என் மலர்tooltip icon

    கதம்பம்

    • ஆடு, மாடு போன்றவற்றின் குட்டிகளும் கன்றுகளும் பிறந்த ஒரு மணிநேரத்துக்குள் நிற்கவும், நடக்கவும் பழகிவிடுகின்றன. கன்றெல்லாம் கையில் சிக்காமல் குதித்து ஓடும்.
    • மூளை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான ந்யூரான் இணைப்புகளை உருவாக்கி மூளையை முழு வளர்ச்சிக்குக் கொண்டு வருகிறது.

    மனித இனத்தில்தான் குழந்தைகள் முதலில் குப்புற விழுந்து, தவழ்ந்து, பின் நடக்க என ஒரு வருடம் ஆகிவிடுகிறது. ஏன் இந்த வேறுபாடு?

    ஏன் மனிதக் குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்துக்குள் நிற்கவோ ஓடவோ முடிவதில்லை?

    காரணம் மூளை தான்..

    ஒரு ஆதிக் குரங்கு வகையில் இருந்து மெல்ல மெல்ல மனித இனத்தின் மூதாதையர்களும், பிற பெருங்குரங்குகளும் பிரிகையில், நம் மூதாதைகளின் குழுச் செயல்பாடு, சிக்கலான சிந்தனை அமைப்பு ஆகியவற்றைச் சாத்தியமாக்க மூளை அளவும், அதனையொட்டி மண்டையோட்டின் அளவும் பெரிதானது.

    ஆனால் இதில் பெண்ணினத்துக்கு மிகப்பெரிய சிக்கல் ஒன்று உண்டு. இந்தப் பெரிய மண்டையோடு பிரவசத்தின்போது இடுப்பெலும்பின் நடுவே புகுந்து வெளிவர முடியாது. இது தாய் சேய் உயிருக்கு ஆபத்து.

    ஏதோ ஒரு மரபணுப் பிறழ்வில் மண்டையோட்டின் எலும்புகள் முழுக்க ஒட்டும் முன்னர், மூளையின் எல்லா இணைப்புகளும் கச்சிதமாக அமைக்கப்படும் முன்னர் பிரசவம் நிகழ்ந்தது. மண்டையோடு இறுகாமல் நெகிழ்வாக இருப்பதால் இடுப்பெலும்புக்குள் புகுந்து குழந்தையால் வெளிவர முடிகிறது.

    பிள்ளைப்பேற்றுக்குப் பின்னர் கவனம் அதிகம் தேவைப்பட்டாலும் தாய் சேய் இறப்பை இது கணிசமாகக் குறைத்ததால், இயற்கை மண்டையோடு ஒட்டுமுன்னர் பிறந்தலை தெரிவு செய்தது. தொடர்ந்து மனித இனத்துக்குள் அந்த விரைவுப் பிரசவம் நிகழும் மரபணுக்கள் பரவி, நாளடைவில் அதுவே நடைமுறையாகவும் ஆனது.

    மனிதக் குழந்தைகள் பிறந்தபின்னர் மண்டையோட்டின் எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டி இறுகுகின்றன. மூளை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான ந்யூரான் இணைப்புகளை உருவாக்கி மூளையை முழு வளர்ச்சிக்குக் கொண்டு வருகிறது.

    இது எல்லாம் கச்சிதமாக நிகழ நேரம் எடுத்துக்கொள்வதுதான், மனிதக் குழந்தைகள் நிற்கவும் நடக்கவும் தாமதமாக காரணம். ஒரு வகையில் இது குறைப்பிரசவம்தான். இல்லையெனில் நம் இனமே இல்லை.

    -கே. சிவராமன்

    • புற்றுநோய்கள் மார்பு, எலும்பு, குடல் போன்று பலவிதங்களில் வரலாம்.
    • ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வைத்திய முறைகள் உண்டு.

    கீமோதெரபி இல்லை. ரேடியேசன் இல்லை. சத்திர சிகிச்சை இல்லை. எதுவும் இல்லை. சாதாரணமான ஒரு மருந்து கொடுக்கப்பட்டு புற்று நோயாளிகள் குணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வெவ்வேறு விதப் புற்றுநோய்களையுடைய 14 பேருக்குச் செய்த ஆராய்ச்சியின் முடிவு, மருத்துவ உலகையே துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறது.

    மருத்துவ வரலாற்றிலேயே புற்றுநோய் நூறு சதவீதம் முழுமையாக முதன்முறையாக நீக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்கள் மார்பு, எலும்பு, குடல் போன்று பலவிதங்களில் வரலாம். ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வைத்திய முறைகள் உண்டு. ஆனால், இந்த மருந்து அனைத்துவிதப் புற்று நோய்களையும் இல்லாமல் செய்திருக்கிறது என்பது நம்ப முடியாத அதிசயம்.

    'Dostarlimab' என்னும் மருந்து 500 மில்லிகிராம் அளவில் மூன்று வார இடைவெளியில் ஆறு மாதங்களுக்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட அனைவருக்கும் புற்றுநோய்க் கலங்கள் முழுமையாக இல்லாமல் அழிக்கப்பட்டன. வேறு எந்தவித வைத்தியமும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. நிஜமாகவே மகிழ்ச்சியடைய வேண்டிய அற்புதமான நிகழ்வு இது. 'அறிவியல் நின்று வெல்லும்'

    -ராஜ்சிவா

    • பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள் என்பது சில ஆய்வுகள் சொல்லும் உண்மை.
    • ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள்.

    ஆண் பெண் இருவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை மட்டுமே இருக்கிறது. அது இருவரும் மனித குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். மற்றபடி உடலில் இருந்து உள்ளம்வரை முழுக்க முழுக்க வேறுபாடுகள்தான் நிரம்பியிருக்கின்றன.

    ஏன் இப்படி? இதில் ஆச்சர்யப்படவோ, அதிர்ச்சியடையவோ எதுவுமேயில்லை. உலகம் ஆரம்பித்த நாளில் இருந்து இப்படித்தான் இருக்கிறது.

    இது தெரியாமல் பல காதலர்கள் புலம்புவதுண்டு; "என்னுடைய ரசனையும், என் சிந்தனையும் அப்படியே ஒத்துப்போகிறது, அதனால்தான் காதலித்தோம்" என்பார்கள். இப்படி கூறுபவர்கள் விரைவில் பெரும் அதிர்ச்சிகரமான உண்மையை சந்திப்பார்கள். இருவருக்கும் ஒற்றுமைகள விட வேற்றுமைகளே அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள்.

    அப்படியென்றால் ஆண்கள் வேறு, பெண்கள் என்பதுதான் அர்த்தமா? இதுவும் பொய். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகம் என்பது தான் மெய். யாராவது ஒருவர் "அவரை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன்" என கூறினால் அது அப்பட்டமான அறியாமையாகும்.

    எந்த ஒருவரையும் வேறு ஒருவரால் புரிந்துகொள்ளவே முடியாது. இதை இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், ஒவ்வொரு நேரத்திலும் ஒருவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை அவனே அறியமாட்டான்.

    அதனால் காதலிக்கும் முன் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பது ஓர் அபத்தமான பொய் மூட்டை ஆகும்.

    அப்படியென்றால் என்ன செய்வது? பெண்களின் இயல்புகள் பற்றி ஆண்களும், ஆண்களின் இயல்புகளைப் பெண்களும் ஓரளவாவது தெரிந்து கொள்வது மிகவும் பயன்தரக்கூடிய செயலாக இருக்கும்.

    பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள் என்பது சில ஆய்வுகள் சொல்லும் உண்மை. ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள்.

    பெண்கள் உடல் அழகைப் பேணுவதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். ஆண்கள் உடலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

    குழந்தைகள் மீது அதிக அளவில் அன்பும், பாதுகாப்பும் தர பெண்கள் விரும்புவதுண்டு. ஆண்கள் எப்போதும் குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களில் தலையிட விரும்புவதில்லை. அதனை தொல்லை என தப்பித்துப் போகவே விரும்புவார்கள்.

    பெண்கள் எப்போதும் சிலரால் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள். ஆண்கள் எப்போதும் எவரும் பாதுகாப்பதை விரும்புவதில்லை. உடல் அளவிலும் இருவருக்கும் பெரும் மாற்றங்கள் உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவுகள், குழந்தைப் பிறப்பு சங்கடங்கள், பாலூட்டுதல் என ஆண்களுக்கு இல்லாத பல்வேறு உடற்கூறுபாடு மாற்றங்கள் உண்டு.

    ஆண்களுக்குத் தேவையில்லாத 'கற்பு' பெண்களுக்கு புனிதமாக சொல்லப்படுகிறது.

    பெண்கள் பார்வையில் ஆண்களைப் பார்த்தால் 'பலமுள்ளவர்கள்' உழைக்கப் பிறந்தவர்கள், காதலிப்பதற்காக ஆயிரம் பொய் சொல்பவர்கள், திருமணத்திற்குப் பின் அடக்கியாள விரும்புபவர்கள், என்பதுடன் இன்னும் பல்வேறு பிம்பங்கள் உண்டு.

    ஆனால் ஆண்களின் பார்வையில் இருக்கும் பெண்ணின் உருவம் மிகவும் மோசமானது ஆகும். பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்கு உயிரும், உணர்வும் உள்ளமும் இருக்கிறது என்பதையே ஒப்புக்கொள்வதில்லை. அவர்களது எண்ணப்படி பெண்கள் என்பவர்கள், ஆண்களின் விளையாட்டுக்காகப் படைக்கப்பட்ட ஓர் உயிரில்லாத பொம்மை என்பதுதான்.

    சின்னஞ்சிறு வயதில் தாய்க்கு அடிமையாக இருக்கவேண்டும்; வளர்ந்த பின் திருமணம் முடியும்வரை, ஒவ்வொரு பெண்ணும் தந்தைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; திருமணத்திற்குப் பின் கணவனுக்கு அடிமையாவும், பின் கடைசி காலம் வரை பெற்ற பிள்ளைகளுக்கு அடிமையாக இருக்கவேண்டும் என ஆண்கள் ஆசைப்படுவதுண்டு.

    இதே விஷயத்தை பெண்களும் விரும்பத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவரால் அன்புடன் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள், அடிமைகளாக அல்ல.

    இப்படி ஆரம்பம் முதல் முடிவு வரை ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமைகள் மட்டுமே நிரம்பி வழிகிறது. இதனை எளிமையான விஞ்ஞான மொழியில் சொல்லப்போனால் ஆண்கள் என்பது ஒரு கட்டம். பெண்கள் என்பது ஒரு வட்டம்..

    இரண்டும் ஒன்றல்ல, கட்டத்திற்குள் வட்டமோ, அல்லது வட்டத்திற்குள் கட்டமோ செல்லமுடியாது. அப்படிப் போனாலும் அதில் நிறைவு இருக்காது.

    கட்டம் என்பதும் வட்டம் என்பதும் வெவ்வேறு உருவகங்கள் என்பது எத்தனை தூரம் உண்மையோ, அத்தனை சத்தியமான வார்த்தைதான் ஆணும், பெண்ணும் வெவ்வேறு படைப்புகள் என்பது.

    இருவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனும் பொழுது, ஈர்ப்பு மட்டும் எவ்வாறு ஏற்படுகிறது?

    இதுதான் உலக இயற்கை. தன்னிடம் இருக்கும் ஒரு பொருளின் அருமை எவருக்கும் தெரியாது; இல்லாத பொருள்தான் மிகவும் உயர்ந்ததாகத் தோன்றும்.

    இரும்பு காந்தத்தை மட்டுமே ஈர்க்குமே தவிர, இரும்பினை அல்ல. தன்னிடம் இல்லாத ஏதோ ஓர் அதிசயம் ரகசியம் எதிர் பாலினத்திடம் இருக்கிறது என்பதை அறிந்து தேடத் தொடங்குகிறார்கள்.

    சூரியனும், பூமியும் பரஸ்பரம் சேர்ந்துவிடாமலும், விலகி விடாமலும் ஈர்த்துக்கொண்டே இருப்பதுபோல, ஆண்களும் பெண்களும் சேரவும் முடியாமல், விலகவும் முடியாமல் ஆனால் ஒன்றாகும் விருப்பத்துடன் மட்டும் இருக்கிறார்கள்.

    ஆணும் பெண்ணும் தனித்தனி என்பதை மட்டும் அறிந்து கொள்வது போதாது, இந்த உலகில் யாரும் முழுமையில்லை என்ற உண்மையினையும் அறிந்துகொள்ளுதல் வேண்டும். இருக்கும்வரை போதும் என்ற மனதுடன் துணை தேட வேண்டும் என்பது அடிப்படை பாடமாகும்.

    • அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் ‘பாடு நிலாவே’ பாடல்” என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா.
    • ‘ராஜபார்வை’ படத்தில் ‘அந்தி மழை பொழிகிறது’ பாடலை வசந்தா என்னும் ராகத்தில் அமைத்திருப்பார்.

    ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் தமிழர்களின் கூடவே கொண்டாட்டம், கோபம், கொதிப்பு, தவிப்பு, சோகம் எல்லாவற்றிலுமே பயணப்பட்டு வந்து கொண்டிருப்பவர் இளையராஜா.

    திரைப்படத்துறையில் 3 தலைமுறை சக இசையமைப்பாளர்களோடு இசைஞானி இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 படங்கள்.. 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளவருடைய இசை படைப்பூக்கத்தை வெளிப்படுத்த இவை போதுமானதாக இல்லை. அதனால்தான் இளையராஜா, சிம்பொனி, ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், திருவாசகம், ரமணர் பாடல்கள் என மனம் விரும்பும்படி எல்லாம் ஒரு குழந்தையைப் போல இசையை உருவாக்கிக்கொண்டே செல்கிறார்...

    "என்னோடு நண்பர்களாகப் பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. எனக்கு ஆர்மோனியப் பெட்டி தான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை மாநகரத்தை சேர்ந்த உக்கடத்தில் ரூ.60-க்கு எனது அண்ணன் வரதராஜன் வாங்கினார். இதில் பயிற்சி பெற்றுத்தான் இசை அமைப்பாளராக ஆனேன். என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப் பெட்டிதான்" என்கிறார் இளையராஜா.

    "இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்திலுள்ள 'மாங்குயிலே பூங்குயிலே' பாடலுக்கு மிகக் குறைந்த நேரத்தில் இசையமைத்துள்ளேன். அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் 'பாடு நிலாவே' பாடல்" என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா.

    'அன்னக்கிளி உன்னத் தேடுதே' என்று குரலெடுத்து தமிழ்த்திரையில் 1976-இல் இளையராஜா நுழைந்தபிறகு, அவரது இசையை நாடத் தொடங்கியது தமிழ்த்திரை ரசிகர்களது மனம். 'மச்சானைப் பாத்தீங்களா' என்று எஸ்.ஜானகி வசீகரக் குரலில் இழைத்த கிராமிய மெட்டு, அவரை அதிகமாகக் கவனிக்க வைத்தது.

    வாத்தியார் படம், தலைவர் படம் என்ற நிலைமாறி இயக்குனர் பெயரால் படங்கள் பேசப்படத் தொடங்கிய அதே கால கட்டத்தில், இசையை வைத்துப் படத்தை வெற்றி பெற வைப்பதில் பெரும் சாதனை படைத்தவர் இளையராஜா. இசைக்காகவே திரைப்படங்களைப் பார்ப்பதற்கு திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை வர வைத்தவர் இசைஞானி. அதனால்தான் அந்தக் கால கட்டத்தில் தயாரிப்பாளர்கள் போஸ்டர்களில் 'இசைஞானி இசையில்' என்று இருந்தால், கண்களை மூடிக்கொண்டு படங்களை வாங்கி திரையிடத் தயாராக இருந்தார்கள். இளையராஜா இசையினால் புகழோடு ஓடிய படங்கள் வரிசையில் கரகாட்டக்காரன் தொடங்கி சிந்து பைரவி, முதல் மரியாதை, புன்னகை மன்னன், தேவர் மகன், நாயகன், தளபதி என்று ஒரு பெரிய பட்டியல் உண்டு. வழக்கமான பாட்டையில் போகாமல், வித்தியாசமான தளத்தில் பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தது அவரது இசைத்தேடல். சிட்டுக்குருவி படத்தில், 'என் கண்மணி உன் காதலி' பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா இருவரது குரல்களில் அவர் செய்திருக்கும் ஜாலம், இடையே ஒலிக்கும் கண்டக்டர் குரல், விசில் ஒலி எல்லாமே ஒரு பேருந்து பயணத்தை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தும்.

    அவரின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது. மண்ணின் மணம் கமழும் இசையை அவர்தான்- அவரேதான் கொடுத்தார். மண்வாசனை படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே' பாட்டுடைய இசையில் அவர் கொடுத்திருக்கும் ஒலிகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். இந்தப் படம் வந்த காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் அரிசி குத்துவது, முறத்தில் புடைப்பது போன்றவை வீட்டில் அன்றாடம் நடக்கும் வேலைகளாக இருந்தன. அப்போது எழும் ஓசை, அப்படியே இந்தப் பாட்டில் இருக்கும். இளையராஜாவின் இசையில் வெளிப்படும் இந்த இயல்புநிலைதான் அவரின் தனித்தன்மை.

    'ராஜபார்வை' படத்தில் 'அந்தி மழை பொழிகிறது' பாடலை வசந்தா என்னும் ராகத்தில் அமைத்திருப்பார். மழையில் குடை பிடித்தபடி நாயகனும் நாயகியும் திரையில் தோன்றுவார்கள். அந்தப் பாடலின் இசையைக் கேட்கும் போது நாமே மழையில் நனைவது போன்ற உணர்வு ஏற்படும்.

    'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வரும் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே..' பாடலின் முகப்பு இசை முடிந்து, பாடல் தொடங்கும் போதே, பரவசம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் சுகானுபவம் உண்டாகும்.

    தளபதி படத்தின் 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலினூடே ' குனித்த புருவமும்' என்று தேவார வரிகளைக் கொண்டு வந்து இணைக்கும் மாயம், ப்ரியா படத்தின் பாடல்கள் தமிழ்த்திரை இசையில் முதன்முறை ஸ்டீரியோ முறையில் பதிவு செய்யப்பட்டது, பின்னணி இசையில் கதையோட்டத்திற்கு ஏற்ப புதுமைகள் கொணர்ந்தது என இளையராஜாவின் சிறப்புக்கள் சொல்ல ஏராளமானவை.

    தேநீர் விடுதிகளில் அந்தக் கால கட்டங்களில் சப்தமாக இசைத்தட்டுகள் இரவு நேரங்களில் பாடவிடப்படும். எல்லாம் இளையராஜாவின் அருளாசி தான். அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, செம்பருத்தி, தர்மயுத்தம், மெல்லத் திறந்தது கதவு, சொல்லத் துடிக்குது மனசு, நீங்கள் கேட்டவை, மறுபடியும், இளமைக்காலங்கள், பயணங்கள் முடிவதில்லை போன்ற படங்களின் பாடல்களைக் கேட்பதற்கு என்றே நண்பர்கள் குழுவுடன் பலமுறை தேநீர் அருந்தச் சென்று, நின்று, தலையாட்டி மணிக்கணக்கில் பாடலையும் ரசிப்போம், ருசிப்போம்!

    'நாயகன்' படத்தில் 'தென் பாண்டிச் சீமையிலே' பாடலின் இழைப்பில் தெறிக்கும் சொற்களுக்கு அப்பாற்பட்ட சோகத்தின் பிழிவு, கதையின் ஆவேச பகுதிக்கேற்ற பாவங்களோடு வாணி ஜெயராம் குரலில் ஒலித்த "கவிதை கேளுங்கள்" (புன்னகை மன்னன்) பாடலின் அசாத்திய இசைக் கலவை, துள்ளாட்டம் போடும் 'சின்னச் சின்ன வண்ணக்குயில்' (மௌன ராகம்), மெல்லென்ற தென்றலாக வீசும் 'என் இனிய பொன் நிலாவே' (மூடுபனி), நெகிழ வைக்கும் 'ஒன்ன நெனச்சேன் பாட்ட படிச்சேன்' (அபூர்வ சகோதரர்கள்) என்று அவரது இசையில் பாடல்களைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனது இந்தத் தலைமுறை மட்டுமல்ல அடுத்தத் தலைமுறைகளும்தான்.

    கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் திரைப்பாடலுக்கு (இது ஒரு பொன்மாலைப் பொழுது – நிழல்கள்) இசையமைத்த ராஜாவின் இசையில் தான், கவியரசு கண்ணதாசனின் கடைசி பாடலும் (கண்ணே கலைமானே – மூன்றாம் பிறை) பிறந்தது.

    1991-ஆம் ஆண்டு இளையராஜா இசையில் தளபதி படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமனியம் மற்றும் சுவர்ணலதா பாடிய 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் 2003-இல் பிபிசி நடத்திய 'வேர்ல்ட் டாப் 10 பாப்புலர் மியூசிக்' சர்வேயில் 165 நாடுகளைச் சேர்ந்த அரை பில்லியன் மக்கள் வாக்களிக்க, 4-ஆம் இடம் பெற்றது.

    கவிதை வரிகளின் அழகு, சொற்கள் இசைக்கருவிகளின் ஒலியில் அடித்துக் கொண்டு செல்லப்படாது, தற்காத்து ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசையை நெய்துகொண்டே இருக்கும் விரல்கள் அவருடையவை.

    அற்புதமான பாடகர்களின் மிக அருமையான பாடல்கள் ராஜாவின் இசையில் மிதந்து வந்தது ரசிகர்களது பொற்காலம். பாலமுரளி கிருஷ்ணாவின் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' (கவிக்குயில்) , கே.ஜே.ஜேசுதாஸின் 'கலைவாணியே ..' (சிந்து பைரவி), டி.எம். சவுந்திரராஜனின் 'அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்' (தீபம்), பி.சுசீலாவின் 'ராகவனே ரமணா' (இளமைக்காலங்கள்),

    எஸ்.ஜானகியின் 'ராசாவே உன்னை நம்பி' (முதல் மரியாதை), வாணி ஜெயராமின் 'நானே நானா..' (அழகே உன்னை ஆராதிக்கிறேன்),எஸ்.பி.பியின் 'இளைய நிலா பொழிகிறதே' (பயணங்கள் முடிவதில்லை) என்று சொன்னால், இதைப்போலவும் இதைவிடவும் இனிமையான வேறு பல பாடல்களது பட்டியலை வேறொரு ரசிகர் சொல்லக் கூடும். அதுதான் இளைய ராஜா!

    பத்ரகாளி படத்தின், 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' பாடல் மொத்தத்தையும் இந்த முதல் வரியை வைத்தே பாடி விட முடியும்.

    அப்படியான ஒரு மெட்டு அது. தாளக் கட்டின் நயத்தை, 'வளையோசை கலகல' (சத்யா), 'பூவை எடுத்து ஒரு மாலை' (அம்மன் கோவில் கிழக்காலே), 'மணியே மணிக்குயிலே' (நாடோடி தென்றல்) போன்ற பல நூறு பாடல்களில் மயங்கிக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும். பனி விழும் மலர் வனமும் (நினைவெல்லாம் நித்யா), தென்றல் வந்து தீண்டும் போதும் (அவதாரம்), மழையும், சாரலும், பனியும், வெயிலும் எல்லாமே இசையில் நிகழ்த்திக் கொண்டே இருக்கும்இளையராஜா என்ற மனிதனின் நெடிய பயணத்தில், மேலோங்கி நிற்பது ராஜாவின் இசை தான்! இசைதான்! இசையே தான்!

    -அம்ரா பாண்டியன்

    • தமிழிலில் இரட்டை சொற்கள் நிறைய உள்ளன.
    • அவற்றில் சிலவற்றின் பொருளை தெரிந்துக் கொள்வோம்.

    குண்டக்க , மண்டக்க :

    குண்டக்க - இடுப்புப்பகுதி,

    மண்டக்க - தலைப் பகுதி,

    சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது,

    வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பதுதான்...

    அந்தி, சந்தி:

    அந்தி - மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது..

    சந்தி - இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது..

    அக்குவேர், ஆணிவேர்:

    அக்குவேர் - செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்...

    ஆணி வேர் - செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்...

    அரை குறை:

    அரை - ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது..

    குறை - அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது...

    அக்கம், பக்கம்:

    அக்கம் - தன் வீடும், தான் இருக்கும் இடமும்...

    பக்கம் - பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்...

    இடக்கு முடக்கு:

    இடக்கு - கேலியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்...

    முடக்கு - கடுமையாக எதிர்த்து தடுத்து பேசுதல்...

    அலுப்பு சலிப்பு :

    அலுப்பு - உடலில் உண்டாகும் வலி...

    சலிப்பு - உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்,..

    தோட்டம் துரவு , தோப்பு துரவு,

    தோட்டம் - செடி, கொடி கீரை பயிரிடப்படும் இடம்...

    தோப்பு - கூட்டமாக இருக்கும் மரங்கள்...

    துரவு - கிணறு...

    காடு கரை :

    காடு - மேட்டு நிலம் (முல்லை)...

    கரை - வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்)...

    நத்தம் புறம்போக்கு :

    நத்தம் - ஊருக்குப் பொதுவான மந்தை...

    புறம்போக்கு - ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்...

    பழக்கம் வழக்கம் :

    பழக்கம் - ஒருவர் ஒரே செயலை பல காலமாக செய்வது...

    வழக்கம் - பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்தது செய்வது..

    சத்திரம் சாவடி :

    சத்திரம் - இலவசமாக சோறு போடும் இடம்

    சாவடி - இலவசமாக தங்கும் இடம்...

    கிண்டலும் கேலியும்:

    கிண்டல் - ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது....

    கேலி - எள்ளி நகைப்பது,..

    ஒட்டு உறவு :

    ஒட்டு - இரத்த சம்பந்தம் உடையவர்கள்...

    உறவு - கொடுக்கல் சம்மந்தமான வகையில், நெருக்கமானவர்கள்...

    பட்டி தொட்டி :

    பட்டி - கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்)...

    தொட்டி - மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்...

    கடை கண்ணி :

    கடை - தனித்தனியாக உள்ள வியாபார நிலையம்...

    கண்ணி - தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்...

    பேரும் புகழம் :

    பேர் - வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்புப்பெருமை..

    புகழ் - வாழ்விற்குப் பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை....

    நேரம்,காலம் :

    நேரம் - ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்து கெள்வது

    காலம் - ஒரு செயலைச்செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு..

    கூச்சல்,குழப்பம்:

    கூச்சல் - துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம்... (கூ - கூவுதல்)

    குழப்பம் - துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தை கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்...

    நகை, நட்டு :

    நகை - பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)

    நட்டு - சிறிய அணிகலன்கள்..

    பிள்ளை, குட்டி:

    பிள்ளை - பொதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்...

    குட்டி - பெண் குழந்தையைக் குறிக்கும்...

    பங்கு, பாகம்:

    பங்கு - கையிருப்பு.. பணம், நகை, பாத்திரம். ( அசையும் சொத்து)...

    பாகம் - வீடு, நிலம்.. அசையாத்சொத்து...

    ஈவு, இரக்கம் :

    ஈவு- (ஈதல்) கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்...

    இரக்கம் - பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்...

    சூடு, சொரணை:

    சூடு- ஒருவர் தகாதசெயல், சொல்லை செய்யும்போது உண்டாகும் மனக்கொதிப்பு...

    சொரணை - நமக்கு ஏற்படும் மான உணர்வு...

    • ஜெலட்டின் கலந்த உணவுகள் இப்போது ஏராளம்.
    • பல வண்ணங்களில் கிடைக்கும் ஜெல்லி அல்லது ஜெல்லடின் பவுடராக, சிறு குச்சிகளாக, சிறு துகள்களாகக் கிடைக்கிறது.

    குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி மற்றும் ஜெலட்டின் வகை உணவுகள் எதில் இருந்து எடுக்கப்படுகிறது தெரியுமா..?

    சைவம், அசைவம் என்று எந்த வகை உணவும் எடுத்துக் கொள்பவர்கள், இறுதியாக ஏதேனும் பழம் அல்லது இனிப்பு கலந்த உணவு எடுத்துக் கொள்வது வழக்கம். அது ஐஸ்கிரீம், ஐஸ் கிரீம் கலந்த பழக் கலவை, ஃபலூடா என்னும் பழங்கள், நட்ஸ், ஜெல்லி, ஐஸ்கிரீம் கலவை, கஸ்டர்ட், பழ ஜூஸ், மில்க் ஷேக், வெறும் இனிப்பு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    இப்போதைய டிரண்டிங்கில், வாசனையாக, வண்ணமயமாக, ஆசையையும், ஆர்வத்தையும் தூண்டும் அளவிற்கு உணவுகளை பரிமாறுவது தான் அனைவருக்கும் பிடிக்கும் ஒன்று. அதில் நுணுக்கமான சமையல் கலையும் அடங்கியுள்ளது.

    அந்த வகையில், ஜெலட்டின் கலந்த உணவுகள் இப்போது ஏராளம். பல வண்ணங்களில் கிடைக்கும் ஜெல்லி அல்லது ஜெல்லடின் பவுடராக, சிறு குச்சிகளாக, சிறு துகள்களாகக் கிடைக்கிறது. இதைத் தண்ணீருடன் கலந்து குளிர்விக்கும் போது, கொழகொழப்பான அதே நேரம் கெட்டியான, தளதளவென்ற பதத்தில் சிறு சிறு கேக்குகள் கிடைக்கும். இவைதான் பல வகையான இனிப்புகளில் சேர்க்கப்படுகின்றன.

    உண்மையில் இந்த ஜெலட்டின் என்பது, விலங்குகளின் எலும்பு, ஜவ்வு, இணைப்புத் திசுக்கள், மென்மையான எலும்பு திசுக்கள் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இது பலகட்ட செய்முறைகள் கடந்து வேதிப் பொருட்கள், வண்ணங்கள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

    சைவ உணவாளர்கள், இது தெரிந்தவர்கள், இந்த ஜெல்லியை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பலருக்கும் இது தெரிந்திருப்பது இல்லை. அந்த பாக்கெட்டின் குறிப்பிலேயே 'animal origin's என்று இருக்கும். அதைப் பார்த்துதான் வாங்கவேண்டும்.

    இதே ஜெல்லி, தாவர வகையில், கடல் பாசியில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. இதை சைவப் பிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இரு வகை ஜெல்லியிலும் அதிக சர்க்கரை தான் கலக்கப்படுகிறது. எனவே கலோரியும் அதிகம். இது ஒருபுறம் இருக்க, அதிகப்படியான வண்ணங்கள், preservatives சேர்க்கப்படுவதால் பல வகையில் குழந்தைகளுக்கு உடல்நலக் கேடுகளையே கொடுக்கிறது. குறிப்பாக உடல்பருமன் மற்றும் பற்களில் சொத்தை, பசியின்மை போன்றவை ஏற்படும்.

    - வண்டார்குழலி ராஜசேகர்

    சிலருடன் கைகுலுக்கும் போது, வெட்டுண்ட மரக்கிளையுடன் கைகுலுக்குவது போல உணர்வீர்கள். அதில் உயிரிருக்காது: கதகதப்பு இருக்காது; சக்தி இருக்காது.
    ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசும்படி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ட்ரூமன் உத்தரவிட்டார். இரண்டு லட்சம் பேருக்கு மேல் எரிந்து சாம்பலாய்ப் போனார்கள்.

    அணுகுண்டுகள் வீசப்படும்வரை அவர் உறங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார். போடப்பட்டது தெரிந்த பிறகுதான் தூங்கப்போனார் ட்ருமேன்!

    மறுநாள் காலையில் பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு முதலில் கேட்ட கேள்வி இதுதான்:-

    “இரண்டு லட்சம் பேரைக் கொன்ற பிறகு, உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிந்ததா?”

    ஜனாதிபதி ட்ரூமன், “ஓ, நிம்மதியாகத் தூங்கினேனே! சில மாதங்களுக்குப் பிறகு நேற்றுத்தான் நான் நன்றாகத் தூங்கினேன். காரியம் கச்சிதமாக முடிந்துவிட்டது. இனி ஜப்பான் சரணடைய வேண்டியதுதான். தகவல் வந்ததும் நான் மிகவும் திருப்தியடைந்தேன். இரவு முழுவதும் ஒருமுறை கூட விழிக்காமல் நிம்மதியாகத் தூங்கினேன்,” என்றார்.

    சுரணையற்ற மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள். பலம் மிக்கவர்களுக்கு எந்த உணர்வுகளும் இருக்காது. மனிதர்களின் தலையை வெட்ட முற்படும்போது, அவனுக்கு இரண்டாவது யோசனை வருவதே இல்லை.

    மற்றொரு மனிதர் ஜார்ஜ் பெர்னாட்ஷா.

    இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதர் ஜார்ஜ் பெர்னாட்ஷா.

    ஓவியப் படைப்பாளியும், நாவலாசிரியருமான ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார்.

    ஷாவின் வீட்டுத் தோட்டத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. அவருடைய அறைக்குள் சென்றபோது அங்கே ஒரு பூ கூடக் காணப்படவில்லை.

    ‘அதிசயமாக இருக்கிறதே... தோட்டத்தில் அத்தனைப் பூக்கள் இருக்கின்றனவே, சிலவற்றைப் பறித்து இங்கே ஒரு பூத்தொட்டியில் வைத்திருக்கலாமே,” என்றார் நாவலாசிரியர்.

    அதற்கு ஷா, “நான் குழந்தைகளைக் கூட நேசிக்கிறேன். அவர்களும் மலர்களைப் போல அழகானவர்கள்; அதற்காக அவர்களின் தலைகளைக் கொய்து இந்த அறையை அழகு செய்ய முடியுமா?  

    மலர்கள் மலர்கின்றன. மழையிலும், கதிரொளியிலும் காற்றிலும் அவை ஆடி மகிழ்கின்றன. அவை உயிரோடு இருப்பவை. நான் கசாப்புக் கடைக்காரன் அல்லன். உயிருள்ள அவற்றை என்னால் வெட்ட முடியாது, என் அறையில் பிணங்கள் இருப்பதை நான் விரும்பவில்லை என்றார்.

    அவர் சொன்னது சரிதான். அவர் உணர்ச்சிமயமானவர். அவர் மிகுந்த உணர்ச்சி உள்ளவர். உண்மையான மனிதர்.

    இந்த இரண்டு விதமான மனிதர்களையும் நீங்கள் தினமும் சந்திக்கிறீர்கள்.

    சிலருடன் கைகுலுக்கும் போது, வெட்டுண்ட மரக்கிளையுடன் கைகுலுக்குவது போல உணர்வீர்கள். அதில் உயிரிருக்காது: கதகதப்பு இருக்காது; சக்தி இருக்காது.

    வேறு சிலருடன் கை குலுக்கும்போது ஏதோ ஒன்று உங்களுக்குள் பாய்வதை உணரலாம்; ஒரு வெப்பம், அன்பான நட்பு பரிமாறப்படுவதை உணரலாம். அப்படிப்பட்ட மக்களுடன் அமர்ந்திருந்தால், நீங்கள் வளம் பெறுவதை உணரலாம்.

    -ஓஷோ
    பட்டினி படுத்தும்பாடு எத்தகையது தெரியுமா? உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவனை பட்டினியின் ரேகைகள் எவ்வளவு கீழாகக் கொண்டு வர முடியுமா அவ்வளவு கொண்டுவந்துவிடும்!

    இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓவியன் ஒருவன், ‘உலகமெல்லாம் கிறிஸ்துவ மதம் பரவ வேண்டும்...’ என்ற எண்ணத்தில், இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களை ஓவியமாக வரைய ஆரம்பித்தான்.

    இயேசுநாதரின் அருள் நிறைந்த கண்கள், அன்பு ததும்பும் முகம் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை அவன் கற்பனை செய்து, அதைப் போன்ற முகத்தைத் தேடி, பல குழந்தைகள் முகத்தைப் பார்த்தான். எந்தக் குழந்தையின் முகமும், அவன் மனதில் இருந்த கற்பனை முகத்துக்கு ஏற்றபடி அமையவில்லை.

    கடைசியில், ஒரு ஏழையின் வீட்டில், தவழ்ந்து கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தான். இயேசுவின் கண்களில் இருந்த அருள் ஒளி, அந்தக் குழந்தையின் முகத்தில் இருந்ததைக் கண்டான். அக்குழந்தையின் முகத்தைப் பார்த்து, குழந்தை இயேசுவின் முகத்தை வரைந்து, திருப்தி அடைந்தான்.

    பின்னர், ‘இது தான் யூதாஸ்’ என்ற கிறிஸ்துவ சமய புத்தகத்திற்காக, இயேசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் பற்றி படம் வரைய அவன் முனைந்த போது, அதற்கான முகம் மட்டும் கிடைக்கவே இல்லை.

    அவனும் பல முகங்களைப் பார்த்தான்; ஆனால், யூதாஸ் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் ஒரு முகம் கூட இல்லை.

    கொலைகாரனைக் கொண்டு வந்து ஓவியன் முன் நிறுத்தினர்; அவன் கண்களிலோ குரூரம் இருந்தது. ஆனால், யூதாசின் கண்களில் குரூரம் இல்லை. ‘அந்த முகம் யூதாசுக்கு ஏற்றதில்லை...’ என்று அனுப்பி விட்டான்.

    இப்படியே பலரை நிராகரித்த நிலையில், கடைசியில், பசி, பட்டினியால் மிக மெலிந்து, வெறுப்பு நிறைந்த பார்வையுடன் எளியவன் ஒருவன் வந்தான்.

    அவனைப் பார்த்த உடனேயே, ‘யூதாஸ் படத்துக்கு இவனே ஏற்றவன்...’ என, அவனை உட்கார வைத்து, வரைந்து முடித்தான். யூதாஸ் ஓவியத்திற்கு மாடலாக உட்கார்ந்தவன், ஓவியனைப் பார்த்து, ‘என்னை உங்களுக்குத் தெரிகிறதா...’ என்று கேட்டான்.

    ‘தெரியலையே... ஆனால், உன்னைப் போன்ற ஆளைத் தேடி நான், சுற்றாத ஊர் இல்லை. நல்லவேளை, நீ கிடைத்தாய்...’ என்றான் ஓவியன்.

    ‘இப்போது, உங்களுக்கு யூதாஸ் போன்று தெரியும் என் முகத்தைப் பார்த்து தான், ரொம்ப வருஷத்துக்கு முன், குழந்தை இயேசுவை வரைந்தீர்கள்...’ என்றான் அவன்!

    (‘அண்ணாவின் சிந்தனைகள்’ என்ற நூலிலிருந்து அம்ரா பாண்டியன்)
    கணையம், என்கிற சுரப்பி மணிபூரகம் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.
    1. மூலாதாரம்:- முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.

    உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.

    உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

    சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில்

    2. சுவாதிஷ்டானம்:- இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது.

    பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.

    மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது.

    பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    3. மணிபூரகம்:- நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு.

    தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில்  மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது.

    உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன.

    கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

    4. அனாகதம்:- இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு.

    மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது.

    அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

    5. விசுத்தி:- இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது.

    தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம்.

    தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

    6. ஆக்கினை:- இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது.

    தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது.

    இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

    7. தூரியம்:- இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயருகள் உண்டு.

    இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவுபடுத்துகின்ற சக்கரம் இது.

    என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது.

    பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

    -வள்ளல் ராமமூர்த்தி
    ஒரு மரம் செடியாக இருக்கும் போது பார்த்துவிட்டுப் பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் அதன் வளர்ச்சி பிரமிக்க வைக்கும். அதுவே அந்த மரத்தைத் தினமும் பார்ப்பவர்களுக்குத் தெரியாது.
    உளவியலில் கவனிக்கத்தக்க வித்தியாசம் என்று ஒரு விஷயம் சொல்வார்கள். அதாவது ஒரு பொருளின் அளவு அல்லது விலை மாறியிருப்பதை நம்மால் உணர முடியும் மாற்றம்.

    உதாரணத்திற்கு பெட்ரோல் விலையைத் திடீரென ஒரே நாளில் இருபது ரூபாய் கூட்டினால் நமக்குச் சட்டென்று தெரியும். ஆனால் தினமும் பத்து பைசாவாகக் கூட்டினால் மெதுவாக 200 நாட்களில் இருபது ரூபாய் கூடியிருக்கும். அதை நாம் உணரவே மாட்டோம். இதில் முக்கிய விஷயம், ஒரிஜினல் அளவிலிருந்து எவ்வளவு சதவிகிதம் கூடியிருக்கிறது என்பதுதான்  முக்கியம்.  

    அதாவது பதினைந்து ரூபாய் டீ திடீரென இருபது ரூபாய் ஆனால் நமக்கு வித்தியாசம் தெரியும். ஏனெனில் ஒரிஜினலைவிட 33% க்கும் மேல் கூடியுள்ளது. இது ஐந்து ரூபாய்தான். ஆனால் அதுவே பத்து லட்சம் மதிப்புள்ள காரின் விலை ஐயாயிரம் ரூபாய் கூடினாலும் நமக்குத் தெரியாது. ஏனெனில் அது ஒரிஜினலைவிட அரை சதவிகிதம்தான். அதுவே ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்ச ரூபாய் கூடினால்தான் நம் கவனத்தை ஈர்க்கும்.

    இன்னொரு விஷயம்!  தினமும் அளவு பார்த்துக் கொண்டே இருந்தால் மாறுதல் நம் கண்களுக்குத் தெரியாது. ஒரு மரம் செடியாக இருக்கும் போது பார்த்துவிட்டுப் பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் அதன் வளர்ச்சி பிரமிக்க வைக்கும். அதுவே அந்த மரத்தைத் தினமும் பார்ப்பவர்களுக்குத் தெரியாது.

    உடல் எடை கூடுவதும் அப்படியே. கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுவதை நம்மால் உணர முடியாது. பெரும்பாலும் மாதம் அரைக்கிலோ, முக்கால் கிலோ கூடும். ஆனால் இரண்டு வருடங்களில் 12 -15 கிலோ கூடியிருக்கும். அதே போல் வெற்றிகளும் உடனே வெளியே தெரியாது.

    உடல் எடைக்குறைப்பாக இருக்கட்டும், ஓர் இசைக்கருவி வாசிப்பதாக இருக்கட்டும், முதலீடாக இருக்கட்டும், மெதுவாகவே முன்னேற்றம் கண்ணுக்குத் தெரியாத வகையில் இருக்கும். முன்னேற்றம் இல்லை எனக் கைவிட்டுவிடக் கூடாது. இந்த கவனிக்கத்தக்க வித்தியாசத்துக்கும் கீழே இருக்கும் மாறுதல்களை உணர நீங்கள் மாற்ற விரும்புவதை அடிக்கடி தொடர்ந்து  அளவிட்டு ஆவணப்படுத்திக் கொண்டே இருங்கள். சேமிப்போ, உடல் எடையோ...சில வருடங்கள் கழித்து பழைய மதிப்பீடுகளைப் பார்த்து ஒப்பிடும்போதுதான் உங்கள் முன்னேற்றம் கண்ணுக்குத் தென்படும். மேலும் முன்னேற உந்துதலாக இருக்கும்.

    ஆகவே ஆவணப் படுத்துங்கள். அளவிடுங்கள். எடை பார்க்கும் கருவி வாங்கி எடை பார்க்காமல் எடையைக் குறைக்கவே முடியாது. எனக்குப் பிடித்த வாசகம் ‘உங்களால் அளவிட முடியாததை மாற்ற முடியாது’. அளக்க முடியாத விஷயத்தை உங்களால் மாற்ற இயலாது.
    மருதாணி போட்டுக் கொள்ள பிடிக்காத ஆளே இருக்க முடியாது, மருதாணியை இரு பாதங்கள் மற்றும் கைகளில் போட்டுக் கொள்வதால், உடல் குளிர்ச்சி அடைகிறது. உடலும் மனமும் இளமையடைகிறது.
    பொதுவாக வெயில் காலத்தில், அம்மை நோய், மஞ்சள் காமாலை, தோல் நோய், வேர்க்குரு, கட்டி, முகப்பரு, பைல்ஸ், உறக்கத்தில் விந்தணுக்கள் வெளியேற்றம் போன்ற வெப்பம் சார்ந்த வியாதிகளும், மூட்டு வலி நரம்புத்தளர்ச்சி போன்ற வாதம் சார்ந்த வியாதிகளும், தட்பவெப்ப நிலை காரணமாக தூக்கமின்மை, மன அழுத்தம் சார்ந்த வியாதிகளும் ஏற்படுவது இயற்கையே.

    வெயில் காலத்தில் நாம் செய்ய வேண்டியவை...

    காலைக் கடன்களை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னரே கழித்து விட்டு, அரைமணி நேரம் வியர்வை வரும் வரை நடைபயிற்சி செய்திடல் வேண்டும். வியர்வையின் வழியாக, உடலில் உள்ள நச்சுத்தன்மை (கழிவுகள்) வெளியேறும் ஆகையால், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

    வியர்வையில் நனைந்த உடனே, தண்ணீர் அருந்தவோ, குளிக்கவோ கூடாது. ஏன் எனில், வியர்வை என்பதே உடலை குளிர்விக்கும் நிகழ்வு தான். அதற்கு பிறகு நீர் அல்லது மோர் அருந்தினாலோ குளித்தாலோ, உடல் மேலும் குளுமை அடைந்து சளி பிடிக்கவும் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி வரவும் வாய்ப்புகள் அதிகம். ஆதலால் வியர்வை அடங்கும் வரை நிழலில் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து வியர்வை நின்ற உடன் உங்களுக்கு வேண்டியதை பருகலாம்.

    வெயில் காலத்தில் பொதுவாகவே பசியின் அளவு குறைந்தும் தாகத்தின் அளவு அதிகமாகவும் இருக்கும். அதனால் இயன்றவரை ஒருவேளை உணவாக பழைய சாதம், நீர் ஆகாரம், பழங்கள், பழச்சாறுகள், கம்பு, கேழ்வரகு கூழ், நீர் மோர், இளநீர், பதநீர் சாப்பிடுங்கள்.

    இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும், வெயில் காலத்தில் நிகழும்  நீர் பற்றாக்குறையில் இருந்தும், அஜீரண கோளாறுகளில் இருந்தும், உடல் உஷ்ணம் ஆவதில் இருந்தும், மலச்சிக்கலில் இருந்தும் பாதுகாக்கும்.

    அதிசயம் செய்யும் குளியல் முறைகள்: -

    வெந்தயக் குளியல்


    ஒரு கைப்பிடி வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் அதை நன்கு மை போல் அரைத்து, தலை முதல் கால்வரை பூசி அரைமணி நேரம் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும்.

    கற்றாழைக் குளியல்:

    கற்றாழையின் மேல் தோலை சீவி விட்டு, அதில் உள்ள சதைப் பகுதியை சுத்தமான தண்ணீரில் அலச வேண்டும். ஏழு அல்லது எட்டு முறை தண்ணீரை மாற்றி அலசும் போது தான், அதில் உள்ள பிசுபிசுப்பு தன்மை குறையும். பின்னர் அதை அரைத்து உடலில் தலைமுதல் கால்வரை பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும்.

    நெல்லிக்காய் குளியல்:

    தேவையான அளவு நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுத்து, தலைமுதல் கால்வரை பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும். நெல்லிக்காய் குளியல் மட்டும் மதியம் 11 முதல் 3 வரை அதாவது சூரிய ஒளி உச்சத்தில் இருக்கும் நேரத்தில் மட்டும் குளித்தல் வேண்டும்.

    மேற்கூறிய குளியல் முறைகளால், உடல் சூடு குறைவதை கண்கூடாகக் காணலாம். தலைமுடி உதிர்வது குறையும், மன அழுத்தம் மனபாரம் குறையும். மேனி பளபளப்பாகவும் வசீகரமாகவும் மாறும். தொடர்ச்சியாக வாரம் ஒரு முறை என்று செய்து வந்தால், மேற்கூறிய உடல் உஷ்ணம் சார்ந்த வியாதிகள் வராமல் காக்கும். ஏற்கனவே உடல் சூடு சார்ந்த வியாதிகள் உள்ளவர்களுக்கு இந்த வியாதிகள் அதிகரிக்காமல் தடுக்கப்படுவதோடல்லாமல் நாளடைவில் வியாதியின் தாக்கம் குறையும்.

    இந்த குளியல் முறைகளை, பதினைந்து வயது முதல் 70 வயது வரை உள்ள அனைத்து பாலினரும் செய்யலாம்.

    மருதாணி போட்டுக் கொள்ள பிடிக்காத ஆளே இருக்க முடியாது, மருதாணியை இரு பாதங்கள் மற்றும் கைகளில் போட்டுக் கொள்வதால், உடல் குளிர்ச்சி அடைகிறது. உடலும் மனமும் இளமையடைகிறது.  கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

    வெயில் காலத்தில் கூடுமானவரை, தளர்வான ஆடைகளை மட்டுமே அணியுங்கள். பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை நீர் கட்டி மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கும், ஆண்களுக்கு ஏற்படும் விந்தணுக்கள் சார்ந்த குறைபாடுகளுக்கும் அவர்கள் அணியும் இறுக்கமான ஆடைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

    -முனைவர் பா. ஜெயப்ரசாத்
    ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசணும்னா... அதுக்கு மொழி தான் தொடர்பு சாதனம். ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள அதுக்கு மௌனம் தான் தொடர்பு சாதனம்.
    ஒரு ஆசிரமம்... அங்கே ஒரு குருநாதர் இருந்தார். அவரை தேடிகிட்டு போனான் ஒருத்தன்.

    குருநாதர் அவனை நிமிர்ந்து பார்த்தார். உனக்கு என்ன வேணும்? ன்னு கேட்டார்.

    ஐயா நான் கடவுளை பார்க்கணும் என்று சொன்னான்.

    அதுக்கு ஏன் என்னை தேடிகிட்டு வந்தாய்? என்று கேட்டார்.

    விவரம் தெரிஞ்சுகிட்டு போகலாம் என்று வந்தேன், கடவுளை எப்படி பார்க்கிறது.. எப்படி அவரோட பேசறது? எந்த மொழியில பேசணும்? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு போகலாம் என்று வந்தேன்.. என்று சொன்னான்.

    சரி புறப்படு! என்றார்.

    எங்கே? ன்னான்

    இங்கே இருக்கிற சீடர்கள் சில பேரை பார்த்துட்டு வரலாம்.. வா, அப்படின்னு சொல்லி அவனை அழைச்சிட்டு புறப்பட்டார்.

    இவன் அவர் பின்னாடியே போனான். அங்கே ஒரு மரத்தடியில் இரண்டு சீடர்கள் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க..

    அவங்களை சுட்டிக்காட்டி ,“ அதோ பார் அவங்க என்ன செஞ்சுகிட்டுருக்காங்க?” என்று கேட்டார்.

    ஒருத்தன் இன்னொருவன் கிட்ட பேசிக்கிட்டு இருக்கான்! என்றான்.

    அடுத்த படியா இன்னொரு மரத்தடியில் ஒரு சீடன், தனியா உக்கார்ந்து இருக்கான்..

    அவனை சுட்டிக்காட்டி ,“ அதோ பார் அவன் என்ன செஞ்சிகிட்டு இருக்கான்? என்று கேட்டார்..

    அவன்  சும்மா தான் இருக்கான் - அப்படின்னான்..

    குருநாதர் சிரிச்சிக்கிட்டே விளக்கம் கொடுத்தார்..

    “முதல் மரத்தடியிலே பாத்தியே .. அங்கே ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசி கொண்டிருந்தான்..

    இரண்டாவது ஒரு மரத்தடியிலே பாத்தியே அங்கே ஒரு மனிதன் கடவுளோடு பேசி கொண்டிருக்கிறான்” என்றார்..

    இதை கேட்டதும் இவன் இன்னும் குழம்பி போயிட்டான்..

    என்ன சொல்றிங்க? ன்னான்

    அவர் சொன்னார்:-

    “இதோ பாருப்பா.. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசணும்னா... அதுக்கு மொழி தான் தொடர்பு சாதனம். ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள அதுக்கு மௌனம் தான் தொடர்பு சாதனம்.

    அதனாலே நீ கடவுளோட தொடர்பு கொள்ள விரும்பினால் மௌனமாக இரு .. மனிதனோட தொடர்பு கொள்ள விரும்பினால் நீ பேசு! என்றார் .

    வந்தவன் யோசிக்க ஆரம்பிச்சான்.. கடவுளோடு எந்த மொழியிலே பேசணும்ங்கறதையும் புரிஞ்சுகிட்டான் . அந்த கடவுள் தனக்குள்ளே இருக்கிற ஓர் உண்மை- அப்படிங்கிறதையும் புரிஞ்சுகிட்டான் .

    மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா? உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள். அந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மொழி மௌனம்.

    -வள்ளல் ராமமூர்த்தி
    ×