என் மலர்
உள்ளூர் செய்திகள்

சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்த காட்சி.
சபாநாயகருடன் அதிருப்தி பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துடன் அதிருப்தி பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து தொகுதி பணிகள் நடைபெறவில்லை என புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-
பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் தாமாக முன்வந்து எந்தவித நிபந்தனையுமின்றி பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தனர்.
அரசுக்கு ஆதரவு அளித்தும் கடிதம் அளித்துள்ளனர். தங்களுக்கு வாரிய பதவி கிடைக்கும் என நம்பியிருந்தனர். சமீபத்தில் முதல்&அமைச்சர் ரங்கசாமி, நஷ்டத்தில் இயங்குவதால் வாரிய பதவி வழங்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ்பெற பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்தனர். அவர்களை பா.ஜனதா நிர்வாகிகள் சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் கவர்னரை சந்தித்து அரசுக்கு ஆதரவு அளிப்பதை வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. காலை 11.30 மணிக்கு 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்தனர். சபாநாயகர் அலுவலத்துக்கு சென்றனர். சபாநாயகர் இல்லாததால் அவருக்காக காத்திருந்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதனால்தான் நாங்களாக முன்வந்து பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் எந்த பணியும் அரசிடம் நடைபெறவில்லை. இது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
எதிர்கட்சி தொகுதிகளில் கூட பல பணிகள் நடக்கிறது. பல ஆண்டாக சாலை, வாய்க்கால் போடப்படாமல் உள்ளது. அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்காமல் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை அரசை அணுகியும் எந்த பயனும் இல்லை.
பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பதால், ஆட்சியாளர்கள் எங்கள் மீது பாரபட்சம் காட்டுகிறார்களோ? என்ற சந்தேகம் நிலவுகிறது. வாரிய தலைவர் பெரும் பிரச்சினை அல்ல. அதை பா.ஜனதா மூலம் பெற்று விட முடியும். மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளோம். எங்கள் கருத்துக்களை சபாநாயகரிடம் தெரிவிக்க வந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து 12 மணியளவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தனது அலுவலக அறைக்கு வந்தார். அப்போது சபாநாயகரிடம், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை சமரசப் படுத்தும் முயற்சியில் இறங்கி யுள்ளார்.
சபாநாயகரை தொடர்ந்து கவர்னரை சந்திக்க உள்ளதாகவும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்
Next Story






