என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் தங்கும் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் அண்ணாசாலை ஊரீசு கல்லூரி எதிரே உள்ள தங்கும் விடுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் மற்றும் போலீசார் அந்த தங்கும் விடுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் 4 பேரும், அதன் அருகேயுள்ள மற்றொரு அறையில் 13 பேரும் தங்கியிருந்தனர்.

    அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் வேலூர் வேலப்பாடி, கொசப்பேட்டை, கஸ்பா, காட்பாடி, வெட்டுவானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், விடுதியின் மேலாளரிடம் அனுமதி பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதையடுத்து 17 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 140 பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததை அறிந்த விடுதி மேலாளர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 201 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,691 ஆக அதிகரித்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 201 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,691 ஆக அதிகரித்துள்ளது.
    நிலத்தகராறில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் நேற்று வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி 2 முறை கையெழுத்திட்டார்.
    வேலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் (வயது 46). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குமார் தரப்பினருக்கும் இடையே கடந்த மாதம் 11-ந் தேதி நிலத்தகராறில் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் கீரை வியாபாரி சீனிவாசன் காயம் அடைந்தார்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயவர்மன் எம்.எல்.ஏ. உள்பட 11 பேரை கைது செய்தனர். குமார் தரப்பினரும் கைதானார்கள்.

    இந்தநிலையில் இதயவர்மன் எம்.எல்.ஏ. உள்பட 11 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, நிலத்தகராறில் தொடர்புடைய 11 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்தார்.

    மேலும் இதயவர்மன் எம்.எல்.ஏ. அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்துக்கு ரூ.3 லட்சம் நன்கொடை அளிக்கவேண்டும். அத்துடன் அவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும், மற்ற 10 பேரும் திருப்போரூர் போலீஸ் நிலையத்திலும் தினமும் காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    அதன்படி இதயவர்மன் எம்.எல்.ஏ. நேற்று காலை 10.30 மணியளவில் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினார். எம்.எல்.ஏ. தற்போது தங்கியிருக்கும் ஓட்டல் முகவரியை வடக்கு போலீஸ் நிலையத்தில் சமர்ப்பித்து உள்ளார். மாலை 5.30 மணிக்கு எம்.எல்.ஏ. மீண்டும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

    சென்னை ஐகோர்ட்டு மறுஉத்தரவு தெரிவிக்கும்வரை தினமும் காலை, மாலை வேளையில் இதயவர்மன் எம்.எல்.ஏ. நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அவர் ஓட்டலில் தங்கி இருப்பதை 2 போலீசார் கண்காணித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 140 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,490 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6,904  பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,490 ஆக உயர்ந்துள்ளது.

    வேலூரில் கஞ்சா கடத்திய குடியாத்தத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 4 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து சிலர் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து கஞ்சா விற்பனையை தடுக்க அவரது உத்தரவின் பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் சைதாப்பேட்டை பகுதியில் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள், குடியாத்தம் தாலுகா சந்தைபேட்டையை சேர்ந்த தினேஷ்குமார் என்ற அமாவாசை (வயது 32), பெரும்பாடி சாலையை சேர்ந்த விக்னேஷ் (23), கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த இம்ரான் (24), கோபாலபுரத்தை சேர்ந்த கலீம் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள், வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த சவுகத் என்பவருக்கு விற்க ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மற்றும் அவர்கள் வைத்திருந்த 6 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    போலீசார் கூறுகையில், இவர்கள் சவுகத் என்பவரிடம் விற்க கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். சவுகத் என்பவர் வேலூர் பகுதிகளில் கஞ்சாவை விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்றனர்.

    வேலூரில் பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி.காலனியை சேர்ந்தவர் சுந்தர். இவர் சென்னையில் சுங்கவரி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருள்மொழி (வயது 48). இவர் வேலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஷமீதா (24). திருமணமாகவில்லை. இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றினார்.

    ஷமீதா நேற்று வீட்டில் இருந்தார். அவர் பிற்பகல் நேரத்தில் தாயாருடன் செல்போனில் பேசினார். இந்தநிலையில் அலுவலக பணியை முடித்து விட்டு அருள்மொழி மாலையில் வீடு திரும்பினார்.

    அப்போது, ஷமீதா கதவை திறக்கவில்லை. உள்பக்கமாக கதவு தாழ்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அருள்மொழி பால்கனி வழியாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஷமீதா சுயநினைவின்றி மர்மமான முறையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து உடனடியாக அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்தசம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘ஷமீதாவின் தாயார் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு ஷமீதா வாயில் நுரை தள்ளியபடி கிடந்துள்ளார். ஒருவேளை அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று கருதுகிறோம். எனினும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும். விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

    வேலூரில் வீடு வாடகைக்கு எடுத்து ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்பது குறித்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    வேலூர்:

    தமிழகத்தில் சில குறிப்பிட்ட இடங்களை மையமாக கொண்டு மர்மகும்பல் ‘இன்டர்நெட்’ அழைப்புகள் மூலம் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுவதாக ஒருங்கிணைந்த திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு (ஓ.சி.ஐ.யு.) காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நடந்த விசாரணையில் வேலூர் சார்ப்பனாமேடு சஞ்சீவிபிள்ளை தெருவில் உள்ள ஒரு வீட்டை ‘ஐ.பி.’முகவரியை கொண்டு போலீசார் சந்தேகித்தனர். மேலும் அதேபோன்று சென்னை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் சில இடங்களையும் சந்தேகப்பட்டனர்.

    இந்தநிலையில் வேலூர் உள்பட 4 இடங்களிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அதன்படி, வேலூர் சார்ப்பனாமேடு, சஞ்சீவிபிள்ளை தெருவில் உள்ள ஒரு வீட்டில் வேலூர் ஓ.சி.ஐ.யு. துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், வேலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினர் சோதனையை தொடங்கினர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதனால், கதவின் பூட்டை உடைத்து உள்ளே போலீசார் சென்றனர். அப்போது வீட்டினுள் இயங்கிய நிலையில் கம்ப்யூட்டர் இருந்தது.

    இதையடுத்து, போலீசார் சி.பி.யு., கம்ப்யூட்டர், இணையதள சேவை கருவிகள், 2 பேட்டரிகள் உள்ளிட்ட சில பொருட்களையும், சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

    அந்த வீட்டின் உரிமையாளர் பாபு. அவரிடம் கடந்த ஜனவரி மாதம் ஒருவர் வந்து, அந்த வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளார். அந்த நபர் பாபுவிடம், தன்னுடைய பெயர் சிராஜ் என்றும் சென்னையில் உள்ள கண்ணையன் சம்பத் என்பவரின் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய பாபு அந்த நபருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

    பின்னர் அந்தநபர் கம்ப்யூட்டர் மற்றும் இணைய வசதிகளை வீட்டில் ஏற்படுத்தி உள்ளார். அதன்பின்பு அந்த நபர் சென்னைக்கு சென்றுவிட்டார். வேலூர் வீட்டுக்கு வருவதில்லை. ஆனால் வீட்டு வாடகையை மட்டும் பாபுவின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் செலுத்தி வந்து உள்ளார்.

    மேலும் சிராஜ் இணைய சேவையில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோ, கணிணியை மீண்டும் இயக்குவதற்கோ அருகே வசிப்பவர்களை செல்போனில் தொடர்புகொண்டு சரி செய்து கொடுக்கும்படி கூறுவார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதனிடையே சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் ஆவணங்கள் சிலவற்றையும் ஓ.சி.ஐ.யு. போலீசார் எடுத்துச் சென்றனர். கம்ப்யூட்டரை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வீட்டின் உரிமையாளர் பாபுவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    தமிழகத்தில் முக்கிய 4 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் தொடங்கியது. வேலூரில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் தொடர்புடைய நபர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றம் செய்யும் பணிக்காக இந்த 4 மையங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதுகிறோம். இதில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

    தீவிரவாத குழுக்களுக்கோ, தேசவிரோத குழுக்களுக்கோ ஏதேனும் பணம் அனுப்பப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. பாபுவின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்ட விவரம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சோதனையையொட்டி போலீசார் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    சார்ப்பனாமேடு சஞ்சீவி பிள்ளை தெருவில் பாபு என்பவருக்கு சொந்தமான வீட்டை சோதனை செய்தபோது, அங்கு போலியாக இணையவழி மூலமாக தொலைபேசி அழைப்புகள் வழங்கும் சேவை மையம் எந்தவித உரிமமும் பெறாமல் ‘பி.கே.எஸ். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. விசாரணையில் அந்த இடத்தை கண்ணையன் சம்பத் கடந்த 6 மாதமாக வாடகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.

    இதில் தொடர்புடைய சந்தேக நபரான தஞ்சாவூரை சேர்ந்த முருகானந்தம் என்பவரை தஞ்சாவூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள கண்ணையன்சம்பத்தை கைது செய்ய தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    போலி இ-பாஸ் விவகாரத்தில் திருச்சியைச் சேர்ந்த 2 பேரை வேலூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வரவும், பிற மாநிலங்களுக்கு சென்று வரவும் இ-பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. இதனால் இ-பாஸ் கேட்டு பலர் விண்ணப்பித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுவதில்லை. 

    ஆனால், அவர்களிடம் மர்மநபர்கள் பணத்தை வாங்கி கொண்டு போலி இ-பாஸ் வினியோகித்து வருவதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் வேலூர் மாவட்ட ‘வாட்ஸ் அப்’ குரூப் ஒன்றில் ரூ.1,500 கொடுத்தால் இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் செல்ல இ-பாஸ் வழங்கப்படும் என ஒருவர் பதிவிட்டிருந்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் சென்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வேலூர் பெரியஅல்லாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு திருச்சியைச் சேர்ந்த சிலர் உதவியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் திருச்சி விரைந்தனர். அதன்படி திருச்சி முத்தரசநல்லூரை சேர்ந்த ஸ்டாலின் (வயது 26), கொட்டப்பட்டுவை சேர்ந்த வடிவேல் (27) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து, வேலூர் அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முதற்கட்டமாக 90 ஆயிரம் முககவசங்கள் வந்துள்ளன. முககவசம் திருப்பூரில் தர பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட உள்ளது என்று வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பலர் வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்தனர்.

    அவர்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்க குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி கடந்த மாதம் 27-ந் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முதற்கட்டமாக 90 ஆயிரம் முககவசங்கள் வந்துள்ளன.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் 14 லட்சத்து 18 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைகளில் பெயர் உள்ள 6 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு 2 முகவசம் வீதம் 12 லட்சத்து 6 ஆயிரம் முககவசம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 12 லட்சத்து 7 ஆயிரம் முககவசம் ஆர்டர் செய்யப்பட்டது.

    தற்போது முதற்கட்டமாக 90 ஆயிரம் முககவசங்கள் வேலூருக்கு வந்துள்ளன. ஒரு பண்டல்களில் 5 ஆயிரம் வீதம் 18 பண்டல்களில் 90 ஆயிரம் முககவசங்கள் உள்ளன. ஒவ்வொரு பண்டல்களிலும் உள்ள 5 முககவசங்கள் தர பரிசோதனைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பரிசோதனையில் முககவசங்கள் தரமாக உள்ளது என்று தெரிய வந்ததும் அவை பொதுமக்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள முககவசங்கள் விரைவில் வரவழைக்கப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 199 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,904 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6,705 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 199 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,904 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 5,320 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
    வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கோட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கோட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் பழனி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், டாஸ்மாக் ஊழியர்கள் சங்க துணைத்தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு தரமான கையுறை, முககவசம், கிருமிநாசினி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை உடனடியாக வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும், மருத்துவ சிகிச்சைக்கான உச்சவரம்பை நீக்கி முழுதொகையையும் வழங்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் அளித்தனர்.
    காட்பாடி பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 200 ஆட்டோ டிரைவர்களுக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு அரிசி வழங்கினார்.
    காட்பாடி:

    காட்பாடி பகுதியில் ஊரடங்கு தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 200 ஆட்டோ டிரைவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி காந்திநகரில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.கே.அப்பு தலைமை தாங்கி ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசியை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.சுபாஷ், பெல்.ஆர்.தமிழரசன், சின்னதுரை, அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரவி பாபு, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பி.நாராயணன், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரராஜி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பி.ராகேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.சரவணன், சர்க்கரை ஆலை தலைவர் எம். ஆனந்தன், ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் என்.ஜி.பாபு, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×