என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சனியின் வக்ர பலன்கள்
- சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும்.
- 12 ராசியினருக்கும் உண்டாகப்போகும் மாற்றங்களைக் காணலாம்.
கோட்சாரத்தில் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்த சனி பகவான் 30.6.2024 முதல் 15.11.2024 வரை வக்ரகதியில் சஞ்சாரம் செய்யப் போகிறார். இதனால் 12 ராசியினருக்கும் உண்டாகப்போகும் மாற்றங்களைக் காணலாம்.
மேஷம்
ராசிக்கு 11-ம் இடத்தில் நின்று லாபத்தையும், பாதகத்தையும் சம விகிதத்தில் வழங்கிக் கொண்டு இருந்த சனி பகவான் 9, 12ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். ஆன்மீக பயணம் செல்வதில், வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் ஆர்வம் கூடும். வீண் விரயம், வைத்தியச் செலவுகள் குறையும். அறுவை சிகிச்சை வரை சென்ற கை, கால், மூட்டு வலி பிரச்சனைகள் தாமாக சீராகும். தந்தை, தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய காலம். காரணமற்ற இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட அலைச்சல், அலுப்புகள் குறையும். ராசிக்கு சனி பார்வை இருந்ததால் உடல் நலனில் நிலவிய பாதிப்புகள், மனசஞ்சலம் அகலும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையத் துவங்கும். பூர்வீகச் சொத்து மற்றும் பாகப் பிரிவினை தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் பேச்சு வார்த்தையில் சீராகலாம். வழக்கம் போல் தொழிலில் நல்ல முன்னேற்றப் போக்கு தென்படும். லாபம் சற்று ஏற்ற, இறக்கமாக இருக்கும். மறு விவாக முயற்சியில் நேரமும், காலமும் விரயமாகும். சுப பலனை அதிகரிக்க சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விநாயகரை வழிபட வினைகள் விலகும்.
ரிஷபம்
ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார். பூரட்டாதி குருவின் நட்சத்திரம். குரு பகவான் ரிஷப ராசிக்கு 8, 11-ம் அதிபதி. அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதி. அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் வக்ர மடைகிறார்
விபத்து கண்டம், சர்ஜரி, அவமானம் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். முக்கிய பஞ்சாயத்துகள் வழக்குகள் இழுபறியாகும். மூத்த சகோதரம், சித்தப்பாவை பகைக்காமல் இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்கள் அதிக முதலீட்டில் பெரிய தொழில் நடத்துபவர்கள் சுய ஜாதக பரிசீலனை செய்து கொள்வது நல்லது. தனிமை உணர்வு நீங்கும். வெளிநாட்டுப் பயண முயற்சி சித்திக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். திருமண முயற்சியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசு உத்தியோக முயற்சி இழுபறியாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் நிலவிய தடைகள் அகலும். வீடு, வாகன, தொழில் கடனால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும். முன்னோர்கள் வழிபாடு மிக அவசியம்.
மிதுனம்
ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார். குரு மிதுன ராசிக்கு 7, 10-ம் அதிபதி. நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம். புதிய தொழில் முயற்ச்சியில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம். திருமண முயற்சிகள் இழுபறியாகும். எந்த செயலிலும் உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுக்க வேண்டிய நேரம். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. புதிய முயற்சிகளில் கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம். தொழில் போட்டிகள் உருவாகலாம். அலைச்சல் மிகுதியாகும். வேலைப் பளு அதிகமாகும். தம்பதிகளுக்குள் நிவவிய பனிப்போர் விலகும். மேலும் சுப பலனை அதிகரிக்க சனிக் கிழமை முன்னோர்களை வழிபடவும்.
கடகம்
ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுகிறார். கடக ராசிக்கு குருபகவான் 6,9ம் அதிபதி என்பதால் உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வேலை இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு அவரவர் திறமைக்கும் தகுதிக்கும் தகுந்த வேலை கிடைக்கும்.
தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும்.வியாபாரத்திலும் வருமானத்திலும் ஏற்பட்ட தடைகள் அகலும். வாழ்க்கையை செம்மையாக நடத்த தேவையான ஜீவனங்கள் வரத் துவங்கும் . கடன்களை அடைக்கும் மார்க்கம் தென்படும். இடமாற்றத்தால் ஏற்பட்ட சங்கடங்கள் மாறும். கல்வித்தடை, உற்றார் உறவினர் பகை, டென்ஷன், ஆரோக்கியக் குறைபாடு இருந்த இடம் தெரியாது.
அரசு வேலை முயற்சி கைகூடும். வீடு, வாகன, தொழில் கடனால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் நிலவிய தடைகள் அகலும். வீடு கட்டும் பணி துரிதமாகும். பிரிந்த தம்பதிகள் கூடி வாழ்வார்கள்.தீர்த்த யாத்திரை, ஆன்மீக யாத்திரை, முன்னோர்கள் வழிபாட்டின் மூலம் இன்னல்களில் இருந்து விடுபட முடியும்.
சிம்மம்
ராசிக்கு ஏழாமிடமான சம சப்தம ஸ்தானத்தில் நின்று கண்டகச் சனியின் பலனை வழங்கிக் கொண்டு இருந்த சனி பகவான் ராசிக்கு 5,8ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுகிறார். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் தொடர்பான விசயங்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். காதல் விசயங்கள், எதிர்பாலின நட்பால் அசிங்கம், அவமானம் ஏற்படலாம். பிள்ளைகளை சொந்த பொறுப்பில் பாதுகாப்பது நல்லது உற்றார், உறவினர்களுடன், குடும்ப உறவுகளுடன் கனிவுடன் பேச வேண்டும். தவறான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்க்க வேண்டும். சிலர் தொழில், உத்தி யோகத்திற்காக வெளியூர், வெளிநாடு, செல்லலாம். பூர்வீக சொத்து தொடர்பான பணிகளை ஒத்தி வைக்கவும்.தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயர்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழலாம். வழக்குகள் இழுபறியாகும். நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தகப்பனாருடன் ஏற்பட்ட வருத்தம் மறையும். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கத் துவங்குவார்கள். சனிக்கிழமை சிவ வழிபாடு செய்யவும்.
கன்னி
ராசிக்கு ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரமடைகிறார். ராசிக்கு 4, 7-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார். மிக மோசமான பிரச்சனைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடிய நல்ல நேரம் ஆரம்பமாகிவிட்டது. பள்ளி, கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். தாயுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். சொத்து வாங்குவது, விற்பது போன்றவற்றை ஒத்தி வைக்கவும். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். நீண்ட நாட்களாக அவதிப்படுத்திய நோய்க்கு நிவாரண காலம். திருமண முயற்சிகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கும். வேலை பார்த்த இடத்தில் சக ஊழியர்கள், உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து உதவுவது நல்லது.
ஐ.ஆனந்தி
துலாம்
ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சனி பகவான் ராசிக்கு 3, 6-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார். எனவே பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். அரசியல் நாட்டம் மிகும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். காதல் விவகாரங்களால் அவமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சற்று குறைவுபடும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகள் இழுபறியாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகத்திற்கு சென்று வருவதை ஒத்தி வைப்பீர்கள். சிலர் தொழில், வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். தினமும் பட்சிகளுக்கு தானியமிட முன்னேற்றம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
ராசிக்கு 4-ம்மிடத்தில் நின்று அர்தாஷ்டமச் சனியின் பலன்களை வழங்கிய சனி பகவான் 2,5ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுகிறார்.
ராசி மற்றும் 6-ம் இடத்தை சனி பார்த்ததால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். தடை தாமதமான உங்களின் முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் வங்கிப் பணி, ஆடிட்டிங், ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். காதல் விவகாரங்களால் அவமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சற்று குறைவுபடும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகள் இழுபறியாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகத்திற்கு சென்று வருவதை ஒத்தி வைப்பார்கள். மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. குல தெய்வ வழிபாடு முன்னேற்றம் தரும்.
தனுசு
ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் வக்ரம் அடைகிறார். ராசி அதிபதி மற்றும் 4-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைகிறார். இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும். இது நாள் வரை உங்களை ஆட்டிப்படைத்த இனம் புரியாத மன சஞ்சலம் விலகும்.
கிட்டச் சென்றாலும் எட்டிச் சென்ற உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள். தொழிலில் நிலைத்து நிற்க முடியுமா? என்ற மன பயத்துடன் இருந்தவர்களுக்கு திருப்பு முனையான நேரம். பொருளாதாரம், ஆரோக்கி யத்தைப் பொறுத்தவரை திருப்தியான காலம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். மலைபோல் வந்த பிரச்சனைகள் பனி போல் விலகும். வீடு கட்ட, வாகனம் வாங்க எடுத்த முயற்சியில் சிறு கால தாமதம் உண்டாகும். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும். வாழ்க்கைத் துணையின் மூலம் தக்க உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து எதிர்பாராத தன வரவு கிடைக்கும். புத்தாடை, தங்கம், வெள்ளி நகைகள் வாங்கும் யோகம் கிடைக்கும். ஆயுள், ஆரோக்கியம் பற்றிய பயம் விலகும். சனிக்கிழமை பைரவரை வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் 3,12ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் செல்கிறார். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வீடு கட்டுதல், வாங்குதல், சொத்துக்களை விற்றல் தொடர்பான பணிகள் தடையில்லாமல் நடந்து முடியும். ஞாபகசக்தி கூடும். காது, மூக்கு, தொண்டை சார்ந்த பிரச்சினைகள் சீராகும். கை மறதியாக வைத்த பொருள், காணாமல் போன ஆவணங்கள், திருட்டுப் போன நகைகள், பொருட்கள் திரும்ப கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். பொருளாதார நிலையில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏற்றத் தாழ்வை சமாளிக்க கடன் பெறும் சூழல் உருவாகும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். பெண்களுக்கு தாய் வழி சீதனம் கிடைக்கும்.சுய ஜாதக கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும். காதல் விவகாரங்களை ஒத்திப்போடுவது நல்லது. ஏழை தொழிலாளிகளுக்கு உதவவும்.
கும்பம்
ஜென்ம ராசியில் நின்ற சனி பகவான் 2,11ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைகிறார். ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். கண், பல் தொடர்பான பிரச்சனைக்கு வைத்தியம் செய்ய நேரும். சகோதரர்களால் வீண் விரயம் உண்டு. கடன் பெற்று சொந்த வீடு வாங்குவீர்கள்.வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். மறுமண முயற்சி சித்திக்கும். தொழிலால், தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். அதிக முதலீடு கொண்ட புதிய செயல்களைத் தவிர்க்கவும். இயன்றவரை வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது. குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். நண்பர்களுக்காக பணம் கடன் வாங்கி கொடுத்து அந்த கடனை நீங்களே ஏற்றுக் கொள்ள நேரலாம். வழக்கு வெற்றிகள் சாதகமாகும் அல்லது தீர்ப்பு தள்ளிப்போகும். உடல் நிலை மேம்படும். அரசிடமிருந்து வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். கண் சிகிச்சை செய்பவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி வழங்க வேண்டும்.
மீனம்
ராசிக்கு பனிரெண்டில் விரய ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் வக்ரம் பெறுகிறார். ராசி மற்றும் 10ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைகிறார். திருமண வயதில் இருப்பவர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். புத்திரப் பிராப்தம் கிடைக்கும். சிலர் தொழில், வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். அலுவலகத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள்.
உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் தேடி வரும். இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். வைத்தியச் செலவு, நோயிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். முன்னோர்கள் வழிபாடு மிக அவசியம்.
செல்: 98652 20406






