என் மலர்
கதம்பம்
- உலகில் வாழும் 90% மக்கள் பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என ஆய்வு சொல்கிறது.
- அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது.
பெண்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சும் காலம் கனிந்து வருவது ஆரோக்கியமான விசயம். +2 தேர்வு முடிவுகளைப் பார்த்தால் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஐ.டி கம்பெனிகளை எட்டிப் பார்த்தால் இளம்பெண்களே அதிகம் தென்படுகிறார்கள். கார்ப்ரேட் ஆஸ்பிடல்களில் பெண் டாக்டர்களே அதிகம்.
இந்நிலையில், இப்போது யார் பாலின பாகுபாடு பார்க்கிறார்கள்? என்கிறார்கள். சமீபத்தில் ஐநா ஒரு ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. உலகில் வாழும் 90% மக்கள் (இதில் பெண்களும் சேர்த்து) பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என அந்த ஆய்வு சொல்கிறது. இதில் அதிக அளவில் பாலின பேதத்தை கடைபிடிக்கும் நாடாக ஜிம்பாவேவையும், பாகுபாடு குறைந்த அளவில் கடைபிடிக்கும் நாடாக ஐரோப்பிய நாடான ஆண்ட்ரோராவையும் அடையாளம் கண்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு, கடமையுணர்வு, தொழில்துறை அறிவு போன்றவை ஆண்களுக்கு உரித்தானது என 70% இந்திய ஆண்கள் இவ்வாய்வில் கூறியிருப்பதாக தெரிய வருகிறது.
உலகில் 231 நாடுகள் உள்ளன. இதில் 193 நாடுகளில் 10 பெண் ஆளுமைகளே அரசியலில் பிரகாசிக்கின்றனர். நாகரிகத்தில் முன்னேறியவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள், பெண்களை அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்று கருதுகின்றனர்.
அதேவேளை கடந்த கோவிட் தொற்று காலம், இத்தகைய நிலையை சிறிது கலைத்தது.பெண் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்ட நியூசிலாந்து, ஜெர்மனி, தைவான், நார்வே போன்ற நாடுகளில் கோவிட்-உயிரிழப்புகள் குறைவாக இருந்தன.
பெண் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, கோவிட்டுக்கு எதிராக போராடிய முன்களப் பணியாளர்கள் எனப் பாராட்டப்பட்டதில் 70% பேர் பெண் மருத்துவர்கள். 90% செவிலியர்கள் பெண்கள். 80% தூய்மைப் பணியாளர்கள் பெண்கள்.
இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் தங்களை நிரூபித்து வந்திருக்கிறார்கள். அதேவேளை பெண்களுக்கெதிரான குற்றங்களும் இன்னும் குறைந்தபாடில்லை! என்பதையும் நாம் கவலையோடு பரிசீலிக்க வேண்டியுள்ளது.
உலக அளவில் பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலை, தாம்ஸன் ராய்டர்ஸ் எனும் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது.
இந்தியாவில், 4 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். பெண்கள் பாலியலில் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது, எய்ட்ஸ் நோய், பெண் சிசுக்கொலை, புறக்கணிக்கப்படுவது, பணி இடங்களில் அவமதிப்பு, என பல இன்னல்களை இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
அதுபோல் அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் எனும் அடிப்படையில் 193 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இந்தியா 149வது இடத்தில்தான் இருக்கிறது.
இதனால் பெண்களை பாதிக்கும் சட்டங்கள் இயற்றப்படும்போது, வலிமையாக எதிர்த்து குரலெழுப்ப முடியாத நிலை உருவாகிறது. உதாரணமாக நாப்கினுக்கு ஜிஎஸ்டி போட்டபோது பாராளுமன்றத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை.
இந்தியாவில் பெண்களின் நிலை முன்னேறி உள்ளது எனக் கூறுவோரும் இருக்கின்றனர். ஆனால் யதார்த்த நிலவரம் வேறு. கடந்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் (கேரளா விதிவிலக்கு) 10.16% பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை வளர்ப்பது, கல்வி அளிப்பது, திருமணம் செய்து கொடுப்பது சுமையென ஆணாதிக்க சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்துள்ளது.
கிராமப்புறங்களில் நிலவும் வறுமை உள்ளிட்ட காரணங்களால் பெண் குழந்தைகளின் கற்றல் இடைநிறுத்தப்படுகிறது.பெரும்பாலான பணியிடங்களில் குறைந்த கூலிக்கே பெண்கள் அமர்த்தப்படுகிறார்கள்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. காந்தி கனவு கண்டமாதிரி, இரவு நேரங்களில் பெண்கள் சுதந்திரமாக வீதியில் நடப்பது இருக்கட்டும், இணையத்தில் உலவமுடிகிறதா?
எனவே, சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதென்பது, மானுடத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் சுதந்திரத்தை, பாதுகாப்பை, மாண்பை, சுயமரியாதையை உறுதி செய்தவதாகும்.
-கரிகாலன்
- சிறு சிறு சருமப் பிரச்சினைகள் உள்ளிட்ட பலவற்றை ஓரளவிற்குத் தவிர்க்கலாம்.
- தண்ணீர் குடிப்பதற்கு அறிவுறுத்தி கொண்டே இருக்க வேண்டும்.
வெய்யில் அதிகமாகிறது... கவனமாக இருங்கள்...
உங்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள், உங்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி அளவான தண்ணீர் அருந்த வேண்டும்.
ஒருவேளை, தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை என்றால், உங்கள் உடலுக்குத் தேவையான நுண் சத்துகள் கிடைக்காமல் இருக்கலாம்.
இதற்கு தர்பூசணி, இளநீர், மோர், கூழ், பழச்சாறு, வெள்ளரி, நுங்கு, பதநீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கலாம்.
இது எதையும் செய்யவில்லை என்றால், மலச்சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று பிரச்சினைகள், உடலில் துர்நாற்றம், உடல் சோர்வு, மயக்க நிலை, வாயில் துர்நாற்றம், தலையில் பொடுகு ஏற்படுதல், தலைவலி, கால்வலி என்று எதுவேண்டுமானாலும் ஏற்படலாம்.
ஒருவேளை குளிர்ச்சியான பொருட்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், நீர் அதிகம் சேர்க்கும்படி செய்யும் கஞ்சி, வெதுவெதுப்பான பழச்சாறு, சூப், பாயாசம், ரசம் போன்ற உணவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வரலாம்.
இதனால் சிறு சிறு சருமப் பிரச்சினைகள் உள்ளிட்ட பலவற்றை ஓரளவிற்குத் தவிர்க்கலாம். ஆனாலும், தண்ணீர் குடிப்பதற்கு அறிவுறுத்தி கொண்டே இருக்க வேண்டும்.
அவ்வகையில், அதிக வியர்வை வெளியேற்றம், அதிக வெய்யிலில் வேலை செய்பவர்கள், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் நீண்ட நேரம் வேலை செய்து கொண்டே இருப்பவர்கள் (இருக்கிறார்கள் காலையில் எடுத்துச்செல்லும் தண்ணீர் பாட்டில் மாலை அப்படியே திரும்பி வரும்)... அவர்களது இல்லத்தரசியிடம் அல்லது அம்மாவிடம் இதுபோன்ற மோரை செய்து கொடுக்கச் சொல்லி, ஒரு பாட்டிலில் ஊற்றி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விடுங்கள்.
ஒரு கைப்பிடி புதினா, சிறிது இஞ்சி, ஒரு பச்சை மிளகாய்.... இவற்றுடன் சிறிது தயிர் அல்லது மோர் சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி, துப்பியை நீக்கி விடவும். இதனுடன் மேலும் தேவையான மோரைக் கலக்கி, உப்பு (தேவையெனில்) சேர்க்கவும். ஒருநாள் கொத்துமல்லி தழை மாற்றிக் கொள்ளலாம். குடித்துக் கொண்டே இருக்கத் தோன்றும் சுவையில் நிச்சயம் இருக்கும்..
தேவையான நீரும், தாதுக்களும் ஒரு சேரக் கிடைப்பதுடன், வயிற்றுப் பிரச்சினைகளும் சரியாகி, பசியும் நன்றாக எடுக்கும்.
-வண்டார் குழலி
- ஏழாவது அதிசயம் என்று கொள்வது ஒருவனது பேரன் பேத்தி தான்.
- திரும்பவும் உன் வாழ்க்கை சக்கரம் உருண்டோட காரணமானவர்கள் இந்த அற்புதமான பேரன், பேத்திகள்தானே.
தாத்தா, "எங்க டீச்சர் இன்னிக்கும் உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா? என்று கேட்டார். எனக்கு தெரியலை. உனக்கு தெரியுமா? சொல்லு" என தாத்தாவை கேட்டான் பேரன்.
அடே பயலே, எனக்கு தெரிந்த ஏழு அதிசயங்கள் வேறே. புத்தகங்களில் இல்லாதது. தனியாக அதற்கு படமும் கிடையாது என்றார். அது என்ன தாத்தா அப்படிப்பட்ட 7 அதிசயங்கள்..?
உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்துதானே ஆக வேண்டும். அதை சொல்கிறேன் கேள்..
1. அம்மா இருக்கிறாளே அவள்தான் இந்த உலகில், அதாவது வாழ்க்கையில் முதல் அதிசயம். அவள் தான் உன்னை இந்த உலகத்திலேயே வரவேற்ற முதல் மனுசி.
2. அப்பா இருக்கிறாரே அவர் தான் இரண்டாவது அதிசயம். நீ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்ன பாடெல்லாம் பட்டு இருக்கிறார் என்று உனக்கு தெரியுமா?
3. எது உனக்கு வேண்டுமோ அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வைத்து, பாசம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள உதவிய உன்னுடன் கூடப் பிறந்தவனோ, பிறந்தவளோதான் மூன்றாவது அதிசயம்.
4. நண்பனோ, நண்பியோதான் வாழ்வில் நான்காவது அதிசயம். விசால புத்தி, மனோபாவம், மற்றவரை புரிந்து கொள்ளும் தாராள மனம், நட்பு என்று ஒருவரை ஒருவர் நேசிக்கும் சுபாவம் வர காரணமானவர்கள்.
5. அடுத்தது குறைகளை நோக்காமல் நிறைகளை மட்டுமே பார்க்கும் தன்மை யாரால் முதலில் வந்தது என்றால் உன் மனதை முதலில் கொள்ளை கொண்ட பெண்ணோ, ஆணோதான். உலகையே, அவனுக்காகவோ, அவளுக்காகவோ எதிர்க்கும் தைரியம் வந்தது அந்த அதிசயப் பிறவியால்தான். எனவே அந்த ஜீவனே வாழ்வில் கண்ட ஐந்தாவது அதிசயம்.
6. ஆறாவது அதிசயம் என்ன தெரியுமா?. உன் குழந்தை தான். உன்னை சுயநலமற்றவனாக மாற்றிய முதல் ஜீவன். பிள்ளைக்கோ பெண்ணுக்கோ விட்டுக் கொடுக்காத, தியாகம் செய்யாத அப்பனோ, அம்மாவோ உலகிலேயே இல்லையே.
7. ஏழாவது அதிசயம் என்று கொள்வது ஒருவனது பேரன் பேத்தி தான். திரும்பவும் உன் வாழ்க்கை சக்கரம் உருண்டோட காரணமானவர்கள் இந்த அற்புதமான பேரன், பேத்திகள்தானே. அவர்களுக்காக நீ டான்ஸ் ஆடலையா, பாடலையா, குதித்து தூக்கிக் கொண்டு ஓடி விளையாடவில்லையா! சிலர் குட்டிக்கரணம் கூட போட்டதில்லையா?அப்படியென்றால் இது நிச்சயம் அதிசயம் இல்லையா?'
நம் குடும்பமே ஒரு அதிசயம்தான்.
-எம்.எஸ். சீதாராமன்
- தோல் சுருக்கம் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
- தக்காளி அல்லது ஆப்பிள் பழத்தை அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
பெண்கள் அழகின் மீதுள்ள அதிக அக்கறையால் பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்கின்றனர். இதனால் அதிக பணம் செலவாவதுடன், ரசாயனம் கலந்த க்ரீம்களால் முகத்தில் அலர்ஜியும் ஏற்படுகிறது. அதனால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு என்றும் அழகுடன் எப்படி இருப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர கருவளையங்கள் மறையும்.
கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கருப்பு நிறம் போய்விடும்.
தோல் சுருக்கம் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தக்காளி அல்லது ஆப்பிள் பழத்தை அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென மாறும்.
பழுத்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மென்மையாக மாறும்.
உலர்ந்த சருமம் மென்மையாக கேரட்டை நன்றாக அரைத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 20 நிமிடம் உடலில் பூசி, பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.
மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்
-சிரகிரி வேலன்
- நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை.
- ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அந்த நிமிஷத்தில இருந்து நாம அவருக்கு அடிமை.
எழுத்தாளர் சுஜாதா வீடு.
"என்னங்க.
நான் ஒண்ணு கேட்டா...
அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."
தயங்கி தயங்கி தன் கணவரிடம் இப்படி கேட்டவர் திருமதி சுஜாதா.
மனைவியை திரும்பிப் பார்க்காமலே
"என்ன கேக்கப் போறே ?"
"இப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாரே, உங்க நண்பர். அவருக்கு நீங்கதானே அட்வைஸர்?"
"அவருக்கு இல்ல. அவர் கம்பெனிக்கு."
திருமதி மௌனம்.
"சரி, என்னமோ கேக்கணும்னு சொன்னியே."
"ஆமா."
"சீக்கிரம் கேளு."
"ஒண்ணும் இல்ல. அவர் புறப்படும்போது ஒண்ணு சொல்லிட்டு போனாரே. அதுதான்..."
"என்ன சொன்னார் ? எனக்கு ஞாபகம் இல்லையே."
சுஜாதா தன்னிடம் போட்டு வாங்குவதை திருமதி புரிந்து கொண்டார்.
"அதுதாங்க, அந்த வீடு விஷயம்..."
"எந்த வீடு ?"
"நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கற அந்த மூணு பெட்ரூம் வீடு."
"ம்..."
"அந்த வீட்டை அவரே விலை கொடுத்து வாங்கி அதை நம்ம பெயருக்கு முடிச்சு தர்றேன்னு..."
"நம்ம வீட்டுக்கு வந்த என்னோட நண்பர் சொல்லிட்டு போனார், அதானே?"
"ஆமா."
"எதுனாலே அப்படி சொல்லிட்டு போறார் ?"
"உங்க மேலே உள்ள அபிமானம்தான்."
"சரி. இப்போ நாம இருக்கறது..?"
"இது நாம சொந்தமா வாங்கின வீடு."
"எத்தனை பெட்ரூம் ?"
"மூணு பெட்ரூம் வீடு."
"இது வசதியா இல்லையா ?"
"இருக்கு... ஆனாலும் அதையும் சேர்த்து வாங்கினா ஆறு பெட்ரூமா இன்னும் வசதியா..."
"ம்..."
"நாம எதுவும் பணம் செலவு பண்ணப் போறதில்லையே. உங்க நண்பர்தானே பணம் கொடுக்க ..."
சட்டென்று மனைவியை நோக்கி திரும்பினார் சுஜாதா.
"இதோ பாரு. நான் அவர் கம்பெனிக்கு அட்வைசர். அதுக்கு மாசாமாசம் சம்பளம் கொடுக்கறார். வாங்கிக்கறேன். புரியுதா ?"
"ம்"
"நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை. ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அந்த நிமிஷத்தில இருந்து நாம அவருக்கு அடிமை."
"ம்."
"இப்போ சொல்லு. நீ இந்த உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா, அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா?"
"நேர்மையாத்தான்..."
"அப்போ இனிமே இதைப் பத்தி பேசாதே !"
-ஜான்துரை ஆசிர் செல்லையா
- அரிய வகைக் குரங்கினமே சுமார் 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனமாக உருவெடுத்து பூமியின் தென்பகுதி முழுவதும் பல்கிப் பெருகிப் பரவியது.
- ஆதி மனிதர்கள், மேற்கே தென் அமெரிக்கா முதல் கிழக்கே நியூசிலாந்து வரை காலம் காலமாகப் பரவிவந்தனர்.
பூமியும் நாமும் எப்போது தோன்றினோம்? விரிந்து பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தில், பால்வளி மண்டலத்தில், ஒரு புள்ளி அளவே இடம் பெற்றுள்ள சூரிய குடும்பத்தில், நமது பூமிக்கான இடம் அணுவினும் குறைவானது. ஆனால் இதற்குள் அனுதினமும் அரங்கேறும் மூட கூத்துகளுக்குத்தான் அளவே இல்லை. இந்த பூமியும் நாமும் தோன்றி வளர்ந்த வரலாற்றை மிகச் சுருக்கமாகவேணும் தெரிந்து கொண்டால் இந்த மூடக் கூத்துகள் கொஞ்சமாவது குறையக்கூடும்.
ஹைப்பர் நோவாவிலிருந்து விண்டு விழுந்த சூரியன், அடுத்த பலகோடி ஆண்டுகளில் தானும் ஒரு சூப்பர் நோவாவாக பருத்து வெடித்து சிதறிய போது, இந்த பூமியும் அதிலிருந்து பிய்ந்து தூர விழுந்து, குளிர்ந்து சுருங்கி, உள்ளே குமுறும் நெருப்புக் கடலும், வெளியே நிலமும் நீருமாய் உருண்டு திரண்டு ஒரு சிறு கோளாய் மாறி, அதே சூரியனை அன்றாடம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.
இப்படி இந்த பூமி தோன்றி இன்றைக்கு சும்மர் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இதில் முதன் முதலில் தோன்றிய நிலப்பரப்பு ஒரே பகுதியாகத்தான் இருந்தது. பிறபகுதி முழுவதும் கடலாய் நின்றது. முதலில் தோன்றியிருந்த நிலப்பரப்பு, தாயின் கருவில் தூங்கும் குழந்தையைப் போன்ற தோற்றத்தில் கூனிக் குவிந்து இருந்தது. இந்த நிலப்பகுதியை, பாஞ்சையா [ பாண்டியா?] எனக் குறிப்பிட்டனர் புவியியலாளர்கள்.
இதிலிருந்து முதன் முதலில் வட அமெரிக்க கண்டம் பிரிந்தது. இந்த பிரிவிற்குப்பின் நிலைத்திருந்த பெரு நிலப்பரப்பு கோண்டுவானா எனப்பட்டது. இதிலிருந்து வடக்கில் உலராசியா பிரிய, எஞ்சிய கோண்டு வானாவின் மையப் பகுதியாய் இருந்தது (லெமூரியா எனப்பட்ட ) குமரிக்கண்டமாகும்.
இப்படி உருவான இந்த பூமியின் நிலம் மற்றும் நீர் பரப்பில் பலவகையான உயிரினங்கள் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வந்தபோது, சுமார் ஒருகோடி ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்ட பகுதியில், மனித இனம் உருவாவதற்கான சூழல் உருவானது.
அப்போது பரிணமித்திருந்த குரங்கு இனத்தில், ஒருவகைக் குரங்கினம் உயரமாக வளர்ந்து நிமிர்ந்து நடக்கும் நிலையை அடைந்தது. இந்த அரிய வகைக் குரங்கினமே சுமார் 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனமாக உருவெடுத்து பூமியின் தென்பகுதி முழுவதும் பல்கிப் பெருகிப் பரவியது.
இந்த ஆதி மனிதர்கள், மேற்கே தென் அமெரிக்கா முதல் கிழக்கே நியூசிலாந்து வரை காலம் காலமாகப் பரவிவந்தனர். இப்படிப் பரவி வந்த மனித இனத்துள், குமரிக் கண்டப்பகுதியில் நிலைத்து வாழ்ந்த மக்கள், வேட்டையாடுவதிலிருந்து வேளாண்மை செய்யவும், குரல் எழுப்புவதிலிருந்து பேசவும், எழுதவும், ஆடை நெய்து அணியவும் கற்றுக்கொண்ட இனமாக உருவெடுத்த உலகின் மூத்த குடிமக்களாவர். இவர்கள் சுமார் ஒருலட்சம் ஆண்டு மொழி வரலாற்றைத் தமக்கெனத் தனியே கொண்டுள்ள நமது தமிழ் மக்கள் ஆவர்.
கடைசியாக உள்ள இந்த ஒரு லட்சம் ஆண்டுகளே ஒட்டுமொத்த மனித வரலாற்றையும் நாகரிக எல்லைக்குள் கொண்டுவந்து சேர்த்த பொற்காலமாகும். இந்த கருதுகோளே உலக வரலாற்றை அளவிட அறிவியளாளர் பயன்படுத்தும் காலக் கண்ணாடியுமாகும் !
-ராமசாமி ஆறுமுகம்
- 11, 12வது படிக்கையிலேயே சம்பளம் வர ஆரம்பிச்சிடும்.
- நம்ம பசங்க,பொண்ணுங்க அப்படி இல்லை. இளங்கலை, முதுகலை எல்லாம் படிச்சு முடிக்கையில் 25 - 26 வயசு ஆகிடும்.
நாம தான் பிளஸ் 2 முடிச்சபின் காலேஜ்னு இருக்கோம். அமெரிக்கன்ஸ் அப்படி எல்லாம் அலட்டிக்கறதில்லை.
மகளின் வகுப்புதோழியை ஒரு வங்கியில் பார்த்தேன். பிளஸ் 2 படிக்கையில் வங்கியில் பார்ட் டைம் வேலை. வங்கி டெல்லர் வேலைதான். பகுதிநேர வேலை. மணிக்கு 14 டாலர் சம்பளம். நம்ம ஊர் மாதிரி நிரந்தர வேலை, வங்கி என்றால் போட்டி தேர்வு கதை எல்லாம் கிடையாது. வால்மார்ட் பணியாளர் வாங்கும் சம்பளமும், இம்மாதிரி வங்கி டெல்லர் வாங்கும் சம்பளமும் ஒன்றுதான்.
பிளஸ் 2 முடிச்சபின் நிரந்தரமா வங்கியிலேயே சேர்ந்துவிட்டாள். அதன்பின் அசோசியேட் டிகிரி படிக்கிறாள். நம்ம ஊர் டிப்ளமா மாதிரி. எப்பவும் போகும் வங்கி என்பதால் அடிக்கடி பார்ப்பேன். அசோசியேட் டிகிரி முடித்தபின் பிசினஸ் அனலிஸ்டா அதே வங்கியில் பணியாற்றவிருப்பதாக சொன்னாள்.
பிளஸ் 2 முடிச்சுட்டு டிப்ளமாவான்னு எல்லாம் கன்பியூஸ் ஆககூடாது. அசோசியேட் டிகிரிங்கறது அப்படிதான். அது முடிச்சுட்டு டிகிரி சேர்வது என்றால் சேரலாம். அசோசியேட் டிகிரியில் படித்ததுக்கு கிரடிட் கொடுப்பார்கள். 2 ஆண்டுகளில் டிகிரி படிக்கலாம். அதன்பின் முதுகலை பட்டம் வாங்குவது என்றாலும் வாங்கலாம்.
ஆனால் இதை எல்லாம் அவர்கள் மெதுவாக தான் செய்வார்கள். இளங்கலை பட்டமே வாங்குவது கூட ஆப்ஷன் தான். அதுக்குள் ஆண்டுக்கு 75,000 டாலர் பக்கம் சம்பளம் வாங்கிக்கொன்டு இருப்பார்கள். பலரும் மேனேஜர் ஆகி, அதைவிட பெரிய பதவிக்கு போகணும்னா எம்பிஏ வேணும்னு ஒரு 40 வயதில் மாலைநேர எம்பிஏ வகுப்பில் வந்து சேர்வார்கள்.
11, 12வது படிக்கையிலேயே சம்பளம் வர ஆரம்பிச்சிடும். நம்ம பசங்க,பொண்ணுங்க அப்படி இல்லை. இளங்கலை, முதுகலை எல்லாம் படிச்சு முடிக்கையில் 25 - 26 வயசு ஆகிடும். அதன்பின் தான் வேலை தேட ஆரம்பிப்பாங்க.
இப்படி அம்மா, அப்பா காசில் முதுகலை வரை படிப்பதை அவங்க ஆச்சரியமா பார்ப்பாங்க. அவர்களை பொறுத்தவரை அது எல்லாம் நல்ல வசதியானவங்க செய்யும் விசயம். அப்படி செய்யும் அமெரிக்கர்களும் உண்டு. ஆனால் அவர்கள் அப்பர் மிடில்க்ளாஸ் வகையில் வருவார்கள்.
டிகிரி படிக்காம கூகிளில் கூட வேலைக்கு சேரலாம். பல கம்பெனிகளில் அப்படி பிளஸ் 2 படித்தவர்களை எடுத்து, தானே டிரெய்னிங் கொடுத்து, கம்பெனிக்குள்ளேயே புரமோஷன் கொடுத்துக்கொள்வார்கள். நம்ம ஊர் ஸோஹோவில் கூட இதே மாடலை தான் கொண்டுவந்து இருக்காங்க.
பல சி.ஈ.ஓ.க்கள் வெறும் இளம்கலை பட்டம் படித்தவர்கள் தான். டிஸ்னி சி.ஈ.ஓ மைக்கேல் ஈஸ்னர் ஆங்கிலத்தில் இளம்கலை பட்டம் படித்தவர். அவ்ளோதான். மற்ற உயர்வு எல்லாம் அனுபவத்தால் வந்ததுதான்.
- நியாண்டர் செல்வன்
- பட்ஜெட்டுக்கேற்ப ஏசி, டீலக்ஸ் என தேர்ந்தெடுத்து பயணிக்கலாம்.
- கொச்சியில் இருந்து 14 முதல் 20 மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம்.
சுற்றிலும் நீலவண்ணத்தில் வானமும், தண்ணீரும் போட்டி போட, அழகிய கடல் அலைகள் வந்து, வந்து செல்லும் அழகை காண இயற்கை பிரியர்களுக்கு எப்போதுமே சலிக்காது. இப்படி இந்தியாவில் உள்ள அழகிய மற்றும் அமைதியான இடங்களில் ஒன்று லட்சத்தீவு.
இந்தியாவின் எட்டு யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவு ஒன்றாகும். மொத்தம் 36 தீவுகள், 12 பவளப்பாறைகள் மற்றும் மூன்று திட்டுகள் உள்ளன. ஆனால், இவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள இயற்கை அழகை ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
மினிகாய் தீவு, கல்பேனி தீவுகள், கத்மத் தீவுகள், பங்காரம் தீவு மற்றும் தின்னகர தீவு உள்ளிட்டவை மிகவும் பிரபலமான இடங்களாகும்.
எப்படி அடைவது?
கேரள மாநிலத்தின் கொச்சி வழியாகத்தான் லட்சத்தீவுக்கு செல்ல முடியும். கொச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு விமானம் மற்றும் கப்பல் வசதி உள்ளது.
லட்சத்தீவுக்குள் நேரடியாக நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள லட்சத்தீவு நிர்வாகத்தினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
இதற்கு முதலில் அனுமதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து, உங்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் உரிய அனுமதி பெற வேண்டும்.
பின்னர், நுழைவு அனுமதியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது கொச்சியில் உள்ள வில்லிங்டன் தீவில் அமைந்துள்ள லட்சத்தீவு நிர்வாக அலுவலகத்தில் நேரிலும் பெறலாம்.
லட்சத்தீவை அடைந்ததும், இந்த நுழைவு அனுமதிப்பத்திரத்தை அங்குள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் விமானத்தில் செல்வதாக இருந்தால் முடிந்தளவு உங்களின் பேக்கிங்கை குறைவாக இருக்க திட்டமிடுங்கள்; இங்குள்ள விமானங்கள் சிறியவை மற்றும் குறைந்த திறன் கொண்டவை. எனவே, இதற்கேற்ப உங்களின் லக்கேஜ் இருக்க வேண்டும். கொச்சியில் இருந்து அகத்தி விமான நிலையத்தில் இறக்கி விடப்படுவீர்கள்.
கப்பல்களில்...
எம்.வி. கவரட்டி, எம்.வி. மினிகாய், எம்.வி. அமிண்டிவி, எம்.வி. கோரல்ஸ், எம்.வி. லகூன், எம்.வி.லட்சத்தீவு கடல் மற்றும் எம்.வி. அரபிக்கடல் உள்ளிட்ட ஏழு கப்பல்கள் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்குச் செல்கின்றன.
அவரவர் பட்ஜெட்டுக்கேற்ப ஏசி, டீலக்ஸ் என தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். கொச்சியில் இருந்து 14 முதல் 20 மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம்.
-எம்.எஸ். சீதாராமன்
- கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.
- பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர அஜீரணம் சரியாகும்.
மா, பலா, வாழை முக்கனிகளாகும். இதில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் குறித்து பார்ப்போம்.
மாம்பழம்:
முக்கனிகள் என்று போற்றக்கூடிய பழங்களுள் முதல் கனி மா. மாம்பழத்தில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.
கண் பார்வை, மாலைக்கண் நோயை எதிர்க்கிறது. வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது.
நோஞ்சான் பிள்ளைகள் உடல் தெம்பும் எடையும் பெறுகின்றனர்.
இருதயம் வலிமை பெறும். பசி தூண்டும். உடல் தோல், நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும்.
கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது இரத்த அணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது.
பலாப்பழம்:
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி-யும் அதிக அளவில் கொண்டுள்ளன.
கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.
பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.
நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது.
வைட்டமின் ஏ, பி, சி கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.
கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.
பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது.
வாழைப்பழம்:
உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது.
இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.
சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.
தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து நாள்தோறும் இரு வேளை சாப்பிட வேண்டும்.
பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர அஜீரணம் சரியாகும்.
தொடர்ந்து நாள்தோறும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
- கண்ணன் கோவிந்தன்
- கணவன்- மனைவி சேர்க்கை தான் வம்ச விருத்தி மற்றும் குடும்பத்தின் ஒற்றுமை.
- இருவருக்கும் ஒரே வயது அல்லது 2-4 வயது வித்தியாசம் எனில் மேற்படி வாழ்க்கை பிரச்சனையாகவும் குழந்தை பாக்கியம் மிக குறைவாகவும் இருக்கும்.
உண்மையில் கணவன்- மனைவி இருவருக்கும் குறைந்த பட்சம் 7 வயது, அதிகபட்சமாக 9 வயது இருக்கனும். அப்பத்தான் வாழ்க்கை சுகமாக இருக்கும். அதே போல பெண்ணுக்கு 23 வயதுக்குள் திருமணம், பிள்ளைக்கு 26வயதுக்குள் திருமணம் நடத்த வேண்டும். இதுதான் மிகச்சரியான நிலை என்பதை பல ஜாதகங்களை அலசியதில் தெரிந்தது.
பால்யவிவாகங்கள், 15-20வயது வித்யாசங்கள் கொடூரமானது தேவையற்றது. அதை ஒழித்ததில் நன்மை அதிகம். அதேநேரம் சரியான பருவத்தில் திருமணம் செய்யவில்லை எனில் வாழ்க்கை நரகமாகும்.
பெண் விரைவில் பக்குவம் அடைந்துவிடுகிறாள். ஆண் அவளிடமிருந்து 7 வயது தள்ளி பக்குவம் அடைகிறான்.
கணவன்- மனைவி சேர்க்கை தான் வம்ச விருத்தி மற்றும் குடும்பத்தின் ஒற்றுமை. இருவருக்கும் ஒரே வயது அல்லது 2-4 வயது வித்தியாசம் எனில் மேற்படி வாழ்க்கை பிரச்சனையாகவும் குழந்தை பாக்கியம் மிக குறைவாகவும் இருக்கும்.
மேலும் இன்றைய சூழல், சாப்பாட்டு முறைகளும் தாமத திருமணங்களும் குழந்தை பாக்கியத்தை குறைத்துவிடுகிறது.
-ஜோதிடர் ரவி சாரங்கன்
- நெதர்லாந்தில் இன்று 25% ட்ரிப்புகள் சைக்கிளை பயன்படுத்தி தான் நடைபெறுகின்றன.
- நாடெங்கும் 32,000 கிமி நீளத்துக்கு சைக்கிள் பாதைகள் நிறுவப்பட்டன.
இரண்டாம் உலகப்போருக்கு பின் நெதர்லாந்தில் வளமை பெருகியது. வளமான தேசத்தில் மக்கள் செய்வதுபோல் டச்சுகாரர்கள் எல்லாம் பேருந்தை விட்டுவிட்டு கார்களை வாங்க ஆரம்பித்தார்கள். பெருமளவில் நெடுஞ்சாலைகள், லேன்கள், பாலங்களை கட்டும் அவசியம் ஏற்பட்டது.
இந்த சூழலில் கார் விபத்துக்கள் பெருக ஆரம்பித்தன. 1971ல் கார் விபத்தில் 400 குழந்தைகள் இறந்தார்கள். மொத்தமாக 3300 உயிர்கள் கார் விபத்துக்களில் பலியாகின.
தன் வீடு இருந்த தெருவில் மக்கள் நடமாட்டம் நின்று கார்கள் மட்டுமே செல்வதை பார்த்து மனம்நொந்தார் டச்சு எம்பி மார்ட்ஜே வான் புர்டன். அவர் தலைமையில் கார்களுக்கு எதிரான இயக்கம் துவங்கியது.
சும்மா "கார்கள் வேண்டாம்" என சொன்னால் மட்டும் போதாதே? அதனால் மாற்றாக சைக்கிளை தேர்ந்தெடுத்தார்கள். பேருந்து, மெட்ரோ ரெயில் எல்லாம் அரசின் முதலீட்டை நம்பியிருப்பவை. ஆனால் சைக்கிள் அப்படி அல்ல. சைக்கிள் பயணிகள் யூனியன்கள் துவங்கப்பட்டன. சாலைகளில் இரவில் பெயிண்ட்பாக்ஸை வைத்து இவர்களே சட்டவிரோதமாக சைக்கிள்களுக்கான லேன்களை வரைந்தார்கள்.
1973ல் பெட்ரோல் விலை அரபு-இஸ்ரேல் போர் காரணமாக உயர்ந்தது இவர்களுக்கு சாதகமானது. நெதர்லாந்து அரசின் மனம் மாறியது. நெதர்லாந்து நகர வடிவமைப்பு சைக்கிள்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டது. ஆஸ்ம்டர்டாம், ஹேக் உள்ளிட்ட பல நகரங்களில் சைக்கிள்கள் பெருக ஆரம்பித்தன.
இன்று நெதர்லாந்தில் 25% ட்ரிப்புகள் சைக்கிளை பயன்படுத்தி தான் நடைபெறுகின்றன. நாடெங்கும் 32,000 கிமி நீளத்துக்கு சைக்கிள் பாதைகள் நிறுவப்பட்டன. சைக்கிள் உடல்பயிற்சிக்கான கருவி அல்ல, அன்றாட பயணத்துக்கான வாகனம் என்பதை வலியுறுத்தும் வண்ணம் ஸ்பெஷலாக ஒமிபியாட் எனும் வகை சைக்கிள் உருவாக்கப்பட்டது.
சைக்கிள்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் கார்களின் ஸ்பீட்லிமிட் மணிக்கு 30 கிமிதான் என சட்டம் இயற்றப்பட்டது. ஏன் என்றால் 30 கிமிக்கு மேம்பட்ட வேகத்தில் கார் சைக்கிள் மேல் மோதினால் சைக்கிள்பயணி இறந்துவிடுவார். அதனால் அனைத்து நகரங்களிலும் 30 கிமிதான் ஸ்பீட் லிமிட் இன்று நாட்டில் 1.7 கோடி மக்கள் இருக்கிறார்கள். 2.2 கோடி சைக்கிள்கள் உள்ளன.
ஆபிசுக்கு, பள்ளிக்கு, ஷாப்பிங்குக்கு என எங்கும் மக்கள் சைக்கிளில் போவார்கள். சிறுவயது குழந்தைகள் தனியாக அல்லது குழுவாக சைக்கிளை ஓட்டிக்கொண்டு நண்பர்கள் வீடு, பள்ளி, விளையாட என செல்வதை காணலாம்.
அங்கு மக்கள் ஜாலியாக சைக்கிள்களில் செல்வதையும், பொருட்களை கொண்டு செல்வதையும் பார்க்கலாம். கோட், சூட் எல்லாம் போட்டு சைக்கிள் ஓட்டிக்கொன்டு ஆபிஸ் போவார்கள்.
இம்மாதிரி நம் பெருநகரங்களையும் கார்களுக்கானவையாக மாற்றாமல், சைக்கிள்களுக்கானவையாக மாற்றினால் இடநெருக்கடி, மேம்பாலம் கட்ட செலவு, சுற்றுசூழல் என பலவிதமான மாற்றங்கள் வரும்.
நடக்குமா?
-நியாண்டர் செல்வன்
- சூரிய வெளிச்சம் அப்படியே குழாயில் ரிஃப்ளெக்ட் ஆகி அறைகளுக்கும் வருகிறது.
- சூரியன் பிரகாசமாக இல்லாத சமயம் என்ன செய்வது?
பகலில் அத்தனை பெரிய சூரியன் வெளில பிரகாசமா எரிஞ்சுகிட்டு இருக்கு...
பெரிய குளிர்பதனபடுத்தப்பட்ட அலுவலகங்களில் அடுக்குமாடிகளில் உள்ளே டியூப்லைட்டுகளை போட்டுக்கொண்டு வேலை செய்வது நல்லவா இருக்கு? வெளியே இருக்கும் சூரிய ஒளியை அலுவலகங்கள், குடோன்களுக்குள் கொண்டு வந்தால் என்ன?
சோலார் பேனலா?
அல்ல. சூரிய ஒளியையே அலுவலகங்களுக்குள் கொண்டுவந்தால் என்ன?
அது எப்படி முடியும்?
சோலார் டியூப்கள் மூலமாக... சோலார் டியூப்புகளை கட்டிடத்தின் மேற்புறத்தில் மாட்டி, கூரையில் இருந்து நாம எந்த அறைக்கு வெளிச்சம் வரணும்னு நினைக்கறமோ அந்த அறைக்கு கொண்டுபோகலாம்.
சோலார் டியூப்புகள் வளைந்து, நெளிந்து எப்படி வேண்டுமானாலும் போகலாம். சூரிய வெளிச்சம் அதன்மேலுள்ள ஒரு மெடலில் படும், அது அதை அப்படியே அதனுள் இருக்கும் மெடல்கள், குவிக்கண்ணாடிகள் வழியே எதிரொலித்து அறைக்குள் சூரிய வெளிச்சம் வரும்.
எந்த மின்சார செலவும் இல்லை. சூரிய வெளிச்சம் அப்படியே குழாயில் ரிஃப்ளெக்ட் ஆகி அறைகளுக்கும் வருகிறது. சூரியன் பிரகாசமாக இல்லாத சமயம் என்ன செய்வது?
லைட்டை போட்டுக்கவேண்டியதுதான். மேலும் போடோவால்டிக் தொழில்நுட்பம் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகி மின்விளக்குகளை எரியவைக்கவும் முடியும். இரவிலும் வெளிச்சம் வரும்.
இனி சில ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் பரவலாகையில் ஏகபட்ட மின்சார செலவு மிச்சம் ஆகும்.
- நியாண்டர் செல்வன்






