search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    இங்கே அது நடக்குமா?
    X

    இங்கே அது நடக்குமா?

    • நெதர்லாந்தில் இன்று 25% ட்ரிப்புகள் சைக்கிளை பயன்படுத்தி தான் நடைபெறுகின்றன.
    • நாடெங்கும் 32,000 கிமி நீளத்துக்கு சைக்கிள் பாதைகள் நிறுவப்பட்டன.

    இரண்டாம் உலகப்போருக்கு பின் நெதர்லாந்தில் வளமை பெருகியது. வளமான தேசத்தில் மக்கள் செய்வதுபோல் டச்சுகாரர்கள் எல்லாம் பேருந்தை விட்டுவிட்டு கார்களை வாங்க ஆரம்பித்தார்கள். பெருமளவில் நெடுஞ்சாலைகள், லேன்கள், பாலங்களை கட்டும் அவசியம் ஏற்பட்டது.

    இந்த சூழலில் கார் விபத்துக்கள் பெருக ஆரம்பித்தன. 1971ல் கார் விபத்தில் 400 குழந்தைகள் இறந்தார்கள். மொத்தமாக 3300 உயிர்கள் கார் விபத்துக்களில் பலியாகின.

    தன் வீடு இருந்த தெருவில் மக்கள் நடமாட்டம் நின்று கார்கள் மட்டுமே செல்வதை பார்த்து மனம்நொந்தார் டச்சு எம்பி மார்ட்ஜே வான் புர்டன். அவர் தலைமையில் கார்களுக்கு எதிரான இயக்கம் துவங்கியது.

    சும்மா "கார்கள் வேண்டாம்" என சொன்னால் மட்டும் போதாதே? அதனால் மாற்றாக சைக்கிளை தேர்ந்தெடுத்தார்கள். பேருந்து, மெட்ரோ ரெயில் எல்லாம் அரசின் முதலீட்டை நம்பியிருப்பவை. ஆனால் சைக்கிள் அப்படி அல்ல. சைக்கிள் பயணிகள் யூனியன்கள் துவங்கப்பட்டன. சாலைகளில் இரவில் பெயிண்ட்பாக்ஸை வைத்து இவர்களே சட்டவிரோதமாக சைக்கிள்களுக்கான லேன்களை வரைந்தார்கள்.

    1973ல் பெட்ரோல் விலை அரபு-இஸ்ரேல் போர் காரணமாக உயர்ந்தது இவர்களுக்கு சாதகமானது. நெதர்லாந்து அரசின் மனம் மாறியது. நெதர்லாந்து நகர வடிவமைப்பு சைக்கிள்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டது. ஆஸ்ம்டர்டாம், ஹேக் உள்ளிட்ட பல நகரங்களில் சைக்கிள்கள் பெருக ஆரம்பித்தன.

    இன்று நெதர்லாந்தில் 25% ட்ரிப்புகள் சைக்கிளை பயன்படுத்தி தான் நடைபெறுகின்றன. நாடெங்கும் 32,000 கிமி நீளத்துக்கு சைக்கிள் பாதைகள் நிறுவப்பட்டன. சைக்கிள் உடல்பயிற்சிக்கான கருவி அல்ல, அன்றாட பயணத்துக்கான வாகனம் என்பதை வலியுறுத்தும் வண்ணம் ஸ்பெஷலாக ஒமிபியாட் எனும் வகை சைக்கிள் உருவாக்கப்பட்டது.

    சைக்கிள்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் கார்களின் ஸ்பீட்லிமிட் மணிக்கு 30 கிமிதான் என சட்டம் இயற்றப்பட்டது. ஏன் என்றால் 30 கிமிக்கு மேம்பட்ட வேகத்தில் கார் சைக்கிள் மேல் மோதினால் சைக்கிள்பயணி இறந்துவிடுவார். அதனால் அனைத்து நகரங்களிலும் 30 கிமிதான் ஸ்பீட் லிமிட் இன்று நாட்டில் 1.7 கோடி மக்கள் இருக்கிறார்கள். 2.2 கோடி சைக்கிள்கள் உள்ளன.

    ஆபிசுக்கு, பள்ளிக்கு, ஷாப்பிங்குக்கு என எங்கும் மக்கள் சைக்கிளில் போவார்கள். சிறுவயது குழந்தைகள் தனியாக அல்லது குழுவாக சைக்கிளை ஓட்டிக்கொண்டு நண்பர்கள் வீடு, பள்ளி, விளையாட என செல்வதை காணலாம்.

    அங்கு மக்கள் ஜாலியாக சைக்கிள்களில் செல்வதையும், பொருட்களை கொண்டு செல்வதையும் பார்க்கலாம். கோட், சூட் எல்லாம் போட்டு சைக்கிள் ஓட்டிக்கொன்டு ஆபிஸ் போவார்கள்.

    இம்மாதிரி நம் பெருநகரங்களையும் கார்களுக்கானவையாக மாற்றாமல், சைக்கிள்களுக்கானவையாக மாற்றினால் இடநெருக்கடி, மேம்பாலம் கட்ட செலவு, சுற்றுசூழல் என பலவிதமான மாற்றங்கள் வரும்.

    நடக்குமா?

    -நியாண்டர் செல்வன்

    Next Story
    ×