என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னியக்கோவிலில் சாலையோரத்தில் வைக்கப்பட்ட பேனரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
பாகூர்:
கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள வார்க்கால் ஓடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் ஆகாஷ் (வயது 20). பட்டயப்படிப்பு முடித்து விட்டு இவர் காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.
இன்று அதிகாலை ஆகாஷ் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபன் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி சென்றனர்.
கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கு சாலையோரம் வைத்திருந்த விளம்பர பேனர் மரக்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆகாஷ் தலையில் படுகாயமடைந்தார். ஸ்ரீபனுக்கு கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிய வாலிபர்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து காயமடைந்த வாலிபர்களின் குடும்பத்திற்கு போனில் தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வாலிபர்களின் குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் காயமடைந்த இருவரையும் மீட்டு ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் மற்றும் போலுசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






