என் மலர்tooltip icon

    வேலூர்

    காட்பாடியில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    காட்பாடி வட்டார கல்வி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    காட்பாடி வட்டார தலைவர் வி.சிரஞ்சீவிலு தலைமை தாங்கினார். செயலாளர்அனிதா, பொருளாளர் ஆர்.கற்பகமணி, ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஜோசப் அன்ணையா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வில்வநாதன், சக்திவேல் ஆகியோர் பேசினர்.

    தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வாழ்த்தி பேசினார்.

    ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் மற்றும் நடைபெற உள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    வேலூர்:

    கொரோனா கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் 505 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. வேலூர் மாநகர பகுதியில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று காலை வரை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தினர்.

    வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

    இதன்மூலம், இதுவரை 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 52 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரு டோஸ் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 8 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

    மேலும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இது தவிர, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 71, 71 ஆயிரம் சிறுவர்களில், 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது.

    முதல் தவணை மற்றும் 2-ம் தவணை செலுத் தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    வேலூருக்கு வரும் வெளிமாநில பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் ஆட்டோ டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம் தங்கக் கோவில் ஆகியவற்றை பார்வையிடவும் பல்வேறு வெளி மாவட்ட, மாநிலங்கள், வெளிநா டுகளைச் சேர்ந்த ஏராளமானோர் நாள்தோறும் வேலூருக்கு வந்து செல்கின்றனர்.

    அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வேலூர் வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

    வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைக்காக 13,000 ஆட்டோக்களும், 6,000 கார்களும் இயக்கப்படுகின்றன.

    வேலூர் மாநகரில் மட்டும் சுமார் 4,000 ஆட்டோக்களும், 2,000 கார்களும் இயங்குகின்றன. அதிக எண்ணிக்கையில் கார், ஆட்டோ டிரைவர்களைக் கொண்ட நகரங்களில் வேலூர் முக்கிய இடம்பிடித்துள்ளது. 

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தொற்று பரவல் 2020 - ம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலூர் மாவட்ட ஆட்டோ, கார் வாடகை தொழில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த சில மாதங்களா கத்தான் ஆட்டோ, கார் வாடகைத் தொழில் மீண்டும் புத்துயிர் பெற்று நடைபெற்று வந்தது. 

    இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

    பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்த்திட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட் டுள்ளன.

    இதன் காரணமாக பல்வேறு வெளி மாவட்டங்கள், மாநிலங்க ளில் இருந்து வேலூருக்கும், வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

    ஏற்கெனவே வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரெயில் பயணிகள் எண்ணிக்கையும் சரிந்து வருவதால் வாடகை ஆட்டோ, கார்களுக்கு சவாரிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

    இதன்காரணமாக, சவாரி பிடிப் பதற்காக காட்பாடி ரெயில்நிலையம் முன் ஆட்டோ டிரைவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
    காட்பாடியில் பேனர்களை அகற்றக்கோரி அ.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் மற்றும் ஆக்சிலியம் கல்லூரி சாலையில் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த டிஜிட்டல் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து அ.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அ.தி.மு.கவினர் பேனர்களை அகற்றக்கோரி ஆக்சிலியம் கல்லூரி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆக்சிலியம் கல்லூரி சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் யாரும் சாலையோரங்களில் பேனர்களை வைக்க கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    ஆனாலும் காட்பாடியில் தி.மு.கவினர் ஆங்காங்கே பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், குப்புசாமி, பேரவை ரவி, அணி செயலாளர்கள் ராக்கேஷ், அமர்நாத், சரவணன், தனசேகரன் பி.எஸ். பழனி மற்றும் வட்ட செயலாளர்கள் உட்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் கார்டுகளுக்கு மேல் மொத்தம் 122 கடைகள் உள்ளன. அவற்றை விரைவில் பிரித்து புதியதாக ரேசன் கடைகள் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 699 ரேசன் கடைகள் உள்ளன. இதில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 801 ரேசன் கார்டுகள் உள்ளன. 4 லட்சத்து 43 ஆயிரத்து 375 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும். இதுவரை 96.92 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்பு வழங்குவது, ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து உணவு பொருட்கள் வழங்கல் அலுவலர் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமி‌ஷனர் ராஜாராம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாவட்ட வழங்கல் துறை அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினார்.

    ஆயிரம் காடுகளுக்கு மேல் உள்ள ரேசன் கடைகளை பிரித்து புதிய ரே‌ஷன் கடைகள் உருவாக்க வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் கார்டுகளுக்கு மேல் மொத்தம் 122 கடைகள் உள்ளன. அவற்றை விரைவில் பிரித்து புதியதாக ரேசன் கடைகள் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் புதிய கடைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ரேசன் கடைகள் காலை 9 மணிக்கு சரியாக திறக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பொருட்கள் தரமாக உள்ளதா சரியான அளவில் வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிளில் போலீஸ் பூத் சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டது.
    வேலூர்:

    வேலூரில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கிரீன் சர்க்கிள் பகுதியில் பூங்காவின் அளவினை குறைத்து, வட்ட வடிவிலான பகுதிகளில் 12 மீட்டர் அளவிற்கும் மற்றும் மூன்று இடங்களில் பூங்கா அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

    இதன் மூலம் காட்பாடியிலிருந்து வேலூர் நோக்கி செல்லும் வாகனங்களும், சென்னையில் இருந்து வேலூர் வழியாக திருப்பத்தூர் செல்லும் வாகனங்களும் சிரமமின்றி செல்லும்.

    மேலும் கிரீன் சர்க்கிள் பகுதி உட்பட தேசிய நெடுஞ்சாலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையின் இருபுறங்களிலும் உள்ள மழைநீர் வடிகாலானது தற்போதைய சாலை மட்டத்தை விட 1.5 அடி உயரம் அதிகமாக உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. 

    இதனால் வாகனம் செல்லும் வகையில் சாலைக்கு இணையாக கால்வாய் உயரத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலையின் இருபுறமும் 5 மீட்டர் அகலத்திற்கு வாகனங்கள் செல்ல முடியும்.

    கிரீன் சர்க்கிள் அளவை குறைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்று கிரீன் சர்க்கிள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் பூத் அகற்றப்பட்டது.

    மேலும் கிரீன் சர்க்கிள் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பங்களும் இன்று அகற்றப்பட்டன. அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை சீரமைத்தனர்.
    லத்தேரி அருகே மாடு விடும் விழாவில் காளை முட்டி படுகாயமடைந்த சிறுமி பலியானார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பனமடங்கி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15-ந்தேதி எருது விடும் விழா நடந்தது. 

    இந்த போட்டியில் 264 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.

    வேலூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவரது மகள் வினோதினி (வயது13) என்பவர் மாடு விடும் விழா நடந்துகொண்டிருந்த போது அங்குள்ள தெருவின் முனையில் நின்று கொண்டிருந்தார்.

    அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று சீறிப்பாய்ந்து ஓடியது. அது வினோதினியை முட்டி தூக்கி வீசியது. இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி வினோதினி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுவரை வேலூர் மாவட்டத்தில் நடந்த மாடு விழாவில் மாடு முட்டி 3 பேர் பலியாகி உள்ளனர்.
    ஊசூர் அருகே மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த ஊசூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி காளை விடும் திருவிழா நடந்தது. வேலூர் சப்-கலெக்டர் (பொறுப்பு) காமராஜ் தலைமை தாங்கினார். 

    ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் மெர்லின் ஜோதிகா, ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி கண்ணன், வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    துணைத் தலைவர் அணிதாசிவக்குமார் வரவேற்றார். அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. 

    சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 70 மாடுகள் பங்கேற்றது. 1500 பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்தனர்.

    விழாவில் மாடுகள் முட்டியதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். 

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், எருதுவிடும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
    வேலூர் சத்துவாச்சாரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைகளை மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் நேற்று ஆய்வு செய்தார். 

    மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை கோர்ட்டு பின்புறம் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார்.

    குடியிருப்புகளை விட சாலைகள் மேடாக உள்ளதா? தாழ்வாக உள்ளதா? மழை நீர் வெளியேறும் கால்வாய் களும் அமைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்தார்.

    அப்போது சாலையோரம் உள்ள நடைபாதைகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து இருப்பதை கண்ட அவர் அவற்றை உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

    சத்துவாச்சாரி சவுத் அவன்யூ ரோடு ஆ.ர்டி.ஓ. அலுவலகம் சாலை பகுதிகளில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றில் 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    சவுத் அவென்யு சாலையில் பல்வேறு இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் மேற்கூரைகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் போன்றவற்றை வைத்திருந்தனர். 
    அவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். 

    தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இது போன்ற நடை பாதைகளை எந்த காரணத்தை கொண்டும் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூரில் இன்று எஸ்.பி. உள்பட 277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 55,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,750 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,151 பேர் பலியானார்கள். தற்போது 2,123 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    இன்று 277 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் எஸ்.பி. ராஜேஷ் கண்ணாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    நேற்று முன்தினம் அதிகபட்சமாக 447 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 2 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று 278 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர் தோட்டப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் செய்ததால் காட்பாடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேலூர்:

    பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தன. 

    இதனால் கடந்த 3 மாதங்களாக வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.இதனால் உள்ளூர் குடிநீர் திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.

    மேலும் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தோட்டப் பாளையம் அருகதம்பூண்டி தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. 

    இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    பலமுறை குடிநீர் கேட்டும் அந்தப் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காட்பாடி வேலூர் மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

     உடனடியாக அந்த பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

    வருகிற திங்கட்கிழமை முதல் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்ய வாய்ப்பு உள்ளது. அதற்கு பிறகு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர். 

    இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் காட்பாடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    காட்பாடியில் கொரோனா பரவல் காரணமாக 2 தெருக்கள் இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி பகுதியில் தொடர்ந்து கொரோனாபரவி வருகிறது. காட்பாடி காந்தி நகர் 10-வது குறுக்கு தெரு மற்றும் 22-வது கிழக்கு தெரு ஆகிய இடங்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

    இன்று ஒரே நாளில் இந்த 2 தெருக்களிலும் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 10-வது குறுக்கு தெரு மற்றும் 22-வது கிழக்குதெரு ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு தகடுகள் கொண்டு அடைத்தனர்.

    தெருவில் உள்ள பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்.அவர்களுக்கு தேவையான பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வாங்கிக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
    ×