என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி கற்பகம் (50).
ராஜேந்திரன் ஊருக்கு வந்திருந்தார். அவரும், அவருடைய மனைவியும் நேற்று மதியம் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு மோட்டார்சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கிருஷ்ணன்கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண் ஆஸ்பத்திரி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மனைவி கற்பகம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வத்திராயிருப்பில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு மோட்டார்சைக்கிளில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து பற்றி கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான தம்பதி உடல்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ராமலிங்கபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் காளிமுத்துவை கிருஷ்ணன்கோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காளையார்குறிச்சியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மனைவி சந்திராவும் (வயது 48) ஒருவர். இந்தநிலையில் அதே ஆலையில் பணியாற்றி வந்த சந்திராவின் தந்தை பொன்னுச்சாமியும் (75) வெடிவிபத்தில் பலத்த தீக்காயம் அடைந்து, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.
விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் காளையார்குறிச்சி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெடி விபத்தில் இறந்த முதியவர் பொன்னுச்சாமியின் மனைவி மாரியம்மாள் (70) சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அதே போல் சந்திராவின் மகன் இருளப்பன் மற்றும் உறவினர்கள் கண்ணீர் சிந்தியபடி இருந்தனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சுப்புக்கனி (வயது40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பனையடிப்பட்டியில் உள்ளது.
இங்கு அனுமதியின்றி பேன்சி ரக வெடிகள் தயாரிப்பதாகவும், சிறுமிகள் வேலை பார்த்து வருவதாகவும் பல புகார்கள் வந்தன.
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி தாழம்பூ ராஜா மற்றும் வருவாய்த்துறையினர் பட்டாசு ஆலையில் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மாடசாமி என்பவரது மகள் ஆர்த்தி (வயது 11) என்ற சிறுமி சரவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஏழாயிரம் பணணை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பட்டாசு ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக வெடிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் 30 அட்டை பெட்டிகளில் இருந்த வெடிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் சுப்புக்கனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா தொழிற் சங்கம் தவிர மற்ற அனைத்து தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 355 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று 45 சதவீதம் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டது.
முக்கிய நகர் பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இருந்தது பெரும்பாலான கிராம பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மாணவ, மாணவிகளும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.
வேலைநிறுத்தம் காரணமாக தனியார் பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் போட்டி போட்டுக் கொண்டு பயணிகளை ஏற்றிச் சென்றன. மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று 6 மணிக்கு பிறகு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதிகாரிகளின் முயற்சியால் இன்று 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டது. வேலைநிறுத்தம் காரணமாக இன்றும் பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் சிரமத்தையே சந்தித்தனர்.
சிவகங்கை மாவட்டத்திலும் இன்று குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் சரிவர இயக்காததால் பொதுமக்க்ள பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
தேவகோட்டை பேருந்து நிலையத்தில் இதனால் பள்ளி மாணவர்கள் பஸ் வசதி இல்லாததால் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடி பெரியகாரை கிராமங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தேவகோட்டை நகரில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இல்லாததால் அதிக அளவில் மாணவர்கள் இந்த 2 கிராம பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
அரசு போக்குவரத்து கழக பணிமனை தேவகோட்டை நகரில் இருந்தும் அனுமந்தகுடி பள்ளிகளுக்கு மட்டும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால் பெரியகாரை மேல்நிலைப் பள்ளிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ,மாணவிகளும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் மாணவ மாணவிகள் நடந்து சென்றும், இரு சக்கர வாகனத்தில் அந்த வழியாக செல்லும் நபர்களிடம் உதவி கேட்டு செல்கின்றனர். ஊழியர்கள் போராட்டம் முடியும் வரை காலை, மாலை இரு வேளைகளிலும் மட்டுமாவது பேருந்து இயக்கினால் உதவியாக இருக்கும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி அருகே வி.சொக்கலிங்காபுரத்தில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நேற்று இரவு இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் தீமளமளவென பற்றி எரிந்தது. இதில் 3 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. 3 அறைகள் பலத்த சேதமடைந்தன.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இரவு நேரம் இந்த விபத்து நடந்ததால் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஒரேநாளில் அடுத்தடுத்து நடந்த வெடி விபத்து சிவகாசி பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கராஜ் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு காளையார்குறிச்சி, திருத்தங்கல், சிவகாசி, எல்லிங்க நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலை வளாகத்தில் உள்ள புற்களை டிராக்டர் மூலம் வெட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன.
விபத்து ஏற்பட்ட பகுதியில் மருந்து இருப்பு வைக்கும் அறை இருந்ததால் அந்த அறைக்கும் தீ பரவியது. இந்த வெடிவிபத்தில் 15-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் பல அறைகள் சேதம் அடைந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அறைகள் வெடித்து சிதறி கொண்டே இருந்ததால் மீட்பு பணிகள் தாமதமானது.
இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே எல்லிங்காநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரராஜ் மனைவி செல்வி (வயது37), அழகர்சாமி மனைவி லட்சுமி (50), காளையார்குறிச்சியை சேர்ந்த செல்லையா மனைவி ஜோதி (55), ரத்தினசாமி மனைவி சந்திரா (48) ஆகிய 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.
மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் காளையார்குறிச்சியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (74) என்ற தொழிலாளி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
பிரபாகரன் என்ற தொழிலாளி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2 பேர் 80 சதவீதத்துக்கும் மேல் உடல் கருகியதால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவம் பற்றி அறிந்ததும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள சுப்பிரமணியம் ஆகியோர் விபத்து நடந்த ஆலைக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விபத்து நடந்த பகுதியில் இரவிலும் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. தீயணைப்பு படையினர், போலீசார், தன்னார்வலர்கள், உள்ளூர் இளைஞர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பட்டாசு ஆலை அதிபர் தங்கராஜ் பாண்டியன் எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விக்னேசுவரன் மற்றும் போர்மேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 23 பேர் இறந்தனர். பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சோக சம்பவம் அடங்குவதற்குள் விருதுநகர் மாவட்டத்தில் மற்றொரு பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெடி விபத்தில் காளையார்குறிச்சியைச் சேர்ந்த ஜோதி, சந்திரா மற்றும் பொன்னுச்சாமி ஆகிய 3 பேர் பலியாகி உள்ளனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 5 பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்கநாதாபுரத்தைச் சேர்ந்த காளியப்பன்(வயது 32) சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் வெடிவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
வீடுகளில் கரியடுப்பு, விறகடுப்பு, மரத்தூள் அடுப்புகளில் சமையல் செய்து வந்த நிலை மாறி தற்போது கியாஸ் சிலிண்டர் சமையல் பரவலாகி விட்ட நிலையில் கியாஸ் சிலிண்டர் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. மின் அடுப்பு உபயோகப்படுத்தி வந்தாலும் அது பரவலாக இல்லாத நிலையில் மத்திய அரசு ஏழைப் பெண்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கிய நிலையில் அனைத்து வீடுகளிலும் கியாஸ் சிலிண்டர் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது.
ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பை தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் நடப்பு மாதத்தில் 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மாதம் முதல் வாரத்தில் ரூ.25-ம், அதனை தொடர்ந்து ரூ.50-ம், தற்போது நேற்று ரூ. 25-ம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரே மாதத்தில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.100 உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.826 இருந்தபோது மத்திய அரசு மானியம் ரூ.265 வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கியாஸ் சிலிண்டர் விலை மூன்று முறை உயர்த்தப்பட்ட நிலையில் மானியம் ரூ.24.50 ஆக குறைக்கப்பட்டு விட்டது.
இந்த விலை உயர்வுக்கான அறிவிப்பு குடும்ப பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்கள் தற்போதுதான் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் ஓரளவு தங்களது பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரக்கூடிய நிலையில் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் கியாஸ் விலையையும் உயர்த்தி மத்திய அரசு குடும்ப தலைவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
கடந்த காலங்களில் கியாஸ் சிலிண்டர் விலை இதைவிட அதிகமாக வைக்கப்பட்டிருந்தாலும் மானியம் அதிகமாக இருந்ததால் குடும்பப் பெண்களுக்கு பாதிப்பு தெரியவில்லை. ஆனால் தற்போது மானியம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில் தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது அவர்களுக்கு பெரும் பாதிப்பை மனதளவிலும், பொருளாதார அளவிலும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே மத்திய அரசு இதுகுறித்து உரிய முறையில் ஆய்வு செய்து வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.






