என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மலரும் நினைவுகள் மீனா- ஆபத்தில் அம்மா... தவிப்பில் நான்...
    X

    மலரும் நினைவுகள் மீனா- ஆபத்தில் அம்மா... தவிப்பில் நான்...

    • அசைவற்ற நிலையில் படுத்து இருந்தார். என் மனதில் பயம் சூழ்ந்தது. அய்யய்யோ... அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று பதறினேன்.
    • சில நாட்கள் ஐ.சி.யு.வில்தான் இருக்க வேண்டும் என்றார்.

    காரைக்குடி....

    செட்டிநாடு என்று பெருமையுடன் அழைக்கப்படும் நகரம். மிக நேர்த்தியாக வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள்தான் இந்த நகருக்கு அழகு.

    சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்ட கூரை வீடுகள் நிறைந்த பகுதி என்பதால் காரைக்குடி என்று பெயர் வந்ததாக சொன்னார்கள்.

    அந்த புகழ் பெற்ற காரைக்குடியில் தான் 'இரணியன்' படப்பிடிப்புக்கு ஏற்பாடாகி இருந்தது. ஐதராபாத்தில் தெலுங்கு பட ஷூட்டிங்கை முடித்து விட்டு அங்கிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் காரைக்குடிக்கு புறப்பட்டோம்.

    2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி. நான் மேல் படுக்கையில் படுத்து இருந்தேன். எனக்கு கீழ் உள்ள படுக்கையில் வேறொரு பயணி பயணம் செய்தார்.

    எதிரே ஒரு 'பெர்த்' காலியாக இருந்தது. எனது கீழ் படுக்கையில் அம்மா படுத்திருந்தார். ஜில்லென்ற குளிர். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் களைப்பும் அதிகமாக இருந்தது. எனவே ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அயர்ந்து தூங்கி விட்டோம்.

    நீண்ட நேர பயணத்துக்கு பிறகு திடீரென்று விழித்து மணியை பார்த்தேன். அதிகாலை 5.30 மணி ஆகியிருந்தது.

    இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டதே என்று அம்மாவை எழுப்பினேன். வழக்கமாக 'அம்மா' என்று லேசாக குரல் கொடுத்தாலே எழும்பி விடுவார். ஆனால் அன்று எழும்பவில்லை.

    களைப்பில் தூங்குகிறார் என நினைத்து தட்டி பார்த்தேன். ம்கூம்.... அசையவே இல்லை. பலமுறை கூப்பிட்டும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

    அசைவற்ற நிலையில் படுத்து இருந்தார். என் மனதில் பயம் சூழ்ந்தது. அய்யய்யோ... அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று பதறினேன்.

    அடுத்த சில இருக்கைகளை தாண்டி அமர்ந்திருந்த டிக்கெட் பரிசோதகரை அணுகி விவரத்தை சொன்னேன்.

    அவர் வந்து பார்த்து விட்டு பயப்படாதீர்கள் தைரியமாக இருங்கள் என்றார். ஆனால் என்னோடு துணைக்கு அருகில் யாரும் இல்லை. என்னுடன் உதவியாளர்களும் அதே ரெயிலில் பயணம் செய்தார்கள். அவர்கள் சில பெட்டிகளை கடந்து 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் இருந்தார்கள். உடனடியாக அவர்களை தேடி கண்டுபிடிப்பது கஷ்டம். எனவே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தேன்.

    என் நிலையை உணர்ந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் 'மேடம், பயப்படாதீர்கள். நான் பக்கத்து ரெயில் நிலையத்துக்கு தகவல் சொல்லி விட்டேன். ரெயில் அங்கு சென்றதும் டாக்டர்கள் தயாராக இருப்பார்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்கும்' என்று நம்பிக்கையூட்டினார்.

    சிறிது நேரத்தில் ஒரு ரெயில் நிலையம் வந்தது. அது காரைக்குடி ஸ்டேசன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேசனும் அதுதான்..

    டாக்டர்கள் விரைந்து செயல்பட்டு அங்குள்ள ஓரு சிறிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். மருத்துவர் பரிசோதித்து விட்டு உங்கள் அம்மாவுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி எங்களிடம் இல்லை. வேறு பெரிய ஆஸ்பத்திரிக்கு தான் அழைத்து செல்ல வேண்டும் என்றார்கள்.

    பெரிய ஆஸ்பத்திரி எங்கு இருக்கிறது? எங்கு அழைத்து செல்வது என்று எதுவும் எனக்கு புரிய வில்லை.

    மதுரையில் 'அப்பல்லோ', 'மீனாட்சி மிஷன்' ஆஸ்பத்திரிகள் உள்ளன. ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்றார்கள். அங்கிருந்து உடனடியாக என்னை அழைத்து செல்ல வந்திருந்த மானேஜர் காரிலேயே மதுரை அப்பல்லோவுக்கு அழைத்து சென்றோம். ஆஸ்பத்திரிக்கு சென்றதும் பரிசோதித்து விட்டு உடனடியாக ஐ.சி.யு.வில் அனுமதிக்க வேண்டும் என்றார்கள்.

    அதற்கு முன் காது, கழுத்து, மூக்கில் அணிந்திருக்கும் நகைகளை கழட்ட வேண்டும் என்றார்கள். இதற்கு முன் இப்படிப்பட்ட அனுபவம் எதுவும் இல்லாததால் எனக்கு எதுவும் புரியவில்லை.

    டாக்டர்கள் சொன்னது போல் நகைகள் ஒவ்வொன்றாக கழட்டினேன். மூக்குத்தியை கழட்டும் போது திருகாணி உள்ளே போய் விட்டால் என்ன செய்வது? என்று பயம். கையெல்லாம் நடுங்கியது.

    எப்படியோ பயந்து.... பயந்து.. கழட்டி விட்டேன். அம்மாவுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம். மதுரையில் எனக்கு யாரையும் தெரியாது. அழுகை... அழுகையாக வந்தது. இந்த காலத்தை போல் செல்போன் வசதி எதுவும் இல்லாததால் தகவல்கள் அறிய, தகவல்களை சொல்ல உதவிக்கு யாரையும் அழைக்க எந்த வசதியும் இருக்க வில்லை.

    ஐ.சி.யு.வில் இருந்த டாக்டர் வெளியே வந்து 'பயப்படாதீங்க. அம்மாவுக்கு 'ஸ்ட்ரோக்' வந்திருக்கு. ஆனால் சரியான நேரத்தில் வந்ததால் எந்த பாதிப்பும் இல்லை. இருந்தாலும் தலையில் ஏதேனும் ரத்த கட்டி ஏற்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும். சில நாட்கள் ஐ.சி.யு.வில்தான் இருக்க வேண்டும் என்றார்.

    அதை கேட்ட பிறகுதான் எனக்கு நிம்மதி வந்தது. அம்மாவை நேரில் சென்று பார்த்தேன். கை, கால்கள் அசைக்க முடியாமல், பேச முடியாமல் படுத்திருந்தார்.

    அம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு மதியம் படப்பிடிப்புக்காக காரைக்குடி புறப்பட்டு சென்றேன்.

    அன்றைக்கு எடுக்கப்பட்ட முதல் சீனே மிக நீண்ட வசனம். அது மட்டுமல்ல. அந்த வசனத்தை பேசும் போதே முகத்தில் கோபம், ஏக்கம் கலந்த காதல் பார்வை எல்லாவற்றையும் வெளிப்படுத்த வேண்டும்.

    ஆஸ்பத்திரி ஐ.சி.யு.வில் அம்மா.. கேமரா முன்பு நான்... அந்த சூழ்நிலையில் முகத்தில் காதல் பார்வையை படர விட வேண்டும்.... எப்படி இருக்கும்? நினைத்து பாருங்கள்? ஆனாலும் சோகத்தையும் மறந்து நடித்து கைதட்டல் பெற்றேன்.

    தினமும் படப்பிடிப்பு முடிந்து மாலையில் ஆஸ்பத்திரி செல்வேன்.

    எனக்கு ஒரு அறை தந்திருந்தார்கள். அங்குதான் இரவில் தூங்குவேன். சென்னையில் இருந்த அப்பாவுக்கு போன் பண்ணி 'அம்மாவுக்கு காய்ச்சல் ஆஸ்பத்திரியில் இருக்காங்க என்று பொய் சொன்னேன். (அப்பா பயந்து விட கூடாதே). ஷூட்டிங் செல்வதற்கு நீங்கள்தான் துணைக்கு வர வேண்டும். உடனே மதுரைக்கு வாருங்கள் என்று அழைத்தேன்.

    கேரளாவில் இருந்த சித்திக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி அவர்களையும் மதுரைக்கு வரவழைத்தேன்.

    மதுரை ஆஸ்பத்திரியில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு ஷூட்டிங் செல்வேன். மதுரையில் இருந்து காரைக்குடிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

    சித்திதான் துணைக்கு வருவார். இப்படியேதான் ஒரு வாரம் சென்றது. ஒருநாள் ஆஸ்பத்திரிக்கு சென்ற போது அம்மா தூங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து ஆஸ்பத்திரி அறைக்கு சென்று நன்றாக தூங்கி விட்டேன்.

    நள்ளிரவு ஒரு மணி இருக்கும். டெலிபோன் மணி ஒலித்தது. ஓடிப்போய் ரிசீவரை எடுத்ததும் ஐ.சி.யு.வில் இருந்து நர்சு கூப்பிட்டார். 'அம்மா, உங்களை அம்மா தேடுறாங்க' என்றார்.

    அதை கேட்டதும் என் மனம் படபடத்தது.

    என்னவோ தெரியலையே என்று பதறியடித்து கொண்டு ஓடினேன். அறைக்குள் சென்றதும் கண் விழித்து படுத்திருந்த அம்மா 'வந்திட்டி யாடி...! இன்னும் காணலையே என்று தேடினேன் என்றார்.

    அம்மா, மணி என்ன தெரியுமா? ஒரு மணி என்றதும் அப்படியா 'போய் தூங்கு' என்றார். அவருக்கு நான் வந்ததும் தெரியவில்லை. நேரமும் தெரியவில்லை.

    தினமும் என்னை பார்த்த பிறகுதான் அவர் தூங்குவார். இன்று வரை அதே நிலைதான். அதுதான் அம்மா.

    (தொடரும்...)

    Next Story
    ×