என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணவெளி தொகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடந்தது.
    புதுச்சேரி:

    மணவெளி தொகுதியில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் முன்னிலையில் பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் பயிற்சி பட்டறையில் நடைபெற்றது.
    இந்தக் கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசும்போது கூறியதாவது:-

    தற்போது மணவெளி தொகுதியில் நடைபெற்று வரும் பணிகளான தொகுதி முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அபிஷேகப்பாக்கம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் முடிவுற்று விரைவில் துணை மின் நிலையப் பணிகளை  தொடங்குவதற்கு ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது 

    நல்லவாடு, டி.என். பாளையம், அபிஷேகப்பாக்கம், டி.என். பாளையம் பிரதான சாலை, தவளக்குப்பம், மணவெளி ஆகிய பகுதிகளில் புதிய தார் சாலை பணிகள் சுமார் ரூ.5 கோடிக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    அனைத்து தெரு மின்கம்பங்களில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது, தொகுதியில் நிலவிவந்த மின்தடை தற்போது சரி செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டதையும், அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை உள்ள தேசிய  நெடுஞ்சாலையை மேம்படுத்தப்பட்ட புதிய தார்சாலை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.  

    மேலும் தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்தவும் கழிவுநீர் வடிகால் வசதியுடன் கூடிய புதிய தார் சாலைகள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு தொகுதி முழுவதும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் உறுதி கூறினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மணவெளி தொகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, லட்சுமிகாந்தன், சக்திபாலன், தட்சிணாமூர்த்தி, சக்திவேல், ஞானசேகர், ஆனந்தன், எஸ்.வி.எஸ். குமரன், சண்முகம், ஹரி கிருஷ்ணன், ஜெயக்குமார், நாகமுத்து, குருமூர்த்தி, தேவநாதன், முருகன், கிருஷ்ணமூர்த்தி, வீரபாலன், தர்மன், தண்டபாணி, விமல், மனோகர், பிரபாகரன், மணி, அரசன், சக்திவேல், குமரகுரு, முரளி, பச்சையப்பன், அருள்ராஜ், சசி, தீபக் குமார், பூபாலன், அசோக், மணிரத்தினம், குணாநிதி, மகளிர் அணி செல்வி, சுமதி, ரேவதி, வள்ளி, விமலா, வீரம்மாள் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர், படகுடன் 13 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி.

    இவருக்கு சொந்தமான விசைப்படகில், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 23-ந் தேதி 13 மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு சென்றனர்.

    கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர், படகுடன் 13 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

    கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி, ரமேஷ், திலீபன், சுரேஷ் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார், பால்மணி, கவியரசன், நாகை மாவட்டத்தை சேர்ந்த சத்தியநாதன், நிலவரசன், ஆறுமுகசாமி, கிஷோர் மற்றும் கோகுல் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 13 மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகையும் மீட்டு தரக்கோரி, காரைக்காலில் இருந்து மீனவர்கள் குடும்பங்களைச் சேர்ந்த சின்னத்தம்பி, சாந்தி உள்ளிட்ட மீனவர்கள் புதுவைக்கு வந்து, முதல்- அமைச்சர் ரங்கசாமியை திலாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

    மத்திய அரசிடம் தெரிவித்து, மீட்டுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
    முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.  விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தினஜனார்த்தனன்   தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுவை காவல்துறை  சைபர் கிரைம் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் சிவா கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்ட  மாணவர்களை வாழ்த்தி பேசினர். 

    சிறப்பு விருந்தினராக மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைசாமி பள்ளி அளவிலான நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தரராஜன் கலந்து கொண்டு  ரத்த தானம் செய்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் துணை முதல்வர் மங்கையர்க்கரசி, பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவு விழாவில் அனை வருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. 

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் நெடுஞ்செழியன் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள்  சிறப்பாக செய்திருந்தனர்.
    போக்குவரத்து பெருகி விட்டதால் ஜி.கே.மூப்பனார் சிலையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்.
    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை முதலியர் பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    முதலியார் பேட்டை கடலூர் சாலை சந்திப்பில் மறைந்த ஜி.கே. மூப்பனாரின் உருவ சிலை அமைந்துள்ளது. தமிழ் சமூகத்துக்கு அவர் ஆற்றிய தொண்டு காலத்தால் அழிக்க முடியாதது.  காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவரது உழைப்பு மகத்தானது. இவரது உருவ சிலை  முதலியார்பேட்டை பகுதியில் இருப்பது தொகுதிக்கு கிடைத்த பொக்கிஷம்.  முன்பு   போக்குவரத்து குறைவாக இருந்த கால கட்டத்தில் இந்த சிலை நிறுவப்பட்டது. 

    தற்போது மரப்பாலம் சந்திப்பு புதுவை நகர பகுதிக்குள் நுழையும் பிரதான நுழைவு வாயில்களில் ஒன்று.  இந்த பகுதியில் போக்குவரத்து பெருகிவிட்டதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

    எனவே, கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜி.கே.மூப்பனாரின் சிலையை சில அடி தூரம் பின்னோக்கி நகர்த்தி வைத்தால் போக்குவரத்துக்கு தடையின்றி இருக்கும். எனவே, சிலையை மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் காவலர் எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள காவலர்கள்- 390, ரேடியோ டெக்னீசியன்- 12 மற்றும் டெக் ஹேண்ட்லர்- 29 (படகு ஓட்டுனர்) என மொத்தம் 431 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பு வெளியானது. இதற்காக மொத்தம் 17 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்தனர். இதில் 14,787 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

    விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு (ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்) கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி கடந்த 12-ந் தேதி வரை கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் ரேடியோ டெக்னீசியன் பிரிவுக்கு மட்டும் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    காவலர் மற்றும் டெக் ஹேண்ட்லர் தேர்வில் 7,530 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில் உடல் தகுதி தேர்வில் 2,894 பேர் தகுதி பெற்றனர். இதில் ஆண்கள் 2,207, பெண்கள் 687 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வில் தகுதி பெற்றவர்கள் எழுத்துத்தேர்வு எப்போது நடைபெறும் என காத்திருந்தனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி காவல்துறை எழுத்து தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

    புதுச்சேரி தலைமை செயலகம் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை தேர்வு பிரிவு சார்பில் காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 19-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒரு பிரிவுக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றொரு பிரிவுக்கும் தேர்வு நடக்கிறது.

    20-ந் தேதி டெக் ஹேண்ட்லர்களுக்கான எழுத்துத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 11.30 மணி வரை நடக்கிறது. எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஏராளமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
    திருக்கனூர்:

    புதுவை மாநிலம் திருக்கனூரில் 2 திரையரங்குகளில் வலிமை படம் திரையிடப்பட்டு உள்ளது.

    இந்த தியேட்டரில் டிக்கெட் கட்டணமாக ரூ.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    விழுப்புரம் மற்றும் புதுவை நகர பகுதிகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதாலும் திருக்கனூரில் குறைந்த கட்டணமாக ரூ.50 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வாங்கப்படுவதாலும் புதுவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் திருக்கனூரில் சினிமா பார்க்க வருகிறார்கள்.

    இன்று அதிகாலை 6 மணிக்கு அஜித் நடித்த வலிமை படம் ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டது.

    இதனால் அதிகாலை 3½ மணி முதலே அஜித் படம் பார்க்க ரசிகர்கள் திருக்கனூரில் குவிய தொடங்கினார்கள். ரசிகர்கள் வந்த இரு சக்கர வாகனங்கல் கடைவீதியில இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பட்டாசு வெடித்தும், டிரம்ஸ் வாசித்தும், இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். ரசிகர்களின் கூட்டத்தால் திருக்கனூர் கடைவீதி பரபரப்பாக காணப்பட்டது. 
    புதுவையில் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
    புதுச்சேரி, 

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் கட்சி அலுவலகத்தில் கொண்டா டப்பட்டது.

    கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், இணைசெயலாளர் அன்பானந்தம் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. கொடியேற்றி, பட்டாசு வெடித்து, ஜெயலலிதா படத்துக்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. 

    பின்னர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு தள்ளுவண்டி, தையல் எந்திரம், கிரைண்டர், குக்கர், மிக்சி, மின்சார அடுப்பு, வாணலி, பில்டர் ஹீட்டர், கியாஸ் அடுப்பு, ஹாட் பாக்ஸ், இட்லி குக்கர், சலவைப் பெட்டி, 740 பேருக்கு இலவச வேட்டி, சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில் இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, துணை தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, துணைச்செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ரவி பாண்டு ரங்கன், துணைச்செயலாளர்கள் எம்.ஏ.கே.கருணாநிதி, அன்பழக உடையார், கணேசன், உமா, மூர்த்தி, சேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் பாப்புசாமி,  மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, மாணவரணி செயலாளர் பிரதீப், வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, ஜெயலலிதா பேரவை முன்னாள் துணைச்
    செயலாளர் சித்தானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி முத்தியால்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் இன்று திறந்து வைத்தார். புதிய அலுவலகத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்.& ஜெயலலிதா உருவப்படத் துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து மலர்துவி மரியாதை செலுத்தினார். 
    தொடர்ந்து காந்திவீதி திருக்குறள் மணிக்கூண்டு அருகே வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு வையாபுரிமணிகண்டன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  மாநில மக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் புதுவையில் எம்.ஜி.ஆர். ஆட்சியை அமைப்போம் என அ.தி.மு.க. நிர்வாகிகளோடு உறுதியேற்றார். 
    பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.  தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கஜேந்திரன், பழனிசாமி, ராஜாங்கம், உதயசூரியன், செல்வம், மோகன், முருகேசன், தனஞ்செயன், விஸ்வநாதன், அந்துவான், கண்ணன், குப்பன், மண்ணாங்கட்டி, ஹரிகிருஷ்ணா, நாகராஜ், பிரபா, சிவா, நடராஜ், முத்து, ராதா, தனலட்சுமி, எம்ஜிஆர் பேரவை நிர்வாகிகள் பாஸ்கர், கண்ணையன், சுதாகர், பாலா, ஜெகநாதன், ஜெயசுந்தர் மற்றும் ஊர் பிரமுகர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் மிரட்டலுக்கு அ.தி.மு.க. அஞ்சாது என ஓம்சக்திசேகர் பேசினார்.
    புதுச்சேரி:

    ஜெயலலிதா  பிறந்தநாள்விழா நிகழ்ச்சியில் மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் பேசியதாவது:-

    ஜெயலலிதாவின் பிறந்தநாளை எப்போதும் போல மக்கள் நலம் பெறும் வகையில் நாம் கொண்டாடி வருகிறோம். நாம் ஏற்கனவே முடிவு செய்த அடிப்படையில் மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் ஒரு மாதம் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட உள்ளோம்.

    ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் அதிக அளவில் நடக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு மிரட்ட பார்க்கின்றனர். ஒரு போதும் மிரட்டல்களுக்கு  அ.தி.மு.க. அஞ்சியது இல்லை. இது நமக்கு  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கற்று கொடுத்த பாடம் ஆகும். 

    தற்போது தமிழகத்தில் தி.மு.க. பெற்ற வெற்றி நிரந்தரமானது அல்ல. அ.தி.மு.க.  ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ்., அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோரின் ஆசியோடு  மீண்டும் அ.தி.மு.க.   ஆட்சி   அமரும், மக்களுக்கு சேவை செய்யும்.

    இவ்வாறு ஒம்சக்தி சேகர் பேசினார்.
    தனியார் கம்பெனியில் விபத்து எந்திரத்தில் சிக்கி வாலிபரின் கைவிரல்கள் துண்டானது
    புதுச்சேரி:

    வில்லியனூர் கூடப் பாக்கம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி ஆனந்தநாயகி. இவர்களது மகன் தினகரன் (வயது19) டிப்ளமோ படித்துள்ளார். இவர் பொறையூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில்  கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டி ருந்த போது எந்திரத்தை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது வலது கை எந்திரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டது. 

    இதில் அவரது கை விரல்கள் நசுங்கி  துண்டானது. ரத்தம் கொட்டிய நிலையில்  இருந்தவரை உடன் வேலை பார்ப்பவர்கள் அவரை மீட்டு  அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி அளித்த பின்னர் கூடப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அவரது 3 விரல்களும் துண்டானது.

    இதுகுறித்து தினகரனின் தாய் ஆனந்தநாயகி வில்லி யனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் புதிதாக வேலைக்கு சேர்ந்த எனது மகன் தினகரனுக்கு முறையான பயிற்சியும், எந்திரத்தை இயக்குவதற்கான அனுபவமும், பாதுகாப்பு உபகரணமும் வழங்காத தனியார் கம்பெனி காண்டிராக்டர் வீரப்பன், சூப்பர்வைசர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.
    வீட்டில் மயங்கி விழுந்து கர்ப்பிணி இறந்து போனார்.
    புதுச்சேரி:

    கடலூர் பெரியகாட்டுப் பாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களுக்கு வினோதா(வயது28) உள்பட 3 மகள்கள் உள்ளனர். மோகன் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

    இந்தநிலையில் மூத்த மகள் வினோதாவுக்கும் வில்லியனூர் புதுப்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் இளமாறனுக்கும் (28)  5 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது வினோதா மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்தநிலையில்  வினோதா வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையறிந்த இளமாறனின் உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டோவில் வில்லியனூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையறிந்த வினோதாவின் தாய் புஷ்பவள்ளி வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரியபாளையத்தில் லாரி திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் ஆரிய பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது52). சொந்தமாக லாரி வைத்து புளுமெட்டல் தொழில் செய்து வருகிறார்.

    இவருடன் அவரது சகோதரர் அன்பழகன் என்பவரும் சொந்த லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்தநிலையில் சரியாக தொழில் இல்லாத காரணத்தால் அன்பழகனின் லாரியை கடந்த 20 நாட்களாக மதியழகன் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். யாரோ மர்ம நபர் லாரியை ஓட்டி செல்லும் சத்தம் கேட்டது. உடனடியாக மதியழகன் வெளியே வந்து லாரியை விரட்டி சென்றார். ஆனால் மர்ம நபர் லாரியை வேகமாக ஓட்டி சென்று விட்டார்.

    பின்னர் பல்வேறு இடங்களில் தேடியும் லாரியை கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இதுகுறித்து மதியழகன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    புதுவை உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் ஆணழகன் போட்டி நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் 12-வது ஜூனியர் மிஸ்டர் இந்தியா 2022 ஆணழகன் போட்டி நடந்தது.

    போட்டியை இந்தியன் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன், புதுவை பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் இணைந்து நடத்தின. ஜூனியர் பாடி  பில்டர், மாஸ்டர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்தது. 

    புதுவை, தமிழகத்தை சேர்ந்த 12 பெண்கள்  உள்பட 250-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் சென்னை கொடுங்கையூர் சுரேஷ் ஆணழகன் பட்டம்  வென்றார். பல்வேறு பிரிவில் ஆணழகன் பட்டத்தை வென்றவர்களுக்கு அமைச் சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்க்கட்சித்  தலைவர் சிவா ஆகியோர் பதக்கம், சான்றிதழ் வழங்கினர். 

    இதற்கான ஏற்பாடுகளை புதுவை பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் சேர்மன் ரமேஷ்குமார்  தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    ×