என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • 12 பாவகங்களில் ராகு, கேதுகள் அமர்ந்த கர்ம வினைப் பதிவுகளுக்கான விளக்கங்களை பார்க்க இருக்கிறோம்.
    • இரண்டு கட்டங்களை தன் கட்டுக்குள் வைத்துக் கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு/கேதுக்கள்.

    மனித குலத்தையே அச்சுறுத்தலோடு, பதட்டத்தோடு வைத்திருக்கும் ஒரு தோஷம் உள்ளது எனில் அது ராகு/கேது தோஷமாகும். ஒரு ஜாதகத்தில் உள்ள பன்னிரெண்டு கட்டங்களில் ஏதேனும் இரண்டு கட்டங்களை தன் கட்டுக்குள் வைத்துக் கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு/கேதுக்கள்.

    ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலையே பிரம்மாண்டப்படுத்தும் .கேது சுருக்கும். ராகு | கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகத்தையோ அல்லது அவயோகத்தையோ சந்திக்கின்றார்கள். மனிதனுடைய வாழ்வியல் மாற்றங்களை வழி நடத்தக் கூடிய கர்ம அதிகாரியாக ராகு, கேதுக்களை கூறலாம். ஏற்கனவே கடந்து வந்த ஜென்ம வாசனையின் அனைத்து நல்ல,கெட்ட சம்பவங்களையும் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிற ஜென்மத்தில் நடக்கும் அனைத்து நல்ல, கெட்ட செயல்களுடன் இணைத்து புதிய பதிவுகளை பதிவு செய்யும் வினைப் பதிவாளராகவும் அதற்கேற்றபடி வினை தூண்டும் கர்ம வினைகளைத் ஊக்கியாகவும் ராகு, கேதுக்கள் செயல்படுகின்றன. 12 பாவகங்களில் ராகு, கேதுகள் அமர்ந்த கர்ம வினைப் பதிவுகளுக்கான விளக்கங்களை பார்க்க இருக்கிறோம். இவை அனைத்தும் முன்ஜென்ம வினையின் தொடர்ச்சி. இதில் கொடுக்கப்பட்ட பலன்கள் அனைத்தும் அவரவர் ஜென்ம லக்னத்திற்கே உறியது. ராசிக்கு அல்ல.

    லக்னத்தில் ராகு 7-ல் கேது

    ஒருவரை வாழ விடாமல் செய்வது, தவறாக வழி நடத்துவது, கெட்ட பழக்கங்கள் ஏற்பட காரணமாக இருப்பது, தொழில் கூட்டாளியை ஏமாற்றிய குற்றம், திருமண விஷயத்தில் கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் ஏமாற்றிய வினையை தீர்க்க எடுத்த பிறப்பு என்று கூறலாம். இதன் பலனாக இந்த ஜென்மத்தில் கோச்சாரத்தில் லக்னத்தில் ராகு 7 ல் கேது வரும் போது சம்பந்தமே இல்லாத நபரால் பாதிக்கப்படுவது, மனவேதனைபடுவது, தொழில் கூட்டாளியால் ஏமாற்றப்படுவது, களத்திரத்துடன் கருத்து வேறுபாடு, திருமணம் தள்ளிப் போவது போன்ற பலன்கள் நடக்கும்.

    பரிகாரம்

    இது போன்ற பிரச்சனையை அனுபவிப்பவர்கள் பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைப்பதுடன் இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகரை செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல்-9 மணிக்குள் வழிபாடு செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

    2-ல் ராகு 8-ல் கேது

    நல்ல கணவன், மனைவியை பிரித்தவர்கள், தம்பதியினரை வாழ விடாமல் செய்தவர்கள், பொய் சாட்சி சொல்லி ஒரு குடும்பத்தை கெடுத்த வினையை தீர்க்க பிறந்த கர்ம வினைப் பிறப்பாகும். மேலும் ஒருவரை கெடுக்க மாந்தரீகம் செய்தவர்கள். உழைத்த கூலியை கொடுக்காதவர்கள், பொய் சொல்ல அஞ்சாதவர்களுக்கு இத்தகைய அமைப்பு ஏற்படுகிறது. இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு கோச்சாரத்தில் இரண்டில் ராகு 8-ல் கேது வரும் போது குடும்பத்தை விட்டு பிரியும் நிலை, தவறான வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் மனவேதனை தரும் மறு விவாகம் ஏற்படும். இதன் பலனாக இந்த அமைப்பு உடையவரின் திருமண வாழ்க்கையில் நெருடல், மனவேதனை, களத்தரத்துடன் பிரச்சனை இருக்கும்.

    பரிகாரம்

    இதற்கு பரிகாரமாக பொருளாதார பற்றாக்குறையால் திருமணம் செய்ய முடியாமல் இருப்பவர்களின் திருமணத்திற்கு உதவி செய்வதுடன் ஊரின் வடக்கு பகுதியில் உள்ள புற்றை செவ்வாய் கிழமைகளில் வழிபாடு செய்ய வேண்டும்.


    3-ல் ராகு 9-ல் கேது

    உடன் பிறந்தவர்களுக்கு உரிய பங்கை அபகரித்தவர்கள், உதவி செய்யக் கூடிய சக்தி இருந்தும் உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்யாதவர், அவர்களின் வாழ்க்கை அழிய காரணமாக இருந்தவர், வீண் வதந்தியை பரப்புதல் பேய், பிசாசு, செய்வினை என்று கூறி பணம் பறித்த குற்றம், நல்லவர் மனதை நடுங்க வைப்பது , தானம் கொடுப்போரை தடுப்பது போன்ற குற்றங்கள் அடங்கும். இதன் பலனாக இந்த பிறவியில் தங்களின் உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்மை செய்தால் அவப் பெயரே மிஞ்சும். கோச்சாரத்தில் 3-ல் ராகு 9-ல் கேது வரும் போது உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் முன்னோர்களின் சாபமும் ஏற்படும்.

    பரிகாரம்

    உடன் பிறந்தவர்களின் வாரிசுகளுக்கு தேவையான உதவியை செய்தல், வயதானவர்களுக்கு உணவு, ஆடை தானம் செய்தல், முன்னோர்களுக்கு முறையான திதி, தர்பணங்களை செய்து வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும்..

    4-ல் ராகு 10-ல் கேது

    தாயை பராமரிக்காத குற்றம், தாய் வழி உறவினர்களை அவமதித்த குற்றம், வீட்டில் வாடகைக்கு இருப்பவரை துன்புறுத்துதல், அதிக வாடகை வாங்குதல், தன்னிடம் வேலை பார்ப்பவரை அடிமைப்படுத்தி முன்னேனேற்றத்தை முடக்குதல், ஒருவரின் தொழிலை பாதிக்க செய்தல், ஒருவர் ஊரை விட்டு வெளியேற காரணமாக இருத்தல், மண் புற்றுக்களை இடித்தல் ஆகிய குற்றமுடைய அமைப்பாகும். இதன் பலனாக இந்த ஜென்மத்தில் சொந்த வீடு பாக்கியமின்மை, பல வீடு இருந்தும் வாடகை வீட்டில் வாழும் நிலை, தனது சொத்துக்களை பயன்படுத்த முடியாமல் வைத்து வேடிக்கை பார்க்கும் நிலை, அடிமைத் தொழில் செய்து கஷ்ட ஜீவனம் செய்யும் நிலை, சாதாரண தொழிலை கூட கடும் போராட்டத்துடன் நடத்த வேண்டிய நிலை வரும். கோச்சாரத்தில் 4-ல் ராகு/-10-ல் கேது வரும் போது வீடு வாகன பராமரிப்பால் இழப்பு அல்லது சொந்த வீட்டை இழத்தல், தொழிலை இழுத்து மூடும் நிலை போன்றவை ஏற்படும்.

    பரிகாரம்

    தாயை பராமரித்தல், தாய் வழி உறவினர்கள் வயதான பெண்களுக்கு தேவை அறிந்து உதவுதல் தெருவோரம் வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு குடிசை அமைக்க உதவுதல். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க செய்தல். ஜீவனத்திற்கு சிரமப்படுபவர்களுக்கு அடிப்படை தேவையை நிறைவு செய்ய உதவி வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    5-ல் ராகு 11-ல் கேது

    குல தெய்வத்தை குழி தோண்டி புதைத்தவர்கள், கோவில் சொத்தை கொள்ளையடித்தவர்கள், குரு காணிக்கை கொடுக்க மறுத்தவர்கள், குரு துரோகம் செய்தவர்கள், ஒருவரின் பூர்வீக சொத்தை அபகரித்தல், ஒருவருக்கு தொழிலில் லாபத்தை இழக்க செய்தல், காதலித்து ஏமாற்றிய குற்றம், ஒருவருக்கு வாரிசு உருவாக முடியாமல் செய்த கர்ம வினைப் பதிவாகும். இதன் பலனாக குழந்தை பிறப்பில் தடை, உடல் நலக் குறைவுடன் கூடிய குழந்தை பிறப்பது, குல தெய்வம் தெரியாமல் போவது , குல தெய்வ அனுக்கிரகமின்மை, பூர்வீக சொத்தை பயன்படுத்த முடியாதமை போன்றவைகள் ஏற்படும். இவர்களுக்கு கோச்சாரத்தில் 5ல் ராகு 11-ல் கேது வரும் போது குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு, குழந்தைகளால் மன உளைச்சல், மூத்த சகோதரர்களுக்காக பொருள் இழக்க நேருதல் அல்லது மூத்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு, குல தெய்வ வழிபாடு செய்ய முடியாமல் போகுதல் அல்லது வழிபாட்டு தலங்களுக்கு சென்று வரும் போது விபத்து ஏற்படும். தொழிலில் பெரும் பொருள் இழப்பு ஏற்படும்.

    பரிகாரம்

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை தானம் செய்வதுடன் வயதில் மூத்தவர்களின் நல்லாசி பெற வேண்டும். அத்துடன் தங்களுக்கு தொழிலில் வரும் லாபத்தில் சிறு பகுதியை வயதான முதியோர் இல்லங்களுக்கு தர வேண்டும். பராமரிப்பு இல்லாத கோவில்களை பராமரிக்க நிதி உதவி செய்ய வேண்டும்.

    6-ல் ராகு 12-ல் கேது

    அநியாயமாக ஒருவரின் மேல் ஏற்படுத்தும் தவறான வழக்கு, தன் கடனை மற்றவர் மேல் திணிப்பது, அல்லது பண மோசடி ஏற்படுத்துதல், ஒருவரின் திம்மதியை கெடுத்தது, நோயுள்ளவர்களுக்கு உதவாமை , நோய்க்கு தவறான மருந்து கொடுப்பது ஆகிய காரணங்களே இந்த வினைப் பதிவிற்குரிய அமைப்பாகும். இதன் பலனாக இந்த ஜென்மத்தில் வழக்கிற்கு மேல் வழக்கு, கடன், நோய், எதிரி தொல்லை இருந்து கொண்டே இருக்கும். கோச்சா ரத்தில் 6-ல் ராகு 12-ல் கேது வரும் போது கடுமையான கடன் பிரச்சினை, பண இழப்பு, இனம் புரியாத நோய் , செய்வினை தாக்கம் ஏற்படும்.

    பரிகாரம்

    கருட வழிபாடு, காளி வழிபாடு, கால பைரவர் வழிபாடு செய்வதுடன் தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கடும் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை செய்பவர்களுக்கு மருத்துவ செலவிற்கு உதவ வேண்டும்.

    7-ல் ராகு லக்னத்தில் கேது

    பிறர் மனைவியை விரும்பியவர்கள், களத்திரத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், பெண் பித்தர்கள், கூட்டாளியை ஏமாற்றுதல், சட்டத்திற்கு புறம்பான செயல்களை ஆதரித்தது போன்ற செயல்களால் தோன்றிய வினைப் பதிவாகும். இதன் பலனாக திருமண வாழ்வில் குழப்பம், தம்பதியினர் கருத்து வேறுபாடுடன் வாழ்வது கூட்டாளிகளால் ஏமாற்றப்படுதல், பணத்தை பறிகொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் ஏற்படும். கோச்சாரத்தில் 7-ல் ராகு லக்னத்தில் கேது வரும் போது களத்திரத்தை பிரிதல், வம்பு, வழக்கு தொழில் கூட்டாளிகளால் பிரிவினை வம்பு வழக்கு , ஏமாற்றபடுதல் , மரியாதைக்கு பங்கம் எற்படும்.

    பரிகாரம்

    சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு மாலை நேரத்தில் அருகம்புல் அர்ச்சனை செய்வதுடன் ஞாயிறு தோறும் ராகு காலத்தில் கால பைரவருக்கு உளுந்த வடை மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். சுமங்கலி பெண்களிடம் நல்லாசி பெற வேண்டும்.

    8-ல் ராகு 2-ல் கேது

    பேராசையை தூண்டி ஒருவரின் வாழ்வை கெடுத்தல், தவறான வார்த்தைகளால் பிறருக்கு மனவேதனை செய்தல் , பொய் சொல்லி பணம் பறித்தல் , நம்பிக்கை துரோகம், நம்பிக்கை மோசடி ஆகிய செயல்களால் தோன்றிய கர்ம வினையாகும். இதன் பலனாக அடிக்கடி விபத்து, கண்டம், தற்கொலை உணர்வு , பண இழப்பு ஏற்படலாம். கோச்சாரத்தில் 8-ல் ராகு 2-ல் கேது வரும் போது வருமானக் குறைவு, வருமானம். நின்று போகுதல், கொடுத்த பணம் வராமல் போவது, குடும்பத்தில் நிம்மதியின்மை வறுமை, தகுதி குறைவான இடத்தில் வேலை பார்க்கும் நிலை, விபத்து ஏற்படும்.

    பரிகாரம்

    தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை நித்திய பிரதோச வேளையில் சிவ தரிசனம் செய்வதுடன் சனிக்கிழமைகளில் உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    (தொடர்ச்சி அடுத்த வாரம்...)

    செல்: 98652 20406

    • சாப்பிடுவது முதல் ஷாப்பிங் போவது வரை எல்லாமும் மகேஸ்வரியுடன் தான்.
    • படம் ஒப்பந்தம் ஆனதில் இருந்தே படப்பிடிப்பை எதிர்நோக்கி இருந்தோம்.

    நானும் மகேஸ்வரியும்....!

    திரை உலகில் பல நண்பர்கள் இருந்தாலும் நானும் மகஸ்வரியும் மிகவும் நெருக்கமான தோழிகள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    இருவருமே பிசியாக இருந்த காலகட்டம். படப்பிடிப்புகளில் எங்காவது சந்திக்க நேர்ந்தாலும் சரி. ஓய்வு கிடைத்து இருவரும் சென்னையில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் சரி. இருவரும் ஒன்று சேர்ந்து விடுவோம்.

    சாப்பிடுவது முதல் ஷாப்பிங் போவது வரை எல்லாமும் மகேஸ்வரியுடன் தான். அந்த அளவுக்கு எங்கள் நட்பு ஆழமானது. அழகானது. படப்பிடிப்புகளுக்காக ஆளுக்கொரு திசையில் சுற்றிக் கொண்டிருந்தாலும் எங்காவது சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ண மாட்டோம்.

    அப்படிப்பட்ட எங்களுக்கு ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருந்திருக்கும்? அப்படி ஒரு சந்தர்ப்பம் 'நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் கிடைத்தது.

    பிரபுதேவா சார் தான் ஹீரோ. ஹீரோயின் இருவர். ஒன்று நான். இன்னொன்று என் தோழி மகேஸ்வரி.

    படம் ஒப்பந்தம் ஆனதில் இருந்தே படப்பிடிப்பை எதிர்நோக்கி இருந்தோம்.


    நான் கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். அந்த நேரம் நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் மகேஸ்வரி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க தொடங்கி விட்டார்கள். ஊட்டி பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

    நான் கேரளாவில் ஷூட்டிங்கை முடித்து விட்டு ஊட்டி போக வேண்டும். அன்றைய தினமே மகேஸ்வரியும் வேறு ஒரு ஷூட்டிங் செல்ல வேண்டும். அதை முடித்து விட்டு மீண்டும் வந்து என்னோடு இணைந்து கொள்வார். இது தான் திட்டம். திட்டமிட்டபடி கேரளாவில் இருந்து நான் புறப்பட முடியவில்லை. விமானம் தாமதமாகி விட்டது. தாமதமாகவே கோவை சென்று அங்கிருந்து காரில் ஊட்டிக்கு விரைந்தேன்.

    எப்படியாவது என்னை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் மகேஸ்வரியும் ரொம்ப நேரம் காத்திருந்துள்ளார்.

    நானும் மகேஸ்வரி கிளம்புவதற்குள் பார்த்து விட வேண்டும் என்று விரைந்து கொண்டிருந்தேன். காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வாஞ்சையுடன் செல்லும் போது எதிர்பாராத விதமாக எதிர் எதிரே இருவரும் செல்வதும், ஆனால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் போவதும் சினிமா காட்சிகளில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.

    அப்படி அன்று எங்களுக்கு இடையேயும் ஒரு எதிர்பாராத காட்சி நடந்தது. அதாவது நீண்ட நேரம் காத்திருந்தும் என்னை காணாததால் மகேஸ்வரி காரில் கோவை புறப்பட்டு இருக்கிறார்.

    நான் கோவையில் இருந்து ஊட்டியை அடைந்ததும் மகேஸ்வரியை தேடினேன். அப்போது தான் அவர் கிளம்பிய விபரத்தை கூறினார்கள்.


    எனது காருக்கு எதிரில் வந்து என்னை கடந்து சென்றிருக்கிறார். ஆனால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. இன்றைய கால கட்டத்தை போல் செல்போன்கள் இருந்திருந்தால் அதிலாவது தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால் அதற்குத்தான் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

    மணிவண்ணன் சார், செந்தில் சார், ஜெமினி சார், மஞ்சுளா ஆண்டி என்று நட்சத்திர பட்டாளங்கள் அதிகம். அதனால் செட்டே கலகலப்பாக இருந்தது.

    'இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன். மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன். இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன். உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்...'

    இந்த சூப்பர் பாடல் காட்சிகள் ஐதராபாத்தில் அப்போது தான் கட்டப்பட்ட ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. முதல் முதலாக அந்த பிலிம்சிட்டிக்கு ஷூட்டிங் சென்ற சிலரில் நாங்களும் இருந்தோம். பிரபுதேவா சார் டான்ஸ் என்றால் சொல்ல வேண்டியதில்லை. நிறைய 'மூவ்மெண்ட்ஸ்' இருக்கும் அதிலும் வித்தியாசமாக இருக்கும். அதை அச்சு பிசகாமல் ஆட வேண்டும் என்றால் நன்றாக கவனிக்க வேண்டும். நிறைய பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அருமையான பாடல். சூப்பர் மூவ்மெண்ட்ஸ். ரசித்து ரசித்து நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு. ஏனெனில் 2 நாள் தான் கால்ஷீட் இருந்தது. பிரபுதேவாவும் நானும் ஒன்றரை நாளில் முடித்துவிட்டோம்.

    பாடல் காட்சி ஒன்றுக்கு நீருற்றினை சுற்றி இருக்கும் சிறு சுவர் மீது நின்று ஆட வேண்டும். அதற்கு ஒரு மூவ்மெண்ட்டை சொல்லித்தந்தார். அதன்படி பின்னோக்கி நடந்து ஆட வேண்டும்...? லேசாக தவறினாலும் தண்ணீரில் தான் விழ வேண்டும். பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் கச்சிதமாக நடித்து முடித்தேன். இப்போதும் அந்த காட்சி என் நினைவில் உள்ளது. ஷூட்டிங் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் நானும் மகேஸ்வரியும் ஜாலியாக பொழுது போக்கினோம். இரவு 'டின்னர்' 'ஸ்டீம்பாத்' எல்லாம் ஒன்றாகவே செய்வோம். அறையில் இருக்கும் போது எங்களுக்குள் அரட்டை அடித்து பலமாக சிரிப்போம்.

    டைரக்டர் சுந்தர்.சி உள்பட மொத்த டீமும் ஏம்மா... நாங்களும் இருக்கிறோம். எங்களிடமும் சொல்லி சிரியுங்களேன் என்பார்கள். 'சகலகலா ராணி...' என்ற ஒரு பாடல். அந்த பாடலில் நானும் மகேஸ்வரியும் சேர்ந்து ஆட வேண்டும். அதற்கான காஸ்ட்யூம் பற்றி நாங்கள் இருவரும் பேச முடிவெடுத்தோம். நான் என்ன கலர்... நீ என்ன கலர்... சிகை அலங்காரம் எப்படி இருக்க வேண்டும் என்பது வரை எல்லாவற்றையும் பேசி வைத்திருந்தோம். வழக்கமாக இந்த மாதிரி கலந்து பேச மாட்டேன். நாங்கள் தோழிகள் என்பதால் படத்திலும் முத்திரை பதிக்க வேண்டும் என்ற கற்பனையோடு இருந்தோம்.

    கடைசியில் அந்த பாடலுக்கான ஷூட்டிங்கே நடக்கவில்லை. அந்த பாடலும் படத்தில் இடம் பெறவில்லை. எங்கள் ஆசை நிராசையாக போய் விட்டது.

    அடுத்த வாரம் மற்றொரு தகவலுடன் சந்திக்கிறேன்...

    (தொடரும்...)

    • நல்லாரை காண்பது நல்லது, நல்ல சொற்கள் மட்டுமே பேசுவது நல்லது.
    • காலையில் கொஞ்ச நேரமாவது சூரிய ஒளி அவசியம் பட வேண்டும்.

    நாம் இருக்கும் சூழ்நிலை நல்லோர்கள் இருக்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டும். நல்ல வார்த்தைகள் பேசும் இடத்தில் இருக்க வேண்டும். நல்ல செயல்கள் நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். இதனை சத் சங்கம் எனலாம். இதன் பலன்கள் ஏராளம். இதனைப் பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையினை படிப்போம்.

    விஸ்வாமித்திர மாமுனி ஒரு யாகம் செய்ய நினைத்தார். அந்த யாகம் எப்படிப்பட்டது என்றால் யாகத்தின் முடிவில் தன்னிடம் இருப்பதை எல்லாம் தானம் செய்து விட வேண்டும் என்பதாகும். இதுவே அந்த யாகத்தின் முறை.

    அதன்படியே யாகத்தின் முடிவில் விஸ்வாமித்திர முனி தன்னிடம் இருந்ததை எல்லாம் தானம் வழங்கிக் கொண்டிருந்தார். இதனை கேள்வி பட்ட வசிஷ்ட முனி தானும் விஸ்வாமித்திரரிடம் தானம் பெற வேண்டும் என்று விரும்பினார்.

    வசிஷ்டரே வருகிறார். தானம் பெறுகிறார் என்பது விஸ்வாமித்திரருக்கு மிகுந்த மகிழ்ச்சி. சற்று கர்வத்துடன் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டர் அமைதியாய் தன் ஆசிரமம் திரும்பினார்.

    கொஞ்சம் நாட்கள் சென்று விஸ்வாமித்திரர் போல் தானும் யாகம் செய்ய வேண்டும் என வசிஷ்ட மாமுனியும் விரும்பினார். அதேபோல் யாகம் செய்து தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் செய்யத் தொடங்கினார்.

    இதனை அறிந்த விஸ்வாமித்திரர் தானும் வசிஷ்டரின் தானத்தினைப் பெற ஆசைப்பட்டார். வசிஷ்டர் யாகம் செய்யும் இடத்திற்கு தானும் புறப்பட்டு சென்றார். ஆனால் விஸ்வாமித்திரர் அங்கு செல்வதற்குள் வசிஷ்டர் அனைத்தையும் தானம் செய்து முடித்திருந்தார். விஸ்வாமித்திரருக்கு கோபம் வந்தது.

    'வசிஷ்டரே, நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் என்னை வெறும் கையுடன் அனுப்புகின்றீர்கள்' என வேகமாய் பேசினார்.

    வசிஷ்டர் அவரை அமைதிப்படுத்தினார். 'கோபப்படாதீர்கள். பொருட்கள் இல்லாவிட்டால் என்ன? நல்லவர்களுடன் சேர்த்திருந்த சத்சங்க பலனாக ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) என்னிடம் உள்ளது. அதில் கால் பங்கினை உங்களுக்குத் தருகின்றேன்' என்றார்.

    இதைக் கேட்டு விஸ்வாமித்திரர் கோபம் கூடி விட்டது. அப்போதும் வசிஷ்டர் கோபப்பட வில்லை.

    'விஸ்வாமித்திரரே, நீங்கள் போய் உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரியனையும், இந்த பூமியையே தாங்கும் ஆதிசேஷனையும்- நான் அழைப்பதாகக் கூறி அழைத்து வாருங்கள்' என்றார் வசிஷ்டர்.

    விஸ்வாமித்திரருக்கு சற்று குழப்பமாக இருந்தது. யோசித்தார். சரி போய்தான் பார்ப்போமே என்று சொல்லி சூரிய பகவானி டம் சென்றார்.

    சூரிய பகவானோ, 'விஸ்வா மித்திரரே, நான் வந்தால் இங்கு என் வேலையை யார் கவனிப்பார்கள். நான் வர மாட்டேன் என்றார்.

    இதே பதிலையே ஆதிசேஷனும் சொன்னார். விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம் சென்று நடந்தவற்றை கூறினார்.

    வசிஷ்டர் உடனே அப்படியா? சரி, இருவரிடமும் சென்று வசிஷ்டரிடம் ஒரு நாழிகை 'சத் சங்க சக வாச' பலன் இருக்கிறது. அதில் இருவருக்கும் கால், கால்பங்கு தருவதாக கூறினார் என்று கூறி அழைத்துப் பாருங்கள்' என்றார்.

    விஸ்வாமித்திரரும் மீண்டும் சென்று இருவரிடமும் அவ்வாறே கூறினார்.

    இருவரும் உடனே 'இதோ வருகிறோம்' என்று கிளம்பினர். முதலில் மறுத்த நீங்கள் இப்போது மட்டும் வருகின்றீர்களே என்று கேட்டார் விஸ்வாமித்திரர்.

    'வசிஷ்டர் அளிக்கும் சத்சங்க சகவாச பலன் எங்கள் வேலையினைச் செய்யும் என இருவரும் பதில் அளித்தனர்.

    விஸ்வாமித்திரருக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. வசிஷ்டரிடம் இருந்து கால் பங்கு சத் சங்க பலனைப் பெற்று திரும்பினார்.

    தன் ஆசிரமத்தினை அடைந்த போது ஆசிரமத்தில் இருவர் இவருக்காக காத்திருந்தனர். அவர்கள் விஸ்வாமித்திரரை வணங்கி நாங்கள் பகவான் நாராயணனின் காவலர்கள் என்றனர். அவர்கள் மேலும் தொடர்ந்தனர்.

    'பகவான் நாராயணன் ஸ்ரீ ராமராக அவதாரம் செய்யப் போகின்றார். அப்போது மகாலட்சுமியான சீதாதேவிக்கும், ஸ்ரீ ராமருக்கும் விஸ்வாமித்திரரே திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது என பகவானே கூறிவிட்டு வரச் சொன்னதாக சொன்னார்கள். மேலும் எல்லாம் சத் சங்க சகவாச பலன் என்றும் சொன்னார்கள். அவ்வாறே நிகழவும் செய்தது.

    எனவே நல்லாரை காண்பது நல்லது, நல்ல சொற்கள் மட்டுமே பேசுவது நல்லது. நல்ல செயல்களை மட்டுமே செய்வது நல்லது. இத்தகைய சூழ்நிலைக்கு சென்று விடுவோமே.

    இந்த கருத்தினை மனதில் பதிய வையுங்கள் எது நடந்து விடுமோ? நடந்து விடுமோ? என்று அடிக்கடி நினைத்து பயப்படுகின்றீர்களோ அது நடக்கும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும் என கூறப்படுகிறது. எனவே நல்லதை மட்டுமே நினையுங்கள்.

    மனம் தூங்கி எழுந்த 10 நிமிடத்திற்குள் ஓராயிரம் எண்ண அலைகளை ஏற்படுத்துகின்றது. அதை செய்ய வேண்டும், இதை முடிக்க வேண்டும் என்றும் ஓட்டமாய் ஓடும். அதனுடன் நம்மால் ஈடு கொடுத்து ஓட முடியவில்லை.

    இதனால் குழப்பம், மனச் சோர்வு மட்டும்தான் மிஞ்சுகின்றது. இதனை சரியாக்கா விட்டால் மனக் கட்டுப்பாடே இருக்காதே. ஆக காலை எழுந்தவுடன் அல்லது முதல் நாள் இரவு கூட அந்த நாளுக்கான வேலைகளை எழுதி விடுங்கள்.

    நன்கு புரியும்படி எழுதுங்கள். அதிலேயே பாதி தெளிவாகும், பாதையும் ஏற்படும். மனதில் முறையற்ற ஓட்டங்களே வராது. சிந்திக்கவும், செயல்படவும் எளிதாய் இருக்கும்.

    எந்த நிகழ்ச்சியிலும், பேச்சு வார்த்தையிலும் சுவற்றில் எரிந்த பந்து போல் வேகமாய் செயல்படவோ, பேசவோ வேண்டாமே. ஒரு சில நொடிகள் உங்களை கட்டுப்படுத்துங்கள். விளைவுகள் எந்த பிரச்சினையும் தராது.

    மாறாக வேகமான பேச்சு, வேகமான நிகழ்வு இவை இரண்டும் தீராத பிரச்சினைகளைத் தரும். தினமும் ஒரு பக்கமாவது ஏதாவது புத்தகமோ செய்தி தாளோ படியுங்கள். பிரபஞ்சம் உங்களுக்கான ஏதோ ஒரு செய்தியினை அதில் தந்திருக்கும்.

    காலையில் கொஞ்ச நேரமாவது சூரிய ஒளி அவசியம் பட வேண்டும். கடைக்கு போங்க, கோவிலுக்கு போங்க, நடை பயிற்சி போங்க. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீங்க.

    சோர்வாக இருந்தால் சற்று வேலையை நிறுத்தி விட்டு 5 நிமிடம் மனதிற்கு பிடித்தாற் போல் ஏதாவது செய்யுங்கள். சரியாகி விடும்.

    உங்கள் நேரம் முக்கியமானது. உண்மையில் இது ஒன்றுதான் மிக மிக முக்கியமானது. ஆகவே உங்கள் இலக்கினை சிறிது சிறிதாக பிரித்து வகுத்து விடுங்கள். படிப்படியாக செயல் படுத்துவது எளிது.

    அடிக்கடி சிறிது நேரம் 'ஹாபி' எனப்படும் மகிழ்ச்சியான உங்களுக்கு பிடித்த எதனையும் செய்து பாருங்களேன். மனம் சோர்வடையாது. வேலை செய்யும் பொழுது முடிந்தவரை செல்போனை தள்ளி வையுங்கள். காதில் போன், கையில் வேலை, வாயில் பேச்சு, கூடவே நடை என்ற அஷ்டாவ தானம் மூளைக்கு சோர்வினைக் கொடுக்கும்.

    அதிகம் குற்றம் கண்டு பிடித்தலை தவிருங்கள். மனதில் நிம்மதி ஓடிப்போய் விடும். ஒவ்வொரு வேலைக்கும் அதனை முடிப்பதற்கான கால நேரம் உண்டு. அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

    எனவே உபயோகப்படுத்தாத பொருட்கள், துணிகள் இவற்றினை தேவைப்படுபவருக்கு கொடுங்கள். ஒவ்வொரு வேளை உணவிற்கும் அதிக கவனம் கொடுங்கள்.

    மனதில் ஒரு விஷயத்தில் கடுப்பு தன்மை நிறைந்து இருக்கின்றதா. நீங்கள் உங்கள் மீதும் அடுத்தவர் மீதும் உள்ள காயத்தினை கண்டிப்பாய் ஆற்றிவிட வேண்டும். இல்லையெனில் காயம் புரையோடி இருவரது வாழ்வினையும் அழித்துவிடும்.

    கோபம், வெட்கம், வேதனை என்று இருந்தால் நடப்பவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்களை மாற்றிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் தெரியும்.

    உலகில் அநகேருக்கு நாம் பார்க்கும் ஒரு முகம் மட்டுமே கிடையாது. 2 முகங்களாவது இருக்கும். பார்த்து பழக வேண்டும்.

    உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் உங்களை விட்டு விலகவே மாட்டார்கள். உணவினை மருந்து போல் சாப்பிட்டால் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் வராது.

    • ஓய்வில் திளைப்போருக்கு உழைப்பு கடினமானது என்றும் கருதுகிறோம்.
    • ஒன்றில்லாமல் மற்ற ஒன்றில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

    நியாயமான உழைப்பிற்கும் நிம்மதியான ஓய்விற்கும் அன்றாடம் காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்!.

    கடுமையாக உழைக்கக் காத்திருக்கிறோமோ இல்லையோ நாம் எல்லோரும் கனிவாக ஓய்வெடுப்பதற்காக எப்போதும் ஆர்வத்தோடு காத்திருக்கத்தான் செய்கிறோம். ஆனால் பலருடைய வாழ்வில் நிம்மதியான ஓய்வும் தொந்தரவு இல்லாத உறக்கமும் வாய்ப்பதே இல்லை. உழைக்கத் தயங்குகிற நாம் உறங்கத் துடித்தாலும் அது வாய்க்காமல் போவதற்கு என்ன காரணம்?.

    பொதுவாக உழைப்பும் ஓய்வும் எதிர் எதிர் ஆனவை என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைக்கும் மனிதனுக்கு ஓய்வு பகையானது என்றும், ஓய்வில் திளைப்போருக்கு உழைப்பு கடினமானது என்றும் கருதுகிறோம். உண்மையில் உழைப்பும் ஓய்வும் ஒன்றிலொன்று பிணைந்திருக்கும் இணைகள்; ஒன்றில்லாமல் மற்ற ஒன்றில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

    உழைக்கத் தெரிந்தவர்களே உண்பதற்குத் தகுதியானவர்கள்! என்று கூறலாம். இதையே இன்னும் கொஞ்சம் மேம்படுத்திய சிந்தனையில் உழைக்கத் தெரிந்தவர்களே ஓய்வெடுக்கும் உரிமையும் உடையவர்கள் என்று உரக்கக் கூறலாம். ஏனெனில் உழைப்பும் ஓய்வும் ஒன்றையடுத்து ஒன்றாக நிகழ வேண்டியவை ஆகும்.

    இவற்றிற்கு இடையில் உணவும் உண்பதும் இணைந்து கொள்வதாக இருக்கட்டும். நல்ல உழைப்பு, நற்பொருள் ஈட்டல், நல்லுணவு சேகரித்து வயிறார உண்ணல், நிம்மதியான ஓய்வு... இவைதானே வாழ்வியலின் சிரமமான நிகழ்வாக இருக்க வேண்டும்.

    நமது உணவுக்கான உழைப்பை நாமே உழைக்காமல், யாரோ பிறரது உழைப்பில் வயிறுவளர்க்கப் பலர் முனைந்து செயல்படுகிறார் கள். ஆனால் திருடிப் பிழைத்த பிழைப்பாலும் உணவாலும் திருப்தியான உறக்கமும் ஓய்வும் கிட்டுமா?.

    வாழ்நாள் இரவும் பகலுமாகப் பகுக்கப் பட்டிருப்பதுபோல, அவை தொடர்ந்து மாறிமாறி வந்து காலத்தின் நீட்சி நிகழ்ந்து கொண்டிருப்பதுபோல, மனித வாழ்க்கையிலும் உழைப்பும் ஓய்வும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இடையறாத உழைப்பு உடற் சோர்வையே தரும்;

    அதுபோல விழிப்பில்லாத ஓய்வும் மனச் சோர்வைத் தந்துவிடும். உழைப்பும் ஓய்வும் மாறிமாறி வரும் வாழ்க்கை யிலேயே திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்து காணப்படும்.

    உடல் தளரும்வரை உழைத்துவிட்டு உறங்கப் போகிறவர்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறார்கள். நல்லபடியாக உறங்கி, ஓய்வெடுத்தபிறகு விழித்து, மீண்டும் உழைப்பில் ஈடுபட்டால், முன்னைவிடப் பன்மடங்குப் புத்துணர்வுடன் செயபட்டுச் சாதனைவெற்றி களை எளிதில் எட்டிப் பிடித்துவிடுகிறார்கள்.

    உழைக்கச் சோம்பேறித்தனப்படுவோர், எப்போதும் ஓய்வெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்; ஆனால் அவர்கள் எடுக்கிற ஓய்வென்பதும் உறக்கமென்பதும், நோய்ப் படுக்கையில், நோயாளிகள் பெறுகிறதைப்போல வலிகள் நிறைந்ததாகவே இருக்கும்.

    உலகில் ஒருவர் நினைத்தால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கடின உழைப்பைச் சொந்த முயற்சியில் மேற்கொண்டு விடலாம்; ஆனால் கனிவான ஓய்வு என்பதும், நிம்மதியான உறக்கம் என்பதும் தாமாக அமைந்தால் மட்டுமே உண்டு.

    காட்டின் ராஜா சிங்கத்திற்கு ஆறேழு மாதமாகச் சரியாகத் தூக்கம் வராத நோய் வந்துவிட்டது. பகலில் படுத்தாலும் உறக்கமில்லை. இரவில் படுத்தாலும் கண்மூடவே முடியவில்லை. ஓய்வென்பது இல்லவே இல்லை. உலகின் மிகச்சிறந்த பஞ்சுமெத்தைகள் மூலம் படுக்கைகள் வந்து சேர்ந்தன.

    சிங்க ராஜாவுக்குப் பிடித்தமான உணவுவகைகள் மிகுந்த சுவையுடன் சமைக்கப்பட்டு, மூன்றுவேளையும் பரிமாறப் பட்டன. கைகால் பிடித்துவிடப் பரிவாரங்கள்; நாலாபுறமும் நின்று இரவுபகலாக விசிறிவிடப் பணியாளர்கள்... எவ்வளவு இருந்தாலும் உறக்கம் மட்டும் ஒருபொட்டு வரவில்லை சிங்கராஜாவுக்கு.

    மந்திரி யானையார் அறிவிப்பும் செய்துவிட்டார்; எப்படியாவது நமது ராஜாவை உறங்க வைப்பவருக்குத் தக்க சன்மானங்கள் வழங்கப்படும். காட்டில் வாழும் மிருகங்கள் எல்லாமும் ஆளுக்கொரு மருந்துடன் ராஜாவுக்கு வைத்தியம் பார்க்க வந்துவிட்டன.

    ஒரு காட்டெருமை ஒரு பெரிய குடம் நிறையப் பாலைக் கொண்டுவந்து அரண்மனையிலேயே சுண்டக்காய்ச்சி, இரண்டு மூன்று இரவுகளுக்குக் கொடுத்துப் பார்த்தது; பயனில்லை; வயிறு உப்பிக்கொண்டதுதான் மிச்சம்.

    ஒரு குரங்கு எங்கிருந்தோ காட்டில் ஏதேதோ புற்கள், மூலிகைகளையெல்லாம் போட்டு ஒரு தைலத்தைத் தயாரித்துக் கொண்டுவந்து சிங்கராஜாவின் உடம்பு முழுவதும் தடவிவிட்டு வெந்நீர்க் குளியல் செய்ய வைத்தது; சிங்கராஜா முன்னைக்காட்டிலும் சுறுசுறுப்பானாரே தவிர உறக்கம் என்பது வரவில்லை.

    பலாப்பழ வைத்தியம், மாம்பழ வைத்தியம், வாழைப்பழ வைத்தியம் என ஏகப்பட்ட வைத்தியங்களோடு ஏகப்பட்ட மிருகங்கள் வந்தன; வயிறும் உடம்பும் புண்ணாயினவேயொழிய உறக்கம் வந்தபாடில்லை. ஒருகட்டத்தில் இனிமேல் வைத்தியம் என்று கூறிக்கொண்டு யார் உள்ளே வந்தாலும் அரண்மனைக்குள் விடாதீர்கள்! என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் சிங்கராஜா.

    அந்த நாட்டிலுள்ள புத்திசாலியான நரியொன்று ராஜாவுக்கு மருத்துவம் பார்க்கப்போகிறேன் என்று அரண்மனைக்குள் நுழைந்தது. வந்தால் வருகிறது! என அனுமதித்த சிங்கராஜா, ஒரு நிபந்தனை ஒன்றை விதித்தது. அதாவது இனிமேல் மருத்துவம் பார்க்க யார் வந்தாலும், நோய் குணமாகவில்லையென்றால், அவர்கள் தலை துண்டிக்கப்படும். பரவாயில்லை நான் தயார் என்று நரி அரசனிடம் சென்று நின்றது.

    "வணக்கம் அரசே! தங்களுக்கு உறக்கம் வராமலிருக்கும் நோய்க்கான மருந்து என்னுடைய தாத்தா நரியாரிடம் இருக்கிறது. அவர் நமது காட்டிற்கு அருகிலுள்ள மலைச் சிகரத்தின் உச்சியில் குடியிருக்கிறார். இப்போது நீங்கள் என்னோடு வந்தால் அவரிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். அவர் உங்களை நேரடியாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டுச் சரியான மருந்தை வழங்கி விடுவார். புறப்படுங்கள் செல்வோம்!" என்றது நரி.

    "நரியே! நோய்மட்டும் குணமாகவில்லை யென்றால், உன் தலையோடு உன் தாத்தா நரியின் தலையும் சேர்த்து துண்டிக்கப்படும் ஜாக்கிரதை!" என்று கூறிக்கொண்டே சிங்கராஜா நரியோடு மலைச்சிகரம் நோக்கிக் கிளம்பியது. காலையில் கிளம்பியவர்கள் நடந்தே மலைச்சிகரம் சென்று அடையப் பிற்பகல் மூன்று மணி ஆகிவிட்டது.

    அங்கே போனப்பிறகுதான் நரி சொன்னது," அரசே என்னை மன்னித்து விடுங்கள்! என்னுடைய நரியார் தாத்தா அவசர வேலை நிமித்தமாக அடுத்துள்ள மலைவரை சென்றுள்ளார்; அவர் நாளைதான் இங்கு வந்து சேர்வார்; நான் மறந்தே போய் விட்டேன்; இப்போதைக்குக் கீழே இறங்கிப் போவோம்; நாளை மீண்டும் வருவோம்!".

    கடும்கோபத்திற்கு ஆளான சிங்கம், "இதுவரை இவ்வளவுதூரம் சிரமப்பட்டு ஏறிவந்ததே மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான்; இப்போது மீண்டும் இறங்கிப்போய், மீண்டும் நாளை ஏறி வர வேண்டுமா?" என்று சோகமாக கர்ஜித்தது. "ராஜா நோய் நிச்சயம் தீருமென்றால், சிரமப்படுவதில் தவறில்லையே!" பரிதாபமாகச் சொன்னது நரி.

    மறு நாள் காலை. அரண்மனை வாசலில் வந்து சிங்கராஜாவை மீண்டும் மலைச் சிகரத்திற்கு அழைத்துப் போவதற்காக நரி நின்றது. வாசலில் இருந்த காவலர்கள், 'அரசரை இன்னும் நாலைந்து மணிநேரத்திற்குப் பார்க்க யாருக்கும் அனுமதியில்லை; அவர் ஆழ்ந்த உறக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டி ருக்கிறார்' என்று கூறினர்.

    தனது புத்திசாலித்தனம் வேலைசெய்யத் தொடங்கி விட்டதை எண்ணி மனத்திற்குள் மகிழத் தொடங்கியது நரி. ஆமாம்! தனக்கான உணவுத்தேவைக்குக்கூட வேட்டையாடச் செல்லாத சிங்கத்திற்கு உறக்கம் எப்படி வாய்க்கும்? ராஜாவாக இருந்ததால் எந்தவொரு உடல் உழைப்பையும் மேற்கொள்ளா ததால் சிங்கத்திற்கு உறக்கம் வராத நோய் ஒட்டிக்கொண்டது;

    நேற்று மலைச் சிகரம் ஏறி இறங்கும் உடல் உழைப்பு மேற்கொண்டதால், இன்று காலைவரை சிங்கம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது; இனி அது விழித்துக்கொள்ளும்!. உழைத்தால் தான் உறக்கமும் ஓய்வும் சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ளும்.

    உழைப்பு என்பது இருவகை யில் நிகழும்; ஒன்று உடல் சார்ந்த உழைப்பு; மற்றொன்று மூளை சார்ந்த உழைப்பு. இந்த இருவகை உழைப்பிலும் மனம் சம்பந்தப்பட்டிருக் கும். மனம் சோர்ந்து போகாதவரை உடலும் மூளையும் இடைவிடாது உழைத்துக்கொண்டே இருக்கும்; மனம் சோர்வடையும்போது தேவைப்படும் அளவுக்கு ஓய்வை மேற்கொண்டால், பிறகு உடலும் மூளையும் மனமும் புத்துணர்வைப் பெற்றுப் புதுப்புது உழைப்பு முயற்சிகளில் வெற்றிகரமாக ஈடுபடத் தொடங்கும்.

    மனித வாழ்க்கை என்னும் வண்டி, திட்டமிட்டபடி வெற்றியை நோக்கிப் பயணிக்க உழைப்பு, ஓய்வு என்னும் இரண்டு மாடுகள் சமமான அளவிலும் பலத்திலும் இழுத்துச்செல்லத் தேவை.

    வாழ்க்கையென்னும் வண்டியை முன்புறமாக உழைப்பு என்னும் மாட்டையும், பின்புறமாக ஓய்வு என்னும் மாட்டையும் கட்டி இழுத்தால் வண்டி முன்னும்போகாது; பின்னும் போகாது!;

    மாறாக வண்டிதான் உடைந்து போகும். வாழ்க்கை என்னும் வண்டி சீராகவும் சுகமாகவும் நகர்ந்துசெல்ல உழைப்பும், ஓய்வும் வண்டியின் முன்னே பூட்டப்பட்ட இரட்டைமாட்டு வண்டிகள்போல ஒன்றற்கொன்று ஒத்தாசையோடு செயல்பட வேண்டும்.

    உடல் உழைப்பு சார்ந்ததாகவோ அல்லது மூளை உழைப்பு சார்ந்ததாகவோ நாம் பார்க்கும் வேலைகளில் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், உழைப்பு-ஓய்வு-உழைப்பு-ஓய்வு என உழைப்பிற்கும் ஓய்விற்கும் சரிவிகிதமான நேரங்களை ஒதுக்கக் கூடியதாக நமது அன்றாட வாழ்வியல் அமைந்திருக்க வேண்டும்.

    ஓய்வு என்பதும் உறக்கம் என்பதும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையிலிருந்து முழுமையாக விடுபடுவது ஆகும். இதுவரை பார்த்தவரை இந்த வேலை போதும்! என்கிற நிலையில் வேலையை நிறுத்திவிட்டு ஓய்வுக்குச் செல்லவேண்டும்.

    வேலை முடியும்வரை தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று நினைப்பது, நமது மனத்திற்கும் உடம்புக்கும் நாம் இழைக்கும் துரோகமாகும். கனத்தில் மிகவும் லேசான மயில்தோகையாக இருந்தாலும் அளவுக்குமீறி ஏற்றினால் வண்டியின் பாரம் தாங்கமாட்டாமல் அச்சு முறிந்து போகும் என்பார் வள்ளுவர். குறிப்பிட்ட ஓய்வு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வேலைப்பளு ஏறிக்கொண்டே போனால் அழுத்தம் தாங்காமல் மனிதமனமும் முறிந்து போகும்; உடலும் தளர்ந்து போகும்.

    உழைக்கும்போது உழைப்பிலும் ஓய்வின் போது ஓய்விலும் முழுக்கவனம் செலுத்தும் வித்தை கைவரப் பெற்றவர்களாக நாம் மாறவேண்டும். சிலர் வேலை பார்ப்பதிலேயே அடிமையாகிப் போனவர்களாக இருப்பார்கள்;

    ஈடுபாட்டோடு உழைப்பதன் மூலமாகவே அந்த உழைப்படிமைத் தனத்திலிருந்து அவர்களை வெளிக்கொணர முடியும். நன்றாக மனத் திருப்தியோடு உழைப்பவர்களாலேயே, நன்றாக மன அமைதியோடு உறங்கவும் ஓய்வெடுத்துக் கொள்ளவும் முடியும்.

    கடின உழைப்பு கனிவான ஓய்விற்கு உதவி செய்கிறது! கனிவான ஓய்வு கடின உழைப்பிற்குக் கதவுகள் திறக்கிறது!

    தொடர்புக்கு 9443190098

    • உடல் சார்ந்த நோய்களில் இருந்து நாம் தப்பித்து கொள்வதற்கு, மருத்துவத்தை நாடுகிறோம்.
    • வர்மக்கலையோடு இணைந்த உடல் சார்ந்த பயிற்சிகளை செய்யும் போது உடலிலே உயிர் ஆற்றல் சீராகும்.

    அன்பார்ந்த வாசகர்களே, நாம் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கும் போது, அந்த பொருளை மிகவும் பத்திரமாக பாதுகாக்கிறோம். அந்த பொருள் கூடுமான வரை எந்த விதமான சிக்கலும் இல்லாமல் இயங்குவதற்கு நாம் பலவிதமான முயற்சிகளை எடுக்கிறோம். காரணம் நாம் அதில் நமது பணத்தை முதலீடு செய்து உள்ளோம். ஆனால் இந்த உடல் என்பது நாம் விலை கொடுத்து வாங்கி வந்த ஒரு பொருள் அல்ல. நமது தாய், தந்தை மூலமாக இலவசமாக நாம் கேட்காமலும், நமது அனுமதி இல்லாமலும் வந்த பொருள் தான் இந்த உடல்.

    இலவசமாக வந்த உடல் என்பதால் தான் நாம் பொருளுக்கு கொடுக்கும் மதிப்பை இந்த உடலுக்கு கொடுப்பது இல்லை. இந்த உடலுக்கு பெரிய அளவுக்கு ஒரு பிரச்சனை வரும் போது தான், நம் உடல் மீது நமக்கு அக்கறை வருகிறது. உடல் சார்ந்த பிரச்சனைகள் வலியாக ஆரம்பம் ஆகி, நோயாக மாறி அடுத்து மரணத்தில் நம்மை முடிக்கிறது. எனவே இந்த உடல் என்பது கர்மா/பதிவுகளின் அடையாளம் ஆகும். இந்த கர்மாவில் இருந்து விடுபட குரு உதவி தேவைப்படுகிறது.

    'தந்தை தாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து, தழைத்ததொரு உடலாகி உலகில் வந்தேன் அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ அளித்த பதிவுகள் எல்லாம் என் சொத்தாச்சு இந்த அரும் பிறவியில் முன் வினையறுத்து எல்லையில்லா மெய் பொருளை அடைவதற்கு வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை, வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம்'

    என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது கவியில் கூறுகிறார்.

    தந்தையும், தாயும் ஒன்று சேர்ந்ததால் இந்த உடலும் அதன் மூலமாக கர்மவினை பதிவுகளும் நமக்கு சொத்தாக வந்தது. இதில் நல்லதும் உள்ளது, மற்றதும் உள்ளது.

    இந்த பிறவியில் நம் முன்னோர்கள் பதிவுகளை அறுத்து இறைவனை உணர்வதற்கு வந்த ஒரு உதவி தான் குரு என்று மகரிஷி கூறுகிறார்.

    சரி, நான் பதிவுகள் இல்லாமல் இருக்கிறேனா? அப்படி இருக்கிறது என்றால் என்ன ஆதாரம் என்று நாம் கேட்போம். அதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் உடலிலே நோய், உள்ளத்திலே களங்கம், மனதிலே குழப்பம், வாழ்க்கையில் சிக்கல் என்று இந்த நான்குமோ அல்லது இதில் ஏதாவது ஒன்று இருந்தாலோ நாம் கர்மாவின்/பதிவின் அடையாளம் என்கிறார்.

    எனவே இந்த பதிவுகள் 80 சதவீதம் உடல் சார்ந்த நோய்களாகவும், 20 சதவீதம் மனம் சார்ந்த நோய்களாகவும் வரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

    இந்த பதிவுகளில் 80% என்பது உடல் சார்ந்து இருப்பதால் தான் நாம் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முன்னால் இந்த உடலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். திருமூலர் அவர்கள் தனது பாடலிலே உடலை பற்றி,

    'உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம்

    வள்ளற் பிரானார்க்கு வாய்க் கோபுரவாசல்

    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

    கள்ளப்புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே' - என்கிறார்.

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    உடலே கோவில், நமது வாயே கோபுரவாசல், இது யாருக்கு புரிகிறதோ அந்த சீவன் தான் சிவம் என்கிறார். ஆனால் இவை ஞான இந்திரியங்கள் (புலன்கள்) ஆகிய தோல் (தொடு உணர்வு), நாக்கு (சுவை உணர்வு), மூக்கு (வாசனை உணர்வு), கண் (பார்வை உணர்வு), காது (ஓசை உணர்வு) ஆகியவை என்று உன் கட்டு பாட்டுக்குள் வருகிறதோ அன்று தான் இந்த உடல் ஆலயம் என்பது விளங்கும். இல்லை என்றால் இந்த புலன்கள் நம்மை மாயையை நோக்கி அழைத்து சென்று விடும் என்கிறார்.

    எனவே உடல் சார்ந்த நோய்களில் இருந்து நாம் தப்பித்து கொள்வதற்கு, மருத்துவத்தை நாடுகிறோம். அது தான் அலோபதி மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர் வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், யுனானி மருத்துவம் என்று ஏதாவது ஒரு வழியை நாடி நாம் நோய்களை போக்கி கொள்ளவோ அல்லது அதனுடைய தாக்கத்தை குறைத்து கொள்ளவோ முயற்சி செய்கிறோம். சில நேரம் வெற்றி பெறுகிறோம்.

    ஆனால் முற்காலத்தில் மருத்துவத்திற்கு முன்னால் மருந்து இல்லாத மருத்துவமாக ஒரு கலை இருந்தது. அதன் பெயர் தான் வர்மக்கலை. 12-ம் நூற்றாண்டில் இந்த கலையை மர்மம் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். 17-ம் நூற்றாண்டு முதல் தான் வர்மம் என்று பெயரிட்டு இருக்கிறார்கள். வர்மம்/மர்மம் என்றால் நம் கண்களுக்கு தெரியாத ஒன்று என்று பொருள்.

    இது ஆதி சித்தர் சிவன் மூலமாக பார்வதி தேவி நந்தி தேவர், முருகன், அகத்தியர், சப்த ரிஷிகள், 18 சித்தர்கள் வழியாக வந்து இன்று வரை இந்த கலை உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இதை உலகிற்கு வருவதற்கு அகத்தியர், புலிப்பானி சித்தர், போகர், தேரையர், கருவூரார் சித்தர், சாரங்கி நாதர், ராம தேவர் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள்.

    வர்ம வைத்தியம் இன்றும் இந்தியாவில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் உள்ளது. வெவ்வேறு சித்தர்கள் உடைய நூல்களிலேகிட்டத்தட்ட 1000 வர்மங்களை பற்றி குறிப்பிட்டு இருந்தாலும், 108 வர்ம புள்ளிகள் தான் மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று சித்தர்கள் தனது ஓலை சுவடிகளிலே குறிப்பிட்டு உள்ளார்கள்.

    இந்த 108 வர்ம புள்ளிகள் தான் உயிர் ஆற்றல் மையங்கள் ஆகும். இந்த இடங்களில் மாத்திரை அளவு (மருத்துவ அளவு) அழுத்தம் கொடுத்து அங்கு தடைபட்டு இருக்கின்ற உயிர் ஆற்றலை மீண்டும் உயிர்பித்து காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, வலி மற்றும் நோய்களில் இருந்து விடுபட வைக்கும் ஒரு அற்புதமான கலை தான் வர்மக் கலை.

    இந்த வர்மக்கலையோடு இணைந்த உடல் சார்ந்த பயிற்சிகளை செய்யும் போது உடலிலே உயிர் ஆற்றல் சீராகும். இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழும். இன்றைய விஞ்ஞானஉலகத்திலே, இப்படி வர்மக் கலையோடு இணைந்த உடற்பயிற்சிகள் இருக்கிறதா என்கின்ற கேள்வி தான் அது. இதற்கு விடையாக வருபவர் தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள். கலியுக சித்தர்களில் ஒருவராகிய வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட எளிய முறை குண்டலினி யோக உடற்பயிற்சியில், வர்மக்கலையில் சொல்லப்பட்டு இருக்கின்ற அத்தனை வர்ம புள்ளிகளும் அடக்கம் என்றால் நமக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.

    நம்முடைய கர்ம வினை பதிவுகள் உடல் சார்ந்த பிரச்சனைகளாக வரும் போது அது முதலில் வடிவம் எடுப்பது தான் வலி. இது ஒருவருக்கு காலத்தால் நீண்டு போகும் போது அல்லது நாம் கவனமின்மை காரணமாக முயற்சி செய்ய தவறிவிட்டால் அது அடுத்த வடிவமாக வருவது தான் நோய்.

    எப்பொழுது இந்த நோய் உடலை பாதிக்கிறதோ, அது நமது மனதையும் பாதித்து மரணத்தில் விட்டு விடும். உடல் சார்ந்த கர்ம வினை பதிவுகள் எடுக்கும் கடைசி வடிவம் தான் மரணம். எனவே இதிலிருந்து நாம் தப்பித்து கொள்ள ஒரே வழி உடற்பயிற்சி மட்டுமே.

    தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது நலம். இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றபடி விஞ்ஞான, மருத்துவ, மெய்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி தான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பயிற்சியாகும்.

    நாம் உடற்பயிற்சியின் பயன்களை தெரிந்து கொள்வதற்கு முன்னால், இது வர்மக் கலையோடு எப்படி தொடர்பு உள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

    மனிதருடைய உடலில் 96 தத்துவங்கள் அடங்கி உள்ளது என்பதை நாம் அறிவோம். இதில் 56 தத்துவங்கள் ஸ்தூல தத்துவங்களாகவும் (பரு உடல் சார்ந்தது) 39 தத்துவங்கள் சூக்கும தத்துவங்களாகவும் (நுண்ணுடல் சார்ந்தது) 1அதி சூக்கும் தத்துவமாகவும் (ஆத்மா) உள்ளது.

    இதில் 31 தத்துவங்கள் தான் நம் உயிரோடு தொடர்பாக உள்ளது. அவை 10 நாடிகளும், 5 பூதங்களும், 10 வாயுக்களும், 6 ஆதாரங்களும் (7 ஆதாரங்களில் துரியம் என்பது பரமாத்மா, எனவே அது கணக்கில் வராது) ஆகும்.

    இதில் நாடிகள், ஆதாரங்கள், பூதங்கள் (10+6+5=21) ஒரு பிரிவாக இருந்து 10 வாயுக்களை இயக்க உதவி செய்கிறது. இதனால் நம் உடலில் உள்ள 108 உயிர் ஆற்றல் மையங்களும் சீராக வேலை செய்ய உதவி செய்கிறது.

    இந்த 108 உயிர் ஆற்றல் மையங்களை தான், நாம் வர்ம புள்ளிகள் என்று அழைக்கிறோம். இந்த வர்ம புள்ளிகள் எப்படி இந்த 21 தத்துவங்களோடு சேர்ந்துள்ளது என்று சித்தர்கள் செய்த ஆராய்சியின் விளைவாக விடை கிடைத்தது.

    இந்த 108 வர்ம புள்ளிகளும் இப்படி தொடர்டபு உள்ளது. இது சரியாக இயங்கினால் நம் உடலிலே முக்குற்றம் நிகழாமல் பார்த்து கொள்ளலாம். அது தான் வாதம், பித்தம், கபம் ஆகும்.

    நமக்கு வரும் நோய்கள் எதுவாக இருந்தாலும் இந்த மூன்றை தாண்டி வராது. எல்லா நோய்களும் இந்த மூன்றுக்குள் அடக்கம். இந்த மூன்றிலும் இந்த 108 வர்ம புள்ளிகள் எப்படி தொடர்பு கொண்டுள்ளது என்பது தெரிந்தால் மேலும் பிரம்மிப்பாக இருக்கும்.

    வாதம் சார்ந்த வர்ம புள்ளிகள்         - 64

    வாதத்தின் துணை வர்ம புள்ளிகள்  - 4

    பித்தம் சார்ந்த வர்ம புள்ளிகள்         - 26

    பித்தத்தின் துணை வர்ம புள்ளிகள்  - 5

    கபம் சார்ந்த வர்ம புள்ளிகள்                - 6

    கபத்தின் துணை வர்ம புள்ளிகள்        - 3

                                                                           =108

    வாதம், பித்தம், கபம் சமன்பட்டால் எந்த நோயும் நமக்குள் எழுச்சி பெறாது. இந்த 108 வர்ம புள்ளிகளையும் அடக்கிய அரிய பொக்கிஷத்தை பற்றி ஆராய்ச்சி செய்வோம்.

    • கொரோனா நோய் பரவல் காலக்கட்டம் என்பது உலக நாடுகளுக்கு பெரும் சிக்கலான காலமாக அமைந்தது.
    • மருத்துவத் தொழிலை புனிதமாக கருதுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    மருத்துவம் என்பது தொழில் அல்ல, அது ஒரு சேவை. சேவையை விட ஊழியம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு மருத்துவரும் ஆஸ்பத்திரியை கோவிலாக நினைக்கிறார்கள். அதேபோல நோயாளிகளும் ஆஸ்பத்திரியை கோவிலாகத்தான் நினைத்து வருகிறார்கள்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். என்னை பொருத்தவரையில் மாதா, பிதா, குரு, மருத்துவர், தெய்வம் என்று தான் சொல்வேன். கொரோனா நோய் பரவல் காலக்கட்டம் என்பது உலக நாடுகளுக்கு பெரும் சிக்கலான காலமாக அமைந்தது. அந்த நேரத்தில் கோவில்கள் கூட மூடப்பட்டது. அப்போது திறந்திருந்ததும், செயல்பட்டதும் மருத்துவமனைகள் மட்டும் தான் என்பதை நான் பெருமையோடு கூறுவேன்.

    வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனா தொற்றிக் கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்ட காலம் அது. ஆனால் மருத்துவர்கள் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொட்டு வைத்தியம் அளித்தார்கள். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். செவிலியர்களும் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். நாட்டுக்காக உயிரை கொடுக்க தயாராக இருப்பவன் ராணுவ வீரன். அதேபோல நோயாளிகளுக்காக தங்கள் இன்னுயிரையும் கொடுக்க தயாராக இருப்பவன் தான் மருத்துவன். தனது கஷ்டத்தை பொருட்படுத்தாமல் நோயாளிகளின் கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மனிதருள் மாணிக்கமாக மருத்துவர்கள் திகழ்கிறார்கள்.

    உயிர் வாதையில் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் உயிரை காணும் போதெல்லாம் மருத்துவரின் மனதில் அந்த உயிரை எப்படியாவது காப்பாற்றி விடுவோம் என்ற நம்பிக்கை மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் மருத்துவர்களின் சேவையை வேறு எதனோடும் ஒப்பிடவே முடியாது. இந்த உலகில் தெய்வமே இல்லை என்று வாதிடுபவர்கள் கூட மருத்துவர்களின் அளப்பரிய சேவையை கண்டு அவர் வடிவில் தெய்வத்தை கண்டதாக கூறுவது உண்டு.

    தெய்வங்கள் நேரடியாக பூமிக்கு வருவதில்லை. அன்பும், சேவையும், கருணையும் எந்த உள்ளத்தில் இருக்கிறதோ, அந்த மனிதனிடம் இறைவன் வந்து குடிகொள்கிறார். எனவே தான் இவையெல்லாம் கொண்ட நடமாடும் தெய்வங்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மருத்துவர்கள். அவர்களே மறுபிறவி தரும் கடவுள்கள். மருத்துவர் என்பவர் கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு பிரதிநிதி. அல்லது கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர் என்று சொல்லலாம்.

    மற்றவர்களின் துன்பத்தில் பங்கு கொள்பவன் தான் மனிதன். மற்றவர்கள் துன்பத்தை தனது துன்பமாக கருதி எவன் ஒருவன் அந்த துன்பத்தை நீக்க முற்படுகிறானோ அவன் தான் மருத்துவன். மருத்துவச் சேவையில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த எண்ணம் உண்டு. நோயாளி, வேதனையால் துடிக்கும் சமயத்தில் உடனடியாக மருத்துவச் சேவை செய்ய வேண்டியது ஒவ்வொரு மருத்துவனின் முக்கியப்பணியாக பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் பணத்தை கொடு, உனது நோயை சரி செய்கிறேன் என்று கூறுபவன் வியாபாரியாகி விடுகிறான்.

    மருத்துவத் தொழிலை புனிதமாக கருதுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் 5 ரூபாய்க்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் ஆலோசனைக்கு 2 ஆயிரம் ரூபாய் வாங்கும் மருத்துவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இந்தியா, பாமர மக்கள் ஏராளமானோரை கொண்ட நாடு. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, 2 வேளை பட்டினி கிடப்பார்கள். அப்படி கஷ்டப்படும் மக்களும் இருக்கிறார்கள். அத்தகைய ஏழைகளிடம் ரூ.1000 கொடு, ரூ.500 கொடு என்றால் அவன் எங்கே போவான். அதற்காகத்தான் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை எள்ளளவும் குறை சொல்ல முடியாது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை காட்டிலும் அங்கு பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன. அரசு மருத்து வமனைகள் அபரிமிதமான சேவைகளை செய்து வருகிறது. நல்ல மருத்துவர்கள் பலர் அங்கும் பணியாற்றுகிறார்கள். ஏழைகளுக்கு மருத்துவம் செய்யக்கூடிய மருத்துவன் உண்மையான மருத்துவன். அது அரசு மருத்துவமனையாகவோ அல்லது தனியார் மருத்துவமனையாகவோ இருக்கலாம்.

    மருத்துவருக்கு 6 மணி நேர வேலை, 8 மணி நேர வேலை என்றெல்லாம் கிடையாது. மருத்துவன் 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும். அதை தான் மருத்துவப்படிப்பும் சொல்லிக் கொடுக்கிறது. அதற்காக 24 மணி நேரமும் அவன் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. குறைந்தது 14 மணி நேரம் மனப்பூர்வமாக வைத்தியம் செய்ய வேண்டும். கடவுள் தந்திருக்கக் கூடிய இந்த அற்புத பணியை கஷ்டப்பட்டு செய்யக் கூடாது. இஷ்டப்பட்டு செய்ய வேண்டும். அவர் தான் மருத்துவருக்கு தகுதியான நபர்.

    உதாரணத்துக்கு ஒரு டாக்டருக்கு காலை 8 மணியில் தொடங்கி மாலை 6 மணியுடன் பணி முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். சரியாக 6 மணிக்கு வேலை முடிந்து விட்டது என்று ஓடி விட முடியாது. அப்போது தான் ஒருவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு ஹார்ட்அட்டாக் என வருவார். அந்த நபரை தனது தந்தை என நினைத்துக் கொண்டு பாருங்கள், வேலை முடிந்தது என்று ஓடுவோமா, ஓட மாட்டோம். அவர் உடல் நிலை சரியாகும் வரை அவருடன் இருப்போம். அதைப்போலத்தான் அனைத்து நோயாளிகளும். அதனால் கால, நேரம் பார்க்காமல் பணியாற்றக்கூடியவன் மருத்துவன்.

    மருத்துவனுக்கு ஓய்வே கிடையாது. மற்ற பணிகளில் இருப்பவர்களுக்கு எல்லாம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கொடுக்கிறார்கள். மருத்துவனுக்கு விடுமுறை கொடுக்க முடியாது. காரணம் ஞாயிற்றுக்கிழமை அன்றும் நோயாளிகளுக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது, பிரசவங்கள் நடக்கின்றன. விபத்துக்கள் நடக்கின்றன. எனவே தனக்கான சுக, துக்கத்தை மறந்து நோயாளிகளுக்காக இரவு- பகல் பாராமல் பணியாற்றுகிறான். அவனே மருத்துவன்.


    ஜி.பக்தவத்சலம்

    ஜி.பக்தவத்சலம்

    அத்தகைய மருத்துவர்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் முதல்- மந்திரியாக பணியாற்றியவர் மறைந்த பி.சி.ராய். அவர் வெளிநாட்டில் போய் படித்த பெரிய டாக்டர். அவர் மக்களுக்காக வாழ்ந்ததால் மக்களின் டாக்டர் என அழைக்கப்பட்டார். அந்த மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து 14 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். முதலமைச்சராக பதவி வகித்தபோதும் கூட மாலை நேரங்களில் 2 மணி நேரம், 3 மணி நேரம் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்தார். அவர் வந்த பின் தான் தரம் நிர்ணயிக்கக் கூடிய மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா நிறுவினார்கள். பி.சி.ராய் ஜூலை 1-ந் தேதி பிறந்தார். அதே நாளில் தான் மரணத்தையும் தழுவினார்.

    மருத்துவச் சேவையை அனைவரும் அறியும் வண்ணம், அவரது பெயரில் 1976-ம் ஆண்டு முதல் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு டாக்டர் ராய் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 1984-ல் டாக்டர் ராய் விருதை எனக்கு வழங்கி கவுரவித்தார்கள் என்பதை இந்நேரத்தில் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 2005-ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தார்.

    மேடை கலைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் கைதட்டலை தான் பாக்கியமாக கருதுவார்கள். அதேபோல நோயாளி பிழைத்துக் கொண்டார் என்ற வார்த்தை தான் மருத்துவர்களுக்கு சன்மானம். மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதது, பல கோடி ரூபாய் மதிப்பை கொண்டது. அத்தகையாக நோயாளிகளை காப்பாற்றுகிறோம், அதற்காக அவர்கள் உண்டியலில் போடும் பணம் போலத்தான் அவர்கள் மருத்துவர்களுக்கு கொடுக்கும் கட்டணம். மருத்துவர்களை நோயாளிகள் கடவுளாக பாவிக்க வேண்டும். அதேபோல மருத்துவர்கள், நோயாளிகளை கடவுளாக பார்க்க வேண்டும்.

    இந்த நேரத்தில் நோயாளிகளுக்கும் சில ஆலோசனைகள் வழங்குவது அவசியமாகிறது. நோய் வந்தால் வைத்தியம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்கள் வியாதி வராமல் தடுப்பது மருத்துவத்துறையில் வருமுன் காக்கும் திட்டம் எனப்படுகிறது. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள், அரை மணி நேரம் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். அதுவும் நன்றாக மூச்சை இழுத்து விட்டு மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள். அப்படியே தாய், தந்தையரை, கடவுளை நினைத்துக் கொண்டு தியானம் செய்யுங்கள். அதிகாலை 5 மணிக்கு தியானம் செய்து பாருங்கள், உங்களுக்கு நல்ல எண்ணங்கள் பல தோன்றுவது நிச்சயம்.

    தினமும் 3 கிலோ மீட்டர் வீதம் மாதத்துக்கு 100 கிலோ மீட்டர் ஓட வேண்டும் அல்லது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். மைதானம் இல்லாவிட்டால் நின்ற இடத்தில் இருந்தே ஓடி பயிற்சி மேற்கொள்ளுங்கள். நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். பசி எடுக்கும் போது சாப்பிட வேண்டும். முக்கால் வயிறுக்கு சாப்பிட்டாலே போதுமானது. அனைத்து வகையான காய்கறி உணவுகளையும் சாப்பிட வேண்டும். முடிந்தவரை அசைவ உணவை தவிருங்கள். மதுப்பழக்கத்தை கைவிடுங்கள், சிகரெட் பிடிக்காதீர்கள். வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். தாய், தந்தையரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கோபம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கோபம் வந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். நாக்கின் சுவைக்கு அடிமையாகாமல் வெளி உணவுகளை தவிர்த்து வீட்டில் தயாரிக்கப்படும் நல்ல உணவுகளை சாப்பிடுங்கள். அசைவ உணவு சாப்பிடும் போது கொழுப்பு அதிகரிக்கும்.

    பெருகி வரும் மக்கள் தொகை, சுற்றுச்சூழல் பாதிப்பு, மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள், போதைப் பொருட்கள், நெருக்கடி மிகுந்த வாழ்க்கை முறையால் மனிதர்கள் முன் எப்போதையும் விட அதிகமான நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களின் உடலையும், உள்ளத்தையும் காத்து நிற்கும் மருத்துவர்களின் சேவையை போற்றுவோம்.

    • 'குலேபகாவலி' என்றத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து எம்.எஸ்.வி மற்றும் டி.கே.ஆர். இசையமைத்தார்கள்.
    • "ஜெனோவா" படத்தில் இசையமைத்த போது எம்.எஸ்.வி. ஐந்து பாடல்களுக்கு மட்டும் தான் இசையமைத்தார்.

    'ஜெனோவா திரைப்படத்தில் எம்.எஸ்.வி. இசையமைத்தப் பாடல்களைக் கேட்ட எம்.ஜி.ஆர். நேரில் சென்று அவரைப் பாராட்டியதையும் "நீங்கள் தான் இனி என் படங்களுக்கு இசையமைக்கணும்" என்று சொன்னதையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம்.

    அப்போதைய திரைத்துறை வழக்கப்படி ஒவ்வொரு படத்தயாரிப்பு நிறுவனத்திற்கென பழக்கப்பட்ட, ஒப்பந்தமிட்டுக் கொண்ட இசையமைப்பாளர்கள் இருப்பார்கள். அந்தந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தமிட்டுக் கொண்ட இசையமைப்பாளரை தவிர வெளி நபர் இசையமைக்க முடியாது.

    இதனால் 'ஜெனோவா' படத்திற்கு பிறகு 'மலைக்கள்ளன்', 'கூண்டுக்கிளி' என்ற படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தாலும் அதில் எம்.எஸ்.விக்கு வாய்ப்புத்தர முடியவில்லை.

    1955-ல் 'குலேபகாவலி' என்றத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து எம்.எஸ்.வி மற்றும் டி.கே.ஆர். இசையமைத்தார்கள். 1957ல் 'மகாதேவி' படத்திலும் 1960ல் 'மன்னாதி மன்னன்' என்றத் திரைப்படத்திலும் இவர்கள் கூட்டணி தொடர்ந்தது.

    இந்தப் படத்தில் இடம் பெற்ற "அச்சம் என்பது மடமையடா" என்றப் பாடல் அடி தூள் வகை. இன்னும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்! இந்தப் படப்பாடல்கள் எம்.ஜி.ஆர், கண்ணதாசன், எம்.எஸ்.வி, டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் புகழை உச்சிக்கு கொண்டு சென்றன. அவர்களது திரையுலக பயணத்தில் இந்தப் படம் ஒரு மகுடம் எனலாம்.

    எம்.ஜி.ஆர். எங்கு புறப்பட்டு சென்றாலும் தினமும் காலை அவரது காரில் முதலில் ஒலிக்கும் பாடல் இது தான்! அந்த அளவிற்கு உற்சாக பானம் இந்த பாடல் என்பதில் சந்தேகமில்லை.

    தேவர் பிலிம்ஸ் 7.7.1955ல் சின்னப்பதேவர் தனது நண்பர்கள் பலரிடம் பண உதவி பெற்று ஆரம்பித்த நிறுவனம். இவரது படங்கள் எல்லாம் 'தாய்' அல்லது 'தா' என்ற எழுத்தில் தொடங்கும். ஆரம்ப காலத்தில் சாண்டோ சின்னப்ப தேவரும் எம்.ஜி.ஆரும் துணை நடிகர்களாக இருந்த காலம் முதலே நட்பாக பழகியவர்கள். இருவரும் உடற்பயிற்சி மன்றத்தில் கம்பு சண்டை பழகியவர்கள். இதனால் தேவர் படங்களிலெல்லாம் எம்.ஜி.ஆருக்கு கம்பு சண்டை காட்சிகள் நிச்சயம் உண்டு.

    சின்னப்பதேவர் மேற்கத்திய இசை அதிகம் பயன்படுத்தும் மெல்லிசை மன்னர்களை வைத்து தனது 'வேட்டைக்காரன்' படத்தை எடுக்க ஆசைப்படுகிறார். தனது படத்தில் பணியாற்றுபவர்களுக்கு மொத்த ஊதியத்தையும் படம் தொடங்கும் போதே, அதுவும் ஒரே தவணையாக கொடுப்பவர் இவர். அதனால் 45 நாட்களில் படம் எடுத்து முடித்தும் விடுவாராம். சொன்ன தேதியில் படமும் வெளியிட்டு விடுவார் அப்படியொரு பழக்கம் தேவருக்கு.

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    இவர், பூ, பழம், கட்டுக்கட்டாக பணக்கட்டுகளுடன் எம்.எஸ்.வி.யின் வீட்டுக்குப் போய் தனது 'வேட்டைக்காரன்' படத்துக்கு இசையமைக்கக் கேட்கிறார்.

    "உங்கப் படங்களுக்கு வழக்கமாக மாமா தானே இசையமைக்கிறார்? (மாமா என்பது திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்) நான் எதற்கு? அவரே இருக்கலாமே?" என்றார் எம்.எஸ்.வி.

    விநியோகஸ்தர்கள் எல்லாம் ஆசைப்படறாங்க நீங்க இசையமைக்கணும்னு அதான்... சின்னப்ப தேவர் விடுவதாகயில்லை.

    எம்.எஸ்.வி.யின் நினைவு பின்னோக்கி சுழல்கிறது. முன்பு ஒரு முறை ஜூபிடர் பிக்சர்சிலிருந்து விலகி நடிகர் பாலைய்யாவின் நாடக கம்பெனியில் சேர்ந்து, அங்கு ராமாயண நாடகத்தில் நடிக்கும்போது, ராமன் உடைக்க வேண்டியவில்லை துணை நடிகனான தனது அதீத ஆர்வத்தால் எடுக்கப் போக வில் உடைந்துவிட பொதுமக்கள் "இவருக்கே சீதையை கட்டிவை" என்று கூச்சல் போட, நடிகர் பாலைய்யா தன்னை அடி அடி என அடிக்க அங்கிருந்து கிளம்பி வைரம் அருணாசல செட்டியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததும், அங்கும் பிரச்சனை துரத்த கே.வி.மகாதேவனிடம் கோரசிஸ்பாட வாய்ப்பு கேட்கப் போனது நினைவில் நிழலாடுகிறது. "விசு கொஞ்சம் உள்ளே வா"-எம்.எஸ்.வியின் அம்மா நாராயணிக்குட்டி அம்மாவின் குரல் தான் அவரை நினைவுலகத்திற்கு இழுக்கிறது.

    முன்பு "நீ கோரஸ் பாட வந்தால், கோரஸ் பாடுறதோடு நின்று விடுவாய். உனக்கிருக்கும் திறமைக்கு நீ நன்றாக முன்னுக்கு வருவாய், கோயம்புத்தூர்ல ஜூபிடர் பிக்சர்சுக்குப் போ, அவங்க உன்னை திரும்ப வேலை சேர்த்துக்குவாங்க" என்று கே.வி.மகாதேவன் சொன்னதுடன் நில்லாமல் தனக்கு புது வேட்டி, சட்டை, டிக்கட்டுக்கு கைச்செலவுக்கு பணம் கொடுத்து உதவியதும் நினைவுக்கு வருகிறது.

    "என்னம்மா" என்றபடி அம்மா முன்னே போய் நிற்கிறார்.

    நாராயணிகுட்டி அம்மா மகனை அறைந்து விடுகிறார். "தேவர் கேட்டதும் மகாதேவன் மாமா வேலை செய்யும் கம்பெனியில் நான் எப்படி செய்வது என்று கேட்காமல் மவுனமாக இருக்கியே" அவருக்குப் போட்டியாக போகப் போறியா?

    "இல்லைமா நான் வரலை என்று தான் சொல்லிக் கொண்டிருந்தேன்".

    இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சின்னப்ப தேவர் கிளம்பிவிட்டார். இதையெல்லாம் பின்னாளில் கேள்விப்பட்ட கே.வி.மகாதேவன், "நீ செய்திருக்கலாமே, நான் என்ன நினைக்கப் போகிறேன்" என்று பெருந்தன்மையுடன் சொன்னார்.

    கே.வி.மகாதேவன் மீது எம்.எஸ்.வி. வைத்திருந்த அன்பும் மரியாதையும் சொல்லில் அடங்காதது. "ஜெனோவா" படத்தில் இசையமைத்த போது எம்.எஸ்.வி. ஐந்து பாடல்களுக்கு மட்டும் தான் இசையமைத்தார். ஞானமணி, டி.ஏ.கல்யாணம் என்பவரும் இசையமைத்து இருந்தார்கள். 'குலேபகாவலி'யில் மொத்தம் 11 பாடல்களில் 10 பாடல்கள் எம்.எஸ்.வி. இசை. "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ" என்ற பாடல் மட்டும் கே.வி.மகாதேவன் இசையமைத்தது. குலேபகாவலியில் கசல், கிராமியம், மேற்கத்தியம், முஜ்ஷா என்று ஒவ்வொரு பாடலும் ஒரு வகை!

    இந்தப் படத்தில் "வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சிப் பெற்றார் பகடையிலே" என்று ஒரு பாடல். படத்தில் அரசகுமாரியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்திருந்தார். இவர் பகடை விளையாட்டில் சூழ்ச்சி செய்து பிற நாட்டு மன்னர்களை தோற்கடித்து அவர்களை அடிமையாக்கிவிடுவார். எம்.ஜி.ஆர். அந்த சூழ்ச்சியை முறியடித்து டி.ஆர்.ராஜகுமாரியை மணப்பது கதை.

    ஒவ்வொரு மன்னரும் வேறு வேறு நாட்டை, சேர்ந்தவர்கள் என்ற கருப்பொருளை வைத்துக்கொண்டு ஒரே பாடலில் பலமெட்டு பல மொழிகளில் பாடுவதாக பாடல் அமைத்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். இது ஒரு ராக மாளிகைப் பாடல்! ஒரே பாடலில் பல ராகங்கள் அமைத்துப் பாடினால் அதை "ராக மாலிகை" என்பார்கள். ராகங்களால் தொகுத்த மாலை என்று பொருள்.

    தஞ்சை ராமைய்யா தாசின் நையாண்டி வரிகளுக்கு ஒரே பாடலில் கர்நாடகம், மேற்கத்தியம், இந்துஸ்தானி என பல வகை இசையும் இருக்கும் கலக்கலானப் பாடல் அது! இன்றும் ரசிக்கலாம்.

    இதே போல் 1955ல் வந்த "போர்ட்டர் கந்தன்" என்ற திரைப்படத்திலும் பல்சுவைப் பாடல் இருக்கும். இது போன்ற பல்சுவை பாடல்கள் மட்டுமே 50க்கு மேல் இசையமைத்திருக்கிறார் எம்.எஸ்.வி. இது அவரது தனித்தன்மை என்று கூட சொல்லலாம்!

    எல்லோருக்கும் தெரிந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் 'பாரதவிலாஸ்' படத்தில் வரும் "இந்திய நாடு என் வீடு" என்றப் பாடலை சொல்லலாம்.

    1957ல் 'மகாதேவி' என்ற படத்திலும் எம்.ஜி.ஆருடன் மெல்லிசை மன்னர்கள் இணைந்தார்கள். இந்தப் படமும் வசனத்திற்காகவும் பாடல்களுக்காகவும் வரவேற்புப் பெற்ற படம்.

    "மானம் ஒன்றே பெரிதென கொண்டு" என்றப் பாடல் அத்தனை உணர்ச்சி பிழம்பான வரிகளும் இசையும், மெட்டும் கொண்ட பாடல்! இந்தப் பாடலை எந்த கச்சேரியிலும், நிகழ்ச்சியிலும் எடுத்துப் பாட முடியாது. அத்தனை சவாலானப் பாடல். ஒரே ஒரு முறை இந்தப் பாடலை கல்பனா ராகவேந்தர் பாடி பலத்த கைதட்டல் பெற்றார்!!

    1960ல் 'மன்னாதி மன்னன்' என்ற எம்.ஜி.ஆர். நடித்தப் படத்தில் மெல்லிசை இரட்டையர்கள் மீண்டும் இணைந்தார்கள்.

    இந்த திரைப்படத்தில் ஒரு பாடல். எம்.ஜி.ஆருக்கும், பத்மிமனிக்கும் நடனம் போட்டி! பரத நாட்டியம் ஆடிக்கொண்டே கால்களினால் தரையில் சிங்கம் உருவத்தை வரைய வேண்டும். ஓவியத்தில் வால், கண், நகம் ஏதும் விடுபடாமல் சரியாக ஆடினால் மட்டுமே சரியாக வரையமுடியும்.

    வெறும் பரத நாட்டியம் என்றால் அக்மார்க் கர்நாடக மெட்டில் இசையமைத்தால் போதும். ஆனால் பரதக்கலையின் மிக சிரமமான ஒரு வகை, அதாவது, ஓவியம் வரைவதற்கான நடன அடவுகள், ஜதிகள், ராகங்கள் எப்படி வரவேண்டுமோ அதை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ற இசை வரும்படி அமைக்கவேண்டும். அது அத்தனை லேசானதில்லை. இப்படி சவாலான சிக்கலான பாடல்களை இசையமைப்பதில் எம்.எஸ்.வி. வல்லவர்!

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் கதை வெளிநாட்டில் நடப்பதாக வருபவை. அதனால், எம்.ஜி.ஆர். சில வெளி நாட்டு இசை கேசட்டுகளை எம்.எஸ்.வியிடம் கொடுத்து, "இதையெல்லாம் கேட்டுப் பாருங்கள். இது போன்ற இசை எனக்கு வேணும்" என்று சொல்ல அந்த கேசட்டுக்களை அவரிடமே திருப்பித் தந்து, "நான் சொந்தமாகவே மெட்டுப் போட்டுத் தருகிறேன். இதெல்லாம் வேண்டாம் என்று கேசட்டுகளை திரும்பி தந்துவிட்டார் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆருக்கு ஆரம்ப காலத்தில் பின்னணி பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஏ.எம்.ராஜா. பிறகு டி.எம்.சவுந்திர ராஜன், மூன்று பாடல்களுக்கு மட்டும் பி.பி.சீனிவாஸ். பின்பாதியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் கே.ஜே.யேசுதாஸூம் பாடினார்கள். இந்த பின்னனி பாடகர்கள் தேர்வின் மூலம் எம்.ஜி.ஆருக்கான ஒரு பாணியையே எம்.எஸ்.வி. உருவாக்கினார் எனலாம். அது எப்படி என்று பார்க்கலாமா? அதற்கு நாம் கால இயந்திரத்தில் ஏறி கொஞ்சம் பின்னே பயணிக்கலாமா?

    1949-ல் கவியரசர் கண்ணதாசன் திரைத்துறையில் கதை வசனம் எழுதுகிறார். 1950-ல் 'நல்லத்தம்பி' என்றொரு படம் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தது. "விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி, மேனாட்டாரை விருந்துகழைச்சி காட்டப் போறேன்டி"- என்றப் பாடலில் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மொத்த பட்டியலும் மின்விசிறியில் ஆரம்பித்து, டெஸ்ட் டியூப் குழந்தை வரை எல்லாம் அதில் தொலை நோக்காக சொல்லப் பட்டிருக்கும்.

    1950 'மந்திரகுமாரி' என்ற திரைப்படம், ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்றான 'குண்டலகேசி' கதையை ஒட்டி எடுக்கப்பட்ட படம். கலைஞர் கருணாநிதி வசனத்தில் வந்தது. நாட்டுக்கு எதிராக செயல்படும் கணவனை மனைவியே மலையிலிருந்து தள்ளிவிடும் காட்சி கொண்ட அந்த திரைப்படம் சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    மேலும் டி.ஆர்.சுந்தரம், டங்கன் போன்ற புதுமை விரும்பிகளும் மாற்றத்திற்கான படங்களை எடுக்க முன்வந்தனர்.

    பின்னணி இசைத்தொழில் நுட்ப வளர்ச்சி திரைத்துறையில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வந்தது. அது என்ன? அதையெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் இப்போதைக்கு கால இயந்திரத்தை விட்டு இறங்கிவிடுவோம். வரும் தொடரில் பார்க்கலாம்.

    இணைய முகவரி:

    banumathykrishnakumar6@gmail.com

    • அரசின் பிரதான திட்டங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.
    • பயனாளிகளுக்கு கிடைக்காமல் போவதால், முடங்கும் அபாயம்.

    தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, `பிக்மி' எண் பெறப்படும்.

     கர்ப்பகாலத்தின் 4-வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பேறு காலத்தில் 3-வது மற்றும் 6-வது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.

    அதில் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரீட்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர்துண்டு உள்ளிட்டவை இருக்கும். முன்பு 5 தவணையாக வழங்கப்பட்ட வந்து உதவித்தொகை, தற்போது 3 தவணையாக வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் இதில் பல பயனாளிகள் ஆரம்பம் முதல் முறையாக பதிவு செய்து, பிக்மி எண் பெறப்பட்டும், தற்போது குழந்தை பிறந்த நிலையிலும் உரிய முதல் தவணை உதவித்தொகை கூட கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

    கடந்த ஓராண்டுக்கு மேலாக பதிவு செய்து பயனாளிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது குழந்தை பிறந்த 3 மாதங்கள் ஆன நிலையில் கூட, திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் உதவித்தொகையின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை.

    ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் கணவன், மனைவி இருவருக்கும் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். இதனால் ஆதார் எண்ணில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பெறவோ, கைவிடப்பட்ட செல்போன் எண்ணுக்கு பதிலாக வேறு எண்ணை ஆதாருடன் இணைப்பதிலோ பெரும்பாடாகிவிடுகிறது என குற்றம் சாட்டுக்கின்றனர்.

    அதேபோல் வங்கியுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், உள்ளிட்ட குழப்பங்களால் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. தற்போது புதியதாக அஞ்சல் சேமிப்பு கணக்கு எண்ணையும் கேட்பதால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இன்றைக்கு குழந்தை பிறந்து 3 மாதங்களை கடந்த நிலையிலும் எங்களுக்கு வரவேண்டிய உதவித்தொகை தொடர்பாக, இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஊட்டச்சத்து பெட்டகமும், இரண்டுக்கு பதில் ஒன்று தான் வழங்கப்பட்டது.

    குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்காததால், வயிற்றுக்குள் வளரும் குழந்தைகளும் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் பாதிக்கப்படும் சூழலை பார்க்கிறோம். போதிய தெம்பின்றி குழந்தைகள் பிறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பின்னிப்பிணைந்துள்ளன.

    அரசின் பிரதான திட்டங்களுள் ஒன்றாக இந்த திட்டம் போற்றப்படுகிறது. ஆனால் அதேசமயம் இந்த திட்டம் தற்போது உரிய பயனாளிகளுக்கு கிடைக்காமல் போவதால், முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் பல கோடி கர்ப்பிணிப் பெண்கள் பயன்பெற்றுள்ள, முதன்மை திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, அரசின் மீதான அனைவரின் நம்பிக்கையை காபாற்ற வேண்டும் என கர்ப்பிணி பெண்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஒரு சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இதுவரை மாநிலம் முழுவதும் டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் 1.17 கோடி பெண்களுக்கு ரூ.11,702 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அதன்படி, இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி இப்போது மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. கா்ப்ப காலத்தின் நான்கா வது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2,000 வழங்கப்படுகிறது.

    அதேபோன்று பேறுகாலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.

    ஊட்டச்சத்து பெட்டகங்களில் நெய், உலர் பேரிச்சம், இரும்புச்சத்து திரவியம், கர்ப்பிணி தாய்க்கான ஊட்டசத்து மாவு போன்றவை இருக்கும்.

    இதற்கென்று இப்போது 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்தின்கீழ் இணையதளப் பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதால் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் உடனே மகப்பேறு நிதியுதவி வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அது இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முருகனை அருணகிரிநாதரும் பாடியுள்ளார்.
    • மேரு மலையின் சிகரம் மூன்றாகப் பிளந்து விழுந்தது.

    தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள், காவிரித் தென் கரையில் அமைந்துள்ள தலம், பெருவேளூர். திருப்பெருவேளூர் என்னும் தொன்மைப் பெயர் கொண்ட இவ்வூர், இன்று அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது.

    இதே மாவட்டத்தில் வேறொரு அய்யம் பேட்டை இருப்பதால் இவ்வூரை மணக்கால் அப்பம்பேட்டை என்றழைக்கின்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவராலும் பாடப்பெற்ற பழம் பதி.

    சூரனை சம்ஹாரம் செய்தபின், அந்த தோஷம் நீங்குவதற்காக முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட சில தலங்களுக்குச் சென்றார். திருச்செந்தூரில் இருந்து கீழ்வேளூர், திருமுருகன்பூண்டி, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் இத்தலமாகிய திருப்பெருவேளூர் ஆகியன அத்தகைய தலங்கள்!

    இவ்வாலயத்து இறைவன் சுயம்புவானவர். இத்தலத்து முருகனை அருணகிரிநாதரும் பாடியுள்ளார். ஆலயத்தின் பின்புறம் உள்ள தீர்த்தம் சரவணப்பொய்கை என்றே அழைக்கப்படுகிறது.

    வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே 'யார் பெரியவர்? என்ற போட்டி நடந்ததாம். அப்போது மேரு மலையின் சிகரம் மூன்றாகப் பிளந்து விழுந்தது. அதில் ஒன்று இந்த தலத்தில் விழுந்து அதுவே காலப்போக்கில் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டதாம். இந்த ஐதீகத்தின் காரணமாக, இத்தல இறைவனை வழிபட்டால், கயிலை மலையை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

    மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம், ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி கனகம்பீரமாக நிற்கிறது. கோபுர வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தால், தரை தளத்தில் பலிபீடம், வானளாவி நிற்கும் கொடிமரம், அடுத்து நந்தியம் பெருமான் அமர்ந்திருக்கும் நந்தி மண்டபம்.

    இது மாடக்கோவில் வகையைச் சேர்ந்தது. கோச்செங்கட் சோழன் கட்டியதாக வரலாறு. இறைவன், அபிமுக்தீஸ்வரர். இவருக்கு பிரியா ஈஸ்வரர் என்றும் பெயருண்டு.

    ஆலயத்து நந்தியம்பெருமானை வணங்கி விட்டு நிமிர்ந்தால், எதிரே இடதுபுறம் உள்ள வாசல் வழியே 18 படிகள், கட்டுமலை மேலே செல்கின்றன. படியேறி கோவிலுக்குள் நுழைகிறோம். எதிரே சோமாஸ்கந்த மூர்த்தம் அவரை வணங்கி, வலதுபுறம் உள்ள வாசல் வழியே நுழைந்தால், மகா மண்டபத்தில் தெற்குப் பார்த்து நடராஜர், சிவகாமி அம்மையுடன் அருள் தோற்றம் அளிக்கிறார்.

    கருவறையில் கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு லிங்கமாக அபிமுக்தீஸ்வரர். சுயம்புலிங்க ரூபங்களுக்கே அலாதியான ஒரு வசீகர சக்தி இருப்பதை உணர முடியும். இந்த ஈசனும் அதை நம் உள்மனதுக்கு உணர்த்துகிறார்.

    அவரை நெஞ்சார தரிசித்து, பரவசத்தோடு மீண்டும் படியிறங்கி கீழே தரை தளத்துக்கு வந்து பிரகாரத்தை வலம் வரத் தொடங்கினால், முதலில் கன்னி மூலையில் எதிர்ப்படுபவர் பிரதான விநாயகர். இவர் தனிச்சந்நதியில் வீற்றுள்ளார். அதுபோல் தெற்கு நோக்கிய தனிச்சந்நதியில் தட்சிணாமூர்த்தி பிரதான விநாயகருக்கு பக்கத்து சந்நதியில் வைகுந்த நாராயணப் பெருமாள்.

    தாருகா வனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு சென்றார் சிவபிரான். அப்போது விஷ்ணு மோகினி வடிவம் எடுத்துச் சென்றார். தன்னுடைய பெண் வடிவத்தில் இருந்து, ஆண் உருவம் பெற இத்தலத்து இறைவனை திருமால் வந்து வழிபட்டார். அதன் நினைவாக இங்கு திருமால் தனிச்சந்நதி கொண்டு எழுந்தருளி உள்ளார் என்கிறது, தலபுராணம்.

    கருவறை விமானத்தின் பின்புறம் சுப்பிரமணியர் வள்ளி - தெய்வானை சமேதராக விளங்குகிறார். இவர்தான் அருணகிரியாரால் பாடப்பெற்றவர்.

    இவ்வாலயத்தின் மற்றொரு விசேஷம், இங்கே பிரகாரத்தில் இரண்டு சண்டிகேஸ்வரர்கள். இருவருக்கும் தனித்தனிச் சந்நதியும்கூட. பிரத்யேக சண்டிகேஸ்வரர் கல்லில் வடிக்கப்பட்டு, யோக நிலையில் காணப்படுகிறார். இவருக்கு யோக சண்டிகேஸ்வரர் என்றே பெயர்.

    கோமுகியின் அருகே ஆகம விதிப்படி மற்றோர் சண்டி கேஸ்வரர் கோஷ்டத்தில் துர்க்கைக்கும் பெரிய அளவில் தனிச்சந்நதி உள்ளது.

    தரைதளத்தில் இறைவன் கருவறைக்கு நேர் இடது திசையில் அம்பாள் சந்நதி, அம்மையின் பெயர் - அபினாம்பிகை. இவருக்கு ஏலவார் குழலி என்றும் பெயருண்டு. ஆலய பிராகாரத்தில் மேற்கு நோக்கிய நிலையில் மகாலிங்கம், சரஸ்வதீஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஐராவதீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என ஐந்து சிவலிங்கங்கள். இவற்றுள் சரஸ்வதி பூஜித்த லிங்கம், 'சரஸ்வதீஸ்வரர்' என்னும் பெயரில் அமைந்துள்ளது.

    இவர் தனி அலங்காரத்துடன் விளங்குகிறார். தனிச்சிறப்பு மிக்கவர். முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு சிவபக்தர், தன் புதல்வனின் பேச இயலாத குறைபாட்டை நீக்கும்படி தினமும் இந்த ஈசனை அபிஷேகம் செய்து ஆராதித்து வந்தார். அவரது குழந்தைக்குப் பேசும் திறனை அளித்து, அருள்புரிந்தார் ஈசன்.

    குழந்தைக்கு பேச்சுத்திறன் குறைபாடு இருந்தாலோ அல்லது பெரியவர்களாகியும் சிலருக்கு சரிவர பேச வராமல் கஷ்டப்பட்டாலோ, இந்த சரஸ்வதீஸ்வரரை வழிபட்டு பிரார்த்தித்துக் கொண்டால், விரைவில் பேச்சுக் குறைபாடு நீங்கி விடுகிறது.

    கிழக்கு பிராகாரத்தில் பைரவர், கால பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள்.

    இத்தலம் சுக்ர நீச நிவர்த்தித் தலம். ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைவாக இருந்தால் ஏற்படக்கூடிய முன்னேற்றத் தடையை இத்தலத்து ஈசனை வழிபட்டால், குறை நிவர்த்தியாகிறது.

    அசுர குருவான சுக்ராச்சாரியார் ஒருமுறை தனது ஆற்றல்கள் அனைத்தையும் இழந்தார். பின்னர், இந்தத் தலத்திற்கு வந்து, சரவண தீர்த்தத்தில் நீராடி, அம்பிகையை நோக்கித் தவமிருந்தார்.

    அன்னையின் அருட் கடாட்சம் கிட்டியதால், சுக்ராச்சாரியாருக்கு மீண்டும் அனைத்து ஆற்றல்களும் பூரணமாகக் கிடைத்தது.

    சுக்ராச்சாரியார் போலவே மிருகண்டு மகரிஷி, பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு நற்பேறு அடைந்துள்ளனர். இதன் அடையாளமாக இங்குள்ள கோஷ்டத்தில் மிருகண்டு முனிவருக்கும் சிலா ரூபம் வைக்கப்பட்டுள்ளது.

    மூன்று வயதிலேயே அதீத பேச்சுத்திறன், விவாதத்திறன், கவிபாடும் திறன் பெற்றிருந்த திருஞானசம்பந்தரே இத்தலத்து ஈசனை பிணியில்லார் தமக்கென்றும் கேடில்லார்' என மொழிகிறார். திங்கட்கிழமைகளில் இத்தலத்து சரஸ்வதீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட, பேச்சுக் குறைபாடுகள் நீங்குவது அனுபவ உண்மை.

    ஊரின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமான அய்யனார் கோவில்கள் உள்ளன. இதுவும் ஒரு சிறப்பு.

    கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, வள்ளி தெய்வானை திருமணம், கார்த்திகை சோமவாரம், ஆருத்ரா தரிசனம், நவராத்திரி, சிவராத்திரி, குரு, ராகு-கேது மற்றும் சனிப்பெயர்ச்சி தினங்கள், வைகாசி விசாகம் ஆகியன இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    சுக்ரதோஷம் உள்ளவர்கள் வெள்ளிக் கிழமையிலும், பவுர்ணமி திதியிலும் அம்பிகையை பிரார்த்தித்து வழிபடவேண்டும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் தேய்பிறை பஞ்சமியில் ஈசனை வந்து வழிபட்டு நலம் பெறலாம்.

    கும்பகோணத்தி இருந்து திருவாரூர் போகும் வழியில் குடவாசலை அடுத்துள்ளது, மணக்கால் அய்யம்பேட்டை. திருவாரூரில் இருந்து 15 கி.மீ. நன்னிலத்தில் இருந்து 10 கி.மீ.தொலைவு. பஸ் வசதி உண்டு.

    • ஒரே இடத்தில் 8 மணி நேரங்களுக்குமேல் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
    • ஞாபகமறதி நோய் இப்போது 50-வயதினருக்கும் வருவதற்கு, இந்தக் கணினியும் ஒரு காரணம்தான்.

    டிஜிட்டல் இந்தியாவில் இப்போது வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பயணங்களுக்கான முன்பதிவுகள், பொதுநலத் துறைகள், பத்திரப் பதிவுகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் ஆகிய அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டன. எனவே கணினியோடும், அலைபேசியோடும் செலவழிக்கும் நேரங்கள் அதிகமாகி விட்டன. ஒரே இடத்தில் 8 மணி நேரங்களுக்குமேல் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

    இரவைப் பகலாக்கிவிட்டோம், உறங்க வேண்டிய நேரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். மேலும் எந்திர மயமாக்கப்பட்டுவிட்டதால் நம் வேலைகளும், உடல் உழைப்பும் குறைந்து வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் சிறுவயதிலேயே வரத்தொடங்கிவிட்டன. குறிப்பாகக் கணினி முன் அமர்ந்து நாள் முழுவதும் வேலை பார்ப்பவர்கள், பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதைக் குறித்தும், அவர்கள் செய்ய வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் பற்றியும் இங்கே காண்போம்.

    கணினியில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள்

    கழுத்து வலி:

    அசைவில்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து சற்றுக் குனிந்த வண்ணம் வேலை பார்ப்பதால், கழுத்து எலும்புகளில் தேய்மானம் சிறுவயதிலேயே ஏற்படுகிறது. கழுத்தில் உள்ள சவ்வுகள் நகர்ந்து நரம்புகளை அழுத்துவதால் கழுத்துவலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், கைகளுக்கும் பரவுகின்றன. இதனால் கைகள் மரத்துப் போவது போன்ற உணர்வு, கைகளில் பிடிமானம் குறைவது, வெகுநேரம் பொருட்களைப் பிடிக்க முடியாமல் போதல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கவனித்தால், வாழ்வியல் முறை மாற்றங்கள் செய்வதால், அறுவைசிகிச்சை செய்வதைத் தடுத்துக் கொள்ளலாம். ஆனால் கழுத்து வலிதானே, என்று கவனக்குறைவுடன் விடும்போது, அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.

    முதுகு வலி:

    அதிக நேரம் அமர்ந்து கொண்டே இருப்பதால், கீழ் முதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு, இரண்டு முதுகு எலும்புகளுக்கும் இடையே உள்ள "சவ்வு" நகர்ந்து வந்து கால்களுக்குச் செல்லும் நரம்பை அழுத்திடுகிறது. இதனால் முதுகு வலி வருகிறது.

    கண் எரிச்சல்:

    கண்கள் அதிக வெளிச்சம் உள்ள திரையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருப்பதாலும், இரவு நேரங்களில் வேலை பார்ப்பதாலும் இரவு உறக்கம் கெட்டு கண்கள் உலர்ந்து கண் எரிச்சல், தலைவலி மற்றும் தலைப்பாரம் வருகிறது. கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்களில் உள்ள கருவிழிப் பாதிப்பு, கண்களுக்குக் கீழ் வீக்கம், கண்களைச் சுற்றிக் கருவளையம் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

     உடல் பருமன்:

    ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால் இடுப்புப் பகுதி பருமனாகிவிடுகிறது. இடுப்பைச் சுற்றிப் படியும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது. உடல் உறுப்புகளைச் சுற்றிக் கொழுப்பு படிந்துள்ளது என்பதை நம் பெருத்த வயிறு (தொப்பை) குறிக்கிறது.

    முட்டி வலி:

    கால்களை மடக்கி வைத்துக் கொண்டு அதிக நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதால், முட்டி வலி சிறுவயதிலேயே வந்து விடுகிறது. இதனால் படி ஏறுவதில், கீழே அமர்ந்து எழுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனாலேயே பலருக்குச் சுறுசுறுப்பாக நடக்க முடிவதில்லை.

    மணிக்கட்டுப் பாதிப்பு:

    அதிகப்படியாக மணிக்கட்டுகளுக்கு வேலை கொடுப்பதால் கையில் உள்ள மூட்டுகள், சதைகள் பாதிக்கப்பட்டு அது தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன. அதிக நேரம் சுட்டி (மவுஸ்) பயன்படுத்துவதால் "கார்பல் டனல் சின்ட்ரோம்" என்ற மீடியன் நரம்பு அழுத்த நோய் வந்து விடுகிறது. இதனால் கைவிரல்கள் மரத்து விடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இரவில் உறங்கும்போது விறுவிறு என்ற உணர்வு வந்து எழுந்து கைகளை உதற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து மூளை நரம்பியல் நிபுணரிடம் மருத்துவம் பெறவேண்டும். இன்னும் பலருக்கு முழங்கை மூட்டுகளை ஊன்றியோ அல்லது மேசை மீது கைகளை வைத்துக்கொண்டு வேலை செய்வதாலோ அந்த மூட்டின் வழியாகக் கீழே இறங்கும் அல்நார் நரம்பு பாதிக்கப்பட்டு மோதிர மற்றும் சுண்டு விரல்களில் உணர்விழப்பு அல்லது விறுவிறு என்று உள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

    நினைவுமறதி நோய்:

    கால நேரம் கணக்கு இல்லாமல் இரவில் கண்விழித்து வேலை செய்வதால் மூளையின் செயல் திறன் குறைய வாய்ப்பு உள்ளது. ஞாபகமறதி நோய் இப்போது 50-வயதினருக்கும் வருவதற்கு, இந்தக் கணினியும் ஒரு காரணம்தான். இரவைப் பகலாக்கி வேலை செய்வதால் உறக்கத்தின் போது மட்டுமே வெளியேற்றப் படும் நச்சுப்பொருட்கள் சரிவர வெளியேற்றப்படாமல் மூளையில் தேங்குவது இந்த நினைவுமறதி நோய்க்கு முதற்காரணம்.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    மன அழுத்தம்:

    எந்நேரமும் உயிரில்லா எந்திரங்களுடன் வேலை செய்வதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒத்தமனிதர்களுடன் இயல்பாகப் பழகும் தன்மையும் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்தவர்களுடன் உடன்பட்டுப் போகும் இயல்பு குறைகிறது; மனஅழுத்தம் அதிகரித்து, கோபம், எரிச்சல், பழக்கவழக்கங்கள் மற்றும் குணத்தில் மாறுபாடு ஏற்படுகிறது; குடும்பங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் கணினியில் அதிகநேரம் வேலை செய்யும் இளம் இணையர்கள் தங்களது மனஅழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமலும், அவர்களிடம் சரியான புரிதல் இல்லாததாலும் மணமுறிவு ஏற்படும் அளவிற்குச் சென்றுவிடுகிறது.

    வலிப்பு நோய்:

    வலிப்பு நோய் உள்ளவர்கள் அதிகப்படியான வெளிச்சம் உள்ள திரைகளைப் பார்ப்பதனால் வலிப்பு, கட்டுப்பாட்டில் இல்லாமல் போய்விடுகிறது. மேலும் வேகமாக மாறும் திரைகளினால் சில வலிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் இந்நோய் சிலரையே பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை போட்டோ சென்சிடிவ் எபிலெப்சி என்கிறோம். இந்தச் சிக்கல்களைத் தடுக்க நாம் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றிக் காண்போம்.

    தடுப்பு நடவடிக்கைகள்:

    அதிக நேரம் குனிந்து கொண்டே வேலை செய்வதால் வரும் பாதிப்பைக் குறைக்க, ஒவ்வோர் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையும், மேலும் காலை எழுந்தவுடனும் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளை தளர்த்திவிடும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

    முதுகு வலியைத் தடுக்க, அவ்வப்போது எழுந்து நிற்பது மற்றும் வேலை செய்யும் நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, குறைந்தது ஒரு நிமிடத்திற்காவது எழுந்து நடப்பது நல்லது. முதுகுப் பகுதிகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் முதுகுவலியை மட்டுமல்லாமல், இடுப்பைச் சுற்றிக் கொழுப்பு படிவதையும் தடுக்கலாம்.

    கால்களை மடக்கிக் கொண்டு வெகுநேரம் அமர்ந்திருப்பதால் முட்டி வலி வருவதைத் தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எழுந்து ஒரு நிமிடமாவது நடக்க வேண்டும்.

    மணிக்கட்டுகளைப் பயன்படுத்தி அதிகநேரம் வேலை செய்வதால் கார்பல் டனல் சின்ட்ரோம் என்ற நரம்பு அழுத்த நோய் வருவதைத் தடுக்க, இரவு உறங்கும்போது மணிகட்டுகளைப் பாதுகாப்பதற்காக இதற்கெனச் சிறப்பாய்ச் செய்யப்பட்ட மணிக்கட்டுப் பட்டையை அணிந்து கொள்ளலாம்.

    கண்களைப் பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாளும் காலையில் 3 நிமிடங்களுக்குக் கண்களுக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இரவு உறங்குவதற்கு முன்பு அலைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    அதிக நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் காலையில் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்வது நல்லது.

    குனிந்து கொண்டே வேலை செய்வதால் வரும் கழுத்துவலியைத் தடுக்க, கணினி திரையைக் கண்களுக்கு நேரே வைத்துப் பணிபுரிவது நல்லது.

    கணினி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால் பல வேலைகள் எளிதாக்கப்பட்டுவிட்டாலும், அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது, உடல் அளவில் பல சிக்கல்களை மனித சமுதாயம் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க மேலே கூறியுள்ள தடுப்பு நடவடிக்கைகளை ஏற்று நலமுடன் வாழ்வோமாக.

    செல்: 75980-01010, 80564-01010.

    • ‘’தி ஓப்ரா வின்ப்ரே ஷோ’’ என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
    • உலகில் மிக அதிகமான பேர் பார்க்கும் ஒரே ஷோ என்ற பெயரை இவர் ஷோ தட்டிச் சென்றது!

    மிக மிக சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி பின்னர் மனத் துணிவினாலும் தன் திறமையை வளர்த்ததாலும் உலகின் நம்பர் ஒன் அரட்டை அரங்க ராணியாகத் திகழ்பவர் யார்?

    அனைவரும் அறிவர் ஆப்பிரிக்க-அமெரிக்க டாக் - ஷோ ராணியான ஓப்ரா வின்ப்ரேயை!

    பிறப்பும் இளமையும்: 1954-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ந்தேதி அமெரிக்காவில் மிஸ்ஸிசிபி நாட்டுப்புறத்தில் தனியாக வாழ்ந்த இளம் பெண்ணான வெர்னிடா லீ என்பவருக்கும் சுரங்கத் தொழிலாளியான வின்ப்ரேக்கும் மகளாகப் பிறந்தார் ஓப்ரா. சுரங்கத் தொழிலாளியாக இருந்த தந்தை நாவிதராக மாறி பின்னால் உள்ளூர் கவுன்சிலராக ஆனார்.

    ஓப்ராவின் இளமைப் பருவம் சோகமான ஒன்று. அவரது மாமா உட்பட பலரும் அவரைக் கொடுமைப்படுத்தினர்.

    இளவயதில் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானார் ஓப்ரா. பதினான்கு வயதிலேயே கர்ப்பமானார். பிறந்த குழந்தையும் சீக்கிரமே இறந்தது. நாவிதரான தனது தந்தை வெர்னான் வின்ப்ரேயிடம் அவர் அனுப்பப்பட டென்னஸிக்குச் சென்றார் அவர். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது ரேடியோ பணியில் ஈடுபட்டார். 19-ம் வயதிலேயே செய்தி வாசிக்க ஆரம்பித்தார்.

    இவரது உண்மையான பெயர் ஓர்பா வின்ப்ரே. ஆனால் இதை உச்சரிப்பது கஷ்டமாக இருக்கிறது என்பதால் 'ப்' முன்னே வந்து 'ர்' பின்னே போய் ஒர்பா வின்ப்ரே என்பது ஓப்ரா வின்ப்ரே என்று ஆனது.

    பாட்டி கொடுத்த ஊக்கம்: இவரது ஒலிபரப்பு சேவையை முதலாவதாகத் துவக்கி வைத்தவர் இவரது பாட்டி ஹாட்டி மா லீ தான்! மூன்று வயதான குட்டியாக இருந்த போது இவரது அழகான உச்சரிப்பையும் அபார துணிச்சலையும் கண்ட பாட்டி இவருக்கு ஊக்கம் அளித்தார்; பொம்மைகளைப் பேட்டி எடுக்கச் சொன்னார். பண்ணையில் வேலியில் வந்து அமரும் காக்கைகளை பேட்டி எடுப்பது இவருக்கு பிடித்தமான பொழுது போக்கு ஆனது!

    பைபிளை அழகாக உச்சரிக்கவே உள்ளூர் சர்ச்சின் கதாநாயகியாக இவர் ஆனார். உச்சரிப்பில் ஒரு சிறு தவறு ஏற்பட்டால் கூட இவரது பாட்டி இவருக்கு ஒரு அடி தருவார். ஒரு சமயம் அடித்தபோது ரத்தக் காயம் ஏற்பட்டது. அத்துடன் ஆடையை அணியவே அதிலும் ரத்தக் கறை பட்டது, அதைப் பார்த்த பாட்டி அதற்கும் ஒரு அடி கொடுத்தார்- ஏன் சட்டையைப் பாழாக்கினாய் என்று,

    மிஸ் பியூட்டி: 1971-ல், தனது 17-ம் வயதில் இவர் டென்னஸி ஆடை அலங்கார அழகிப் போட்டியில் மிஸ் ப்ளாக் டென்னஸி பியூட்டி பேஜண்ட்- ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். படிப்பில் சூட்டிகையாக இருக்கவே, டென்னஸி ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கான முழு உதவித்தொகையையும் பெற்றார்.

    ஓப்ரா வின்ப்ரே ஷோ: 1983-ல் சிகாகோ சென்ற வின்ப்ரே ஏ.எம். சிகாகோ என்ற அரை மணி நேர நிகழ்ச்சியை நடத்தினார். அதற்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கவே அது ஒரு மணி நேர நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது.

    ''தி ஓப்ரா வின்ப்ரே ஷோ'' என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

    இவரது ஓப்ரா வின்ப்ரே ஷோ 1986-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி ஆரம்பித்தது.

    உலகில் மிக அதிகமான பேர் பார்க்கும் ஒரே ஷோ என்ற பெயரை இவர் ஷோ தட்டிச் சென்றது!

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    மைக்கேல் ஜாக்ஸனை இவர் பேட்டி கண்டதை உலகில் பத்து கோடி பேர் பார்த்தனர். இப்படி அதிகமான பேர் பார்க்கும் நான்காவது ஷோவாக இது உலகில் பதிவு பெறுகிறது! 1991-92-ல் இவரது ஷோவை 131 லட்சம் பேர் பார்த்தனர்.

    1986-ல் ஆரம்பித்து 2011-ம் ஆண்டு முடிய நடந்ததால் இருபத்தைந்து வருடம் நடந்த ஷோ என்ற புதிய அந்தஸ்தையும் இவரது ஷோ பெற்றது. (8-9-1986-ல் முதல் ஷோ ஒளிபரப்பானது)

    தனது டாக்-ஷோவைத் தானே தயாரித்து அதன் உரிமையாளராகவும் இருக்கும் ஒரே உலகப் பெண்மணி ஓப்ரா வின்ப்ரே தான்! 'பிராட்காஸ்டர் ஆப் தி இயர்' என்ற விருதை மிக இளம் வயதில் பெற்ற ஒரே பெண்மணியும் ஓப்ரா தான்!

    108 கிலோ எடையுள்ள குண்டுப் பெண்மணியான இவர் அந்தப் பருமனையும் வைத்துக் கொண்டே டாக்-ஷோவில் நிலைத்து நிற்பதும் ஒரு அதிசயம் தான். அவரது செக்ஸி அப்பீல், நகைச்சுவை கலந்த சமயோசிதப் பேச்சு, உடை அலங்காரம்,பாடி லாங்வேஜ், பளீர்

    பேச்சு எல்லாமே தனி தான்!

    1987ல் மூன்று டை-டைம் எம்மி விருதுகளை இவரது ஓப்ரா வின்ப்ரே ஷோ பெற்றது!

    அமெரிக்காவின் அபிப்ராயத்தை உருவாக்கும் (துணிச்சல்கார, அபாயகரமான) பெண்மணி என்று இவரை அமெரிக்க பத்திரிகைகள் புகழ்கின்றன.

    இருபதாம் நூற்றாண்டின் மிக அதிகமான செல்வாக்கு பெற்ற நூறு பிரபலங்களை பிரபல டைம் பத்திரிகை அறிவித்த போது அதில் ஓப்ராவின் பெயரும் இடம் பெற்றது.

    1998-ல் லைப் டைம் அவார்டை அவர் நேஷனல் அகாடமி ஆப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றார். இருமுறை ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அவர் வழங்கும் நிதி நன்கொடைக்காக கவுரவ ஆஸ்கார் விருது 2011-ல் வழங்கப்பட்டது.

    திரைப்பட நடிகை: ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 'தி கலர் பர்ப்பிள்' என்ற திரைப்படத்தில் துணைப் பாத்திரமான சோபியாவாக இவர் நடித்து தன் நடிகையாகும் ஆசையைத் தீர்த்துக் கொண்டார். ஏராளமான திரைப்படங்களில் தன் குரலை இவர் பதிவு செய்துள்ளார்.

    பரபரப்பூட்டும் பேட்டிகள்: ஒளிவு மறைவின்றி தனது குறைகளையும் நேயர்களுடன் அவர் பகிர்ந்து கொள்வார். 1995-ல் பிரபல அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் நிருபர் பேட் ரிஸ் கெய்ன்ஸ்-ஐ அவர் போதைப் பொருள்கள் பிரச்சனை சம்பந்தமாகப் பேட்டி கண்ட போது தனது இருபதாம் வயதில் தான் கொகெய்னுக்கு அடிமையாக இருந்ததை அவர் குறிப்பிட்டார். அத்தோடு அந்தப் பழக்கத்தை உருவாக்கிய மனிதரிடமும் தான் அடிமைப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

    பாரக் ஒபாமா, எலிஸபத் டெய்லர், டாம் க்ரூஸ், இளவரசர் ஆண்ட் ரூவின் முன்னாள் மனைவி சாரா பெர்கூஸன் (இவர் பக்கிங்காம் அரண்மனை ரகசியங்களைப் புட்டுபுட்டு வைத்தார்) , பாடகர் விட்னி ஹூஸ்டன், என்று இவர் பேட்டி காணாத பிரபலங்களே இல்லை எனலாம். இவர்கள் அனைவரும் இதுவரை சொல்லாத அந்தரங்க விஷயங்களை இவருடன் பகிர்ந்து கொள்வது இவரது பேட்டியின் சிறப்பாக அமைந்தது.

    "ஏன் எனது முன்னாள் கணவனையும் அவரது இரண்டாம் மனைவியையும் நான் கொன்றேன்" என்று ஒரு பெண்மணி பேட்டி கொடுத்தது பரபரப்பை ஊட்டிய ஒரு ஷோ ஆகும். இப்படிப் பலதரப்பட்ட விதத்தில் பேட்டிகள் இருப்பதால் யாரும் இவரது நிகழ்ச்சியை 'மிஸ்" செய்வதே இல்லை.

    நிகழ்ச்சியில் பங்கு பெற்றோருக்கு கார் பரிசு!: இவரது ஷோவில் கலந்து கொண்ட ஆடியன்ஸ் 276 பேருக்கும் செடான் ஜி6 காரை ஒவ்வொருவருக்கும் பரிசாக அளித்தார். இந்த அதிரடி இன்ப அதிர்ச்சியை பாண்டியாக் கார் நிறுவனம் விரும்பி ஏற்று பரிசுகளை அள்ளித் தந்தது. உலகில் இப்படி கார்களை ஆடியன்ஸ் அனைவரும் பெற்றது இவரது ஷோவில் மட்டும் தான்!

    ஹார்போ நிறுவனம்: 1986-ல் சொந்தமாக ஹார்போ என்ற புரடக்ஷன் நிறுவனத்தை நிறுவிய இவர் அதற்கு சேர்மன் என தலைமையை ஏற்றார். ஹர்போ (HARPO) என்ற இவரது நிறுவனத்தின் பெயரைத் திருப்பிப் போட்டால் அதில் ஓப்ரா (OPRAH) என்ற அவரது பெயர் வந்து விடும். அத்துடன் மட்டுமல்ல, இது கலர் பர்ப்பிள் திரைப்படத்தில் சோனியாவாக அவர் நடித்த போது அவரது கணவர் பாத்திரத்தின் பெயரும் இது தான்!

    மிக பிரம்மாண்டமான அளவில் நிறுவனம் வளர்ச்சி பெற்றது.

    புத்தக மதிப்புரை: கவர்ச்சி பெறும் விதத்தையும் அதன் மூலம் தலைவராகவும் பணக்காரராகவும் ஆகும் வழிகளை போதிக்கும் சுய முன்னேற்ற டி.வி.டியான சீக்ரட்டை (Secret) இவர் தனது ஷோவில் விமர்சிக்கவே அது நம்பர் ஒன் விற்பனை டிவிடியாக மாறி பல்லாயிரக்கணக்கில் விற்று சாதனை படைத்து விட்டது. புத்தக மதிப்புரை செய்ததன் மூலம் இவர் மதிப்புரை செய்யும் எந்தப் புத்தகத்தின் விற்பனையும் லட்சக்கணக்கை எட்டியது.

    மளிகை ஸ்டோர் கிராப்ட் ஹெய்ன்ஸ் என்பவரோடு சேர்ந்து மளிகைப் பொருள்களை விற்கும் ஒரு மளிகைக் கடையையும் இவர் ஆரம்பித்து சத்துணவு கொண்ட உணவுப் பொருள்களை வழங்க ஆரம்பித்தார்.

    ஆப்பிரிக்க அமெரிக்கப் பில்லியனர் பெண்மணி: 2013-ல் அமெரிக்க ஜனாதிபதி விருதான பிரெஸிடென்ஷியல் மெடல் ஆப் பிரீடம் என்ற விருதை ஜனாதிபதி பாரக் ஒபாமாவிடமிருந்து பெற்றார்.

    2003ம் ஆண்டு போர்பஸ் பத்திரிகை அமெரிக்க பில்லியனர்கள் (நூறு கோடி டாலருக்கு அதிபதி!) பட்டியலை வெளியிட்ட போது அதில் இடம் பெற்ற ஓப்ரா வின்ப்ரே இந்த அந்தஸ்தில் இடம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி என்று அறிவிக்கப்பட்டார்.

    2022-ல் இவரது சொத்தின் மதிப்பு 1270 லட்சம் டாலர் என்று கணக்கிடப்பட்டது!

    குடும்பம்: வாழ்நாள் முழுதும் பல ஆண்கள் அவருடன் நெருக்கமாகப் பழகினர். திருமணம் என்ற அளவு சென்று திருமணம் ஆகாமல் உறவு நின்றதும் உண்டு.

    பிரபல பேச்சாளரும் எழுத்தாளருமான ஸ்டெட்மேன் கிரஹாமுடன் அவர் 6 வருட காலம் நெருங்கிப் பழகினார் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக மக்கள் நம்பினர். ஆனால் திருமணம் நடைபெறவே இல்லை.

    ஓப்ராவின் அறிவுரைகள்: 'நாம் பார்க்கும் ஒவ்வொரு மனிதரிடமும் கண்ணியமாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் நமது லட்சியம்' என்று அவர் தனது கொள்கையைக் கூறினார்.

    ஒரு அநீதி இழைக்கப்படும் போது அதைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன் இது அவர் 2020-ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்கப்போவதாக வதந்தி பரவிய போது கூறியது!

    2015-ல் ஏப்ரல் மாதம் தி ஓப்ரா வின்ப்ரே ஷோ முடிந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கூறியது: "மாற்றம் ஒன்றே நாம் நம்பக்கூடிய ஒன்றாகும்". ஷோ முடிவடைந்து விட்டதால் அவருக்கு நிறைய நேரம் கிடைத்தது. அந்த அதிக நேரமானது வாழ்க்கையை எப்படிக் கொண்டு போக வேண்டும் என்பதை நிர்ணயிக்க உதவுகிறது என்றார் அவர்.

    எழுபது வயதான போதிலும் உற்சாகமாக இன்றும் பணி புரிகிறார்!

    பேட்டிகளின் ராணி: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துவோர் இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு!

    சுமார் 37,000 பேட்டி நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார் என்பதே இவரை பேட்டிகளின் ராணி என்று சொல்லப் போதுமான காரணம் இல்லையா?!

    • திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல் போதைப்பிரியர்கள் நினைத்தால் மட்டுமே அவர்கள் திருந்த முடியும்.
    • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள்.

    பயங்கரவாதத்தை மிஞ்சியது போதைப்பழக்கம்.

    பிறரால் உருவாகக்கூடிய பயங்கரவாதத்தை கூட பாதுகாப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்திவிடமுடியும். ஆனால் போதைப்பழக்கம் அப்படியல்ல...

    தடுப்பு நடவடிக்கைகள் மூலம் எவ்வளவுதான் தடுத்தாலும் உலக அளவில் போதைப்பொருள் பயன்பாடு மிகுந்த சவாலாக இருந்து வருகிறது.

    மது குடிக்காதே, கஞ்சா புகைக்காதே, போதைப்பொருளை எடுத்துக் கொள்ளாதே என விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் முடியுமே, தவிர அடக்குமுறையால் அடக்கிவிடமுடியாததாக இருக்கிறது போதைப்பழக்கம்.

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல் போதைப்பிரியர்கள் நினைத்தால் மட்டுமே அவர்கள் திருந்த முடியும்.

    அதையும் தாண்டி போதைக்கு அடிமையாகிவிட்டால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் மிகப்பெரிய உதாரணம். போதை தன்னை மட்டும் கொல்லாமல், தான் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துவிடும்.

    வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் கேடாக அமைந்துவிடும் என்பதால்தான் போதையை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

    போதைப்பொருள் பயன்பாட்டால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கின்றன.

    உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    இவர்களில் 3-ல் ஒருவர் பெண் என்பதும் போதைக்கு அடிமையாவோரில் 85 சதவீதம் பேர் படித்தவர்கள் என்பதும், 75 சதவீதம் பேர் இளைஞர்கள் என்பதும் வேதனை தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

    மது, கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் போன்ற மனிதனை அழிக்கும் போதைப்பொருள்கள் பல விதங்களில் புழக்கத்தில் உள்ளன.

    உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவத் தளவாடங்களுக்கு அடுத்து போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணப்புழக்கம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு தகவல்.

    12 முதல் 17 வயது வரை உள்ள இளவயது பருவத்தினர் அதிகம் பேர் போதைப்பொருள் பயன்பாட்டை தொடங்கும் நிலையில் இருக்கிறார்கள். 18 முதல் 25 வயதுடைய இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு உச்சத்தை அடையும் நிலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள். சுமார் 3.1 கோடி பேர் கஞ்சாவும், 60 லட்சம் பேர் ஓபியாய்டுவும், 1.18 கோடி பேர் தற்போது மயக்க மருந்துகளை (மருத்துவம் அல்லாத பயன்பாடு) போதைக்காகவும் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. 8.5 லட்சம் பேர் போதை ஊசி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் நாட்டில் போதைப்பொருளின் பன்முக தாக்கங்களின் தீவிரத்தை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப்பொருள் கடத்தலை தடு்ப்பது, போதையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்குதல், ஆலோசனை வழங்குதல், உரிய சிகிச்சை அளித்தல், போதைப்பொருள் சார்ந்த நபர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றன.

    இளைய சமுதாயத்தினரிடையே போதைப்பொருள் ஊடுருவலை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் போலீஸ், தன்னார்வ ெதாண்டு நிறுவனத்தினர் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு என்பது குறைந்தபாடில்லை. போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிராக பல சட்டங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதாக இல்லை. அதனால்தான் அதை ஒழிக்கும் நோக்கத்தை உலக நாடுகள் வலியுறுத்தும் விதமாக ஜூன் 26-ந்தேதி (இன்று) போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஐ.நா. சபை, உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதற்கான நமது முயற்சிகளை விரிவுபடுத்துவோம். கூட்டு நடவடிக்கை மூலம், ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை உருவாக்க முடியும் என்ற போதைப்ெபாருள் ஒழிப்பு தின செய்தியாக தெரிவித்து இருக்கிறது.

    மக்கள் நலன் கருதி போதைப்பொருட்கள் அனைத்தையும் முற்றிலுமாக ஒழிக்க அரசு முன் வரவேண்டும். போதைப்பொருள் கடத்துவோருக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தியதால் நிலைகுலைந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேவையான வாழ்வாதாரங்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவற்றிற்கெல்லாம் மேலாக, உயிரை கொல்லும் போதை இன்னும் தேவைதானா என்று அதை பயன்படுத்துவோர் நினைக்க வேண்டும். தன்னையும், தன் குடும்பத்தினரையும் மனதில் கொண்டு போதைப் பொருளை தொடமாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும்.

    போதை எனும் பாதை என்றைக்குமே தவறான இடத்துக்கே அழைத்துச்செல்லும் என்பதை உணர்ந்தால் நாமும், நாடும் நலம் பெறலாம். போதைப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

    ×