என் மலர்
புதுச்சேரி
புதுவை அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி (வயது 60). இவரது டிரைவர் மற்றும் உதவியாளருக்கு சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ.வும் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதுடன் முருங்கப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் துரித பரிசோதனையும் செய்துகொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் ஏற்கனவே அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், சிவா, பாஸ்கர், அனந்தராமன் ஆகியோருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து சிகிச்சைக்குப் பின் அவர்கள் மீண்டனர். தற்போது மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜெயமூர்த்திவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்த கதர் வாரிய அதிகாரி கணேசன் (வயது 54). கடந்த 7-ந் தேதி வாழைக்குளம் அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட கணேசன் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளருமான லட்சுமி நாராயணனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
கணேசன் கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், கொலையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும், அரசியல் காரணத்துக்காக கொலை நடந்துள்ளதாகவும், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.
மேலும் கணேசன் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உத்தரவிட கோரி லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆதரவாளர்கள் ஊர்வலம் நடத்தினர்.
அதீதி ஓட்டல் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் எம்.எல்.ஏ.வாக இருந்து எந்த பயனும் இல்லை. இன்னும் ஒரு மாதத்துக்குள் கணேசன் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை.
எனவே, ஒரு மாதம் பார்ப்போம். வழக்கு சி.பி. ஐ.க்கு மாற்றாவிட்டால் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று கட்சி மற்றும் எம்.எல்.ஏ. பதவி வேண்டாம் என ராஜினாமா கடிதம் கொடுத்து விடுவேன்.
இவ்வாறு லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. பேசினார்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,489ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் விஞ்ஞானிகள் நடத்திய இரண்டாவது ஆய்வில், 698 நபர்கள் பங்கேற்றனர். அவர்களில் நோய் தொற்று எதிர்ப்பு திறன் 20.7% பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நோய் தொற்றின் தாக்கம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஏறத்தாழ சமமாக உள்ளது. ஆண்களில் 21 புள்ளி 4 சதவீதமாகவும், பெண்களில் 20 சதவீதமாகவும் உள்ளது.
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் வருகிற 28-ந்தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியிலும் இந்த போராட்டத்தை நடத்த இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
கொரோனா வேகமாக பரவிவரும் இந்த காலகட்டத்தில் போராட்டம் என்ற பெயரில் கூட்டம் கூடுவதால் தொற்று அதிகமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம், மற்றும் கவர்னர் கிரண்பேடிக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பினார்.
அதில், ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரே பேரிடர் காலத்தில் இதுபோன்று போராட்டம் அறிவித்து இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அன்பழகன் எம்.எல்.ஏ. சொல்வது சரியானது. தொற்று பரவுவதை தடுக்க நாம் கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஒருமுறை நாம் விட்டுவிட்டோம் என்றால் மீண்டும் அது கடினமாகிவிடும். புதுவையில் இறப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இதற்காக கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்திய மருத்துவ கழகக்குழு, சட்ட அமலாக்கம், களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. சுய உதவி குழுக்களை சேர்ந்தவர் கள், தன்னார்வலர்கள் வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்கு அழைத்து வருகிறார்கள்.
அதில் ஒருவர் தாமதமாக வந்தாலும் இறப்பு விகிதம் அதிகரித்து விடுகிறது. இந்த காலகட்டத்தில் போராட்டங்கள் பாதிப்பினை அதிகரித்துவிடும். கொரோனா பரிசோதனை, சிகிச்சைக்காக கடன் வாங்கி செலவழித்து வருகிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தொற்று அதிகரிப்பு என்பது பட்ஜெட் செலவினை அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் போராட்டத்தை தவிர்க்கவேண்டும் என்ற எம்.எல்.ஏ.வின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். வேறு எந்த ஆலோசனையிலும் நான் எதுவும் சொல்லவில்லை. அது அவரது பார்வையாகும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து புதுவை, காரைக்காலில் மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிகிறேன்.
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பேக்ஸ் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில் கொரோனா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளது. நீங்கள் புதுச்சேரி மாநில முதல்-அமைச்சராகவும், பேரிடர் மேலாண்மை துறையின் தலைவராகவும் உள்ளீர்கள். பேரிடர் மேலாண்மை துறையின் சட்டம் நன்றாக தெரியும். தேசிய அளவிலான வழிகாட்டுதலும் உங்களுக்கு நன்றாக தெரியும். இதனை புதுவையில் நடைமுறைப் படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2016-ம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கில் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் மற்றும் பழங்கால சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் இருந்து ஒருசில சாமி சிலைகளை வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அப்போது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு புதுவை உப்பளம் கோலாஸ் நகரில் 11 ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேரி தெரசா வனினா ஆனந்தி என்பவரை கைது செய்தனர்.
இந்தநிலையில் மேரி தெரசா வனினா ஆனந்தியின் சகோதரரான ஒயிட் டவுன் ரோமண்ட் ரோலண்ட் வீதியில் வசித்து வரும் ஜுன்பால் ராஜரத்தினம் என்பவரது வீட்டிலும் சாமி சிலைகள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அதற்கு முன் தனது வீட்டில் இருக்கும் சிலைகள் தொடர்பாக ஜுன்பால் ராஜரத்தினம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னிடம் உள்ள சிலைகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங், ஐ.ஜி. டி.எஸ்.அன்பு ஆகியோர் உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று புதுச்சேரி ரோமண்ட் ரோலண்ட் வீதியில் உள்ள ஜுன்பால் ராஜரத்தினம் வீட்டில் அதிரடி சோதனை நடந்தது.
சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 2 மணி வரை ஜுன்பால் ராஜ ரத்தினம் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜுன்பால் ராஜரத்தினம் வீட்டில் இருந்து நடராஜர், நடமாடும் சிவன், பார்வதி, அம்மன், விநாயகர், பிச்சாண்டவர், அர்த்தநாரீஸ்வரர், சம்பந்தர் உள்பட 60 ஐம்பொன் மற்றும் உலோக சிலைகள், 14 பழங்கால கற்சிலைகள் என மொத்தம் 74 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சிலைகள் புதுச்சேரி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு அதற்கான சான்றிதழ் பெறப்பட்டது. இதன்பின் அவற்றை தமிழகத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொண்டு சென்றனர். அந்த சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது55) இவர் வில்லியனூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் உத்திரகுமார் (35). இவர் இன்று காலை அதேபகுதியை சேர்ந்த அழகுநாதன்(51), பரசுராமன் (34) ஆகியோருடன் அருகே உள்ள தமிழக பகுதியான பள்ளிநேலியனூர் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது திருபுவனையில் இருந்து மண்டகப்பட்டு நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக நடைபயிற்சி சென்றவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட உத்திர குமார், அழகுநாதன், பரசுராமன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உத்திரகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து அழகுநாதன், பரசுராமன் ஆகிய 2பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கார் விபத்தில் உத்திரகுமார் காயமடைந்து இருப்பதாக தகவல் அறிந்த விநாயகம் தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அப்போது ஆஸ்பத்திரி வாசலில் மகன் இறந்து விட்ட தகவல் அறிந்ததும் விநாயகம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்கால் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்படுகிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பண்ணை குளம் வெட்டும் பணி நேற்று நடைபெற்றது.
மாலை 3.30 மணியளவில் குளத்துக்காக 2½ அடி ஆழம் பள்ளம் தோண்டியபோது, உலோகத்தினால் ஆன பொருள் இருப்பது போன்ற சத்தம் கேட்டது. உடனே பொக்லைன் எந்திர டிரைவர், பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தினார். பின்னர் வேலையாட்கள் மூலம் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது, சுமார் 1½ அடி உயரத்தில் கிருஷ்ணர் மற்றும் பெருமாள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து சிலைகளை பார்த்தனர். தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி தயாளன் மற்றும் ஊழியர்கள் சேத்தூர் கிராமத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிலைகளை கைப்பற்றி எடுத்துச்சென்று, மாவட்ட துணை கலெக்டர் ஆதர்சிடம் ஒப்படைத்தனர்.
இந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனது என்று கிராம மக்களால் கூறப்படுகிறது. இருப்பினும் முறைப்படி ஆய்வு நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
குளம் வெட்டும் பகுதியில் முனீஸ்வரனை வைத்து வணங்கி வருவதால், அங்கு குளம் வெட்டக்கூடாது என்று ஒரு தரப்பு மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது குளம் வெட்டும் பணியின்போது சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நடந்த கொலை சம்பவங்களுக்கு பழிவாங்கும் படலம் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ரவுடி சோழனின் நண்பரான வினோத் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு காட்டாமணிக்குப்பம் பகுதியை சேர்ந்த ரவுடி அன்பு ரஜினி உதவியது சோழனுக்கு தெரியவந்தது. அதையடுத்து சில வாரங்களில் அன்பு ரஜினியை, வெடிகுண்டு வீசி கொலை செய்து பழிதீர்த்தனர். தற்போது சோழன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அன்பு ரஜினி கொலைக்கு பழிக்குப்பழி வாங்க அவரது ஆதரவாளர்கள் சோழன் மற்றும் அவரது கூட்டாளிகளை கொலை செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். இதுபற்றி அறிந்து உஷாரான சோழனின் கூட்டாளிகள் முந்திக் கொண்டு சம்பவங்களில் ஈடுபட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து சதி திட்டம் தீட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கோத்ரா உத்தரவிட்டார். அதன்படி கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் அறிவுரையின்பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் கந்தன், இலக்கியவேந்தன் ஆகியோர் வைத்திக்குப்பம் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்ததையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து சந்தேகம் வலுத்ததை தொடர்ந்து அவர்களை சோதனையிட்டபோது ஒரு பையில் 2 கத்திகள், 4 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு பிடித்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன்பின் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்ததில் அவர்கள் அன்பு ரஜினியின் ஆதரவாளர்களும், ரவுடிகளுமான வைத்திக்குப்பம் வெங்கடாச்சலம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த அருண்குமார் (வயது 20), ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர் அருள் என்ற பழனி (22), குருசுக்குப்பம் மரவாடி வீதியை சேர்ந்த புஷ்பராஜ் (21) என்பது தெரியவந்தது.
இவர்களில் அருண்குமார் மீது குயிலாப்பாளையம் வாலிபர் கொலை வழக்கும், புஷ்பராஜ் மீது குருசுக்குப்பம் மாறன் கொலை வழக்கும், அருள் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
எனவே அடுத்த கொலை சதிக்காக அவர்கள் 3 பேரும் கத்திகள், வெடிகுண்டுகளுடன் இரவில் சுற்றி வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அருளுக்கும் ரவுடி குட்டி சிவா என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. அப்போது குட்டி சிவா, அருளை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் குட்டி சிவாவையும், பிரபல ரவுடியான சோழனின் கூட்டாளிகளை கொலை செய்யவும் சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.
இதற்காக காலாப்பட்டு அருகே உள்ள புத்துப்பட்டை சேர்ந்த ஜனா என்பவரின் தூண்டுதலின் பேரில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த தாக கைதான 3 பேரும் போலீசில் வாக்குமூலம் அளித்தனர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவு வந்தது. அதைத்தொடர்ந்து அருண்குமார், அருள், புஷ்பராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுவை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு கடந்த 21 -ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
தேர்வில் புத்தகத்தை பார்த்து ஆன்லைனிலோ அல்லது கல்லூரி தேர்வு அறைகளிலோ வந்து தேர்வு எழுதலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பட்டய பயிற்சி ஆசிரியர் படிப்பு மாணவர்களுக்கான தேர்வும் கடந்த 21 -ந் தேதி தொடங்கியது.
லாஸ்பேட்டை வெங்கடசுப்பா ரெட்டியார் பள்ளி மற்றும் வள்ளலார் அரசு பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் தேர்வு எழுதினர்.
கடந்த 2 நாட்களாக ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் உத்தரவின்படி புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கேட்டனர். ஆனால் தேர்வு கண்காணிப்பாளர்கள் அனுமதி வழங்க மறுத்தனர்,
இந்த நிலையில் இன்று தமிழ் மொழி கற்பித்தல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத வெங்கடசுப்பா ரெட்டியார் பள்ளி வளாகத்திற்கு வந்த அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
தேர்வு அறைக்கு செல்லாமல் தேர்வு மைய வளாகத்தில் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.






