என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால் அருகே வீடு புகுந்து தாய்-மகள் உள்பட 4 பேர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் அருகே நெடுங்காடு மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் நீலா (வயது38). இவரது கணவர் கடந்த ஆண்டு உடல் நலக் குறைவால் இறந்து விட்டார். நீலாவிற்கு சவுமியா (18), சரண்யா (16) சரண் (14) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    மூத்தமகள் சவுமியாவிடம், நெடுங்காடு அம்பேத்கார் நகரைச்சேர்ந்த காசிநாதன் மகன் ரிஷிஅமல் நாத் (18) நட்புரீதியில் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு ரிஷிஅமல்நாத், வீட்டில் அனைவரும் இருக்கும் போது, திடீரென நுழைந்து சவுமியாவிடம் பேசியுள்ளார்.

    இதை பார்த்த நீலா, இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை என கேட்டார். இதனால் கோபம் அடைந்த ரிஷி அமல்நாத், நீலாவின் கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து, நீலாவின் குழந்தைகள் சவுமியா, சரண் ஆகியோர் ரிஷி அமல்நாத்தை தடுத்தபோது, இருவரையும் அடித்து, வீட்டினுள் தள்ளினார்.

    மேலும் மற்றொரு மகள் சரண்யா கூச்சல் போடவே, பக்கத்து வீட்டில் வசிக்கும் நீலாவின் உறவினர் தனுஷ் (18) ஓடிச்சென்று, ரிஷி அமல் நாத்திடம் என்ன பிரச்சினை என கேட்டார். அவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதில் மூக்கில் காயம் ஏற்பட்ட தனுஷ், காரைக்கால் அரசு மருத்துவமனையிலும், மற்ற 3 பேரும் நெடுங்காடு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, நீலா நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் ரிஷிஅமல்நாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அதேபோல், ரிஷி அமல் நாத் நெடுங்காடு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் மணல் மேட்டில் வசிக்கும் நண்பர் தனுஷை பார்க்கசென்றதாகவும், தனுஷுடன் பேசி கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட தாகவும், அப்போது, தனுஷ் கீழே கிடந்த மரசட்டத்தால் தன்னை தாக்கியதாகவும், தனுஷுக்கு ஆதரவாக, அருகில் நின்றிருந்த பிரகாஷ் ராஜ் (18), முருகானந்தம்(21) ஆகிய 2 பேரும் அதே மரச்சட்டத்தால் தன்னை தாக்கியதாகவும் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அந்த புகார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூர் அருகே குழியில் விழுந்து 2 குழந்தைகள் பலியான சம்பவத்தில் நில உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சேதராப்பட்டு:

    வில்லியனூரை அடுத்துள்ள தமிழக பகுதியான பெரம்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமு என்கிற சுரேஷ். இவரது மனைவி இனிதா. இவர்களுக்கு லெவின் (4), ரோகித் (3) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

    குழந்தைகள் இருவரும் பக்கத்து வீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவம் பெரம்பை மட்டுமல்லாது புதுவையிலும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அருண், ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், வசந்த ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் புதுவை உழவர்கரையை சேர்ந்த மோகன்குமார் பெரம்மையில் தனது நிலத்தில் வீடு கட்டுவதற்காக விழுப்புரம் ஆண்டியார்பாளையம் தோப்பு வீதியை சேர்ந்த ஆரோக்கிய பாபு மூலம் போர்வெல் அமைத்தது தெரிய வந்தது.

    பணி முடிந்து சென்ற போது போர்வெல்லை மூடி சென்றதும், அதன் அருகே சேற்று கழிவுகள் கொட்ட தோண்டப்பட்ட குழியை மூடாமல் சென்றதும் அதில் குழந்தைகள் லெவின், ரோகித் ஆகியோர் விழுந்து பலியானதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக நில உரிமையாளர் மோகன் குமார், போர்வெல் அமைத்த ஆரோக்கிய பாபு ஆகியோரை ஆரோவில் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் உரிய இழப்பீடு வழங்க கோரி குழந்தைகளின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    குழியில் விழுந்து 2 குழந்தைகள் பலியான சம்பவத்தால் பெரம்பை பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஆரோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
    புதுவை முருங்கப்பாக்கம் கலை, கைவினை கிராமத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுடுமண் சிற்ப பூங்கா ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

     கவர்னர் தமிழிசை 9-ந்தேதி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

     புதுவையில் சுற்றுலாத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். பட்ஜெட்டிலும் புதிய திட்டங்கள் இடம்பெறும் என நம்புகிறோம். சுற்றுலா வுக்கான திட்டங்களை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். இத்திட்டங்களை செயல் படுத்தும்போது சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். சுற்றுலா முதலீட்டாளர்களுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநாடு நடத்தினார். 

    இதில் பங்கேற்றவர்கள் புதுவையில் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த சுடுமண் சிற்ப பூங்கா பூகோள ரீதியில் புதுவைக்கு பெருமை சேர்க்கும். இங்கு ரூ.5 கோடியில் 40 கிலோவாட் சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.  ஆக்கப்பூர்வமான பல திட்டங்களால் புதுவை மேலும் வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் கூறினார். அவரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்வியும், பதிலும் வருமாறு:-

    கேள்வி: சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உங்களை சந்தித்தார்களே?

    பதில்: அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிகளுக்கு சில திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    புதுவைக்கு என சில திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறார்கள்.  அதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று என்னிடம் கேட்டு இருந்தார்கள். அரசு அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும். முதல்-அமைச்சரும் எவ்வித பாகுபாடு இல்லாமல் செயல்பட்டு வருகிறார். என்னை சந்தித்த எம்.எல்.ஏ-.க்களை பாராட்டினேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று அவர்களது தொகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை சிறப் பாக முன்னெடுத்து சென்று இருக்கிறார்கள்.

    கே: கர்நாடக மாநிலத்தில் பர்தா அணியும் பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது. புதுவை அரியாங்குப்பத்திலும் பள்ளி மாணவி பர்தா அணிந்து வரக்கூடாது என தெரிவித்துள்ளார்களே?

    ப: இதுகுறித்து புதுவை கல்வித்துறை முடிவு செய்யும். சீருடை கட்டுப்பாட் டை கல்வித்துறை நிர்ணயிக்கும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கரன்  எம்.எல்.ஏ., சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். 40 கிலோவாட் சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி 9-ந்தேதி தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், முதல்-அமைச்சர் வராததால் திட்டம் தொடங்கப்படவில்லை. வேறொரு நாளில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு வாரிசுதாரர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை இறந்தோர் வாரிசுதாரர்கள், ஊழியர்கள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு  தர்ணா போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு பாலமுருகன் தலைமை வகித்தார். ரஞ்சித் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ  தலைவர் சேஷாச்சலம் சிறப்புரையாற்றினார். கூட்டமைப்பு தலைவர் பாலகுமார், பொதுச் செயலாளர் சம்பந்தம், பொதுப்பணித்துறை  ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் தனராசு, இளங்கோ வாழ்த்தி பேசினர். மணிகண்டன் நன்றி கூறினார். 

    கருணை அடிப்படையில் வவுச்சர்  ஊழியராக அமர்த்தப்பட்டவர்களை முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை முழு நேர  தினக்கூலி ஊழியராக மாற்றி ரூ.830 தினக்கூலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
    அகில இந்திய பா.ஜ.க. தலைவர்களோடுஅமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
    புதுச்சேரி:

    பா.ஜ.க. பொதுமக்களிடம் இருந்து நுண்ணிய (மைக்ரோ) நன்கொடை என்ற தலைப்பில் நிதி திரட்டி வருகிறது.

    கட்சியின் வளர்ச்சி நிதியாக  நாடு முழுவதும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து  ஒரு மாதத்துக்கு  நன்கொடையை பெற்று வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள் இதற்கான நன்கொடையை பெற்று வருகின்றனர். ரூ.5, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.ஆயிரம் என 5 பிரிவில் நன்கொடை பெறப்படுகிறது. இந்த நன்கொடையை அந்தந்த மாநிலங்களில் பெற்றுதர பரிந்துரை செய்தவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இதில் அதிக அளவில் பரிந்துரை செய்தவர்களில் அகில இந்திய அளவில் குஜராத் எம்.பி. பாட்டில் முதலிடத்தில் உள்ளார். பா.ஜ.க. இளைஞர் அமைப்பு 
    2-ம் இடத்திலும், மத்தியபிரதேச எம்.பி. கஜேந்திரசிங் படேல் 3-ம் இடத்திலும் உள்ளனர். 

    சுமார் 22 ஆயிரம் பேரை பரிந்துரை செய்து புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 4-ம் இடத்தில் உள்ளார். இந்த நன்கொடை பெறுவது   நிறைவடைகிறது. இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயமும், அவரின் ஆதரவாளர்களும் இன்னும் ஒரு படி மேலே செல்வதற்கு தொண்டர்கள், நெருக்கமானவர்களிடம் நன்கொடை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

    அகில இந்திய அளவிலும், பா.ஜ.க. ஆளும் பெரிய மாநிலங்களோடும் தென்மாநிலங்களில் சிறிய யூனியன் பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவது கட்சி தலைவர்களின் பார்வையை புதுவை பக்கம் திருப்பியுள்ளது.
    ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
    புதுச்சேரி:

    கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.

    அப்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் நேரடியாக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

    இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைனில் வகுப்புகள் நடத்திவிட்டு தேர்வை நேரடியாக நடத்தக்கூடாது. ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி  கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    இந்த நிலையில்  அண்ணாசிலை அருகே ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சட்டசபை நோக்கி வந்தனர். செஞ்சி சாலை அருகே போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
    ஊசுடு ஏரியை அழகுபடுத்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையின் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி சுற்றுலாதலமாகவும் விளங்கி வருகிறது.

    ஊசுடு ஏரியை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலியில் கொடிகள் வளர்ந்து புதராகிஉள்ளது. கரையை ஒட்டி முட்செடிகள் வளர்ந்துள்ளது. கரையை ஒட்டியுள்ள மரங்களின் கிளைகள் ஏரிக்குள் ஊடுருவி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏரியின் அழகை முழுமையாக ரசிக்க முடியவில்லை என வேளாண்துறை அமைச்சர் தேனீஜெயக்குமாருக்கு புகார் வந்தது. 

    இதையடுத்து அமைச்சர் தேனீஜெயக்குமார், அதிகாரிகளோடு  சென்று ஏரியை பார்வையிட்டார். வேலியில் படர்ந்துள்ள கொடி
    கள், புதர்களை அகற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். 

    ஏரிக்குள் ஊடுருவியுள்ள மரக்கிளை களையும் வெட்டி சீரமைக்க உத்தரவிட்டார்.  

    ஏரியின் முழ அழகும் கரையிலிருந்து பார்த்தால் தெரியும்படி ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அமைச்சருடன் துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி, துணை இயக்குனர் குமரவேல், வேளாண் அதிகாரி பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். 
    கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில்   2 ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 135, காரைக்காலில் 33, ஏனாமில் 24, மாகியில் 6 பேர் புதிதாக  தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 49, காரைக் காலில் 17, ஏனாமில் 5, மாகியில் 3 பேர் என 74 பேர் தொற்றுடன்  மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 379, காரைக்காலில் 104, ஏனாமில் 51, மாகியில் 4 பேர் என 538 பேர்
    சிகிச்சையில் குணமடைந் தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 760 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 719 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் ஆயிரத்து 975, காரைக்காலில்  868, ஏனாமில் 142, மாகியில் 27 பேர் என 3 ஆயிரத்து 12 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர்.  புதுவை மாநிலத்தில் இப்போது 3 ஆயிரத்து 86 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை சாந்தி நகரை சேர்ந்த 81 வயது முதியவர், மாகியை சேர்ந்த 85 வயது மூதாட்டி என 2 பேர் கொரோனா சிகிச்சை  பலனின்றி இறந்தனர். 
    இதனால் மாநிலத்தில்  கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 955 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில்  2-வது தவணை உட்பட 15 லட்சத்து 50 ஆயிரத்து 93 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பிரபல ஜவுளிக்கடையில் மேல்தளத்தின் வழியாக உள்ளே நுழைந்து மர்மநபர் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதியில் பிரபல ஜவுளி கடை  ஒன்று இயங்கி வருகிறது. 3 தளங்கள் உடைய ஜவுளிக்கடையில் ஆண்கள்-பெண்கள் என 40 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஜவுளிக்கடையின் மானேஜராக செந்தில்குமார் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில்  வழக்கம் போல் வேலை முடிந்ததும் ஜவுளிக்கடையை மூடிவிட்டு சென்றனர்.  பின்னர் மானேஜர் மற்றும் ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த மேஜை திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மானேஜர் செந்தில்குமார் மேஜையை திறந்து பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ-.1.70 லட்சம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார்.

    பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ நடந்த கடையை ஆய்வு செய்தனர். 

    3 தளங்களுடைய இந்த கடையின் மேல்தளத்தில் இருந்து லிப்ட் வழியாக மர்மநபர் கடையின் உள்ளே புகுந்து மேஜையில் இருந்த பணத்தை கொள்ளைடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    ஜவுளிக்கடையில் கண்காணிப்பு கேமிரா வசதி இருந்தும் பணிமுடிந்து செல்லும் போது ஊழியர்கள் கேமிராவை ஆப் செய்து விட்டு சென்றுள்ளனர். இருந்த போதிலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.
    காரைக்காலில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் கோவில் பத்து தென்றல் நகரில் வசிப்பவர் அய்யப்பன். பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அகல்யா (வயது 18) காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

    வழக்கம் போல் அகல்யா கடந்த 4-ந்தேதி கல்லூரிக்கு சென்றார். அன்று மாலை வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த அய்யப்பன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அகல்யாவை காணவில்லை.

    இதுகுறித்து அய்யப்பன் காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி அகல்யா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கவர்னர் தமிழிசையை சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து மனு அளித்தனர்.
    புதுச்சேரி: 

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்துள்ளது. ரங்கசாமி அமைச்ச ரவையில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த 3 அமைச்சர்கள், பா.ஜ.க.வை சேர்ந்த 2 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.  சபாநாயகர், பாராளுமன்ற செயலர் ஆகிய பதவிகளில் பா.ஜ.க.வும், துணை சபாநாயகர், அரசு கொறடா பதவிகளில் என்.ஆர்.காங்கிரஸ்  எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். 

    சட்டமன்ற பதவிகளில் இடம் பெறாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய பதவி வேண்டும் என கேட்டு வந்தனர். இதனிடையே ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அரசு  அமையும் போது சுயேட்சையாக வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகிய 3 பேர்  தாமாக முன்வந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்தனர். 

    இதற்கான கடிதத்தையும் பா.ஜ.க.விடம் அளித்தனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியின் சார்பில் வாரிய தலைவர் பதவி உட்பட சில வாக்குறுதிகள் அளிக் கப்பட்டன. ஆனால் ஆட்சி அமைந்து 8 மாதமாகியும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்கப்படவில்லை. 

    சமீபத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், முதல்-அமைச்சரை சந்தித்து வாரிய பதவி கேட்டனர். ஆனால் ரங்கசாமி, அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் வாரிய தலைவர் பதவி வழங்க முடியாது என மறுத்து விட்டார். 

    இதனால் எம்.எல்.ஏ.க் களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற முடிவு செய்தனர். இந்த தகவல் வெளியானவுடன் பா.ஜனதா தரப்பில் அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் சந்தித்தனர். 

    அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் இறங்கினார். அப்போது பா.ஜ.க. வுக்கு ஆதரவு அளிப்பதால்,   தங்களின் தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். 

    பிப்ரவரி 9-ந்தேதி பா.ஜனதா சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் நடக்கிறது.  இதில் பங்கேற்க மத்திய மந்திரி பிரகலாத்சிங் படேல், புதுவை மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் புதுவைக்கு  வருகின்றனர். இவர்கள் மூலம் அதிருப்தி சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்ய பா.ஜனதா திட்டமிட்டிருந்தது. 

    இந்த நிலையில் திடீரென  8-ந்தேதி மதியம் 12.45 மணிக்கு கவர்னர் தமிழிசையை சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகிய 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அவர்கள் கவர்னரிடம் தங்கள் குறை களை தெரிவித்ததாக தெரிகிறது. மதியம் 1.30 மணி வரை கவர்னர் மாளிகையிலிருந்து திரும்பவில்லை. இதனிடையே அங்காளன் வராதது குறித்து 2 எம்.எல்.ஏ.க்களிடம் கேள்வி எழுப்பியதற்கு பதில் கூறவில்லை. அங்காளன் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்ட போது அவரின் செல்போன் சுவிடச்ஆப் செய்யப்பட்டிருந்தது. 

    இதனிடையே 8-ந்தேதி காலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கவர்னர் தமிழிசையை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

    என்.ஆர்.காங்கிரசுக்கு 10, பா.ஜ.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்ளனர். மொத்தம் உள்ள 33 எம்.எல்.ஏ.க்களில் 19 எம்.எல்.ஏ.க்கள் பலம் அரசுக்கு உள்ளது. மெஜாரிட்டிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாலியல் சம்பவத்துக்கு உடன்படாததால் 17 வயது சிறுமியை மிரட்டிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    சென்னையை துரைபாக்கம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த சில  வருடங்களாக முதலியார்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்கள்.  இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் 9-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். 

    இதற்கிடையே தம்பதியர் சொந்த ஊருக்கு செல்லும் போது தங்களது மகளையும் அழைத்துசெல்வார்கள். அப்போது அதே பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி பிரவீன்குமார்(19) என்பவர் அந்த சிறுமியிடம் பழகி வந்துள்ளார்.

    அப்போது தனிமையில் பேசும் போது தன்னிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு அந்த சிறுமியிடம் அடிக்கடி வலியுறுத்தியுள்ளார்.

    ஆனால் அதற்கு அந்த சிறுமி உடன்படாமல் மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் தன்னுடன் சிறுமி நெருக்கமாக இருந்த புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.

    தொடர்ந்து இதுபோன்று சிறுமியிடம் செல்போனில் பேசி பிரவீன்குமார் மிரட்டி வந்ததால் இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் முறையிட்டார். 

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பிரவீன்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×