என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலம் பொன்னை ஆற்றின் பாலத்தின் 38 மற்றும் 39-வது தூண்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் கடந்த 23-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அன்று மாலை முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் அரக்கோணம் காட்பாடி மார்க்கமாக செல்லும் 23 ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. ஒரு சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
ரெயில்வே என்ஜினியரிங் குழுவினர் அந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் பணிகளில் ஈடுபட்டனர்.
38 மற்றும் 39-வது தூண்களுக்கு கீழே இரும்பு காரிடார்களை கொண்டு பலப்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தில் உள்ள 56 தூண்களையும் ஆய்வு செய்தனர். அப்போது மேலும் 4 தூண்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. அதனையும் நேற்று சீரமைத்தனர்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்ததால் ரெயில்வே பாலம் போக்குவரத்துக்கு தயாரானது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு உடனடியாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. முதலில் ரெயில் என்ஜினை கொண்டும் அதன் பிறகு 2 சரக்கு ரெயில் என்ஜின்களை கொண்டும் சோதனை ஓட்டம் நடந்தது.
இதில் எந்தவித அதிர்வும் தெரியாததால் பயணிகள் ரெயில் விட முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து முதன்முறையாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பொன்னையாற்று மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து ரெயில்களும் வழக்கம் போல இயக்கப்பட்டன.
இந்த பாலத்தில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பாலத்தின் மீது செல்லும்போது ரெயில்கள் குறைந்த வேகத்தில் சென்றன.
ரெயில்வே போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளதால் வேலூர், பெங்களூரு, கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நளினியின் தாயார் பத்மா கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தனக்கு உடல்நிலை சரி இல்லை. அதனால் தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அப்போது தமிழக அரசு சார்பில் நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் வேலூரிலேயே தங்கி இருக்க உத்தரவிடப்பட்டது. காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள வேலு என்பவரது வீட்டில் தங்க நளினி தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அந்த வீட்டின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து அனுமதி வழங்கினர்.
இன்று முதல் 30 நாட்கள் நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. அதற்கான ஆணை வேலூர் ஜெயில் அதிகாரிகளுக்கு வந்தடைந்தது.
இதனை தொடர்ந்து வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து நளினி இன்று காலை 10 மணிக்கு பரோலில் வெளியே வந்தார். அவரது கையில் 2 பைகள் வைத்திருந்தார். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் நளினியை காட்பாடி பிரம்மபுரம் காலனியில் உள்ள வேலு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
வீட்டு வாசலில் நளினியின் தாயார் பத்மா, அவரது தம்பி மனைவி மற்றும் முருகனின் உறவினர் தேன்மொழி ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். இவர்கள் 3 பேரும் நளினியுடன் தங்கியுள்ளனர்.
நளினி வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. மேலும் வெளிநபர்கள், அரசியல் கட்சியினரை வந்து அவரை சந்திக்க கூடாது. மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்லலாம். அதற்கும் முன் அனுமதி பெற வேண்டும்.
பத்திரிகை ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது.
தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நளினி தங்கியுள்ள வீட்டில் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் துப்பாக்கி ஏந்திய 50 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் கொசப்பேட்டை கொசத்தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி. தம்பதி இருவரும் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கினர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள் நள்ளிரவில் சதீஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 9,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலையில் வீடு திரும்பிய சதீஷ் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் நகை பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது தொடர்பாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரெயில்வே பாலம் கடந்த மாதம் பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது.
பாலத்தில் விரிசல் கண்டறிய பட்டதைத் தொடர்ந்து ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெங்களூர், கோவை, மங்களூர், வேலூர், ஜோலார்பேட்டை பகுதிகளுக்கு செல்லும் 23 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சில ரெயில்கள் மாற்று பாதையிலும் இயக்கப்பட்டது. இந்நிலையில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகள் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே பழுது ஏற்பட்டிருந்த 38, 39 ஆகிய தூண்களில் கான்கிரீட் மற்றும் இரும்பு தூண் கொண்டு சரி செய்யும் பணி நடந்து வருகிறது. 1865 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் 56 தூண்கள் உள்ளன.
அனைத்து தூண்களையும் ரெயில்வே என்ஜினீயரிங் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 21, 22 மற்றும் 27, 28 ஆகிய தூண்களுக்கு இடையிலும் மண் அறிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியை ரெயில்வே ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே விரிசல் ஆன பகுதிகளில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் இன்று மாலை ரெயில் போக்குவரத்து சோதனை ஓட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மேலும் 4 தூண்களில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை சீரமைத்த பிறகு போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 4-வது நாளாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
வேலூரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஏசு கிறிஸ்து பிறந்த நாள் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. பலர் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்றிருந்தனர்.
விழாவை முன்னிட்டு பலர் தங்கள் வீடுகளில் ‘குடில்’கள் அமைத்து, வண்ண ‘ஸ்டார்’களை தொங்கவிட்டிருந்தனர். பேக்கரிகளில் கேக் விற்பனை களை கட்டியது. வேலூர் மாநகரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏசு பிறந்ததை குறிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை காட்டினர். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர்.
வேலூர் சார்பனா மேட்டில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் கிறிஸ்து பிறப்பு நாளையொட்டி கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய வளாகத்தில் குழந்தைகள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
காட்பாடி ரோடு புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பெந்தெகொஸ்தே சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. இதேபோல குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகம் அருகில் அமைந்துள்ள உலக மாதா ஆலயத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பாலகன் பிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதேப்போல் பெரியார் சிலை அருகில் அமைந்துள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கேக் வழங்கி கொண்டாடினர். கிறிஸ்தவ ஆலயங்களில் ஓலைக்குடிசையில் இயேசு பிறப்பது போன்ற நிகழ்ச்சிகள் சித்தரித்து காட்டப்பட்டன. கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலை 3.15 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.5 ரிட்டர் அளவுகோலில் பதிவானது.
இதேபோல் நேற்று அதிகாலை 3.14 மணிக்கு அதிக சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளில் விரிசல் விழுந்தது. வீட்டில் அடிக்கி வைத்திருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. கட்டில் பீரோக்கள் நகர்ந்து சென்றன. மின்விசிறி தாறுமாறாக ஓடியது. பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு தெருவில் தஞ்சமடைந்தனர்.
இன்று காலை 9.40 மணிக்கு பேர்ணாம்பட்டு ரகமதாபாத், நியாமத் வீதி, வீராசாமி தெரு, இஸ்லாமிய தெரு, எல்.ஆர். நகர் தரைக்காடு, மளங்கு உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. சத்தத்தை கேட்ட பொதுமக்கள் வீட்டிலிருந்து அலறியடித்துக் கொண்டு தெருவிற்கு வந்தனர்.
நில அதிர்வு காரணமாக பலரது வீட்டு சுவர்களில் விரிசல் விழுந்தன. பேரணாம்பட்டு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் கலக்கமடைந்து அச்சத்தில் உள்ளனர்.
எனவே அதிகாரிகள் பேரணாம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எதற்காக நில அதிர்வு ஏற்படுகிறது என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த பிரபல ரவுடி வீச்சு தினேஷ் (வயது 34). இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 6 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே பகுதியை சேர்ந்தவர் பிரபு இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்கள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி வீச்சு தினேஷ், பிரபு ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணை அவர்களிடம் வழங்கப்பட்டது.
குடியாத்தம் பகுதியில் வேல்முருகன் (வயது 50) என்பவர் தொடந்து கள்ளசாராயம் காய்ச்சி வந்தார். இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார்.
அவர் திருப்பதி மலையில் உள்ள வராக சுவாமி கோவிலில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலகொல்லை, மாரியம்மன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி மற்றும் 25-ந்தேதி இரவு நேரங்களில் திடீர் என சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் விசாரிக்கும்போது மேற்கண்ட கிராமங்களிலும் நில அதிர்வு இருந்ததாக தெரியவந்தது.
இந்நிலையில் நவம்பர் 29,30-ந்தேதிகளில் அதிகாலையில் தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லிமேடு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 3.15 மணி அளவில் மீண்டும் தட்டப்பாறை அடுத்த மீனூர் கொல்லிமேடு பகுதியில் சில வினாடிகள் பெருத்த சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அப்போது வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள் சில அடி தூரம் நகர்ந்துள்ளது. கட்டில்கள் சில அங்குலங்கள் நகர்ந்துள்ளது. கால்நடைகள் தொடர்ந்து கத்தியபடி இருந்துள்ளன. மின்விசிறிகள் தாறுமாறாக சூழன்றுள்ளது.
இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். 2 மாதங்களில் இப்பகுதியில் பல முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
அதேபோல் குடியாத்தம் அடுத்த பரதராமி டி.பி.பாளையம் ஊராட்சி அரிகவாரிபல்லி கிராம பகுதியிலும் மாலை 3.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு விட்டு விட்டு வெளியே வந்து பாதுகாப்பாக நின்றனர்.
அப்போதும் கால்நடைகள் கத்தியபடி இருந்துள்ளது. பாத்திரங்கள் உருண்டோடின மின்விசிறிகள் தாறுமாறாக சுற்றியுள்ளது. இதனால் பயந்து போன கிராம மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.டி. மோட்டூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியிலும் நில அதிர்வு கண்டதால் கிராம மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பேரணாம்பட்டு நகரின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. லால்மஸ்ஜித் வீதி, குல்ஜார்வீதி, நூர்அஹ்மத், ஆமினாவீதி, சார்மினார் வீதி, சின்ன மஸ்ஹித் வீதி, மவுலா வீதி, உமர்வீதி, எல்.ஆர்.நகர், திரு.வி.க.நகர், குப்பைமேடு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீதிகளுக்கு ஓடிவந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து பேரணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் நில அதிர்வு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நிலநடுக்கம் குறித்து வருவாய்த் துறையினரும், அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் இப்பகுதியில் நில அதிர்வு பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதா என ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் அச்சத்தை போக்க வேண்டும்.
குடியாத்தம், பேர்ணாம்பட்டு சுற்றி உள்ள கிராம பகுதிகளில் பலமுறை முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அச்சமான சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
வாலாஜா அணைக்கட்டு ரோடு பகுதியில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அணைக்கட்டு ரோட்டில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து சோதனை செய்ததில் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் வாலாஜா கீழ் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆலி (எ) ஆனந்த் (வயது 36) என தெரியவந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து ஆனந்தை கைது செய்தனர்.






