என் மலர்tooltip icon

    விருதுநகர்

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் மாத இறுதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பதிவு அவசியம் என கலெக்டர் கண்ணன் கூறினார்.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன்அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் மாத இறுதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைபடி எவ்விதமான தளர்வுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

    நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. மொத்த வியாபார காய்கறி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது தொழிற்சாலைகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுவதையும், விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    வணிக வளாகங்கள் மற்றும் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்படலாம். ஓட்டல்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதத்தில் மட்டும் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும். ஆனால் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும். விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி போட்டிகள் நடத்தலாம். நீச்சல் குளங்களில் பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் அதன் சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி இல்லை.

    வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மாவட்டத்திற்கு வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவுமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். நோய்த்தொற்றை குறைக்கும் பொருட்டு ஏற்கனவே உள்ளபடி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அதில்தெரிவித்துள்ளார்.
    மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள் வறண்டு விட்ட நிலையில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் குடிநீர் பிரச்சினை என்பது நிரந்தரமாக நீடிக்கும் நிலை இருந்து வருகிறது. அதிலும் தொடர் வறட்சி காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆனாலும் கடந்த ஆண்டு இறுதியில் மழை பெய்த நிலையில் ஓரளவு நீர்நிலைகளில் நீரை தேக்கி வைக்க வாய்ப்பு ஏற்பட்ட போதிலும் தற்போது கடும் வெயிலால் நீர் ஆதாரங்களும் வறண்டு விட்டன.

    மாவட்டத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் குடிநீர் தேவைக்கு பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பி உள்ளனர். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து எதிர்பார்த்த அளவிற்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

    விருதுநகர் நகர் பகுதிக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டில் இருந்து வந்த போதிலும் ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்து கிடைக்கும் நிலத்தடி நீரைக் கொண்டு நகரில் குடிநீர் தேவையை சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி 35 முதல் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தினசரி 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.

    இதனால் நகரின் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் நீர் ஆதாரங்கள் வறண்டு விட்ட நிலையில் மின் மோட்டார் பழுது, குழாய் உடைப்பு போன்ற பிரச்சினைகளாலும் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.. மேலும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த போதிலும் முறையாக அனைத்து கிராம பகுதிகளிலும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்காத நிலையே நீடிக்கிறது.

    விருதுநகருக்கு நீண்டகாலமாக குடிநீர் தேவையை சமாளிப்பதற்கு உதவி வரும் ஆனைக்கூட்டம் அணைப்பகுதி தற்போது முற்றிலுமாக வறண்டு விட்டது. அணைப்பகுதியில் உள்ள உறைகிணறுகள் மூலம் எடுக்கப்படும் குடிநீரே நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க உதவி வருகிறது. ஆனால் தற்போது இந்த அணைப்பகுதியும ்வறண்டு விட்டது. மேலும் ஒண்டிபுலி கல்குவாரியில் இருந்தும் குடிநீர் கிடைக்காத நிலையில் தற்போது உள்ளதைவிட கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதில் பெரும் சிரமம ்ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதேபோன்று மாவட்டத்தில் அனைத்து நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் கோடைகால குடிநீர் பிரச்சினை கடுமையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தற்போதே கோடை கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலம் தற்போது உள்ள குடிநீர் வினியோக நிலைமை குறித்து கண்டறிந்து தேவைப்படும் கிராமங்களுக்கு நீராதரத்தை பெருக்கவும், குடிநீர் வினியோகத்தை சீரமைக்கவும் தேவையான நிதி உதவி கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

    மேலும் போதிய நிதி உதவி பெற்று உள்ளாட்சி அமைப்புகள ்நகர்ப்புற மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக மாவட்ட நிர்வாகம் தற்போது கோடை கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தேவைப்படும் நிதிகுறித்து மதிப்பீடு தயாரித்து அரசிடம் இருந்து நிதிஉதவி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
    விருதுநகரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்காபுரத்தில் இருந்து விருதுநகருக்கு நேற்று காலை அரசு போக்குவரத்து கழக பஸ் வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை பட்டம்புதூரை சேர்ந்த டிரைவர் ராமர் ஓட்டி வந்தார். இந்த பஸ் விருதுநகர்- சாத்தூர் ரோட்டில் மேல சின்னையாபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த ராமர் (வயது 27) என்பவர் பஸ்சை நிறுத்துமாறு சைகை காட்டினார்.

    பஸ் சிறிது தூரம் தாண்டி நிறுத்தப்பட்டதால் ராமர் வேகமாக ஓடி வந்து பஸ்சில் ஏறினார். பஸ் விருதுநகர் பழைய பஸ் நிலையம் வந்தடைந்தது.

    இந்நிலையில் அப்போது திடீரென பஸ் டிரைவர் இருக்கைக்கு பின்புறம் அமர்ந்திருந்த ராமர், டிரைவர் ராமரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் வாலிபர் ராமரை பிடித்து பஸ்நிலைய புறக்காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.அதனை தொடர்ந்து போலீசார், ராமரை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    இதனையடுத்து போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ராமர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், வாலிபர் ராமர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    மிளகாய் வத்தலுக்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி, லட்சுமியாபுரம், தாயில்பட்டி, பூசாரி நாயக்கன் பட்டி, சல்வார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 30 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் வத்தல் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாததால் மிளகாய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    வெம்பக்ேகாட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் ஏக்கருக்கு 15 குவிண்டால் வரை தான் விளைச்சல் கிடைத்துள்ளது. அதேபோல சென்ற ஆண்டு குவிண்டால் ரூ.9,000 முதல் ரூ.9,500 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ரூ. 13,000 முதல் ரூ.14,000 விற்பனையாகிறது.

    விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    தற்ேபாது போதுமான அளவு தண்ணீர் இல்லாததாலும், கடுமையான வெயில் காரணமாகவும் மிளகாயில் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் விளைச்சல் குறைவுக்கு ஒரு காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சாத்தூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீரபாண்டியபுரம் பட்டாசு கடை அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அணைக்கரைபட்டியை சேர்ந்த ஊமைத்துரை (வயது 52) என்பவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஸ்டீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது நென்மேனி ஆற்றில் வைத்து மதுவிற்ற என்.மேட்டுபட்டியை சேர்ந்த நாராயணசாமி (57) என்பவரிடம் இருந்து 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    ராஜபாளையம் அருகே கிணற்றில் 42 வயது மதிக்கத்தக்க நபர் கழுத்தை அறுத்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறத்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ராஜபாளையம் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது கிணற்றில் வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த உடலை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர். முகம் சிதைந்திருந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. 42 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் கழுத்து அறுக்கப்பட்ட தடயங்களும், மேலும் உடல் முழுவதும் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களும் காணப்பட்டன.

    தொடர்ந்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவரை மர்ம கும்பல் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து பின்னர் உடலை கிணற்றில் வீசி இருக்கலாம் என தெரிகிறது.

    இந்த சம்பவம் ஒரு வாரத்துக்கு முன்பு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடல் மிகவும் அழுகிய நிலையிலும், முகம் சிதைந்த நிலையிலும் இருப்பதால் இறந்தவர் யார்? என்று உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் காவேரிமணியம் (வயது 42). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். சில காரணங்களால் சஸ்பெண்டு செய்யப்பட்டதால் காவேரி மணியம் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். ராஜபாளையம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடியதாக காவேரிமணியம் மீது வழக்கு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டு பிடித்து தருமாறு காவேரி மணியத்தின் மனைவி ராதா சேத்தூர் போலீசில் நேற்று புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிணற்றில் பிணமாக கிடந்தவர் ஒருவேளை காவேரிமணியாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவில்தான் அவர்தான் இவரா? என்பது தெரியவரும். இருந்தபோதிலும் மாயமான போலீஸ்காரரை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    விருதுநகரில் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன்பு 2-வது நாளாக பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் முத்துராமன்பட்டி 2-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மதுரையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி ஆர்த்தி (வயது 38). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சஞ்சய்கார்த்தி என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கோரி மாவட்ட நீதிமன்றத்தில் செல்வராஜ் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த மாவட்ட கோர்ட்டு இருவரும் சேர்ந்து வாழ அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆர்த்தி கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜிடம் மனு கொடுத்தார்.

    இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையின் போது மார்ச் 31-ந் தேதிக்குள் உரிய பதில் அளிப்பதாக செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை அவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து ஆர்த்தி தனது மகன் சஞ்சய் கார்த்தியுடன் கணவர் வீட்டு முன்பு அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சேர்ந்து வாழ கணவரை வலியுறுத்த வேண்டும் என அவர் கூறினார்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போலீசார் சம்பவ இடம் சென்று ஆர்த்தியிடம் பேசினர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் கணவர் வீட்டு முன்பு ஆர்த்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காரியாபட்டி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டினால் செவ்வந்தி பூக்களின் விளைச்சல் குறைந்து உள்ளது.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே அரசங்குளம் பகுதியில் மல்லிகை பூக்கள், செவ்வந்தி பூக்கள், காய்கறி, வெங்காயம் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதால் தற்போது விவசாயம் செய்யும் பரப்பளவும் குறைந்து வருகிறது. 5 ஏக்கர் விவசாயம் செய்த விவசாயிகள் இன்று ஒரு ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்கின்றனர்.

    கிடைக்கும் தண்ணீரை வைத்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது செவ்வந்தி பூ சாகுபடி செய்தனர். இந்த பூக்கள் தற்போது பூக்க ஆரம்பித்து விட்டன.

    போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் எதிர்பார்த்த அளவு பூக்கள் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    காரியாபட்டி பகுதியில் உள்ள எண்ணற்ற பேர் விவசாயத்தை நம்பி தான் பிழைத்து வருகிறோம்.

    இந்த பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய அளவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இருப்பினும் இருக்கிற தண்ணீரை வைத்து செவ்வந்தி பூ சாகுபடி செய்தோம். அது தற்போது பூக்க ஆரம்பித்து விட்டது.

    இருப்பினும் தண்ணீர் போதுமான அளவு இல்லாததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருப்பதாலும் எதிர்பார்த்த அளவு பூக்களில் மகசூல் பெறமுடியவில்லை.

    எனவே இந்த பகுதியில் நிலத்தடி நீர் உயர்வதற்கு நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டம் மூலம் இந்த பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட குளிர்பானங்களை தேடி செல்கின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    வழக்கமாக சித்திரை மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டால் கடுமையான வெயில் அடிக்கும்.

    இந்தநிலையில் தற்போது பங்குனி மாதமே வெயில் கடுமையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.

    விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது.

    ஆதலால் பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட குளிர்பானங்களை தேடி செல்கின்றனர். தற்போது திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    விருதுநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆதலால் மக்கள் வெப்பத்தை தணிக்க பழக்கடைகளையும், இளநீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றையும் தேடி செல்கின்றனர். அதேபோல தர்பூசணி பழங்களின் விற்பனையும் தற்போது அமோக நடைபெற்று வருகிறது. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது கிலோ ரூ.20-க்கு தர்பூசணி விற்பனை செய்யப்படுகிறது.

    விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், மதுரை செல்லும் சாலைகளில் ஆங்காங்கே தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு இளநீர், கரும்புச்சாறு, கம்பங்கூழ், மோர், தர்பூசணி உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தர்பூசணியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 16,980 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,980 ஆக உயர்ந்துள்ளது. 16,660 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 88 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதிப்புக்கு 232 பேர் பலியாகி உள்ளனர்.
    புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் வன்னியம்பட்டி போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி பேராசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாத்மா காந்தி நகரில் வசித்து வருபவர் இளங்கோவன். இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி விஜயகாந்தி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோட்டைபட்டியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று மீண்டும் மகாத்மா காந்தி நகரில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது ெதரியவந்தது.

    வீட்டில் உள்ள 50 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் வன்னியம்பட்டி போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.

    மேலும் விருதுநகரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீசார் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது தெரியவரும்போலீசார் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த நேரத்தை பயன்படுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது.
    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் விருதுநகரில் 71.30 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.
    விருதுநகர்:

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    விருதுநகரில் 71.30 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

    அருப்புக்கோட்டை - 75.58%
    ராஜபாளையம் - 73.86%
    சாத்தூர் - 75.16%
    சிவகாசி - 70.00%
    ஸ்ரீவில்லிபுத்தூர்- 73.03%
    திருச்சுழி - 77.44%
    விருதுநகர் - 71.30%
    ×