என் மலர்
கதம்பம்
- காய்ஞ்ச இலையை தூர எறியாம சாய்ங்கால நேரத்துல புகைமூட்டம் போட்டால் கொசுவை விரட்டலாம்.
- கழுத்துவலி வர்றவங்க தலையணைக்கு பதிலா வெறும் துணியில நொச்சி இலையை வச்சி தூங்கலாம்.
மூலிகை தலையணை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதோ சொல்றேன்...
ஜலதோஷத்தால வர்ற தலைவலியில இருந்து பீனிசம்னு சொல்லக்கூடிய சைனஸ், மூக்கடைப்பு, கழுத்து பிடரியில வரக்கூடிய வலினு எல்லாத்துக்கும் நொச்சி தலையணை கைமேல் பலன் தரும்.
நொச்சி இலையை பறிச்சிட்டு வந்து தலையணையோட உறையில அதாவது நம்ம தலை படுற மாதிரி வச்சி தூங்கணும். இந்த இலை காய்ஞ்சு போனாலும் பரவாயில்லை. 10 நாள் வரைக்கும் வச்சிட்டு பிறகு அதை எடுத்துட்டு வேற இலையை வச்சி தூங்கலாம்.
காய்ஞ்ச இலையை தூர எறியாம சாய்ங்கால நேரத்துல புகைமூட்டம் போட்டால் கொசுவை விரட்டலாம்.
கழுத்துவலி வர்றவங்க தலையணைக்கு பதிலா வெறும் துணியில நொச்சி இலையை வச்சி தூங்கலாம்.
தூக்கம் வராம அவதிப்படுறவங்க மருதாணி இலையை மேலே சொன்ன மாதிரி வச்சி தூங்கினா தூக்கம் தூக்கமா வரும்.
மனநிலை பாதிப்பு உள்ளவங்களுக்கும், தூக்கமில்லாம தவிப்பவங்களும் மருதாணிப்பூவை தலையணைக்குள்ள வச்சி தூங்கினா நிச்சயமா பலன் கிடைக்கும்.
-மரிய பெல்சின்
- அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடு தெய்வீகமான வழிபாடாகக் கருதப்படுகிறது.
- எதையும் சாதாரணமாகச் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
அமாவாசைக்கு அடுத்துவரும் திரிதியை அதாவது, மூன்றாம் நாளில் தோன்றும் வளர்பிறையையே மூன்றாம்பிறை என்பார்கள்.
இந்த மூன்றாம் பிறைக்கு என்ன சிறப்பு என்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் நிலவு தெரியாது. அதற்கு மறுநாள் அதாவது மூன்றாம் நாள்தான் நிலவு மிளிரும்.
ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது வெட்ட வெளியிடத்தில் இருந்தோ, உயர்ந்த இடத்தில் இருந்தோ, மின் விளக்குகள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது காணலாம். அதன் மெல்லிய ஒளியைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஓர் புத்துணர்வைத் தூண்டும்.
அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடு தெய்வீகமான வழிபாடாகக் கருதப்படுகிறது.
உண்மையில் மூன்றாம்பிறையைக் காணவேண்டும் என்று முன்னோர்கள்கூறக்காரணம்தான் என்ன?
அமாவாசையின் மூன்றாம் நாளில் மிக மெலிதாகக் காணும் அந்தப்பிறை நிலாவைக் காணும் அளவுக்கு நம்முடைய பார்வைத்திறன் உள்ளதா எனச் சோதிக்கும் ஓர் கண் பார்வை ஆய்வுமுறைதான், இந்த மூன்றாம் பிறை காணுதல்.
அப்படி அதைக் காணும் அளவிற்கு நம்முடைய பார்வைத்திறன் இருக்குமேயானால், நம் உடல் நலம், மனநலம், குண நலம் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பது பொருள்.
எதையும் சாதாரணமாகச் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதனால் மூன்றாம்பிறை காணலுக்கு ஓர் தெய்வீகத் தன்மையை ஏற்றி, நம்மை இணங்கவைக்கும் உத்தியாகக் கையாள்கின்றனர், ஆன்மிகவாதிகள். மற்றபடி இதனால், வேறு நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவதெல்லாம் கட்டுக்கதைகளேயன்றி வேறு எவையுமில்லை.
ஆனால் உண்மையில் முழு நிலவைக் காணும்போது உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
-துலாக்கோல் சோம. நடராஜன்
- பட்டை தீட்டப்படாத பாரம்பரிய அரிசி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சர்க்கரை நோய் வராது.
- ஒருவேளை உணவிற்கும் மறுவேலை உணவிற்கும் குறைந்தபட்சம் 4 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
இன்றைக்கு சர்க்கரை நோய் தான் பல பேரை பாடாய்படுத்தி வருகிறது. இதனை விரட்டியடிக்கும் எளிய கைமருந்து இதோ...
வெந்தயம்- 50 கிராம்
சீரகம்- 75 கிராம்
மிளகு- 200 கிராம்
மூன்றையும் ஒன்றாக சேர்த்து வாணலியில் மிதமான அனலில் சன்னமாக வறுத்து பொடி ஆக்கி ஒவ்வொரு வேலை உணவின்போதும் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிடுங்கள், சர்க்கரை நோய் உங்களை விட்டு போயே போய்விடும். இதனுடன் நாட்டு சர்க்கரையோ அல்லது கருப்பட்டியோ தேவையான அளவுக்கு சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
பட்டை தீட்டப்படாத பாரம்பரிய அரிசி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சர்க்கரை நோய் வராது. வந்த நோயும் ஓடிப் போய்விடும்.
ஒருவேளை உணவிற்கும் மறுவேலை உணவிற்கும் குறைந்தபட்சம் 4 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும். அதுவும் பசித்து சாப்பிட வேண்டும். ரசித்து ருசித்து மென்று கூழாக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இடையிடையே நொறுக்கு தீனி தின்பதும் தேநீர் அருந்துவதும் சர்க்கரை வருவதற்கு காரணமாக அமைகின்றது.
எல்லா விடயங்களுக்கும் கவலைப்படுவது என்பது மிகப்பெரிய ஆபத்தை ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்துகின்றது. இதுவே எதிர்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கும் காரணமாக அமைகின்றது.
-மணிகண்டன்
- பனை மரம் பொதுவாக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஆனாலும் அதை அவ்வளவு எளிதில் சாய்த்துவிட முடியாது.
- பனை ஓலை விசிறிகள் உடல் நலத்துக்கு சிறப்பானது என்று மருத்துவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.
பனை மரத்தை நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். பனை மரத்தின் வேர் முதல் உச்சி வரை அனைத்து பாகங்களும் பயன்படும். இது தொடர்பாக நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் ஒரு பனை மரம் மனிதருக்கு 200-க்கும் மேற்பட்ட பலன்களை தருவதாக கண்டுபிடித்துள்ளனர்.
பனை மரத்தில் இருந்து ஒருவருக்கு தேவையான அத்தனை அத்தியாவசிய பொருட்களும் கிடைப்பதால் தான் அதை கற்பக விருட்சம் என்று நம் முன்னோர்கள் அழைத்தனர். பனம் பழம், நுங்கு, பதனி, பனங்கிழங்கு, பனை ஓலை, கற்கண்டு, கருப்பட்டி, உத்திரகட்டை, முகூர்த்தகால் கட்டை, பாளை என்று பனை மரம் தரும் பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
பனை மரம் பொதுவாக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஆனாலும் அதை அவ்வளவு எளிதில் சாய்த்துவிட முடியாது. ஒரு வலுவான பனை மரத்தை அடியோடு சாய்க்க வேண்டும் என்றால் ஒரு வாரம் புயல் வீசினால்தான் முடியும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இப்படி எந்த அளவுக்கு பனை மரம் வலுவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது பலன்களை தந்துகொண்டே இருக்கும். எவ்வளவு பெரிய வறட்சியையும் தாங்கும் பனை மரங்கள் நிலத்தடி நீரை அதிகமாக தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
உலகில் 108 நாடுகளில் பனைமரங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தான் பனை மரங்கள் அதிகம் இருக்கின்றன. அதிலும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக பனை மரங்களை காண முடியும்.
ஒரு காலத்தில் 50 கோடிக்கும் மேல் பனை மரங்கள் இருந்தன. தற்போது 5 கோடி பனை மரங்கள் கூட இல்லை.
கோடை காலத்தில் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலை மூலம் செய்யப்படும் விசிறிகள் மிகுந்த வரவேற்பை பெறும். பனை ஓலை விசிறிகள் உடல் நலத்துக்கு சிறப்பானது என்று மருத்துவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.
பனை ஓலை விசிறி மூலம் விசிறினால் சொக்க வைக்கும் சுகமான குளிர்ந்த காற்று கிடைக்கும். ஆதி காலத்தில் பனை ஓலை விசிறிகளை வைத்திருப்பதை அரசர்களும், பணக்காரர்களும் கவுரவமாக கருதினார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது அவர்கள் பனை ஓலை விசிறிகளை அதிகளவு பயன்படுத்தியது பல்வேறு வரலாற்று பதிவுகளில் உள்ளது.
மின் விசிறிகள் புழக்கத்துக்கு வந்தபிறகு பனை ஓலை விசிறி பயன்பாடு 90 சதவீதம் குறைந்து போனது. என்றாலும், இன்றும் பனை ஓலை விசிறியை விரும்பி பயன்படுத்துபவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தமிழகத்தில் திருத்தணி அருகே குறுமணி கிராமத்திலும், கடலூர் அருகே அண்ணவல்லி கிராமத்திலும் பனை ஓலை விசிறிகள் செய்வதை 5 தலைமுறையாக இன்றும் செய்து வருகிறார்கள். இத்தகைய கிராமத்தினர் மூலம் பனை ஓலை விசிறி நகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை ஆகிறது.
பனை ஓலை விசிறி தயாரிப்பவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 4 மாதங்கள்தான் அதிகமான ஓலை விசிறி செய்யும் மாதங்களாக இருக்கும். அந்த வகையில் தற்போது சென்னைக்கு பனை ஓலை விசிறி மிக அதிக அளவில் வந்துவிட்டது. கோயம்பேடு, அம்பத்தூர், மேடவாக்கம், வேளச்சேரி, பெருங்களத்தூர், திருவொற்றியூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பனை ஓலை விசிறி விற்பனை அமோகமாக நடக்கிறது.
ஒரு பனை ஓலை விசிறி 100 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை ஆகிறது. வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்ட விசிறிகள் அதிக விலைக்கு விற்பனை ஆகின்றன.
- கணக்குபோட்டால் ஒரு பழங்குடி பெண் ஆயுளில் ஐம்பதே முறைதான் மாதவிலக்கை சந்திக்கிறார்.
- வளர்ந்த நாடுகளில் இருக்கும் பெண்கள் ஆயுளில் 400 முறை மாதவிலக்கை சந்திக்கிறார்கள்.
மர்ஜோரி ஸ்கோஸ்டாக் எனும் ஆய்வாளர் ஆப்பிரிக்காவின் காலஹாரி பகுதியில் உள்ள பூர்வகுடி பெண்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு "நிசா: ஒரு பழங்குடி பெண்ணின் வாழ்க்கையும், வார்த்தைகளும்" எனும் நூலை எழுதினார். அதில் அவர் குறிப்பிடுவதாவது..,
"மாதவிலக்கு சமயம் வரும் பீரியட்ஸ் வலி என்றால் என்னவென்றே அந்த பெண்களுக்கு தெரியவில்லை. அவர்கள் உணவு மிக சத்தானதாக இருப்பதால் அவர்கள் மிக ஆரோக்கியமாக உள்ளனர். பெண்கள் 15- 16 வயதில் தான் வயதுக்கு வருகிறார்கள். வயதுக்கு வந்ததும் குறைந்த காலத்திலேயே கல்யாணம் ஆகி கர்ப்பமும் ஆகிவிடுகிறார்கள்.
ஆனால் பிள்ளைக்கு நாலைந்து வயது ஆகும்வரை அவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவதில்லை. இப்படி பிள்ளைக்கு நாலைந்து வயது வரை திட உணவை கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதால், அவர்களுக்கு பீரியட்ஸ் சுத்தமாக நின்றுவிடும். இயற்கையான கருத்தடை முறை.
அதன்பின் மீண்டும் கர்ப்பம், மீண்டும் 10 மாதம் மாதவிலக்கு இல்லை, மீண்டும் தாய்ப்பால்...
கணக்குபோட்டால் ஒரு பழங்குடி பெண் ஆயுளில் ஐம்பதே முறைதான் மாதவிலக்கை சந்திக்கிறார். அதனால் அவர்களுக்கு மாதவிலக்கு வலியானது விசயமாக இருப்பதில்லை. இதே வளர்ந்த நாடுகளில் இருக்கும் பெண்கள் ஆயுளில் 400 முறை மாதவிலக்கை சந்திக்கிறார்கள். 10 வயது முதல் 50 வயதுவரை ஓரிரு ஆண்டுகளை தவிர ஆயுளில் பெரும்பங்கு ஆண்டுகளில் அவர்களின் உடல் மாதவிலக்கு சமய ஹார்மோன்களை உற்பத்தி செய்து களைத்துவிடுகிறது. வலி தாங்க முடியாததாக மாறிவிடுகிறது. வளர்ந்த நாடுகளில் மார்பக புற்றுநோய் பெருமளவு வர இதுவும் ஒரு காரணம்.
- நியாண்டர் செல்வன்
- கொடிப்பசலையில் பச்சை மற்றும் சிவந்த நிறமுடைய தண்டுகளைக் கொண்ட வகைகள் உள்ளன.
- சுண்ணச்சத்து, வைட்டமின்–ஏ , இரும்புச்சத்து, ஆக்ஸாலிக் ஆசிட், பெருலிக் ஆசிட், அமினோ அமிலங்கள் போன்றவை பசலையில் இருப்பதால், உணவு முறையில் சேர்த்து வர ஊட்டத்தைப் பரிசளிக்கும்.
விரல்களுக்கு நிறத்தைக் கொடுக்க மருதாணி… முகத்தை பொலிவாக்க கற்றாழை… தோலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்க மஞ்சள்… அவ்வகையில் உதட்டிற்கு நிறத்தைக் கொடுக்க கொடிப்பசலை! கூடவே குளிர்ச்சிக்கு பெயர்போன கொடிப்பசலை தாவரத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பது, இப்போதைய சுட்டெரிக்கும் வெயிலுக்கு உகந்ததாக இருக்கும்.
கனிந்த கொடிப்பசலை பழங்களை விரல் நுனியில் சிதைத்து, 'லிப்-ஸ்டிக்' போல உதடுகளில் பூசிக்கொள்ள சிவந்த நிறத்தைக் கொடுக்கும். இப்போதிருக்கும் லிப்-ஸ்டிக் வகையறாக்களுக்கு பசலைப் பழங்களே முன்னோடி எனலாம். உணவுகளில் சேர்க்கப்படும் இயற்கை சாயத்திற்கு இதன் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கொடிப்பசலையில் பச்சை மற்றும் சிவந்த நிறமுடைய தண்டுகளைக் கொண்ட வகைகள் உள்ளன. சுண்ணச்சத்து, வைட்டமின்–ஏ , இரும்புச்சத்து, ஆக்ஸாலிக் ஆசிட், பெருலிக் ஆசிட், அமினோ அமிலங்கள் போன்றவை பசலையில் இருப்பதால், உணவு முறையில் சேர்த்து வர ஊட்டத்தைப் பரிசளிக்கும்.
இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் இரத்தவிருத்திக்கு உதவும். குறைவான கலோரிகளுடன் நிறைவான நுண்ஊட்டங்களை வழங்குவதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பசலை சிறந்த ஆயுதம்.
குளிர்ச்சிக்கு உத்தரவாதம்:
குளிர்ச்சித் தன்மையுடையதால், மழைக்காலங்களில் பசலைக் கீரையின் பயன்பாட்டினை குறைத்துக் கொள்வது நல்லது. கார்காலம் அல்லாத மற்றைய பெரும்பொழுதுகளில், இதன் இலைகளை பருப்பு சேர்த்து கடைந்து, மிளகு, சீரகம் சேர்த்து ருசியாக சாப்பிடலாம். வெப்ப நோய்களை உடனடியாக வேரறுக்கும் தன்மை பசலைக்கு இருக்கிறது.
பசலைக்கீரையை புளி நீக்கி சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வரலாம். ஆண்மையை அதிகரிப்பதற்கான இயற்கை ரெசிப்பி இது. முறையற்ற மாதவிடாயை ஒழுங்குப்படுத்த, பசலையின் வேரை அரைத்து, அரிசி கழுவிய நீரில் கலந்து பருகுவது ஒரிசா மக்களின் வழக்கம்.
ஏப்ரல், மே மாதங்களில் உண்டாகும் வேனல்கட்டிகளுக்கு இதன் இலையை சிதைத்து கட்ட விரைவில் பலன்கொடுக்கும். வயிற்றுப் புண்ணை குணமாக்கும் தன்மை இருப்பதால் இதன் இலைச்சாறு ஒரு ஸ்பூனோடு, சிறிது வெண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
வெயிலில் சென்று வந்தவுடன் ஏற்படும் தலைவலிக்கு, இதன் இலைகளை அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். கசகசாவோடு பசலை இலைகள் மற்றும் அதன் தண்டுகளை சேர்த்தரைத்து, நெற்றியில் பூச நல்ல உறக்கத்தை உண்டாக்கும். பசலை இலைச் சாற்றை முகத்தில் பூசிவர முகம் பளபளப்படையும்.
இதன் இலைகளையும் தண்டுகளையும் தண்ணீரிலிட்டு துழாவ, நீருக்கு குழகுழப்புத் தன்மை கிடைக்கும். குழகுழப்புத் தன்மையுடன் சூப் தயாரிக்க ஆசைப்படுபவர்கள், கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டண்ட் சூப் பவுடர்களுக்குப் பதிலாக, பசலை ஊறிய நீரை வைத்து, சூப் வகைகளை தயாரிக்கலாம்.
பெரும்பாலான வீட்டு வேலிகளிலும் வீட்டிற்கு முன்பும் கொடியேறிக்கொண்டிருக்கும் 'மணி-ப்ளாண்ட்' எனும் அழகுத் தாவரத்திற்கு பதிலாக, பசலைக்கொடிக்கு வாய்ப்பு கொடுங்கள். அழகான செவ்விய/பசுமையான கொடி, உங்கள் கண்களுக்கு விருந்து படைக்க சரசரவென உருவெடுக்கும்.
-டாக்டர்.வி.விக்ரம்குமார்
- தேர்வு நேரங்களில் மாணவ-மாணவிகள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- நட்ஸ் மற்றும் உலர் பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு, ஆற்றல் தேவைப்படும் நேரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடலாம்.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு, தூங்கும் நேரம், மற்ற வழக்கங்களை முறையாக கடைபிடிக்காவிட்டால் நன்றாக படித்திருந்தாலும், சரியாக தேர்வு எழுதுவது கடினம். எனவே தேர்வு சமயங்களில் குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது பெற்றோர்களின் முக்கிய பொறுப்பாகும். ஏனெனில் தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு அதிகபடியான மன அழுத்தம் ஏற்படுகிறது.
ஆரோக்கியமான உணவு நாள் முழுவதும் படிக்க அவர்களுக்கு போதுமான ஆற்றலைக் தருகிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிடும் போது, ஆர்வத்துடன் பாடங்களை கற்றுக்கொள்ள முனைகிறார்கள். தேர்வு காலத்தில் மாணவர்கள் தூங்கும் நேரம் உள்பட 24 மணி நேரமும் மூளை இயங்கிக் கொண்டே இருக்கும். மூளைக்கு தொடர்ச்சியான ஆற்றல் நீங்கள் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது. எனவே தேர்வு நேரங்களில் மாணவ-மாணவிகள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நட்ஸ் மற்றும் உலர் பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு, ஆற்றல் தேவைப்படும் நேரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடலாம். வால்நட்ஸ், பாதாம், முந்திரி பருப்பு, கடலைப் பருப்பு, திராட்சை, பேரீட்சை போன்றவை நல்ல ஆற்றலை கொடுக்கும். மூளையின் செயல்திறனை அதிகரிக்க சத்து நிறைந்த கேரட், வெள்ளரிக்காய், ஊட்டி குட மிளகாய் (கேப்சியம்) போன்ற காய்கறிகளை சாப்பிடலாம். இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி தேவைப்படும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது அவசியம்.
கூல்டிரிங்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்வு அறைக்கு செல்வதற்கு சில மணி நேரம் முன்பாக போதுமான அளவு தண்ணீர் குடித்து விட வேண்டும். பிறகு இடைவெளி விட்டு விடுங்கள். தேர்வு நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவையை இது உருவாக்காது. காலை உணவில் வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்வது அவசியம். தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் தொடர்ந்து உட்கார்ந்து எழுதுவதால் ஏற்படும் கை, கால் சோர்வுக்குக் காரணம் பொட்டாசியம் சத்து குறைவுதான். அதை ஈடுகட்டும் சிறந்த உணவு எதுவென்று கேட்டால், அது வாழைப்பழமே.
குறைந்த அளவு இனிப்புச்சுவை கொண்ட மாவுப்பொருட்கள் மற்றும் புரதப் பொருட்கள் சேர்ந்த உணவே சமச்சீரான காலை உணவு. அனைத்து சத்துகளும் சமஅளவு கொண்ட வெண் பொங்கல் மற்றும் கேழ்வரகுப் புட்டு, அவித்த பச்சைப்பயறு கலவை உடலுக்குத் தேவையான அதிக கலோரியைத் தொடர்ச்சியாக வழங்கும். தேர்வு காலங்களில் மட்டுமல்ல இயல்பான மற்றநாட்களிலும் மாணவ-மாணவிகள் ஆரோக்கியமான உணவுகளை உண்பது சிறந்தது.
- வயது முதிர்ந்தவர்களுக்கு மற்றும் சிலருக்கு தாக உணர்வு சரியாக ஏற்படுவதில்லை.
- தாக உணர்வை ஏற்படுத்தும் நுட்பம் முறையாக வேலை செய்வதில்லை.
உணவு, காற்று போல மனிதன் உயிர்வாழ அத்தியாவசியத் தேவையாக இருப்பது "நீர்"
நீரை தினமும் எவ்வளவு அருந்த வேண்டும்?
அவரவர் தேவைக்கு ஏற்பத் தான்.
வயது, வாழும் இடத்தின் தட்பவெப்ப சூழ்நிலை, அவரவர் செய்யும் வேலை, உடல் கொண்ட நோய்கள் , அவரவரின் உடல் எடை போன்றவற்றை வைத்து தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும் என்ற பொதுவான விதி இருப்பதெல்லாம் பிறகு எதற்காக? தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத் தான் அந்த பொதுவான விதி.
சரி நமது உடலுக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை எப்படி அறிவது?
தண்ணீர் தேவை என்று அனிச்சையாக எழும் "தாக உணர்வை" வைத்துத் தான்.
நமது மூளையில் இதற்கென பிரத்யேக மையம் செயல்படுகிறது. இதன் வேலையே நமது உடலில் உள்ள நீருக்கும் உப்புக்கும் இடையே சமநிலையை தக்கவைப்பதாகும்.
உடலில் நீர் குறையும் போது உப்பின் அளவு கூடும். அப்போது தாக மையம் உந்தப்பட்டு நீர் அருந்தத் தூண்டப்படுவோம்.
உடலில் நீர் கூடும் போது சிறுநீரகங்களுக்கு கட்டளை பறந்து சென்று தேவைக்கு மிகுதியாக உள்ள நீர் வெளியேற்றப்படும். எனவே தாகத்துக்கு ஏற்றவாறு நீர் அருந்துவது சிறப்பானது சரியானதும் கூட.
வயது முதிர்ந்தவர்களுக்கு மற்றும் சிலருக்கு தாக உணர்வு சரியாக ஏற்படுவதில்லை. தாக உணர்வை ஏற்படுத்தும் இந்த நுட்பம் முறையாக வேலை செய்வதில்லை.
அவர்களுக்கு தாங்கள் சரியாக நீர் அருந்துகிறோமா என்பதை தோராயமாக அறிவதற்கு இருக்கும் வழிமுறைகள்..
மூன்று முதல் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு முறையாவது சிறுநீர் கழிக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பகலில் விழித்திருக்கும் போது (காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரை ) ஐந்து முதல் ஆறு தடவை சிறுநீர் கழிப்பது நல்லது.
இரவில் ஒரு முறை சிறுநீர் கழிக்க எழுவதும் நார்மல் தான்.
ஆறு மணிநேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் செல்வது நல்லதல்ல.
இதற்கடுத்த படியாக சிறுநீரின் நிறத்தை வைத்து நம்மால் நீர் சத்து உட்கொள்ளலின் அளவை அறிந்து கொள்ள முடியும் .
சிறுநீர் - சுத்த வெள்ளை நிறமாக அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நாம் நீர் குடிக்கும் அளவுகள் சரி என்று தோராயமாகக் கொள்ளலாம்.
சிறுநீர் - அடர் மஞ்சள் / பழுப்பு நிறம்/ சிவப்பு நிறத்தில் சென்றால் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். சில நேரங்களில் உட்கொள்ளப்படும் மாத்திரைகளின் நிறம் சிறுநீரில் வெளிப்படும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து அதீத நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் போது சிறுநீர் வெளியேறும் போது சிறுநீர் பாதையில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டு நீர்க்கடுப்பு உண்டாகும். இதுவே சிறுநீர் பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்.
வயது வந்த ஒரு மனிதன் - தினசரி 2 லிட்டர் அளவு சிறுநீராக வெளியேற்றுவது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுக்க உதவும் என்று அறியப்படுகிறது.
காலை எழுந்ததும் ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் அருந்துவதால் பலன் பாதகம் என்ன?
இரவு பல மணிநேரங்கள் நீர் அருந்தாமல் இருப்பதால் காலை எழுந்ததும் கழிக்கும் சிறுநீர் - அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கலாம். அது நார்மல் தான். கவலைப்பட வேண்டாம்.
நல்ல நிலையில் சிறுநீரகங்கள் இயங்கும் ஒருவர் - தாராளமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் காலை நேரத்தில் குடிக்கலாம். இதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை.
தேவைக்கு அதிகமாக நீர் சேர்ந்தால் சிறுநீரகம் தானாக வெளியேற்றி விடும் என்பதால் ஒரு லிட்டர் வரை பிரச்சனை இல்லை. அதிகாலை நீர் அருந்துவதால் உடலில் உள்ள கெட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் வெளியேற்றப்படுமாமே?
பல்வேறு வளர்சிதை மாற்ற விளைவுகளால் ரத்தத்தில் அதிகமாக வெளியேற்றப்பட வேண்டிய பொருட்கள் உண்டாகினால் சிறுநீரகங்கள் தானாக சிறுநீர் உற்பத்திய அதிகரித்து அவற்றை வெளியேற்றி விடும்.
உதாரணம் ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் மிதமிஞ்சி ஏறும் போது சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதற்கும் நீர் அருந்துவதற்கும் சம்பந்தமில்லை. நாம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும். எவ்வளவு சிறுநீர் வெளியேற வேண்டும் என்பதை நமது உடல் நிர்வகிக்கும்.
நாம் பருகும் நேரடியான நீர் அன்றி ஒருநாளில் பருகும் காபி / டீ ஊற்றிக்கொள்ளும் குழம்பு , குடிக்கும் பழச்சாறுகள், வெள்ளரிக்காய் , நீர்ப்பழம் போன்ற பழங்களில் உள்ள அனைத்தும் நீர் சத்தில் தான் சேரும்.
இதய செயலிழப்பு,சிறுநீரக நோய், கல்லீரல் நோய் இருப்பவர்கள் அவரவர் மருத்துவர் பரிந்துரைத்த நீர் அளவுகளை உட்கொள்ள வேண்டும்.
-டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
- மீன்கள் அடைபட்டிருந்த நீர் தேக்கத்தில் ஒரு குட்டி சுறாவையும் இட்டு வைத்தான்.
- அப்புறம் என்ன? சுறா மீனிடமிருந்து உயிர்பிழைக்க மற்ற மீன்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தன.
இறைவன் எழுதிய அழகான மென்பொருள் தான் பிரச்சனை...
பிரச்சனை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை.
ஒரு ஜப்பானிய கதை...
இது குளிர்சாதன பெட்டி இல்லாத காலத்து கதை. கடலில் மிக நீண்ட தூரம் சென்று மீன் பிடித்து வந்தால் அங்கே பிடித்தமான மீன் வகைகள் நிறைய இருக்கும் என்று அவர்கள் அறிந்து கொண்டனர்.
பல மணி நேரம் படகில் பயணித்து நடுக்கடல் சென்று மிக அதிக அளவு மீன்களை மீனவர்கள் பிடித்தனர்.
பல நாட்கள் தங்கியிருந்து அதிகமான மீன்களை பிடித்து கொண்டு கரைக்கு வந்தால் அவர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தது.
பல மீன்கள் இறந்து இருந்தன .
உலர்ந்திருந்தன.
நாற்றம் பிடித்தன.
எனவே படகில் செயற்கை நீர் தேக்கம் உண்டாக்கி பிடிபட்ட மீன்களை அதில் இட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த முறையில் சிறிய வெற்றி கிடைத்திருந்தது.
மீன்கள் சாகவில்லை.
எனினும் முழு வெற்றி இல்லை....
கரைக்கு கொண்டு வரப்படும் மீன்கள் சோர்ந்திருந்தன.
எனவே வழக்கமான சுவை இல்லை.
இதனால் விற்பனையிலும் தேக்க நிலை...
எல்லையற்ற கடல் நீரில் நீந்தி களித்திருந்த மீன்களுக்கு, நான்கு பக்கமும் எல்லை உள்ள சிறிய நீர்த்தொட்டியில் உயிர் வாழ்வது மிகப்பெரிய அலுப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த நிலையில், அவர்களில் ஒரு புத்திசாலி மீனவன் ஒரு வழியை கண்டுபிடித்தான்.
மீன்கள் அடைபட்டிருந்த நீர் தேக்கத்தில் ஒரு குட்டி சுறாவையும் இட்டு வைத்தான்.
அப்புறம் என்ன? சுறா மீனிடமிருந்து உயிர்பிழைக்க மற்ற மீன்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தன.
பிழைப்பு என்பது அதன் வாழ்வின் அர்த்தம் ஆனது.
எப்போதும் அலெர்ட்டாக இருந்ததால் கரைக்கு கொண்டு வரும் வரை அதன் சுவையும் குறையவில்லை.
நம் வாழ்வும் அப்படித்தான்...
நமக்கு விருப்பமானது எல்லாம் நம் படுக்கைக்கு அருகில் வந்தால் நாம் சீக்கிரமே இறந்து விடுவோம். நம் ரத்த ஓட்டம் நின்று விடும். நம் உடலில் பல உறுப்புகள் இயங்காமல் செயல் இழந்துவிடும்.
பிரச்சனை தான் வலிமை. பிரச்சனை தான் உயிர்.
- ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சங்கீதத்தில் மூழ்கிய சோமு, ஒரு கச்சேரியில் சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை பாடியதைக் கேட்டு மயங்கி அவரிடம் மாணவனாகச் சேர்ந்தார்.
- பதினான்கு வருடங்கள் குருகுலவாசம் செய்து நாயனாப் பிள்ளை இசைப் பாரம்பரியத்தின் முக்கிய வாரிசாக தன்னை உருவாக்கிக்கொண்டார்.
திருச்செந்தூரின் கடலோரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை கிருபானந்த வாரியாரின் சொல்லமுது கட்டிவைத்திருந்தது. அப்போது ஒரு வித்வான் அரங்குக்குள் நுழைவதைப் பார்த்து வாரியார் சொன்னார், "இவ்வளவு நேரம் நான் என் அப்பன் முருகனைப் பத்திச் சொன்னேன். என் தம்பி இதோ வந்துட்டான், அவன் முருகனைக் கையைப்பிடிச்சுக் கொண்டுவந்து உங்க கண் முன்னால நிறுத்துவான்."
வாரியார் குறிப்பிட்ட கலைஞர் ரஞ்சித கானமணி மதுரை எஸ்.சோமசுந்தரம். சுவாமிமலையில் பிறந்த சோமுவின் இயற்பெயர் பரமசிவம். அரசுப்பணியில் இருந்த சோமுவின் தந்தையார் பணி நிமித்தமாக குடும்பத்துடன் மதுரைக்கு இடம்பெயர்ந்தார்.
சிறு வயதில் குஸ்தி, சிலம்பம் போன்றவற்றில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வந்தார் சோமு. அங்கு பயிற்சியாளராக இருந்த நாராயண கோனார் காளீஸ்வரன் கோவிலில் பக்திப்பாடல்கள் பாடுவார். அவருக்குத் துணையாய் ஸ்ருதிப்பெட்டியை இசைப்பார் சோமு. ஒருநாள் நாராயணக் கோனாருக்காக கோவிலில் காத்திருந்த சோமு களைப்பில் தூங்கிப் போனார். அப்போது அவர் கனவில் காளி வந்து, "நீ இசைக் கற்றுக்கொள்", என்று பணித்ததாக ஒரு நேர்காணலில் சோமுவே குறிப்பிட்டுள்ளார்.
ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சங்கீதத்தில் மூழ்கிய சோமு, ஒரு கச்சேரியில் சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை பாடியதைக் கேட்டு மயங்கி அவரிடம் மாணவனாகச் சேர்ந்தார். பதினான்கு வருடங்கள் குருகுலவாசம் செய்து நாயனாப் பிள்ளை இசைப் பாரம்பரியத்தின் முக்கிய வாரிசாக தன்னை உருவாக்கிக்கொண்டார்.
1950-களில் உச்சிக்கு வந்த சோமு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இசையரசராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவர் கச்சேரி நடக்காத கிராமமே தமிழகத்தில் இல்லையெனலாம். "ஒருமுறை வீட்டை விட்டு கச்சேரிக்கு கிளம்பிவிட்டால் திரும்ப வீட்டுக்கு வர குறைந்தபட்சம் 35 நாட்கள் ஆகும். ஊர் ஊராய் கச்சேரிக்காக பயணித்துக்கொண்டே இருப்போம்" என்கிறார் சோமுவின் சீடர் மழையூர் சதாசிவம்.
-லலிதாராம்
- அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது.
- ர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.
சர்க்கரை நோய் டாக்டர் ஒருவர் கூறும் போது, "நவீன ஆலைகளில் தீட்டப்பட்டு அழகான சாக்கு பைகளில் கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்யப்பட்டு வரும் அரிசிகளில் பெருமளவில் காணப்படுவது மாவுச்சத்து மட்டுமே. இந்த அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது. இதனை 'குளுக்கோஸ் ரைசிங் எபெக்ட்' என்போம். இன்றைக்கு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.
நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து வெள்ளை அரிசியை உண்ணும்போது அவர்களின் உடல் நிலை மேலும் மோசமாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக சிவப்பு அரிசி என்று சொல்லப்படும் பாரம்பரிய தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியை உண்ணும்போது அதில் இருக்கும் அதிகமான வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவை உடலில் சர்க்கரை உயர்வதை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு வருவதை தடுப்பதுடன், நீரிழிவு இருந்தாலும் கட்டுக்குள் வைக்கிறது" என்றார்.
- இலுப்பை சம்பா கால் மற்றும் உடல் வலி நீங்க உதவுகிறது.
- தூயமல்லி அரிசி தோலின் சுருக்கம் போக்கும். உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது.
பெண்களுக்கு ஏற்படும் உடல்நலக்கோளாறுகளை சரிசெய்ய நமது பாரம்பரிய அரிசி ரகங்கள் கைகொடுக்கின்றன. இது தொடர்பாக சித்த மருத்துவ குறிப்புகளிலும் கூறப்பட்டுள்ளன. அதுபற்றிய தகவல்களை சித்தா டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
கருப்பு கவுனி: ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்பு இருக்கும் பெண்கள் இந்த அரிசி சாதத்தை சாப்பிட்டு வந்தால், நாளடைவில் நிவாரணம் கிடைக்கக்கூடும்.
பூங்கார் அரிசி: பெண்களுக்கு கருப்பை கட்டி உருவாகாமல் தடுக்க பெண் குழந்தைகள் பூப்பெய்திய காலத்தில் இருந்தே இந்த அரிசியை கொடுத்து வரலாம். மாதவிடாய் பிரச்சினையை சரிசெய்யும் ஆற்றலும் இதற்கு இருப்பதாக கூறுகிறார்கள். பிரசவத்துக்கு பின்பு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
பிசினி அரிசி: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் உடல் அலுப்பை குறைக்கவும், சுகப்பிரசவம் நடைபெறவும் இந்த அரிசி உதவும். மாதவிடாய் கோளாறுகளையும், இடுப்பு வலியையும் குணமாக்கும் பண்பு இந்தரக அரிசிக்கு உள்ளதாக கூறுகிறார்கள்.
குழியடிச்சான் அரிசி: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும்.
சூரக்குறுவை: பெண்களுக்கு ஹார்மோன் மாறுபாடு காரணமாக ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க இந்த அரிசி உதவுகிறது.
குடை வாழை அரிசி: குடல் சுத்தமாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என கூறுகிறார்கள்.
காட்டுயானம்: குழந்தைகள் செழுமையாக வளர உதவும்.
காலா நமக்: நரம்பு, ரத்தம் சார்ந்த நோய்கள் வரவிடாமல் தடுக்கும்.
அறுபதாம் குறுவை: எலும்புகள் பலமாக உதவும்
இலுப்பை சம்பா: கால் மற்றும் உடல் வலி நீங்க உதவுகிறது.
தங்க சம்பா: பல், இதயம் வலுவாகும்
நீலம் சம்பா: ரத்த சோகையை நீக்கும் பண்பு இதற்கு உள்ளது.
கருடன் சம்பா: உள்ளுறுப்புகளை பலப்படுத்தும்.
மாப்பிள்ளை சம்பா: நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை அதிகரிக்கும்.
கிச்சிலி சம்பா: இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து உள்ளதால் உடல் வலிமை பெறும். சருமம் பொலிவாகவும் உதவும்.
சீரக சம்பா: உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல் நீங்கும். பாரம்பரிய அரிசிகளில் சுவையான ரகம் இது.
வாலன் சம்பா: பெண்களுக்கு உடல் வலிமை அளிக்கும். சுகப்பிரசவத்துக்கான வலிமையையும் கொடுக்கிறதாம்.
வாடன் சம்பா: ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும்.
கருங்குறுவை: நோயினால் இழந்த வலுவை மீட்டெடுக்க இந்த அரிசி சாதம் உதவும்.
கார் அரிசி: தோல் நோய்களை குணப்படுத்தும் பண்பு இதற்கு உள்ளதாக கூறுகிறார்கள்.
தூயமல்லி அரிசி: தோலின் சுருக்கம் போக்கும். உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது.
சேலம் சன்னா: தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
மூங்கில் அரிசி: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.






