் உடையவர். இளைய சகோதரம் உண்டு. இளைய சகோதரர் பெயர், புகழ், உடையவர். சகோதரர்கள் ஒற்றுமை உள்ளவர்கள். ஈருயிறும், ஓர் உடலுமாக வாழ்பவர்கள். ஊடகங்கள், தகவல் தொடர்பு துறையில் நாட்டம் உண்டு. ஞாபக சக்தி அதிகமாக இருக்கும்.
மூன்றாமிடம் அசுப வலுப்பெற்றால் சகோதரர்கள் உதட்டளவில் மட்டும் உறவாடுவார்கள். வீரியம், செவித்திறன் குறைவு உண்டு. எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்வார்கள். 12-ம்மிடம் சுப வலுப்பெற்றால் சுப விரயம் மிகுதியாக இருக்கும். நிம்மதியான தூக்கம் உள்ளவர். வெளி நாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இன்பமான இல்வாழ்க்கை அமையும். 12ம்மிடம் அசுபத்தனமாக செயல்பட்டால் வாழ்க்கை துக்கம் நிறைந்தாக இருக்கும். தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள்.
பரிகாரம்: புதன்கிழமை சந்திர ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு புதன் தன, லாப அதிபதி என்பதால் புதன் எந்த நிலையில் இருந்தாலும் சாதகமான பலன் உண்டு. மறைந்த புதன் நிறைந்த பலன்கள் கிடைக்கும். தொட்டது துலங்கும். வழக்கறிஞர், அரசியல் வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு புதன் தசை காலங்களில் சுப பலன்கள் இரட்டிப்பாகும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு. செல்வாக்கு, சொல்வாக்கு நிறைந்தவர்கள். கற்ற கல்வி மூலம் நிறைந்த வருமானமும் திரண்ட சொத்துக்களும் சேரும். சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். புதனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தாலும் ஒரளவேனும் சுப பலன்கள் நடக்கும்.
பரிகாரம்: புதன் கிழமை சூரிய ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்கு புதன் 1, 10-ம் அதிபதி. ராசி அதிபதி புதன் பலம் பெற்றால் தொழில் தந்திரவாதிகள். மதி நுட்பத்தால் தொழிலில் சாதனை படைப்பார்கள். பல தொழில் துறை பற்றிய அறிவு உண்டு. பல அறிய புதிய விசயங்களை கண்டுபிடிப்பார்கள். ஜாதகர் தன் தொழில் ஞானத்தை பயன்படுத்தி பிறருக்கு ஆலோசனை கூறி சம்பாதிப்பார்கள். கற்ற கல்விக்கு தகுந்த வேலை உண்டு. ஜாதகர் பார்க்கும் தொழில் மூலம் புகழ், அந்தஸ்து, கவுரவம் கிடைக்கப் பெறுவர். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு ஆதாயம், செய்யும் தொழிலில் பெருத்த ஆதாயம் உண்டு. நல்ல வருமானம் உண்டு. பெற்றவர்களுக்கு கர்மம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். புதன் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபத்திய தோஷ பாதிப்பு உண்டு. இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் இவர்களுடைய தொழில் அறிவு பிறருக்கே பயன்படும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சிந்தனை திறன் குறைவுபடும். முன்னேற்றம் இருக்காது.
பரிகாரம்: புதன்கிழமை புதன் ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

ஐ.ஆனந்தி
துலாம்
துலாம் ராசிக்கு புதன் 9, 12-ம் அதிபதி. பாக்கிய அதிபதி என்பதால் புதன் மிதுனத்தில் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. முதுநிலை ஆராய்ச்சி கல்விக்கு வெளிநாடு செல்வார்கள். படித்து முடித்த பிறகு வெளிநாட்டில் செட்டிலாவார்கள். முன்னோர்களின் குல மரபை முறையாக கடைபிடிப்பார்கள். எளிமையாக பிறருக்கு புரியம் படி கற்பிப்பதில் வல்லவர்கள். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக போதிப்பவர்கள். சிலர் புத்தக ஆசிரியர்களாக இருப்பார்கள்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என தொழில் வெற்றியும், சிறந்த அந்தஸ்தும் கிட்டும். வம்சாவழியாக கல்வி, நிதி நிறுவனங்கள் நடத்துவார்கள்.
சிறந்த ஆராய்ச்சியாளர்களாக அனைவராலும் புகழப்படுவார்கள். கன்னியில் உச்சம் பெறும் போது சுப விரயங்கள் மிகுதியாகும். இவர்களது திறமைகளை பிறருக்கு இலவசமாக விரயம் செய்வார். இந்த அமைப்பினர் வெளி நாட்டில் வாழ்ந்தால் கற்ற கல்வியால் பயன் உண்டு. புதன் நீசம் பெற்றால் சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு ஜாதகர் எந்த முயற்சியும் செய்யாமல் மனோபலமும் குறைந்தவராக இருப்பார்கள்.
பரிகாரம்: புதன் கிழமை சுக்ர ஓரையில் மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிகத்திற்கு புதன் அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதி.
அட்டமாதிபதியாகி புதன் மிதுனத்தில் ஆட்சி பெறுவதால் ஜாதகர் ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.தெரியாத விஷயத்தைக் கூட தெரியக் கூடியதாக காட்டிக் கொள்வர். எதையும் தன்னால் செய்ய இயலும் என சொல்லக் கூடியவராக இருப்பார். முன்னுக்குப் பின் முரணாக பேசக் கூடியவராக இருப்பார். தன் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் திடீர் திடீரென்று மாற்றிக் கொள்வார். அடிக்கடி அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரி அபாயங்களை சந்திப்பவர்கள்.
கன்னியில் உச்சம் பெற்ற புதன், 13-ம் இடம் என்ற லாப ஸ்தான ஆதிபத்தியம் பெறுவதால் பண விஷயங்களில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது. குறுக்கு வழிகளில் ஈடுபட்டாவது தன்னுடைய பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார். இங்குள்ள புதன் குருவின் சம்பந்தம் பெறுவதும் நல்லதாகும்.
பரிகாரம்: புதன்கிழமை செவ்வாய் ஓரையில் சிவன், அம்பிகை, முருகன், விநாயகர் இணைந்த குடும்ப படம் வைத்து வழிபடவும்.
தனுசு
தனுசு ராசிக்கு புதன் 7, 10-ம் அதிபதி மற்றும் பாதக அதிபதி. மிதுனத்தில் ஆட்சி பலம் பெறும். புதன் திருமண வாழ்க்கையில் பாதகத்தையும், கேந்திராதிபத்திய தோஷத்தையும் ஏற்படுத்த தவறுவதில்லை. அதே போல் நண்பர்கள், தொழில் கூட்டாளிகளால் ஏமாற்றப்படுவார்கள். கன்னியில் உச்சம் பெறும் புதனும், மீனத்தில் நீசம் பெறும் புதனும் குரு சம்பந்தம் பெறும் போது நல்ல பலனைத் தரும். அறிவுடையவர்கள். அழகாய் பேசுபவர்கள். தீர்க்கமான சிந்தனையுடையவர்கள். ஜாதகரும் பெற்றோர்களும் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையாலும் ஆதாயம் உண்டு. நல்ல படித்த உத்தியோகத்தில் உள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். புதனுக்கு கேந்திராதிபத்திய தோஷம், பாதகாதிபத்திய தோஷம் உள்ளதால் தசை, புத்தி காலங்களில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
பரிகாரம்: புதன் கிழமை குரு ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்கு புதன் 6, 9-ம் அதிபதி. புதனால் சாதகமும் பாதகமும் சேர்ந்த பலனே நடக்கும்.மிதுனத்தில் ஆட்சி பலம் பெற்ற புதனை விட கன்னியில் உச்சம்பெறும் புதனும் மீனத்தில் நீசம். பெறும் புதனும் நல்ல பலனை வழங்கும். தொழிலில் மேன்மையும், அரசியலில் பதவியும். செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும். சூரியன், புதனும் பெரும்பான்மையாக சேர்ந்தே பயணிக்கும் கிரகம். அஷ்டமாதிபதி சூரியனுடன் சேரும் புதன் சிலருக்கு சிறப்பான பலனை தரும். விபரீத ராஜயோகமாக அமையும். பல மகர லக்னத்தினருக்கு கடுமையான பாதிப்பை தருகிறது.
பரிகாரம்: புதன் கிழமை சனி ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்கு புதன் 5, 8-ம் அதிபதி. மீனத்தில் புதன் நீசம் பெறும் போதும் மிதுனத்தில் ஆட்சி பலம் பெறும் போதும் எப்படியாவது படித்து நல்ல வேலைக்கு சென்று விடுவார்கள். சிறப்பான யோகம், உயர்ந்த பதவி, தொழில் அனுகிரகம் உண்டு. அரசியலில் பெரிய பதவி, செல்வாக்கும், சட்டசபைத் தலைவர்கள், நீதிபதி பதவி கிட்டும். கன்னியில் உச்சம் பெறும் புதனால் மண வாழ்க்கையில் மனச் சங்கடங்கள் உண்டு. சிலருக்கு வம்பு வழக்கான காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. சிலரது திருமணம் விவாகரத்தில் முடியும். சிலருக்கு குழந்தை பிறக்காது அல்லது குழந்தைகளால் வாழ்நாள் முழுதுவம் மனச் சங்கடம் நீடிக்கும். சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும்.
பரிகாரம்: புதன் கிழமை சனி ஓரையில் சிவனும், விஷ்ணும் சேர்ந்து உள்ள கோவில் சென்று வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்கு புதன் 4,7-ம் அதிபதி. புதன் எந்த நிலையில் இருந்தாலும் கேந்திராதிபத்திய தோஷம், பாதகதிபத்திய தோஷம் என்ற அடிப்படையில் பாதிப்பை தரும். பள்ளிப் படிப்பையே தடுமாறச் செய்யும். நண்பர்களுடன் இணைந்து தீய பழக்கத்தில் ஈடுபடுவார்கள். நிலையான தொழில் உத்தயோகம் இருக்காது. சுய தொழில் செய்தால் கடன் சுமை மிகுதியாக இருக்கும் அல்லது நோய் தொந்தரவு இருக்கும். உத்தியோகத்தை அடிக்கடி மாற்றுவார்கள். தாயாரை பிரிந்து வாழ்வார்கள். நல்ல சொத்து சுகத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். கிடைத்த வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளத் தெரியாது. வெகு சிலருக்கு ராசி அதிபதி குரு வலுத்தால் சுயபலத்தின் அடைப்படையில் நற்பலன்கள் உண்டு.
பரிகாரம்: புதன் கிழமை குரு ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.
மனிதன் அனைத்து சூழ்நிலையிலும் சுயமாக இயங்க புத்தி அவசியம். எனவே புத்தி கிரகமான புதனின் அனுகிரகம் கிடைக்க உரிய வழிபாட்டு முறைகளை பயன்படுத்தி பயன் பெற வாழ்த்துக்கள்.
செல்: 98652 20406
- அசைவற்ற நிலையில் படுத்து இருந்தார். என் மனதில் பயம் சூழ்ந்தது. அய்யய்யோ... அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று பதறினேன்.
- சில நாட்கள் ஐ.சி.யு.வில்தான் இருக்க வேண்டும் என்றார்.
காரைக்குடி....
செட்டிநாடு என்று பெருமையுடன் அழைக்கப்படும் நகரம். மிக நேர்த்தியாக வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள்தான் இந்த நகருக்கு அழகு.
சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்ட கூரை வீடுகள் நிறைந்த பகுதி என்பதால் காரைக்குடி என்று பெயர் வந்ததாக சொன்னார்கள்.
அந்த புகழ் பெற்ற காரைக்குடியில் தான் 'இரணியன்' படப்பிடிப்புக்கு ஏற்பாடாகி இருந்தது. ஐதராபாத்தில் தெலுங்கு பட ஷூட்டிங்கை முடித்து விட்டு அங்கிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் காரைக்குடிக்கு புறப்பட்டோம்.
2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி. நான் மேல் படுக்கையில் படுத்து இருந்தேன். எனக்கு கீழ் உள்ள படுக்கையில் வேறொரு பயணி பயணம் செய்தார்.
எதிரே ஒரு 'பெர்த்' காலியாக இருந்தது. எனது கீழ் படுக்கையில் அம்மா படுத்திருந்தார். ஜில்லென்ற குளிர். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் களைப்பும் அதிகமாக இருந்தது. எனவே ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அயர்ந்து தூங்கி விட்டோம்.
நீண்ட நேர பயணத்துக்கு பிறகு திடீரென்று விழித்து மணியை பார்த்தேன். அதிகாலை 5.30 மணி ஆகியிருந்தது.
இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டதே என்று அம்மாவை எழுப்பினேன். வழக்கமாக 'அம்மா' என்று லேசாக குரல் கொடுத்தாலே எழும்பி விடுவார். ஆனால் அன்று எழும்பவில்லை.
களைப்பில் தூங்குகிறார் என நினைத்து தட்டி பார்த்தேன். ம்கூம்.... அசையவே இல்லை. பலமுறை கூப்பிட்டும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
அசைவற்ற நிலையில் படுத்து இருந்தார். என் மனதில் பயம் சூழ்ந்தது. அய்யய்யோ... அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று பதறினேன்.
அடுத்த சில இருக்கைகளை தாண்டி அமர்ந்திருந்த டிக்கெட் பரிசோதகரை அணுகி விவரத்தை சொன்னேன்.
அவர் வந்து பார்த்து விட்டு பயப்படாதீர்கள் தைரியமாக இருங்கள் என்றார். ஆனால் என்னோடு துணைக்கு அருகில் யாரும் இல்லை. என்னுடன் உதவியாளர்களும் அதே ரெயிலில் பயணம் செய்தார்கள். அவர்கள் சில பெட்டிகளை கடந்து 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் இருந்தார்கள். உடனடியாக அவர்களை தேடி கண்டுபிடிப்பது கஷ்டம். எனவே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தேன்.
என் நிலையை உணர்ந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் 'மேடம், பயப்படாதீர்கள். நான் பக்கத்து ரெயில் நிலையத்துக்கு தகவல் சொல்லி விட்டேன். ரெயில் அங்கு சென்றதும் டாக்டர்கள் தயாராக இருப்பார்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்கும்' என்று நம்பிக்கையூட்டினார்.
சிறிது நேரத்தில் ஒரு ரெயில் நிலையம் வந்தது. அது காரைக்குடி ஸ்டேசன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேசனும் அதுதான்..
டாக்டர்கள் விரைந்து செயல்பட்டு அங்குள்ள ஓரு சிறிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். மருத்துவர் பரிசோதித்து விட்டு உங்கள் அம்மாவுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி எங்களிடம் இல்லை. வேறு பெரிய ஆஸ்பத்திரிக்கு தான் அழைத்து செல்ல வேண்டும் என்றார்கள்.
பெரிய ஆஸ்பத்திரி எங்கு இருக்கிறது? எங்கு அழைத்து செல்வது என்று எதுவும் எனக்கு புரிய வில்லை.
மதுரையில் 'அப்பல்லோ', 'மீனாட்சி மிஷன்' ஆஸ்பத்திரிகள் உள்ளன. ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்றார்கள். அங்கிருந்து உடனடியாக என்னை அழைத்து செல்ல வந்திருந்த மானேஜர் காரிலேயே மதுரை அப்பல்லோவுக்கு அழைத்து சென்றோம். ஆஸ்பத்திரிக்கு சென்றதும் பரிசோதித்து விட்டு உடனடியாக ஐ.சி.யு.வில் அனுமதிக்க வேண்டும் என்றார்கள்.
அதற்கு முன் காது, கழுத்து, மூக்கில் அணிந்திருக்கும் நகைகளை கழட்ட வேண்டும் என்றார்கள். இதற்கு முன் இப்படிப்பட்ட அனுபவம் எதுவும் இல்லாததால் எனக்கு எதுவும் புரியவில்லை.
டாக்டர்கள் சொன்னது போல் நகைகள் ஒவ்வொன்றாக கழட்டினேன். மூக்குத்தியை கழட்டும் போது திருகாணி உள்ளே போய் விட்டால் என்ன செய்வது? என்று பயம். கையெல்லாம் நடுங்கியது.
எப்படியோ பயந்து.... பயந்து.. கழட்டி விட்டேன். அம்மாவுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம். மதுரையில் எனக்கு யாரையும் தெரியாது. அழுகை... அழுகையாக வந்தது. இந்த காலத்தை போல் செல்போன் வசதி எதுவும் இல்லாததால் தகவல்கள் அறிய, தகவல்களை சொல்ல உதவிக்கு யாரையும் அழைக்க எந்த வசதியும் இருக்க வில்லை.
ஐ.சி.யு.வில் இருந்த டாக்டர் வெளியே வந்து 'பயப்படாதீங்க. அம்மாவுக்கு 'ஸ்ட்ரோக்' வந்திருக்கு. ஆனால் சரியான நேரத்தில் வந்ததால் எந்த பாதிப்பும் இல்லை. இருந்தாலும் தலையில் ஏதேனும் ரத்த கட்டி ஏற்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும். சில நாட்கள் ஐ.சி.யு.வில்தான் இருக்க வேண்டும் என்றார்.
அதை கேட்ட பிறகுதான் எனக்கு நிம்மதி வந்தது. அம்மாவை நேரில் சென்று பார்த்தேன். கை, கால்கள் அசைக்க முடியாமல், பேச முடியாமல் படுத்திருந்தார்.
அம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு மதியம் படப்பிடிப்புக்காக காரைக்குடி புறப்பட்டு சென்றேன்.
அன்றைக்கு எடுக்கப்பட்ட முதல் சீனே மிக நீண்ட வசனம். அது மட்டுமல்ல. அந்த வசனத்தை பேசும் போதே முகத்தில் கோபம், ஏக்கம் கலந்த காதல் பார்வை எல்லாவற்றையும் வெளிப்படுத்த வேண்டும்.
ஆஸ்பத்திரி ஐ.சி.யு.வில் அம்மா.. கேமரா முன்பு நான்... அந்த சூழ்நிலையில் முகத்தில் காதல் பார்வையை படர விட வேண்டும்.... எப்படி இருக்கும்? நினைத்து பாருங்கள்? ஆனாலும் சோகத்தையும் மறந்து நடித்து கைதட்டல் பெற்றேன்.
தினமும் படப்பிடிப்பு முடிந்து மாலையில் ஆஸ்பத்திரி செல்வேன்.
எனக்கு ஒரு அறை தந்திருந்தார்கள். அங்குதான் இரவில் தூங்குவேன். சென்னையில் இருந்த அப்பாவுக்கு போன் பண்ணி 'அம்மாவுக்கு காய்ச்சல் ஆஸ்பத்திரியில் இருக்காங்க என்று பொய் சொன்னேன். (அப்பா பயந்து விட கூடாதே). ஷூட்டிங் செல்வதற்கு நீங்கள்தான் துணைக்கு வர வேண்டும். உடனே மதுரைக்கு வாருங்கள் என்று அழைத்தேன்.
கேரளாவில் இருந்த சித்திக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி அவர்களையும் மதுரைக்கு வரவழைத்தேன்.
மதுரை ஆஸ்பத்திரியில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு ஷூட்டிங் செல்வேன். மதுரையில் இருந்து காரைக்குடிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
சித்திதான் துணைக்கு வருவார். இப்படியேதான் ஒரு வாரம் சென்றது. ஒருநாள் ஆஸ்பத்திரிக்கு சென்ற போது அம்மா தூங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து ஆஸ்பத்திரி அறைக்கு சென்று நன்றாக தூங்கி விட்டேன்.
நள்ளிரவு ஒரு மணி இருக்கும். டெலிபோன் மணி ஒலித்தது. ஓடிப்போய் ரிசீவரை எடுத்ததும் ஐ.சி.யு.வில் இருந்து நர்சு கூப்பிட்டார். 'அம்மா, உங்களை அம்மா தேடுறாங்க' என்றார்.
அதை கேட்டதும் என் மனம் படபடத்தது.
என்னவோ தெரியலையே என்று பதறியடித்து கொண்டு ஓடினேன். அறைக்குள் சென்றதும் கண் விழித்து படுத்திருந்த அம்மா 'வந்திட்டி யாடி...! இன்னும் காணலையே என்று தேடினேன் என்றார்.
அம்மா, மணி என்ன தெரியுமா? ஒரு மணி என்றதும் அப்படியா 'போய் தூங்கு' என்றார். அவருக்கு நான் வந்ததும் தெரியவில்லை. நேரமும் தெரியவில்லை.
தினமும் என்னை பார்த்த பிறகுதான் அவர் தூங்குவார். இன்று வரை அதே நிலைதான். அதுதான் அம்மா.
(தொடரும்...)
- பழகும் காலத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் சொல்லிப் பழக வேண்டும்.
- சிறு குழந்தைகளோடு குழந்தையாக 10 நிமிடம் விளையாடுங்கள்.
இறைவனின் நாமத்தினை சொல்வதில் இத்தனை பலன்கள் உள்ளனவாம். இதில் எம் மதத்திற்கும் இதே பலன்கள்தான். ஒருவர் சொல்லும் எந்த இறைவன் நாமத்திற்கும் இதே பலன்தான்.
கலியுகத்திற்கு 'நாம ஜபம்' சிறந்த வழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முடிந்தால் 10 நிமிடத்தில் ஆரம்பித்து ஒரு மணி நேரம் வரையும் முடிந்தால் மேலும் கூடுதலாகவும் செய்யலாம். நாம ஜபம் என்பதற்கு நேரம், காலம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி சொல்லும் போது மூச்சு தானாகவே நிகழ்வது போல நாம ஜபமும் தன்னிச்சையாகவே இயங்கும். நாம் எந்த வேலை செய்தாலும் தூங்கினாலும் நாம ஜபம் ஒருவருள் இயங்கிக் கொண்டே இருக்கும்.
ஆனால் பழகும் காலத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் சொல்லிப் பழக வேண்டும். இதனால்
* உடல் கட்டுப்பட்டு சிறிது நேரம் அசைவற்று இருக்கும்.
* மனம் கண்ட திக்கில் ஓடாது.
* கொஞ்ச நேரம் மவுன விரதம் இருந்தது போல் ஆகி விடும்.
* ஒரு மணி நேரம் வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்தது போல் உணர முடியும்.
* மவுனமும், உடல் கட்டுப்பட்டு சிறிது நேரம் இருப்பதும் ஒரு தவம் செய்த பலன் ஆகின்றது. ஒரு யாகம் செய்த பலன் ஆகின்றது. பாவத்தை இந்த அமைதி கரைக்கின்றது. மனதினையும், எண்ணத்தினையும் புதுமை படுத்துகின்றது.
* இறைவனை ஒளி ரூபமாக உணர முடியும். ஏனெனில் தொடர் பயிற்சியில் உருவங்கள் வராது. இந்த ஒளியினை நோக்கி ஆன்மா பயணிக்கத் தொடங்கும்.
* ஒரு மணி நேரம் எந்த தவறும் செய்யாது இருக்கின்றோம்.
* பல புனித நீர் நிலைகளில் குளித்த பலன் வந்து சேரும்.
* ஒரு மணி நேரம் வேதங்களை ஓதிய பலன் கிட்டும்.
* இதுவே தியானம் ஆகி விடும்.
* செய்து பார்க்கும் போது உணர முடியும். நம் மனம் எந்த தீய எண்ணமும் இல்லாமல் தூய்மை அடைகின்றது.
* புண்ணியம் குவியும்.
ஒரே நாமத்தினை மட்டுமே சொல்லுங்கள். ஆன்ம பலம் கூடும். அதன் பிறகு நீங்கள் எந்த கோவிலுக்கும் போகலாம். எந்த பூஜையும் செய்யலாம்.
வாழ்வினை பிறருக்காக போலியாக , மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று வாழ்ந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செய்யவும் கூடாது. அவரவர் மன மகிழ்ச்சிக்காக மட்டுமே நியாயமான முறையில் வாழ வேண்டும்.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.

கமலி ஸ்ரீபால்
இந்த வாசகத்தினை நாம் அனைவரும் அறிவோம் ஏன்? இது இறை பக்தியினை வலியுறுத்துவதற்காக சொல்லப்பட்ட வாசகமா? இறை பக்தி என்பதனை அறிவுறுத்தி இருந்தாலும் அதற்கு பின்னால் அறிவுப் பூர்வமான ஒரு செயலும் இருக்கின்றது. விஞ்ஞானமும் இருக்கின்றது.
கோவில் என்றாலே அந்த காலங்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் இருக்கும். சில கோவில்களில் நான்கு வாசல் கோபுரமும் இருக்கும். அந்த கோபுரங்களில் இருக்கும் கலசங்கள் ஐம்பொன்னால் ஆனவை.
இந்த கலசங்களில் அந்த காலங்களில் தானியங்களை கொட்டி நிரப்பி வைப்பார்கள். இந்த உலோகங்கள்-ஐம்பொன் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தி கொண்டவை. தானியங்களும் இச்சக்தியினை கொண்டவை என்று சொல்லப் படுகின்றது. கேழ்வரகு, தினை, நெல், சோளம், வரகு, எள், சீமை என பல தானியங்களை இந்த கலசத்தில் கொட்டி வைத்தனர். அதிலும் வரகினை அதிகம் வைத்தார்களாம். காரணம் வரகு மின்னலைத் தாங்கும் ஆற்றலை அதிகம் பெற்றிருக்காம். அந்த தானியங்களுக்கு 12 வருடம் வரை சக்தி இருக்கும் என்பதால் குட முழுக்கு என்ற பெயரில் அந்த தானியங்களை மாற்றி உள்ளனர். மேலும் தானியங்களை பாதுகாக்கும் இடமாகவும் இந்த கலசங்கள் இருந்துள்ளன.
மேலும் இவை இடிதாங்கிகளாக பயன்பட்டன. சுற்று வட்டாரத்தில் இடி தாக்குதல் இல்லாமல் இவை பார்த்துக் கொண்டன.
எத்தனை திறமை! என்ன அறிவு! அறிவுப்பூர்வமான விஞ்ஞானத்தை புகுத்தி ஆன்மீகம் வளர்ந்தது. ஆன்மீகத்தின் காரண காரணிகளை அறிய விஞ்ஞானத்திற்கு சவால் நிறைந்த ஆய்வுகள் தேவைதான்.
நான் படித்த இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி தேவை என்று அதிகம் செலவழித்து வெளியில் தேடி தேடி அலைபவர்கள் 10 பைசா செலவில்லாமல் மகிழ்ச்சியாய் இருக்க வழி தெரியாமல் இருக்கின்றனரே? பெரிய விஷயம் இல்லை. இவ்வளவுதான்.
* மகிழ்ச்சி என்பது பார்ட்டி, தவறான உணவு முறை, ஆரவாரம் இவற்றில் எல்லாம் இல்லை என்பதனை முதலில் உணர வேண்டும்.
* வீட்டில் உள்ள முதியோருடன் 5 நிமிடம் தினம் பேசிப் பாருங்கள்.
* சிறு குழந்தைகளோடு குழந்தையாக 10 நிமிடம் விளையாடுங்கள்.
* கொஞ்ச நேரம் குறைந்தது 20 நிமிடம் நடக்கலாமே.
* சிறிது பக்தி, விஞ்ஞானம், பகுத்தறிவு என்ற புத்தகங்களை படிக்கலாம்.
* உடல் அசைவின்றி அமைதியாய் 10 நிமிடம் காலை நேரம் அமரலாம்.
* வானவில் நிறத்தில் சாலட் சாப்பிடுங்கள்.
* 2 பேரையாவது லேசாக புன்னகைக்க வையுங்கள்.
* அரை வயிறு சாப்பிட்டால் போதும். அதுவும் புளி, காரம், எண்ணை இல்லை யென்றால் உடலின் ஆரோக்கியமே மனத்திற்கு மகிழ்ச்சி தரும்.
* சிரிக்கலாமே.
* சண்டை, கொடூர கதைகள் வேண்டாமே.
* நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும். நல்லதே நடக்கின்றது.
* எப்போதும் சுத்தமாக 'பளிச்'சென்று இருக்க வேண்டும்.
* தூங்கி எழுந்தவுடனும், தூங்கப் போகும் முன்பும் "நன்றி" என்று சொல்லலாமே.
* ஏதாவது பிரச்சனை, மன நிம்மதி இல்லை என்றால் அவற்றிடம் இருந்து எப்படியாவது தள்ளி வந்து விடுங்கள்.
* நமக்கு கிடைத்துள்ள வாழ்க்கையே பல நன்மைகளுடன் ஒரு பரிசாக கிடைத்துள்ளது.
* ஒவ்வொருவரும் 'ஆற்றலும்','வலிமையும்' பெற்றவர்.
* 'காலம் அதன் வேலையை' செய்யட்டும். அந்த காலத்திற்குள் எத்தனை சிறப்பாக வாழ்கின்றோம் என்பதே சிறப்பு.
கீழே கூறப்பட்டுள்ள கதையினை பலர் பல விதத்தில் கேட்டிருக்கலாம். படித்திருக்கலாம். நான் படித்த போது இதன் கடைசி தீர்வு பகுதி நாம் அனைவரும் மீண்டும் அறிய வேண்டிய ஒன்று எனத் தோன்றியது. அவ்வகையில் இக்கதையினைப் படிப்போம்.
வல்லவனான, நல்லவனான ஒரு அரசன் இருந்தான். அவன் படித்தோரை மதிப்பவன். அவர்களுக்கு உணவளித்து, பரிசளித்து மரியாதை செய்பவன். ஒருமுறை ஒரு புலவர் அவரை காண வந்தபோது அவரை மரியாதை செய்து உணவளித்தான். சோதனை நிகழ்ந்தது. கழுகு ஒன்று ஒரு பாம்பினை பிடித்து செல்ல பாம்பின் விஷம் உணவில் தெளித்து விட்டது. புலவரும் அந்த உணவினை உண்டு இறந்து விட்டார். அரசன் மனம் உடைந்து போனான்.
இது இப்படியிருக்க கர்மவினைப் பயன் எழுதும் சித்ரகுப்தனுக்கு ஒரே குழப்பம். இந்த புலவர் இறந்ததன் பாவத்தினை யார் கணக்கில் எழுதுவது? அரசன் கணக்கிலா? கழுகின் கணக்கிலா? அல்லது அந்த பாம்பின் கணக்கிலா? விடை தெரியாது தவித்தான் சித்ரகுப்தன்.
குழம்பி சித்ரகுப்தன் 'எமதர்ம ராஜ'னிடம் சென்றார். நிலைமையை விளக்கினார். சற்று யோசித்த எமதர்மராஜா 'சித்ர குப்தனே. சற்று பொறுங்கள். இதற்கான விடை விரைவில் கிடைக்கும்' என்றார்.
சிறிது நாட்கள் சென்று மற்றொரு புலவர் இந்த அரசனின் உதவும் குணம் கேட்டு மன்னரைக் காண வந்தார். அவருக்கு அரண்மனைக்குச் செல்ல வழி தெரியவில்லை. அங்கு சாலையோரத்தில் ஒரு பெண் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். புலவர் அவளிடம் சென்று அரண்மனைக்குச் செல்லும் வழியினைக் கேட்டாள். அவளும் சரியான வழியினைக் கூறினாள். அத்தோடு அவள் சும்மா இருந்திருக்கலாம். 'புலவரே, இந்த அரசன் இரக்க மற்றவன். புலவர்களை கொன்று விடுபவன். அவனிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்றாள்.
இப்போது சித்ரகுப்தனுக்கு விடை கிடைத்து விட்டது. புலவரை கொன்ற வினை, பாவம் அனைத்தும் இந்த பெண்மணிக்கே சேரும் என எழுதி விட்டான்.
பிறர் மீது வீண் பழி சுமத்தினால் அந்த பாவம் சுமத்துபவரையே முழுமையாய் சென்றடையும். திரித்து பேசுவது, உண்மை அறியாது பேசுவது, பொய் சொல்வது இவை அனைத்தும் எத்தகைய பாவங்களை சேர்க்கும் என்பதை ஒரு கதை மூலம் நன்கு புரிய வைத்து விட்டனர்.
இதை வீட்டில் உள்ள குழந்தைகளுக்குச் சொல்லலாமே. இதோடு கூட வேறு சில நல்ல பழக்கங்களை நாமும் கற்கலாம். பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்.
* ஒரு வேலையும் இல்லாது சும்மா இருக்கும் மூளை சாத்தானின் தொழிற்கூடம் என்பார்கள்.
வேலை இல்லாவிட்டால் அடுத்தவர் வேலையில் மூக்கை நுழைப்போம். வம்பு, ஊர்கதை பெருகும். ஒருவரது குண நலன்களே மாறி விடும். ஆகவே இந்த பகுதிகளை நம் வாழ்வில் நிரந்தரமாக மூடி விட வேண்டும்.
இதனை நீக்கினாலே அழிவுப்பூர்வமான சிந்தனைகள் நீங்கும். பொய், குற்றம் குறை, சாக்கு போக்கு போன்ற அசுத்த கால்வாய்கள் ஒருவரிடம் இருக்காது.
மேலும் அதி புத்திசாலிகள் தான் எதனையும் செய்ய முடியும் என்ற தவறான கருத்து கூடாது.
முறையாக வேலை செய்ய, நேர்மையாக வாழ, நேரப்படி நடக்க, நேரம் தவறாமல் எதனையும் செய்ய, முனைந்த வேலை செய்ய, அன்பாய் இருக்க இதற்கெல்லாம் நல்ல மனம் மட்டுமே போதும். அதி புத்திசாலித்தனம் தேவை இல்லை என்பதனை உணர வேண்டும்.
தினமும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்தால் போதும். என்டார்பின் என்ற ஹார்மோன் ஒருவரை ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்க வைக்கும். நல்ல இசை கேட்பது, நல்ல தூக்கம் போன்றவை 'டோப்பமின்' மூலம் நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.
கொஞ்சம் நடப்பது, சிறிது சூரிய ஒளியாவது மேலே படுதல், தியானம் இவை 'செரடோனின்' சுரக்க உதவும். படபடப்பு நீங்கி மகிழ்ச்சி தரும். செய்வோமே!
- தன்னலத்திற்காக மட்டும் உழைப்பவரைப் 'பேயுள்ளம்' என்றும் கூறலாம் தானே!.
- தன்னலம் மனிதனைச் சிறிய புத்திக்காரனாகச் சிதைத்துவிடும்.
தனக்கென வாழாத தன்மையாளராய்த் திகழும் நன்மையாளரே! வணக்கம்!.
இந்த உலகத்தில் வாழப் பிறந்தவர்களில் தன்னுடைய நலத்தில் மட்டுமே எப்போதும் தனி அக்கறை செலுத்துபவர்களைச் சுயநலவாதிகள் என்று அழைக்கிறோம். தன்னுடைய உழைப்பிலும் தன்னுடைய சம்பாத்தியத்திலும் மட்டுமல்லாமல் அடுத்தவர் உழைப்பிலும் அடுத்தவர் சம்பாத்தியத்திலும் கூடக், கிடைக்கின்ற பலன்களைத் தன்னுடைய நலத்திற்காகவே பயன்படுத்தக் கூடியவர்கள் தன்னலவாதிகள்.
இந்தத் தன்னலச் சிந்தனையில் இருந்து மனிதன் விரிநிலை வளர்ச்சி பெற்றுப், பொதுநலவாதியாகப் பொலிகின்ற படிநிலையைப், பாவேந்தர் பாரதிதாசன் ஒருபாடலில் தெளிவுற விளக்குகிறார். மனிதன் தனக்காக மட்டுமல்லாமல், தன் மனைவி, தன் மக்கள், தன் வீடு, தன் உணவு, தன் சம்பாத்தியம் என்று குடும்பம் சார்ந்த உறுப்பினர் நலனில் மட்டும் அக்கறை காட்டுவதைக் 'கடுகு உள்ளம்' என்கிறார். குடும்பம் தாண்டிக், கரும்பென இனிப்பது என்னுடய சிற்றூர் என்று பிறந்த ஊர் நலத்திற்குப் பாடுபடுவதைக், கடுகைவிடச் சற்றுப் பெரிய 'துவரம் பருப்பு' உள்ளம் என்கிறார்.
பிறகு நாட்டு நலம் பேணுவோர், உலக நலத்திற்காகப் பரிந்து பேசுவோர், சண்டையிட்டுக் கொள்வோர் போன்றோரை 'தென்னையுள்ளம்', 'மாம்பிஞ்சியுள்ளம்' என்றெல்லாம் கூறுகிற பாவேந்தர், நிறைவாகத் தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்று பொதுநலத்தாலே தொண்டுசெய்கிற பொதுநலவாதிகளைத் 'தாயுள்ளம்' என்று தகுதிப்படுத்திப் பாராட்டுகிறார்.
ஆம்! தாயுள்ளத்தோடு பேதம் பார்க்காமல், பொதுநலத்திற்காகப் பாடுபடுவோரைத் 'தாயுள்ளம்' என்று சிறப்பித்தால், தன்னலத்திற்காக மட்டும் உழைப்பவரைப் 'பேயுள்ளம்' என்றும் கூறலாம் தானே!.
எல்லோரும் தன்னுடைய நலத்திற்காகவும் தன்னுடைய வாழ்க்கைக்காகவும் தான் செயல்படுகிறார்கள் என்றாலும் தன்னை தவிர்த்து பிற உயிரின மேம்பாட்டிற்காகவும் பாடுபட வேண்டியது, சார்ந்து வாழும் உலகியல் கோட்பாடுகளில் அவசியமானது ஆகும்.
ஒரு தேநீர்க் கடை நடத்தும் ஒருவர், தன்னுடைய சொந்த முதலீட்டைப் போட்டுத் தொழிலை நடத்துகிறார்; அதில் கிடைக்கும் லாபமும் நன்மையும் முழுவதும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று அவர் நினைத்தால் அது தொழில் சுயநலம். பணம் அவருடையது; கடை அவருடையது. என்றாலும், அந்தத் தேநீர்க்கடைத் தொழிலில் பங்காளிகளாகத், தேநீர் தயாரிக்கும் மாஸ்டர் தொடங்கி, பால்காரர், தேயிலை, சர்க்கரை, எரிபொருள், தண்ணீர் வழங்குபவர், கிளாஸ் கழுவுபவர் வரை பல பேருடைய உழைப்பு இதில் பரிபூரணமாக இருப்பதைப் புறந்தள்ளிவிட முடியாது. இத்தனைபேரும் சேர்ந்து, பருக வரும் வாடிக்கையாளர் மனம் கோணாதபடி, தரமான சுவையுடன், நியாய விலையுடன் தேநீர் வழங்க வேண்டும். முதலாளி லாபம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தால், உழைப்பாளர் மனமுவந்து ஒத்துழைக்க மாட்டார்கள்; ஏனென்றால் அவர்களுக்கு உரிய ஊதியமும் கிடைக்காமல் போகும்.
தனிப்பட்ட மனிதர் நடத்தும் தனியார் தொழில் என்றாலும், அதிலும் வாடிக்கையாளர் உள்ளிட்ட அனைவர் சார்ந்த பொதுநலனும் கலந்திருந்தால் மட்டுமே அது சிறந்திருக்கும். தன்னலம் எல்லா நிலைகளிலும் நம்முடைய முயற்சிகளைத் தரம் தாழ்த்திவிடும்.
தன்னலம் பேணுகிற மனிதர்கள் எப்போதும் தேவையில்லாமல் தன்னை முன்னிலைப் படுத்துவதிலேயே குறியாய் இருப்பார்கள்; தன்னை முன்னிலைப்படுத்துகிற மனிதன் நாளடைவில் ஆணவமும் கர்வமும் நிறைந்தவனாக மாறித் தன் தலையிலே தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.

சுந்தர ஆவுடையப்பன்
சிலபேரைப் பார்த்திருப்போம். எப்போதும் வரிசையறிந்து வருகிற உரிமைகளையும் பெருமைகளையும், குறுக்குவழியில் முந்திச் சென்று அடுத்தவரிடமிருந்து தட்டிப்பறித்து விடவேண்டும் என்கிற குறுகிய சிந்தனையோடேயே இருப்பர். பேருந்து நிலையம், திரையரங்கம், ரேசன் அங்காடி, திருமண விருந்துக்கூடம், வழிபாட்டுக்கூடம் என எங்குச் சென்றாலும் வரிசையில் நிற்காமல் குறுக்கே புகுவதிலேயே சிலர் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். போக்குவரத்து நெரிசலிலும் முந்திப் புகுந்து முட்டி அடிபடுகிற அவல நிலையில் சிக்குவோரும் உண்டு.
தன்னலம் மனிதனைச் சிறிய புத்திக்காரனாகச் சிதைத்துவிடும். சிலருக்கு எப்போதும் தன்னை வியப்பதிலேயே தனி ஆர்வம் உண்டு. என்னைவிடத் திறமைசாலி இந்த உலகத்திலேயே கிடையாது. எனக்குத் தெரியாதவர்கள் இந்த உலகத்திலேயே இன்னும் பிறக்காதவர்கள்; எத்தனைபேர் வந்தாலும் அத்தனைபேரையும் வெல்லும் ஆற்றல் எனக்கு மட்டுமே உண்டு! என்று தற்புகழ்ச்சியிலேயே காலத்தைத் தள்ளிவிடுவர்.
தன்னுடைய உழைப்பால் கிடைப்பதும், அடுத்தவர் உழைப்பால் கிட்டுவதும் என உழைப்பு யாருடையதாக இருந்தாலும், பலன் தன்னுடையதாகவே இருக்கவேண்டும் என்கிற பேராசைக் குணமும் தன்னலவாதிகளை விட்டு அகலாமல் போகும். இதனால் இவர்களைச் சுற்றியுள்ள அனைவராலும் வெறுக்கப்படும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவர். இவர்களை அறியாமலேயே அடுத்தவரைப் பார்த்துப் பொறாமைப்படும் தீய குணமும் ஒட்டிக்கொள்ளும். அந்த வகையில் எல்லோராலும் எள்ளி நகையாடி விலக்கப்படும் தன்னல குணத்தினால் விளையும் நன்மைதான் என்ன?
ஒரு கிராமத்து விவசாயி, தன்னுடைய வயலில் இருந்த வைக்கோலைத் தனது மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். ஓர் ஆற்றின் கரைவழியே அவர் செல்லும் பாதை இருந்தது. ஏற்றப்பட்டிருந்த வைக்கோல் பாரத்தோடு மாடுகள் ரெண்டும் மகிழ்ச்சியாக வண்டியை இழுத்துச் சென்று கொண்டிருந்தன. அந்த விவசாயி நல்ல குரலெடுத்துப் பாடிக்கொண்டும் ஆற்றின் கரைவழியே வண்டியில் சென்று கொண்டிருந்தார்.
அவர் இயல்பாகவே நன்றாகப் பாடுவார். இன்று என்னவோ அதிகப்படியான மகிழ்ச்சியில் இருந்ததால் பாடல் பிரமாதமாக நதிக் கரையெங்கும் பரவி ரீங்காரமிட்டது. அவரது பாடலில் மயங்கிய தேவதை ஒன்று ஆற்றிலிருந்து வெளிவந்து விவசாயியின் முன் தோன்றியது." விவசாயியே! உன் பாடலை மெச்சுகிறேன்; இதோ உன் பாடலுக்கான பரிசாக உனக்கு இரண்டு தங்கக் காசுகளை வழங்குகிறேன்!; பெற்றுக்கொள்!. இந்தத் தங்கக் காசுகளை ஒவ்வொன்றாக இந்த ஆற்றில் வீசுவதன் மூலம் ஒவ்வொரு வரங்களை நீ பெற்றுக்கொள்ளலாம். இரண்டு தங்கக் காசுகள்! இரண்டு வரங்கள்! இரண்டே வாய்ப்புகள்!" என்று கூறிக் காசுகளை வழங்கி மறைந்தது தேவதை.
மகிழ்ச்சியடைந்த விவசாயி, தான் பெற்ற இரண்டு தங்கக் காசுகளில் ஒன்றை ஆற்றுக்குள் எறிந்து, 'தன்னுடைய மாட்டுவண்டியில் ஏற்றப்பட்டிருக்கும் வைக்கோல் முழுவதும் தங்கமாக மாறிவிடக் கடவது!' என்று மனத்திற்குள் வேண்டினார். அடுத்த நொடியே வண்டியில் இருந்த வைக்கோல் அத்தனையும் தங்கமாக மாறி ஜொலிக்கத் தொடங்கியது. இரண்டுமடங்கு குதூகலத்துடன் மேலும் பாடிக்கொண்டே ஆற்றின் கரைவழிப் பாதை வழியே வண்டியை ஊரை நோக்கிச் செலுத்தினார் விவசாயி.
தன்னுடைய பாட்டிற்காகத் தனக்குப் பரிசாகக் கிடைத்த இரண்டு தங்க நாணயங்களில் ஒன்றின் மூலம் ஒரு வண்டித் தங்கம் தனக்கு வாய்த்திருப்பதில் மகிழ்ந்திருக்கும் விவசாயி, அதனை வேறு யாருக்கும் தெரியாமல் எப்படித் தானே அனுபவிப்பது? என்று யோசிக்கத் தொடங்கினார்.
அந்த நேரம் பார்த்துக், கொஞ்ச தூரத்தில், எதிர்த்தாற்போல இவரது ஊர் நண்பர்கள் சிலர் கரைவழியே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார் விவசாயி. 'இவர்கள் நெருங்கி வரும்போது, வண்டியிலுள்ள தங்க வைக்கோலைப் பார்த்தால், அவர்களும் பங்கு கேட்பார்களே! அவர்களின் பார்வையில் இருந்து எப்படி தங்கத்தை மறைப்பது?' என்று யோசிக்கத் தொடங்கினார் விவசாயி.
படக்கென்று ஒரு முடிவெடுத்தார். தேவதை கொடுத்த தங்கக் காசுகளுள் கையில் எஞ்சியிருந்த ஒன்றையும் ஆற்றினுள் வீசியெறிந்தார். 'தனது வண்டியில் இருக்கும் தங்க வைக்கோல் புற்கள், தனது கண்களுக்கு மட்டுமே தங்கமாகத் தெரிய வேண்டும். அடுத்த எவர் கண்களுக்கும் அவை வைக்கோலாகவே தெரிய வேண்டும்!' என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.
வண்டி இப்போது எதிரே வந்துகொண்டிருந்த நண்பர்களை நெருங்கியிருந்தது. அவர்களில் ஒருவன் விவசாயியைப் பார்த்துக் கேட்டான், " என்ன? வயலில் இருந்து வைக்கோலை வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறாயா?". விவசாயி திரும்பி வண்டியைப் பார்த்தார், வண்டிக்குள் தங்க வைக்கொல் ஜொலித்துக் கொண்டிருந்தது. நமது இரண்டாவது வரமும் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியோடு வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தத் தொடங்கினார்.
இப்போது, விவசாயி பெற்ற இரண்டாவது வரத்தினால்தான் அவருக்குப் பிரச்சனையே ஆரம்பித்தது. எப்படியென்றால், இவருக்கு மட்டுமே தங்கமாகத் தெரியும் அந்த வைக்கோல், மற்றொருவருக்கும் சாதாரண வைக்கோலாகவே தெரியுமென்பதால், அதனை விற்கவோ, தங்க அணிகளாக மாற்றிக்கொள்ளவோ இயலாத நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளார் விவசாயி. முதல் வரத்தோடு நிறுத்தியிருந்தால், அந்தத் தங்கத்தை மற்றவர் பங்கு கேட்டாலும் அவருக்கும் பயன்பட்டிருக்கும். ஆனாலும் அனைத்தையும் தானே அனுபவிக்கவேண்டும் என்று பேராசைப்பட்டதால் உள்ளதும் போச்சென்று இப்போது தனதும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு செயலிலும் தனக்கெனக் கொஞ்சம் வாழ்வதில் தவறில்லை. ஆனால் அடுத்தவர் உழைப்பையும் தனக்கென மாற்றிக் கொண்டு வாழ்வதுதான் பெருந்தவறு. தன்னலம் எப்போதும் தன்னுடைய தேவைகளையும் தன்னுடைய விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக இருக்கும். அடுத்தவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தாமே! அவர்களுக்கும் தேவைகள், விருப்பங்கள் இருக்கத்தானே செய்யும்! என்று துளிகூட நினைத்துக் கூடப் பார்க்காது.
வாழ்க்கை என்பதே கொடுத்துப் பெறுகிற பெருமை வாய்ந்தது. இதைக் கொஞ்சம்கூட எண்ணிப் பார்க்காமல், நான் பெற்றுக்கொண்டே இருப்பேன்; நீ கொடுத்துக்கொண்டே இரு! என்கிற குறுகிய மனோபாவத்துடன் வாழ்வதே தன்னலமாகும்.
குழந்தையாக இருக்கும்போது எல்லோரும் எல்லாமே தனக்குத்தான் என்று இருந்திருக்கலாம்; சில குழந்தைகள் கையிலிருக்கும் எந்தப் பொருளையும் யார்கேட்டாலும் கொடுக்கவே கொடுக்காது. குழந்தைப் பருவத்தில் இது குறை கிடையாது. ஆனால் ஆளும் அறிவும் வளர வளரப், பொதுநலம் பேணுகிற தயாள குணமும் வளரவேண்டும்.
நம்மிடமுள்ள சுயநல எண்ணங்கள் நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒட்டிக் கொண்டுள்ளதாக எண்ணினால், அவற்றை வெகு எளிதாக நாம் அகற்றிவிடலாம். ஒரு செயலில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும், இதற்காக ஒதுக்கப்படும் நேரத்தில் எவ்வளவு நேரம் நமக்கானது? எவ்வளவு நேரம் அடுத்தவர் நலம் பேணுவது? என்று சிந்தித்து ஈடுபட வேண்டும்.
அடுத்தவர்களுக்காக நாம் எவ்வளவுதூரம் நம்முடைய பொருள் வளத்தையும், அக்கறையையும் செலவு செய்கிறோம்?; அல்லது எந்த அளவுக்கு நம்முடைய நலத்திலும் வளத்திலும் அக்கறை செலுத்தும் உரிமையுடையவர்களைப் புறக்கணிக்கிறோம்? இப்படிப்பட்ட ஆரோக்கிய மான சில கேள்விகளை மனத்தில் கேட்டுக் கொண்டு கருணையோடு செயல்படத் தொடங்கினாலே தன்னலமில்லா நல்வாழ்வு பெற்று வெற்றிகளை அடையலாம்.
தொடர்புக்கு : 9443190098
- எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசை ஒரு பல்பொருள் அங்காடி போல.
- மெட்டு சிறப்பாக இருக்கவே இந்த மெட்டிலேயே பாட்டு இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்.
"எந்தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்"
- என்றார் பாரதியார். "காணி நிலம் வேணும்" - என்ற பாடலில் காணி நிலம், மாளிகை, பத்து பன்னிரெண்டு தென்னை மரம், நிலவொளி, கத்தும்குயிலோசை, தென்றல், பாட்டுக் கலந்திடவே பத்தினிப் பெண், கவிதைகள், பராசக்தியின் காவல் என இத்தனையும் தனக்காக கேட்ட பாரதி, இந்த பூமிக்காகவும் ஒன்றைக் கேட்டார் என்றால் அது இதுதான், "எந்தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்"
இவ்வையத்தை பாலித்திட பராமரித்திடும் அளவிற்கு பாட்டுத் திறன் இருக்குமா? என்றால், இருந்திருக்கிறதே!
சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாரதியின், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?" - என்ற பாடலைக் கேட்டபோது வீரமும், நாட்டுப் பற்றும் பெறாதவர் யார்? அதிலும் பாரதியார் பாடல்களை இசையுடன் பாடிவிட்டால் அன்று மட்டுமல்ல, இன்றும் நமக்கு விருந்தாகவும் மருந்தாகவும் ஆகிவிடுகிறது தானே?
இசைக்கு மனிதர்கள் மட்டுமா மயங்குகிறோம்? கண்ணன் குழலூதினால், நாரதரும், தேவலோக பெண்கள் என்று சொல்லப்படுகிற ஊர்வசி, ரம்பை, திலோத்தம்மை மற்றும் மக்கள், பசுக்கள், மயில், பறவைகள் எல்லாம் மெய் மறந்து "எழுத்து சித்திரங்கள் போல் அசையாமல் நின்றனவே" என்கிறார் பெரியாழ்வார்!
உண்மைதான். இசைக்கு வசப்படாத உயிர்கள் ஏது? பயிர்கள் கூட இசைக் கேட்டால் அதிக செழிப்பாக வளர்வதாகவும், பசுக்கள் அதிகம் பால் சுரப்பதாகவும் படிக்கின்றோமே. இசையால் நோய் தீர்க்க "மியூசிக் தெரபி" உண்டல்லவா?
நம் தமிழ் திரை இசைத் துறையில் எத்தனையோ மேதைகள் ஜி. ராமநாதன் முதல் இன்றைய அனிருத் வரை எத்தனையோ பேர்கள்! அத்தனை பெயரையும் குறிப்பிட்டால் கட்டுரை நீளும். அவர்கள் ஒவ்வொருவரின் இசையமைப்புமே தனித்தன்மை வாய்ந்தது!
இந்த தொடரின் நாயகன் அமரர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசைப் புதையல் பற்றி பார்க்கலாம்..
1948 ல் வெளிவந்த "வீர அபிமன்யு" படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு. அந்தப் படத்தில் "புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மனமே பெறுவோமே" - என்ற பாடலுக்கு மட்டும் மெட்டு சரியாக பொருந்தி வராமல் 'டிமிக்கி' கொடுத்திருக்கின்றன வரிகள். அவர் பொறுமையிழந்து, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வீட்டுக்கு கிளம்பிவிட்டாராம்.
இசையமைப்பாளர் வெளியே போன பிறகு ஹார்மோனியத்தை எடுத்து வைத்து கொண்டு பாடல் வரிகளுக்கு மிக அழகான ஒரு மெட்டு போட்டுவிடுகிறார் அவரது உதவியாளரான 24 வயது இளைஞர். இது, எஸ்.எம். சுப்பையா நாயுடுவிற்கு தெரிந்துவிட்டது. பாட்டை திரும்ப வாசிக்க சொல்லிக் கேட்டார். மெட்டு சிறப்பாக இருக்கவே இந்த மெட்டிலேயே பாட்டு இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்.
ஆஹா, அந்த இளைஞன் அப்போதே இறக்கைக்கட்டி வானவெளியில் பறக்க ஆரம்பித்துவிட்டார். அவர் தான் பின்னாளில் எம்.எஸ்.வி. என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரர்!
பத்திரிக்கைகளில், திரைப்பட விளம்பரங்களில் "இசை எம்.எஸ்.வி." என்று வந்தால் போதும், கதாநாயகன், நாயகி, கதை இதெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், பாடல்களுக்காகவும், பின்னணி இசைக்காகவும் திரையரங்குகளை நோக்கி அலை அலையாகத் திரண்ட ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருந்தது.
அவரது பாடல்களைக் கேட்க வானொலிப்பெட்டியைச் சுற்றி வீட்டினர் மொய்த்திருப்பார்கள். எங்கள் வீடே அதற்கு சாட்சி. ஒரு சுவையான செய்தியை பின்வரும் வாரங்களில் சொல்கிறேன். கிராமங்களில் டீக்கடைகளிலும், நகரங்களில் சில ஓட்டல்களிலும் ஜூக் பாக்ஸ் (Juke Box) வசதியிருக்கும். பாடல் கேட்பதற்கான தனிப்பட்ட பெட்டியில் 25 காசு போட்டுவிட்டு விருப்பப்பட்ட பாடலை தேர்வு செய்து கேட்கலாமாம். இந்த ஜூக் பாக்ஸ் பாடல்களுக்காகவும் கூட்டம் அலைமோதி வியாபாரம் அள்ளிக்கொண்டு போன வரலாறு எல்லாம் எங்கள் காலத்தில் கேட்டதுண்டு!

கி.பானுமதி கிருஷ்ணகுமார்
சரி, நாம் "வீர அபிமன்யுக்கு" வருவோம். "வீர அபிமன்யு" படம் வெளியான போது டைட்டலில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பெயர் மட்டுமே வந்தது. எம்.எஸ்.வி பெயர் வரக்காணோம். மனம் மிகவும் துவண்டு போனார் அவர். ஆனால் மனம் ஒடியவில்லை. தொடர்ந்து அதே உண்மையான, நேர்மையான மும்முரமான உழைப்பு என்றே இருந்தார்!
ஒரு கட்டத்தில், ஜூபிடர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னைக்கு இடம் பெயர்ந்த போது, எஸ். எம். சுப்பையா நாயுடு, நிறுவன தயாரிப்பாளரிடம் சென்று எம்.எஸ்.வி-யைக் காட்டி "பிரபலமான எனது பல பாடல்கள் இந்த இளைஞன் மெட்டமைத்தது தான். இவனை சாதாரணமாக நினைக்கவேண்டாம். ரொம்ப விஷயம் தெரிஞ்சவன். இவன் ஒரு பெரிய சொத்து சரியான நேரத்தில் இதை சொல்லத்தான் காத்திருந்தேன். இவனை விட்டுடாதீங்க, வாய்ப்புகள் நிறைய கொடுங்க" என்று சொன்னாராம்.
ஒரு இசையமைப்பாளருக்கு அந்த இசை உதவியாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் திறமையை அடையாளம் காண முடிந்தது. பாம்பின் கால் பாம்பு அறியும் சரி. மெல்லிசை மாமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஓர் ஆகச் சிறந்த இசையமைப்பாளர் என்ற எண்ணம் எனக்கு எப்படித் தோன்றியது?
ஒன்று மட்டும் புரிகிறது! எங்கள் அம்மா நன்றாகப் பாடக்கூடியவர். எங்க வீட்டில் நான் இரண்டாம் குழந்தை. என் அண்ணனுக்கு என் அம்மா பாடிய தாலாட்டு பாடல்களை வயிற்றில் இருந்தபோது கேட்டு மயங்கி வளர்ந்திருப்பேனோ? எனக்கு அப்படித்தான் நினைக்க முடிகிறது. கருவினில் இருக்கும் குழந்தையின் கேட்புத் திறனுக்கு பிரகலாதன், அபிமன்யு என்று பல கதைகள் நம்மிடம் உண்டே!
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசை ஒரு பல்பொருள் அங்காடி போல. அங்கு மெல்லிசை, மேற்கத்தியம், கர்நாடகம், இந்துஸ்தானி, பைலா, கிராமியம் என்று எல்லா வகை இசையும் ஒரே திரைப்படத்தில் ஏன் சில நேரங்களில் ஒரே பாடலில் கூட, அத்தனை வகைகளும் கிடைக்கும்!
நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை தோழிகள் கேட்டார்கள் "எப்பவும் ஏன் எம்.எஸ்.வி. பாட்டுக்களையே கேட்குற, அதைப்பற்றியே பேசுற?"
நான் சொன்னேன், "அவர் பாடல்களில் தான் ஒரே பாடலில் மெட்டும் இசையும் மாறி மாறி வரும் அலுப்புத் தட்டாது! இது அக்மார்க் உண்மை! இதை அறுதியாகவும், உறுதியாகவும், இறுதியாகவும் சொல்வேன்.
"லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தில் "ராமன் எத்தனை ராமனடி" என்ற பாடல் இருக்கு. அந்தப் பாடல் பற்றிய ஒரு சுவையான விவரத்தை எம்.எஸ்.வி.அவர்களின் மகன் பிரகாஷ் அவர்கள் அண்மையில் என்னிடம் பகிர்ந்தார்.
ஒரு காலத்தில் பக்தி பாடல்கள், சாஸ்த்திரிய சங்கீதம் தவிர சினிமா பாடல்கள் எல்லாம் கேட்கக் கூடாது என்ற கெடுபிடி பல கட்டுப்பெட்டியான குடும்பங்களில் இருந்தது. அப்படியொரு வீட்டில் அந்த குடும்பத்தின் அப்பா,அம்மா வெளியே போயிருந்தபோது வீட்டுப்பிள்ளைகள் ரகசியமாக "ராமன் எத்தனை ராமனடி" என்றப் பாடலை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
திடீரென அவர்களின் அப்பா, அம்மா வந்துவிட்டார்கள். பாடல் கேட்ட அந்தக் குடும்பத் தலைவர் பிரமித்து நின்றுவிட்டார். சினிமா பாட்டில் இப்படியொரு பாட்டெல்லாம் வருதா? ஆச்சர்யமா இருக்கே என்று சொல்லி என்ன படப்பாடல்? யார் இசை எனக் கேட்டுவிட்டு, மறுநாள் காலையில் 7மணிக்கு எம்.எஸ்.வி.அவர்களின் வீட்டிற்கு சென்று ஒரு தாம்பாளத் தட்டில் பூ, பழம், இனிப்புடன் ஒரு பணமுடிப்பு வைத்து, "ராமன் எத்தனை ராமனடி" என்ற உங்கப் பாட்டைக் கேட்டேன். நெகிழ்ந்துவிட்டேன்! சினிமா பாட்டை கேட்கக் கூடாது என்று இருந்த என்னை இந்தப்பாட்டு கேட்கத்தூண்டியது. என்னால் முடிஞ்ச அன்பளிப்பு" என்றாராம்.
அதற்கு எம்.எஸ்.வி. "இதனை எழுதிய கவியரசர் தான் இந்தப் பாட்டுக்கு காரணகர்த்தா" என்று பணம் வாங்க மறுத்துவிட்டாராம். அன்று முதல் அந்த அன்பர் எம்.எஸ்.வி. குடும்ப நண்பராகி இரு வீட்டினரும் பரஸ்பரம் குடும்ப விழாக்களில் கலந்துக்கொள்ளும் அளவிற்கு பாசமாகி விட்டார்களாம்.
இன்னொரு நிகழ்ச்சி இந்த பாடலுக்கு உண்டு. "கவியரசர் தனது மனதுக்குப் பிடித்தவர்களைப் பற்றி எங்கேயாவது பாடலில் வைத்து எழுதிவிடுவது அவரின் பழக்கம். கவியரசர், தனது வழக்கறிஞர் நண்பரிடம் நான் உங்க குடும்பத்தைப்பற்றி ஒரு பாட்டுல எழுதியிருக்கிறேன்பா என்றிருக்கிறார். நண்பரின் பிள்ளைகள் பெயர் ' ராம்' என்பதில் முடியும். நண்பர் மேலுள்ள பாசத்தினாலும் நட்பின் மீதுள்ள மரியாதையினாலும் நண்பர் குடும்பத்தினர் பெயரை வைத்து எழுதிய பாடல் "ராமன் எத்தனை ராமனடி" என்றார் எம்.எஸ்.வி. அவர்களின் மகன்.
இந்தப் பாடலில் கல்யாண ராமன், சீதா ராமன், ராஜா ராமன், சுந்தர ராமன், கோசல ராமன், தசரத ராமன் ('தச ரத' என்றால் ஒரே நேரத்தில் பத்து ரதங்களை ஓட்டுவாராம். அதனால் அவருக்கு 'தச ரதன்' என்று பெயர். இதை மிகச் சரியாக சொல் பிரித்து கவியரசர் எழுதியதை சரியாகப் பிரித்து பாட வைத்திருப்பார் எம்.எஸ்.வி.) கோதண்டராமன், ஸ்ரீஜெயராமன், ரகுராமன், சிவராமன், ஸ்ரீ ராமன், அனந்த ராமன் என்று ராமனின் 12 பெயர்களையும் பெயர் காரணங்களோடு அமைத்து எழுதிய கவியரசரை என்ன சொல்லி போற்றுவது?
"ராமன்...எத்தனை...ராமனடி" என்று பெண் பார்க்கும் படலத்திற்கே உரிய தயக்கத்துடனும் வெட்கத்துடனும் பி.சுசீலா பாடுவதாக ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் போக்கு ஒவ்வொரு ராமனையும் ரசித்துப் பாடி புகழ்வதும், அதற்கேற்றபடி காட்சிகளில் அந்தந்த ராமனை காட்டுவதும் அழகு. !
தொடர்ந்து புதையல் எடுப்போம்...
இணைய முகவரி:banumathykrishnakumar6@gmail.com
- கவிஞர் கண்ணதாசன் தொடக்கத்தில் நாத்திகராக இருந்து பின்னர் ஆத்திகராக மாறியவர்.
- திருமணம் செலவு குறைந்ததாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
எளிமையையே தங்கள் வாழ்வின் கோட்பாடாகக் கொண்டிருந்தவர்கள் என்று நாம் அண்மைக் காலத்தில் வாழ்ந்த இரண்டு பேரைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஒருவர் மகாத்மா காந்தி. இன்னொருவர் காஞ்சி மகாசுவாமிகள்.
எதிலும் ஆடம்பரத்தையும் பகட்டையும் துறந்து வாழும் போக்கு இயல்பாகவே மகாசுவாமிகள் என்று அழைக்கப்பட்ட பரமாச்சாரியாரிடம் அமைந்திருந்தது. பெரும்பாலும் தென்னங்கீற்று வேயப்பட்ட குடில்களில் தான் அவர் தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமிகள் 1894 முதல் 1994 வரை வாழ்ந்தவர். வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கும் தாய் மகாலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த அவர், 13 வயதிலேயே காஞ்சி மடத்தில் இணைந்து துறவியானார். அதன்பின் 87 ஆண்டுகள் துறவு வாழ்க்கை வாழ்ந்தார்.
அவர் மேல் காந்திக்கும் காந்தி மேல் அவருக்கும் அன்பும் மதிப்பும் இருந்தன. காந்தி தென்னிந்தியாவில் பயணம் செய்த தருணம். கேரளத்தில் பரமாச்சாரியார் முகாமிட்டிருந்த காலகட்டம்.
1927 அக்டோபர் 15-ந் தேதி காந்தி, பரமாச்சாரியாரை பாலக்காட்டின் அருகே இருந்த நெல்லிசேரி கிராமத்தில் தனிமையில் சந்தித்தார். ஒரு மணிநேரத்திற்கும் மேல் நீடித்த சந்திப்பு அது. அந்தச் சந்திப்பில் காந்தி பரமாச்சாரியாரிடம் என்ன பேசினார் என்ற விவரம் எதுவும் அப்போது வெளிப்படவில்லை.
ஆண்டுகள் பல கடந்தன. மகாத்மா காந்தி 1948-ல் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் வெகு காலத்திற்குப் பிறகு 1968-ல் சென்னைப் பல்கலைக் கழகம் `காந்தியச் சிந்தனைகளின் இன்றைய தேவை` என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தியது. அந்தக் கருத்தரங்கையொட்டி, ஒரு மலரும் வெளியிடப்பட்டது. அந்த மலருக்காக பரமாச்சாரியாரிடம் ஒரு வாழ்த்துச் செய்திபெறப்பட்டது.
அதில், `தன்னை யாரேனும் கொல்ல முயன்றாலும் தன்னைக் கொல்பவர் மீதும் அன்பு செலுத்தும் மனம் தனக்கு அமையவே தான் பிரார்த்திப்பதாக` மகாத்மா காந்தி தன்னிடம் கூறியதாய்ப் பரமாச்சாரியார் குறிப்பிட்டிருந்தார்.
சுவாமிகள் எந்த மதத்தையும் வெறுக்கவில்லை. எல்லா மதத்தினரோடும் இணக்கமாக வாழவேண்டும் என்ற கோட்பாட்டையே வற்புறுத்தினார். அவரை கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் கூட மதித்தார்கள். அவர் சித்தி அடைந்தபோது சாரைசாரையாக வந்து முகமதியர்களும் கிறிஸ்துவர்களும் கூட அவருக்கு வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.
எல்லா மதத்தினரும் மற்ற மதத்தினரிடம் பகைமை பாராட்டாமல் அவரவர் மத நெறிப்படி வாழவேண்டும் என்பதே பரமாச்சாரியாரின் கருத்து.
கவிஞர் கண்ணதாசன் தொடக்கத்தில் நாத்திகராக இருந்து பின்னர் ஆத்திகராக மாறியவர். அவர் அவ்விதம் ஆத்திகராக மாறுவதற்கும் பின்னர் `அர்த்தமுள்ள இந்துமதம்` என்ற புகழ்பெற்ற நூலை எழுதுவதற்கும் மகாசுவாமிகள்தான் காரணமாக இருந்தார்.
பரமாச்சாரியாரின் தமிழ்ப் பற்று பெரிதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் பக்தி இலக்கியத்தின் பெருமை பற்றி அவர் பலமுறை வியந்து பேசியிருக்கிறார். முக்கியமாக அவர் தமிழ் மூதாட்டி ஒளவையாரைப் பெரிதும் கொண்டாடினார்.

திருப்பூர் கிருஷ்ணன்
`ஒளவையாரை விடத் தமிழ்நாட்டுக்கு உபகாரம் செய்தவர் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த தேசத்தில் ஒழுக்கமும் பக்தியும் இருந்து வருகிற தென்றால் அது முக்கியமாக ஒளவையாரால் தான் என்று சொல்ல வேண்டும். அவருடைய அன்பின் விசேஷத்தால் அவருக்கப்புறம் எத்தனையோ தலைமுறைகள் ஆனபிறகு இப்போதும் நாம் படிக்க ஆரம்பிக்கிற போதே அவருடைய ஆத்திசூடிதான் முதலில் வருகிறது!' என்பது ஒளவையாரைப் பற்றிப் பரமாச்சாரியார் சொன்ன கருத்து.
பரமாச்சாரியாரது ஆன்மிகத்தின் அடிப்படை மனிதாபிமானம்தான். ஒருமுறை பார்வையற்ற மாணவர்கள் அவரை தரிசிக்க வந்தார்கள். அன்று பரமாச்சாரியார் முழுமையான மவுனம்.
என்றாலும் பார்வையற்ற மாணவர்கள் வந்திருக்கிறார்கள் என்றறிந்ததும் அவர் தம் மவுனத்தைத் துறந்துவிட்டார். பார்வையற்றவர்களுக்குத் தம் குரல்தானே தரிசனம், அவர்களை மகிழ்விப்பதை விடவும் தனது மவுன விரதம் முக்கியமானதல்ல என்று தம் தரப்புக் கண்ணோட்டத்தைப் பிறகு அவர் தம் அன்பர்களிடம் விளக்கினார்.
திருமணங்களில் வரதட்சணை கொடுக்கும் வழக்கத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் பரமாச்சாரியார் முக்கியமானவர். வரதட்சணை வாங்கி நடைபெறும் திருமணங்களில் பரமாச்சாரியாரின் அருளாசியோடு என்று ஏன் அச்சிடுகிறீர்கள் எனத் தம் அன்பர்களைக் கடிந்து கொண்டார் அவர்.
திருமணம் செலவு குறைந்ததாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். பட்டுப் புழுக்களைக் கொன்று நெய்யப்படும் பட்டுத் துணியைக் கட்டக் கூடாது என்பதும் அவரது அறிவுரைகளில் முக்கியமான ஒன்று. சைவ வைணவ பேதங்களை அவர் பாராட்டியதில்லை. தம் பேச்சை முடிக்கும் போதெல்லாம் `நாராயண நாராயண!' என்று திருமால் நாமத்தைச் சொல்லியே நிறைவு செய்வார். ஆண்டாள் அருளிய வைணவக் கவிதை நூலான திருப்பாவையின் புகழைப் பரப்பியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. ஆண்டாளின் பக்தி மயமான வாழ்க்கையின் பெருமையைத் தம் சொற்பொழிவுகளில் அவர் பலமுறை குறிப்பிட்டு ஆண்டாளைப் போற்றியுள்ளார்.
விஞ்ஞானத்திலும் சுவாமிகளுக்கு ஆர்வம் இருந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் அவரிடம் ஆசி பெற வந்ததுண்டு. அப்போதெல்லாம் அவர்களிடம் கேள்வி கேட்டு விண்வெளி ஆய்வு தொடர்பான பல நுணுக்கமான விஷயங்களை அவர் தெரிந்துகொள்வார்.
சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளின் இலக்கியங்களைக் கற்றறிந்து அவற்றில் சிறப்பான புலமை பெற்றிருந்த மகாசுவாமிகள், தமிழையும் கசடறக் கற்றிருந்தார். அவரின் தமிழறிவு உண்மையிலேயே வியக்க வைப்பது.
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியைத் தம் பொருளாதாரப் பிரச்சனை தீர்வதன் பொருட்டுப் பாராயணம் செய்யலாமா என ஒரு தமிழறிஞர் கேட்ட போது, கட்டாயம் பாராயணம் செய்யலாம் எனச் சொன்ன மகாசுவாமிகள், அதற்கான அகச்சான்று கந்தர் அனுபூதியிலேயே இருக்கிறது எனவும் விளக்கினார்.
`குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!` என அதில் வரும் வரியில் வருவாய் என்ற சொல் வருகிறது. அதை `வா` என்ற பொருளில் மட்டுமல்லாமல் `வருவாய் அருள்வாய்`, அதாவது செல்வம் அருள்வாய் என்பதாகவும் பொருள் கொள்ளலாம் அல்லவா என சுவாமிகள் வினவியபோது அவரது தமிழறிவைக் கண்டு வியந்தார் அந்தத் தமிழறிஞர்.
பரமாச்சாரியார் நிகழ்த்திய அற்புதமான சொற்பொழிவுகள் எல்லாம் பற்பல தொகுதிகளாக எழுத்தாக்கப்பட்டுவிட்டன.
வியாசர் சொன்ன மகாபாரதத்தை கணபதி ஒரு தந்தத்தை ஒடித்து எழுதி எழுத்தாக்கினார். அதுவே மகாபாரத இதிகாசமாயிற்று.
பரமாச்சாரியார் பேசிய சொற்பொழிவுகளையெல்லாம் இன்னொரு கணபதி (ரா. கணபதி) பேனாவை எடுத்து எழுதி எழுத்தாக்கிவிட்டார். அந்த நூல் `தெய்வத்தின் குரல்` என அன்பர்களால் கொண்டாடப் படுகிறது.
அவரை ஜகத்குரு என்று அன்பர்கள் போற்றியபோது, உலகம் முழுவதற்கும் இவர் எப்படி குருவாக முடியும் என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். மகாசுவாமிகள், `உலகத்தை நான் குருவாகக் கொண்டவன், ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன் என்பதாகவே ஜகத்குரு என்ற சொற்றொடரை நான் புரிந்துகொள்கிறேன்` என அடக்கத்தோடு தெரிவித்தார்.
கால்நடைபோல பண்பாடில்லாமல் வாழ்ந்த மக்களை மனிதர்களாக மாற்றி உயர்த்துவதற்காக கால்நடையாகவே பாரத தேசம் முழுவதும் நடந்தார். காலடியில் பிறந்த ஆதிசங்கரரின் மரபில் வந்த மகாசுவாமிகளின் காலடி படாத இடம் பாரதத்தில் இல்லை.
தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் அவருக்குத் தெரிந்திருந்ததால், அந்தந்த மாநில மக்களிடம் அவரவர் மொழிகளில் உரையாடி அவர்களை வழிநடத்தினார் அவர்.
மந்திரங்களின் மகிமைகள் குறித்து சுவாமிகள் நிறையப் பேசியிருக்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் செல்வ வளத்தையும் ஆரோக்கியத்தையும் தரும் என்றும் காயத்ரி மந்திரம் இம்மை, மறுமை என இருவித நலன்களையும் தரும் என்றும் சொல்லி மந்திரங்களை பக்தர்கள் ஜபம் செய்வதை ஊக்குவித்திருக்கிறார்.
தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றின் மகிமை பற்றி அவர் நிறைய எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
பணத்தை அவர் ஒரு பொருட்டாக மதித்ததில்லை. தன்னை நாடிவரும் செல்வந்தர்கள் பெரும் தொகையை சமர்ப்பித்தால் அதை ஒதுக்கி வைத்துச் சிரிப்பார். அடுத்து யாரேனும் ஓர் ஏழை தன் பெண் திருமணத்திற்குப் பணம் இல்லை எனக் கண்ணீர் வடித்தால் அந்தத் தொகையை எடுத்துச் செல்லுமாறு அந்த ஏழையிடம் கூறிவிடுவார்.
இப்படித் தம்மை நாடிவந்த பணத்தைத் தொடாமலேயே தேவையானவர்களுக்கு அவர் வழங்கிய சந்தர்ப்பங்கள் அவர் வாழ்வில் ஏராளம்.
தம்மைத் தேடிவரும் அன்பர்களிடம் ஏழை என்றோ பணக்காரர் என்றோ சுவாமிகள் பேதம் பாராட்டியதில்லை. பெரும் பதவியில் இருந்தவர்களையும் சாதாரண மனிதர்களையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்த்தார். அவரைப் பொறுத்தவரை மனிதர்கள் அனைவரும் இறைவனின் படைப்புக்கள், அவ்வளவே.
அவருடைய அந்த `சம நோக்கு' காரணமாகவே மக்களிடையே அவர் புகழ் ஓங்கியது. எண்ணற்ற அடியவர்கள் அவரை நடமாடும் தெய்வமாகவே கருதினார்கள். வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் இறைவனுடைய குணம்தான் அல்லவா?
ஸ்ரீராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று வரலாறு சொல்கிறது. அண்மைக் காலத்தில் நூறாண்டு வாழ்ந்த பெருமை பரமாச்சாரியாருக்கு உரியது. தம் வாழ்நாள் முழுவதையும் மக்களை பண்படுத்துவதற்காகவே செலவிட்ட மகான் அவர்.
இப்போதும் அவர் ஆன்ம ரூபமாக வாழ்ந்து வருகிறார். அவரைப் பற்றிய சிந்தனைகளும் அவரது நூலாக்கப்பட்ட அறிவுரைகளும் இன்றும் மக்களுக்கு வழிகாட்டி, அவர்களை நல்வழிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- கல்லுரியில் சேர இயலாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏராளமான மாணவர்கள் உள்ளனர்.
- வங்கிகளைப் பொறுத்து 8 சதவீதம் முதல் தனி வட்டியாக வசூலிக்கப்படுகிறது.
கடந்த வாரங்களில் வெளிநாடுகளில் சென்று மருத்துவக்கல்வி (M.B.B.S) பயில்வது குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள், தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகள் மற்றும் அட்மிஷன் நடைமுறைகள் குறித்து பார்த்தோம். தற்போது மாணவர்கள் வங்கிகளில் கல்வி கடன் பெறுவது எப்படி? மற்றும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி முடித்து இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்வது எப்படி? என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வங்கிகளில் கல்விக் கடன்: மாணவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவக்கல்விக்கான சேர்க்கை கிடைத்தும், கல்லுரியில் சேர இயலாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு நமது அரசாங்கங்கள் எடுத்த சிறப்பான முன்னெடுப்பு கல்விக் கடன் திட்டமாகும்.
முதன்முதலில் பாரத ஸ்டேட் வங்கியால் 1995-ல் துவங்கப்பட்ட கல்விக்கடன் திட்டமானது பின்பு 28-04-2001ல் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் முறைப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது மாணவர்கள் மிக எளிதாக கல்விக்கடன் பெறும் நோக்கில் இந்தியாவில் உள்ள சுமார் 240 வங்கிகள் (அரசு மற்றும் தனியார்) சேர்ந்த இந்திய வங்கிகள் சங்கம்
மூலம் கல்விக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்விக்கடன் வழிமுறைகள்:
1) அதன்படி மாணவர்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாகவே தேவையான ஆவணங்களுடன் www.vidyalakshmi.co.in என்ற ஒருங்கிணைந்த முகவரியில் பதிவு செய்து கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
2)மாணவர்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் வங்கிகள் online வாயிலாகவே ஒப்புதல் வழங்கும். அதிகபட்சம் 30 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
3) அதன்பின் மாணவர்கள் நேரில் வங்கியை அணுகி தேவைப்படும் சான்றிதழ்களை சமர்ப்பித்து கடன் அனுமதி கடிதத்தை பெற்றுக் கொள்ளலாம்.
4) தற்போது பெரும்பாலான வங்கிகள் மாணவர்களின் கல்லூரி கட்டணத்தை நேரடியாக வெளிநாட்டு கல்லூரிகளின் வங்கிக் கணக்கிலே SWIFT என்ற பன்னாட்டு பரிவர்த்தனை மூலம் செலுத்தி விடுகின்றன.
5) மாணவர்களுக்கு கடன் அனுமதி (Loan Sanction) செய்யப்படும் மொத்த தொகையை 6 வருடங்களுக்கு சமமாகப் பிரித்து ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மாணவர்களின் தகுதி மற்றும் ஆவணங்கள்
1) மாணவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2)10, பிளஸ்2 முறையில் தேர்ச்சி பெற்று அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு கல்லூரியில் அட்மிஷன் பெற்றிருக்க வேண்டும்.

அனிதா காமராஜ்
3)மாணவன் மற்றும் பெற்றோரின் அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று.
4)கல்லூரியில் பெறப்பட்ட கல்லூரி கட்டண விவரத்துடன் கூடிய அட்மிஷன் லெட்டர்.
5)மாணவனின் மதிப்பெண் சான்றிதழ் நகல்.
6)கடவுச்சீட்டு நகல்.
7)வங்கிகள் கேட்கும் ஜாமீன்தாரர் (ஜாமீன் சொத்து விவரங்கள்)
மாணவர்களுக்கு 3 விதமான கல்விக் கடன் திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடன் பெற மாணவர்கள், பெற்றோருடன் சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்தவிதமான ஜாமீனும் தேவையில்லை. மாணவர்களின் அடிப்படை ஆவணங்களை மட்டுமே வைத்து இது செயல்படுத்தப்படுகிறது.
ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக் கடன் பெற பொருத்தமான ஜாமீன் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது அரசுப் பணியில் உள்ள மாணவர்களின் பெற்றோரோ அல்லது வேறு அரசுப் பணியில் உள்ள உறவினர்களோ அவர்களின் சம்பள சான்றிதழுடன் ஜாமீன்தாரராக கையெழுத்திட வேண்டும். அவ்வாறு செய்தால் மேற்படி கல்விக்கடனை எளிதாகப் பெற இயலும்.
ரூ.7.5 லட்சத்திற்கு அதிகமான முழு படிப்பிற்கும் தேவையான கல்விக்கடன்:
வெளிநாடுகள் மற்றும் கல்லூரிகளை பொறுத்து மாணவர்களின் முழு கல்விக்கும் தேவையான கல்விக் கடன் பெற மாணவர்கள் கண்டிப்பாக கடன் தொகைக்கு ஈடான அசையா சொத்துக்கள் ஏதேனும் (பெற்றோருடையதோ அல்லது உறவினர்களுடையதோ) வங்கியில் ஜாமீனாக சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலும் தற்போதைய நடைமுறையில் சமர்ப்பிக்கப்படும் சொத்து மதிப்பில் 75 சதவீதம் கடனாக வழங்கப்படுகிறது.
மாணவர்கள் கல்லூரி கட்டணம் மற்றுமின்றி உணவு, தங்குமிடம், புத்தகம், பயண கட்டணம் மற்றும் இதர செலவுகள் என கல்விக்கான முழுமைக்குமான செலவுகளும் கல்விக்கடன் மூலம் வழங்கப்படுகிறது.
வட்டி விவரம்: கல்விக்கடனாக இருந்தாலும் வங்கிகள் அவ்வப்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதம் இதற்கும் பொருந்தும். வங்கிகளைப் பொறுத்து 8 சதவீதம் முதல் தனி வட்டியாக வசூலிக்கப்படுகிறது.
திருப்பி செலுத்தும் காலம்: கல்வி காலம் முடிந்ததில் இருந்து ஒரு வருடம் கழித்தோ அல்லது வேலை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து ஆறு மாதத்திற்கு பிறகோ, (இதில் எது முன்னதாக வருகிறதோ அதன்படி) திருப்பி செலுத்தலாம்.
இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்தல்:
பல்வேறு வெளிநாடுகளில் மாணவர்கள் மருத்துவக்கல்வி முடித்து பட்டம் பெற்றாலும், அவர்கள் இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்ய வேண்டுமானால் இங்கு நடத்தப்படும் FMGE எனப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது தற்போது வரை இந்தியாவை தவிர வேறு எந்த வெளிநாடுகளில் சென்று மருத்துவக் கல்வி படித்து முடித்தாலும், அவர்களுக்கு இந்தியாவில், முந்தைய "Medical Council of India" ன் 2002 தகுதி தேர்வு விதிமுறைகளின் படி FMGE எனப்படும் FOREIGN MEDICAL GRADUATE EXAMINATION தேர்வானது நடத்தப்படுகிறது.
இந்த தேர்வானது தேசிய மருத்துவக் கல்விக்கான தேசிய தேர்வு வாரியத்தின் (National Board of Examination) மூலமாக ஆண்டிற்கு இருமுறை அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வானது நடத்தப்படுகிறது.
FMGE தேர்வு முறை தேர்வு கட்டணம்:
மேற்கண்ட FMGE தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. 300 கேள்விகள் MCQ எனப்படும் ஒரு வார்த்தை கேள்விகளைக்கொண்ட தேர்வானது இரு பகுதிகளாக நடத்தப்படுகிறது. இதில் 150 மதிப்பெண்கள் எடுத்தாலே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுகிறது. இதில் எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது.
தற்போது தேர்வு கட்டணம் சுமார் ரூ.6,000/- ஆக உள்ளது.
INTERNSHIP - பயிற்சி மருத்துவர்:
FMGE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்து, அதன் வழிகாட்டுதலின்படி இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 12 மாதங்கள் கண்டிப்பாக பயிற்சி மருத்துவராகப் பணிபுரிய வேண்டும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் மாநிலங்களில் மருத்துவராக பணிபுரிய அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவ ஆணையத்தில் (Medical Council) பதிவு செய்து மருத்துவராகப் பணிபுரியலாம்.
இந்தியாவின் M.B.B.S. மற்றும் வெளிநாடுகளின் M.D:
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் இளங்கலை மருத்துவப் படிப்பிற்கு M.D.(Medical Doctor) என்னும் பட்டம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் M.D. என்பது M.B.B.S.க்குப் பிறகான முதுகலை மருத்துவப்படிப்பு ஆகும். எனவே இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கும் பொருட்டு வெளிநாடுகளில் வழங்கப்படும் M.D.பட்டம் இந்திய M.B.B.S-க்கு இணையானது என MCI-ம் தற்போது தேசிய மருத்துவ ஆணையமும் விளக்கமளித்துள்ளது.
விலக்கு அளிக்கப்பட்ட வெளிநாடுகள்:
FMGE தேர்வானது எல்லா வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்கும் பொதுவான நிலையில், சில நாடுகளுக்கு மட்டும் இந்திய தேசிய மருத்துவ ஆணையம் விலக்கு அளித்துள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, USA, UK போன்ற 5 நாடுகளில் மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்கு மட்டும் FMGE தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மேற்கண்ட நாடுகளில் மருத்துவக்கல்வி முடிவதற்கு அவர்களுக்கு அங்கேயே பல கட்ட கடுமையான தேர்வுமுறைகள் உள்ளன.
அரசு மருத்துவராகும் வாய்ப்புகள்:
வெளிநாட்டில் மருத்துவக்கல்வி பயின்ற மாணவர்கள் இந்தியாவில் FMGE தேர்வில் தேர்ச்சி பெற்று, ஓர் ஆண்டு உள்ளுறை பயிற்சியை இந்தியாவில் முடித்து விட்டால் அவர்கள் இந்தியாவில் மருத்துவக்கல்வி பயின்ற மருத்துவர்களுக்கு இணையானவர்கள் என்று இந்திய மருத்துவ ஆணையம் தெரிவிக்கின்றது. எனவே அவர்களும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தகுதி பெற்றவர்கள் ஆவர். இதுபோன்று ஏற்கனவே ஏராளமான மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் தற்போதைய முன்னெடுப்புகள்:
இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் உயர் அதிகார அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம், இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி முடித்த இந்திய மாணவர்கள் என அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பொதுவான ஒரு தகுதி தேர்வை கொண்டு வரும் நோக்கத்தில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்த தேர்வானது NEET நுழைவுத் தேர்வை போல NEXT என்ற பெயரில் மருத்துவக்கல்வி முடித்த அனைத்து இந்திய மாணவர்களுக்கும் இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிய தகுதித் தேர்வாக (Licence Exam) இருக்கும் விதமாக அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் FMGE என்னும் தேர்வுமுறை நீக்கப்பட்டு எல்லோருக்கும் பொதுவான ஒரே தேர்வுமுறை கொண்டு வரப்படும்.
வரும் வாரத்தில் பல்வேறு வெளிநாடுகளின் கல்விமுறை, கல்லூரி விவரம், காலநிலை, மாணவர்களுக்கான உயர் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செல்: 94980 88890
- தண்ணீர் மட்டும் 24 மணிநேரத்திற்கு எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகற்றப்படுகின்றன.
- உண்ணா நோன்பில் மா, பலா, வாழை, பூமிக்கு கீழே விளையும் கிழங்கு வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மருந்தின்றியே நம்மால் வாழ இயலும் என்றாலும் கூட, மீதமுள்ள வாழ்க்கையை நலத்துடன் கழிப்பதற்கு நோன்பு இருப்பது நல்லது. இவ்வுலகில் மனிதர்கள் பலவிதங்களில் உண்ணா நோன்புகளை மேற்கொள்கிறார்கள். மிகவும் நல்ல பழக்கம் என்பதால்தான் கடவுள் பெயரால் எல்லா மதத்தினராலும் இது பின்பற்றப்பெறுகிறது.
இந்துக்கள் சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், அமாவாசை, புரட்டாசி மற்றும் வெள்ளிக்கிழமை அம்மன் விரதம், வியாழக்கிழமை சாய்பாபா விரதம், என்று ஒவ்வொரு கிழமையிலும் குறிப்பிட்ட கடவுளுக்கு விரதம் என்று விரதமுறைகளை மேற்கொள்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு 30 நாட்களும், கிருத்துவர்கள் தவக்காலம் 40 நாட்களும் மேற்கொள்கின்றனர். இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன? நோன்பின் வகைகள், இடைப்பட்ட உண்ணா நோன்பு (Intermittent Fasting) என்றால் என்ன? அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பகுதியில் காணலாம்.

ஐந்து வகையான நோன்புகள்:
* தண்ணீர் நோன்பு - 24 மணிநேரத்திற்கு வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு இருப்பது, இதன் முடிவில் பழச்சாறு அருந்திவிட்டுப் பின்பு, உணவு எடுத்துக்கொள்வதைத் தண்ணீர் நோன்பு என்கிறோம்.
* பழச்சாறு நோன்பு- 24 மணி நேரங்களுக்குப் பழச்சாறு மட்டுமே எடுத்துக்கொள்வது. இதில் வெறும் பழத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழச்சாறு செய்யும்போது சர்க்கரையோ அல்லது பால் பொருட்களோ சேர்க்கக்கூடாது. எதையும் சமைத்துப் பருகக்கூடாது.
* பகுதி நோன்பு - நாளும் மூன்று வேளை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள், ஒரு வேளை உணவைத் தவிர்த்து விடுவது பகுதி நோன்பு ஆகும். இதில் பதப்படுத்தப்பட்ட மற்றும் மாமிச உணவுகளைத் தவிர்த்து விட வேண்டும். இயற்கை உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
* கலோரிக் குறைப்பு நோன்பு - ஒரு நாளைக்கு நமக்கு 2000 கிலோ கலோரிகள் வேண்டும். இதில் 500 கிலோ கலோரிகள் மட்டுமே எடுத்துக்கொண்டு நோன்பு இருப்பது. இது பொதுவாக உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களால் செய்யப்படும் நோன்பாகும். இதற்கு ஒவ்வோர் உணவிலும் உள்ள கலோரிகள் எவ்வளவு என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்றாடம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகளைக் கணித்து 500 கிலோ கலோரிகள் வருமாறு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* இடைப்பட்ட உண்ணா நோன்பு - இதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
மேற்கூறிய ஐந்து வகை உண்ணா நோன்புகளில், மிகவும் சிறந்தது தண்ணீர் நோன்பாகும். தண்ணீர் மட்டும் 24 மணிநேரத்திற்கு எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகற்றப்படுகின்றன. இதனால் நம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. புற்றுநோய் உண்டாகும் செல்கள் அழிக்கப்படுகின்றன. நம் உடல் நலம் மிளிர்கிறது.
இடைப்பட்ட உண்ணாநோன்பு - வகைகள்:
16 மணி நேர உண்ணாநோன்பு: காலை உணவை உண்ணாமல் நண்பகல் உணவை 1 மணிக்குப் பிறகு உண்பது. முந்திய நாள் இரவு உணவை 8 மணிக்கு முன்பே எடுத்துக்கொண்டு, அதற்குப் பிறகு 16 மணிநேரம் எந்த உணவையும் எடுக்காமல் இருப்பதற்குப் பெயர்தான் 16 மணிநேர உண்ணாநோன்பு. இந்த வகையில் உண்ணாமல் இருக்கும்போது தண்ணீர் மட்டும் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம்.
24 மணி நேர உண்ணா நோன்பு: இந்நோன்பு முறையின்போது சமைத்த உணவைத் தவிர்த்துத் தண்ணீர், காய்கறிகள், பழங்கள் மட்டும் 24 மணி நேரமும் எடுத்துக் கொள்ளலாம். இதில் 500-600 கலோரிகள் வரைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மேற்கூறிய நோன்பை விடச் சிறந்ததாகும்.
வாரத்தில் 2 நாட்கள் மட்டும்: இதில் வாரத்தில் 5 நாட்கள் எளிய உணவுப் பழக்கம் மேற்கொண்டு இரண்டு நாட்களில் மட்டும் 500-600 கலோரிக்குள் பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு: ஒரு நாள் எளிய உணவுப் பழக்கவழக்கம், அதற்கு அடுத்த நாள் 500-600 கலோரி மட்டும் எடுத்துக் கொள்வது. இந்த உண்ணா நோன்பை மாதத்தில் 2 முறையாவது பின்பற்றினால் உடல் நலமாக இருக்கும்.
இந்தவித உண்ணா நோன்பில் மா, பலா, வாழை, பூமிக்கு கீழே விளையும் கிழங்கு வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மற்றும் பசியுணர்வைத் தூண்டி விடும் என்பதால், இனிப்புத் தின்பண்டங்களையும் தவிர்க்க வேண்டும்.
இந்த நோன்புகளை மாரடைப்பு, இதயம் தொடர்பான நோய்கள், நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைப்பிடிக்கக் கூடாது.
உண்ணா நோன்பின் நன்மைகள்:
* இன்சுலின் எதிர்ப்புத் தன்மையால் வரும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
* ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
* ரத்த அழுத்தத்தைச் சீரான அளவில் வைக்கிறது.
* 8 வாரங்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு இருப்பதால் 25-32 விழுக்காடு இதய நோய்கள் குறைகின்றன என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
* மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. மூளையில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதால், மூளை மழுங்கு (நினைவுமறதி) நோய் தடுக்கப்படுகிறது.
* வளர்ச்சி ஹார்மோன் நன்கு சுரப்பதால், உடலில் உள்ள தசைகள் வலுவடைகின்றன. இரண்டு நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பு இருந்தால், இந்த ஹார்மோன் சுரப்பது ஐந்து மடங்கு அதிகரிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரு.அ.வேணி MD., DM(Neuro)
75980 01010, 80564 01010
* இளமையாக வாழ இந்த உண்ணா நோன்பு இருக்கும் பழக்கம் உதவி புரிகிறது.
* ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும் என்று ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.
* புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் புற்றுநோய் உள்ளவர்கள் உண்ணாநோன்பு கடைப்பிடிக்கும்போது அளவுமீறிப் பல்கிப்பெருகும் புற்றுசெல்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்கின்றன. இதனால் புற்றுசெல்கள் மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது.
* கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. மேலும் கொழுப்பு படிந்த கல்லீரலைக் குணப்படுத்தவும் இந்த உண்ணா நோன்பு பயன்படுகிறது.
இத்தனை நன்மைகளை நமக்குத் தரும் இந்த உண்ணா நோன்பு இருப்பதற்கு மனக் கட்டுப்பாடு மிகவும் முதன்மையானது. முதல் முறை செய்யும்போது மிகவும் கடினமாகத்தான் தெரியும். ஆனால் தொடர்ந்து செய்யும்போது நம் உடலும், மனமும் ஒத்துழைப்பதையும், தன்னம்பிக்கை மேன்மையுறுவதையும் நம்மால் உணர முடியும். நம் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிந்த பின்னும், இதைச் செய்யாமல் இருப்பது தவறு அல்லவா?






