என் மலர்
கதம்பம்

ஆணும் பெண்ணும்: ஒற்றுமையும் வேற்றுமையும்- டாக்டர் டி.காமராஜ்
- பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள் என்பது சில ஆய்வுகள் சொல்லும் உண்மை.
- ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள்.
ஆண் பெண் இருவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை மட்டுமே இருக்கிறது. அது இருவரும் மனித குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். மற்றபடி உடலில் இருந்து உள்ளம்வரை முழுக்க முழுக்க வேறுபாடுகள்தான் நிரம்பியிருக்கின்றன.
ஏன் இப்படி? இதில் ஆச்சர்யப்படவோ, அதிர்ச்சியடையவோ எதுவுமேயில்லை. உலகம் ஆரம்பித்த நாளில் இருந்து இப்படித்தான் இருக்கிறது.
இது தெரியாமல் பல காதலர்கள் புலம்புவதுண்டு; "என்னுடைய ரசனையும், என் சிந்தனையும் அப்படியே ஒத்துப்போகிறது, அதனால்தான் காதலித்தோம்" என்பார்கள். இப்படி கூறுபவர்கள் விரைவில் பெரும் அதிர்ச்சிகரமான உண்மையை சந்திப்பார்கள். இருவருக்கும் ஒற்றுமைகள விட வேற்றுமைகளே அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள்.
அப்படியென்றால் ஆண்கள் வேறு, பெண்கள் என்பதுதான் அர்த்தமா? இதுவும் பொய். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகம் என்பது தான் மெய். யாராவது ஒருவர் "அவரை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன்" என கூறினால் அது அப்பட்டமான அறியாமையாகும்.
எந்த ஒருவரையும் வேறு ஒருவரால் புரிந்துகொள்ளவே முடியாது. இதை இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், ஒவ்வொரு நேரத்திலும் ஒருவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை அவனே அறியமாட்டான்.
அதனால் காதலிக்கும் முன் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பது ஓர் அபத்தமான பொய் மூட்டை ஆகும்.
அப்படியென்றால் என்ன செய்வது? பெண்களின் இயல்புகள் பற்றி ஆண்களும், ஆண்களின் இயல்புகளைப் பெண்களும் ஓரளவாவது தெரிந்து கொள்வது மிகவும் பயன்தரக்கூடிய செயலாக இருக்கும்.
பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள் என்பது சில ஆய்வுகள் சொல்லும் உண்மை. ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள்.
பெண்கள் உடல் அழகைப் பேணுவதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். ஆண்கள் உடலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
குழந்தைகள் மீது அதிக அளவில் அன்பும், பாதுகாப்பும் தர பெண்கள் விரும்புவதுண்டு. ஆண்கள் எப்போதும் குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களில் தலையிட விரும்புவதில்லை. அதனை தொல்லை என தப்பித்துப் போகவே விரும்புவார்கள்.
பெண்கள் எப்போதும் சிலரால் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள். ஆண்கள் எப்போதும் எவரும் பாதுகாப்பதை விரும்புவதில்லை. உடல் அளவிலும் இருவருக்கும் பெரும் மாற்றங்கள் உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவுகள், குழந்தைப் பிறப்பு சங்கடங்கள், பாலூட்டுதல் என ஆண்களுக்கு இல்லாத பல்வேறு உடற்கூறுபாடு மாற்றங்கள் உண்டு.
ஆண்களுக்குத் தேவையில்லாத 'கற்பு' பெண்களுக்கு புனிதமாக சொல்லப்படுகிறது.
பெண்கள் பார்வையில் ஆண்களைப் பார்த்தால் 'பலமுள்ளவர்கள்' உழைக்கப் பிறந்தவர்கள், காதலிப்பதற்காக ஆயிரம் பொய் சொல்பவர்கள், திருமணத்திற்குப் பின் அடக்கியாள விரும்புபவர்கள், என்பதுடன் இன்னும் பல்வேறு பிம்பங்கள் உண்டு.
ஆனால் ஆண்களின் பார்வையில் இருக்கும் பெண்ணின் உருவம் மிகவும் மோசமானது ஆகும். பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்கு உயிரும், உணர்வும் உள்ளமும் இருக்கிறது என்பதையே ஒப்புக்கொள்வதில்லை. அவர்களது எண்ணப்படி பெண்கள் என்பவர்கள், ஆண்களின் விளையாட்டுக்காகப் படைக்கப்பட்ட ஓர் உயிரில்லாத பொம்மை என்பதுதான்.
சின்னஞ்சிறு வயதில் தாய்க்கு அடிமையாக இருக்கவேண்டும்; வளர்ந்த பின் திருமணம் முடியும்வரை, ஒவ்வொரு பெண்ணும் தந்தைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; திருமணத்திற்குப் பின் கணவனுக்கு அடிமையாவும், பின் கடைசி காலம் வரை பெற்ற பிள்ளைகளுக்கு அடிமையாக இருக்கவேண்டும் என ஆண்கள் ஆசைப்படுவதுண்டு.
இதே விஷயத்தை பெண்களும் விரும்பத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவரால் அன்புடன் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள், அடிமைகளாக அல்ல.
இப்படி ஆரம்பம் முதல் முடிவு வரை ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமைகள் மட்டுமே நிரம்பி வழிகிறது. இதனை எளிமையான விஞ்ஞான மொழியில் சொல்லப்போனால் ஆண்கள் என்பது ஒரு கட்டம். பெண்கள் என்பது ஒரு வட்டம்..
இரண்டும் ஒன்றல்ல, கட்டத்திற்குள் வட்டமோ, அல்லது வட்டத்திற்குள் கட்டமோ செல்லமுடியாது. அப்படிப் போனாலும் அதில் நிறைவு இருக்காது.
கட்டம் என்பதும் வட்டம் என்பதும் வெவ்வேறு உருவகங்கள் என்பது எத்தனை தூரம் உண்மையோ, அத்தனை சத்தியமான வார்த்தைதான் ஆணும், பெண்ணும் வெவ்வேறு படைப்புகள் என்பது.
இருவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனும் பொழுது, ஈர்ப்பு மட்டும் எவ்வாறு ஏற்படுகிறது?
இதுதான் உலக இயற்கை. தன்னிடம் இருக்கும் ஒரு பொருளின் அருமை எவருக்கும் தெரியாது; இல்லாத பொருள்தான் மிகவும் உயர்ந்ததாகத் தோன்றும்.
இரும்பு காந்தத்தை மட்டுமே ஈர்க்குமே தவிர, இரும்பினை அல்ல. தன்னிடம் இல்லாத ஏதோ ஓர் அதிசயம் ரகசியம் எதிர் பாலினத்திடம் இருக்கிறது என்பதை அறிந்து தேடத் தொடங்குகிறார்கள்.
சூரியனும், பூமியும் பரஸ்பரம் சேர்ந்துவிடாமலும், விலகி விடாமலும் ஈர்த்துக்கொண்டே இருப்பதுபோல, ஆண்களும் பெண்களும் சேரவும் முடியாமல், விலகவும் முடியாமல் ஆனால் ஒன்றாகும் விருப்பத்துடன் மட்டும் இருக்கிறார்கள்.
ஆணும் பெண்ணும் தனித்தனி என்பதை மட்டும் அறிந்து கொள்வது போதாது, இந்த உலகில் யாரும் முழுமையில்லை என்ற உண்மையினையும் அறிந்துகொள்ளுதல் வேண்டும். இருக்கும்வரை போதும் என்ற மனதுடன் துணை தேட வேண்டும் என்பது அடிப்படை பாடமாகும்.






