search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து: மத்திய படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்-மனைவி பலி

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மத்திய படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், அவருடைய மனைவியும் பலியானார்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி கற்பகம் (50).

    ராஜேந்திரன் ஊருக்கு வந்திருந்தார். அவரும், அவருடைய மனைவியும் நேற்று மதியம் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு மோட்டார்சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    கிருஷ்ணன்கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண் ஆஸ்பத்திரி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.

    இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மனைவி கற்பகம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வத்திராயிருப்பில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு மோட்டார்சைக்கிளில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து பற்றி கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான தம்பதி உடல்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த சம்பவம் தொடர்பாக ராமலிங்கபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் காளிமுத்துவை கிருஷ்ணன்கோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×