என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி பல்கலைக்கழக திட்டத்தின் மூலம் மத்திய அமைச்சகங்களின் அத்தியாவசிய தேவைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதுவை:
புதுச்சேரி பல்கலைக்கழகம், துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் தலைமையில்,கடந்த 4 ஆண்டுகளாக பசுமை வளாகம் (கிரீன் கேம்பஸ்) திட்டத்தின் கீழ் நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்கள் மூலமாக கல்வி அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் போன்ற அமைச்சகங்களின் அத்தியாவசிய தேவைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த முன்னோடி முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி மன்றம், மத்திய உயர்கல்வித்துறை, கல்வி அமைச்சகம், 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்ட பசுமை சாம்பியன் விருது வழங்கி புதுவை பல்கலைக்கழகத்தை அங்கீகரித்துள்ளது.
சிறப்புமிக்க இவ்விருதை மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் மு. மகேஷ், உதவிப்பதிவாளர் மற்றும் முனைவர். ஆ.நந்தி வர்மன் ஆகியோரிடம் வழங்கினார்.
இவ்விருது புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அவரது
அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டதாக பல்கலைக்கழகத்தின் உதவிப்பதிவாளர் கே. மகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் ஆண்டுதோறும் நடைபெறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று காலை முதல் தொடங்கியதையொட்டி, காரைக்காலில் சுமார் 11 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 11,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்
காரைக்கால்:
காரைக்காலில் ஆண்டுதோறும் நடைபெறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று(15-.4.-22) காலை முதல் தொடங்கியதையொட்டி, காரைக்காலில் சுமார் 11 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 11,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி, ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன்,14ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் மீன்களை பிடித்தால், மீன்களின் வயிற்றில் உள்ள சினை(முட்டை) அழிக்கப்பட்டு மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால், மத்திய-மாநில அரசு இந்த 61 நாட்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. அதன்படி, காரைக்கால் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமத்தில் உள்ள சுமார் 450 விசைப்படகிலிருந்து சுமார் 11, ஆயிரம் மீனவர்கள் இன்று(15.4.22) காலை முதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. முன்னதாக, நேற்று மாலை முதல் கடலுக்கு சென்ற மீனவர்கள் பெரும்பாலோனோர் கரை திரும்பினர். இன்று முதல் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத காரணத்தால், மீன்பிடி துறைமுகம் மற்றும் அரசலாற்றங்கரையில் விசைப்படகுகள் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சில மீனவர்கள் மட்டும் பைபர் படகுகளில் குறைந்த தூரம் மட்டுமே சென்றுள்ளனர். இவர்கள் காலை சென்று மாலைக்குள் சிறிய அளவிலான மீன்களை மட்டுமே பிடித்துவருவார்கள். இந்த மீன்பிடி தடைகாலத்தில், பெரும்பாலான மீனவர்கள் தங்கள் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை பழுதுபார்ப்பதில் தீவிரமாக செயல்படுவார்கள்.
நிவாரணத்தை உயர்த்தவேண்டும் மீன்பிடி தடைக்காலம் குறித்து மீனவர்கள் கூறியதாவது:-மீன்பிடி தடைக்கால நிவாரணமாக புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் ரூ.5,500 வழங்கி வருகிறது. விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு இத்தொகையை இரு மடங்காக அதிகரித்து தரவேண்டும். அதேபோல், படகு பழுதுபார்ப்பு தொகையையும் இரட்டிப்பாக மாற்றவேண்டும். டீசல் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதால், மானியவிலையில்(வரி இல்லாமல்) டீசல் வழங்க, மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். மீன்பிடி துறைமுகம், கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தூர்வாராமல் இருப்பதால், இந்த 2 மாத காலத்தில் மீன்பிடி துறைமுகத்தை முழுமையாக தூர்வாரவேண்டும். துறைமுகம் உள்ளே மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும். மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் போதே தடைக்கால் நிவாரணம் வழங்கவேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியகோயில் பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
பாகூர் அருகே கன்னியகோவில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர்-பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி விழா விமர்சையாக நடைபெறும்.
மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுவை மற்றும் தமிழக பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உற்சவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுரங்கள் புதிதாக கட்டப்பட்டது.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா 5 மணியளவில் மங்கள பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் முதல்கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து (வெள்ளிக்கிழமை) கோ பூஜையுடன் 2-ம் கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 9.45 மணி அளவில் கடம் புறப்பட்டு 10 மணி அளவில் உற்சவமூர்த்தி, வடக்கு ராஜ கோபுர மற்றும் பரிகாரம் மூர்த்திகளின் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மன்னாதீஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் தனசேகரன், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், துணை தலைவர் ஜீவகணேஷ், உறுப்பினர் கனகராஜ் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
அரியாங்குப்பத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் போலீசாரை தாக்கிய அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
அரியாங்குப்பம் மணவெளி ரோட்டில் உள்ள ஒரு கோவில் விழாவையொட்டி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு வாலிபர் மேடையில் ஏறி இசை நிகழ்ச்சி குழுவினருடன் சேர்ந்து நடனம் ஆடி ரகளை செய்தார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அரியாங்குப்பம் போலீசார் அந்த வாலிபரை மேடையை விட்டு கீழே இறங்கும் படி அறிவுறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் அதனை ஏற்காமல் தொடர்ந்து மேடையில் நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை போலீசார் மேடையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அந்த வாலிபர் போலிசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் அந்த வாலிபருக்கு ஆதரவாக மற்றொருவர் போலீஸ்காரர் முனியாண்டி என்பவரை கன்னத்தில் தாக்கினார்.
உடனே மற்ற போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில் மேடையில் ரகளை செய்தவர் அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்த ஏசுவாஜான் (வயது 25) மற்றும் போலீஸ்காரரை தாக்கியவர் அவரது சகோதரர் ஜீசஸ் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன்-தம்பி 2 பேரையும் கைது செய்தனர்.
கடற்கரை திருவிழாவில் நாட்டுப்புற இசை-நடனம் நடைபெறுகிறது.
கடற்கரை திருவிழாவில் நாட்டுப்புற இசை-நடனம் நடைபெறுகிறது.
புதுச்சேரி;
புதுவையில் முதன் முதலாக சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை திருவிழா நடைபெறுகிறது.
கடந்த 13-ந் தேதி தொடங்கிய விழா 16-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக பாண்டி மெரீனா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை ஆகிய பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சி-களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (வெள்ளிக்கிழமை) கடற்கரை சாலை லேகபே, குபேர் அவென்யூவில் மாலை 5 மணிக்கு மூங்கில் இசைக்கருவி இசை, நாட்டுப்புற இசை, நடனமும், இரவு 7 மணிக்கு வான் விளக்கு காட்சியும் நடக்கிறது.
நேற்று மெரீனா கடற்கரையில் பட்டம் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை காந்தி திடல் கடற்கரையில் பிரபல பின்னணி நாட்டுப்புற பாடகி இசைவாணியின் இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடைபெற்றது. சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் அழகிகள் கலந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்-பட்டது. மெரினா கடற்கரையில் விஜய் டிவியின் புகழ் சூப்பர் சிங்கர் பின்னணி பாடகர்களான, ராஜகணபதி, அனு, ஷாம் விஷால், மற்றும் அசார் ஆகியோரின் பாடல் மற்றும் காமெடி நிகழ்ச்சிகள் நடந்தது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.
புதுவை தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது.
இதனை ஆண்டுதோறும் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியது.
புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.
தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பங்குத்தந்தைகள் தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவைப்பாதை பேரணியில் பங்குதந்தைகள் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். சிலுவைப்பாதை பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ஆலயத்தில் நிறைவுபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுபிரான் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல் புதுவையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா ஆலயம், ஆட்டுப்பட்டு அந்தோணியார் ஆலயம், உழவர்கரை ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பேரால-யங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை காலம் தொடங்கியது
புதுச்சேரி:
கடல் சார் மீன்வளங்களை நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்தும் வகையில் பாதுகாத்-திட, (ஏப். 15-ந் தேதி) முதல் ஜூன் 14-ந் தேதி வரையில் 61 நாட்களுக்கு புதுவை, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்-காலம் அமல்படுத்தப்படுகிறது.
புதுவையில் கனக-செட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும் உள்ள மீனவ கிராமங்களிலும், காரைக்கால் கடல் பகுதியில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராம் வரை, ஏனாம் மீன்பிடி பகுதிகளிலும் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில், கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது. மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சக துறை செயலர் அறிவுறுத்தலின்படி இந்த தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
ஆலை தொழிலாளர்கள் அசோக்பாபு எம்.எல்.ஏ. முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்
புதுச்சேரி:
புதுவை சுதேசி, பாரதி மில் தொழிலாளர்கள் கடலூர் சாலையில் உள்ள பாரதி மில் அருகில் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக ஆலை ரோட்டில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவரது முன்னிலையில் ரத்தினசபாபதி, புருஷோத்தமன், தெய்வநாயகம், கண்ணதாசன், பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.
பின்னர் அவர்கள், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நிலுவை தொகைகளையும் பெற்றுத் தந்த அசோக்பாபு எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர்
செல்வம், நகர மாவட்ட பொறுப்பாளர் ரத்னவேல், மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடற்கரை திருவிழாவில் பீச் வாலிபால் போட்டியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
தமிழ் புத்தாண்டையொட்டி புதுவை சுற்றுலாத்துறை சார்பில் முதல்முறையாக கடற்கரை திருவிழா 4 நாட்கள் நடத்தப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக பாண்டி மெரினா கலங்கரை விளக்கம் அருகில் உள்ள கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி தொடங்கியது.
போட்டியை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
போட்டியில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 25 ஆண்கள் அணியும், 12 பெண்கள் அணியும் பங்கேற்றனர். போட்டியின் நிறைவு விழா நாளை (சனிக்கிழமை )நடக்கிறது. விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்க்கப்படுகிறது.
அபிஷேகபாக்கத்தில் ரூ.39 லட்சம் செலவில் அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலையை ரங்கசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி அபிஷேகபாக்கத்தில் அம்பேத்கரின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள பழமையான அம்பேத்கர் சிலைக்கு முதல்அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து புதுவை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும். பாட்கோ சார்பில் ரூ.39 லட்சம் மதிப்பில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை மற்றும் மண்டபம் அமைப்பதற்கு முதல்அமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு துறை செயலர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா, ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், பொது மேலாளர் ஆறுமுகம், இளநிலை பொறியாளர் ஜெயமுகுந்தன், முன்னாள் மகளிர் ஆணைய தலைவி வைஜெயந்தி மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, மனோகர், மாயகிருஷ்ணன், வீரப்பன், ஜானகிராமன், கதிரேசன், சக்திவேல், ஹேமாமாலினி, ரமேஷ், உமாகாந்தாரி மற்றும் ன பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுவை-காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை காமாரஜர் கிருஷி விஞ்ஞான் கேந்திரா, காரைக்கால் கிருஷி விஞ்ஞான் கேந்திரா ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 7-வது சம்பளக்குழு ஊதியம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல புதுவை அறிவியல் தொழில்நுட்ப மையம், மாநில விளையாட்டு மையம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு சம்பளம் இம்மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
பனை மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருபுவனையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் சென்னை& நாகப்பட்டினம் சாலைக்கான விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. அதனை தொடர்ந்து திருபுவனையில் பழமையான ஏரிக்கரையில் உள்ள பனை மரங்களை அகற்றி சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இயற்கையான நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டும், பனை மரங்களை அகற்ற கூடாது என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருபுவனை தொகுதி செயலாளர் ஈழவளவன் தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார். இந்த போராட்டத்தில் மருத்துவர் அணி மாநில செயலாளர் முரளிதரன், தமிழக்கனல், வணிகர் அணி சரவணன், வாணிதாசன், சிந்தனைச்செல்வன், விஜயன், தே.விஜயசங்கர், சந்திரசேகர், வினோத், வேலு, மாரிமுத்து, ஆசைத்தம்பி, மாயவன், வெற்றிவேல், நித்தியானந்தம் அமுல்ராஜ், வள்ளுவன், தென்னாட்டு காந்தி, திவாகர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பள்ளி- கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.






