என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பா.ஜனதா சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா பட்டியலின அணி சார்பில் அம்பேத்கர் 131-வது பிறந்த நாளையொட்டி அக்கட்சியினர் பேரணியாக சென்று சட்டசபை வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். 

    அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் நாளை புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் அவரது பிறந்த நாள் விமரிசையாக  கொண்டாடப்பட்டது. இன்று ராஜா திரையரங்கம் சந்திப்பில் இருந்து புதுவை பா.ஜனதா பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமையில் பேரணி சென்றது.

    பேரணியை புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் செல்வகணபதி எம்.பி., பா.ஜனதா பட்டியல் அணி பொறுப்பாளர் அசோக்பாபு எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்டு, வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், பொதுச்செயலாளர் மோகன்குமார், பா.ஜனதா துணை தலைவர் செல்வம், மாநில செயலாளர் ஜெயகுமார் ரெட்டியார், மூத்த தலைவர் எஸ்.கே.ஜி. கஜேந்திரன் மற்றும் பா.ஜனதா மாநில பொறுப்பாளர்கள், பட்டியலின அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கின்றனர். 

    பேரணி நேரு வீதி வழியாக சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலை சென்றடைந்தது. அங்கு அவரது சிலைக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம், பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அக்கட்சியினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா பட்டியல் அணி சிறப்பு அழைப்பாளர்கள் அருள், சுப்பிரமணி, நாகராஜ், பிரகாஷ், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் ராஜாராம், பொதுச்செயலாளர் காத்தவராயன், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜகுரு, பொதுச்செயலாளர் வெற்றிவேல், ராமு, வில்லிய-னூர் மாவட்ட தலைவர் வின்னரசன், நிர்வாகிகள் சரவணன், வீரப்பன், வில்லியனூர் காமாட்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல் புதுவையில் மண்டல வாரியாக அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ஏழை எளிய மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    பீஸ்ட் திரைப்பட டிரைலர் ஒளிபரப்பிய தனியார் பள்ளி மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவை அரசு கல்வித்துறை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி வரை பள்ளிகள் இயங்காது என அறிவித்துள்ளது. ஆனால் உப்பளத்தில் உள்ள தனியார் பள்ளி கட்டாயம் இயங்கும் பெற்றோர்கள் சந்திப்பு உள்ளது என கூறுகின்றனர். 

    அரசு கல்வித்துறை ஒரு அறிவிப்பு வெளியிடுகிறது ஆனால் இவர்கள் பள்ளியை நடத்துகின்றனர். பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை இந்த பள்ளியின் வகுப்பறைகளில் மாணவர்களிடையே ஒளிபரப்பியுள்ளனர். இது பள்ளியா அல்லது சினிமா தியேட்டரா? கல்வித்துறை தனியார் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேசிய ஜனநயாக கூட்டணி ஆட்சியில் முதல்-அமைச்சர் அட்டவணை இனத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவித்து பல கோடி ரூபாய் அரசு செலுத்தி வருகிறது. அரசின் கட்டணம் கால தாமதாமதமானால் பெற்றோர்களை கல்வி கட்டணம் செலுத்துமாறு தனியார் பள்ளிகள் துன்புறுத்துகின்றனர். 

    சில பள்ளிகளில் இருதரப்பில் இருந்தும் கட்டணம் வசூலிக்கின்றனர். அதனை பெற்றோர்களிடம் திருப்பி தருவதில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பிள்ளைகளை துன்புறுத்துவதை பள்ளி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். கல்வித்துறை இயக்குநர் இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.
    உள்துறை மந்திரி வருகை பயனுள்ளதாக இருக்கும் என்று கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா கொண்டாடி வருகிறோம். வருகிற 24-ந் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை  மந்திரி அமித்ஷா வர உள்ளார். 

    அவரது வருகை புதுவைக்கு ஆக்கப்பூர்வ மானதாக இருக்கும். இந்தி மொழி குறித்த உள்துறை மந்திரியின் கருத்து  தவறாக முன்னெடுத்து செல்லப்படுகிறது. 

    எல்லோரும் தாய்மொழி பற்றோடு இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. தமிழ்மொழி போன்ற அனைத்து தாய்மொழிகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் கூறியிருப்பதாகத்தான் நான்  நினைக்கிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    புதுவையில் சுற்றுலா விடுதி கட்ட அரசு உதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை திருவிழா தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில்  முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:--

    புதுவையில் 26 கி.மீ. தொலைவிற்கு மணற்பாங்கான கடற்கரை உள்ளது. சுற்றுலா பயணிகள் நகர பகுதியில் உள்ள கடற்கரை சாலையில் குவிந்து வருகின்றனர். 

    மக்கள் அதிகம் கூடும் கடற்கரையை விரிவு-படுத்துவது அரசின் கடமை. எனவே கடற்கரை சாலையில், வடக்கு பகுதியில் கடற்கரை நீளத்தை அரியாங்குப்பம், வீராம்-பட்டிணம் வரை சாலை, பாலம் அமைத்து நீட்டிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. 

    ஆன்மிக பூமியான புதுவையில் மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர் கோவில், கீழூர் உள்ளிட்ட வரலாற்று பெருமைமிக்க இடங்கள் உள்ளன. 

    இவற்றைகாணும் வகையில் இயக்கப்பட்ட பஸ்கள் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டன. லண்டனில் நகரங்களை சுற்றிப்பார்க்க பஸ்கள் இயக்கப்படுகிறது. 

    அதுபோல புதுவையில் பஸ்களை இயக்கி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கலாம் என கவர்னர் ஆலோசனை தெரிவித்தார். 

    அனைத்து இடங்களையும் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்கும் வகையில் பஸ்களை இயக்க அரசு நிச்சயம் ஏற்பாடு செய்யும். 

    சுற்றுலா பயணிகள் வந்து, தங்கி செல்வதற்கு வசதியாக தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ரூ.ஒரு கோடி அரசு மானியம் அளித்தது. 

    தற்போது கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப் படுவதால், தங்கும் விடுதிகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் விரும்புகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவியை அரசு செய்து கொடுக்கும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    குறைந்த மின் அழுத்த புகாரில் சோலைநகரில் பழைய மின் கம்பிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து தி.மு.க.வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை சோலை நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட  வீடுகளில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டது.

    இதனால் அந்த பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இதனை சீரமைத்து தருமாறு தி.மு.க. பொது மக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபுவிடம் சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து தி.மு.க. நிர்வாகி மதன்பாபு மின்துறை அதிகாரிகளை நேரில் புகார் செய்தார். புகாரையடுத்து அந்த பகுதியில் உள்ள பழைய மின் கம்பிகள் அகற்றப்பட்டு புதிய மின் கம்பிகள் மாற்றப்பட்டன இதனால் குறைந்த மின் அழுத்தம் சீரமைக்-கப்பட்டது.

    மின் துறை அதிகாரிகளுக்கு மதன்பாபு தலைமையில் தொகுதி செயலாளர் சவுரிராஜன், முன்னாள் கவுன்சிலர் ரவி, பார்த்திபன், ஸ்ரீகாந்த், கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.  மேலும் தி.மு.க.வினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
    குருவி நத்தத்தில் பாண்லே பாலகத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    புதுச்சேரி:

    குருவிநத்தம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், குருவிநத்தம் தூக்கு பாலம் சந்திப்பில், புதியதாக பாண்லே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பால் வள அபிவிருத்தி அதிகாரி டாக்டர் குமரன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி பாலகத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் தவமுருகன், பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    முன்னதாக குருவிநத்தம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் நாராயணமூர்த்தி வரவேற்றார். இயக்குனர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், குருவிநத்தம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க இயக்குனர்கள் அரிக்-கிருஷ்ணன், பாலசுப்பிர-மணியன், அழகம்மாள், பரிபூரணம், தனலட்சுமி, குப்புசாமி, சந்தானம் மற்றும் உறுப்பினர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க புதுவையில் 4 இடங்களில் கடற்கரை திருவிழா நடக்கிறது. இதனை கவர்னர் தமிழிசை தொடங்கி வைக்கிறார்.
    புதுச்சேரி:
     
    புதுவை வார இறுதி நாட்களில் சுற்றுலா நகரமாக மாறி வருகிறது. புதுவை அரசு நாள்தோறும் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் நடந்து சென்று கடல் அழகை ரசித்து வந்தனர்.

    கடலில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல்பரப்பு உருவாக்கப்பட்டது. இந்த மணல்பரப்பு சீகல்ஸ் வரை நீண்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். 

    இதனால் புதுவையில் பல்வேறு கடற்கரைகள் அரசால் மேம்படுத்தப்பட்டது. சுற்றுலாத்துறையின் சார்பில் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள பாண்டி மெரீனா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை ஆகியவை மேம்படுத்தப்பட்டன. 

    இவற்றை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை முதல் முறையாக கடற்கரை திருவிழாவை சுற்றுலாத்துறை நடத்துகிறது. இந்த 4 நாட்களிலும் காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரீனா, சுண்ணாம்பாறு பேரடைஸ் கடற்கரை, காந்தி திடல் கைவினை அரங்கு ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 

    சுற்றுலா பயணிகள் பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும் தமிழ் புத்தாண்டையொட்டி கடற்கரை திருவிழாவை மேலும் விமரிசையாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

    தமிழ் புத்தாண்டையொட்டி நாளை முதல் 17-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வரதொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கடற்கரை திருவிழாவை அறிவிக்கும் வகையில் முக்கிய சந்திப்புகளில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

    கடற்கரை திருவிழாவுக்கு வரும் மக்கள் வாகனங்களை பழைய துறைமுகத்தில் நிறுத்த வேண்டும். புஸ்சி வீதி சட்டக்கல்லூரி சந்திப்பில் இருந்து கடற்கரை சாலை வரை எந்த வாகனங்களையும் நிறுத்தக்கூடாது. 

    பாரதி பூங்கா நுழைவு வாயில், ரோமண்ட் ரோலண்ட் வீதியிலும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என போக்குவரத்து எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளார். கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை திருவிழாவில் லேகபே அருகில் படகோட்டி பாடல் மாலை 6 முதல் 6.30 மணி வரை நடக்கிறது. 

    கவர்னர் தமிழிசை கடற்கரை திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.  7 முதல் 10 மணி வரை பாண்டி மெரீனாவில் கர்நாடக சங்கீதம், தப்பாட்டம், ஜிம்னாஸ்டிக் நடக்கிறது. காந்தி சதுக்கம் கைவினை அங்காடியில் 7 முதல் 9.30 மணி வரை கடல் உணவு விருந்து நடக்கிறது.
    புதுவை கோரிமேட்டில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை ஞானப்பிரகாசம் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு லோகேஸ்வரி (21) உள்பட 2 மகள்கள் உள்ளனர். லோகேஸ்வரி தாகூர் தனியார் கல்லூரியில் பி.எ. பிலாசபி 3ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் லோகேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது காதலனுடன் செல்போனில் பேசியதை கோவிந்தராஜன் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் படித்து முடித்த உடன் அவருக்கே திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். 

    கோவிந்தராஜின் சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக தனது மனைவியுடன் சென்றார். இதனால் 2 மகள்கள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். சம்பவத்தன்று மதியம் லோகேஸ்வரியின் தங்கை உணவு வாங்குவதற்காக வெளியே சென்றார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென லோகேஸ்வரி சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார். 

    உணவு வாங்கி விட்டு வீட்டுக்கு வந்த அவரது தங்கை இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தூக்கிலிருந்து லோகேஸ்வரியை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த லோகேஸ்வரி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பறிதாபமாக இறந்து போனார்.

    பின்னர் இதுகுறித்து கோவிந்தராஜன் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 
    பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தேர்வுக்கு குறுகிய காலமே இருந்ததால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. வழக்கமாக மார்ச்சில் நடைபெறும் பொதுத்தேர்வு மே மாதம் தள்ளி வைக்கப்பட்டது. வருகிற மே 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை பிளஸ்-2 தேர்வுகள் நடக்கிறது.  பிளஸ்1  மாணவர்களுக்கு மே 10ந்தேதி தொடங்கி 31-ந்தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதியும் தேர்வுகள் முடிவடைகிறது. 

    இவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் 25ந்தேதி முதல் மே 2-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் 2 ஆண்டுக்கு பிறகு நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 7 ஆயிரத்து 660 மாணவிகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 647 பேர் பங்கேற்கின்றனர். இதில் 6 ஆயிரத்து 371 பேர் அரசு பள்ளி மாணவர்கள்.  

    பிளஸ்-1 பொதுத்தேர்வை 7 ஆயரத்து 831 மாணவிகள் உட்பட 15 ஆயிரத்து 174 பேரும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 64 மாணவர்கள் உட்பட 16 ஆயிரத்து 831 பேர் எழுத உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 2 ஆண்டாக ஆல் பாஸ் முறையில் தேர்ச்சி பெற்று  வந்து, முதல் முறையாக பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
    திருக்கனூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர்.
    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூரில் உள்ள விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் வேளாண் பொருட்களுக்கு 10, 15 நாட்கள் கழித்து பணம் பட்டுவாடா செய்வதாகவும், இதனால் விவசாயிகள் அலைகழிக்கப்படுவதாக புகார் இருந்து வந்தது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்களை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறப்படுகிறது. இதனை கண்டித்து பா.ம.க.வினர் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் மாநில துணை அமைப்பாளர் வடிவேல், மதியழகன், சீதாராமன், மணிபால், ஊசுடு முருகன், தொழிற்சங்க தலைவர் சிவா, செயலாளர்கள் வேல்முருகன், பாண்டித்துரை, கிருஷ்ணதேவன், தொழிற்சங்க துணை செயலாளர்கள் அச்சுதன், மாநில வன்னியர் சங்க செயலாளர் நாகப்பன், தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணி, மண்ணாடிப்பட்டு தொகுதி தலைவர் ஏழுமலை, செயலாளர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை 100 அடி சாலை ரெயில்வே கேட் அருகே  முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு தலை, கை துண்டாகி இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் கஸ்தூரிபாய் நகர் ஜீவானந்த வீதியை சேர்ந்த மதியழகன் (வயது 58) என்பதும் மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. 

    மேலும் வேலைக்கு செல்வதற்காக சென்றபோது தனது பையை ரெயில்வே தண்டவாளம் அருகே வைத்து விட்டு சென்னையிலிருந்து புதுவை வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மதியழகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

    இறந்து போன மதியழகனுக்கு குளோரியா (55) என்ற மனைவியும், ஷாலினி (21) என்ற மகளும் உள்ளனர். ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுவைக்கு வேலைக்கு வந்த கூலி தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
    புதுச்சேரி:

    விருத்தாசலம் கோ.ஆதனூர் காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது60. கூலி தொழிலாளி. இவரது மகன் பாலமுருகன்(23). கூலி தொழிலாளி.

    இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த பாலமுருகனிக் நண்பரான பூபாலனுடன் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வேலைக்காக சென்றார். அங்கிருந்த ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்று-கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பாலமுருகன் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உதவியுடன் பாலமுருகனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்-திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையறிந்த ராமலிங்கம் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாஸ்பேட்டை வள்ளலார்நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி எழிலரசி. இவர்களுடன் எழிலரசியின் தாய் தேவகி(67) வசித்து வந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தேவகி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். 

    இந்த நிலையில்  மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை அலுவலகம் முன்பு தேவகி திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனையறிந்த எழிலரசி தனது கணவருடன் அங்கு சென்று தாய் தேவகியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து எழிலரசி உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×