என் மலர்
கதம்பம்
- பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
- பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
- அருள் ராம்
- திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள்.
- உலகிலேயே போர்ச்சுகல் நாட்டில் தான் அதிகளவு திருமண முறிவுகள் நடக்கின்றன.
திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஒரு காலத்தில் அரிதாக காணப்பட்ட விவாகரத்து இன்று அதிகரித்து விட்டது. காதல் திருமணம் செய்தவர்கள் கூட பிரிந்து சென்று விடுகிறார்கள். உலகிலேயே போர்ச்சுகல் நாட்டில் தான் அதிகளவு திருமண முறிவுகள் நடக்கின்றன. இதில் இந்தியா கடைசி இடத்தில் இருப்பது ஆறுதலான விசயம்.
நாடுகள் வாரியாக விவாகரத்து விகிதம்:
இந்தியா: 1%
வியட்நாம்: 7%
தாஜிகிஸ்தான்: 10%
ஈரான்: 14%
மெக்சிகோ: 17%
எகிப்து: 17%
தென்னாப்பிரிக்கா: 17%
பிரேசில்: 21%
துருக்கி: 25%
கொலம்பியா: 30%
போலந்து: 33%
ஜப்பான்: 35%
ஜெர்மனி: 38%
யுனைடெட் கிங்டம்: 41%
நியூசிலாந்து: 41%
ஆஸ்திரேலியா: 43%
சீனா: 44%
யுனைடட் ஸ்டேட்ஸ்: 45%
தென் கொரியா: 46%
டென்மார்க்: 46%
இத்தாலி: 46%
கனடா: 47%
நெதர்லாந்து: 48%
ஸ்வீடன்: 50%
பிரான்ஸ்: 51%
பெல்ஜியம்: 53%
பின்லாந்து: 55%
கியூபா: 55%
உக்ரைன்: 70%
ரஷியா: 73%
லக்சம்பர்க்: 79%
ஸ்பெயின்: 85%
போர்ச்சுகல்: 94%
-சி.பி. சரவணன்
- அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும்.
- பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பிறந்து சித்திரை மாதம் 21-ஆம் நாள் முதல் வைகாசி மாதம் 14-ஆம் நாள் வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம்" என்று சொல்வர்.
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறும்.
இவ்வருட அக்னி நட்சத்திர காலம் சோபகிருது வருடம் சித்திரை:21, மே 4 ந்தேதி துவங்கி, வைகாசி:15 மே 29 ந்தேதி நிவர்த்தியாகிறது.
இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம்.
அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும்.
இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.
இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.
அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.
பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமியானது சூரியனுக்கு அருகே செல்வதால் வெப்பம் கடுமையாக இருக்கிறது. ஜோதிட ரீதியில் காணும்போது, உத்திராயண புண்ணிய காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறார்.
இதன்படி தை ஒன்றாம் நாள் முதல் தன் வடக்குத் திசைப் பயணத்தைத் தொடங்குவார். சித்திரை ஒன்றாம் தேதி அவர் பூமிக்கு நெருக்கமாக இருப்பார். ஆனி மாதக் கடைசியில் அவர் வடகோடி எல்லையை அடைந்துவிடுகிறார். வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால் இதைக் கத்திரி வெயில் என்று குறிப்பிட்டார்கள்.
-சிவசங்கர்
- சாக்ரடீஸ் ஒருமுறை கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.
- ஆடம்பர மோகத்தில் அத்தியாவசியத்தை தவற விட்டு விடக்கூடாது.
சாக்ரடீஸ் ஒருமுறை கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.
நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்தார். எதுவும் வாங்கவில்லை.
பின்னர், மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நடந்து சென்று விட்டார்.
இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் பல கடைகளை சுற்றிப் பார்த்து விட்டுச்சென்று விட்டார்.
ஏழாம் நாள்... சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர்,
"அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக்கொண்டே வருகிறேன். கடைத்தெரு வழியே வருகிறீர்கள்.. கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள்.. ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை!
உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்று சொன்னால், நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார்.
அதற்கு சாக்ரடீஸ், அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே... இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை!
'இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே!' என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்... எனக் கூறினாராம்.
கடைக்காரர் வியந்துபோய் விக்கித்து நின்று விட்டாராம்!
ஆம், நமது வாழ்க்கைக்கு தேவைப்படாத பொருட்கள் நம்மிடம் இருப்பதை விட இல்லாதபோது தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும்...
ஆகவே, ஆடம்பர மோகத்தில் அத்தியாவசியத்தை தவற விட்டு விடக்கூடாது...
- ஜோசப் அந்தோணி ராஜ்
- பேப்பரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அப்படியே பூஜை அறையில் ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்.
- நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய விஷயம் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.
எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்ப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
பச்சைக் கற்பூரத்தையும் படிகாரத்தையும் வீட்டில் இப்படி வைத்தால் பற்றாக்குறையாகவே இருக்கும் பணம் பல மடங்கு உங்களிடத்தில் சேமிப்பாக தங்கும்.
இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு தேவையான பொருள் 2.
சிறிதளவு பச்சை கற்பூரம்,
ஒரு சிறிய துண்டு படிகாரம்.
முதலில் இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனையை எழுத வேண்டும்.
அது எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, கடன் தொல்லை ஆக இருக்கலாம். வேலை கிடைக்காமல் இருக்கலாம். வருமானம் குறைவாக இருக்கலாம். உங்கள் வீட்டில் சுப காரிய தடை இருக்கலாம். உங்கள் பிள்ளை சரியாக படிக்காமல் இருக்கலாம். எதுவாக இருக்கட்டும்.
எடுத்து வைத்திருக்கும் வெள்ளை காகிதத்தில் உங்களுடைய பிரச்சனையை சுருக்கமாக எழுதி அந்த காகிதத்திற்கு நடுவே ஒரு பச்சைக் கற்பூரத்தையும், ஒரு சிறிய துண்டு படிகாரத்தையும் வைத்து அந்த பேப்பரை மடித்து கொள்ளுங்கள்.
இந்த பேப்பரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அப்படியே பூஜை அறையில் ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்.
அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை செய்யும்போது நீங்கள் உங்களுடைய குல தெய்வத்தை மட்டும் மனதார நினைத்து கொண்டால் போதும்.
உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விடிவுகாலம் பிறக்கும். குறிப்பாக அந்த பேப்பரில் உங்களுடைய பிரச்சினையை எழுதி வைத்துள்ளீர்கள் அல்லவா. அந்த பிரச்சனையை இந்த பிரபஞ்சம் சீக்கிரத்தில் தீர்த்துக் கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
இது ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய விஷயம் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.
- ஆர்.எஸ். மனோகரன்
- உங்களால் சுலபமாக தூக்கக்கூடிய பொருள் கூட உங்களை வென்று விடுகிறதல்லவா!
- ஒரே எடை கொண்ட டம்ளர் எப்படி தன் பாரத்தைக் கூட்டிக்கொண்டே போனது எனப் பார்த்தீர்களா?.
மனோதத்துவ வல்லுனர் ஒருவர் சிறப்பு அழைப்பாளராக அந்த கல்லூரிக்கு வந்திருந்தார். ஒரு வகுப்பில் பாடம் எடுக்க வந்தார்.
மாணவர்கள் இந்த ஆள் ஏதோ பெரிய பிரசங்கத்தை எடுத்து கடுப்பேத்தப்போகிறார் என நினைத்தனர்.
வல்லுனர் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு தன் உதவியாளரிடம் சொன்னார். அவரும் ஒரு கண்ணாடி டம்ளரில் குடிநீர் கொண்டு வந்தார்.
வல்லுனர், "நான் பெரிதாக உங்களிடம் எதுவும் பேசப்போவதில்லை. இந்த குடிநீர் டம்ளரை வைத்து ஒரு சின்ன பரிசோதனை செய்யப்போகிறோம்" என்றார்.
மாணவர்கள் குழம்பிப் போயினர். இது என்ன வேதியியல் வகுப்பா?. இவர் இதை வைத்து என்ன பரிசோதனை செய்யப் போகிறார்?. என ஆவலுடன் காத்திருந்தனர்.
ஒரு மாணவனை தன் அருகே அழைத்தார். கையை நீட்டச் சொல்லி அவன் கையில் அந்த தண்ணீர் டம்ளரை வைத்தார். "எவ்வளவு பாரமாக இருக்கிறது?'' எனக் கேட்டார்.
மாணவன் இது ஒன்றும் பாரமில்லை என்றான். அப்படியே வைத்திருக்குமாறு சொல்லிவிட்டு தன் கையில் இருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார்.
பத்து நிமிடம் ஆனவுடன் அந்த மாணவனிடம் "டம்ளர் பாரமாக இருக்கிறதா?'' எனக் கேட்டார். "ஆமாம்.. கொஞ்சம் பாரமாக ஆகிவிட்டது'' என மாணவன் சொன்னான்.
அரைமணி நேரம் கையில் வைத்திருந்தவன் "கைகள் இந்த பாரத்தை சுமக்கும் வலிமையை இழந்துவிட்டது'' எனச் சொல்லி டம்ளரை கீழே வைத்துவிட்டான்.
வல்லுனர் மாணவர்களிடம் "ஒரு மணி நேரம் இந்த டம்ளரை கையில் வைத்திருந்தால் என்ன ஆயிருக்கும்..'' என கேட்டார்.
மாணவர்கள் "அந்த டம்ளரின் எடை ஒரு டன் அளவிற்கு கூடியிருக்கும்'' என்றனர்.
"ஒரு நாள் வைத்திருந்தால்..?''
"அந்த பாரம் நம்மை அழுத்தியிருக்கும்''.
"இரண்டு நாள் வைத்திருந்தால்..?''
"மயங்கி கீழே விழுந்திருப்போம். மருத்துவமனைக்கு செல்லும் நிலை வந்திருக்கும்'' என்றனர்.
வல்லுனர் சொன்னார்.. "ஒரே எடை கொண்ட டம்ளர் எப்படி தன் பாரத்தைக் கூட்டிக்கொண்டே போனது எனப் பார்த்தீர்களா?.
உங்களால் சுலபமாக தூக்கக்கூடிய பொருள் கூட உங்களை வென்று விடுகிறதல்லாவா!. அதனால் மிக சாதாரணமான எண்ணங்கள் என நினைத்து நீங்கள் முதலில் சேர்த்து வைக்கிறீர்கள். அதுவே நாட்கள் செல்ல செல்ல பாரம் கூடி உங்களையே அழித்து விடுகிறது'' என்றார்.
மாணவர்கள் கைதட்டி அவர் கருத்தை வரவேற்றனர். அதனால் எல்லா எண்ணங்களையும் அதன் முதல் கட்டத்திலேயே இறக்கி வைத்துவிடுங்கள். அப்போது தான் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.
- சதீஸ்
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் பப்பாளி.
- பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன.
செரிமானமடைய வைக்கும் பப்பாளியின் என்சைம், பப்பாளி பழத்தில் உள்ளது. அதனால் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய இப்பழம் உதவும்.
பப்பாளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் காரணமாக உடலில் மூப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தைத் தக்க வைக்கிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் இது. இதில் குறைந்த அளவு கலோரியும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
நார்ச்சத்து மிக்கது, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும். கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். காய்ச்சல், சளி, நாள்பட்ட காய்ச்சலுக்கு இது சிறந்த நிவாரணி.
டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பப்பாளி இலைச்சாறைப் பருகக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரத்த அணுக்கள் பெருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பப்பாளி பழத்தில் இருக்கும் அழற்சியைத் தடுக்கும் என்சைம்கள் மூட்டுவலியைக் குறைப்பதற்கு உதவுகின்றன. இதிலிருக்கும் மேலும் சில என்சைம்கள் புற்றுநோய் வருவதைத் தடுப்பதிலும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன. குடல் புழுக்களை அகற்றுவதில் பப்பாளி விதைகள் பெரும் பங்காற்றுகின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளிகளில் வருவதற்கு பப்பாளி பழம் உதவுகிறது.
- கலை தமிழ் பாலா
- இந்தியாவில் மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
- மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்க அதற்கு மூலகாரணமான கொசுக்களை ஒழிக்க வேண்டும்.
இன்று உலக மலேரியா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மலேரியா காய்ச்சல் பரவுவதை தடுக்கவும், அதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏறபடுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மனிதர்களுக்கு வாழ்க்கையில் நோய், பிரச்சினை என எதுவாக இருந்தாலும் வந்தபின் காப்பதைவிட, வரும்முன் காப்பதே என்றும் சிறந்தது. அந்த வகையில் உலகில் மனிதர்களை ஏராளமான தொற்று நோய்கள், வைரஸ் காய்ச்சல்கள் அச்சுறுத்துகின்றன. இதில் மலேரியா காய்ச்சலும் ஒன்றாகும். அனாபிளஸ் வகை பெண் கொசுக்கள் கடிக்கும்போது மனிதர்களுக்கு மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. அதாவது, அனாபிளஸ் வகை பெண் கொசு கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது 'பிளாஸ்மோடியம்' என்ற 5 வகையான ஒட்டுண்ணிகள் மனிதனின் ரத்தத்துடன் கலந்துவிடுகிறது. இதையடுத்து அந்த ஒட்டுண்ணிகள் ரத்தத்தின் சிவப்பணுக்களை தாக்கி மலேரியா காய்ச்சலை உண்டாக்குகிறது. மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளாக தலை சுற்றல், வாந்தி, சுவாசித்தலில் சிரமம், கடுங்குளிர் ஏற்படும்.
இந்த காய்ச்சலின் தீவிரத்தால் மரணம்கூட ஏற்படும். ஆனால் மலேரியா காய்ச்சலை முன்னரே அறிந்து தகுந்த சிகிச்சை பெற்றால் குணப்படுத்திவிடலாம். ஊட்டச்சத்து உணவுகள், பழங்கள் சாப்பிட்டு ரத்த சிவப்பணுக்களை வலுவடைய செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் மலேரியா காய்ச்சலை விரட்டலாம். இந்தியாவில் மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மேலும் 2010-ல் ஒரு ஆண்டில் மட்டுமே உலகளவில் 6,55,000 பேர் மலேரியாவால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆவர்.
எனவே, மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்க அதற்கு மூலகாரணமான கொசுக்களை ஒழிக்க வேண்டும். இதற்கு நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மழைகாலங்களில் டயர், பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளில் மருந்து தெளித்து மூடிவைக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். இரவு தூங்கும்போது அவர்களுக்கு கொசுவலை பயன்படுத்துவது நல்லது.
2007-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, ஏப்ரல் 25-ந்தேதியை உலக மலேரியா தினமாக கடைப்பிடிப்பதாக அறிவித்தது. இதைதொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஹால்மார்க் என்ற பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகத்திடம் இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
- ஹால்மார்க் முத்திரை இடுவதற்கு ஐந்து பிரிவுகளை இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்துள்ளது.
ஹால்மார்க் என்பது விலையுயர்ந்த உலோகப் பொருட்களில், அந்த விலையுயர்ந்த உலோகப் பொருள் சேர்ந்துள்ள அளவின் துல்லிய மதிப்பு மற்றும் அங்கீகார பதிவாகும்.
தங்கத்தில் கலப்படம் செய்யாமல் விற்க வேண்டும் என்பதற்காக சுமார் 800 வருடங்களுக்கு முன் பிரிட்டனில் தான் முதல் முதலாக ஹால்மார்க் அறிமுகம் செய்யப்பட்டது. அன்றைய நகை வியாபாரிகள் சில உலோகங்களை தங்கத்துடன் எந்த அளவு சேர்கிறார்கள்? என்பதை எல்லோருக்கும் தெரியும்படி ஒரு ஹாலில் வைத்து நகை செய்தனர். ஹாலில் வைத்து தங்க நகைகளை செய்து அதன்பின் வியாபாரம் செய்வதால் தான் ஹால்மார்க் என்ற பெயர் இதற்கு வந்தது.
இந்தியாவில், ஹால்மார்க் என்ற பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகத்திடம் இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது. நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ள இந்த கழகத்தின் அலுவலகம் தான் ஹால்மார்க் என்ற சோதனையை செய்கிறது.
ஹால்மார்க் முத்திரை இடுவதற்கு ஐந்து பிரிவுகளை இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்துள்ளது.
1. பிஐஎஸ் தர நிர்ணய கழகத்தின் சின்னம்.
2. தங்கத்தின் தன்மை அல்லது மாற்று. உதாரணமாக 22 காரட் தங்கத்தில் 916 முத்திரையும், 21 காரட் தங்கத்தில் 875 என்ற முத்திரையும் இடப்பட்டிருக்கும்.
3. ஹால்மார்க் செய்யப்படும் மையத்தின் சின்னம்.
4. நகைகள் செய்யப்பட்ட வருடம் ரகசியமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
5. பிஐஎஸ் அங்கீகாரம் வணிகரின் சின்னம்.
ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் மேற்கண்ட ஐந்து முத்திரைகளும் கண்டிப்பாக இருக்கும்.
சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ என்ற தங்க நகை ஏற்றுமதி செய்யும் 164 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் இந்திய அரசு பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற விதியும் உள்ளது.
-அருண் நாகலிங்கம்
- ஆழ்ந்து தூங்கும்போது அருகில் சென்று திரும்பத் திரும்ப தினமும் சொல்லுங்கள்.
- மாற்றங்கள் நிகழும்! வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும்!
உங்களுடைய அன்பு குழந்தை தூங்கும்போது அருகில் சென்று அதிக ஓசை இன்றி ஆனால் திருத்தமாக கீழ்க்கண்ட வாசகத்தை சொல்லுங்கள்.
*என் மகனே(மகளே)! நீ வாழ்க!
*நீ நல்ல முயற்சி உடையவனாக இருக்கிறாய்!
*உடல் நலம் மிக்கவனாக இருக்கிறாய்!
*நல்ல சூழ்நிலை பெற்றவனாக இருக்கிறாய்!
*நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்!
*நன்கு உழைப்பவனாக நீ வளர்கின்றாய்!
*வாழ்வில் வெற்றி பெறுகின்ற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கின்றாய்!
*நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பி இருக்கிறது!
*உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது!
*நீ அருளாற்றல் பெற்றவனாக நல்ல அறிவுடனும் நலத்துடனும் வாழ்க வளமுடன்!
என அனுதினமும் அவனை வாழ்த்துங்கள்.
அவன் ஆழ்ந்து தூங்கும்போது அருகில் சென்று திரும்பத் திரும்ப தினமும் சொல்லுங்கள். அவனது ஆல்ஃபா மனநிலை அதனை ஏற்று, அவனது ஆழ்மனம் தூண்டப்படும். ஆழ்மனம் தூண்டப்பட்டால் படிப்படியாக அவனுள் மாற்றங்கள் நிகழும். உடன்பாட்டுச் சூழல் தோன்றும். இதை சொல்லச் சொல்ல உங்கள் கண்ணோட்டமும் மாறும். அவன் மீது உங்களுக்கு நம்பிக்கை உருவாகும். உங்கள் பேச்சும், தொணியுமே மாறும், சூழல் மாறும்! எண்ண அலைகள் உங்கள் குழந்தையை தாக்குவதற்கு பதிலாக, அவனை தழுவி அன்பு செய்யும்! மனம் மாறும்! மாற்றங்கள் நிகழும்! வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும்! வாழ்த்தி வாழ்த்தி பாருங்கள் ! வளத்தை சேருங்கள் !
- வேதாத்திரி மகரிசி
- கல்லீரலின் நலன் காப்பதில் நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
- கல்லீரலின் நலம் காக்க செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் ஒன்று மது பழக்கம்.
மூளைக்கு அடுத்தபடியாக உடலின் இரண்டாவது பெரிய உறுப்பாக கல்லீரல் விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், வளர்சிதை மாற்றம் உள்பட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கல்லீரலின் பங்களிப்பு முக்கியமானது. கல்லீரலின் செயல்பாட்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடும். மது பழக்கம், போதைப்பொருள் துஷ்பிரயோகம், ஹெபடைடிஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கல்லீரல் எதிர்மறையாக பாதிப்புக்கு ஆளாகிறது.
ஒட்டுமொத்த உடல் நலனில் கல்லீரலின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரல் தொடர்பான நோய்கள், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ந் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கல்லீரலை பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பற்றி பார்க்கலாம்.
செய்யக்கூடியவை:
* கீரை, புரோக்கோலி, காலே போன்ற பச்சை இலை காய்கறிகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். இந்த காய்கறிகள் உடலில் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறையை தூண்டுவதற்கு உதவுகின்றன.
* வால்நெட், அவகோடா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்புகள் நிறைந்தவைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
* கல்லீரலின் நலன் காப்பதில் நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீர் தான் இயற்கையாகவே நச்சுத்தன்மையை நீக்கும் முகவராக செயல்படுகிறது. உடலில் இருந்து கழிவுகளை சுலபமாக அகற்ற கல்லீரலுக்கு நீர் உதவிகரமாக செயல்படுகிறது.
* உண்ணும் உணவில் பழங்களும் இடம் பெற வேண்டும். அவை ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, கிரேப் புரூட் உள்ளிட்ட வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுதான் எல்லா நோய்களில் இருந்தும் உடலை காக்கும் அருமருந்து. உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாட வாழ்வில் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நேரத்தை செலவிட வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறையினரிடையே 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்தும் மோகம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தும் மை தரமானதாக இருக்க வேண்டும். அதனை குத்துவதற்கு பயன்படுத்தும் கருவி கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு பயன்படுத்திய டாட்டூ குத்தும் கருவி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படாவிட்டால், மற்றொருவருக்கு பச்சை குத்தும்போது ரத்தம் மூலம் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் அதிகம். குறிப்பாக ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி, கல்லீரல் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். டாட்டூ குத்தும் கருவிகள் மூலம் பரவும் வைரஸ்கள் ஆரம்பத்தில் கல்லீரல் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
காலப்போக்கில் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் புதியதா அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு கிருமி நீக்கம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஏற்கனவே கல்லீரல் சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை குத்திக்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.
செய்யக்கூடாதவை:
* பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். இந்த வகையான உணவுகள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த உணவுகள் உடலில் சர்க்கரை அளவையும் அதிகரிக்க செய்துவிடும்.
* கெட்ட கொழுப்புகள் எனப்படும் நிறைவுற்ற கொழுப்புகளை தவிர்க்கவும். பொரித்த உணவுகளும் இதில் அடங்கும்.
* கல்லீரலின் நலம் காக்க செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் ஒன்று மது பழக்கம். மதுவில் உள்ள ஆல்கஹால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலின் செயல்பாட்டை கடினமாக்கிவிடும். அதனால் கல்லீரல் எளிதில் பாதிப்புக்கு ஆளாகிவிடும்.
* ஆடு, மாடு, பன்றி போன்ற பாலூட்டிகளின் இறைச்சி, சிவப்பு இறைச்சியாக கருதப்படும். அந்த வகை இறைச்சியை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த வகை இறைச்சி உணவுகள் கல்லீரலில் அதிக கொழுப்புகள் படிவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
* சாக்லேட்டுகள், மிட்டாய்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற அதிக சர்க்கரை கொண்ட உணவுகளையும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
- ஓலைச்சுவடிகளை வாங்கியதும், விளக்கு வெளிச்சத்தைக்கூட நாடிப் போகாமல், நிலா வெளிச்சத்திலேயே பிரித்துப்பார்க்கிறார் சாமிநாதய்யர்.
- 1889 ஆம் ஆண்டு ‘பத்துப்பாட்டு’ ஓலைச்சுவடி அச்சிடப்பட்டு நூலாக வெளியாகியது.
திருநெல்வேலிச் சீமையில் ஆழ்வார் திருநகரி என்னும் ஊருக்குச் சென்று அங்கே இலட்சுமணக் கவிராயர் என்னும் பெருந்தகையாளரைச் சந்தித்துப் 'பத்துப்பாட்டு' என்ற ஓலைச்சுவடி தேடி வந்திருப்பதாக உ.வே.சா. கூறினார்.
அவரது இல்லத்தில் எத்தனையோ ஓலைச் சுவடிகள் இருந்தன. அத்தனையும் தேடிப்பார்த்தார். ஆனால் 'பத்துப்பாட்டு' மட்டும் அகப்படவில்லை.
அப்போது இலட்சுமணக் கவிராயர், "என் வேலைக்காரன் சில ஓலைச் சுவடிகளை எடுத்துப்போய் என் மாமனாரிடம் கொடுத்துவிட்டான். ஒருவேளை நீங்கள் தேடிவந்த நூல் அவரிடம் இருக்கலாம்" என்றார்.
"வாருங்கள் போய்த் தேடுவோம்".- உ.வே.சா.
"நான் அங்கே வர இயலாது".
"ஏன்?"
"என் மாமனார் வீட்டு வாசற்படியை மிதிப்பதில்லை என்று நான் சத்தியம் செய்திருக்கிறேன்".
"அப்படியானால் நான் மட்டும் போய்ப் பார்க்கிறேன்"
"வேண்டாம்"
"ஏன்?"
"தமிழறிஞர்களை மதிக்கத் தெரியாதவர் அவர். உங்களைஅவமானப்படுத்தி விடுவார்"
"இதற்கு வேறு வழி?"
"இன்னும் ஒருநாள் பொறுங்கள்".
உ.வே.சா. மிக்க சோர்வோடு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். இரவு நேரம், நிலா வெளிச்சம். அப்போது இலட்சுமணக் கவிராயர் மேல்துண்டில் எதையோ சுற்றி எடுத்துக் கொண்டு ஓடோடி வருகிறார். அருகே வந்ததும், கவிராயர் மேல்துண்டை விரித்தார். உள்ளே இருந்தது ஓலைச்சுவடிக் கட்டு. அதைக்காட்டி,"நீங்கள் தேடி வந்த சுவடிகள் இதுதானா பாருங்கள்" என்றார்.
ஓலைச்சுவடிகளை வாங்கியதும், விளக்கு வெளிச்சத்தைக்கூட நாடிப் போகாமல், நிலா வெளிச்சத்திலேயே பிரித்துப்பார்க்கிறார் சாமிநாதய்யர்.
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை முதலில் இருக்கிறது. தொடர்ந்து பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை இருக்கின்றன. பிறகு பார்க்கிறார், முல்லைப் பாட்டு இருக்கிறது. மேலே நிலா. உடனே, "நிலவில் மலர்ந்த முல்லையோ?" என்று ஆடுகிறார், பாடுகிறார். இலட்சுமணக் கவிராயரைக் கட்டி அணைத்துக் கொள்கிறார்.
"இந்த ஓலைச்சுவடிகள் எப்படிக் கிடைத்தன?"
"என் மாமனார் வீட்டில் போய்த் தேடிக் கண்டுபிடித்து வந்தேன்!".
"அவர் வீட்டு வாசற்படியைத்தான் மிதிப்பதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்துள்ளீர்களே?"
"ஆமாம், சத்தியம் செய்தது உண்மைதான். ஆனால் தமிழுக்காக நான் என் மானத்தை விற்றுவிட்டேன்!"
அதுகேட்டு சிலைபோல் நின்றார் சாமிநாதய்யர். செய்வதறியாது கண்ணீரை நன்றிக் கடனாகச் செலுத்திவிட்டு, ஓலைச்சுவடிகளுடன் ஊர் திரும்பினார்.
1889 ஆம் ஆண்டு 'பத்துப்பாட்டு' ஓலைச்சுவடி அச்சிடப்பட்டு நூலாக வெளியாகியது. படித்தவர்கள் எல்லாம் திகைத்தார்கள், மகிழ்ச்சியால் திளைத்தார்கள்.
-பாலு சுப்பிரமணியன்






