என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மார்க்கெட் கமிட்டிக்கு நெல்வரத்து அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 2018-ல் மத்திய அரசின் இ-நாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

    விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை, இ-லாட் முறையில் உத்தேச மதிப்பில் இ-நாம் போர்ட்டலில் பதிவிடப்படும். 10.30 மணிக்குள் வியாபாரிகள் நெல் உள்பட விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கின்றனர். 

    அதிகபட்ச விலை நிர்ண யிக்கும்,  வியாபாரிக்கு விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. எலக்ட்ரானிக் மிஷின் மூலம் எடை போடுவதால், ஒரு மூட்டைக்கு 3 முதல்  5 கிலோ வரை இழப்பும் தவிர்க்கப்படுகிறது.  மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலை கிடைக்கிறது. இதனால் புதுவை,  தமிழக பகுதிகளான மரக்காணம், திண்டிவனம் பகுதி விவசாயிகளும் தட்டாஞ்சாவடி கமிட்டிக்கு விளை பொருட்களை  கொண்டு வருகின்றனர். 

    கடந்த ஆண்டு சம்பா பட்டத்தில் 6 ஆயிரத்து 100 குவிண்டால் நெல் வந்தது. இந்தாண்டு 8 ஆயிரத்து 171 குவிண்டால்  நெல் வந்துள்ளது.  சம்பா அறுவடை மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்பதால் 10 ஆயிரம் குவிண்டால் நெல் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக வெள்ளை பொன்னி குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 106, பபட்லா ரூ.ஆயிரத்து 921, பொன்மணி ரூ.ஆயிரத்து  66-க்கு விலை போனது.
    புதுவையில் தனித்தனி விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே மங்கலம் ஏரிக்கரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது  மனைவி விஜயா (வயது22).

    தனது 2 வயது குழந்தை தஷிதாவுடன் உறவினர் ராமாயி(23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராமாயி ஓட்டி வந்தார். விஜயா தனது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பின்னால் அமர்ந்து வந்தார்.

    புதுவை&விழுப்புரம் ரோட்டில் மூலக்குளத்தில் உள்ள தனியார் கார் ஷோரூம் அருகே வந்த போது பின்னால் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் ராமாயி, விஜயா மற்றும் அவரது குழந்தை தஷிதா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். 

    உடனே அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஜயா மற்றும் அவரது குழந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ராமாயி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்தவர் கண்ணையன்(70). இவரது மனைவி சாந்தி(60). இவர் 
    நெல்லித்தோப்பு மீன் மார்க் கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

    மீன் வியாபாரம் செய்வதற்காக சாந்தி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து நெல்லித்தோப்பு மார்க்கெட்டுக்கு புறப்பட்டு வந்தார். நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகே வந்த போது பெண் ஒருவர் சைக்கிளில் திடீரென சாலையின் குறுக்கே  சென்றதால் அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க கண்ணையன் திடீர் பிரேக் போட்டார். 

    இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் கண்ணையன் மற்றும் அவரது  மனைவி சாந்தி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சாந்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று  வருகிறார்.

    திருக்கனூர் அருகே சோம்பட்டு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன்(63). இவர் முருங்கப் பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

     இவர் முருங்கப்பாக்கத்தில் கடலூர்&புதுவை ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக பெரியண்ணன் மீது மோதியது. இதில் பெரியண்ணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் பெரியண்ணனை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த 2 விபத்துகள் குறித்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருமாம்பாக்கம் இந்திராநகரை சேர்ந்தவர் சரவணன். இவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரளா. 

    இவர் தனது மகள் சாதனாவை(10) அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாதனா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுமி சாதனா படுகாயமடைந்தாள். 

    உடனே சரளா தனது மகளை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமி சாதனா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
    மதகடிப்பட்டில் செல்போன் மூலம் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை-விழுப்புரம் மெயின் ரோடு புதுவை எல்லையான மதகடிப்பட்டு நுழைவு வாயில் அருகே செல்போன் மூலம் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு  லாட்டரி விற்பனை செய்வதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் லாட்டரி முடிவுகளை கூறிக்கொண்டிருந்தார்.

    உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொத்தபுரி நத்தம்  முருகன் கோவில் தெருவை சேர்ந்த ராஜாராம்(45) என்பதும், இவர் செல்போனில் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ராஜாராமை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோனேரிகுப்பம் சீனிவாசாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர் புதுவை அரசு பொதுப்பணித்துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கஸ்தூரி பாய்(வயது61). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கஸ்தூரிபாய் கடந்த சில ஆண்டுகளாக நீரழிவு, ரத்த அழுத்தம் மற்றும் மூட்டுவலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் கஸ்தூரிபாய் விரக்தியில் இருந்து வந்தார்.

    வைத்திலிங்கம் தனது மனைவிக்கு மருந்து-மாத்திரை வாங்கி வர வெளியே சென்றிருந்த வேளையில் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கஸ்தூரிபாய் வீட்டின் கழிவறைக்கு சென்று அங்குள்ள இரும்பு கம்பியில் துப்பட்டவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது கணவர் வைத்திலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
    கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீதரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு காலங்களில் மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் இடைவிடாது இயங்கி புதுவைக்கு மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கி வந்துகொண்டிருக்கின்றன. இதன் வாயிலாக மின்துறையும் புதுவை மக்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்து வந்துகொண்டிருக்கிறது.

    இக்கட்டான காலகட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் பயனீட்டு கணக்கீடு, மின் கட்டண பட்டியல் வழங்குதல் போன்றவற்றில் தவிர்க்க முடியாத தொய்வு ஏற்பட்டாலும் மின் பயனீட்டு கணக்கீடு, மின்கட்டண பட்டியல் வழங்குதல் போன்ற பணிகளை மின்துறையானது மேற்கொண்டு வருகிறது. பெரும்பான்மையான மின் நுகர்வோர்கள் தங்களுடைய மாதாந்திர மின்கட்டணத்தை சிரமத்துக்கு இடையில் செலுத்தி வந்தாலும் சில மின்நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டணத்தை கட்ட முன்வரவில்லை.

    இதன் காரணமாக மின்சார கட்டண சுமை அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே மின்கட்டண பாக்கி வைத்துள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாதாந்திர மின் நுகர்வு கட்டணத்தையும் காலத்தோடு செலுத்த வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மின்நுகர்வோர்களின் வசதிக்காக அவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே கைப்பேசி அல்லது கணினி மூலமாக இணையதள வசதிகளை பயன்படுத்தி மின்கட்டணம் செலுத்த ஏற்கனவே வழிவகை செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன்படி மின்துறையின் https://pedservices.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் மின்கட்டணம் செலுத்தலாம். மேலும் செல்போன் செயலிகளான பீம், ஜிபே, பே.டி.எம்., அமேசான் பே மூலமாகவும் மின்கட்டணத்தை செலுத்தலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    புதுவை சட்டசபையை 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி :

    புதுவை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

    புதுவை சட்டமன்ற நடைமுறை மற்றும் அலுவல் விதி 5 பிரிவு 21 படியும் புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மரபுகளின்படியும் கவர்னர் ஒவ்வொரு ஆண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆரம்பத்தில் உரையை நிகழ்த்த வேண்டும் ஆனால், இந்த விதிகளை எல்லாம் மீறி கவர்னர் உரை இடம்பெறாமல் சட்டப்பேரவை கூட்டப்பட்டுள்ளது 

    இது புதுவை சட்டப் பேரவையின் விதிகளையும், மரபுகளையும் மீறிய செயலாகும். மேலும் மக்கள் பிரச்சினைகளை பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்காமல் கூட்டத்தொடரை ஒரு நாளில் நடத்தி முடிக்க திட்ட மிட்டிருப்பது கண்டனத்துக்கு உரியதாகும். 

    எனவே மரபுகளை மீறாமலும் கவர்னர் உரையை இடம் பெற வழிவகை செய்து, மக்கள் பிரச்சினை பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் 10 நாட்களாவது கூட்டத்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு வைத்தியநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    புதுச்சேரி:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் மகத்தான சாதனைகள் குறித்த கண் காட்சி நாடு முழுவதும் நடக்கிறது.

    புதுவை மாநிலத்தில் 75 இடங்களில் இந்த கண்காட்சி நடக்கிறது. அதில் கண்காட்சி, விரிவுரை,  திரைப்படங்கள், வானொலி பேச்சுகள், அறிவியல் இலக்கிய நடவடிக்கைகள், சுவரொட்டிகள் என அனைத்து நிகழ்வுகளும் தலா 75 என்ற அளவில் நடத்தப்பட உள்ளது. 

    இதன் தொடக்கவிழா லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள டாக்டர் அப்துல்லகாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் 28-ந் தேதி வரை நடக்கிறது. 

    தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இங்கு இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத்தின் மைல் கற்கள் மற்றும் விஞ்ஞானிகளை மையப்படுத்தி கண்காட்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியும் நடக்கிறது. 

    இதனை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில் முதல்&அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அறியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை செயலர் ஸ்மித்தா, முதன்மை பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை அங்கிருந்த மாணவர்களோடு கலந்துரையாடினார். 
    பேராசிரியர்களை நியமித்து சட்ட கல்லூரி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு சட்டக் கல்லூரியில் 10 ஆண்டுக்கும் மேலாக கல்லூரி முதல்வர் உள்ளிட்ட  சட்டம் தொடர்பான படிப்புகளை கற்றுத் தரக்கூடிய மொத்தமுள்ள 18 பேராசிரியர் பணியிடங்களில் 10-ம், சட்டம் சாராத படிப்புகளை கற்றுத்தரக்கூடிய 4 பேராசி ரியர் பணியிடங்களில் 3-ம் காலியாக உள்ளது. 

    பொது நல வழக்கில் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் புதுவை பல்கலைக்கழகமும் காலியாக உள்ள கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி விட்டு மாணவர் சேர்க்கையை நிரப்ப உத்தரவிட்டிருந்தது.  

    ஆனால் புதுவை அரசு, சட்ட கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தியது. 

    கடந்த 9-ந் தேதிக்கு முன்பு 3 ஆண்டு சட்ட படிப்பில் 37 மாணவர்களையும், 5 ஆண்டு சட்டப்படிப்பில் 30 மாணவர்களையும் கல்லூரி சேர்த்துள்ளது.  பல்கலைக்கழகம் 9-ந் தேதி முதலாம் ஆண்டு சேர்க்கையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

    இதனால் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கவர்னர், முதல்-அமைச்சர் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஏதேனும் ஒரு வகையில் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பியும்,  நூலகம், பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியும், கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாத வகையில் தொடர்ந்து கல்லூரி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    மண்ணாடிப்பட்டு தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருபுவனை தொகுதி பா.ஜனதாவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    திருபுவனை தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து  புகார் அளித்தனர்.

    இதில், திருபுவனை தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். என்ற பொன்னுசாமி, ஜெய ராமன், மாநில எஸ்.சி. அணி செயலாளர் வீரப்பன், பா.ஜனதா நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, நல்லூர் பாஸ்கர், ஐங்கிரிவன், திருபுவனை ராம்குமார், ஸ்ரீதர், செல்லிபட்டு நாகலிங்கம், கோவிந்தன், குச்சி பாளையம் சண்முகம், சன்னியாசிகுப்பம் சிவக் கொழுந்து, கலிதீர்த்தாள்குப்பம் நாராயணமூர்த்தி, பாலகுமார் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்/
    புதுவையில் முதல்முறையாக டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரும்பார்த்தபுரம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (31). கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

    வீட்டை விட்டு சென்ற இவர்  சேந்தநத்தம் கிராமத்தில்  சுடுகாடு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

    மது பாட்டிலால் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் பல முறை குத்தப்பட்டிருந்தது. மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தினர். 

    சீனிவாசனை மது அருந்த அழைத்து சென்ற  திவாகர் என்பவரை  போலீசார் தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் தாயார் மல்லிகா சீட்டு கட்டி வந்துள்ளார். இதில் வந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சீனிவாசன் எடுத்து கொண்டு மூலக்குளம் பகுதியில் வசிக்கும்  தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். 

    அப்போது வழியில் அரும்பார்த்தபுரத்தில் நண்பர் திவாகரை சந்தித்துள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை குடிக்க  அழைத்து சென்று மது போதையில் குத்தி கொன்று பணத்தை திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

    சம்பவ இடத்தை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, சூப்பிரண்டு ஜிந்தாகோதண்டராமன் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரித்தனர். 

    கைரேகை  நிபுணர்கள் வந்து பரிசோதனை செய்தனர். வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திவாகர் உட்பட சிலரை தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றின் நடுவில் உள்ள முட்புதரில் பதுங்கியிருப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. 

    இதனையடுத்து டிரோன் கேமரா உதவியுடன் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில்  சங்கராபரணி ஆற்றின் நடுவில்  போலீசார் தேடி வருகின்றனர். 

    புதுவையில் காவல் துறை வரலாற்றில்  டிரோன் கேமரா மூலம்  குற்றவாளிகள் தேடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    மக்கள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்கு சபையை நடத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் மனு அளித்துள்ளது.
    புதுச்சேரி:

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவை சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த செப்டம்பர் 2-ந்தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது. சட்டசபையை 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளதால் மார்ச் 2-ந்தேதிக்குள் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும்.

    இதற்காக நாளை (புதன்கிழமை) புதுவை சட்டசபை கூட்டப்படுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் என்ற அடிப்படையில் சட்ட மன்றம் கூட்டப்பட்டாலும், நாளை ஒரு நாள் மட்டுமே சபை நடைபெறும் என தெரிகிறது.

    இதனால் மக்கள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்கு சபையை நடத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் மனு அளித்துள்ளது.

    நீட் தேர்வில் இருந்து விலக்கு, மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க.வினர் வலியுறுத்தி உள்ளனர்.

    வேலைவாய்ப்பின்மை, மழை நிவாரணத்தொகை உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

    இருப்பினும் சட்டசபை கூட்டம் நாளையுடன் முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இதனால் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சட்டசபையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து குரல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வுக்கு ஆதரவாக காங்கிரசும் இணைந்து செயல்படும்.

    ஆட்சி அமைந்து 8 மாதமாகியும் ஆளும்கட்சி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். சட்டசபை கூட்டத்தில் இந்த அதிருப்தி வெளிப்படும் என தெரிகிறது.

    கடந்த கூட்டத்தொடரில் ரூ.9 ஆயிரத்து 900 கோடிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 50 சதவீதம் கூட அரசு துறைகள் செலவிடவில்லை என கூறப்படுகிறது.

    கடந்த 10 ஆண்டாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது.

    அதேநேரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும்பட்சத்தில் இந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும் நிலை உருவாகும்.
    புதுவையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 15, காரைக்காலில் 8, ஏனாமில் 1, மாகியில் 3 பேர் புதிதாக  தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 39, காரைக்காலில் 17, ஏனாமில் 5, மாகியில் 8 பேர் என 69 பேர் சிகிச்சையில் குண
    மடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 646 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 365 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 165, காரைக்காலில் 101, ஏனாமில் 19, மாகியில் 11 பேர்  என 302 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 321 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். 

    மாநிலத்தில்  கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 960 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை  உட்பட 15 லட்சத்து 74 ஆயிரத்து 707  பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    ×