என் மலர்
கதம்பம்
- ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை.
- ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்.
பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, 'டைம் முடிந்து விட்டது' என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.
பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.
கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.
இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.
அப்போது, அவர் கண் முன்னால், பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் இயந்திரம்.
இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா ? என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது.
ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.
இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.
-தூத்துக்குடி போவஸ்
- பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குல தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
- பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள்.
"குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது!"
"குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்கக்கூடாது" என்பவை பழமொழிகள்.
குல தெய்வம் என்று கூறப்படும் தெய்வங்கள், அந்தந்தக் குடும்பங்களில் அல்லது குழுவினரில், இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமெனில், ஒவ்வொரு சாதிப்பிரிவினரில் தோன்றி தங்கள் குலம் செழிக்கப்பாடுபட்டு, தியாகம் புரிந்து, இன்னல்களில் இருந்து காப்பாற்றியவர்கள் ஆவர்.
அப்படி நம் முன்னோர்களின் கண்முன்னே வாழ்ந்து மறைந்தவர்களை நாம் வணங்குவது நமது தலையாய கடமையாகும்.
குல தெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை...
இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள்.
இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குல தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதுடன், பங்குனி உத்திரம் நாளில் சென்று வழிபடுவது மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது!
பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம்.
குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.
இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!
- நீரிழிவற்ற உடல் பருமன் பிசிஓடி ரத்தகொதிப்பற்ற மக்களும் பழங்களை ஆரோக்கியமான ஸ்நாக்காக அளவோடு உட்கொள்ளலாம்.
- பல் இல்லாத முதியோர் குழந்தைகளுக்கு நோயாளிகளுக்கு பழத்தை சாறாக்கி வழங்கலாம்.
பழங்களை பழமாகவே சாப்பிடுவது தான் சிறந்தது.
அதைச் சாறாக்கி கூழாக்கி குடிப்பது சிறந்தததன்று.
பழமாக உண்ணும் போது இன்னும் அதிகமான நார்ச்சத்து கிடைக்கும்.
மேலும் பழச்சாறில் சீனி / சர்க்கரை கலந்து பருகுவது மிகப்பெரும் தவறு.
அது அந்த பழத்தின் இயற்கை சுவையை மறக்கடித்து விடுகிறது. மேலும் இனிப்பு கலந்த பழச்சாறு நன்மை தருவதை விட கேட்டைத்தான் அதிகமாக தரும்.
ஆனால் நானும் பழச்சாறுக்கடைகளில் பார்த்து விட்டேன். சீனி இல்லாமல் எங்கும் விற்பனை நடப்பதில்லை. பழத்தை உண்ணுங்கள்.
சாறாக பருகவேண்டும் எனில் இனிப்பு சேர்க்காமல் அந்த பழத்தின் இயற்கை சுவையோடு பருகுங்கள்.
ஒரு செயற்கை குளிர்பானம் குடிப்பதை விடவும் பழச்சாறு குடிப்பது சிறந்தது தான்.
ஆனால் அதில் சீனி/ சர்க்கரை சேர்க்கும் வரை மட்டுமே அது செயற்கை குளிர்பானங்களை விடச் சிறந்தது என்பதை அறிக. சிறார் சிறுமியருக்கு பேக்கரி உணவுகளைக் காட்டிலும் பழங்கள் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.
நீரிழிவற்ற உடல் பருமன் பிசிஓடி ரத்தகொதிப்பற்ற மக்களும் பழங்களை ஆரோக்கியமான ஸ்நாக்காக அளவோடு உட்கொள்ளலாம்.
பல் இல்லாத முதியோர் குழந்தைகளுக்கு நோயாளிகளுக்கு பழத்தை சாறாக்கி வழங்கலாம்.
பழங்களில் மேற்படி இனிப்பை சேர்ப்பது என்பது அதில் இருக்கும் நன்மைகளை மழுங்கடிக்கச் செய்து விடுகிறது .
-டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா
- ரத்த நாளங்களின் உள்புற சுவர்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
- இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் தேவைக்கும் அதிகமாக சோடியம் உப்பை ரத்தத்தில் சேமிக்கும்.
ரத்தக் கொதிப்பு (ஹை பிரஷர்) வந்தவர்கள் குறைக்க வேண்டியது எதை? என்ற கேள்விக்கு கட்டாயம் அனைவரும் கூறும் பதிலாக "உப்பு" என்பதாக இருக்கும் .
கட்டாயம் நிறுத்த வேண்டியது எதை என்று கேட்டால் பெரும்பான்மையினர்,
"முட்டையின் மஞ்சள் கரு"
"மட்டன்"
என்று கூறுவதையே காண முடியும்.
ஆனால் ரத்தக்கொதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் கட்டாயம் நிறுத்த வேண்டியது ,"சீனி / நாட்டு சர்க்கரை இனிப்புகளைத் தான்.
என்ன? பிரஷருக்கு உப்ப தான குறைக்க சொல்லுவாங்க? நீங்க என்ன இனிப்ப நிறுத்த சொல்றீங்க?
இனிப்பு சுவை தரும் சீனி / நாட்டு சர்க்கரை ஆகியவற்றில் சுக்ரோஸ் உள்ளது. அதில் இருந்து க்ளூகோஸ் ரத்தத்தில் கலப்பதால் கணையத்தின் "இன்சுலின்" சுரப்பைத் தூண்டிக் கொண்டே இருக்கும். எனவே ரத்தத்தில் எப்போதும் இன்சுலின் பிரவாகம் எடுக்கும். அதிகமாகவே இருக்கும்.
இதை "இன்சுலின் மிகை நிலை" என்கிறோம். இன்சுலின் மிகை நிலையில் இருக்கும் போது சரியாக அதன் பணிகளை செய்யாது. இதன் விளைவாக "இன்சுலின் எதிர்ப்பு" நிலை தோன்றுகிறது.
இன்சுலின் மிகை நிலையில் உடல் சேமித்து வைத்த கொழுப்பு எரியாமல் மேலும் சேமித்து வைக்கப்படுகிறது.
இதனால் உடல் பருமனாகிறது.
ட்ரைகிளசரைடுகள் கூடுகின்றன .
ஊறு செய்யும் ஆக்சிடைஸ்டு எல்.டி.எல் அளவுகள் கூடுகின்றன.
ரத்த நாளங்களின் உள்புற சுவர்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இதன் விளைவாக ரத்த நாளங்கள் தங்களின் நெகிழ்வுத் தன்மையை இழக்கின்றன. இதன் விளைவாக ரத்த அழுத்தம் உயர்கிறது. கூடவே இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் தேவைக்கும் அதிகமாக சோடியம் உப்பை ரத்தத்தில் சேமிக்கும். சோடியத்துடன் சேர்த்து அதிகமான நீரும் சேமிக்கப்படும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் மேலும் கூடுகிறது.
இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள் பலவற்றிலும் இனிப்பு சுவை கொண்ட சீனி நாட்டு சர்க்கரை போன்றவற்றை உட்கொள்ளும்போது ரத்த அழுத்தம் உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாம் அறிவது யாதெனில் நீரிழிவில் மட்டுமல்ல ரத்தக் கொதிப்பிலும் சீனி மற்றும் நாட்டு சர்க்கரையை கைவிட்டால் சிறப்பான கட்டுப்பாடு கிடைக்கும் என்பது புலப்படும்.
-டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
- டோங்காவின் நிலங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்கி, வெள்ளையருக்கு துளிநிலத்தை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றினார்.
- பூடானுக்கு அடுத்து உலகின் மிக எளிமையான அரசவம்சம் என டோங்கா அரசவம்சத்தை சொல்லலாம்.
எந்த நாட்டின் காலனி ஆதிக்கத்துக்கும் உள்ளாகாமல் 3000 ஆண்டுகளாக சுதந்திரமாக இருக்கும் நாடு எது? டோங்கா.
பெங்களூர் அளவு நிலப்பரப்பு உள்ள தீவுக்கூட்டம். 1 லட்சம் மக்கள் தொகை. ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே ஐயாயிரம் கிமீ தொலைவில் தென்பசிபிக் கடலில் உள்ள நாடு டோங்கா. பக்கத்து நாடு எதற்காவது போகவேண்டுமெனில் ஆயிரம் கிமீ படகில் போகவேண்டும். அதனால் தான் யாரும் ஐரோப்பியர் வரும்வரை டோங்காவை ஆக்கிரமிக்க முயலவில்லை.
ஆய்வுகள் அங்கே கிமு 800 வாக்கில் பாலினேசிய மக்கள் குடியேறியதாக காட்டுகின்றன. அதன்பின் மெதுவாக அதன் தீவுகூட்டங்களில் குடியேற்றங்கள் உருவாகி, பல குடிகளாக பிரிந்து, டோங்கா எனும் நாடாக அவர்கள் உருவானார்கள். கிபி 1200ம் ஆண்டுவாக்கில் டோங்கா மன்னன் ஒருவன் ஆயிரம் கிமீ தள்ளி இருக்கும் சமோவ நாடு மேல் படை எடுத்தான். அப்போதுதான் டோங்கா எனும் நாடு இருப்பதே வரலாற்றில் பதிவாகிறது.
அதன்பின் 1616ம் ஆண்டு போர்ச்சுகீசியர்கள் டோங்காவை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அதை பிடித்து என்ன செய்ய என விட்டுவிட்டார்கள். கிபி 1770ம் ஆண்டு ப்ரிட்டிஷார் அங்கே வந்து இறங்குகிறார்கள். அவர்கள் அருகே இருந்த சமோவா, பிஜியை எல்லாம் பிடிக்க, டோங்காவையும் பிடித்து தேயிலை, கரும்பு தோட்டங்கள் அமைப்பார்கள் என்ற அச்சம் எழுந்தது.
டோங்காவின் மன்னர் ஜார்ஜ் டுபாவு அப்போது தந்திரமாக காய் நகர்த்தினார். அவருக்கு ப்ரிட்டிஷ் மன்னர் ஜார்ஜின் பெயர்தான். அத்துடன் ப்ரிட்டிஷார் பாணியில் டோங்காவுக்கு அரசியல் சாசனம், மனித உரிமைகளை எல்லாம் இயற்றினார். கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தை கொன்டுவந்தார். ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை என்பது மக்களின் உரிமை என அரசியல் சட்டத்தில் பொறித்தார். இன்றும் டோங்காவுக்கு போனால் ஞாயிற்றுக்கிழமை எந்த கடைகளும் திறந்திருக்காது.
அத்துடன் டோங்காவின் நிலங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்கி, வெள்ளையருக்கு துளிநிலத்தை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றினார். இதனால் இந்தியா, பிஜி, மேற்கிந்திய தீவுகளில் செய்தது போல காலனிகள் அமைக்கவும், தோட்டங்கள் அமைக்கவும் இயலாமல் போனது. மன்னரின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பல ப்ரிட்டிஷார் பரமரசிகர்களாக இருந்தார்கள். அதனால் டோங்காவை காலனிமயம் ஆக்காமல் விட்டுவிட்டார்கள்.
இன்றும் அதே அரசவம்சம் தான் டோங்காவை ஆண்டுவருகிறது. பூடானுக்கு அடுத்து உலகின் மிக எளிமையான அரசவம்சம் என டோங்கா அரசவம்சத்தை சொல்லலாம்.
- நியாண்டர் செல்வன்
- கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவதுபோல மக்கள் மனத்தைப் பண்படுத்திச் சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.
- சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை என்றார் மகரிஷி அவர்கள்.
ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் வேதாத்ரி மகரிஷி அவர்கள் "கடவுளைக் காணலாம்" என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்கள்.
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிஷியிடம் வந்தார். "ஐயா, இது பெரியார் பிறந்தமண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப்படுத்திவிட்டுப் போயிருக்கிறார். பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே" என்றார்.
"அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன். எல்லையற்ற இறைவனை எல்லை கட்டி ஒரு இடத்தில் ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் எதிர்த்தார். அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.
நானும் அதைத்தான் சொல்கிறேன். இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள். அவன் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து மனிதனாகவும் வந்துள்ளான். அவனுள் இறைவனே அறிவாக உள்ளான். இதை சிந்தித்து அறியச் சொல்கிறேன்.
கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவதுபோல மக்கள் மனத்தைப் பண்படுத்திச் சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார். அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை" என்றார் மகரிஷி அவர்கள்.
-சோம நடராஜன்
- தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள்.
- வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்.
வெயில் காலம் கடுமையாக ஆரம்பமாகிவிட்டது. என் டாக்டர் நண்பர்கள் கூறிய எளிய கூல் டிரிங்ஸ்!
நீர் மோரில் இஞ்சி தட்டி போட்டு கருவேப்பிலை, கொத்துமல்லியை தூவிவிட்டு, அலுவலகம் செல்லும் போது, ஒரு லிட்டருக்கு குறையாமல் கொண்டு செல்லுங்கள். காபி, டீ தவிர்த்துவிட்டு தாகம் எடுக்கும் போது எல்லாம் குடியுங்கள். எந்தவெய்யில் கால நோய்களும் அணுகாது. நீர் மோர் காவிரி வெள்ளம் போல இருக்க வேண்டும் என்றார்.
ஒரு லிட்டர் தண்ணீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, சிறிது உப்பு போட்டு வைத்து கொள்ளுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும் போது குடிக்கலாம். வெயில் காலத்திற்கு நல்ல எனர்ஜி டானிக். செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தவிர்த்துவிடுங்கள் என்றார்.
பாட்டியின் அனுபவ பகிர்வு : கோடை காலத்தில் நாவறட்சி தீர, இயற்கை பானங்கள் இளநீர், நுங்கு, மோர், எலுமிச்சை சர்பத், தர்பூசணி பழம் எடுத்து கொள்ளலாம். இவற்றோடு பானகம் ஒன்றையும் அவ்வப்போது தயார் செய்து அருந்தலாம். இதற்கு வெறும் புளி, கருப்பட்டி, தண்ணீர் போதும்.
புளியை தண்ணீரில் நன்கு கரைக்க வேண்டும். கருப்பட்டியை தட்டி அதோடு நன்கு கலக்க வேண்டும். பாத்திரத்தில் துணியால் வடிகட்ட வேண்டும். சுக்கும் ஏலக்காயும் சேர்த்து கொள்ளலாம். பானகம் ரெடி. இந்த பானக தயாரிப்பு இப்போது மெல்ல மறைந்து வருகிறது.
கோடை காலத்தில், வெப்பத்தால் ஏற்படும் களைப்பை விரட்டும். பழரசத்தை விட நல்லது இந்த பானகம்.
இதன் பார்முலா : கால்சியம் + இரும்பு சத்து + விட்டமின்கள் + எனர்ஜி = பானகம்.
இரும்பு சத்தை அமினோ அமிலங்களை பனைவெல்லத்தில் இருந்தும், புளியிலிருக்கும் விட்டமின் சி-யானது பனைவெல்லத்துடன் இணைந்து, உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது. சுக்கின் நன்மை நம் எல்லோருக்கும் தெரியும். ஏலக்காய் உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகள், செரிமானத்தை சரி செய்யும். அற்புதமான பானகம். இந்த வெய்யிலுக்கு தயாரிப்பதும் எளிது.
எது எப்படியோ, இவைகளுடன், தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்.
-ஆர்.எஸ். மனோகரன்
- கோபத்தில் கூட அமங்கல சொல்லைச் கூறக் கூடாது.
- திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அமங்கல சொற்கள் காதில் விழுந்து விடக்கூடாது என்று கெட்டி மேளம் வாசிப்பார்கள்.
ஒரு பெண் திருமணம் ஆன பின் தன் பெற்றோர், உடன் பிறந்தோர், தோழிகள் என்று எல்லோரையும் விட்டு விட்டு கணவன் பின்னால் வந்து விடுகிறாள். இத்தனையும் விட்டு விட்டு வருவது எவ்வளவு பெரிய கடினமான செயல் என்று ஆண்களுக்கு புரிவது இல்லை, காரணம் அவர்கள் அப்படி எதையும் விட்டு விட்டு வருவது இல்லை.
சரி, அந்த வலி புரியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக ஒரு ஆறுதல் கூட சொல்லுவது கிடையாது.
என்ன பெரிய தியாகம் என்று அதை ஒரு சாதாரண செயலாக நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்.
மனைவியின் அருமை எப்போது தெரிகிறது என்றால் ஒன்று வாழ்வில் அடிபடும் போது அல்லது வயதான காலத்தில் புரிகிறது.
கோவலன் ரொம்பத்தான் ஆட்டம் போட்டான். கையில் மிகுந்த செல்வம். இளமை.
கண்ணகியின் அருமை புரியவில்லை.
நாளடைவில் எல்லா செல்வமும் கரைந்து, அடிபட்டு , கண்ணகியிடம் வந்து நிற்கிறான். கண்ணகியும் அவனை வெறுத்து ஒதுக்கவில்லை. கால் சிலம்பு இருக்கிறது என்று தருகிறாள்.
இருவரும், மதுரைக்கு போகிறார்கள்.
கண்ணகியை வீட்டில் வைத்துவிட்டு, சிலம்பை விற்க கோவலன் கிளம்புகிறான்.
இந்த இடத்தில் கோவலன், கண்ணகியை போற்றுகிறான்.
"நீ எல்லோரையும் விட்டு விட்டு என் பின்னால் வந்து விட்டாய். நான் செய்த தவறுகளை எல்லாம் பொறுத்து எனக்கு துணையாக இருந்தாய். பொன்னே, மணியே, பூவே ... கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி ... நான் போய் இந்த சிலம்பை விற்று, கொஞ்சம் பொருள் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.
முதலாவது, மனைவியின் தியாகம் என்பதை முதலில் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கணவனுக்கு ஒரு துன்பம் வரும் வரை அல்லது வயதான காலம் வரை காத்திருக்கக் கூடாது.
இரண்டாவது, பெண்ணின் இயல்புகளில் ஒன்று "மடமை" என்பது. மடமை என்றால் ஏதோ முட்டாள் தனம் என்று கொள்ளக் கூடாது.
"கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை" என்பார்கள். அதாவது, சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்வது, தான் கொண்ட எண்ணத்தில் இருந்து மாறாமை.
ஒரு பெண் மனதில் ஒன்றை நினைத்து விட்டால், அதை மாற்ற யாராலும் முடியாது. சரி, தவறு, போன்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் இடம் இல்லை. ஆயிரம் காரணம் சொன்னாலும் எல்லாவற்றிற்கும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு, கடைசியில் தான் முதலில் எங்கு ஆரம்பித்தாளோ அங்கேயே வந்து நிற்பாள். தான் கொண்டவற்றின் விளைவுகளை பற்றி அவளுக்கு கவலை இல்லை.
உதாரணம்- கைகேயி. கணவனை இழந்தாள் , ஆசை ஆசையாக வளர்த்த இராமனை இழந்தாள், பரதனும் அவளை இகழ்ந்தான். அதெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. தான் வேண்டும் என்று கேட்டது வேண்டும்.
மற்றொரு உதாரணம் - சீதை. பொன் மான் வேண்டும் என்று அடம். இராமானுக்குத் தெரிந்திருக்கிறது. அவளிடம் சொல்லி புண்ணியம் இல்லை. இராமனுக்குத் தெரியும் பொன் மான் என்று ஒன்று கிடையாது.
இலக்குவன் சொல்கிறான். இலக்குவனுக்குத் தெரிந்தது இராமானுக்குத் தெரியாதா.. தெரியும். இருந்தும், சீதையிடம் சொல்லி பயனில்லை.
அது தான் பெண் மனம்.
இவன் தான் என் கணவன், இது என் குடும்பம் , இதை நான் போற்றி பாதுகாக்க வேண்டும் என்று ஒரு பெண்ணின் மனதில் விழுந்து விட்டால், பின் அங்கே என்ன நிகழ்ந்தாலும் அவள் அதை விட மாட்டாள். கணவனோ, பிள்ளைகளோ, மாமனார் மாமியார் என்று புகுந்த வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவள் அதை விட்டு கொடுக்க மாட்டாள்.
கோவலன் செய்தது அனைத்தும் தவறு தான். இருந்தாலும், அவனுக்கு துணை செய்வது என்று அவள் முடிவு செய்து விட்டாள்.
கடைசியாக இருப்பது சிலம்பு ஒன்று தான். இந்தா, இதையும் பெற்றுக் கொள் என்று நின்றாள்.
அரிச்சந்திரனுக்காக தன்னையே விற்க முன் வந்தாள் சந்திரமதி.
பெண்ணை, என்ன என்று சொல்லுவது. !
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றான் பாரதி.
மூன்றாவது, எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும். மறந்தும் அமங்கல சொற்களை சொல்லக் கூடாது.
மொழியிலேயே, அதன் இலக்கணத்திலேயே மங்கல வழக்கு என்று வைத்த மொழி தமிழ் மொழி.
இறந்தார் என்று சொல்லுவது இல்லை. காலமானார், அமரர் ஆனார், இறைவன் திருவடி அடைந்தார் என்று தான் சொல்லுவது வழக்கம்.
இங்கே, கோவலன் சிலம்பை விற்று வருகிறேன் என்று சொல்ல வேண்டும். விதி, அவன் வாயில் அவனை அறியாமலேயே அமங்கல சொல் வந்து விழுகிறது.
"மாறி வருவன் மயங்கா தொழிகெனக்"
போய் மாறி வருவேன், நீ மயங்காது ஒழிக என்கிறான். அவனுக்குத் தெரியாது நடக்கப் போவது. இருந்தும், அவன் வாயில் அமங்கலச்சொல் வருகிறது. நமக்கு ஒரு பாடம் அது.
கோபத்தில் கூட அமங்கல சொல்லைச் கூறக் கூடாது. திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அமங்கல சொற்கள் காதில் விழுந்து விடக்கூடாது என்று கெட்டி மேளம் வாசிப்பார்கள். நல்ல சொற்களை பேச வேண்டும். கேட்க வேண்டும்.
இப்படி ஆயிரம், வாழ்க்கைக்கு வேண்டிய நல்லவற்றை சொல்லுவது நம் தமிழ் இலக்கியம். படியுங்கள்.
-பி.டி.அரசு
- ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.
- சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது.
பனங்கற்கண்டில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), இரும்பு (அயன்), சாம்பல், புரதச்சத்துக்கள், மல்டி-வைட்டமின்களான துத்தநாகம் (ஜின்க்) மற்றும் பொட்டாசியம் உள்ளது.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி இளகி வெளியாகும்.
பனங்கற்கண்டு சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும்.
பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை தருகிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது.
இதை பானமாக அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.
சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது.
சித்தா ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருந்து மாத்திரைகளை உண்டபின் வாயில் ஏற்படும் கசப்பை போக்குவதற்கு வெள்ளை சர்க்கரையைவிட பனங்கற்கண்டே மேலானது.
கோடை வெயிலின் கொடுமைகளை தவிர்க்க இளநீருடன் பனங்கற்கண்டு ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தி வருவது சிறப்பு.
-அருளானந்தர்
- நமது உடல் ஆகாய சக்தியை இந்த பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறது.
- ஆகாய சக்தி சரியான அளவில் இருக்கும்போதுதான் கற்பதை கிரகிக்க முடிகிறது.
பஞ்ச பூதத்தில் மண் அப்படியே கிடக்கும்.
மண்ணை விட தண்ணீர் சூட்சும சக்தி வாய்ந்தது. அது பக்கவாட்டில் பரவும்.
தண்ணீரை விட நெருப்பு சூட்சும சக்தி வாய்ந்தது. அது பக்கவாட்டில் மட்டுமல்லாது சிறிது மேலேயும் எழும்பும்.
நெருப்பை விட காற்று சூட்சும சக்தி வாய்ந்தது. அது எல்லா இடங்களிலும் பரவும்.
காற்றை விட ஆகாயம் சூட்சும சக்தி வாய்ந்தது. ஆகாயம் என்ற வெற்றிடம் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.
அண்டத்தில் உள்ள இந்த பஞ்ச பூதங்கள் தான் பிண்டமாகிய நமது உடலிலும் உள்ளது.
நாம் சாப்பிடும் உணவு, பருகும் நீரில் இருந்து மண் சத்தும் நீர் சத்தும் கிடைக்கிறது.
வயிற்றில் உள்ள அமிலமானது நெருப்பாக செயல்புரிந்து உண்ணும் உணவை எரித்து உடல் இயங்க தேவையான வெப்பத்தை வழங்குகிறது.
சுவாசிப்பதாலும், உணவிலிருந்தும், நீரிலிருந்தும் பிராண சக்தி கிடைக்கிறது. இதில் அதிக அளவு சுவாசத்திலிருந்து பெறப்படுகிறது.
நமது உடல் ஆகாய சக்தியை இந்த பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் நமக்கு ஆகாய சக்தியை மீட்டுத்தருவது உறக்கம்.
ஆழ்ந்த உறக்கத்தில் ஆகாய சக்தி மீட்டெடுக்கப்படுகிது. எப்போது ஆகாய சக்தி உடலில் குறைகிறதோ அப்போது சோர்வு ஆட்கொண்டு தூக்கத்திற்கு இட்டுச்செல்கிறது.
ஆகாய சக்தியை மீட்க மற்றொரு வழி தியானம் மற்றும் மனம் ஒருமித்து செய்யக்கூடிய செயல்கள்.
மனம் என்பது நம்மில் இருக்கும் ஒரு சூட்சும பொருள். இதனை இயக்குவதற்கு சூட்சும சக்தியான ஆகாய சக்தி தேவைப்படுகிறது.
எப்போது மனதில் எண்ண ஓட்டங்கள் அடங்குகிறதோ அப்போது உடலில் ஆகாய சக்தியின் சேமிப்பு அதிகரிக்கிறது.
ஆகாய சக்தி சரியான அளவில் இருக்கும்போதுதான் கற்பதை கிரகிக்க முடிகிறது.
மனதில் அளவுக்கு அதிகமான துக்கம் போன்றவற்றால் உடலில் ஆகாய சக்தி அதிக அளவில் குறைவதையே நவீன மருத்துவத்தில் மனஅழுத்தம் என்று அழைக்கிறார்கள்.
இதற்கு அளிக்கப்படும் மருந்துகள் மனதை சரி செய்யாது, அதற்கு பதிலாக தூக்கத்தை அளித்து ஆகாய சக்தியை மீட்டெடுக்கும் பணியை மட்டுமே செய்கிறது.
எனவே மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் தான் வாழ்வில் முன்னேற்றங்களை காண இயலும்.
- சித்தர்களின் குரல்
- புல் என்றால் புல்லுதல் அதாவது பொருந்துதல் அல்லது தழுவுதல் எனப் பொருள்.
- புலி வாழ்கின்ற தமிழ் நிலத்தில் இன்றும் புலி இருக்கிறது. ஆனால் புலி என்ற சொல் மட்டும் தேய்கிறது.
ஆங்கில வழி கல்வியின் தாக்கம் நம் குழந்தைகளின் தாய்மொழித் திறனை வெகுவாகப் பாதித்திருக்கிறது. யானையையும் புலியையும் இன்றைய குழந்தைகளுக்கு 'எலிஃபண்ட், டைகர்' என்கிற இரு சொற்களைக் கொண்டுதான் அடையாளம் தெரிகிறது என்பார் தியடோர் பாஸ்கரன்.
யானையோ புலியோ இல்லாத ஒரு நாட்டின் மொழியே ஆங்கிலம், ஆனால் இம்மொழி யானையும் புலியும் வாழும் தமிழ்நிலத்தைச் சார்ந்த குழந்தைகளின் தாய்மொழியை சிதைத்திருப்பது கொடும் நிகழ்வு.
தமிழ் மொழியில் புலியைக் குறிக்க, புலி, வேங்கை, உழுவை, மறுவ, வயமா, வயப்புலி, கடுவாய், வாள்வரி, வெல்லுமா, பாய்மா, வியாக்கிரம், வல்லியம், தரக்கு, குயவரி, கொடுவரி, புல் என பல சொற்கள் உள்ளன.
புல் என்றால் புல்லுதல் அதாவது பொருந்துதல் அல்லது தழுவுதல் எனப் பொருள். புல் என்பது புல்லி ஆகமாறிப் புலியாகத் திரிந்தது. இதற்கு நேரடிப் பொருள் முன் கால்களால் தழுவும் விலங்கு. இது நடத்தைப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் முறையில் சூட்டப்பட்டிருக்கும் பெயர்.
ஆங்கிலத்தில் பயிலும் டைகர் என்கிற சொல்லோ பாபிலோனிய ஆறான டைகிரிஸ் எனும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதாவது ஒரு ஐரோப்பியர் முதன்முதலில் அங்குதான் அவ்விலங்கை பார்த்திருக்கிறார். ஆனால் புலி வாழ்கின்ற தமிழ் நிலத்தில் இன்றும் புலி இருக்கிறது. ஆனால் புலி என்ற சொல் மட்டும் தேய்கிறது.
ஆங்கிலச் சொல்லான 'எலிபண்ட் ' என்கிற சொல் பழைய பிரெஞ்ச் மொழியிலிருந்து பிறந்ததா அல்லது இலத்தின், கிரேக்க மொழியிலிருந்து பிறந்ததா என இன்னும் ஆய்வில் இருக்கிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால் தமிழில் இதற்கு யானை, எறும்பி, தும்பி, தூங்கல், தோல், கறையடி, பொங்கடி, உம்பல், வாரணம், ஒருத்தல், வல்விலங்கு, நாகம், கும்பி, நால்வாய், குஞ்சரம், அத்தி, வேழம், உவா, கரி, களிறு, பிடி, கைம்மா, மறமலி, கைம்மா, ஆம்பல், கோட்டுமா, கடிவை, புகர்முகம், பகடு, கரிணி, களபம், மருண்மா, தந்தி, வழுவை, கயம், மதகயம், இபம், கும்பி, பூட்கை, புழைக்கை, மதமா, மந்தமா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. பிறமொழி கலந்த சொற்கள் என்றால் ஐம்பதுக்கு மேல் தேறும்.
இவையனைத்தும் யானையின் உருவமைப்பு, நடத்தைப் பண்புகளின் அடிப்படையில் சூட்டப்பட்டப் பெயர்கள். நிகண்டுகளில் யானையின் உடலில் 25 பாகங்களுக்கு மேல் தனிப்பெயர்கள் காணப்படுகின்றன என்கிறார் பி எல்.சாமி.
ஒரு மொழியில் ஒரு சொல்லின் தோற்றமானது அந்நிலத்தோடும் அதன் பல்லுயிர்ச்செறிவோடும் தொடர்புடையது.
இவ்வாறாகத்தான் பல்லுயிரியச் செறிவு மிக்கப் பகுதியில் வாழ்ந்த நாம் இத்தன்மையைத் நம் மொழியிலும் ஏற்றி வைத்தோம்.
ஆனால் ஓர் உயிரினத்தைக் குறிக்கப் பல சொற்களைக் கொண்ட ஒரு மொழியை, அவ்வுயிரினம் குறித்த சொல் ஏதுமற்ற ஒரு வேற்று மொழி வீழ்த்தி வருகிறது. மற்ற சொற்களுக்கும் இது பரவினால் எதிர்காலத்தில் அது மொழியை ஒழித்த பண்பாட்டு மேலாதிக்கமாக மாறிவிடாதா?
- நக்கீரன்
- திருமணமான ஒரு ஆண்டில் பரிதாபம்
- உதவி கலெக்டர் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் கிராமம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி ரோஜா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன் இவர்களது திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரோஜா நேற்று முன் தினம் இரவு சுமார் 7.30 மணியளவில் வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
திருமணமாகி ஒரு வருடத்திற்குள் ரோஜா இறந்துள்ளதால் அது குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.






