என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சாத்தூரில் வெளிமாநில மது பாட்டில்களை ரெயிலில் கடத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சாத்தூர்:

    சாத்தூருக்கு ரெயிலில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக அம்மாபட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி மற்றும் அம்மாபட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சாத்தூர் ரெயில் நிலையம் அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கையில் ஒரு பையுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் ெரயில்வே கேட் அருகில் திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனையிட்டனர். இதில் அவர்கள் கொண்டு வந்த பையில் வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தன. அவர்கள் ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் சாத்தூர் அருகே உள்ள நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 24) மற்றும் முருகன் (31) என்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 90 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையால் கடந்த 2 மாதங்களில் 201 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிர் பலியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தாக்கத்தால் இது வரை 20 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா முதலாவது அலையில் கடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை 232 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஆனால் தற்போது கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரை 2 மாதங்களிலேயே 201 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். மே மாதம் 169 பேரும், நடப்பு மாதத்தில் நேற்று முன்தினம் வரை 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு பாதிப்பின் போது தினசரி ஒருவர் அல்லது இருவர் மட்டுமே உயிரிழந்து வந்த நிலையில் தற்போது தினசரி உயிர் பலி எண்ணிக்கை 10 முதல் 15 வரை ஏற்படும் நிலை உள்ளது. உயிர்ப்பலியை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இது பற்றி அரசு டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது,

    கடந்த மே மாத தொடக்கத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனால் ஆக்சிஜன் வினியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.

    இதுபற்றி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் தற்போது தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏற்படும் உயிரிழப்பு குறித்தும் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது, அதனால் தான் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பாதிப்பு தீவிரம் அடைந்த பின்னர்தான் நிறைய பேர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்கள் தாங்களாகவே மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டு விட்டு பின்பு பாதிப்பு அதிகரித்த பின்பு அரசு ஆஸ்பத்திரியை தேடி வருகின்றனர். பாதிப்பு முற்றிய நிலையில் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உயிரிழப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து கலெக்டர் கண்ணன் தெரிவித்ததாவது:-

    கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து விடுகின்றனர். அங்கு நோய் முற்றிய நிலையில் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்டோரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசு டாக்டர்கள் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட நபரை ஆய்வு செய்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு முன்பே அவர் உயிரிழந்து விடும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. எனவே தனியார் ஆஸ்பத்திரிகள் சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு பின்பு திடீரென சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் கொரோனா 2-வது அலை தாக்கத்தில் நோய் பாதிப்பின் தன்மை என்பது திடீரென நோயின் தீவிரம் அதிகரிக்கும் நிலையில் உள்ளதால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் நிலைமை ஏற்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.

    ஆக்சிஜன் வினியோகம், உயிரிழப்பு அதிகரிப்பு குறித்து சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவர் கூறுகையில், கொரோனா பாதிப்பால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு உரிய முறையில் ஆக்சிஜன் கொடுப்பதற்கான வசதி அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இல்லாத நிலையும் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் விருதுநகர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியிலும், சிவகாசி இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியிலும் தான் ஆக்சிஜன் உற்பத்தி மையம் உள்ளது.

    மற்ற தாலுகா ஆஸ்பத்திரிகளில் அந்த வாய்ப்பு இல்லாத நிலையில் மதுரை மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளதாக தெரிவித்தார்.

    தாலுகா ஆஸ்பத்திரிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஆக்சிஜன் அளிப்பதில் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க நவீன தொழில்நுட்பத்தில் ஆக்சிஜன் அளிக்கும் கருவி வழங்கப்பட உள்ளதாகவும் அந்த டாக்டர் தெரிவித்தார்.

    இம்மாவட்டத்தில் பாதிப்பு சதவீதம் குறைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் குறைய வாய்ப்பு உள்ளதாக கலெக்டர் கண்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
    மாவட்டத்தில் நேற்று மட்டும் 1,043 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இது வரை 31 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,043 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இது வரை 31 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    6 ஆயிரத்து 924 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாயினர். இதனால் பலி எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 1,157 படுக்கைகள் உள்ள நிலையில் 852 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 305 படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா சிகிச்சை மையங்களில் 1,573 படுக்கைகள் உள்ள நிலையில் 673 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 900 படுக்கைகள் காலியாக உள்ளன. இம்மாவட்டத்தில் நேற்றும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் பாத்திமா நகர், அழகர்சாமி நகர், சூலக்கரை, அரசு ஆஸ்பத்திரி, சிவஞானபுரம் குருசாமி கொத்தன்தெரு, எல்.பி.எஸ்.நகர், கே.உசிலம்பட்டி, என்.ஜி.ஓ காலனி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம், செங்குன்றாபுரம், ஆமத்தூர், பெரிய தாதம்பட்டி, அகமதுநகர், பாண்டியன் நகர், ரோசல்பட்டி, சத்திர ரெட்டியபட்டி, சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, கத்தாளம்பட்டி தெரு, வச்சக்காரப்பட்டி, ஒண்டிப்புலி, காந்தி நகர், ஜெயராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் முக்குளம், அகத்தாக்குளம், இசலி, முடுக்கன்குளம், செட்டிபட்டி, குல்லூர்சந்தை அகதிகள் முகாமில் 10 பேர், அரசகுடும்பன்பட்டி, எம்.ரெட்டியபட்டி, புதூர், கல்லூரணி, மடத்துப்பட்டி, முடுக்கன்குளம், குருணைகுளம், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பந்தல்குடி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 209 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில பட்டியலில் 448 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    மாவட்டத்தில் இதுவரை 30,775 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1001 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 30,775 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1001 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7,579 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    நோய் பாதிப்புக்கு மேலும் 10 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 433 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1198 படுக்கைகள் உள்ள நிலையில் 896 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 302 படுக்கைகள் காலியாக உள்ளன.

    சிகிச்சைமையங்களில் 1573 படுக்கைகள் உள்ள நிலையில் 744 படுக்கைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில் 829 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் லட்சுமி நகர், பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், கல்லம்பட்டி, செவல்பட்டி, கோட்டூர், என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் காரியாபட்டி, மல்லாங்கிணறு, கோபாலபுரம், ஏ.ரெட்டியபட்டி, வேப்பங்குளம், கீழஉப்பிலிகுண்டு, ஆவியூர், கருவக்குடி, வி.புதூர், கட்டாலங்குளம், புல்வாய்கரை, மத்திய சேனை, செம்பட்டி, அருப்புக்கோட்டை, சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 111 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 479 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிக்கப்பட்டோர் பட்டியல்களில் உள்ள முரண்பாடு தொடர்கிறது.
    மாவட்டம் முழுவதும் தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரியிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    விருதுநகர்:

    மாவட்டம் முழுவதும் தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரியிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அங்குள்ள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோரில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடப்படும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் 3072 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் தடுப்பூசி போடப்படும் பணி நடந்து வந்த நிலையில் நேற்று தடுப்பூசி மருந்து இல்லாதது குறித்து எந்தவித அறிவிப்பு இல்லாத நிலையில் நேற்றும் தடுப்பூசி போடப்படும் இடங்களில் பெருமளவில் தடுப்பூசி போடுவதற்காக ஆர்வத்துடன் பொது மக்கள் வந்தனர்.

    அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து இருந்தனர்.

    ஆனால் தடுப்பூசி மருந்து இல்லாததால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் தடுப்பூசி போட முடியாமல் திரும்பி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

    தடுப்பூசி மருந்து கையிருப்பு இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினமே தடுப்பூசி மருந்து கையிருப்பில் இருந்து வந்தவுடன் தடுப்பூசி போடும் பணி தொடரும் என தெரிவித்திருந்தால் தடுப்பூசி முகாமிற்கு வந்திருக்க மாட்டார்கள்.

    ஆனால் இதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் நேற்று பெருமளவிற்கு முகாம் நடைபெறும் இடத்திற்கும், அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் மக்கள் வந்தனர். இதுபற்றி உடனடியாக தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பி இருக்கலாம். ஆனால் நீண்ட நேரம் காக்க வைத்து பின்பு போலீசார் வந்து தான் அவர்களை சமரசப்படுத்தி திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி தொடர்புடைய மாவட்ட அதிகாரியிடம் கேட்டபோது தடுப்பூசி மருந்து சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று 15 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்து வர உள்ளதால் இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்தார்.
    மாவட்ட பட்டியலில் நேற்று 247 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலப் பட்டியலில் நேற்று 620 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 620 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 322 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 776 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து இதுவரை 29 ஆயிரத்து 674 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

    தற்போது 8 ஆயிரத்து 126 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 12 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 428 ஆக உயர்ந்துள்ளது.

    இம்மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,198 படுக்கைகள் உள்ள நிலையில் 947 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 251 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,573 படுக்கைகள் உள்ள நிலையில் 898 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 675 படுக்கைகள் காலியாக உள்ளன.

    இம்மாவட்டத்தில் நேற்றும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் ஆனிமுத்து பிள்ளையார் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு, ஏ.எஸ்.எஸ்.எஸ் ரோடு, வடமலைக்குறிச்சி, எல்.பி.எஸ். நகர், ஒண்டிப்புலி, அண்ணாமலை தெரு, குல்லூர் சந்தை, மாத்திநாயக்கன்பட்டி ரோடு, ஈ.பி காலனி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், காந்தி நகர், ஏ.ஏ.ரோடு, நந்தவனம் தெரு, கருப்பசாமி நகர், செவல்பட்டி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் கிழவிகுளம், புதூர், செங்கப்படை, நாலூர், ஏ.முக்குளம், மேல துலுக்கன்குளம், துலுக்கப்பட்டி, மல்லாங்கிணறு, காரியாபட்டி, திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, பந்தல்குடி, பாலையம்பட்டி, படந்தால், திருத்தங்கல், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளிலும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட பட்டியலில் நேற்று 247 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலப் பட்டியலில் நேற்று 620 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு பட்டியல்களுக்கும் இடைய உள்ள முரண்பாடு வாடிக்கையாகி விட்டது. இந்த முரண்பாட்டை களைய வேண்டும் என சுகாதார துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கடந்த 2 நாட்களில் விருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு அதிகாரிகள் கொரோனாவுக்கு பலியானது அரசு பணியாளர்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் அரசு அதிகாரிகளும் கொரோனா தொற்றுக்கு பலியாகி வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் கணேசன் (வயது 56). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால் நெல்லை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதேபோன்று காரியாபட்டி துணை வட்டார வளர்ச்சி அதிகாரி தேவராஜன் (56) கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

    இதே போல் கொரோனா பாதிப்புக்கு சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனராக பணியாற்றிய பூங்குழலியும் பலியானார்.

    கடந்த 2 நாட்களில் விருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு அதிகாரிகள் கொரோனாவுக்கு பலியானது அரசு பணியாளர்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அருகே கீழரசூர் ஊராட்சி தலைவராகஇருந்த சேகர் (47) என்பவர் கொரோனாவுக்கு பலியானார்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 411 ஆக உயர்ந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 411 ஆக உயர்ந்தது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1098 படுக்கைகள் உள்ள நிலையில் 966 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 132 படுக்கைகள ்காலியாக உள்ளன.

    சிகிச்சை மையங்களில் 1558 படுக்கைகள் உள்ள நிலையில் 949 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 609 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் சூலக்கரை, ஐ.சி.ஏ. காலனி, குப்பாம்பட்டி, அகமதுநகர், ஆர்.ஆர். நகர், பாண்டியன் நகர் பி.காலனி, அல்லம்பட்டி, செவல்பட்டி, கச்சேரி ரோடு, வெள்ளூர், மாத்தி நாயக்கன்பட்டி ரோடு, காந்தி நகர், ஆனிமுத்து பிள்ளையார் கோவில் தெரு, பர்மா காலனி, ஆர்.சி.தெரு, எல்.பி.எஸ். நகர், ஆவலப்ப சாமி கோவில் தெரு, கே.கே. எஸ்.எஸ்.என்.நகர், சின்னபேராலி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மல்லாங்கிணறு, பரளச்சி, புதுக்கோட்டை, வாய்ப் பூட்டான்பட்டி, சேத்தூர், அயன்கொல்லங்கொண்டான், மம்சாபுரம், மல்லி, செவல்பட்டி, மூவரை வென்றான், நடுச்சூரங்குடி, சாத்தூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், வடமலாபுரம், எம்.ரெட்டியபட்டி, தும்மு சின்னம்பட்டி, பூலாஊரணி, சித்து மூன்றடைப்பு, வலையங்குளம், புதூர் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் மாநில பட்டியலில் 586 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சேத்தூர் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.
    தளவாய்புரம்:

    சேத்தூர் அருகே அசையா மணி விளக்கு பகுதியில் விவசாயிகள் தற்போது நெற்பயிரை அறுவடை செய்து வருகின்றனர். இதில் எஞ்சியிருக்கும் வைக்கோலை இங்குள்ள விவசாயிகள் மாட்டுத்தீவனமாக கேரளா பகுதிக்கு லாரி மூலம் அனுப்புவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று கேரளா மாநிலம் தென்மலை பகுதியைச் சேர்ந்த சுசி (வயது 45) என்பவர் லாரியில் வைக்கோல்களை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டார். அப்போது சிறிது தூரம் லாரி சென்றவுடன் சாலையோரம் இருந்த மின்சார வயர் வைக்கோல் மீது உரசி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதனையறிந்த லாரி டிரைவர் உடனே கீழே இறங்கி உயிர் தப்பினார். இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கும், ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையில் தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரி மற்றும் வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுபற்றி தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வத்திராயிருப்பு அருகே ஆபத்தான முறையில் ஆற்றை விவசாயிகள் கடந்து செல்வதால் பாலம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதானமாக தென்னை, மா, நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தின் முக்கிய அணையாக பிளவக்கல் பெரியார் அணையும், ேகாவிலாறு அணையும் உள்ளன. இந்த இரு அணைகளையும் நம்பி 40-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியார் அணை, கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது ஆறுகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மேலும் வத்திராயிருப்பு தாலுகா பகுதிகளில் உள்ள கண்மாய்களும் ஓரளவுக்கு நீர் நிரம்பியுள்ளன. இந்தநிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி - பிளவக்கல் பெரியார் அணை செல்லும் சாலையில் ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள குணவந்தநேரி கண்மாயில் ஓரளவிற்கு தண்ணீர் வந்து நிரம்பியுள்ளது.

    இந்த கண்மாயை சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    குணவந்தநேரி கண்மாய் ஆற்றை கடந்து தான் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்கின்றனர். தற்போது இந்த ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விவசாயிகள் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

    தற்போது மாங்காய் சீசன் என்பதால் மாங்காயை பறிக்கவும், தேங்காயை வெட்டவும் வேறு வழியின்றி ஆபத்தான நிலையில் இந்த ஆற்றை கடந்தே விவசாயிகள் செல்கின்றனர்.

    எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதியில் உள்ள ஆற்றை எளிதில் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அருப்புக்கோட்டை, சாத்தூர் பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நகராட்சி பகுதிகளில் ஆணையாளர் முகமது சாகுல்ஹமீது தலைமையில் மருத்துவ அலுவலர் கோமதி முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய் பாண்டியன் தலைமையில் மருத்துவர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் சுகாதார பணியாளர்கள் நோய்த்தொற்று தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் புதிய பஸ் நிலையம், பந்தல்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவர்களிடம் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஏதேனும் தேவை உள்ளதா? என கேட்டறிந்தார். அப்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க. நகர செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சுப்பாராஜ், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, ஒன்றியதலைவர் சசிகலா பொன்ராஜ், பந்தல்குடி ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி பத்திரிநாத், ஒன்றிய செயலாளர் பாலகணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சாத்தூர் அருகே நென்மேனி மற்றும் இருக்கன்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போட வந்திருந்த பொதுமக்களுக்கு இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் கொண்டு வரப்பட்ட குடிநீர் மற்றும் உணவு பொட்டலத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

    அப்போது சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா, தாசில்தார் வெங்கடேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி, நென்மேனி ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள் சக்திவேல், இருக்கன்குடி ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை, கே.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்து மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்கு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பிச்சைராஜ் முன்னிலை வகித்தார். திமுக கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். ரகுராமன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில் 150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    தளவாய்புரம் பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    தளவாய்புரம்:

    தளவாய்புரம், சேத்தூர், முகவூர், சொக்கநாதன்புத்தூர், சிவகிரி, தேவதானம், சேத்தூர், சுந்தரராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற தென்னை மரங்கள் உள்ளன.

    இதனால் இங்கிருந்து வாரந்தோறும் வெளிமாநிலங்களுக்கு லாரி மூலம் தேங்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முகவூரில் 2 இடங்களிலும், சேத்தூரில் 2 இடங்களிலும் இந்த தேங்காய்களை உரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுபற்றி சேத்தூர் தேங்காய் வியாபாரி வேல்சாமி கூறியதாவது:-

    தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு சென்று விவசாயிகளிடம் ஒரு தேங்காயை ரூ.7 முதல் ரூ.8 வரை விலைபேசி பெற்று அதனை இங்கு கொண்டுவந்து உரித்து, நான்கு ரகமாக பிரித்து, மூட்டைகளாக போட்டு வெளிமாநிலங்களுக்கு லாரி மூலம் ஏற்றுமதி செய்கிறோம்.

    வாரத்தில் ஒரு நாள் மட்டும் 40,000 தேங்காய்கள் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது.

    இதில் ஒரு காய்க்கு எங்களுக்கு 50 பைசா முதல் ரூ.2 வரை வருமானம் கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×