search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் : தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு

    திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் என்று தேனீ.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு சமூக நலத்துறை மற்றும் சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருநங்கையர் தின விழா கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே நடந்தது.

    இதில் சமூக நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் சாதனை புரிந்து சிறந்து விளங்கிய திருநங்கைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். 

    பின்னர் அவர் பேசியதாவது:-

    கொரோனா கால விடுமுறைக்கு பின்பு 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருநங்கையர் தின விழா நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து தரப்பு  மக்களுக்கும் பாகுபாடின்றி ஆட்சி செய்து வருகிறது. 

    இந்த ஆண்டு முதல் திருநங்கைகளுக்கு முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். சமூகத்தில் ஒதுக்கப்பட்ட அவர்களை நாம்தான் மதிக்க வேண்டும். அவர்களின் திறமையை வெளிப்படுத்த நாம் உதவி செய்ய வேண்டும். பல துறைகளில் திரு-நங்கைகள் சாதனை படைத்து வருகின்றனர். 

    அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சி பாதுகாப்பாக இருக்கும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    தொடர்ந்து திருநங்கைகளின் பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனம், இசை கச்சேரி, கவிதை வாசித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 

    நிகழ்ச்சிகளை திருநங்கைகளுடன் அமர்ந்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கண்டு ரசித்தார். 

    நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி முதல்வர் சித்ராதேவி, வேலூர் 36-வது வார்டு உறுப்பினர் திருநங்கை கங்கா நாயக், சமூக நலத்துறை இயக்குனர் முத்துமீனா, திட்ட இயக்குனர் சித்ராதேவி, திருநங்கைகள் தலைவி சீத்தல், சட்ட உதவி மைய நீதிபதி சோபனா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×