என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவலம் பொன்னை ஆற்றில் ரெயில்வே பாலத்தில் மேலும் 4 தூண்கள் சேதம்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரெயில்வே பாலம் கடந்த மாதம் பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது.
பாலத்தில் விரிசல் கண்டறிய பட்டதைத் தொடர்ந்து ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெங்களூர், கோவை, மங்களூர், வேலூர், ஜோலார்பேட்டை பகுதிகளுக்கு செல்லும் 23 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சில ரெயில்கள் மாற்று பாதையிலும் இயக்கப்பட்டது. இந்நிலையில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகள் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே பழுது ஏற்பட்டிருந்த 38, 39 ஆகிய தூண்களில் கான்கிரீட் மற்றும் இரும்பு தூண் கொண்டு சரி செய்யும் பணி நடந்து வருகிறது. 1865 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் 56 தூண்கள் உள்ளன.
அனைத்து தூண்களையும் ரெயில்வே என்ஜினீயரிங் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 21, 22 மற்றும் 27, 28 ஆகிய தூண்களுக்கு இடையிலும் மண் அறிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியை ரெயில்வே ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே விரிசல் ஆன பகுதிகளில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் இன்று மாலை ரெயில் போக்குவரத்து சோதனை ஓட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மேலும் 4 தூண்களில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை சீரமைத்த பிறகு போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 4-வது நாளாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.






