search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா போட்டியிடாதது ஏன்?- கார்கே விளக்கம்
    X

    பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா போட்டியிடாதது ஏன்?- கார்கே விளக்கம்

    • பிரியங்காவை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளராக்கி முடக்குவதை விட, நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்தால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
    • தற்போது பிரதமர் மோடியின் சித்தாந்தங்களை எதிர்த்து போராடுகிறோம்.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக காரணம், இந்தியா கூட்டணியின் வியூகம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக பேசினார்.

    பேட்டியின்போது கார்கே கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி முன் எப்போதும் இல்லாத அளவில் மிக குறைந்த அளவிலான தொகுதிகளிலேயே, அதாவது 328 இடங்களில் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.

    இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும். அதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை காங்கிரஸ் எடுத்தது. இது இந்தியா கூட்டணியின் வியூகத்தின் ஒரு அம்சம் தான்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, நாங்கள் தனித்தனியாக குழு அமைத்தோம். அந்த பேச்சுவார்த்தைகளின்படி கூட்டணி அமைந்தது.

    அதே நேரம் மேற்குவங்காளம், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை. அதற்காக கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கூறமுடியாது.

    சோனியா காந்தி தனது வயது காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை. அதே நேரம் பிரியங்கா, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு அவரும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு. சோனியாவும், பிரியங்காவும் காங்கிரசின் நட்சத்திர பேச்சாளர்கள். எங்களின் சொத்து. பிரியங்காவை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளராக்கி முடக்குவதை விட, நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்தால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். அதன் காரணமாகவே அவர் போட்டியிடவில்லை.

    அவரைப்போல கட்சியின் பல மூத்த தலைவர்களும், தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தி, வெற்றி பெற்றபின்னர் எந்த தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது சொந்த விருப்பம்.

    தற்போது பிரதமர் மோடியின் சித்தாந்தங்களை எதிர்த்து போராடுகிறோம். இதற்காக நாங்கள் ஒன்றிணைந்து உள்ளோம். நாட்டின் நலன் கருதி நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம்.

    கர்நாடக மாநிலத்தை பற்றி நான் நன்கு அறிவேன். அங்கு தேர்தல் முடிவுகள் குறித்து என்னால் சரியாக மதிப்பிட முடியும். அதுபோல் மற்ற மாநிலங்களில் இருந்தும் சாதகமான தகவல்கள் வருகிறது.

    நான் முன்பே கூறியதுபோல், பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு தேவையான எண்ணிக்கை இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும்.

    இந்தியா கூட்டணி அரசு அமைந்தால், அனைத்து சட்டங்களையும் மறுபரிசீலனை செய்வோம், மக்களை துன்புறுத்துவது எதுவாக இருந்தாலும், நாங்கள் அதை எதிர்ப்போம், பா.ஜனதா போல் விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தமாட்டோம்.

    கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜனதா, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

    இவ்வாறு கார்கே கூறினார்.

    Next Story
    ×