என் மலர்
கதம்பம்

மதுரை தந்த இசைமாமணி
- ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சங்கீதத்தில் மூழ்கிய சோமு, ஒரு கச்சேரியில் சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை பாடியதைக் கேட்டு மயங்கி அவரிடம் மாணவனாகச் சேர்ந்தார்.
- பதினான்கு வருடங்கள் குருகுலவாசம் செய்து நாயனாப் பிள்ளை இசைப் பாரம்பரியத்தின் முக்கிய வாரிசாக தன்னை உருவாக்கிக்கொண்டார்.
திருச்செந்தூரின் கடலோரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை கிருபானந்த வாரியாரின் சொல்லமுது கட்டிவைத்திருந்தது. அப்போது ஒரு வித்வான் அரங்குக்குள் நுழைவதைப் பார்த்து வாரியார் சொன்னார், "இவ்வளவு நேரம் நான் என் அப்பன் முருகனைப் பத்திச் சொன்னேன். என் தம்பி இதோ வந்துட்டான், அவன் முருகனைக் கையைப்பிடிச்சுக் கொண்டுவந்து உங்க கண் முன்னால நிறுத்துவான்."
வாரியார் குறிப்பிட்ட கலைஞர் ரஞ்சித கானமணி மதுரை எஸ்.சோமசுந்தரம். சுவாமிமலையில் பிறந்த சோமுவின் இயற்பெயர் பரமசிவம். அரசுப்பணியில் இருந்த சோமுவின் தந்தையார் பணி நிமித்தமாக குடும்பத்துடன் மதுரைக்கு இடம்பெயர்ந்தார்.
சிறு வயதில் குஸ்தி, சிலம்பம் போன்றவற்றில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வந்தார் சோமு. அங்கு பயிற்சியாளராக இருந்த நாராயண கோனார் காளீஸ்வரன் கோவிலில் பக்திப்பாடல்கள் பாடுவார். அவருக்குத் துணையாய் ஸ்ருதிப்பெட்டியை இசைப்பார் சோமு. ஒருநாள் நாராயணக் கோனாருக்காக கோவிலில் காத்திருந்த சோமு களைப்பில் தூங்கிப் போனார். அப்போது அவர் கனவில் காளி வந்து, "நீ இசைக் கற்றுக்கொள்", என்று பணித்ததாக ஒரு நேர்காணலில் சோமுவே குறிப்பிட்டுள்ளார்.
ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சங்கீதத்தில் மூழ்கிய சோமு, ஒரு கச்சேரியில் சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை பாடியதைக் கேட்டு மயங்கி அவரிடம் மாணவனாகச் சேர்ந்தார். பதினான்கு வருடங்கள் குருகுலவாசம் செய்து நாயனாப் பிள்ளை இசைப் பாரம்பரியத்தின் முக்கிய வாரிசாக தன்னை உருவாக்கிக்கொண்டார்.
1950-களில் உச்சிக்கு வந்த சோமு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இசையரசராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவர் கச்சேரி நடக்காத கிராமமே தமிழகத்தில் இல்லையெனலாம். "ஒருமுறை வீட்டை விட்டு கச்சேரிக்கு கிளம்பிவிட்டால் திரும்ப வீட்டுக்கு வர குறைந்தபட்சம் 35 நாட்கள் ஆகும். ஊர் ஊராய் கச்சேரிக்காக பயணித்துக்கொண்டே இருப்போம்" என்கிறார் சோமுவின் சீடர் மழையூர் சதாசிவம்.
-லலிதாராம்






