என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குளுகுளு குடகு மலை!
    X

    குளுகுளு குடகு மலை!

    • குடகு மாவட்டத்தின் எல்லையை தொடும்போது சில்லென்ற காற்று நம்மை வருடும்.
    • காவிரி ஆற்றின் நீர்மட்டத்தை வைத்து ‘ஒயிட் வாட்டர் ரேப்டிங்’ என்ற சாகச படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் குடகு மாவட்டத்தை சுற்றிலும் அரணாகவும் அழகாகவும் கண்களை கவரும் விதமாக காட்சியளிக்கிறது குடகு மலை. கத்திரி வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாதவர்கள் தப்பிக்கவும்.. விடுமுறையில் குடும்பத்துடன் நேரத்தை குதூகலத்துடன் செலவழிக்க விரும்புபவர்களுக்கும் இயற்கை என்னும் இளைய கன்னியை ரசிப்பவர்களுக்கும் மலையேற்றம் (டிரெக்கிங்) போன்ற சாகச நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கும் கர்நாடகா மற்றும் கேரளத்தின் இடையே உள்ள இந்த கோடை வாழ் தலம் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.. வாருங்கள்...! இந்த அருமையான சுற்றுலா தலத்திற்கு பயணிப்போம்.

    கூர்க் என்று அழைக்கப்படும் குடகு மாவட்டத்தின் தலைநகர், மடிக்கேரி. ஆங்கிலத்தில் மெர்க்காரா என அழைக்கப்படும் இந்தப் பகுதி ஆங்கிலேயருக்கு பிடித்த வகையில் இயற்கையிலேயே குளுகுளுவென இருந்ததால் குடகு அரசர்களுக்கு பின்பு அவர்கள் கைவசம் இருந்திருக்கிறது.

    குடகு மாவட்டத்தின் எல்லையை தொடும்போது சில்லென்ற காற்று நம்மை வருடும். வழியெங்கும் காபி எஸ்டேட்கள்... இடையில் ஆரஞ்சு.. மிளகு கொடிகள்... அடி கனத்த மரங்கள்... போன்றவையும், கண்களை கவரும்.

    மைசூரு நகரத்தில் இருந்து 3 மணி நேர பயணத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைலக்குப்பா என்ற இடம் நமது நாட்டிற்குள் குட்டி திபெத் நாட்டைப் போல இயங்குகிறது. 1960-ம் ஆண்டு திபெத்திய அகதிகளுக்கு கர்நாடக மாநிலம் அளித்த பரந்த நிலப்பரப்பில் பத்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்து திபெத் நாட்டினை போன்றே.. கலாச்சாரம். உணவு பழக்க வழக்கங்கள்.. ஆடைகள்.. புத்த துறவிகள் தோற்றம் கொண்டவர்களாய் வலம் வருகின்றனர். இங்குள்ள பொற்கோவிலில் பொன்னால் ஆனதுப் போல் புத்தர் சிலைகள் அத்துனை அழகு. சுவர்களில் உள்ள வண்ண வண்ண ஓவியங்களும் திபெத்தியக் கலை நுணுக்கத்தை உணர்த்துகின்றன. இந்த முகாம்களை சுற்றி வருகையில் மெரூன் நிற ஆடைகளை அணிந்து பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் முதல் பல்கலைக்கழகம் படிக்கும் பெரியவர்கள் வரை அவர்கள் நாட்டு பண்பாட்டில் திளைத்தவர்களாக இருப்பதை காண முடிகிறது.

    அவர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை விவசாய பூமி ஆக்கியது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஸ்வெட்டர் பின்னுதல் கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்தல் போன்ற தொழில்களின் மூலம் சுறுசுறுப்பாக உழைக்கின்றனர். தற்போது சுமார் 70 ஆயிரம் மக்களுக்கு மேல் வசிப்பதால் நமக்கு திபெத்தில் இருப்பதைப் போன்ற உணர்வே ஏற்படுத்துகின்றது என்பதால் இது ஒரு சுற்றுலா தலமாக அனைவரையும் ஈர்க்கிறது.

    அருகிலேயே குஷால் நகர் பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் 'காவிரி நிசர்க தாமா' என்ற சிறிய பூங்கா குழந்தைகள் சுற்றி விளையாடும் வகையில் உள்ளது. குஷால் நகரில் இருந்து சித்தாப்பூர் போகும் வழியில் 'துபாரே' என்ற வனப்பகுதியில் யானைகளின் முகாம் காணப்படுகிறது. இங்கு ஆனைகள் தும்பிக்கையில் நீர்ப் பீய்ச்சியடித்து குளித்து மகிழ்வதை.. சாப்பிடுவதை அருகில் இருந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கிடைப்பதால் அனைவருக்கும் பிடித்தமான இடமாக அமைகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மழைக்காலம். அதன் பின் காவிரி ஆற்றின் நீர்மட்டத்தை வைத்து 'ஒயிட் வாட்டர் ரேப்டிங்' என்ற சாகச படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது. பயம் கலந்த மகிழ்ச்சியுடன் மக்கள் கூக்குரலிட்டவாறு படகு சவாரியை ரசிக்கின்றனர்.

    மடிக்கேரி:

    குடகு மாவட்டத்தில் தலைநகராக உள்ள இந்த நகரத்தின் தொடக்கத்திலேயே ராஜா சீட் என்ற வண்ண மலர்களால் ஆன பூங்கா நம்மை இதமான குளிருடன் வரவேற்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் பெஞ்சுகளில் அமர்ந்து புகைப்படங்கள் எடுப்பதும் இயற்கையை ரசிப்பதுமாக சுற்றுலா பயணிகள் வலம் வருகின்றனர். காலை நேரத்தில் இங்கு நம் எதிரே மிதந்து செல்வது மேகக் கூட்டமா... பனிமூட்டமா என்று அறியாமல் நமக்கு கீழே மூடியிருக்கும் வெண் பஞ்சு பொதிகள் விமான பயணத்தை நினைவூட்டுவதாக இருக்கக்கூடிய ரம்யமான சூழல் மிகவும் அழகு.

    தொடர்ந்து 1 கி.மீ. அருகிலேயே லிங்க ராஜேந்திர உடையார் என்ற குடகு அரசர் கட்டியதாக கூறப்படுகின்ற கோட்டை உள்ளது. தற்போது அதனை பயணிகளை கவரும் வகையில் மீட்டுருவாக்கம் செய்து வருகின்றனர். நகரத்தின் நடுவிலேயே உள்ள ஓம்காரேஸ்வரர் கோவில் நமக்கு பஞ்சாப்பில் உள்ள பொற்கோவிலை நினைவூட்டக்கூடியதாக இருக்கிறது. இந்தக் கோயில் காலை 6 மணியில் இருந்து 12 மணி வரையும் மாலை 5 மணியில் இருந்து 8 மணி வரையும் திறந்து இருக்கக்கூடியது. அமைதியான சூழல் நமக்கு நிம்மதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

    தலை காவிரி:

    மடிக்கேரியில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் தலைக்காவேரி என்று அழைக்கப்படும் காவிரி உற்பத்தியாகும் சிறிய குண்டம் போன்ற இடமும் அங்கேயே குளமும் காணப்படுகிறது. இங்கு ஐப்பசி மாத தொடக்கத்தில் அக்டோபர் 17, 18-ந் தேதிகளில் காவிரி நீர் பொங்கி வருவதை காணலாம். அந்நாளில் குடகு மாவட்டத்தை சேர்ந்த கொடவா மக்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி அந்த குளத்தில் துலா நீராடல் செய்யும் புண்ணிய தலமாக தலைக்காவேரி விளங்குகிறது. தென்னிந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இந்த குளத்தில் குளித்து அருகே உள்ள கோயிலில் இறைவனை வணங்கி மலையடிவாரத்தில் பாகமண்டலா என்னும் இடத்தில் கன்னிகா.. காவேரி...சுஜோத்தி என்ற மூன்று நதிகள் இணையும் முக்கூடலில் (திரிவேணி சங்கமம்) பயணிகள் நீராடி அருகில் உள்ள பாகனேஸ்வரா.. விஷ்ணு... சுப்ரமணிய சாமியை வழிபடுகிறார்கள்.

    மடிக்கேரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள *நாப்போல்* என்ற ஊரில் *நாக்கு நாடு அரண்மனை* உள்ளது கூர்க் அரசர் தனது குடும்பத்துடன் சில காலம் இந்த அரண்மனையில் தங்குவார் என்று அந்த ஊர் மக்கள் பெருமையுடன் சொல்கின்றனர்.

    பாடி இக்கு தப்பே என்ற இடத்தில் சிவன் மற்றும் சுப்பிரமணியர் கோவில் உள்ளது இந்த கோவில் கொடவா இன மக்களின் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது போன்ற சுப காரியங்கள் நடத்துகிறார்கள். அருகில் இருக்கும் தாடியண்ட மோலு பெட்டா என்ற இடத்திற்கு மலையேற்றம் செல்கிறார்கள். யூத் ஆஸ்டல் ஆர்கனைஸ் என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்கிறது. இதன் அருகில் தங்குவதற்கு ரூம்ஸ்டே வசதிகள் இருக்கின்றன. இயற்கை சூழலில் தங்குவதற்கு மக்கள் முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் குடகின் கிழக்கு, மேற்கு, தெற்கு போன்ற பகுதிகளில் அனைத்து வசதிகளும் உள்ளன.

    கோணிகுப்பல் என்னும் ஊரில் இருந்து பொன்னம்பட்டு தாண்டி டீ ஷெட்டி கேரே என்ற இடத்தில் டாட்டாவின் டீ எஸ்டேட் ஊட்டியில் இருப்பது போல் பரந்து விரிந்த அளவில் ஒழுங்காக பயிரிடப்படுவது கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சி. அதன் அருகில் மிருதஞ்செய கோயில் என்ற கோவில் ஆரோக்கியம் வழங்கக்கூடிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

    தென் குடகு மாவட்டத்தில் உள்ள இருப்பு நீர்வீழ்ச்சி பார்க்க வேண்டிய ஒரு இடமாகும். ராமன் சீதையை மீட்டுக் கொண்டு திரும்பி வரும் வழியில் சீதையின் தாகம் தீர்க்க அம்பை விட்டு எய்த இடம் ராம தீர்த்தம் லட்சுமண தீர்த்தம் என்று ராமாயண காப்பியத்தை சார்ந்து முக்கிய புராண வழிப்பாட்டுக்குரிய தலமாக இருக்கிறது.

    சாந்தஹல்லி வனப்பகுதியின் அருகே உள்ள புஷ்பகிரி கோயில் தாரகாசுரனை அழிக்க கார்த்திகேயனை பெற்றெடுக்க சிவ பார்வதி திருமணம் செய்த தலமாக கருதப்படுகிறது. இதன் அருகில் உள்ள மல்ஹள்ளி நீர்வீழ்ச்சியும் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல வெண்மையாக தெறிக்கும் நீர்த்திவலைகளுடன் குளிர்ச்சியளிக்கிறது.

    இர.தேன்மொழி

    ராஜீவ் காந்தி தேசிய பூங்கா ஒரு பகுதி மைசூருவையும் இன்னொரு பகுதி குடகையும் வளைத்திருக்கிறது. இந்த பூங்காவில் பலவகை மான்கள், காட்டெருமை, யானைகள், புலிகள் காட்டுப்பன்றி, சிறுத்தை, காட்டு பூனை போன்ற வனவிலங்குகளை பாதுகாக்கும் பகுதியாகவும் இருக்கிறது. வனவிலங்குகளை காணும் போது நாமும் குழந்தைகளோடு குழந்தையாக மாறி குதூகலிக்கும் அளவிற்கு சபாரி அமைகிறது.

    இங்கு பெண்கள் புடவை அணியும் முறை மாறுபட்டு காணப்படுகிறது. கொடவா மொழி... தமிழ், கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவர்கள் உணவில் அரிசி ரொட்டி, பன்றி இறைச்சி அதிகமாக சுப நிகழ்வுகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. அனைவரும் படித்தவர்களாக நேர்மையுடன் நடந்து கொள்பவர்களாக நடப்பது குடகின் சிறப்பு. தேவையான தங்குமிடம் வாகன வசதிகள் போன்றவை சரியான விலையில் கிடைக்கக்கூடியதாகவும் தமிழகத்திற்கு அருகிலேயே இருப்பதால் நம் மக்கள் விடுமுறை நாட்களில் குடகு மலை முழுவதும் மூன்று நான்கு நாட்களாக தங்கி இருந்து வலம் வரலாம். தற்போது தென்மேற்கு பருவமழையின் முதல் மழை ஆரம்பித்தவுடன் எங்கும் பசுமையாக இருக்கக்கூடிய குடகு மலை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    இணைய முகவரி:

    thaenmozhi27@gmail.com

    Next Story
    ×