என் மலர்
புதுச்சேரி
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுச்சேரி:
பாகூர் சட்டமன்ற அலுவலகத்தில் புதுவை அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பாகூர் தொகுதியைச் சார்ந்த பாகூர் கிழக்கு, மேற்கு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு.
சோரியங்குப்பம், மதிகிருஷ்ணாபுரம், மணப்பட்டு, புதுக்குப்பம் ஆகிய 8 பஞ்சாயத்துக்களின் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கி கடன் உதவி வழங்கினார். இந்த திட்டத்தில் 8 கிராம பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகளின் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சமுதாய முதலீட்டுக் கடன், நலிவுற்றோர் குறைப்பு நிதிக் கடன், வங்கிகடன் என ரூ 40 லட்சம் அளவிலான நிதி இணைப்புகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கூட்டமைப்பின் நிர்வாகிகள், பணியாளர்கள், பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகளின் நிர்வாகிகள், பணியாளர்கள், மகளிர் உதவிக்குழு சுய உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
- நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த 12 மணி நேர வேலை மசோதா உதவி புரியும்.
- பணி புரியும் நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கிறதே தவிர ஊழியர்களின் ஒட்டுமொத்த பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை.
புதுச்சேரி:
12 மணி நேர வேலை மசோதாவை தொழிலாளர்கள் ஒப்புதலுடன் மாற்றம் செய்ய வேண்டும் என்று புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
12 மணி நேர வேலைத்திட்டத்திற்கு ஆதரவான என்னுடைய கருத்து தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. தொழிலாளர் நலனையும் தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே நான் இந்த மசோதாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறேன்.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த 12 மணி நேர வேலை மசோதா உதவி புரியும். 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு விட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
தொழிலாளர்களின் ஒப்புதலோடு இதுபோன்ற மாற்றங்களை படிப்படியாக கொண்டு வர வேண்டும். அதையும் தாண்டி மாற்றுக் கருத்து இருந்தால் அவற்றை ஆராய்ந்து அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசுகள் நடந்து கொள்ள வேண்டும்.
பணி புரியும் நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கிறதே தவிர ஊழியர்களின் ஒட்டுமொத்த பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை. 6 நாட்களில் 8 மணி நேர பணியில் மொத்தம் 48 மணி நேரம் உழைக்கும் தொழிலாளர்கள் 12 மணி நேர வேலையில் அதனை 4 நாட்களில் செய்து முடிக்கலாம்.
மீதமுள்ள 3 நாட்கள் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு, உறவுகளோடு ஓய்வெடுத்து உளவியல் ரீதியாக புதுதெம்பு பெற்று அடுத்தகட்ட பணியில் ஈடுபட முடியும்.
ஆக்கபூர்வமான பல செயல்பாடுகளில், பணிகளில் ஈடுபடுவதற்கு இது உதவியாக இருக்கும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களின் மூலமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எந்தவிதமான சலுகைகளும் பறிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ மாட்டாது என்பதை உணர்ந்தே என்னுடைய கருத்துகளை பொதுவெளியில் முன்வைக்கிறேன்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
- புதுவையில் இரவில் பாடல், நடனத்துடன் கூடிய நடன மதுபார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுவையில் இரவில் பாடல், நடனத்துடன் கூடிய நடன மதுபார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். நடன மதுபார்களில் இரவு 10 மணிக்கு மேல் சவுண்ட் சிஸ்டம் பயன் படுத்தக்கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெரிய கடை உதவி சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இரவு 11.45 மணிக்கு மேல் மிஷன் வீதியில் உள்ள ஓட்டலில் 5-வது மாடியில் இயங்கிய நடன மது பாரில் அதிக சத்தம் எழுப்பப்பட்டது. போலீசார் அங்கு சென்று எச்சரித்தனர். ஆனால் நடன மதுபார் பொறுப்பாளர் போலீசாரை வெளியேறும்படி கூறினார்.
இதையடுத்து நடனமது பாரில் இருந்த மைக் ஸ்டாண்டர், கேபிள் உட்பட ஒலிபரப்பு சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பொறுப்பாளர் மீது அதிக ஒலி எழுப்புதல் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இன்றைய சூழலில் பெரும் அச்சுறுத்தலாக மலேரியா நோய் விளங்கி வருகிறது
- புதுவை சுகாதாரத்துறை இந்தியா விலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி உன்னதமான மருத்துவ சேவை ஆற்றி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக நாடுகள் அனைத்திற்கும் இன்றைய சூழலில் பெரும் அச்சுறுத்தலாக மலேரியா நோய் விளங்கி வருகிறது. புதுவையில் மூளையை தாக்கும் மலேரியா மிக குறைந்த அளவில் புதுவையில் தொற்று ஏற்படுகிறது. புதுவை சுகாதாரத்துறை இந்தியா விலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி உன்னதமான மருத்துவ சேவை ஆற்றி வருகிறது.
2021-ம் ஆண்டு 5 பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டனர். அதன்பின் ஒரு மலேரியா தொற்று கூட உறுதி செய்யப்படவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, இந்திய அரசு நிர்ணயித்த மலேரியா இல்லாத புதுவை என்ற இலக்கை எட்டும் நிலையில் உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
வீடுகளுக்கு உள்ளே தண்ணீர் தேங்கும் நீர் நிலைகளை சுத்தம் செய்து பராமரிப்பதன் மூலம் கொசு உற்பத்தியை முற்றிலும் கட்டுப்படுத்தி மலேரியா நோயிலிருந்து நம்மை காப்போம் என உறுதிமொழி ஏற்போம். மலேரியா இல்லாத புதுவையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நாராயணசாமி ஆவேசம்.
- மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை புறக்கணித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மீனவர் காங்கிரஸ் நிர்வாகி கள் காங்கேயன், பாஸ்கர் தலைமை வகித்தனர். மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, எம்.பி வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மீனவர்கள் வாழும் இடத்தையும், வாழ்வா தாரத்தையும் கைப்பற்ற நினைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மீனவர் களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி பேசியதாவது:-
2014-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தல் காங்கிரஸ் அறிக்கையில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என வாக்குறுதி அளித்தோம். ஆனால் ஆட்சிக்கு வரமுடிய வில்லை. ஆட்சிக்கு வந்த பா.ஜனதா தனி அமைச்சகம் அமைத்தது. ஆனால் தனி அமைச்சர் நியமிக்கவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்தோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை புறக்கணித்து வருகிறது.
கடலில் இருந்து 500 மீட்டர் வரையிலான பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக நாங்கள் அறிவித்தோம். இப்போது அதை 50 மீட்டராக மத்திய அரசு குறைத்துள்ளது. மீனவர்களின் வாழ்வி டங்களை சுற்றுலா என்ற பெயரில் மத்திய அரசு கபளீகரம் செய்து வருகிறது.
புதுவையில் மீனவர்களுக்கு சொந்தமான கோவில் நில அபகரிப்புக்கு எம்.எல்.ஏ.க்களே ஆதரவாக உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கி னோம். ஆனால் அவர் காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சியிலிருந்து வெளியேறினார். நடுத்தெருவில் நிற்பார்கள் என ஏற்கனவே சொல்லி யுள்ளேன். மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாமில் முதல்- அமைச்சரை போட்டியிட செய்து தோல்வியடைய வைத்தார்.
அன்று நான் சொன்னது போல காங்கிரசிலிருந்து வெளியே றிய ஒரு சிலரை தவிர மற்ற வர்கள் நடு ரோட்டில்தான் நிற்கின்றனர். சுய நலத்துக்காகவும், பதவிக்காகவும் உங்கள் சமுதாயத்தை தேடி சிலர் வருவார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுகக்குங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பொது சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும்
- வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் தினமான மே 1-ந் தேதி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 11 கிராம பஞ்சாயத்துகளிலும் காலை 10 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கிராம சபை கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும். வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.மேலும், அரசால் பல்வேறு துறைகளில் மூல மாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து ரைக்கவும், பொதுமக்க ளுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும், இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேடை அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார்
- புதுவை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
திருவள்ளுர் மாவட்டம் திருவெற்றியூர் காலடிப்பேட்டை சாத்தான்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன்.
இவரது மகன் ஹரிகரன் (வயது 24) மேடை அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக கண்ணன் குடும்பத்துடன் கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அதிகாலை ஹரிகரன் தனது மோட்டார் சைக்கிளில் அவருடைய நண்பர் சுந்தராஜீலு (வயது 25) என்பவருடன் புதுவை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அரியாங்குப்பம் புதிய பாலம் அருகே வந்த போது ஹரிகரன் மோட்டார் சைக்கிள் பாலத்தின் நடு தடுப்பு கட்டையில் மோதியது.
இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி ஹரிகரன் உயிரிழந்தார், சுந்தராஜிலு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தெற்கு பிரிவு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
- இசை நிகழ்ச்சி நடக்கிறது
புதுச்சேரி:
புதுவையை அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இன்று மாலை 7.30 மணிக்கு மிருத்ஸங்கிர ஹணம் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.7 மணிக்கு சாமி பல்லக்கில் வீதி புறப்பாடு நடக்கிறது.
நாளை மாலை பரதநாட்டியம், இசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நாள்தோறும் காலையில் சுவாமி பல்லக்கில் புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனத்தில் புறப்பாடும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட் டம் வரும் மே 4-ந்தேதி நடக்கிறது. மே 7-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம பெருமாள் பக்தர்கள், சிங்கிரிகுடி கிராமவாசிகள், கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
- பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வந்தார்கள்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை பகுதியை சார்ந்த நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகிலுள்ள குறுக்கு வீதியில் 30 வருட காலமாக மழையால் அப்பகுதி பொதுமக்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்தனர். மழைக் காலங்களில் அப்பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிரம்பி விடும். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வந்தார்கள். இதையடுத்து அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். அவர் சட்டமன்ற நிதியின் கீழ் நகராட்சி மூலம் அப்பகுதியில் ப-வடிகால் மற்றும் சாலைகளை மேம்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.
அதன்படி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதிக்கு அருகில் உள்ள குறுக்கு வீதிக்கு ப-வடிவ வாய்க்கால் மற்றும் தற்போதுள்ள சிமெண்ட் சாலையை மேம்படுத்துவதற்கான பூமி பூஜையை ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டுமான பணியினை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்பணியினை தி.மு.க. நிர்வாகிகள் உடன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி துணைப்பொறி யாளர் பிரபாகரன், என்ஜினீயர் சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ் மற்றும் ரவிக்குமார் , ஊர் பொதுமக்கள் சகாயராஜ், வெங்கடேஸ்வரன், கணேசன், நடேசன், சிவக்குமார், முனுசாமி, ஜான், செங்கேணி, சுமதி, தமிழ்செல்வி, வசந்தா , ரகுமான் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்.
- புதுவை மத்திய பல்கலைகழகத்தில் இளநிலை, முதுநிலை, பி.எச்.டி. என 115 படிப்புகள் உள்ளன.
- பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு 10 ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்புகள் உள்ளன.
புதுச்சேரி:
புதுவை மத்திய பல்கலைகழகத்தில் இளநிலை, முதுநிலை, பி.எச்.டி. என 115 படிப்புகள் உள்ளன. பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு 10 ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு கியூட் தேர்வு எழுதினால் மட்டுமே சேர முடியும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 10 படிப்புகளில் மொத்தம் உள்ள 287 இடங்களுக்கு 88 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வேதியியல், இயற்பியல், கம்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதனால் கடுமையான போட்டி உருவாகியுள்ளது. கியூட் தேர்வு மே 21 முதல் 31-ந்தேதி வரை நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
- 12 ஆண்டுக்கு பிறகு முழு பட்ஜெட்டை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
- சட்டசபை கூட்டத்தொடரில் அரசின் முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் 12 ஆண்டுக்கு பிறகு முழு பட்ஜெட்டை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். சட்டசபை கூட்டத்தொடரில் அரசின் முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடவில்லை என எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான வேலை திட்டத்தை வரும் 30-ந் தேதிக்குள் துறை செயலர்களிடம் சமர்பிக்க அனைத்து அரசு துறை தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அனைத்து துறை தலைவர்களும் 2023-24-ம் நிதியாண்டில் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை இரு இணைப்புகளில் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் துறையில் நடத்தப்படும் மாநாடுகள், இலக்குகள் மேம்பாடு செயல் பாடுகள், பணிகள் என அனைத்தும் இருக்கவேண்டும். புதிய திட்டங்கள்,புதிய முயற்சிகள், திட்டங்களை மக்களிடம் சென்றடைய சிறந்த நடைமுறைகள், திட்ட செயல்பாட்டில் புதுமைகளையும் சேர்க்க வேண்டும். திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் நிறைவேற்றப்படும் பணிகள், செலவுகள் குறித்தும் திட்டமிட்டு தனித்தனியே காட்ட வேண்டும்.
வேலை திட்டத்தை இறுதி செய்ய தனி கூட்டம் நடத்தப்படும். இதுகுறித்து அதிகாரிகளின் திறன் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இருக்கும். அனைத்து துறை தலைவர்களும் நடப்பு நிதியாண்டு வேலை திட்டத்தை பூர்த்தி செய்து துறை செயலர்களிடம் வரும் 30-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உலக பூமி தினத்தையொட்டி ஏற்பாடு.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
உலக புவி தினத்தை முன்னிட்டு கிருமாம்பாக்கம் ஏரிக்கரையை சுற்றி பாரத் பசுமை அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி பொது சுகாதார பல் மருத்துவ குழுவினர், இணைந்து கிருமாம்பாக்கம் ஏரியில் மரம் நடும் நிகழ்ச்சியை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்திராகாந்தி பல் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் அருணா ஷர்மா, மற்றும் முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக புதுவை சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக பொது சுகாதார துறை சமுதாய பல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் செந்தில், பாரத் பசுமை அறக்கட்டளை நிறுவனர் செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.






