என் மலர்
புதுச்சேரி
புனித வெள்ளியையொட்டி ரத்ததான முகாம் நடந்தது
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளை மற்றும் சி.எஸ்.ஐ. செயின்ட் ஜான் சர்ச் இணைந்து புனித வெள்ளியையொட்டி சிறப்பு ரத்ததான முகாமை நடத்தியது.
ஹென்றி ஜெபா ரிச்சர்ட் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளையின் சேர்மன் டாக்டர் லட்சுமிபதி நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரத்ததான முகாமை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் டயானா தலைமையில் மருத்துவ குழுவினர் தன்னார்வலர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளை உறுப்பினர்கள் குப்புசாமி, ஸ்டீபன் செல்வராஜ், வின்சன்ட், ஆதிமூலம் மற்றும் பயிற்சி ஆயர் பிரேம்குமார் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவை சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, துணை செயலாளர்கள் கீதநாதன், அபிஷேகம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேது செல்வம், தினேஷ் பொன்னையா, சரளா, தனராமன், பொருளாளர் வ.சுப்பையா உள்பட கட்சியின் நிர்வாகிகள், மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுவை பொறுப்பு கவர்னரை திரும்பப்பெற்று புதுவைக்கு நிரந்தரமான கவர்னரை நியமிக்க வேண்டும். மாநிலத்துக்கு உரிய நிதி அதிகாரம், நிர்வாக அதிகாரம் கிடைக்க வேண்டும். மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
புதுவை-கடலூர் சாலையில் தொடரும் விபத்தால் சேதமான இடத்தில் பொதுமக்கள் சமாதி கட்டினர்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளதால், சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, முள்ளோடை முதல் அரியாங்குப்பம் வரையிலான சாலை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது.
கன்னியக்கோவில் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, தமிழக அரசு பஸ், டிப்பர் லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
ஆனாலும், விபத்துக்களை தடுத்திட போக்குவரத்து-துறையும், போக்குவரத்து போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஒரு நிலையில், கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி அருகே சாலையின் நடுவே மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதேபோல் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் யாரோ, அந்த சாலை பள்ளத்தால் மீண்டும் விபத்து நடைபெறாமல் தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, மேலும் சாலையை சரிசெய்ய வலியுறுத்தி பிணத்தை புதைத்து மண்னை கொட்டி தென்னை கீற்றை கொண்டு அதில் சொருகி சமாதி அமைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், அதனை புகைப்படம் எடுத்து சமூக வலை தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
அது தற்போது வைரலாக பரவி வருவதால், சாலை விபத்துக்களை தடுக்கவும், குறைக்கவும் போதுமான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் என்று தேனீ.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சமூக நலத்துறை மற்றும் சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருநங்கையர் தின விழா கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே நடந்தது.
இதில் சமூக நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் சாதனை புரிந்து சிறந்து விளங்கிய திருநங்கைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கொரோனா கால விடுமுறைக்கு பின்பு 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருநங்கையர் தின விழா நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி ஆட்சி செய்து வருகிறது.
இந்த ஆண்டு முதல் திருநங்கைகளுக்கு முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். சமூகத்தில் ஒதுக்கப்பட்ட அவர்களை நாம்தான் மதிக்க வேண்டும். அவர்களின் திறமையை வெளிப்படுத்த நாம் உதவி செய்ய வேண்டும். பல துறைகளில் திரு-நங்கைகள் சாதனை படைத்து வருகின்றனர்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சி பாதுகாப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து திருநங்கைகளின் பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனம், இசை கச்சேரி, கவிதை வாசித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிகளை திருநங்கைகளுடன் அமர்ந்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கண்டு ரசித்தார்.
நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி முதல்வர் சித்ராதேவி, வேலூர் 36-வது வார்டு உறுப்பினர் திருநங்கை கங்கா நாயக், சமூக நலத்துறை இயக்குனர் முத்துமீனா, திட்ட இயக்குனர் சித்ராதேவி, திருநங்கைகள் தலைவி சீத்தல், சட்ட உதவி மைய நீதிபதி சோபனா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூங்கில் இசைக்கருவி இசையுடன் நாட்டுப்புற நடனத்தை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் முதன் முதலாக கடற்கரை திருவிழா நடைபெற்று வருகிறது.
பாண்டி மெரீனா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை ஆகிய பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்-பட்டுள்ளது.
கடற்கரை சாலை லேகபே, குபேர் அவென்யூவில் மூங்கில் இசைக்கருவி இசை, நாட்டுப்புற இசை, நடனம், பரதநாட்டியம், புல்லாங்-குழல், வயலின், மிருதங்கம், மற்றும் தப்பாட்டம் நடந்தது.
நடன நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சியில் சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள், மற்றும் கர்நாடக இசையுடன் பாடல்கள் பாடப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு-களித்தனர்.
கடற்கரைகளில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழிப்பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ், மத்திய போக்குவரத்துதுறை மந்திரி நிதின்கட்காரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:-
புதுவை கிழக்கு கடற்கரை சாலை 4 வழிப்பாதைக்கு ரூ.3 ஆயிரம் கோடி மத்திய போக்குவரத்து அமைச்சகத்தால் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவி அளித்த அறிவிப்பு புதுவை மக்களின் கனவை கலைத்துள்ளது.
தமிழக அரசு இத்திட்டத்திற்கான ஆட்சேபனை இல்லா சான்றிதழை அளிக்க நீண்டகாலமாக தயங்குவதால் இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து பணிகளும் நிறுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்திட்டத்தை கைவிட்ட பின் தமிழக அரசு ஆட்சேபனை இல்லா சான்றிதழை தேசிய ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ளது.
இந்த விஷயத்தில் அமைச்சர் உடனடியாக தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். இத்திட்டத்தை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும்.
ஏற்கனவே புதுவை மக்கள் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம் செயல்படாததால் விரக்தியில் உள்ளனர். மக்களின் வருத்தத்தைப் போக்கும் வகையிலும் கடற்கரை சாலை திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.
இத்திட்டம் மற்ற மாநிலத்தவரை விட புதுவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா, தொழில்கள், மருத்துவம் போன்ற துறைகளை உள்ளடக்கிய புதுவையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு இத்திட்டம் ஒரு ஊக்கியாக இருக்கும்.
இத்திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும். பயணத்திற்கு தேவையான எரிபொருள், கால அளவு மற்றும் மாசு குறையும். மக்களுக்குபாதுகாப்பான பயணத்தை அளிக்கும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் பயணிகளுக்கு இத்தலம் ஒரு மாற்றுப் பாதையை அளித்து சென்னை-திருச்சி வழித்தடத்தில் நெரிசலை குறைக்கும்.
எனவே பல்வேறு காரணங்களுக்காகவும் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும் இத்திட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாதாகோவில் வீதியில், ரூ.45 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தொடர்பாக, பைனான்சியர் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காரைக்கால்:
காரைக்கால் வேட்டைக்காரன் வீதியைச்சேர்ந்தவர் பைனான்சியர் சக்திவேல். இவரது மகன் செல்வபிரகாஷ்(வயது24) பி.காம் பட்டதாரியான இவர், காரைக்கால் மாதாகோவில்வீதி, பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டைபிங் கற்றுவருகிறார். கடந்த 11ந் தேதி, வழக்கம் போல், மாதாகோவில் வீதியில் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டைப்பிங்க்கிற்கு சென்றார்.
டைப்பிங் முடிந்தவுடன், வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று செல்வ பிரகாஷின் தந்தை சக்திவேல் காரைக்கால் நகர காவநிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் திருடனை தேடிவருகின்றனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், மனநிலை சரியில்லாத மூதாட்டி, வாய்க்காலில் தவறி விழுந்து பலியானார்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை கிராமத்தைச்சேர்ந்தவர் அபூர்வம்(வயது85). இவரது மகள் மணிமேகலை, மருமகன் நாகப்பன். இவர்களுக்கு திருமணம் ஆனவுடன், திருநள்ளாறு அம்பேத்கார் நகரில் தனியாக வசித்து வருகின்றனர். பேட்டை கிராமத்தில் அபூர்வம் தனியாக வசித்து வந்தார். நாகப்பன் அபூர்வத்திற்கு 3 வேளையும் சாப்பாடு வழங்கிவந்தார். கடந்த சில மாதமாக அபூர்வம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அடிக்கடி காணாமல் போய், மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவது வாடிக்கையாம். இந்நிலையில், கடந்த 14ந் தேதி காலை, நாகப்பன் அபூர்வத்திற்கு உணவு எடுத்து சென்றபோது, அபூர்வம் வீட்டில் இல்லையென கூறப்படுகிறது. மதியம் வந்துவிடுவார் என நாகப்பன் சென்றுவிட்டார்.
மீண்டும் மதிய சாப்பாடு எடுத்துவந்தபோதும், அபூர்வம் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் அபூர்வம் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று பகல், வீட்டின் அருகே உள்ள நெல்லிவாய்க்காலில், அபூர்வம் இறந்த்நிலையில் மிதப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், நாகப்பன் உடலை பார்த்து, திருநள்ளாறு காவல்நிலையத்தில், அபூர்வம் வாய்க்காலில் இறங்கும் போது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் என புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டும், இன்று சனிக்கிழமை என்பதாலும், நேற்று இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டும், இன்று சனிக்கிழமை என்பதாலும், நேற்று இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர். மேலும் இன்று அதிகாலை முதலே புதுச்சேரி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.
கோவில் நிர்வாகம் மற்றும் போலீசாரின் முன் ஏற்பாட்டால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியாக சாமி தரிசனம் செய்தனர்.
தர்ம தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என 2 வகை தரிசனங்களை கோவில் நிர்வாகம் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் சனீஸ்வர பகவானின் தீர்த்தக் குளமான நளன் தீர்த்தத்தில் அதிகாலை முதல் பொதுமக்கள் புனித நீராடி வழிபட்டனர். மேலும் சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.
இதில் பக்தர்கள் எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். அதிக அளவிலான பக்தர்கள் வருகை காரணமாக திருநள்ளாறு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேதராப்பட்டு அருகே திறந்தவெளி பாராக மாறிய பெருமாள் நகரில் சாலையில் காலி மது பாட்டில்களை உடைத்து சமூக விரோதிகள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
சேதராப்பட்டு-திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு செல்லும் சாலையில் தமிழக பகுதியான பெருமாள் நகரில் குடியிருப்புகள் மற்றும் சிறிய தொழிற் சாலைகள் உள்ளது.
இந்த பகுதியில் சேதராப்பட்டு தொழிற்-சாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே தங்கி உள்ளனர்.
பெருமாள் நகரில் 5-க்கும் மேற்பட்ட குறுக்கு சிமெண்டு சாலைகள் உள்ளது. இந்தப் பகுதியில் மாலை 7 மணிக்கு மேல் இரவு 12 மணி வரை தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது.
சேதராப்பட்டில் பணி முடித்துவிட்டு அந்த வழியாகத்தான் பெண்கள் பாப்பான்சாவடி, ஆகாசம்பட்டு ஆகிய ஊர்களுக்கு செல்கிறார்கள்.
இதனால் அங்கு மது அருந்துபவர்களால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மது அருந்துபவர்கள் காலி மது பாட்டிலை சாலையிலேயே உடைத்து போடுகின்றனர்.
இதனால் அங்கு செல்லும் கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. போலீசார் கண்காணிப்பில் இல்லாத இந்த பகுதி என்பதால் மது மட்டுமல்லாமல் இளைஞர்கள் கஞ்சாவை புகைப்பதாகவும், போதை ஏறிய பின்னர் பலர் பிரச்சினைகள் செய்துகொள்வதும், மோதிக் கொள்வது என சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதனால் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த வழியாக வரும் வட மாநிலத் தொழிலாளர்களை சிலர் போதையில் தகாத வார்த்தையால் பேசுவதும் நடந்து வருகிறது.
எனவே ஆரோவில் மற்றும் வானூர் போலீசார் இரவு நேர ரோந்து பணியினை அந்த வழியாக தினமும் மேற்கொண்டால் அங்கு மது அருந்துபவர்கள் எண்ணிக்கை குறைவதோடு அந்த பகுதியில் அசம்பா-விதங்கள் ஏதும் நடக்காத வண்ணம் தடுக்க முடியும் என பொதுமக்களும், தனியார் தொழிற்சாலை உரிமையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அபிஷேகப்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில் அம்பேத்கர் பெயர் பலகையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் கொம்-யூன் அபிஷேகப்பாக்கம் சமுதாய நல கூடத்தை ரூ.5லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்தது.
இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் சமுதாய நலக்கூடத்தை அம்பேத்கர் பெயரில் தொடங்க நடவடிக்கை எடுத்தார். இதற்கான கோப்புகள் தயாரான நிலையில் பெயர் சூட்டு விழா அபிஷேகப்பாக்கத்தில் நடந்தது.
இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர்கள் சரஸ்வதி, ரகுராமன் அலுவலக ஊழியர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
லாஸ்பேட்டையில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை மூகாம்பிகை நகரில் முருகன் கோவில் அருகே ஆன்லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் லேப்டாப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்ததை கண்டனர்.
உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் நாவற்குளம் குளத்துமேட்டு தெருவை சேர்ந்த பாஸ்கர் என்ற ஆறுமுகம்(வயது49) மற்றும் ஈஸ்வர் (20), லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் மெயின் ரோட்டை சேர்ந்த மதிவாணன்(34) மற்றும் அரிபிரசாந்த்(27) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனை பணம் ரூ.24 ஆயிரம் மற்றும் செல்போன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






