என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவுக்கு 201 பேர் உயிரிழப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையால் கடந்த 2 மாதங்களில் 201 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிர் பலியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தாக்கத்தால் இது வரை 20 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா முதலாவது அலையில் கடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை 232 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஆனால் தற்போது கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரை 2 மாதங்களிலேயே 201 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். மே மாதம் 169 பேரும், நடப்பு மாதத்தில் நேற்று முன்தினம் வரை 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு பாதிப்பின் போது தினசரி ஒருவர் அல்லது இருவர் மட்டுமே உயிரிழந்து வந்த நிலையில் தற்போது தினசரி உயிர் பலி எண்ணிக்கை 10 முதல் 15 வரை ஏற்படும் நிலை உள்ளது. உயிர்ப்பலியை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இது பற்றி அரசு டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது,

    கடந்த மே மாத தொடக்கத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனால் ஆக்சிஜன் வினியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.

    இதுபற்றி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் தற்போது தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏற்படும் உயிரிழப்பு குறித்தும் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது, அதனால் தான் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பாதிப்பு தீவிரம் அடைந்த பின்னர்தான் நிறைய பேர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்கள் தாங்களாகவே மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டு விட்டு பின்பு பாதிப்பு அதிகரித்த பின்பு அரசு ஆஸ்பத்திரியை தேடி வருகின்றனர். பாதிப்பு முற்றிய நிலையில் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உயிரிழப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து கலெக்டர் கண்ணன் தெரிவித்ததாவது:-

    கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து விடுகின்றனர். அங்கு நோய் முற்றிய நிலையில் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்டோரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசு டாக்டர்கள் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட நபரை ஆய்வு செய்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு முன்பே அவர் உயிரிழந்து விடும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. எனவே தனியார் ஆஸ்பத்திரிகள் சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு பின்பு திடீரென சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் கொரோனா 2-வது அலை தாக்கத்தில் நோய் பாதிப்பின் தன்மை என்பது திடீரென நோயின் தீவிரம் அதிகரிக்கும் நிலையில் உள்ளதால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் நிலைமை ஏற்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.

    ஆக்சிஜன் வினியோகம், உயிரிழப்பு அதிகரிப்பு குறித்து சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவர் கூறுகையில், கொரோனா பாதிப்பால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு உரிய முறையில் ஆக்சிஜன் கொடுப்பதற்கான வசதி அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இல்லாத நிலையும் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் விருதுநகர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியிலும், சிவகாசி இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியிலும் தான் ஆக்சிஜன் உற்பத்தி மையம் உள்ளது.

    மற்ற தாலுகா ஆஸ்பத்திரிகளில் அந்த வாய்ப்பு இல்லாத நிலையில் மதுரை மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளதாக தெரிவித்தார்.

    தாலுகா ஆஸ்பத்திரிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஆக்சிஜன் அளிப்பதில் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க நவீன தொழில்நுட்பத்தில் ஆக்சிஜன் அளிக்கும் கருவி வழங்கப்பட உள்ளதாகவும் அந்த டாக்டர் தெரிவித்தார்.

    இம்மாவட்டத்தில் பாதிப்பு சதவீதம் குறைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் குறைய வாய்ப்பு உள்ளதாக கலெக்டர் கண்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
    Next Story
    ×