என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை,  ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை,  இ.எஸ்.ஐ. மருத்துவமனை,  கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    அரசு பொது மருத்துவ மனையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மத்திய கூட்டமைப்புத் தலைவர் அன்பு செல்வன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். 

    முன்னதாக சுகாதார ஊழியரும், மத்திய கூட்ட மைப்பு பொருளாளரும், சுகாதார ஊழியர் கடன் சங்கத் தலைவருமாகிய கணபதி  மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி  செலுத்தப்பட்டது.

    சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு நிர்வாகிகள் பாக்கியவதி அனுராதா, சாந்தி, பிரபாவதி, ஜான்சி கதிர்வேல், விஜயகுமார், ராஜ்குமார்,  இளங்கோ விஜய முருகன், தனசேகரன் நந்தகுமார் லட்சுமி உட்பட அனைத்து பணி பிரிவு ஊழியர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தேசிய சுகாதார இயக்கம் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். செவிலியர் படி, நோயாளி பராமரிப்பு படி உள்ளிட்ட உயர்த்தப்பட்ட அலவன்ஸ்களை  வழங்க வேண்டும்.

    மேலும் அனுப்பாமல் காலம் கடத்தும் சுகாதாரத் துறை நிர்வாகத்தை கண்டிக்கும் வகையிலும் மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வு நியமன விதிகளில் திருத்தம் பணி கட்டமைப்பு மாற்றி அமைக்க வேண்டும். உயர்த்தப்பட்ட சம்பள விகிதங்களை அமல்படுத்த வேண்டும். தகுதி உள்ளவர் களுக்கு பழைய பென்சன் திட்டத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை மேல் சாத்தமங்கலம் ஏரிக்கரை மெயின் ரோடு அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 வாலிபர் சந்தேகப்படும்படி நின்றுக் கொண்டிருந்தனர். 

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள்  மேல்சாத்த மங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வசந்த் என்ற வசந்தராஜ்(வயது25) என்பதும், மற்றொருவர் சென்னையை சேர்ந்த செல்வா (25) என்பதும், இவர்கள் இருவரும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

    பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 பாக்கெட் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    பணம் தர மறுத்த கோவில் காவலாளியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி :

    பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது53). இவர் மகாத்மாகாந்தி சாலையில் உள்ள ஒரு கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    இரவு பணியில் இருந்த போது அதிகாலை 2 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் மது போதையில் வந்தனர். அதில் 2 பேர் சுப்பிரமணியிடம் சென்று பணம் தருமாறு கேட்டனர். அதற்கு தன்னிடம் பணம் இல்லையென சுப்பிரமணி தெரிவித்தார்.

    இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சுப்பிரமணியை ஆபாசமாக திட்டி அருகில் கிடந்த கல்லால் சரமாரியாக தாக்கினர். மேலும் ஆத்திரம் தீராத அந்த நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணியின் தலையில் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இந்த தாக்குதலில் ரத்த காயமடைந்த சுப்பிரமணி சத்தம் போட்டார் அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ள தனியார் நிறுவன காவலாளி அங்கு வரவே அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பின்னர் சுப்பிரமணி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்காலில் ட்ரோன் மூலம் நில அளவு விவரத்தை சேகரித்து, பொதுமக்களுக்கு சொத்து அடையாள அட்டை வழங்குது குறித்த திட்டப்பணிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    காரைக்கால்:

    காரைக்காலில் ட்ரோன் மூலம் நில அளவு விவரத்தை சேகரித்து, பொதுமக்களுக்கு சொத்து அடையாள அட்டை வழங்குது குறித்த திட்டப்பணிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ‘ஸ்வாமித்வா’ என்ற திட்டத்தை அமல்படுத்திவருகிறது.

    ஆதிதிராவிட மக்கள் வாழும் பகுதிகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள எல்.ஜி.ஆர். மனைப்பட்டா பெற்று வீடு கட்டிக்கொண்டு வாழ்வோர் பகுதிகள், அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வாழ்வோர் வீடுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் ட்ரோன் மூலம் நில அளவீடு செய்து சொத்து அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை வைத்திருப்போர் வங்கியில் கட்டுமானம் தொடர்பாக கடன் வசதி பெறுவது உள்ளிட்ட வசதிகளை பெறமுடியும். காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்குட்டத்திற்கு, புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், நில அளவை பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு திட்டம் குறித்து விளக்கி கூறினர். கூட்டத்தில், அமைச்சர் சந்திரபிரியங்கா பேசுகையில், காரைக்காலில் எல்.ஜி.ஆர். மனைப்பட்டா பெற்று வீடு கட்டிக்கொண்டுள்ளோர் பகுதிகள், ஆதிதிராவிட மக்கள் வாழும் பகுதிகளில், ட்ரோன் மூலம் அளவீடு செய்யும் பணியை விரைவாக எடுக்குமாறும், திட்டத்தின் மூலம். சொத்து அட்டையை பயனாளிக்கு கிடைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும். என்றார்.
    காரைக்காலில் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தக் கோரி மாணவ, மாணவிகள் காரைக்காலில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    காரைக்கால்:

    காரைக்காலில் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தக் கோரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று காரைக்காலில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற் பட்டது.

    காரைக்கால் அரசலாறு மதகடி பாலம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தக்கோரி, கண்டனத்தை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இது குறித்து, நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால், கல்லூரிகளில் இதுவரை நடைபெற்ற 4 பருவத் தேர்வுகளில் ஒன்று மட்டும் நேரிடையாக நடத்தப்பட்டுள்ளது. மற்ற 3 தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. கொரோனா தற்போது சற்று குறைந்தாலும், தமிழத்தைப் போல, இறுதி பருவத்தேர்வை தவிர தற்போது நடைபெறவுள்ள 5 வது பருவத்தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

    போராட்டம் குறித்து விபரம் அறிந்த, காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், நிரவிதிருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த புதுச்சேரி முதல் அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் ஆகியோருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
    புதுவை தொழில்நுட்ப பல்கலையில் 100 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் 5-ந் தேதி தொடங்குகிறது
    புதுச்சேரி:

    புதுவையில் நிபுணா சேவா இன்டர்நேஷனல் சார்பில் லோகேஷ்வர ஆராதனா நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் 2022 புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 5 மற்றும் 6-ந் தேதி நடக்கிறது. 

    முகாம் தொடர்பான அறிமுகம், கையேடு வெளியீடு நிகழ்ச்சி  கவர்னர் மாளிகையில் நடந்தது. முகாம் செலவுக்காக புதுவையை சேர்ந்த லட்சுமி நாராயணன் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். அவரை கவர்னர் தமிழிசை பாராட்டினார். 
    தொடர்ந்து முகாம் கையேடை வெளியிட்டு கவர்னர் தமிழிசை பேசிய தாவது:-

    ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் ஒன்றிணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர். திருவிழா போல் நடந்த முகாமில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது.  இந்த முகாமில் 144 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. 

    இதேபோல புதுவையிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என இளைஞர்களிடம் கோரிக்கை வைத்தேன். இதையேற்று வருகிற 5, 6-ந் தேதிகளில் புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். முகாமில், 100 பெரிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 

    புதுவையில் உள்ள திறமையான, படித்த இளைஞர்கள், மாணவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாமில் பங்கேற்க பதிவு செய்து கொள்ள வேண்டும். இளைஞர்கள், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண் டும் என பல்வேறு நடவடிக் கைகளை அரசு எடுத்து வருகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    கவர்னரின் முயற்சியால் புதுவையில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. அரசுக்கு எந்த செலவும் இல்லாமல் முகாம் நடத்தப்படுகிறது. படித்த இளைஞர்கள், வேலையின்றி சிரமப்படுகின்றனர். அவர்கள் இந்த முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, 

    அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனியார் பங்களிப்போடு நடைபெறும் இந்த முகாம் மூலம் பொறியியல், கலை, அறிவியல் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலைவாய்ப்பு முகாமை தனது முயற்சியால் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உரு வாக்கித்தர முன்வந்துள்ள கவர்னருக்கும், நிறுவ னங்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார். 

    முன்னதாக வேலை வாய்ப்பு முகாம் கையேட்டை கவர்னர் தமிழிசை,  முதல்- அமைச்சர்  ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டனர்.
    பேனர்களை அகற்றக்கோரி மீண்டும் ஐகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளோம் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பாசறை செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் பேனர் கலாச்சாரம் பெருகி வருகிறது. நகராட்சி அனுமதி பெறாமல் அரசுக்கு வருமானம்  இழப்பு, பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் விதமாக பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் 5.8.2021-ல் வழக்கு தொடரப்பட்டது. 

    ஐகோர்ட்டு நீதிபதிகள், மாநிலம் முழுவதும் பேனர் களை உடனே அகற்ற 1.10.2021-ல் உத்தரவிட்டனர். புதுவை கலெக்டரின் பேனர் அகற்றும் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் ஐகோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் இருப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

    இந்த பேனர்களை உடனடியாக அகற்றக்கோரி மீண்டும் ஐகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளோம். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 61 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 9, காரைக்காலில் 3 பேர் புதிதாக  தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 14, காரைக்காலில் 3, மாகியில் 2 பேர் என  19  பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 35, காரைக்காலில் 27, ஏனாமில் 9, மாகியில் ஒருவர் என 72 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 658 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 437 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 139, காரைக் காலில் 83, ஏனாமில் 10, மாகியில்10 பேர்  என 242 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 261 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 960 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை  உட்பட 15 லட்சத்து 78 ஆயிரத்து 903 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பா.ஜனதா அமைச்சர் போல் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் செயல்படுகிறார் என்று தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடந்தது.

    சட்டசபையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதியளிக்காததை கண்டித்து தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.  வெளிநட்பு குறித்து எதிர்கட்சித்தலைவர் சிவா கூறியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்து 8 மாதங்கள்  ஆகிறது.  இதுவரை அறிவித்த எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை. பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்  அறிவிக்கப்பட்டது. இதுவரை வழங்கப்படவில்லை. 

    பொங்கல், தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட பொருட்கள் இதுவரை வழங்கவில்லை.   கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டு கிடக்கிறது. பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதற்கு  எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை. 

    பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மாநில அந்தஸ்து கிடைத்து விடும்  என்றார்கள். இதுவரை என்ன நிலையில் உள்ளது? என தெரியவில்லை. 

    மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து  வருகிறது. இதையெல்லாம் கேள்வி எழுப்பியதற்கு பேரவையில் முதல்-அமைச்சர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதை கண்டித்து வெளி
    ந டப்பு செய்தோம். 

    அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்து படிப்படியாக போராட்டங்களை நடத்துவோம். சபாநாயகர்  தனது பொறுப்பை மறந்துவிட்டு, பா.ஜனதா உறுப்பினராகவும், அமைச்சராகவும் செயல்படுகிறார். இது கண்டனத்துக்குரியது. 

    இவ்வாறு அவர்  தெரிவித்தார்.
    2,100 புதிய பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணையை ரங்கசாமி வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், ஆதரவற் வேறாருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    2018-19-ம் ஆண்டு விண்ணப்பித்து நிலுவையில் இருந்த 2 ஆயிரத்து 100 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. முதல்கட்டமாக தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதியை சேர்ந்த புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறும் ஆணையை சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அறையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி  வழங்கினார். 

    நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துறை செயலர் உதயகுமார், இயக்குனர் முத்துமீனா, துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    சட்டசபை கூட்டத்தில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதுவும் பேசாமல் அமைதி காத்தனர்.
    புதுச்சேரி :

    புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க சட்டசபையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என தி.மு.க.&காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒட்டுமொத்த மாக எழுந்து வலியுறுத்தினர். 

    அப்போது பிரதமரின் பெஸ்ட் புதுவை அறிவிப்பு என்ன ஆச்சு? அரசின் தேர்தல் வாக்குறுதி, சட்ட மன்ற வாக்குறுதிகள் என்ன ஆச்சு? மாநில அந்தஸ்து என்ன ஆச்சு? என பல கேள்விகளை எழுப்பினர். 

    இதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதிலளித்தார். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்து, அமைச்சர்களிடம் பதில் பெற்றுத்தரும்படி வலியுறுத்தினர். ஆனால் ஆளும்கட்சி வரிசையில் எந்த அசைவும் இல்லை. 

    கடந்த காலங்களில் எதிர் கட்சிகள் அரசை விமர் சிக்கும்போது, ஆளும்கட்சி தரப்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்வார்கள். இதனால் சபையில் பெரும் அமளி நிலவும். 

    ஆனால் இன்றைய கூட்டத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்&பா.ஜனதா தரப்பில் எந்த பதிலும், வாக்குவாதமும் செய்யாமல் மவுனமாக அமைதி காத்தனர்.
    எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினர். அவர்களுடன் காங்கிரஸ் எம.எல்.ஏ.க்களும் வெளியேறினர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 2-ந் தேதி முடிவடைந்தது.

    சட்டமன்றத்தை 6 மாதத்துக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் புதுவை சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டம் இன்று கூடியது. கூட்டத்தை சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.

    முதல் நிகழ்வாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சட்ட முன் வரைவுகளுக்கு இசைவு அளித்ததை சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.

    அப்போது எதிர்க் கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, நாக.தியாகராஜன், சம்பத், செந்தில்குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஒட்டுமொத்தமாக எழுந்து பேச தொடங்கினர்.

     

    புதுவை சட்டசபை

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா, சட்டசபை கூட்டத்தை எப்படி நடத்தப்போகிறீர்கள்? எத்தனை நாள் நடத்தப் போகிறீர்கள்? அரசு ஊழியர்களுக்கு சம்பளமே வழங்க முடியாத நிலை உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    சபாநாயகர் செல்வம்:- சபைக்கு தவறான கருத்தை எதிர்கட்சித் தலைவர் சொல்கிறார்.

    சிவா:- நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பிரதமர் பெஸ்ட் புதுவை என கூறியுள்ளார். அதற்கு என்ன திட்டங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள்.

    சபாநாயகர்:- வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை அரசு நிறைவேற்றியுள்ளது.

    சிவா:- சபாநாயகர் பா.ஜனதா அமைச்சர் போல செயல்பட வேண்டாம். சபாநாயகராக செயல்படுங்கள். எங்களுக்கு அமைச்சர்களிடம் பதில் பெற்றுத்தாருங்கள்.

    நாஜிம், கென்னடி:- காதுகொடுத்து எங்கள் கருத்தை கேளுங்கள். நாங்கள் உங்களுக்கும் சேர்த்துத் தான் பேசுகிறோம்.

    சிவா:- சட்டமன்றத்தை கூட்ட ஏன் பயப்படுகிறீர்கள்? அதிகாரிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மக்கள் பிரச்சினைகளை பேசத்தான் கேட்கிறோம். தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியது என்ன ஆனது? புதுவை முடங்கி கிடக்கிறது.

    சபாநாயகர்:- உறுப்பினர்கள் அமருங்கள். முதல்-அமைச்சர் பதில் கூறுவார்.

    சிவா: முதல்-அமைச்சரின் மாநில அந்தஸ்து கோரிக்கை என்ன ஆனது? அதற்காக என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? அதை சபையில் விளக்கி கூறுங்கள்.

    சபாநாயகர்:- பெஸ்ட் புதுவையை உருவாக்க முதல்-அமைச்சர் அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளார்.

    சிவா:- உங்களை தடுப்பது யார்? வெளிப்படையாக சொல்லுங்கள்.

    கென்னடி:- 10 நிமிடம் ஒதுக்கி எங்கள் கருத்தை கேட்கக்கூடாதா? சபையில் விவாதம் நடத்தக் கூடாதா?

    சிவா:- தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. பல தொழிற்சாலைகள் மாநிலத்தை விட்டு வெளியேறுகிறது. தொழிற் சாலைகளுக்கான சிறப்பு நிதி என்ன ஆனது?

    சபாநாயகர்:- உறுப்பினர்கள் அமருங்கள். முதல்-அமைச்சர் விளக்கம் தருவார். என்ன நன்மைகள் நடந்திருப்பது என இங்குள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்.

    சிவா:- தீபாவளிக்கு அறிவித்த சர்க்கரை, அரிசி இதுவரை மக்களை சென்றடையவில்லை. பொங்கலுக்கு அறிவித்தது எப்போது போய் சேரும்? சிறப்புக்கூறு நிதி என்ன ஆனது?

    செந்தில்குமார்:- பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியில் 40 சதவீதத்தை மட்டுமே அரசு செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 60 சதவீத நிதியை எப்படி செலவு செய்ய போகிறீர்கள்?

    நாஜிம்:- மாநிலம் பாதிக்கப்படுகிறது. மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைத்தான் கேட்கிறோம். உங்களுக்காகவும்தான் கேட்கிறோம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்காமல் சபாநாயகர் சபை நடவடிக்கைகளை தொடர்ந்தார். இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளில் பேனர்களை ஏந்தியபடி சபாநாயகர் இருக்கை நோக்கி சென்றனர். சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    மாநில அந்தஸ்து என்ன ஆனது? விவசாய கடன் தள்ளுபடி என்ன ஆனது? அண்ணாச்சி, அண்ணாச்சி ரேசன் கடை திறப்பது எப்போது அண்ணாச்சி? தினக்கூலி ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் என்ன ஆச்சு? என கோ‌ஷம் எழுப்பினர். இந்த கோரிக்கைகளை பேனரிலும் எழுதியிருந்தனர்.

    இதையடுத்து சபை காவலர்கள் அவர்களை முன்னே செல்லவிடாமல் தடுத்தனர்.

    இதனைத்தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினர். அவர்களுடன் காங்கிரஸ் எம.எல்.ஏ.க்களும் வெளியேறினர்.

    தொடர்ந்து சபாநாயகர், சட்ட முன்வரைவுக்கு இசைவு அளிக்கப்பட்டதை தெரிவித்து சபையை காலவரையின்றி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதையும் படியுங்கள்... உ.பி. மக்கள் தங்கள் வாக்குகளை பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி

    ×