என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகள் தேடல்
புதுவையில் முதல்முறையாக டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரும்பார்த்தபுரம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (31). கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
வீட்டை விட்டு சென்ற இவர் சேந்தநத்தம் கிராமத்தில் சுடுகாடு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மது பாட்டிலால் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் பல முறை குத்தப்பட்டிருந்தது. மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
சீனிவாசனை மது அருந்த அழைத்து சென்ற திவாகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் தாயார் மல்லிகா சீட்டு கட்டி வந்துள்ளார். இதில் வந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சீனிவாசன் எடுத்து கொண்டு மூலக்குளம் பகுதியில் வசிக்கும் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வழியில் அரும்பார்த்தபுரத்தில் நண்பர் திவாகரை சந்தித்துள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை குடிக்க அழைத்து சென்று மது போதையில் குத்தி கொன்று பணத்தை திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்தை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, சூப்பிரண்டு ஜிந்தாகோதண்டராமன் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரித்தனர்.
கைரேகை நிபுணர்கள் வந்து பரிசோதனை செய்தனர். வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திவாகர் உட்பட சிலரை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றின் நடுவில் உள்ள முட்புதரில் பதுங்கியிருப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து டிரோன் கேமரா உதவியுடன் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் சங்கராபரணி ஆற்றின் நடுவில் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவையில் காவல் துறை வரலாற்றில் டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகள் தேடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






