என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி கார் உடைப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான நாவற்குளம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சரத்செந்தில் (வயது38). 

    இவர் சமத்துவ மக்கள் கட்சியின் புதுவை மாநிலத் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் வசித்து வரும் புதுவை-தமிழக எல்லையில் உள்ள நாவற்குளம் பகுதியில் ரவுடிகள் நடமாட்டமும், 
    கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிகப்படியாக விற்கப்படுவதாக சரத் செந்தில் அடிக்கடி போலீசாரிடமும் சமூக வலைதளம் மூலமும் புகார் அளித்து வந்தார். 

    இந்த நிலையில்  சரத்செந்தில் தனது வீட்டின் வாசலில் காரை நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் காரின் முன்பக்க கண்ணாடி உடைத்துவிட்டு சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரத் செந்தில் இதுகுறித்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருளுக்கு எதிராக சமூக அக்கறை யோடு சரத்செந்தில் செயல்படுவதால் சமூகவிரோதிகள் அவரது காரை அடித்து சேதப்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    புதுவையில காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியர்கள், 29 டெக்ஹேண்ட்லர் என மொத்தம் 431 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
    புதுச்சேரி:

    போலீஸ் பணிக்கு விண்ணப்பித்த ஆண்களுக்கான உடற் தகுதி தேர்வு கடந்த 8-ந் தேதி தொடங்கியது. ஆண்களுக்கான உடற் தகுதி தேர்வு முடி வடைந்தது.

    இதனை தொடர்ந்து பெண்களுக்கான உடற் தகுதி தேர்வு  தொடங்கியது. வருகிற 11-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது.

    போலீஸ் பணிக்கு மதகடிப்பட்டு அருகே உள்ள பி.எஸ்.பாளையத்தை சேர்ந்த  பி.பி.ஏ. பட்டதாரியான பிரவிணா (25) விண்ணப்பித்து இருந்தார்.

    அவருக்கு  உடற் தகுதி தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரவிணாவுக்கும் கிளியனூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஹரி பிரசாத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இவர்களது திருமணம் அங்குள்ள சிவன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் பிரவிணா தான் போலீஸ் தகுதி தேர்வுக்கு செல்ல வேண்டும் என மணமகன் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

    அதற்கு   அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருமணம் முடிந்தவுடன்  பிரவிணா புதுவை கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற  போலீஸ் தகுதி தேர்வில் பங்கேற்க வந்தார்.

    அவருடன் கணவர் ஹரி பிரசாத்தும் வந்து இருந்தார்.முன்னதாக மணமகனின் உறவினர்கள் பிரவிணாவுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர். போலீஸ் தேர்வில் பங்கேற்க வந்த பிரவிணாவுக்கு தேர்வுக்கு வந்த மற்ற பெண்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
    வீட்டில் கோழி மேய்ந்த தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் பெரிய முதலியார் சாவடி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமு (வயது 46). இவர் கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டில் வான்கோழி வளர்த்து வருகிறார். 

    வான்கோழி பக்கத்து வீட்டை  சேர்ந்த ஆட்டோ டிரைவரான பிரகாஷ் என்ற கதிரவன் வீட்டில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது குடி போதையில் இருந்த பிரகாஷ் ஆத்திரமடைந்து வான்கோழியை கல்லால் தாக்கினார். 

    இதனை ராமு தட்டிக் கேட்டார். அப்போது கையில் வைத்திருந்த கத்தியால் ராமுவை பிரகாஷ் குத்தினார். இதில் ராமுவுக்கு வயிற்று பகுதியில் கத்திக்குத்து விழுந்தது.

     ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதுகுறித்து கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்&இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரகாசை கைது செய்தனர்.
    கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில்  2 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 96, காரைக்காலில் 56, ஏனாமில் 26, மாகியில் 8 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 56, காரைக் காலில் 20, ஏனாமில் 4, மாகியில் 5 பேர் என 85 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 165, காரைக் காலில் 203, ஏனாமில் 66, மாகியில் 10 பேர் என 444 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 562 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 181 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 2 ஆயிரத்து 213, காரைக்காலில் 936, ஏனாமில் 170, மாகியில் 24 பேர் என 3 ஆயிரத்து 343 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 3 ஆயிரத்து 428 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். 

    புதுவை முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரை சேர்ந்த 77 வயது மூதாட்டி, நோணாங் குப்பத்தை சேர்ந்த 52 வயது ஆண், காரைக்காலை சேர்ந்த 54 வயது ஆண் என 3 பேர் கொரோனா சிகிச்சை  பலனின்றி இறந்தனர். 

    இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில்  2-வது தவணை உட்பட 15 லட்சத்து 47 ஆயிரத்து 183 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    புதுவையில் பிரபல தனியார் நிறுவனம் பெயரில் கிரிப்டோ கரன்சி மோசடி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கோவையை சேர்ந்த பிரபல தனியார் நிறுவன அதிபர் மார்ட்டின் சார்பில் சம்பத்குமார் என்பவர் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

    கோவையை சேர்ந்த நூர்முகமது, அஷ்பக் ஆகியோர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்திய விழாவுக்கு எனக்கும், என் குடும்பத்துக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

    இதன்பேரில் என் மனைவி லீமாரோஸ் மார்ட்டின் கோவையில் நடந்த விழாவில் பங்கேற்றார். எங்கள் நிறுவனத்துக்கும், இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    ஆனால் எங்கள் நிறுவனம் தான் இதன் பின்னணியில் செயல்படுவதாக பொய்யான தகவல்களை பரப்பி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்து கோவையில் நாங்கள் புகார் அளித்தோம். இனி எங்கள் பெயரையோ, நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்த மாட்டோம் என அவர்கள் வாக்குறுதி அளித்து மன்னிப்பு தெரிவித்தனர்.

    இப்போது புதுவையில் அதேநபர்கள் விஷ்ணுவரதன் என்ற நபர் மூலம் எம்.எல்.எம். என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்தை நடத்த தொடங்கியுள்ளனர்.

    அவர்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வருவதாக அறிகிறோம். இவர்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரை கூறி முதலீடுகளை பெற்று வருகின்றனர்.

    எங்களுக்கும், இந்த நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் நிறுவனம் எந்த கிரிப்டோ கரன்சிக்காகவும் முதலீடுகளை பொது மக்களிடம் கேட்கவில்லை.

    இந்த நிலையில் எங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியக்கோவிலில் சாலையோரத்தில் வைக்கப்பட்ட பேனரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள வார்க்கால் ஓடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் ஆகாஷ் (வயது 20). பட்டயப்படிப்பு முடித்து விட்டு இவர் காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.

    இன்று அதிகாலை ஆகாஷ் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபன் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி சென்றனர்.

    கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கு சாலையோரம் வைத்திருந்த விளம்பர பேனர் மரக்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் ஆகாஷ் தலையில் படுகாயமடைந்தார். ஸ்ரீபனுக்கு கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிய வாலிபர்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து காயமடைந்த வாலிபர்களின் குடும்பத்திற்கு போனில் தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வாலிபர்களின் குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் காயமடைந்த இருவரையும் மீட்டு ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் மற்றும் போலுசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    திருபுவனை அருகே திருவாண்டார் கோவில் வாய்க்கால்மேட்டு தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது32). இவர் கட்டிடம் இடிக்க பயன்படும் கம்ப்ரசர் மிஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். உமா மகேஸ்வரி கதிர்காமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். 

    லாரன்சுக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. இவர் அடிக்கடி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாரன்சை விட்டு பிரிந்து அவரது மனைவி உமாமகேஸ்வரி குழந்தைகளுடன் கவுண்டன் பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். லாரன்ஸ் தனது தாய் அன்னபூரணியுடன் இருந்து வந்தார்.

    ஆனாலும் அவ்வப்போது உமாமகேஸ்வரி திருவாண்டார் கோவிலுக்கு சென்று கணவர் மற்றும் மாமியாரை பார்த்துவிட்டு வருவார். எனினும் குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றதால் லாரன்ஸ் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த லாரன்ஸ் சாப்பாட்டில் எலி மருந்து கலந்து தின்றார். இதில் மயங்கி கிடந்த லாரன்சை அவரது தாய் அன்னபூரணி மற்றும் சகோதரி அன்னை வேளாங்கன்னி ஆகியோர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    அங்கு சிகிச்சை அளித்த பின்னரும் உடல்நிலை மோசமானததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  லாரன்ஸ் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது சகோதரி அன்னை வேளாங்கன்னி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உறவினர்களுக்கு தினமும் சமைத்து போடவேண்டும் என்ற வேதனையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    ஒடிசா மாநிலம் பாலேஸ்வரர் பகுதியை சேர்ந்தவர் மனோரஞ்சன் பெகரா(வயது34). இவர் கடந்த 8 மாதங்களாக புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இதற்காக சாணரப் பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் தனது மனைவி இஸ்திரி மற்றும் 5 வயது பெண் குழந்தை பாக்கியஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார்.

    இதற்கிடையே மனோரஞ்சன் பெகராவின் உறவினர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் இருந்து புதுவைக்கு வேலை தேடி வந்தனர். அவர்கள் மனோரஞ்சன் பெகராவின் வீட்டின் அருகே மற்றொரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மனோரஞ்சன் பெகரா வற்புறுத்தலின் பேரில் அவரது மனைவி இஸ்திரி தினமும் சாப்பாடு தயாரித்து கொடுத்து வந்தார்.

    இந்தநிலையில் மனோரஞ்சன் பெகராவின் உறவினர்கள் மேலும் சிலர் புதுவைக்கு வேலை தேடி வருவதாக இஸ்திரிக்கு தகவல் வந்தது. 

    ஏற்கனவே மனோரஞ்சன் பெகராவின் உறவினர்களுக்கு தினமும் சமையல் செய்து அலுத்து போனநிலையில் மேலும் சிலர் வருவதால் தனக்கு வேலை பளு அதிகமாக இருக்கும் என்று இஸ்திரி வேதனையடைந்தார்.

    இதுபற்றி தனது கணவரிடம் கூறி வீட்டை வேறு இடத்துக்கு மாற்றுமாறு இஸ்திரி கூறி வந்தார். அதற்கு மனோரஞ்சன் பெகராவும் சம்மதம் தெரிவித்து வேறு வீடு பார்ப்பதாக தெரிவித்து வந்தார். 

    ஆனாலும் கணவரின் சமாதானத்தை இஸ்திரி ஏற்றுக்கொள்ளாமல் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் மனோரஞ்சன் பெகரா வழக்கம் போல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்த போது அவரது மனைவி சமையல் செய்யாததால் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்கு சென்றார்.  

    சிறிது நேரம் கழித்து மனோரஞ்சன் பெகராவின் உறவினர்கள் வீட்டுக்கு சாப்பிட சென்ற போது அங்கு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் இதுபற்றி அவர்கள் மனோரஞ்சன் பெகராவுக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதையடுத்து மனோரஞ்சன் பெகரா வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது அங்கு மனைவி சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பிரதமர் மோடியின் உதவியால் புதுச்சேரி வளர்ச்சி பெறும். அறிவித்தபடி அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 12-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிறுவன தலைவரும் முதல்-அமைச்சருமான ரங்கசாமி கட்சிக்கொடி ஏற்றினார்.

    அதைத்தொடர்ந்து தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோபிகா, டி.பி.ஆர்.செல்வம், என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் மக்கள் ஆதரவுடன் எங்கள் ஆட்சி அமைந்துள்ளது. புதுவை மாநில மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

    மத்திய அரசின் உதவியோடு என்.ஆர்.பேரியக்கத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடக்கிறது. புதுவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் திட்டங்களை தீட்டி வருகிறோம். நாங்கள் அறிவித்த அனைத்து அறிவிப்புகளையும் செயல்படுத்துவோம்.

    எங்கள் அரசின் திட்டங்கள் அனைத்து சமுதாயத்தினரின் வளர்ச்சிக்கானவையாக இருக்கும். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி அரசு காலிபணியிடங்கள் நிரப்பப்படும். அதன் அடிப்படையில் காவல்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் உதவியோடு, பிரதமர் மோடியின் உதவியோடு புதுவை மாநிலம் நிச்சயமாக வளர்ச்சி பெறும். இந்த ஆட்சி அமைய பாடுபட்ட எங்கள் கட்சிக்காரர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:- மத்திய பட்ஜெட்டில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரூ.1,729 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளதே?

    பதில்:-மத்திய அரசிடம் ரூ.2 கோடி கூடுதலாக கேட்கப்பட்டுள்ளது.

    கேள்வி:- வாரிய தலைவர் பதவி எப்போது வழங்கப்படும்?

    பதில்:- வாரிய தலைவர் பதவி நிரப்பப்படும் போது உங்களுக்கு தெரியவரும்.

    கேள்வி:- நடிகர் விஜய் உடனான சந்திப்பை கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளதே?

    இதற்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மனைவி பிரிந்ததால் மனவேதனை அடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் காஜியார் வீதியைச்சேர்ந்தவர் முகம்மது ஆசிக் அம்ஜா (வயது36). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2021-ம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது. இதனால், மனம் உடைந்து போன இவர், சென்னையில் தங்கி சில மாதங்கள் வேலை செய்து வந்தார். பின்னர் மீண்டும் காரைக்கால் வந்து விட்டார்.

    காரைக்காலில் வேலை எதுவும் செய்யாமல், தினமும் மது குடித்து வந்தார். இந்த நிலையில் திருவாரூரில் உள்ள தனது பெற்றோரை பார்த்துவிட்டு காரைக்கால் வந்த அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி காரைக்கால் பஸ் நிலையம் அருகே மயங்கி விழுந்துள்ளார்.

    தகவல் அறிந்த அவரது உறவினர் அப்துல்கரீம், அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், முகம்மது ஆசிக் அம்ஜா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, காரைக்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துடன் அதிருப்தி பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து தொகுதி பணிகள் நடைபெறவில்லை என புகார் தெரிவித்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-
    பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்துள்ளது.

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் தாமாக முன்வந்து எந்தவித நிபந்தனையுமின்றி பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தனர். 

    அரசுக்கு ஆதரவு அளித்தும் கடிதம் அளித்துள்ளனர். தங்களுக்கு வாரிய பதவி கிடைக்கும் என நம்பியிருந்தனர். சமீபத்தில் முதல்&அமைச்சர் ரங்கசாமி, நஷ்டத்தில் இயங்குவதால் வாரிய பதவி வழங்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

    தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ்பெற பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்தனர். அவர்களை பா.ஜனதா நிர்வாகிகள் சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். 

    இந்நிலையில்   கவர்னரை சந்தித்து அரசுக்கு ஆதரவு அளிப்பதை வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.   காலை 11.30 மணிக்கு  3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்தனர். சபாநாயகர் அலுவலத்துக்கு சென்றனர். சபாநாயகர் இல்லாததால் அவருக்காக காத்திருந்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

     பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதனால்தான் நாங்களாக முன்வந்து பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் எந்த பணியும் அரசிடம் நடைபெறவில்லை. இது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. 

    எதிர்கட்சி தொகுதிகளில் கூட பல பணிகள் நடக்கிறது. பல ஆண்டாக சாலை, வாய்க்கால் போடப்படாமல் உள்ளது. அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்காமல் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை அரசை அணுகியும் எந்த பயனும் இல்லை. 

    பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பதால், ஆட்சியாளர்கள் எங்கள் மீது பாரபட்சம் காட்டுகிறார்களோ? என்ற சந்தேகம் நிலவுகிறது. வாரிய தலைவர் பெரும் பிரச்சினை அல்ல. அதை பா.ஜனதா மூலம் பெற்று விட முடியும். மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.  எங்கள் கருத்துக்களை சபாநாயகரிடம் தெரிவிக்க வந்துள்ளோம். 

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    தொடர்ந்து 12 மணியளவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தனது அலுவலக அறைக்கு வந்தார். அப்போது சபாநாயகரிடம், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை சமரசப் படுத்தும் முயற்சியில் இறங்கி யுள்ளார். 

    சபாநாயகரை தொடர்ந்து கவர்னரை சந்திக்க உள்ளதாகவும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்
    புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 154, காரைக்காலில் 26, ஏனாமில் 10  பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 62, காரைக்காலில் 18, ஏனாமில் 5, மாகியில் 6 பேர் என 91 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

     புதுவையில் 280, காரைக்காலில் 296, ஏனாமில் 70, மாகியில் 5 பேர் என 651 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 376 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 737 பேர் சிகிச்சையில்  குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 2 ஆயிரத்து 278, காரைக்காலில் ஆயிரத்து 86, ஏனாமில் 209, மாகியில் 25 பேர் என 3 ஆயிரத்து 598 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 3 ஆயிரத்து 689 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். 

    புதுவை கருவடிக்குப்பம் ஜெயராஜ் நகரை சேர்ந்த 60 வயது நபர், ஏனாமை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனா சிகிச்சை  பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 950 ஆக உஎயர்ந்துள்ளது. 

    புதுவையில்  2-வது தவணை உட்பட 15 லட்சத்து 43 ஆயிரத்து 584பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    ×