என் மலர்
புதுச்சேரி
- கருணாநிதி பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
- கருணாநிதி பிறந்தநாளை யொட்டி உப்பளம் தொகுதி தி.மு.க. சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்.
புதுச்சேரி:
கருணாநிதி பிறந்தநாளை யொட்டி உப்பளம் தொகுதி தி.மு.க. சார்பில் இலவச பொது மருத்துவ முகாம். ஏனம் வெங்கடாசலம் பிள்ளை வீதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் முகாம் நடைபெற்றது.
முகாமில் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, நீரிழிவு நோய், மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை, மூட்டுவலி, தசைபிடிப்பு, முதுகுவலி, எலும்பு தேய்மானம் போன்ற பரி சோதனைகளும் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப் பட்டது. மேலும் கண்பார்வை குறைபாடுகளும் கண்ணில் பூ விழுதல், மாலை கண் போன்ற பொது மருத்துவ சிகிச்சைகளும், பரிசோதனை களும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்தி வேல் அவை தலைவர் ரவி, இருதயராஜ், தேவா, பாலாஜி, லாரன்ஸ், மோரீஸ், ரகுமான், சித்தார் த்தன், ரத்தினம், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தி.மு.க. பிரமுகர்கள் அஷ்ரப், நாசர், நோயல், நிசார், ஆகியோர் செய்து இருந்தனர்.
- புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
- மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகரை சந்தித்தபோது, புதுவை பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
அவர்கள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகரை சந்தித்தபோது, புதுவை பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். புதுவை மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மத்திய மந்திரி எல்.முருகனை சந்தித்து, புதுவை வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும்படி வலியுறுத்தினர். சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்மாண்ட்வியாவை சந்தித்து, புதுவை சுகாதார திட்டங்கள் குறித்து பேசினர். ஜிப்மர் இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். ஜிப்மரில் தட்டுப்பாடின்றி மருந்து கிடைக்க வழி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா மாநில பொருளாதார பிரிவு அமைப்பாளர் ரமேஷ், ஆடலரசன், வக்கீல் கார்த்திக், திரைப்பட இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
- ஆரோவில் சர்வதேச நகரத்தில் மெகா தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
- புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கலால் வரி ஆணையரகம் ஆரோவில் பவுண்டேசன் இணைந்து இன்று ஆரோவில் நகரம் முழுவதும் மெகா தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கியது.
புதுச்சேரி:
ஆரோவில் சர்வதேச நகரத்தில் தூய்மை படுத்துதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கலால் வரி ஆணையரகம் ஆரோவில் பவுண்டேசன் இணைந்து இன்று ஆரோவில் நகரம் முழுவதும் மெகா தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கலால் வரி ஆணையர் பத்மஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இந்த தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், டாக்டர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
- மகாராஷ்டிரத்தில் நடந்த நினைவாற்றல் போட்டியில் 7 தங்க வென்று சாதனை படைத்த புதுவை கல்லூரி மாணவரை அசோக்பாபு எம்.எல்.ஏ. பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்
- மகாராஷ்டிரா மாநிலத்தில் உலக மனித முன்னேற்ற நிலையம் சார்பில் நினைவாற்றல் போட்டி நடந்தது.
புதுச்சேரி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உலக மனித முன்னேற்ற நிலையம் சார்பில் நினைவாற்றல் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் புதுவை மாநிலத்தின் சார்பில் கல்லூரி மாணவர் விஷ்வா ராஜகுமார் பங்கேற்றார். அவர் 7 புள்ளிகளில் முதலிடம் பிடித்து 7 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
இதையடுத்து புதுவை மாநிலத்துக்கு சிறப்பு சேர்த்த கல்லூரி மாணவர் விஷ்வா ராஜகுமார் அசோக் பாபு எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியின் போது பா.ஜனதா நகர மாவட்ட துணைத்தலைவர் குமார், விஜயரங்கம், நகர மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யனாரப்பன், முதலியார்பேட்டை தொகுதி நிர்வாகிகள் வெங்கடேசன், பன்னீர்செல்வம், பாபு, முருகன், அஜித், ஆனந்த், ரஞ்சித், கார்த்திக் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- திருக்கனூர் அருகே தந்தையை தாக்கி கொலை மிரட்டல்
- 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருகிறீர்கள் என கேட்டார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலி தொழிலாளி. இவருக்கு சங்கர், பாஸ்கர் மற்றும் பிரபு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இவர்களில் சங்கர், பாஸ்கர் ஆகியோர் தனது தந்தை சுப்பிரமணியிடமும் , தாயிடமும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சங்கரும், பாஸ்கரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தனர். இதனை பார்த்த சுப்பிரமணி அவர்களை பார்த்து என்ன 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருகிறீர்கள் என கேட்டார்.
அப்போது சங்கரும், பாஸ்கரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி சுப்பிரமணியை தாக்கினர். இதனால் வலி தாங்காமல் சுப்பிரமணி பக்கத்து வீட்டை சேர்ந்த சிங்காரம் என்பவரின் வீட்டில் தஞ்சம் புக முயன்றார்.
அப்போது பாஸ்கர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து சுப்பிரமணியை பார்த்து இரவோடு நீயும், உனது மனைவியும் வீட்டை காலி செய்து சென்று விடுங்கள். இல்லையென்றால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சங்கரும், பாஸ்கரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த தகவல் அறிந்த இளைய மகன் பிரபு விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த சுப்பிரமணியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தார்.
பின்னர் இதுகுறித்து சுப்பிரமணி காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டேரிக்குப்பம் அருகே சந்தைபுதுக்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(46). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழ் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கண்ணன் தனது நண்பர் பாலமுருகனை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த தமிழ் ஏற்கனவே இருந்த முன் விரோதத்தை வைத்து கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு கிடந்த தடியாலும், கல்லாலும் தாக்கினார்.
மேலும் இதனை போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
இதுகுறித்து கண்ணன் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை வம்பாகீரப்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் செல்வம்.
- இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், ரூபினா என்ற மகளும் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் செல்வம். மீனவர். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், ரூபினா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.
விஜயகுமாரி புதுவை பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக செல்வம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் இதற்காக எந்த மருத்துவமும் எடுத்துகொள்ளவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக செல்வம் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் உடல்நிலை பாதிப்பால் செல்வம் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. விஜயகுமாரி வழக்கம் போல் பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரத்துக்கு சென்றார். மதியம் வியாபாரம் முடிந்து விஜயகுமாரி வீடு திரும்பிய போது வீட்டில் மின் விசிறியில் கணவர் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விஜயகுமாரி கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்திராணி செவிலியர் கல்லூரியில் போலியோ விழிப்புணர்வு முகாம்
- போலியோ விழிப்புணர்வு முகாம் ரோட்டராக் சங்கத்துடன் இணைந்து நடைபெற்றது.
புதுச்சேரி:
அரியூர் வெங்கடேஷ்வரா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கிவரும் இந்திராணி செவிலியர் கல்லூரியில் போலியோ விழிப்புணர்வு முகாம் ரோட்டராக் சங்கத்துடன் இணைந்து நடைபெற்றது.
இக்குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன், முதன்மை இயக்குனர் டாக்டர். வித்யா, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர். மல்லிகா தலைமை தாங்கினர். துணை முதல்வர் டாக்டர். ராஜேஸ்வரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கத்தின் தலைவர் முகுந்தமாலா போலியோ விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார், மற்றும் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்களான அருவி முகுந்தன், பூவிழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்லூரியின், இணை பேராசிரியர் கல்பனா இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பு செய்தார். முடிவில் சவுரிராஜன் நன்றி கூறினார்.
- உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டது.
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கிளப் மகேந்திரா நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை சீனியர் செயற்பொறியாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், ராஜமாணிக்கம், கிளப் மகேந்திரா நிறுவன பொதுமேலாளர் மோகன்ராஜ், மனிதவள மேலாளர் பிரபு, தலைமை சமையல் கலைஞர் பாஸ்கர் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.
- கரையாம்புத்தூரில்ஆழ்துளை கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- கரையாம்புத்தூர் வண்ணான் குளம் அருகில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான வாகனம் கொண்டுவரப்பட்டு ஏற்பாடுகள் கடந்த மாதம் நடைபெற இருந்தது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு 5கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுவை அரசு பொதுப்பணித்துறை மூலம், நகர பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக, நெட்டப்பாக்கம் தொகுதி கரையாம்புத்தூர் வண்ணான் குளம் அருகில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான வாகனம் கொண்டுவரப்பட்டு ஏற்பாடுகள் கடந்த மாதம் நடைபெற இருந்தது.
இதற்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் குடிநீர் திட்டம் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த மாதம் 30-ந் தேதி புதுவையில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரையாம்புத்தூர், பனையடி குப்பம், மணமேடு, சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் குடிநீர் கொண்டு செல்வதற்க்கு கிராம மக்கள் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று 5கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், குடிநீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அரசு ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தை கைவிட வில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கரையாம்புத்தூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்வ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இக்கோவிலின் 36-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா திருமஞ்சனத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை காந்தி வீதியில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் 36-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா திருமஞ்சனத்துடன் தொடங்கியது.
விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கொடியேற்றம் நடந்தது. 7 மணிக்கு ஹம்சவாகன புறப்பாடு நடக்கிறது.
(செவ்வாய்க்கிழமை) சூர்யபிரபை 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7.30 மணிக்கு தங்க சிம்ம வாகன புறப்பாடு நடக்கிறது. 8-ந் தேதி யாளி வாகனம், 10 மணிக்கு திருமஞ்சனம், 7.30 மணிக்கு ஹனுமந்த வாகன புறப்பாடு நடக்கிறது.
9-ந் தேதி பல்லக்கு ஸ்ரீவேணுகோபாலர் திருக்கோலம், 10 மணிக்கு திருமஞ்சனம், 7.30 மணிக்கு சேஷவாகன புறப்பாடு நடக்கிறது. 10-ந் தேதி பல்லக்கு மோகன அவதாரம், இரவு தங்க கருட சேவை நடக்கிறது. 11-ந் தேதி பல்லக்கு, இரவு தங்க யானை வாகனம், 12-ந் தேதி மாலை 4 மணிக்கு சூர்ணோத்சவம், இரவு இந்திரவிமானம் புறப்பாடு நடக்கிறது.
13-ந் தேதி வெண்ணெய்தாழி திருக்கோலம், இரவு குதிரை வாகனம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 15-ந் தேதி 108 கலச திருமஞ்சனம், மாலை சந்திரபிரபை, வீதி புறப்பாடு நடக்கிறது.
16-ந் தேதி தெப்போ ற்சவம், 17-ந் தேதி முத்துவிமானம், 18-ந் தேதி புஷ்பபிரபை, 19-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 20-ந் தேதி பானகபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலர் வாரியத்தினர் பக்தர்கள் சபையினர் செய்து வருகின்றனர்.
- ஜிப்மர் டாக்டர் மர்மான முறையில் இறந்து போனார்.
- இந்த நிலையில் வினித் அகர்வால் தங்கியிருந்த வீட்டின் கதவு டமார் டமார் என மோதும் சத்தம் வந்தது.
புதுச்சேரி:
மேற்கு வங்கம் ஜனத்பூர் பகுதியை சேர்ந்தவர் வினித் அகர்வால்(வயது29). ஜிப்மர் டாக்டரான இவர் கதிர்காமம் ஆனந்தாநகர் கல்யாணசுந்தர் வீதியில் சிவமணி என்பவர் வீட்டின் 2-வது மாடியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு தங்கி பணிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் வினித் அகர்வால் தங்கியிருந்த வீட்டின் கதவு டமார் டமார் என மோதும் சத்தம் வந்தது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் சிவமணி வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார்.
அப்போது மாடி படிக்கட்டில் தலையில் பலத்த காயத்துடன் வினித் அகர்வால் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வினித் அகர்வாலை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வினித் அகர்வால் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து போனார்.
மன அழுத்தம் காரணமாக டாக்டர் வினித் அகர்வால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மாடியில் இருந்து கீழே குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்து போனாரா? என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சிவமணி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுபற்றி டாக்டர் வினித் அகர்வாலின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளனர்.
- சென்னையில் இருந்து வரும் சொகுசு கப்பலுக்கு புதுவை அரசின் அனுமதி இல்லை என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
- புதுவை என்.சி.சி. தலைமையகத்தின் சார்பில் என்.சி.சி மாணவ, மாணவி களின் கடல்சாகச பயணம் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை என்.சி.சி. தலைமையகத்தின் சார்பில் என்.சி.சி மாணவ, மாணவி களின் கடல்சாகச பயணம் தொடங்கியது.
புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 35 மாணவர்கள், 25 மாணவிகள் கடல்வழியாக காரைக்காலுக்கு சென்று திரும்புகின்றனர். கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக பாய்மர படகில் மாணவர்கள் பயணிக்க உள்ளனர்.
சாகச பயணத்தில் ஈடுபடும் மாணவிகள் செல்லும் இடங்களில் ரத்ததானம், கடற்கரை சுத்தம், மரம் நடுதல், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இந்த பாய்மர கடல்சாகச பயணத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களின் பயணத்தை கவர்னர் தமிழிசை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
மாணவிகள் இந்த பயணத்தில் பங்கேற்பது மிகவும் சவாலானது. இந்த பயணம் அவர்களுக்கு ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும். இதற்காக ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பயிற்சியளித்த, பயணத்தை ஏற்பாடு செய்த என்.சி.சி. அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
75-ம் ஆண்டு சுதந்திர ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களோடு படகு பயணத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளேன். புதுவையில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக இந்த பிளாஸ்டிக் பொருட்களை அப்பறப்படுத்தி வருகிறோம்.
உலக சுற்றுச்சூழல் கொண்டாடும் வேளையில் பிளாஸ்டிக் இல்லாத உலகமே வரும்கால சந்ததிக்கு நாம் அளிக்கும் பரிசாக இருக்கும். இந்த மாணவர்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
துறைமுக வளாகத்துக்கு வந்த போது மீனவர்கள், முகத்துவாரம் தூர்வாரப்படவில்லை என கூறினர். இதுகுறித்து முதல்-அமைச்சர், அமைச்சர், அதிகாரிகளோடு கலந்துபேசி தேவையான நடவடிக்கை எடுப்போம். மீனவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காரைக்கால் அம்மையார் கோவில் விழாவில் பங்கேற்க செல்ல உள்ளேன். அப்போது
அரசு மருத்துவமனை, வளர்ச்சி திட்டங்களை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளேன். காரைக்கால் எந்த வகையிலும் புறக்கணிக்கப்படாது.
ஏற்கனவே காரைக்கால் மாவட்ட அதிகாரிகளை அழைத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்துள்ளேன். அவற்றினை தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ளேன். கொரோனா 2-வது அலையின்போது புதுவையில் கவர்னர் ஆட்சி இருந்தது. அப்போது புதுவை மாடல் என உருவாகும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம்.
இதனால் கொரோனா 2-வது அலையை முற்றிலுமாக தடுக்க முடிந்தது. தொடர்ந்து கொரோனா பரவலை கண்காணித்து வருகிறோம். புதிதாக வைரஸ் இருப்பதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்டால் தேவையான படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. கொரோனாவை தடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு உள்ளோம்.
தமிழகத்திலிருந்து புதுவைக்கு வரும் சொகுசு கப்பலுக்கு புதுவை அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை. அதுதொடர்பான எந்த கோப்பும் என்னிடம் வரவில்லை. சொகுசு கப்பல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.
சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அதேநேரத்தில் வருமானம் வரும் என்பதற்காக இளைஞர்களையோ, மக்களையோ பாதிக்கும் கலாச்சார சீர்கேடான சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






