என் மலர்
செய்திகள்

ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு வடிகால் ஓடையில் கழிவுகள் தேங்கி கிடக்கும் காட்சி.
ராஜபாளையத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ராஜபாளையத்தில் வடிகால் வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் நகராட்சியில் மழைநீர் வடிகால்கள் 10- க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன. அதிகமாக மக்கள் நடமாடக்கூடிய இடங்களில் இந்த வடிகால்கள் அமைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவி 23-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானார்கள்.
அதன் பின்பு சுகாதாரத்துறை அதிகாரிகள், கலெக்டர், அமைச்சர்கள், ராஜபாளையம் பகுதியில் முகாமிட்டு பழைய பஸ் நிலையத்திலிருந்து மகப்பேறு மருத்துவமனை, காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் முக்கு, முடங்கிய ரோடு, புல்லு கடை பஜார், பகுதியில் அமைந்துள்ள வடிகால் ஓடை கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் தற்போது பராமரிப்பு இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனை அருேக உள்ள மழைநீர் வடிகால் கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்டது.
ராஜபாளையம் நகருக்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வெளிேயறும் கழிவுநீர், இந்த மழைநீர் வடிகால் வழியாக செல்கிறது.
இவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டதால் ஓடைகளில் தேவையற்ற குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஆதலால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இதனால் கொசுக்களிள் தொல்லை அதிகமாக இருப்பதுடன், தொற்றுநோய் பரவும் அபாயநிலையும் நிலவுகிறது.
நகரில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. எனவே வீடுகளில் இருந்து நேரடியாக கழிவு நீரை வடிகால்களுக்கு திருப்பி விடுகின்றனர்.
இவை அனைத்தும் முடங்கியார் பாலம் வழியாக கொண்டநெரி கண்மாய், பெரியாதி குளம் கண்மாய், ஆகிய கண்மாய்களில் கலந்து மாசடைகிறது. எனவே கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






